Tuesday, January 15, 2019

28. 25ஆவது சர்க்கம் - சீதையின் துயரம்

கொடுமையான வார்த்தைகளைப் பேசி, அரக்கிகள் சீதையை பயமுறுத்தியபோது, மிதிலை நாட்டு இளவரசியான சீதை மனம் நொந்து கண்ணீர் வடித்தார். 

வெள்ளமாகப் பெருகிய கண்ணீரினால் தன் மார்புகளை  நனைத்துக்கொண்டு, வருத்தமான சிந்தனையினால் மனம் கலங்கி, அவர் எல்லையற்ற சோகத்தில் மூழ்கினார்.
அரக்கிகள் மிரட்டலால் நடுங்கி,முகம் வெளுத்துப் போய், புயலால் சாய்க்கப்பட்ட வாழைமரம் போல் கீழே சாய்ந்தார் சீதை. அவர் உடல் நடுங்கியபோது, ஒற்றைப் பின்னலாக இருந்த அவர் தலைமுடியும் ஒரு பாம்பு போல் ஆடியது
அரக்கிகள் பேச்சுக்களால் இவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தாலும்,  தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வது என்ற மன உறுதியுடன் சீதை, கண்களில் நீர் மல்க கம்மிய குரலில் சொன்னார்.

"ஒரு மானிடப் பெண் ராவணனின் மனைவியாக இருப்பது முறையாகாது. நீங்கள் எல்லோரும் உங்கள் விருப்பப்படி என்னைக் கடித்துத் தின்னலாம். உங்கள் வார்த்தைகளுக்கு நான் இணங்கப் போவதில்லை."

கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் மார்பில் வழிந்த நிலையில், சீதை மேலும் சொன்னார்.

"மனிதர்களின் வாழ்நாள் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பது, அதாவது  ஒருவர் அவருக்கு விதிக்கப்பட்ட நேரத்தில்தான் இறந்து போவார் என்று சொல்லியிருப்பது உண்மைதான். 
இல்லாவிட்டால், நான் எப்படி ஒரு கணம் கூட உயிர் வாழ முடியும் - இந்த அரக்கிகளின் கொடிய சொற்களால் காயப்படுத்தப்பட்டு, ராமரிடமிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நான்?"

ராவணனால் சிறை பிடிக்கப்பட்டு, அரக்கிகளால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட சீதைக்குத் தப்பிக்கும் வழி தெரியவில்லை. தன் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்து, ஓநாய்களால் சூழப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட மான் குட்டியைப் போல் இருந்த சீதை, அந்தத் துயரைப் பொறுக்க முடியாமல் தனக்குள் மூழ்கினார்.

துயரத்தினால் மனம் உடைந்த சீதை பூக்கள் மிகுந்த ஒரு அசோக மரத்தின் கிளையைப் பிடித்தபடி, தன் கணவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்..

அவர் இவ்வாறு பலவிதங்களில் வருந்தினார். 

"ஓ, ராமா, ஓ லக்ஷ்மணா, ஓ என் தாய் கௌசல்யா தேவி, ஓ சுமித்ரா தேவி! என்ன செய்வதென்று அறியாத இந்தப் பேதைப் பெண் புயலில் சிக்கிக்கொண்ட கப்பலைப் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்.

"வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படும் நதியின் கரையைப் போல், ராமரைப் பார்க்காததால், அரக்கிகள் காவலில் இருப்பதாலும் விளைந்த துயரத்தினால் நான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

"தாமரை போன்ற கண்களும், சிங்கம் போன்ற நடையும் கொண்டு, எப்போதும் நன்றி உடையவராகவும், மற்றவர்களுக்கு இனிமையானதையும், நன்மை பயப்பதையும் பேசிக்கொண்டிருக்கும் ராமரைக் கண்ணால் கண்டு மகிழும் அதிர்ஷ்டசாலிகள் பலர் இருக்கிறார்கள்.

உயிரைக் கொல்லும் விஷத்தைக் குடித்தவளைப் போல், ராமரிடமிருந்து பிரிக்கப்பட்ட என் உயிரைக் காப்பாற்றுவது கடினம். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை எனக்கு நேர, நான் போன ஜென்மங்களில் என்ன பாவமெல்லாம் செய்திருக்க வேண்டுமோ! அந்தப் பாவங்களுக்காகத்தான் நான் இந்தக் கொடுமையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் போலும்.

அரக்கிகள் காவலில் இருக்கும் என்னால் ராமரைப் பார்ப்பது இயலாத செயல். துயரினால் வாட்டப்பட்டிருப்பதால், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். மனித வாழ்க்கை வெறுக்கத்தக்கது, குறிப்பாக அது மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது. ஏனெனில், அந்த நிலையில்  ஒருவர் தன்  விருப்பப்படி இறந்துபோகும் உரிமையைக் கூட அது அவரிடமிருந்து பறித்து விடுகிறது."

இது போன்ற சோகமான எண்ணங்களில் ஈடுபட்டு, சீதை மிகவும் துயரத்துக்கு ஆளானார்.

"
Saturday, December 29, 2018

27. 24ஆவது சர்க்கம் - அரக்கிகள் சீதையை மிரட்டுதல்

 பிறகு கொடூரமான உருவமும், கொடிய குணமும் கொண்ட சில அரக்கிகள் சீதையின் பக்கத்தில் வந்து நின்று அவரை அச்சுறுத்தும் விதத்தில் பேசத்  துவங்கினர்.

"ஓ, சீதா! மென்மையான படுக்கை விரிப்புகளும், அருமையான இருக்கைகள் போன்ற வசதிகளும் கொண்ட ராவணனின் அந்தப்புரத்தில் வந்து இருக்க நீ ஏன் விரும்பவில்லை? ஒரு மானுடப்  பெண் என்பதால் ராமனின் மனைவியாக நீ இருப்பதுதான் பொருத்தம் என்று நினைக்கிறாய். ஆனால் அது நடக்கப் போவதில்லை. உன் மனதை அவனிடமிருந்து விலக்கிக் கொள்.

"ராவணனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை அனுபவி. ராவணன் மூவுலகுக்கும் வேந்தன். அனுபவிக்கத்தக்க பொருள்களுக்கெல்லாம் எஜமானன்.

"குறைகள் ஏதும் இல்லாத மானிடப் பெண்ணான நீ ராஜ்யத்தை விட்டு விட்டு ஒடிய, நம்பிக்கைகள் சிதைந்த, துயரில் ஆழ்ந்திருக்கும் மனிதனான ராமனை,  இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாய்."

அரக்கிகள் பேச்சைக் கேட்டு தாமரை இதழைப் போன்ற கண்களை உடைய சீதை கண்ணீருடன் கூறினார்:

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து கூறும் பாவம் நிறைந்த, வெறுப்புக்குரிய வார்த்தைகள் என் மனதுக்கு உகந்ததாக இல்லை. ஒரு மானுடப்பெண் ஒரு அரக்கனின் மனைவியாக இருக்க முடியாது. வேண்டுமானால், என்னைத் தின்று விடுங்கள். ஆனால் உங்கள் யோசனையை நான் கேட்கப் போவதில்லை.

"ராமர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, கஷ்டமான நிலையில் இருந்தாலும், அவருக்கு விசுவாசமாக இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். சுவர்ச்சா தேவி எப்போதும் சூரியனுடன் இணைந்திருப்பது போல், நான் ராமருடன் அன்பு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறேன்.

"சசிதேவி இந்திரனுடனும், ரோகிணி சந்திரனுடனும், லோபாமுத்திரை அகஸ்தியருடனும், சுகன்யா ச்யவனருடனும், சாவித்திரி சத்தியவானுடனும், ஸ்ரீமதிதேவி கபிலருடனும், மதயந்தி சுதாஸரின் மகன் கல்மஷபாதருடனும் , கேசினி சாகரருடனும், அரசர் பீமரின் மகள் தமயந்தி  அரசன் நளனுடனும் இருப்பது போல், இக்ஷ்வாகு குலத்தின் பெருமையாக விளங்கும் என் கணவரான ராமனை எப்போதும் விடமாட்டேன்."

ராவணனால் நியமிக்கப்பட்ட அரக்கிகள் சீதையின் உறுதியான பதிலினால் கோபமடைந்து அவளை அச்சுறுத்தும் வகையில் பேசத் தொடங்கினர்.

சிம்சுபா மரத்தின் மீதிருந்து அமைதியாக அமர்ந்திருந்த ஹனுமானால்  அங்கிருந்து சீதையையும் அவரை மிரட்டும் அரக்கிகளையும்  முடிந்தது.

பயந்திருந்த சீதையைப் பார்த்துக் கோபமுற்றிருந்த அரக்கிகள், வெளியே துருத்திக் கொண்டிருந்த தங்கள் காய்ந்த உதடுகளைக் கடித்தபடி பேசினார். கையில் கோடரியை வைத்துக்கொண்டு உரத்த குரலில் "இந்தப்  பெண் ராவணனைக் கணவனாகப் பெறும் அருகதையற்றவள்" என்றனர்.

அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட அழகிய முகம் கொண்ட சீதை, கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிம்சுபா மரத்துக்கு அருகில் சென்றார்.

அரக்கிகளால் சூழப்பட்ட அகன்ற கண்களுடைய சீதை சோகத்தால் பீடிக்கப்பட்டவராக சிம்சுபா மரத்தின் அடியில் போய்  நின்றார். வாடிய முகத்துடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் இருந்த சீதையைச் சூழ்ந்து கொண்டு அந்த அரக்கிகள் அவளை மேலும் பயமுறுத்தத் தொடங்கினர்.

பெருத்த வயிறும், அச்சுறுத்தும் கண்களும், அருவருப்பான தோற்றமும் கொண்ட வினதா என்ற அரக்கி கோபத்துடன் சீதையிடம் பேசினாள்:

"ஓ, அழகான சீதையே! நீ இதுவரை உன் கணவரிடம் உனக்குள்ள விசுவாசத்தை வெளிக்காட்டி விட்டாய். அதிகமாக வெளிக்காட்டுவது துயரைத்தான் விளைவிக்கும்.

"மிதிலை நாட்டு இளவரசியே! ஒரு மானிடப்பெண்ணுக்கு எது கடமையோ அதை நீ இயன்ற அளவுக்குச் செய்து விட்டாய் என்பதில் எனக்குத் திருப்திதான். நீ.மகிழ்ச்சியாக இரு. உன் நலனை நாடுபவளான நான் சொல்வதைக் கேள்/

"அரக்கர்களின் அரசனும், அழகிய தோற்றம் கொண்டவனும், துணிவுள்ளவனும், அழகில் இந்திரனுடன் போட்டி போடுபவனும், எல்லோரிடமும் தாராளமாக இருப்பவனும், மற்றவர்களுக்கு எது நன்மையோ அதையே பேசுபவனுமான ராவணனை நீ உன் கணவனாக ஏற்றுக்கொள்.

"ஏதும் செய்ய முடியாத அந்த ராமனைக் கைவிட்டு விட்டு ராவணனை ஏற்றுக்கொள். விதேஹ நாட்டு அழகிய இளவரசியே! இன்று முதல் தேவலோகப் பெண்களைப் போல் நீ வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து கொள். அதன் பிறகு சசிதேவி இந்திரனுடனும், சுவாஹா அக்கினியுடனும் வலம் வருவது போல், நீ இந்த உலகுக்கே அரசியாக வலம் வரலாம்.

"விதேஹ நாட்டு இளவரசியே! ஏதும் செய்ய முடியாதவனும், ஆயுள் சீக்கிரமே முடியப் போகிறவனுமான அந்த ராமனைப் பற்றி நினைப்பதால் உனக்கு என்ன நன்மை? நான் சொல்லும் இந்த வார்த்தைகளை நீ ஏற்காவிட்டால், நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்போதே உன்னைத் தின்று விடுவோம்."

அடுத்தபடியாக, தொங்கும் மார்பகங்கள் கொண்ட விகடை என்ற பெண் கோபத்துடன் எழுந்து முஷ்டியை உயர்த்தி, சீதையைப் பார்த்துக் கத்தினாள். 'ஓ, அறிவில்லாத மிதிலை நாட்டு இளவரசியே! யாராலும் கடக்க முடியாத கடலைக் கடந்து, நீ கொண்டு வரப்பட்டிருக்கிறாய். நீ ராவணனின் வலுவான அந்தப்புரத்தில் வைக்கப்பட்டிருக்கிறாய். போதுமான அளவுக்கு நீ கண்ணீர் விட்டு விட்டாய். இது உனக்கு நல்லதல்ல.

"ஒடுக்கப்பட்டிருப்பது போன்று எப்போதும் காட்சியளிக்கும் நிலையை விட்டு விட்டு, மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள். ஓ, சீதா! அரக்க  அரசனுடன் மகிழ்ச்சியாக இரு.

"பயம் மிகுந்தவளே! பெண்களின் இளமை நிலையானதல்ல என்பது உனக்குத் தெரியும். ஆகவே, உன் இளமைக் காலம் முடிவதற்குள், மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொள்.

"அழகிய கண்களை உடையவளே! அரக்கர் அரசனுடன் சேர்ந்து நீ  இந்தப் பூந்தோட்டங்களிலும் அழகிய காடுகளிலும் நடக்கலாம். அழகானவளே! ஏழாயிரம் அழகிய பெண்கள் உனக்குப் பணி விடை செய்யக் காத்திருப்பார்கள்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நல்ல எண்ணத்துடன் நான் சொன்னதை நீ கேட்காவிட்டால், நான் உன் மார்பைப் பிளந்து உன்னைத் தின்று விடுவேன்."

பிறகு கொடூரமான கண்களை உடைய சண்டோதரி என்னும் அரக்கி தன் சூலத்தை நீட்டியபடி பேச ஆரம்பித்தாள். "ராவணனால் கடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் இந்த அழகிய சீதையைப் பார்த்ததும், எனக்கு ஒரு பெரிய ஆசை எழுகிறது. அவள் கல்லீரலையும், மண்ணீரலையும், அவள் மார்பையும், இதயத்தையும், அவள் சிறுகுடலையும், தலையையும் கடித்துத் தின்று விட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை."

இதற்குப் பிறகு பிரகஸை என்ற அரக்கி பேச ஆரம்பித்தாள். "நீங்கள் எல்லோரும் ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? இந்த பெண்ணின் கழுத்தை நெரித்து விட்டு அவள் இறந்துவிட்டாள் என்று அரசனிடம் சொல்லிவிடலாம் அதன் பிறகு நிச்சயமாக அவளைத் தின்று விடும்படி அவர் நமக்கு உத்தரவிடுவார்."

பிறகு, அஜமுகி என்ற அரக்கி பேசினாள். "சீக்கிரமே, நாம் அவளைத் துண்டம் துண்டமாக வெட்டி அவள் மாமிசத்தை நமக்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம். நமக்குள் சண்டை வேண்டாம். சீக்கிரமே, போதுமான அளவு மதுவும், அத்துடன் சேர்த்து அருந்த பழச்சாறுகளும்,  தின்பண்டங்களும் கொண்டு வாருங்கள்."

சூர்ப்பனகை என்ற அரக்கி முன்னே வந்து சொன்னாள். "அஜமுகி சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.  சீக்கிரமே போய் மனிதர்களின் கவலைகளை நீக்கும் மதுவைக் கொண்டு வாருங்கள். மனித மாமிசத்தைத் தின்று, மது அருந்திய பின் நாம் கூட்டத்தில் நடனம் ஆடலாம்.".

அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட தேவதை போன்ற சீதை நம்பிக்கை இழந்து  அழ ஆரம்பித்தார்.
":  .

Monday, October 29, 2018

26. 23ஆவது சர்க்கம் - அரக்கிகள் சீதையை வற்புறுத்துதல்

அரக்கிகளுக்கு இவ்விதமாக உத்தரவு பிறப்பித்து விட்டு, எதிரிகளை நடுங்கச் செய்பவனான ராவணன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனின் தலை மறைந்ததும், கோர உருவம் கொண்ட அரக்கிகள் மொத்தமாக சீதையைச் சூழ்ந்து கொண்டனர். கோபத்தில் தங்களையே மறந்தவர்களாக, அவர்கள் சீதையை பயமுறுத்துவது போல் பார்த்து, அவளை மிரட்டும் விதமாகப் பேசாத துவங்கினர்.

"ஓ, சீதையே! புலஸ்தியர் வம்சத்தைச் சேர்ந்தவனான பத்து தலை ராவணனின் மனைவி ஆவது எத்தகைய கௌரவம் என்பதை நீ உணரவில்லையா?"

கோபத்தினால் கண்கள் சிவந்த ஏகஜடா  என்ற அரக்கி அழகிய சீதையைப் பார்த்து இவ்வாறு கூறினாள்:

"புகழ் பெற்ற புலஸ்தியர், பிரம்மாவின் மனதிலிருந்து உதித்தவர். ஆறு பிரஜாபதிகளில் நான்காமவர் அவர்.

"கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்தவரான விஸ்ரவஸ் புலஸ்தியரின் மனதிலிருந்து உதித்தவர். சக்தியில் அவர் பிரம்மாவுக்கு நிகரானவர்.
எதிரிகளைக் கலங்க வைக்கும் ராவணன் அந்த விஸ்ரவஸின் புதல்வன்.
அரக்கர் குல அரசனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்.

"அழகானவளே! நீ என் பேச்சைக் கேட்கப் போகிறாயா, இல்லையா?"

அதற்குப் பிறகு, ஹரிஜடா என்ற அரக்கி, பூனை போன்ற தன் கண்களைக் கோபமாக உருட்டியபடி இவ்வாறு கூறினாள்:

முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களுடைய அரசனையும் வென்ற அரக்கர் தலைவனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக்கொள்."

ப்ரகஷா என்ற அரக்கி  கோபத்துடன் படபடவென்று பேசினாள்: "வீரத்துக்கும், பலத்துக்கும் பெயர் பெற்றவனும், போரில் புறமுதுகு காட்டாதவனுமான  மாவீரனின் மனைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?

"வல்லமை படைத்த ராவணன் தன்னிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் மனைவியை விட அதிகமாக உன்னை கௌரவித்து உனக்கு எல்லா நன்மைகளும் செய்வான். உன்னிடம் வருவதற்காக, ஆயிரக்கணக்கான பெண்களால் நிரம்பியிருக்கும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட தன் அந்தப்புரத்தை விட்டு விட்டு, நீ இருக்கும் இடத்துக்கு வருவான்.

விகடை என்ற அரக்கி கூறினாள்: "உன்னை விரும்பி வந்தவன் போரில் நாகர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், தேவர்கள் ஆகியோரை வென்றவன். கீழ்மையானவளே! அரக்கர்களின் அரசனும், எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான ராவணனின் மனைவியாக ஆக விரும்புகிறாயா என்று இப்போதாவது சொல்."

பிறகு, துர்முகி என்ற அரக்கி பேசினாள்:"அழகிய கண்களை உடையவளே! எவனைக் கண்டு சூரியன் கூட பயந்து போய்த் தன் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறதோ, காற்று கூடத் தன் வேகத்தைக் குறைத்துக்க் கொள்கிறதோ, அவனுடைய விருப்பத்துக்கு நீ இணங்குவாயா, மாட்டாயா?"

"எவனுக்கு பயந்து  மரங்கள் பூக்களை உதிர்க்குமோ, மலைகளும் மேகங்களும் நீரைப் பொழியுமோ அந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனான அரக்கர் அரசனின் மனைவியாக ஆக ஒப்புக்கொள்வதாக உன் உறுதியான பதிலைச் சொல்.

"அழகாகச் சிரிக்கும் ஆரணங்கே! உண்மை நிலையை உணர்ந்து, நாங்கள் சொன்ன யோசனையை  ஏற்றுக்கொள். இல்லாவிடில், உன் ஆயுள் குறைக்கப்படும்."
Tuesday, October 23, 2018

25. 22ஆவது சர்க்கம் - ராவணன் விதித்த இறுதிக்கெடு

ராவணனுக்குச் சரியான வழியைக் காட்டும் விதத்தில் அமைந்த சீதையின் பேச்சைக் கேட்டபின், அரக்கர் தலைவன் இவ்வாறு பதில் கூறினான்:

"ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எந்த அளவுக்கு சமாதானமாகப் போக முயல்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனது மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்துகிறாள். எந்த அளவுக்கு அவளை அவன் புகழ்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனுடைய வேண்டுகோளை நிராகரிக்கிறாள்.

"தறி கெட்டு ஓடும் குதிரைகளை ஓரு தேரோட்டி கட்டுப்படுத்துவது போல், என் கோபத்தை உன் மீது எனக்கிருக்கும் காதல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு ஆணின் உணர்வுகள் இவ்விதமாக மென்மைப் படுத்தப் படுகின்றன. ஏனெனில், ஒரு பெண் மீது ஒரு ஆணுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும்போது, அது உடனே அவள் மீதான காதலைத் தூண்டுகிறது.

"அழகான பெண்ணே! அதனால்தான், எளிமையானவன் போல் வேஷம் போடும் ராமனிடம் உறுதியான அன்பு கொண்டு என்னை அவமதிக்கும்  உன்னை நான் சும்மா விடுகிறேன்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நீ என்னிடம் பேசிய ஒவ்வொரு கொடிய சொல்லுக்கும் உன்னை நான் கொன்றிருக்க வேண்டும்."

இந்த வார்த்தைகளைப் பேசிய பின் ராவணனின் கோபம் கிளர்ந்தெழுந்து. தொடர்ந்து பேசினான்.

"அழகான பெண்ணே! நான் உனக்கு விதித்திருந்த கெடு முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள், என் மனைவியாவதென்று முடிவெடுத்து விடு. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீ என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், என் சமையற்காரர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டி, எனக்குக் காலை உணவு சமைத்து விடுவார்கள்"

ராவணனின் இந்தக் கொடிய சொற்களைக் கேட்டு ஜனகரின் மகள் பீதியடைந்ததைக் கண்டு அங்கிருந்த தேவர் குல, கந்தர்வ குலப் பெண்கள் மிகவும் வருத்தமடைந்தனர். சிலர் தங்கள் உதடுகளை அசைத்தும், சிலர் தங்கள் முகபாவங்களாலும், இன்னும் சிலர் தங்கள் கண்களை அசைத்தும் ராவணனின் அச்சுறுத்தலால் மிரண்டு போயிருந்த சீதைக்கு ஆறுதல் சொல்ல முயன்றனர்.

அவர்களின் இந்தச் செயல்களினால் சற்றே தேறுதல் அடைந்த சீதை அரக்கர் குலத் தலைவனான ராவணனிடம் கற்பின் மேன்மை பற்றிப் பேசத்    துவங்கினார்.

"உன் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாரும் இங்கு இல்லை. அதனால்தான்  நீ செல்லும் அழிவுப்பாதையிலிருந்து உன்னை யாரும் தடுக்க முயலவில்லை. இந்திரனை மணந்த சசி போல், அற வழி நடக்கும்  ராமபிரானை மணந்திருக்கும் என்னை மனைவியாக்கிக்கொள்ள வேண்டுமென்று இந்த மூவுலகிலும் உன்னைத் தவிர வேறு யார் ஆசைப்படுவார்கள்?

"கீழ்மை குணம் கொண்ட அரக்கனே! நிகரற்ற சக்திகள் கொண்ட ராமனின் மனைவியிடம்  இது போன்ற அக்கிரமமான யோசனைகளைச் சொல்லி விட்டு, இங்கிருந்து ஓடினாலும், எங்கே உனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய்?

"ராமனுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு ஒரு முயலுக்கும், பள்ளத்தில் விழுந்திருக்கும் யானைக்கும் உள்ள வேறுபாடுதான். தீயவனே! அவருக்கு முன் நீ ஒரு முயல்தான்!

"இக்ஷ்வாகு குலத் தலைவனான ராமனை இவ்வாறு  அவமானப்படுத்தி விட்டு, துவக்கத்திலிருந்தே சற்றும் வெட்கமில்லாமல் நீ மறைந்து கொண்டிருக்கிறாய். அவர் கண் முன்னால் வரும் துணிவு உனக்கு இல்லை.

"கொடியவனே! என் மீது பார்வையைச் செலுத்திய  உன்னுடைய கொடிய, அருவருப்பான, கருமஞ்சள் நிறக் கண்கள்  அவை இருக்கும் கூடுகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஏன் இன்னும் தரையில் விழவில்லை?

"பாவங்களைச்  செய்பவனே! அறவழியில் நடப்பவரான ராமரின் மனைவியும், பெருமை வாய்ந்த தசரதரின் மருமகளுமான  என்னிடம் இதுபோல் பேசிய உன் நாக்கு ஏன் இன்னும் அறுந்து விழவில்லை?

"பத்துத்தலை அரக்கனே! நீ எரிந்து சாம்பலாக வேண்டியவன். என் கற்பின் வலிமையால் என்னால் இதை நிகழச் செய்ய முடியும். ஆனால் அப்படிச் செய்வதற்கு ராமரிடமிருந்து நான் அனுமதி பெறவில்லை என்பதாலும், என் செயல்கள் நான் பின்பற்றும் தர்மத்தை ஒட்டியவை என்பதாலும், என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

"எல்லாவிதத்திலும் ராமருக்குச் சொந்தமான என்னைக் கடத்துவது  என்பது சாதாரணமாக நடக்க முடியாத விஷயம். உனக்கு அழிவைத் தேடித்தர வேண்டும் என்பதற்காக விதி இதை நடக்கும்படி செய்திருக்கிறது! ராமரைச் சற்று நேரம் அப்புறப்படுத்தி விட்டு அவரது மனைவியை வஞ்சகமாக அவரிடமிருந்து பிரித்ததுதான் குபேரனின் சகோதரன் என்றும், பெரும் சேனைகளைக் கொண்டவன் என்றும், வீரம் மிகுந்தவன் என்றும் பெருமைப்பட்டுக்கொள்ளும் நீ செய்த வீரச்செயல்!

காதில் ஈயத்தைப் பாய்ச்சியது போன்ற சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அரக்கர் தலைவன் தன்  சிவந்த, உருளும் விழிகளை சீதையின் மீது நிலைநிறுத்தினான்.

ஒரு கருத்த மேகம் போல் இருந்தது அவன் தோற்றம். அவனது வலிமையான கரங்களும் கழுத்தும் அவனுக்கு ஒரு சிங்கத்தின் வலிமையையும், வேகமாகப் பாய்ந்து செல்லும் இயல்பையும்  கொடுத்தன. அவன் உதடுகளும், கண்களின் ஓரங்களும் தீப்பிழம்புகள் போல் சிவந்திருந்தன.அவன் தலைக்கு மேல் இருந்த பரிவட்டம் உணர்ச்சி மிகுதியால் ஆடிக்கொண்டிருந்தது.

அவன் அலங்கார மாலைகள் அணிந்து, உடலில் வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டிருந்தான். அவன் உடைகளும், மாலைகளும் சிவப்பு நிறத்தில் இருந்தன. இடுப்பில் நீலக் கற்கள் பதித்த பட்டை அணிந்தபடி அவன் நின்ற தோற்றம், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடைந்த மந்தார மலையைப் போல் இருந்தது. அவனுடைய இரு கரங்களும், அந்த மலையின் சிகரங்கள் போல் தோற்றமளித்தன.

சூரிய ஒளி போல் மின்னிய அவன் இரு தோடுகள் இருபுறமும் மலர்கள் பூத்துக் குலுங்கும் அசோக  மரங்களைக் கொண்ட மலை போன்ற தோற்றத்தை அவனுக்கு அளித்தன. விரும்பிய வரங்களை அளிக்கும் கற்பக மரம் போலவும், வசந்த காலம் உருவெடுத்து வந்தது போலவும் அவன் காட்சியளித்தான்.

அவன் தோற்றம் மயானபூமியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் போலவும் இருந்தது. அவன் செய்து கொண்டிருந்த அலங்காரங்களையும் மீறி, கோரமான தோற்றத்துடன் காணப்பட்ட ராவணன், கோபத்தினால் சிவந்த கண்களுடனும், பாம்பு போல் சீறிக்கொண்டும் சீதையிடம் சொன்னான்:

"வெறுக்கத்தக்க பெண்ணே! நீ இன்னும் அந்த ஒழுக்கமற்ற பிச்சைக்காரனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய். இரவின் முடிவில் வரும் சந்தியாகாலத்தை சூரியன் அழிப்பது போல், உன்னை நான் இப்போதே அழிக்கப் போகிறேன்."

சீதையிடம் இவ்வாறு கோபமாகப் பேசியபின் ராவணன் சீதையைக் காவல் காக்கும் பெண்களிடம் திரும்பினான்.அவர்களில் சிலர் ஒரு கண் மட்டுமே உள்ளவர்கள், சிலர் ஒரு காது மட்டுமே உள்ளவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள், சிலர் மாட்டுக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள்,

சிலர் யானைக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள், சிலர் தொங்கும் காதுகளைக் கொண்டவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள்.

சிலர் யானை போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் குதிரைக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் மாட்டுக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் பின்னல் போன்று முறுக்கிக்கொண்ட கால்களைக் கொண்டவர்கள், சிலர் ஒரு கால் மட்டுமே உள்ளவர்கள், சிலர் பெரிய கால்களும், கழுத்தும் கொண்டவர்கள், சிலர் காலே இல்லாதவர்கள்.

சிலரது கண்கள் ஒரு பக்கத்தில் அமைந்திருந்தன. சிலர் துருத்திய மார்பகங்களும், சிலர் துருத்திய வயிறும் கொண்டவர்கள். சிலர் பெரிய கண்களும், பெரிய வாயும் கொண்டவர்கள். சிலர் பெரிய நாக்கு உள்ளவர்கள். சிலர் மூக்கு, நாக்கு இரண்டும் இல்லாதவர்கள்.

சிலர் சிங்க முகத்துடனும், சிலர் மாட்டு முகத்துடனும், சிலர் பன்றி முகத்துடனும் இருந்தனர். எல்லாவித குரூரத் தோற்றம் கொண்டவர்களும் அங்கே இருந்தனர்.

அவர்களைப் பார்த்து ராவணன் சொன்னான்:

"அரக்கிகளே! ஜனகரின் மகளான இந்த சீதை என் விருப்பத்துக்கு இணங்கும் விதத்தில் நீங்கள் செயல்பட வேண்டும். இதற்காக நீங்கள் நைச்சியமாகவோ, கொடுமையாகவோ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். அவளுக்கு நீங்கள் பரிசுகள் அளித்தோ அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தியோ செயல்படலாம்.

அரக்கிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டபின், காமத்தினாலும்,  கோபத்தினாலும் தன்னையே மறந்து விட்ட ராவணன் சீதையைப் பலமுறை திரும்பிப் பார்த்துத் தன் கடுமையான முகபாவத்தின் மூலம் அவளை பயமுறுத்தினான்.

அப்போது தான்யமாலினி என்ற அரக்கி வேகமாக ஒடி வந்து, பத்து தலைகள் கொண்ட அந்த ராவணனைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவனிடம் சொன்னாள்.

"ஓ! அரக்கர் குல அரசனே! இந்த மந்தமான, வெறுக்கத்தக்க பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? நீ என்னுடன் இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கலாம்! அரசே!  உன் தோள்வலியால் நீ அடைந்திருக்கும் உயர்ந்த, நல்ல விஷயங்களை இந்தப் பெண் அனுபவிக்க வேண்டும் என்பது பிரம்மாவின் விருப்பம் இல்லை போலும்!


"தன்னை விரும்பாத பெண்ணைப் பின்தொடர்ந்து போகிறவனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து விடும். உன்னிடம் ஆசை உள்ள பெண்ணால்தான் உன் காதலை ஏற்று, அன்பு செய்து உனக்கு முழுத் திருப்தி அளிக்க முடியும்."

இவ்வாறு சொல்லி, அந்த அரக்கியால் இழுத்துச் செல்லப்பட்ட மேகம் போன்ற கருத்த நிறமுடைய, சக்தி வாய்ந்த அந்த அரக்கர் தலைவன் சிரித்துக்கொண்டே சீதையை விட்டு அகன்றேன்.

சூரியன் போன்ற ஒளி பொருந்திய,அந்தப் பத்து தலைகள் கொண்ட அரசன் பூமி அதிரும் வண்ணம் நடந்து தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனைச் சூழ்ந்தபடி தேவர், கந்தர்வர், நாகர் குலப் பெண்கள்  அவனுடன் அரண்மனைக்குள் நுழைந்தனர்.

காமம் நிறைந்த ராவணன் சீதை பயந்திருந்தாலும், தர்மத்தின் வழியிலிருந்து விலகி அவனுக்குக் கட்டுப்பட மறுத்து விட்டாள் என்பதை உணர்ந்தவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான். !


Tuesday, April 3, 2018

24. 21ஆவது சர்க்கம் - ராவணனின் கோரிக்கையை நிராகரித்தார் சீதை

அரக்கர்கோனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு சீதை துக்கமும்,  பயமும் கொண்டார். அவனுக்கு புத்தி சொல்லும் விதத்தில் மெல்லிய, நடுங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

பேரழகு படைத்தவரும், கற்புக்கரசியும், தன் கணவனிடம் உறுதியான அன்பு கொண்டவரும், எப்போதும் கணவனையே நினைத்தபடி துறவு நிலையில் வாழ்ந்து வந்தவரும், துயரத்தினால் விளைந்த கண்ணீருடனேயே எப்போதும் காணப்பட்டவருமான சீதை மனதுக்குள் பயம் நிறைந்திருந்தாலும், முகத்தில் புன்னகையுடன், கற்புடைய பெண்ணான தான் இன்னொரு ஆடவனுடன் நேரடியாகப் பேசக்கூடாது என்பதைக் காட்டும் விதத்தில்  ஒரு புல்லைப்  பிடுங்கித் தனக்கும் ராவணனுக்கும் இடையே போட்டு விட்டு, அவனிடம் பேசத்  தொடங்கினார்.

"உன் மனதை என்னிடமிருந்து விலக்கிக்கொள்.உன் ஆசையை உன்னைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் வை. பாவம் செய்தவன் எப்படி மோட்சத்தை வேண்ட முடியாதோ அதுபோல், இது போன்ற கோரிக்கையை நீ என்னிடம் வைக்க முடியாது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட என்னால்  கற்புடைய பெண்கள் செய்யக்கூடாத இந்த இழிவான செயலை ஒருபோதும் ஏற்க முடியாது."

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, விதேஹ நாட்டு இளவரசியான சீதை ராவணனை அலட்சியம் செய்யும் விதத்தில் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு, அவனுக்கு ஒரு விரிவான அறிவுரை வழங்கினார்.

"இன்னொருவரின் மனைவியான, கற்பு நிலையிலிருந்து வழுவாத என்னிடம் நீ இவ்வாறு பேசுவது முறையற்றது. நான் உன் மனைவியாக ஆவது என்பது நடக்க முடியாத விஷயம். நல்லோர்களால் வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி நடந்து கொள்.

"இரவில் திரியும் அரக்கனே! உன் மனைவிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ, அவ்வாறேதான் மற்றவர்களின் மனைவிகளும். உனக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறாயோ அதை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆகையால், உனக்கு ஏற்கெனவே உள்ள மனைவிகளுடன் திருப்தி அடை.

"ஒருவன் தன மனதைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, தனக்கு ஏற்கெனவே இருக்கும் மனைவிகள் போதாதென்று மற்றவர்களின் மனைவிகளை  நாடிச் சென்றால், அந்தப் பெண்களே அவன் அழிவுக்குக் காரணமாக அமைவார்கள். நல்லொழுக்கத்தைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்லக்கூடிய பெரியோர்கள் யாருமே இல்லையா அல்லது ஒழுக்க நெறிகளை நீ தெரிந்தே மீறுகிறாயா? உன் நடத்தை நல்லோர்களின் நடத்தைக்கு முரணாக இருக்கிறது.

"தீய செயல்களைப் புரிவதென்று கங்கணம் கட்டிக்கொண்டவனாக, தீய செயல்கள் விளைவிக்கும் அழிவை உணர்ந்த பெரியோர்களின் அறிவுரையை மதிக்காமல் நடந்து கொள்ளும் நீ அரக்கர் குலத்தின் அழிவுக்குக் காரணமாக அமையப் போகிறாய்.

தவறான செயல்களில் ஈடுபடும் முட்டாள்களான அரசர்களால் ஆளப்பட்டால், வளம் கொழிக்கும் நாடுகளும், செல்வச் செழிப்புடன் விளங்கும் நகரங்களும் கூட அடியோடு அழிந்து போகும்.

பாவச் செயல்களைப் புரியும் உன் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் செல்வம் கொழிக்கும் நாடான இலங்கை கூட அழிந்துதான் போகப் போகிறது.

"ராவணா! தாங்கள் செய்யும் தீய செயல்களின் ஆபத்தான விளைவுகளை உணராமல் பாவச் செயல்களைப் புரிபவர்களின் அழிவு எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ அழிந்து போனபின், உன்னுடைய குடிமக்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு "பாவச் செயல்களில் ஈடுபட்ட இவன் கடவுளின் செயலினால் அழிவைச் சந்தித்தான்" என்று சொல்வார்கள்.

"செல்வம், அரசி என்ற அந்தஸ்து போன்றவற்றால் நான் செல்லும் நேர்மையான பாதையிலிருந்து என்னைத் திருப்ப முடியாது. சூரியனின் கிரணங்களை சூரியனிடமிருந்து பிரிக்க முடியாதது போல் என்னையும் ராமனிடமிருந்து பிரிக்க முடியாது.

"உலகம் முழுவதும் போற்றும் ராமனின் கைகளில் சாய்ந்திருந்த என்னால் எப்படி இன்னொருவரிடம் பாதுகாப்பைத் தேட முடியும்? தன்னை அறிந்தவரும், கடுமையான விரதங்களை மேற்கொண்டவருமான ஒரு துறவியிடம் ஞானம் இருப்பது எப்படிப் பொருத்தமாக இருக்குமோ, அதுபோல் ராமனுக்குப் பொருத்தமாக இருப்பவள் நான்.

"ஆண் யானையிடம் செல்ல முடியாமல் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள பெண் யானை போல் வருந்திக் கொண்டிருக்கும் என்னை ராமனிடம் சேர அனுமதிப்பதுதான் உனக்கு நல்லது. அந்த ராமன் மனிதர்களுக்குள் உயர்ந்தவர். தர்மம் எது என்பதை அறிந்தவர். தன்னை அடைக்கலம் புகுந்தவர்களிடம் கருணை காட்டக்கூடியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"நீ உயிருடன் இருக்க விரும்பினால், நீ அவருடைய நட்பை நாட வேண்டும். தன்னிடம் சரண் புகுந்தவர்களின் மீது அன்பு காட்டும் அவரிடம் சென்று அவரைத் திருப்தி செய்.

நீ மரணத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், நீ உயிர் வாழ விரும்பினால், நீ உனக்கும் நன்மை செய்து கொண்டு அவருக்கும் நன்மை செய்ய ஒரு வழிதான் இருக்கிறது.  உன் காம சிந்தனையைக்  கட்டுப்படுத்திக்கொண்டு, இப்போதே என்னை அவரிடம் கொண்டு சேர்த்து விட்டு. இப்படிச் செய்வதாக உறுதி செய்து கொள்.

"ராவணா! நீ என்னை ராமரிடம் அழைத்துச் சென்று அவரை மகிழ்ச்சி அடையச் செய்தால்தான் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வேறு விதமாகச் செயல்பட்டால், நீ அழிந்து போவது உறுதி.

இடியைக் கூட விழாமல் நிறுத்தி வைக்கலாம். யமன் கூட நீண்ட காலம் உன்னிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால் இந்த உலகத்துக்கு அரசரான ராமர் கோபம் கொண்டால், உன் போன்றவர்களால் தப்பிக்க முடியாது.

"இந்திரனின் வஜ்ராயுதம் போல் இடி முழக்கம் செய்யும் ராமரின் வில்லின் ஓசையை நீ விரைவில் கேட்பாய். விஷ நாகங்களைப் போல் வீரியம் படைத்த, கூறமையும், வேகமம் கொண்ட அம்புகள் உன்னை விரைவிலேயே வந்து தாக்கும்.

இந்த நகரம் முழுவதும் ராமரின் அம்புகளாலும் இறக்கை முளைத்த ஈட்டிகளாலும் வீழ்த்தப்பட்ட அரக்கர்களின் பிணங்களால் நிரப்பப்படப் போகிறது. மூன்று அடிகள் வைத்து இந்த உலகத்தையும் அதன் செல்வங்களையும் மகாவிஷ்ணு மீட்டது போல், ராமர் என்னை உன்னிடமிருந்து மீட்கப் போகிறார்.

"அரக்கனே! ஜனஸ்தானத்தில் அரக்கர் சேனை அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்க முடியாத நீ இந்த இழிய செயலைச் செய்திருக்கிறாய்.

கீழ்த்தரமான சிந்தனை கொண்டவனே! இரு வீர சகோதரர்களும் எங்கள் ஆசிரமத்திலிருந்து சற்று தூரம் சென்றிருந்த சமயம், யாருமே இல்லாதபோதுதானே என்னைத் திருட்டுத்தனமாக என்னைக் கடத்தினாய் நீ!

இரண்டு புலிகள் மோப்பம் பிடிக்கும் தூரத்தில் ஒரு நாய் எப்படி நிற்க முடியாதோ, அதுபோல் உன்னால் ராமரையும், லக்ஷ்மணரையும் எதிர்த்து நிற்க முடியாது.

ஒரு கை வெட்டப்பட்ட விருத்தாசுரன் போரில் இரு கரங்கள் கொண்ட இந்திரன் முன்னாள் எப்படி நிற்க முடியவில்லையோ, அதுபோல் உன்னால் ராமர், லக்ஷ்மணர்களுக்கு எதிரே நிற்க முடியாது.

நீ வெற்றி பெறுவது என்பது நடக்க முடியாத விஷயம். விரைவிலேயே நீ ராமருடனும் லக்ஷ்மணருடனும் போரிடும்போது, ஒரு சிறிய குளத்தில் உள்ள நீரை சூரியன் தன்  வெப்பத்தால் உறிஞ்சுவது போல், என் கணவர் ராமர்,  தன அம்புகளால் உன் உயிரை எடுத்து விடுவார்.

குபேரனின் மலை வாசஸ்தலத்திலோ, வருணனின் மாளிகையிலோ, இந்திரனின் சபையிலோ நீ அடைக்கலம் புகலாம். ஆனால் ஒரு வயது முதிர்ந்த மரம் மின்னலிலிருந்து எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதோ அதுபோல், ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ள நீ  தசரத குமாரனிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. 


Tuesday, February 27, 2018

23. இருபதாவது சர்க்கம் - தன்னை ஏற்றுக்கொள்ளும்படி ராவணன் வற்புறுத்தல்

துயரினாலும், பயத்தினாலும் அழுத்தப்பட்டிருந்த, தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த கற்புக்கரசி சீதையிடம் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தும் வகையில் ராவணன் பேசத் தொடங்கினான்:

"அழகிய பெண்ணே! என்னைப் பார்த்ததுமே பயந்து போய், என் பார்வையில் படக்கூடாது என்பதற்காக உன் மார்பையும் வயிற்றையும்  நீ மூடிக்கொள்வதை கவனித்தேன்.

"அழகிய கண்கள் படைத்தவளே! எல்லா அவயவங்களிலும் அழகு நிரம்பப் பெற்றவளே! உலகம் முழுவதையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! நான் உன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறேன். என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்.

"சீதா! வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்த மனிதர்களோ, ராட்சசர்களோ வேறு எவருமோ இங்கில்லை. நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! மற்றவர்களுக்குச் சொந்தமான பெண்களைக் கடத்துவதும் அவர்களைக் களங்கப்படுத்துவதும் அரக்கர்கள் வழக்கமாகச் செய்யக்கூடியதுதான். இது எங்கள் பழக்கம்தான் என்றாலும், மன்மதன் என் மனதைக் கலக்கிக்கொண்டிருந்தாலும், நீ என்னை ஏற்றுக்கொண்டாலொழிய நான் உன்னைத் தொடக் கூட மாட்டேன்.

"பெண்ணே! அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. அழகானவளே! என்னை நம்பு. என் மீது உண்மையான அன்பு கொள். வருத்தப்பட்டுக்கொண்டே காலத்தை வீணாக்காதே.

"சிடுக்கான தலைமுடியுடன், அழுக்கான ஆடை அணிந்து, தரையில் படுத்துக்கொண்டு, பட்டினி கிடந்து உன்னை வருத்திக் கொள்வது உனக்கு அழகல்ல.

"மிதிலை நாட்டு இளவரசியே! என்னை ஏற்றுக்கொள். பல்வேறு மாலைகளை அணிந்து கொள். வாசனைப் பொருட்களைப் பயன்படுத்து. உயர்தரமான ஆடைகளையும் நகைகளையும்  அணிந்து கொள், சிறந்த பானங்களை அருந்து. அருமையான படுக்கைகளையும், இருக்கைகளையும் அனுபவி. பாடல்கள், நாட்டியம், இசைக்கருவிகள் ஆகியவற்றை ரசித்து அனுபவி.

"நிலவு போன்ற முகமும், அழகிய அங்கங்களும் கொண்டவளே! உன் உடலின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் என் கண்கள் அங்கேயே நிலைத்து விடுகின்றன. உன் சோக சிந்தனையை விட்டு விட்டு என் மனைவி ஆகி விடு. என்னுடைய அந்தப்புரத்தில் உள்ள உயர்ந்த பெண்கள் அனைவருக்கும் நீ அரசி ஆகி விடுவாய்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! எல்லா உலகங்களிலிருந்தும் நான் கொண்டு வந்திருக்கும் எல்லா விலையுயர்ந்த பொருட்களும்  உனக்குத்தான். என் சாம்ராஜ்யமும் நானும் கூட உனக்குச் சொந்தமாகி விடுவோம்.

"உலகம் முழுவதையும் ஈர்க்கும் அழகு படைத்தவளே! நான் எல்லா உலகங்களையும் வென்று அவற்றை உன் தந்தை ஜனகருக்கு அர்ப்பணிப்பேன். என்  அருகில் நிற்கும் அளவுக்கு பலம் படைத்த ஒருவர் கூட இந்த உலகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"போர்க்களத்தில் யாராலும் எதிர்த்து நிற்க முடியாத தன்னிகரற்ற என் பராக்கிரமத்தை நினைத்துப் பார். பலமுறை தேவர்களும் அசுரர்களும் தங்கள் படைகளுடன் என்னைப் போரில் எதிர்கொள்ள முடியாமல், என்னிடம் தோற்று, தங்கள் கொடிகள் சாய்க்கப்பட்டு, போர்க்களத்திலிருந்து ஓடிப் போயிருக்கிறார்கள்.

"இப்போதே என்னை ஏற்றுக்கொள், மிகச் சிறந்த ஆபரணங்களும், வேறு பல பரிசுகளும் உனக்குக் கிடைக்கும்.  உன் உடலில் தவழும் ஆபரணங்களால் உன் இயற்கையான அழகு பன்மடங்கு அதிகரிப்பதை என் கண்கள் அவை திருப்தி அடையும் வரை கண்டு மகிழட்டும்.

"அழகு முகத்தவளே! சாதுவானவளே! நன்றாக அலங்கரித்துக் கொள். நல்ல உணவையும், பானங்களையும் அருந்து. உனக்குப் பிடித்தவர்களுக்கு நிலங்களையும், பொருட்களையும் வாரி வழங்கு. என் நல்ல நோக்கத்தில் நம்பிக்கை வைத்து  மகிழ்ச்சியாக இரு. உனக்கு என்ன வேண்டும் என்று ஆணையிட்டு. உன் உறவினர்கள் உன் மூலம் மகிழ்ச்சியடைந்து, என் மாட்சிமையைப் புரிந்து கொள்ளட்டும்.

"ஒளி பொருந்தியவளே! என் பெருமையையும், செல்வத்தையும், புகழையும் பார். அழகு மிகுந்தவளே! மரவுரி உடுத்திக்கொண்டிருக்கும் ராமனை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?.

ராமனின் வெற்றிகள், செல்வங்கள் ஆகியவை பழங்கதையாகி விட்டன. அவன் காட்டில் திரிந்து கொண்டு விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது.

விதேஹ நாட்டு இளவரசியே! மழைக்காலத்தில் ஆகாயம் மேகங்களால்  மூடப்பட்டு அவற்றுக்கு கீழே கொக்குகள் பறந்து கொண்டிருக்கும்போது ஆகாயம் கண்ணுக்குப் புலப்படாது. அதுபோல் ராமனால் இனி உன்னைக் காணவே முடியாது. இந்திரன் கையில் மாட்டிக்கொண்ட தன்  மனைவியை ஹிரண்யகசிபுவால் எப்படித் திரும்பப் பெற முடியவில்லையோ, அது போல் ராமனாலும் உன்னை என்னிடமிருந்து மீட்க முடியாது,

பயந்த சுபாவம் கொண்டவளே! மனதைக் கவரும் புன்னகையும், அழகிய கண்களும் பற்களும் உடையவளே! எவரையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! கருடன் பாம்பைக் கொத்திக்கொண்டு போவது போல் நீ என் மனதைக் கொத்திக்கொண்டு போய் விட்டாய்.

நீ அழுக்கான ஆடை அணிந்திருந்தாலும், அலங்காரம் ஏதும் இல்லாமல் இருந்தாலும், குச்சி போல் மெலிந்திருந்தாலும், உன்னைப் பார்த்த பிறகு, எனக்கு என் மற்ற எல்லா மனைவிகளிடமும் இருந்த ஆசை போய் விட்டது.

என் அந்தப்புரத்தில் எல்லாவிதத்திலும் மேன்மையான பல பெண்கள் இருக்கிறார்கள். ஜனகரின் மகளே! அவர்கள் மத்தியில் நீ ஒரு ராணியாக இருக்கலாம்.

"அழகிய கூந்தலை உடையவளே! என் மனைவிகள் மூவுலகிலும் சிறந்த அழகிகள் என்று புகழ் பெற்றவர்கள்.அவர்கள் அனைவரும், மகாலஷ்மிக்கு அப்சரஸ்கள் சேவை செய்வது போல், உனக்குச் சேவை செய்வார்கள்.

"அழகிய புருவமும், அழகிய உருவமும் கொண்டவளே! என்னை ஏற்றுக்கொண்டு, குபேரனிடம் இருக்கும் எல்லாச் செல்வங்களையும், நகைகளையும், நிலங்களையும் ஏற்றுக்கொள்.

"பெண்ணே!  அதிகாரத்திலோ, புகழிலோ, செல்வத்திலோ ராமன் எனக்கு இணையாக மாட்டான். விரதங்களை அனுஷ்டிப்பதிலோ, பலத்திலோ, வீரத்திலோ கூட அவன் எனக்கு இணையாக மாட்டான்.

உயர்குலப் பெண்ணே! உனக்கு வேண்டிய அளவுக்கு நிலங்களையும், நகைகளையும் நான் கொடுக்கிறேன். நீ விரும்பியது எதையும் அனுபவிக்கலாம். என்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். உன்னுடைய உறவினர்கள் கூட அவர்கள் விரும்பும் எதையும் அனுபவிக்கலாம்.

"பயந்த சுபாவம் உடையவளே! உடல் முழுவதும் பவளங்கள் பதித்த தங்க நகைகளை அணிந்து, கடற்கரையில் உள்ள மரங்கள் அடர்ந்த சோலையில், வண்டுகளின்  ரீங்காரத்துடன் கூடிய பூத்துக்குலுங்கும் மரங்களின் அருகில் இருந்தபடி என்னுடன் சேர்ந்து நீ வாழ்க்கையை அனுபவிக்கலாம்."

Monday, November 20, 2017

22. பத்தொன்பதாவது சர்க்கம் - சீதையின் தவக்கோலம்

இளமையும் அழகும் பொருந்திய ராவணன் உடல் முழுவதும்  ஆபரணங்களை  அணிந்து நடந்து வருவதைத் தொலைவிலிருந்து பார்த்த சீதை, பெருங்காற்றில் ஆடும் வாழைமரத்தைப் போல் நடுங்கினார்.

வயிற்றையும் மார்பையும் தன்  கைகளாலும், கால்களாலும் மறைத்தபடி குத்திட்டு அமர்ந்திருந்த சீதையைப் பத்து தலைகள் கொண்ட அழகிய ராவணன் பார்த்தான்.

அரக்கிகளால் சூழப்பட்டிருந்த சீதை துயரத்தால் சோர்ந்து போய், கண்ணீருடன் தரையில் அமர்ந்திருந்தார். அவரது தோற்றம் மோதி உடைந்த கப்பலையும், கீழே சாய்ந்து விட்ட மரத்தையும் ஒத்திருந்தது..கடுமையான விரதங்களை மேற்கொண்டிருந்த அவர் பல்வகை ஆபரணங்களை அணியத் தகுந்தவராயினும், உடலில் எந்த ஒரு ஆபரணமும் இல்லாமல் இருந்தார். அவர் மீது படிந்திருந்த தூசி மட்டும்தான் அவருக்கு ஒரே ஆபரணமாகத் தோற்றமளித்தது.

அந்த நிலையில், சேறு படிந்த தாமரைத்தண்டு ஒரே நேரத்தில்  (தன இயல்பினால்) அழகாகவும்,  (சேறு படித்ததால்) அழுக்காகவும்  தோன்றுவது போல் அவர் காணப்பட்டார்.

சீதை, தன் மனதளவில், திடசித்தம் என்ற குதிரை பூட்டப்பட்ட தேரில் ஏறி, எல்லாம் அறிந்தவரும், சக்தி வாய்ந்தவருமான ராமனை நோக்கிப்  பயணம் செய்து  கொண்டிருப்பது  போல் தோற்றமளித்தார்.

உடல் தொய்வடைந்து, அழுது கொண்டிருந்த சீதை துயரில் மூழ்கி இருப்பது மட்டுமே தன் பணி  என்பது போல் இருந்தார். ராமரின் நினைவிலேயே எப்போதும் இருந்த அந்த உயர்ந்த பெண்மணி தன் துயரின் எல்லையை இன்னும் கண்டறியவில்லை.

பாம்புகளின் அரசனான நாகராஜன்  மந்திரத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு அழுத்தப்பட்டது போலவும்,  ரோகிணி நட்சத்திரம் வால் நட்சத்திரத்தால் தாக்கப்பட்டது போலவும் இருந்தார் அவர்.

ஒரு சிறந்த  குடும்பத்தில் பிறந்து, இன்னொரு சிறந்த குடும்பத்தில் திருமணம் மூலம் இணைந்த சீதை  இப்போது ஒரு எளிய, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் போல் காணப்பட்டார்.

அவதூறுகளால்  களங்கப்படுத்தப்பட்ட புகழ் போலவும், சிதைக்கப்பட்ட நம்பிக்கை போலவும், தேய்ந்து போன அறிவு போலவும், இடிக்கப்பட்ட வீடு போலவும், மீறப்பட்ட ஆணை போலவும், தீக்கிரையான ஊர் போலவும், சரியான நேரத்தில் செய்யப்படாத வழிபாடு போலவும், வெள்ளம் பாய்ந்த தாமரைக் குளம் போலவும், படைத்தலைவன் இல்லாத சேனை போலவும், மங்கி விட்ட விளக்கு போலவும், வற்றிப்போன நதி போலவும்,  களங்கப்படுத்தப்பட்ட புனிதமான இடம் போலவும்,  அணையும் தருவாயில் இருந்த ஒளி போலவும்,  சந்திர கிரகணம் ஏற்பட்ட இரவு போலவும், யானையின் தும்பிக்கையினால் அடிவரை கலக்கப்பட்டு தன் மலர்களை இழந்து, அங்கிருந்த பறவைகளும் விரட்டப்பட்ட ஒரு ஏரி போலவும் இருந்தார் சீதை.

தன் கணவனைப் பிரிந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட அவர் வற்றிப்போன நதி போல் தோற்றமளித்தார். நீராடாமல் இருந்ததால், அவர் தேய்பிறை போல் மங்கலான தோற்றத்துடன் இருந்தார். உயர்குலப் பிறப்பும் அழகிய தோற்றமும் கொண்டவரான அவர்  அரண்மனையில் வாசிக்க வேண்டியவர்.

மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு சூரியனை நோக்கிச் சாய்ந்திருந்த தாமரைத் தண்டு போல் இருந்தார் அவர். பெண் யானை ஒன்று சிறை பிடிக்கப்பட்டு, அதன் ஜோடியிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டது போன்று இருந்தது அவர் நிலை.

அலங்காரம் ஏதுமின்றி ஒற்றை ஜாடையாக அவர் முதுகுப்புறம்  தொங்கிய அவர் தலைமுடி அழகாகவே இருந்தது. அது அவரை மழைக்  காலத்தின் இறுதியில் பசுமையான இலைகள் கொண்ட மரங்கள் நிறைந்த காட்டைப் போல் தோன்றத் செய்தது.

உண்ணா நோன்பினாலும், துயரினாலும் அவர் உடல் எலும்புக்கூடாக ஆகியிருந்தது. பயம், பசி, துக்கம் இவற்றால் அழுத்தப்பட்டு, எப்போதும் தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடனே இருந்த  இருந்த அவர் ராவணனின் அழிவுக்காக  எப்போதுமே ராமபிரானையும், தன்னுடைய இஷ்டதெய்வத்தையும்  பிரார்த்திக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

அழகிய புருவங்களும், நீண்டு விரிந்த கண்களும் கொண்டிருந்த அவர் எப்போதும் அழுதுகொண்டும், பயத்தினால் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும், ராமபிரானை மட்டுமே சார்ந்தும் இருந்தார்.

இந்த நிலையில் இருந்த,  குறை ஏதும் சொல்ல முடியாத மிதிலை நாட்டு இளவரசியைத் தன மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் ராவணன். அந்த ஆசை இறுதியில் அவனுக்கு அழிவைத்தான்  தேடித் தந்தது.