சுந்தர காண்டம் (வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்பு)

1. நுழைவாயில்

"கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதா ஸாகம் வந்தே வால்மீகி கோகிலம்"

ராமாயணத்தைத் துவங்குமுன் இந்த இதிகாசத்தை இயற்றிய வால்மீகியை மேற்கண்ட தியான சுலோகத்தைச் சொல்லி வணங்கி விட்டுத் துவங்குவது மரபு.

இந்த சுலோகத்தின் பொருள்:
கவிதை என்ற மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டு 'ராம' 'ராம' என்று இனிமையாகக் கூவிக் கொண்டிருக்கும் வால்மீகியை வணங்குகிறேன்.


ராமாயணக் கதை நம் நாட்டில் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆயினும், வால்மீகியின் இந்தக் காலத்தை வென்ற அற்புதமான காவியத்தை ஓரளவுக்காவது விரிவாக அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு உதவும் வகையில் சுந்தர காண்டத்தின் தமிழ் வடிவத்தை எழுத முயன்றிருக்கிறேன். 

இது மொழிபெயர்ப்புதான். ஒரு சில இடங்களில் சில சொல் வடிவங்களை எளிமைப்படுத்த முயன்றிருக்கிறேன். இதில் வேறு எந்த விளக்கங்களோ, கருத்துக்களோ சேர்க்கப்படவில்லை.

ஏன் சுந்தர காண்டத்தை மட்டும் எழுத வேண்டும், ராமாயணம் முழுவதையுமே எழுதலாமே என்ற கேள்வி சிலர் மனதில் எழக்கூடும். 


என் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு, சுந்தர காண்டத்தை முழுமையாக எழுதி முடிப்பதே ஒரு பெரு முயற்சியாக இருக்கும். 

அனுமன் அருளால் இந்தப் பணியை என்னால் முடிக்க முடிந்தால், அதற்குப் பிறகு மற்ற காண்டங்களை எழுதுவது பற்றிச் சிந்திக்கலாம்.

ராமாயணத்தை முதன்முதலில் சம்ஸ்கிருத மொழியில் எழுதியவர் வால்மீகி. இவர் ஒரு கொள்ளைக்காரராக இருந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். பிறகு நாரதரின் அருளினால் இவர் மனம் திருந்தி அற வழியில் நடக்கத் துவங்கினார்.


ஒருமுறை ஒரு மரத்தில் ஒரு ஆண் பறவையும் பெண் பறவையும் ஒன்றுபட்டுக் களித்திருந்தன. அப்போது ஒரு வேடன் அம்பை எய்தி ஆண் பறவையைக் கொன்று விட்டான். 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி, பெண் பறவையின் பிரிவுத் துயரைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் வேடனைச் சபித்து ஒரு பாடலைப் பாடினார்.

அவரையும் அறியாமல் அவர் உள்ளத்திலிருந்து வாய்மொழியாக வெளிவந்த 
ந்தக் கவிதை ஒரு அழகான சந்தத்தில் அமைந்திருந்தது. 

இதுவே சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட முதல் கவிதை என்று கூறப்படுகிறது (கவிதை வடிவில் அமைந்துள்ள வேதங்களும், உபநிஷத்துக்களும் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை- வேதங்களும் உபநிஷத்துக்களும் அநாதியானவை  ஆரம்பம் என்ற ஒன்று இல்லாதவை, காலக்கணக்குக்குள் வராதவை என்று கருதப்படுவதால்).


இதனால்தான் வால்மீகி ஆதிகவி (முதல் கவி) என்று அழைக்கப்படுகிறார்.


தம்மால் இப்படி ஒரு கவிதை எழுத முடியும் என்பது வால்மீகிக்கே ஆச்சரியமாக இருந்தது. பிறகு அவர் பிரம்மாவின் அருளைப் பெற்று ராமாயணத்தை இதே சந்தத்தில் எழுதினார் (சந்தம் என்பது ஒரு செய்யுளில் வரும் வரிகளின் நீளத்தைக் குறிக்கும் சொல். ஆங்கிலத்தில் இதை meter என்பார்கள்.)


வால்மீகி தன் வரலாற்றைத் தானே ராமாயணத்தின் கடைசிக் காண்டமான உத்தர காண்டத்தில் எழுதியிருக்கிறார்.  வால்மீகி ராமபிரானின் காலத்தில் வாழ்ந்தவர். 

ராவணனிடமிருந்து சீதையை மீட்டு அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டு மன்னராக ராமர் கோலோச்சிய காலத்தில், சீதையின்மீது வீசப்பட்ட அவதூறின்  காரணமாக சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறார் ராமர்.

காட்டில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் சீதை தஞ்சம் புகுகிறார். அங்கே சீதைக்கு லவன், குசன் என்ற இரட்டையர்கள் பிறக்கிறார்கள். இவர்கள் வால்மீகியிடம் பாடம் கற்று ராமர்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள். எனவே ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரம்தான்!

ராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.


1) பால காண்டம்:  ராம, லக்ஷ்மண, பரத சத்ருக்னர்களின் பிறப்பு, ராம, லக்ஷ்மணர் விஸ்வாமித்திர முனிவருடன் காட்டுக்குச் சென்று அங்கே தாடகை என்ற அரக்கியைக் கொன்று முனிவர்கள் தடையின்றி வேள்வி செய்ய வழி வகுத்தல், விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்று வில்லை முறித்து சீதையை மணம் புரிதல் ஆகிய சம்பவங்கள் இந்தக் காண்டத்தில் இடம் பெறுகின்றன.


2) அயோத்யா காண்டம்: சீதையை மணமுடித்து ராமர் அயோத்திக்குத் திரும்புதல், ராமருக்குப் பட்டம் சூட்ட தசரதன் முனையும்போது அவரது மூன்றாவது மனைவி கைகேயி, தசரதன் தனக்கு முன்பு அளித்திருந்த வாக்குறுதியைப் பயன்படுத்தி, தன் மகன் பரதன் அரசாள வேண்டும், ராமன் 14 வருடங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற இரு வரங்களக் கேட்டுப் பெறுதல், ராமர், லக்ஷ்மணர், சீதை மூவரும் காட்டுக்குக் கிளம்புதல் ஆகிய சம்பவங்கள் இதில் அடங்கும்.


3) ஆரண்ய காண்டம்: ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகிய மூவரும் காட்டுக்குச் செல்லுதல், ராமனின் பிரிவினால் தசரதன் உயிர் துறத்தல், தாய்மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதன் அயோத்தி வந்து தாயைக் கடிந்து கொண்டு, ராமரைத் தேடிக் கானகம் செல்லுதல், கானகத்தில் ராமர் வேட்டுவக் குலத் தலைவன் குகனைச் சந்தித்து அவனுடன் நட்புப் பேணுதல், தன்னைத் தேடிக் காட்டுக்கு வந்த பரதன் மூலம் தந்தை இறந்த`செய்தி கேட்டு ராமன் வருந்துதல், பரதனையே அரசாளப் பணித்து அவன் கேட்டுக்கொண்டபடி தன் காலணிகளை அவனிடம் கொடுத்தல், ராமர் லக்ஷ்மணர் சீதை ஆகியோரின் கானக வாழ்க்கை, அரக்கர்களை அழித்தல், முனிவர்களைச் சந்தித்தல், ராவணன் வஞ்சகமாகச் சீதையைக் கவர்ந்து செல்லுதல் ஆகிய செய்திகள் ஆரண்ய காண்டத்தில் அடங்கும்.


4) கிஷ்கிந்தா காண்டம்: சீதையைத் தேடி ராம, லக்ஷ்மணர்கள் காட்டில் திரியும்போது வானர அரசன் சுக்ரீவனின் மந்திரியாகிய ஹனுமானைச் சந்தித்தல், அனுமன் மூலம் சுக்ரீவன் அறிமுகம் ஆதல், சீதையைத் தேட உதவுவதாக சுக்ரீவன் வாக்களித்தல், சுக்ரீவன் கேட்டுக்கொண்டபடி அவன் மீது பகை கொண்டிருந்த அவனது மூத்த சகோதரன் வாலியை ராமர் வதம் செய்தல், சீதையைத் தேடி வானரர்கள் பல திசைகளுக்கும் பயணம் செய்தல் ஆகிய சம்பவங்களை உள்ளடக்கியது கிஷ்கிந்தா காண்டம். கிஷ்கிந்தை என்பது சுக்ரீவன் ஆண்ட நாட்டின் பெயர். அதனால் இந்தக் காண்டத்துக்கு இந்தப் பெயர்.


5) சுந்தர காண்டம்:
 னுமான் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்லுதல், அங்கே அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமர் வந்து அவரை மீட்பார் என்று ஆறுதல் கூறித் திரும்புதல், ராவணனின் படை வீரர்களால் சிறை பிடிக்கப்பட்டு ராவணன் அவைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ராமரின் தூதர் என்று தெரிந்ததும் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான், அந்தத் தீயினால் இலங்கைக்கே தீ வைத்து விட்டு ராமரிடம் திரும்புதல், சீதையைக் கண்ட விவரங்களை ராமரிடம் எடுத்துரைத்தல் ஆகிய செய்திகளைச் சொல்வது சுந்தர காண்டம்.

6) யுத்த காண்டம்: வானரப் படைகளுடன் ராமர் இலங்கைக்குச் சென்று ராவணனைப் போரில் வென்று சீதையை மீட்டு, அயோத்தி சென்று அரசராகப் பட்டாபிஷேகம் செய்து கொள்வதை விவரிப்பது யுத்த காண்டம்.


7) உத்தர காண்டம்: ராமரின் அரசாட்சி, சீதை மீது அவச்சொல் எழுந்ததைத்  தொடர்ந்து சீதையைக் காட்டுக்கு அனுப்புதல், காட்டில் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி சீதை லவ குசர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வால்மீகியிடம் ராமாயணம் கற்று லவ குசர்கள் ராமாயணக் கதையை எங்கும் பரப்புதல், அஸ்வமேகம் செய்த ராமருடன் லவகுசர்கள் போரிடுதல், சீதை வெளிப்பட்டு ராமரிடம் அவருடைய புதல்வர்களை ஒப்படைத்து விட்டு பூமிக்குள் மறைதல், ராமரும் ஆட்சியைப் புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டு சரயு நதியில் இறங்கித் தம் அவதாரத்தை முடித்துக் கொள்ளுதல் ஆகிய செய்திகள் இதில் சொல்லப் படுகின்றன.


பொதுவாக ராமாயணம் படிப்பவர்கள் அல்லது ராமாயணக் கதையை உபன்யாசம் செய்பவர்கள் ராமர் பட்டாபிஷேகத்தோடு கதையை மங்களமாக முடித்துக் கொள்வது மரபு.


ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்தால் (பாராயணம் செய்வது என்றால் மனம் ஒன்றிப் படிப்பது என்று பொருள்) நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம் நாட்டில் பாரம்பரியமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. சுந்தர காண்டத்தைப் படிப்பது ராமாயணம் முழுவதையும் படிப்பதற்குச் சமம்.


வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்வதால் மனத் தெளிவும், அமைதியும் ஏற்படும். வால்மீகி சம்ஸ்கிருதத்தில் எழுதிய சுலோகங்களைப் படிப்பதுதான் பாராயண முறை. சம்ஸ்கிருத எழுத்துக்களைப் படிக்க இயலாதவர்கள் சுலோகங்களின் தமிழ் எழுத்து வடிவங்களைப் படிக்கலாம்.


சுந்தர காண்டத்தின் குறிப்பிட்ட சில சர்க்கங்களை(அத்தியாயங்களை)க் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் படிக்கலாம் என்று நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பது என்பது பெரும்பாலோர்க்குச் சிரமமாக இருக்கும் என்பதால் எல்லோருமே சில பகுதிகளையாவது படிக்க வேண்டும் என்பதற்காகக் கூட இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கலாம்.


குறிப்பாக, இருபத்து ஒன்பதாவது ஸர்க்கம் மனச் சோர்வுடன் இருந்த சீதைக்கு சில நல்ல சகுனங்கள் தென்படுவதை விவரிக்கிறது. இதில் இருப்பது எட்டு சுலோகங்கள்தான். தினமும் இதைப் பாராயணம் செய்வது அனைவர்க்கும் இயலக் கூடியதுதான்.

 
குறிப்பிடப்பட வேண்டிய இன்னோரு சர்க்கம் 13ஆவது சர்க்கம். இந்த சர்க்கத்தில் சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று சிந்திக்கிறார். பிறகு அதனால் ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்த்து, ராமரை தியானித்து உற்சாக மனநிலையைப் பெறுகிறார். இதில் மொத்தம் 73 சுலோகங்கள் உள்ளன. தினம் பத்து சுலோகங்கள் வீதம் படித்தால் ஒரு வாரத்தில் இந்த சர்க்கத்தைப் படித்து முடிக்கலாம். இது போல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படிக்கலாம்.


இந்த இரண்டு சர்க்கங்களையும் குறிப்பிட்டுச் சொன்னவர் காலம் சென்ற முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியர் அவர்கள். அவருடைய உபன்யாசத்தில் இதைக் கேட்டு விட்டு மேற்குறிப்பிட்ட முறையில் இந்த இரண்டு சர்க்கங்களையும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நான் தொடர்ந்து படித்து வருகிறேன். இதை நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் இதைப் படிப்பவர்கள் நாமும் இப்படிச் செய்யலாமே என்ற உந்துதல் பெற்று இந்த சர்க்கங்களைப் படிக்க முனைவார்கள் என்பதுதான்.


இந்தக் காண்டத்துக்கு சுந்தர காண்டம் என்று பெயர் வைத்ததற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுந்தரம் என்றால் அழகு. எனவே இது ஒரு அழகான (சிறப்பான) காண்டம் என்று பொருள் கொள்ளலாம். 

சுந்தரன் என்றால் காதலரிடையே தூது செல்பவன், அரச தூதன் என்ற பொருட்களும் உண்டு. ஹனுமான் இந்த இரண்டு பொறுப்புக்களையுமே ஏற்றுச் செயல் பட்டிருப்பதால் இது சுந்தர காண்டம் என்று பெயரிடப் பட்டது என்றும் கொள்ளலாம். 

சுந்தரம் என்றால் குரங்கு என்று ஒரு பொருள் உண்டு. அதைத் தவிர ஹனுமானுக்கே அவன் தாயார் அஞ்சனை வைத்த பெயர் சுந்தரன். இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

சுந்தர காண்டம் முழுவதும் வியாபித்திருப்பவர் ஆஞ்சனேயர்தான்.

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகாஞ்சலிம்

பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்."


எங்கெல்லாம் ராமனின் கதை பாடப்படுகிறதோ (சொல்லப்படுகிறதோ) அங்கெல்லாம் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கிய நிலையில் கண்களில் நீர் வழிய (ராமனின் கதையைக் கேட்டபடி) நின்றிருப்பாராம் ஆஞ்சனேயர்!


அந்த ஆஞ்சனேயர் என் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஹனுமத் ஜயந்தியும் (ஹனுமான் பிறந்த நாள்) ஆங்கிலப் புத்தாண்டும் இணைந்த இந்த நல்ல நாளில் என் முயற்சியைத் துவக்குகிறேன்
.


இந்தப் பதிவின்  காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 1 - ஹனுமான் கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்லுதல்

(சுக்ரீவனின் கட்டளைப்படி வானரர்கள் சீதையைத் தேடிப் பல திசைகளுக்கும் பயணிக்கின்றனர். ஹனுமான் கடல் தாண்டி இலங்கை சென்று சீதையைத் தேடுவது என்று வானரர்களால் முடிவு செய்யப்படுகிறது. 

அவ்வளவு பெரிய கடலைத் தன்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று ஹனுமானுக்குச் சற்றே ஐயம் எழுகிறது. 

அப்போது ஜாம்பவான்  ஹனுமானுக்கு அவருடைய பலத்தை உணர்த்தி அவரது ஐயத்தைப் போக்குகிறார். இந்த இடத்திலிருந்து சுந்தர காண்டம் தொடங்குகிறது.)

ஜாம்பவானின் உற்சாகமூட்டிய வார்த்தைகளைக் கேட்டபின், ராவணன் சீதையை மறைத்து வைத்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிப்பது என்று ஹனுமான் உறுதி கொண்டார். 

தான் நின்றிருந்த மஹேந்திர மலைப்பகுதியின் மேடு பள்ளங்களில் சிங்கம் போல் ஏறி இறங்கினார். அவர் தாவிக் குதித்த வேகத்தில் மலையில் குடியிருந்த பல்வேறு பறவைகளும் மிருகங்களும் சற்றே மிரண்டன.

சூரியன், இந்திரன், பிரம்மா முதலான தேவர்களுக்குக் கைகூப்பி வணக்கம் செலுத்திய பின் தனது தந்தையான வாயுவுக்கும் வணக்கம் தெரிவித்தார் அந்த வானர வீரர். 

பிறகு ராம லட்சுமணர்களை மனதில் தியானித்தார். எல்லா நதிகளையும் கடல்களையும் மனதால் வணங்கினார். 

பின் தன்னை வழி அனுப்ப வந்த வானர வீரர்களைத் தழுவி அவர்களிடம் விடை பெற்றார்.

"பத்திரமாகவும், வெற்றியோடும் திரும்பி வருவாயாக" என்று கூடியிருந்த வானரர்கள் ஹனுமானை வாழ்த்தினர்.

பௌர்ணமி தினத்தன்று பொங்கும் சமுத்திரம் போல் எழுச்சி கொண்டவராக, ஹனுமான் தன் இரண்டு கைகளையும் முன்னே நீட்டி அந்த மலையைத் தன் கைகளாலும், கால்களாலும் பலமாக அழுத்தினார். 

ஜடப்பொருளான அந்த மலை கூட அவர் கொடுத்த அழுத்தத்தினால் இலேசாக நடுங்கியது.

ஹனுமான் தாவியபோது ஏற்பட்ட அழுத்தத்தால் மலையின் மீதிருந்த பல்வகை மரங்களிலிருந்தும் பூக்கள் உதிர்ந்து அந்த மலையே பூக்களால் ஆனது போன்ற தோற்றத்தை உருவாக்கின.

மலையின் மேற்புறம் சற்றே பிளவு பட்டதால், உள்ளே புதைந்திருந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் வெளிப்பட்டு மின்னின.

மலையில் இருந்த பல்வகை உயிரினங்களும் பயந்து இங்குமங்கும் ஓடின. 

விஷ நாகங்கள் தற்காப்புக்காகத் தங்கள் தலையை உயர்த்தி விஷத்தைக் கக்கின. அந்த மலையில் இருந்த சக்தி வாய்ந்த மூலிகைகளால் கூட அந்த விஷத்தை முறியடிக்க முடியவில்லை. 

விஷம் படிந்த மலைப்பாறைகள் தீக்கொழுந்துகள் போல் ஒளிர்ந்தன.

அந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் 'இந்த மலையை ஏதோ சில  பூதங்கள் பிளக்கின்றன போலும்' என்று நினைத்தனர். 

அந்த மலையில்உல்லாசமாகப் பொழுதைக்  கழிப்பதற்காத் தங்கள் மனைவிமார்களுடன் வந்திருந்த வித்யாதரர்களும் இவ்வாறே கருதி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் முதலிய எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டுத் தங்கள் மனைவிமார்களுடன் மலையை விட்டு வெளியேற எண்ணி மேலே எழும்பினர்.

அப்போது அங்கே தியானம் செய்து கொண்டிருந்த சில முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் குரல் அசரீரியாக ஒலித்தது:

"மலை போன்ற பலம் கொண்ட வாயு புத்திரரான ஹனுமான் கடலைக் கடந்து செல்லத் தீர்மானித்து விட்டார். ராம லட்சுமணர் மற்றும் தனது சக வானரர்களுக்காக, யாராலும் செய்ய முடியாத இந்த சாகசச் செயலை ஹனுமான்  புரியப் போகிறார்."

இதைக் கேட்டதும், வித்யாதரர்கள், கற்பனைக்கு எட்டாத அளவு பெரிய உருவத்துடன் மலைமீது நின்ற ஹனுமானைக் கண்ணுற்றனர்.

இடிபோல் முழங்கி விட்டு ஹனுமான் தன் வாலைச் சுழற்றினார். அப்போது அவருடைய வால் கருடனால் இழுத்துச் செல்லப்படும் பாம்பு போலத் தோற்றமளித்தது.

தனது கால்களைக் கீழே ஊன்றியபடி தான் கடந்து செல்ல வேண்டிய வழியை வான்வெளியில் கண்களை உயர்த்திப் பார்த்தார். 

பிறகு வானர வீரர்களைப் பார்த்து, "ராமபிரானின் வில்லிலிருந்து கிளம்பிய அம்பு போல் நான் ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கையை நோக்கிச் செல்வேன். 

"ஒருவேளை சீதாப்பிராட்டி அங்கே இல்லாமல் போனால், அங்கிருந்து தேவலோகத்துக்குப் போவேன். 

"அங்கேயும் சீதை இல்லாவிடில், ராவணனைக் கயிற்றால் கட்டி இங்கே இழுத்து வருவேன். தேவைப்பட்டால், ராவணனோடு சேர்த்து இலங்கையை அடியோடு பெயர்த்து எடுத்து வருவேன்" என்றார்.

பிறகு, கருடனை மனதில் தியானித்து விட்டு ஹனுமான் விசையுடன் வான்வெளியில் பாய்ந்தார். 

அவர் வானில் எழுந்தபோது, அந்த மலையிலிருந்த மரங்களும் அவருடைய உந்துவிசையால் இழுக்கப்பட்டு மேலெழுந்தன. 

ஹனுமானை வழி அனுப்புவது போல், அந்த மரங்கள் தங்கள் கிளைகளில் இருந்த பறவைகளுடன் சிறிது தூரம் அவர் பின்னால் சென்றன. பிறகு அவை கடலில் விழுந்தன. 

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் கடல்நீரின் மேல் மிதந்ததால், கடல், நட்சத்திரங்கள் நிரம்பிய ஆகாயம் போல்  தோற்றமளித்தது.

ஹனுமான் வானில் எழுந்ததால் மேலே தள்ளப்பட்ட காற்று மேகமண்டலத்தைத் தாக்கி மின்னல்களை உருவாக்கியது. 

இரு கைகளையும் நீட்டியபடி ஹனுமான் வானத்தில் பறந்த காட்சி, மலை உச்சியிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் சீறிப் பாய்ந்து வருவது போல் இருந்தது. 

ஹனுமானின் வேகமான பாய்ச்சல் அவர் கடலைக் குடிக்கப் போகிறாரா அல்லது ஆகாயத்தையே விழுங்கப் போகிறாரா என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.

வானில் பிரகாசமாக ஒளிர்ந்த ஹனுமானின் இரண்டு கண்களும் மலை உச்சியில் எரியும் இரு நெருப்புகளைப் போல் தோற்றமளித்தன. 

அவரது இரு கண்களும் பௌர்ணமி இரவில் சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வானில் தோன்றியதைப்போல் காட்சியளித்தன. 

செப்பு நிற நாசியுடன் ஒளிர்ந்த அவர் முகம் அஸ்தமன சூரியன் போல் தோற்றமளித்தது. 

செங்குத்தாக இருந்த அவரது வால், வானில் நிறுவப்பட்ட இந்திரனின் கொடிக்கம்பம் போல் தோன்றியது.

ஹனுமான் வாலைச் சுழற்றியபோது அவர் ஒளிவட்டம் சூழ்ந்த சூரியன் போல் தோன்றினார். 

ஹனுமான் வானில் பறந்த காட்சி நீளமான வால் கொண்ட வால் நட்சத்திரம் ஒன்று வானத்தைக் கிழித்துக் கொண்டு போவது போல் இருந்தது.

கடலுக்கு மேலே ஹனுமான் பறந்தபோது அவருக்கு நேர் கீழே இருந்த கடல் நீர் அவரது விசையால் கொந்தளித்தது. மேலே எழுந்த பெரிய அலைகள் உடைந்து கடற்பரப்பின் மீதே விழுந்தன. 

வானுக்கும் பூமிக்கும் நடுவே எல்லைக்கோடு போடுவது போல் அவர் பறந்து சென்றார். 

கடலின் ஆழத்தில் இருந்த பாம்புகள் ஹனுமான் பறக்கும் வேகத்தைக் கண்டு அவரை கருடன் என்று நினைத்து அஞ்சின. 

ஹனுமானைப் பின் தொடர்ந்து வந்த அவரது நிழல் கடல் பரப்பின் மீது தவழ்ந்து வரும் வெண்மேகம் போல் தோற்றமளித்தது. 

பெரிய உருவமும், பிரகாசமான தோற்றமும் கொண்ட ஹனுமான் வானில் பறந்த காட்சி இறக்கை முளைத்த மலை ஒன்று அந்தரத்தில் தொங்குவது போல் இருந்தது.

கருடனைப் போல் வானில் ஹனுமான் பறந்து செல்ல, அவரது விசையால் ஈர்க்கப்பட்டு மேகங்கள் அவர் பின்னே வந்தன. 

மேகங்களால் சூழப்பட்டும், பிறகு மேகங்களிலிருந்து வெளிப்பட்டும் ஹனுமான் பறந்ததால் அவர் சந்திரனைப் போலத் தோற்றமளித்தார்.

இலங்கையை நோக்கிப் பறந்த ஹனுமான் மீது தேவர்களும், கந்தர்வர்களும் மலர் தூவி வாழ்த்தினர். 

வெயிலின் கடுமை அவர் மீது அதிகம் படாமல் சூரியன் பார்த்துக் கொண்டார். 

வாயு பகவான் அவர் மீது தென்றலாய் வீசி அவரைக் குளிர்வித்தார். 

முனிவர்களும், தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள் முதலானோரும் அவர் பெருமையைப் பாடினர்.

வான் வழியே கடலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த ஹனுமானை கௌரவிக்க விரும்பினான் சமுத்திராஜன். 

"ராமனின் முன்னோர் வழி வந்த இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த சாகரரால்தான் என் எல்லை விரிவு படுத்தப்பட்டது. ராமனுக்கு உதவுவதற்காகக் கடல் கடந்து செல்லும் இந்த வானர வீரருக்கு நான் உதவாவிட்டால் நான் நன்றி கெட்டவன் என்று கருதப்படுவேன். மீதமுள்ள தூரத்தை எளிதாகக் கடக்க உதவியாக அவர் சற்றே ஓய்வெடுக்க நான் உதவ வேண்டும்" என்று முடிவு செய்தான் அவன்.

கடலுக்குள் மறைந்திருந்த மைனாகம் என்ற மலையை அழைத்து, "பாதாள உலகிலிருந்து அசுரர்கள் நில உலகுக்கு வராமல் தடுக்க ஒரு தடுப்பாக உன்னைக் கடலுக்கடியில் இருக்கச் செய்திருக்கிறான் தேவேந்திரன். 


"மேலே, கீழே, பக்கவாட்டில் என்று எல்லாத் திசைகளிலும் வளரும் சக்தி படைத்தவன் நீ. 


"ராமனின் பொருட்டு ஹனுமான் ஒரு கடினமான செயலில் ஈடுபட்டு கடலுக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது நீ இருக்கும் இடத்துக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறார். 


"நீ மேலே எழும்பி அவர் உன் மீது அமர்ந்து ஓய்வெடுக்க வகை செய். இக்ஷ்வாகு வம்சத்தவருக்கு உதவ நாம் கடமைப் பட்டிருக்கிறோம்" என்று கேட்டுக் கொண்டான்.


சமுத்திரராஜன் கேட்டுக் கொண்டபடி, தங்கம் போல் மின்னும் சிகரங்களையும் பலவகை மரங்களையும் தன்னுள்ளே கொண்ட மைனாகம் கடலிலிருந்து மேலெழும்பியது. மேகத்தைப் பிளந்து வெளியே வரும் சூரியன் போல் கடலிலிருந்து மேலெழுந்தது மைனாகம்.


தனக்கு முன்னால் மேலே எழும்பிக் கொண்டிருந்த மலையைப் பார்த்த ஹனுமான் அது தன் வழியை மறிப்பதாகக் கருதித் தனது மார்பினால் இடித்து அந்த மலையைப் புறம் தள்ளினார்.


மைனாக மலை மனித உருவம் எடுத்து ஹனுமான் முன் தோன்றியது. "வானர வீரரே! இக்ஷ்வாகு குலத்துக்குத் தன் நன்றிக் கடனைச் செலுத்துவதற்காக சமுத்திரராஜன் என்னை உங்களுக்கு உதவப் பணித்திருக்கிறார். 


"என் மீது அமர்ந்து நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும். மலையில் உள்ள சுவையான பழங்களை உண்டு உங்கள் பசியைப் போக்கிக்கொண்டு இளைப்பாற வேண்டும். 


"உங்களுக்கும் எனக்கும் இன்னொரு விதத்தில் கூட உறவு இருக்கிறது. கிருத யுகத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அதனால் காற்றைப் போலவும், கருடனைப் போலவும் அவை பல திசைகளிலும் பறந்து திரிந்தன. 


"அவை தங்கள் மீது விழுந்து விடுமோ என்று முனிவர்களும் மற்றவர்களும் அஞ்சினர். அதனால் இந்திரன் மலைகளின் மீது கோபம் கொண்டு மலைகளின் இறக்கைகளை வெட்டத் துவங்கினான். 


"அவன் என் இறக்கைகளை வெட்ட முயன்றபோது, உங்கள் தந்தையான வாயு என்னைக் கடலுக்குள் தள்ளி என் இறக்கைகள் வெட்டப்படாமல் காப்பாற்றினார். எனவே உங்களுக்கு உபசாரம் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன். 


"நீங்கள் என் வேண்டுகோளை ஏற்று என்மீது அமர்ந்து இளைப்பாறிச் செல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.


மைனாக மலையின் வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான், "மைனாகமே! உன் உபசாரத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உன் உபசாரத்தை நான் ஏற்கவில்லையே என்று வருந்த வேண்டாம். அதை ஏற்றால் என் கடமையைச் செய்வதில் தாமதம் ஏற்படும். சூரிய அஸ்தமனம் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் முயற்சிக்கு இடையே நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்று நான் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறேன்" என்று கூறி, மலையைத் தன் கையால் அன்பாகத் தட்டிக் கொடுத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

சமுத்திரராஜனும், மைனாகமலையும் அவரை வாழ்த்தி வணங்கினர். 

பிறகு ஹனுமான் இன்னும் மேலே எழும்பித் தன் தந்தையான வாயுவின் இருப்பிடமான காற்று மண்டலத்தில் பறக்கத் துவங்கினார். மைனாக மலையைத் தன் வழியிலிருந்து தள்ளிய அவரது இரண்டாவது அரிய செயலை தேவர்கள், சித்தர்கள் முதலானோர் வியந்து பாராட்டினர்.

தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் மற்றும் சில முனிவர்கள் பாம்புகளின் அன்னையான சுரஸையை அழைத்து அவளிடம் இவ்வாறு கூறினர்:

"வாயுபுத்திரரான ஹனுமான் வானில் பறந்து கொண்டிருக்கிறார். நீ கூரிய நகங்களுடனும், சிவந்த கண்களுடனும் விண்ணை எட்டும் மலை போன்ற உயரத்துடனும் ஒரு பயங்கரமான அரக்கனைப் போன்ற உருவம் எடுத்துக் கொண்டு, அவரைச் சற்று நேரம் வழி மறிக்க வேண்டும். அவர் உன்னைத் தந்திரத்தால் வெல்லுகிறாரா அல்லது  உன்னுடன் போரிட முயன்று தோல்வி அடைகிறாரா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இதன் மூலம் அவரது பலத்தையும் வீரியத்தையும் நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்."

தேவர்கள் கேட்டுக்கொண்டபடி சுரஸை ஒரு பயங்கரமான அரக்கியைப் போன்ற தோற்றத்துடன் வானில் பறந்து கொண்டிருந்த ஹனுமானை வழி மறித்தாள்.

"வானரத் தலைவனே! தேவர்கள் உன்னை எனக்கு உணவாக வழங்கி இருக்கிறார்கள். உன்னை நான் விழுங்கப் போகிறேன். என் திறந்த வாய்க்குள் நுழை" என்றாள். 

சுரஸை கூறியதைக் கேட்ட வானரத் தலைவர் தன் இரு கைகளையும் கூப்பியபடி இன்முகத்துடன் கூறினார்: 

"தசரதரின் மைந்தரான ராமர், தன் மனைவி சீதையுடனும், தம்பி லக்ஷ்மணனுடனும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, சீதை ராவணானால் கடத்திச் செல்லப்பட்டாள்.

"ராமருடைய கட்டளைப்படி நான் அவரது தூதனாக, சீதையைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை வழி மறித்திருக்கும் நீங்கள் உங்களால் இயன்ற உதவியை எனக்குச் செய்ய வேண்டும். 

"நீங்கள் விரும்பினால், சீதையைப் பார்த்து விட்டு, பார்த்த விவரத்தை ராமரிடம் சொல்லி விட்டுத் திரும்பி வந்து உங்கள் வாய்க்குள் விழுகிறேன். இது என் வாக்குறுதி. நான் எப்போதுமே வாக்குத் தவறாதவன்."

ஹனுமானின் பதிலைக் கேட்டபின், விரும்பும் உருவத்தை எடுக்கும் சக்தி பெற்ற சுரஸை கூறினாள்: 

"என்னைத் தாண்டி யாரும் செல்ல முடியாது. இது எனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம். என் வாய்க்குள் நுழைந்தபின் தான் நீ உன் பயணத்தைத் தொடர முடியும்." 

இவ்வாறு கூறியபின் தனது அகன்ற வாயை அவள் பெரிதாகத் திறந்தாள். 

அவள் பேச்சைக் கேட்டுக் கோபம் கொண்ட ஹனுமான், "நான் உன் வாயில் நுழையும் அளவுக்கு உன் வாயைப் பெரிதாகத் திற" என்றார். 

இவ்வாறு சொல்லிவிட்டு சுரஸையின் உயரமான 10 யோஜனைகள் அளவுக்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டார் ஹனுமான்.

பத்து யோஜனை உயரம் கொண்ட ஒளி பொருந்திய மேகம் போல் தன் முன் நின்ற ஹனுமானைப் பார்த்த சுரஸை தன் வாயை 20 யோஜனைகள் அளவுக்குத் திறந்தாள். 

இருபது யோஜனைக்கு விரிந்த சுரஸையின் வாயைப் பார்த்ததும் ஹனுமானின் கோபம் மேலும் வளர்ந்தது. அவரது உயரம் இப்போது முப்பது யோஜனைகள் வளர்ந்தது. சுரஸை தன் வாயை 40 யோஜனைகள் விட்டத்துக்குத் திறக்க, ஹனுமானின் உருவம் ஐம்பது யோஜனைகளுக்கு வளர்ந்தது.

இதுபோல் ஹனுமான் தன் உயரத்தையும், சுரஸை தான் வாயின் அகலத்தையும் அதிகரித்துக் கொண்டே போக, சுரஸையின் வாய் 100 யோஜனை அளவுக்கு விரிந்தது. 

சுரஸையின் அகலமான வாயையும், நீளமான நாக்கையும் பயங்கரமான தோற்றத்தையும் கண்ட ஹனுமான், ஒரு கணத்தில் தன் உடலைக் கட்டை விரல் அளவுக்குக் குறுக்கிக் கொண்டார். அந்தச் சிறிய உருவத்துடன் அவள் வாய்க்குள் புகுந்து உடனே வெளியே வந்தார்.

பிறகு வானில் எழும்பி, சுரஸையைப் பார்த்து, "தக்ஷனின் புதல்வியே! உன் விருப்பப்படியே நான் உன் வாய்க்குள் புகுந்து வந்து விட்டேன். இதன் மூலம் நீ வாங்கிய வரமும் உண்மையாகி விட்டது. நான் இப்போது சீதையின் இருப்பிடத்தை நோக்கிச் செல்லப் போகிறேன்" என்றார்.


கிரகணத்தின்போது ராகுவின் வாயிலிருந்து வெளிப்படும் சந்திரன் போல, தன் வாயிலிருந்து வெளி வந்த ஹனுமானைப் பார்த்து, தன் இயல்பான உருவத்துக்கு வந்த சுரஸை கூறினாள்: 


"வானரத் தலைவரே! உங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருவீர்களாக! விதேஹ தேசத்து இளவரசியுடன் (சீதையுடன்) உத்தமரான ராமர் ஒன்று சேர்ந்து மகிழட்டும்"
 

ஹனுமானின் இந்த மூன்றாவது அற்புதச் செயலைக் கண்டு எல்லா உயிரினங்களும் "அற்புதம்! அற்புதம்!" என்று அவரைப் புகழ்ந்தனர்.


வருணனின் இருப்பிடமான சமுத்திரத்தைத் தாண்டி கருடனைப் போன்று வானத்தில் அதிவேகமாகப் பறந்தார் ஹனுமான்.

வானில் மழை தூவிக்கொண்டிருக்க ஹனுமான் கருடன் போல் பறந்து சென்றார். பறவைகள் நிறைந்திருந்த வானத்தில் தும்புருவும்  மற்ற கந்தர்வர்களும் கைசிக ராகத்தில் பாடல்களைப் பாடிக்கொண்டே பயணம் செய்தனர். 


வானவில் ஒளிர்ந்தது. அலங்கரிக்கப்பட்ட வான் ஊர்திகள் சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை வாகனமாகக் கொண்டு பறந்தன. இடிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பினால் வானம் ஒளிர்ந்தது.


தங்கள் நற்செயல்களால் வீடு பேறு அடைந்த சான்றோர்கள் அந்த வான்வெளியில்  இருந்தனர். யாகங்களில் அளிக்கப்பட்ட பொருட்களை ஏந்திக்கொண்டு அக்னிதேவர் வானில் பயணம் செய்தார்.


கோள்கள், நட்சத்திர மண்டலங்கள், சந்திரன், சூரியன், முனிவர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், யட்சர்கள் என்று பலராலும் நிறந்த அந்த வானம் தூய்மையாகவும், உயர்ந்தும் காணப்பட்டது. 

கந்தர்வர்களின் அரசனான விஸ்வாவஸுவும், இந்திரனின் யானையும் அங்கே வளைய வந்தன. 

சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சிப்பாதையில் அமைந்திருந்த அந்த வானம் உயிரினங்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக பிரம்மாவினால் அமைக்கப்பட்ட கூடாரம் போல் தோன்றியது. அது வித்யாதரர்களின் இருப்பிடமாகவும் இருந்தது.

காற்று மேகங்களை அடித்துச் செல்வது போல் ஹனுமானும் மேகங்களை  இழுத்துச் சென்றார். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மேகங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களில் ஒளிர்ந்தன. 

மேகங்களுக்கு இடையே புகுந்து வெளிப்படும்போது ஹனுமான் நிலவைப் போல் ஒளிர்ந்தார். வாயு புத்திரரான ஹனுமான் மலைபோன்ற உருவம் கொண்ட, இறக்கைகள் இல்லாத ஒரு பறவை வானிலிருந்து தொங்குவது போல் தோற்றமளித்தார்.

ஹனுமானைப் பார்த்த, விரும்பியபடி உருவம் எடுக்கக்கூடிய ஸிம்ஹிகை என்னும் அரக்கி இவ்வாறு நினைத்தாள்: "நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று எனக்கு வயிற்றுக்கும் மனதுக்கும் நிறைவான உணவு கிடைக்கப் போகிறது. மிகப் பெரிய உருவம் கொண்ட ஒரு உயிரினம் என் கைக்குள் சிக்கப் போகிறது."

இவ்வாறு நினைத்த ஸிம்ஹிகை ஹனுமானின் நிழலைப் பற்றி இழுத்தாள்.

"புயலால் அலைக்கழிக்கப்படும் கப்பல்போல் நான் தடைபட்டு பலம் இழப்பதாக உணர்கிறேனே!" என்று நினைத்த ஹனுமான், மேலேயும், கீழேயும், பக்கவாட்டிலும் என்று எல்லாத் திசைகளிலும் பார்த்தார். 

கடல் நீர்ப் பரப்பின் மீது ஒரு பெரிய உருவம் மிதப்பதைக் கண்டு, "என் நிழலைப் பற்றி இழுக்கும் வல்லமை பெற்ற கோர முகம் கொண்ட அரக்கி இவள்தான் போலும். இவளைப் பற்றித்தான்  சுக்ரீவர் குறிப்பிட்டிருப்பர் போலிருக்கிறது" என்று நினைத்த ஹனுமான் தன் உடலை மழைக்கால மேகம் போல் பெரிதாக்கி கொண்டார்.

அந்த வானரரின் உடல் விரிவதைக் கண்ட ஸிம்ஹிகை, பாதாள உலகத்துக்கும், வானத்துக்கும் இருக்கும் தூரம் அளவுக்குத் தன் வாயை அகலமாகத் திறந்தாள்.

மேகக்கூட்டம் போல் இடி முழக்கம் செய்தபடி அவள் அந்த வானர வீரரை நோக்கி விரைந்தாள். 

வானத்தில் இருந்தபடியே, அவள் வாயின் அகலத்தையும் உடல் அளவையும் கணித்த ஹனுமான், கண நேரத்தில் தன் உடலைச் சுருக்கிக்கொண்டு அவள் வாய்க்குள் இடிபோல் பிரவேசித்தார். 

ராகுவின் வாய்க்குள் நிலவு நுழைவது போன்ற அந்தக் காட்சியை சித்தர்களும், சாரணர்களும் பார்த்தனர்.

எண்ணிய அக்கணத்திலேயே தம் எண்ணத்தைச் செயல்படுத்தும் திறன் பெற்ற வானர வீரர் அவள் உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். 

தனது துரிதமான சிந்தனையினாலும், செயலினாலும் அவளை அழித்த ஹனுமான் தம் பயணத்தைத் தொடர்ந்தார். 

மார்பு பிளந்த நிலையில் ஸிம்ஹிகை உப்புக் கடலுக்குள் விழுந்தாள். அவளை அழிப்பதற்காகவே பிரம்மா ஹனுமானைப் படைத்திருப்பார் போலும்!

அந்த அரக்கியைக் கண நேரத்தில் அழித்து விட்ட ஹனுமானின் செயலைப் பார்த்து, வானத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் அவரிடம் கூறினர்: 

"வானர வீரரே! நீங்கள் அரியதொரு செயலைச் செய்திருக்கிறீர்கள். அந்த அரக்கி கொல்லப்பட்டாள். உங்கள் பயணம் இனி வெற்றிகரமாக முடியட்டும். உங்களைப் போல் அறிவுக் கூர்மை, வீரம், செயல்திறன் அனைத்தும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்."

மேன்மை படைத்தவர்களால் பெருமைப் படுத்தப்பட்ட ஹனுமான் மீண்டும் கருடனைப் போல் வானில் எழும்பினார்.

சுமார் நூறு யோஜனைகள் கடந்து மறுகரைக்கு அருகே வந்தபோது, கீழே ஒரு அடர்ந்த கானகத்தை அவர் பார்த்தார். ஆகாயத்தில் பறந்து வரும்போதே அந்தத் தீவையும், மலையையும், மலையைச் சார்ந்த காடுகளையும் பார்த்தார். 

"என் பெரிய உடலையும் வேகத்தையும் பார்த்தால் அரக்கர்கள் என்னைக் கண்டுகொண்டு என்னைப் பிடிக்க முற்படுவார்கள்" என்று நினைத்த ஹனுமான், தமது உடலைச் சுருக்கிக்கொண்டு தமது இயல்பான உருவத்துக்கு வந்தார்.

அவரது செயல், மூன்றடிகள் எடுத்து வைத்து மஹாபலியைக் கொன்ற பிறகு வாமன உருவுக்குத் திரும்பிய விஷ்ணுவின் செயல் போல் இருந்தது. 

பலவகை உருவங்களையும் எடுத்துக் கொள்ளும் திறமை படைத்த ஹனுமான், மறுகரையை அடைந்ததும் தாம் செய்ய வேண்டிய செயலைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற உருவத்தை எடுத்துக் கொண்டார்.

பிறகு திரிகூட மலையின் சிகரங்களில் ஒன்றான லம்பா என்ற சிகரத்தில் இறங்கினார். இந்தச் சிகரம் கேதகி மலர்களும், தூய நீரும், தென்னை மரங்களும் நிறைந்ததாக இருந்தது. தாம் நின்றிருந்த இடத்திலிருந்து இலங்கையைப் பார்த்த ஹனுமான் தம் உருவத்தைக் குறுக்கிக் கொண்டு திரிகூட மலையின் மீது குதித்தார். 

அவர் குதித்த அதிர்ச்சியினால் அந்த மலையில் இருந்த மிருகங்களும், பறவைகளும் அதிர்ந்தன.

பாம்புகளும், பல்வகையான பயங்கரமான உயிரினங்களும் நிறைந்த புயல் போன்ற கடலைத் தன் திறமையினால் தாண்டி இலங்கையின் கரையை அடைந்த ஹனுமான், இலங்கை நகரம், இந்திரனின் அமராவதி நகரம் போல் பொலிவதைக் கண்டார்.

சர்க்கம் 1 இன் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 2 - இரவில் இலங்கைக்குள் நுழைதல்
அனாயாசமாகக் கடலைத் தாண்டி எவராலும் செய்ய முடியாத செயலைச் செய்த ஹனுமான் திரிலோக மலைச் சிகரத்தில் அமைந்திருந்த இலங்கை நகரத்தை வியப்புடன் நோக்கினார். 

தாம் சொன்னதைச் செய்து முடித்த அந்த வெற்றி வீரர் சுற்றியிருந்த மரங்களிலிருந்து தம் மீது விழுந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அந்த இலங்கை மண் மீது பிரகாசமாக ஒளிர் விட்டு நின்றார்.

நூறு யோஜனை தூரம் கடல் மீது பயணம் செய்த அலுப்பு சிறிதும் அவரிடம் இல்லை. நன்றாக மூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூட அவர் முயலவில்லை.

"என்னால் பல நூறு யோஜனைகளைத் தாண்ட முடியும். இந்த நூறு யோஜனை எனக்கு எம்மாத்திரம்!" என்று அவர் தனக்குள் நினைத்துக் கொண்டார்.

சக்தி படைத்தவர்களில் மிகச் சிறந்தவரும், அதிவேகம் கொண்டவருமான அந்த வானர வீரர் இலங்கை நகரத்தை நோக்கி நடந்தார்.

அவர் நடந்து சென்ற சாலையின் இரு மருங்கிலும் பசுமையான புல்வெளிகளும், பாறைகள் மிகுந்த  மலர் வனங்களும் இருந்தன. மலர்களின் மணத்தைச் சுமந்து வந்த காற்று இதமாக வீசியது. 

பல உயரமான சிகரங்களைக் கொண்ட மலையின் மீது நின்ற வாயுபுத்திரர் சோலைகளும் காடுகளும் நிறைந்த இலங்கையைக் கண்ணுற்றார்.

தேவதாரு, கர்ணீகாரம், பேரீச்சை, ப்ரியாளம், முச்சுலிந்தம், குடஜம், கேடகம், ப்ரியங்கு, நீபம், சப்தசாடம் போன்ற மரங்களை அவர் அங்கே பார்த்தார். ஆசனம், கோவித்ரம், கரவீரம் போன்ற பூத்துக் குலுங்கிய மரங்களையும் அவர் பார்த்தார். 

ஏராளமான பூக்களும், இலைகளும் நிறைந்த மரக்கிளைகளில் பலவகைப் பறவைகள் கிளைகளில் அமர்ந்திருக்க, காற்றில் ஆடிக் கொண்டிருந்த பல மரங்களையும் அவர் பார்த்தார். 

அன்னப்பறவைகள், நீர்ப்பறவைகள், தாமரைகள் மற்றும், வேறு பல நீர்த்தாவரங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த பல குளங்களும் நீர்நிலைகளும் அங்கே மிகுந்து காணப்பட்டன. 

சில ஏரிகளைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும், கண்ணுக்கினிய பூஞ்சோலைகளும் அமைந்திருந்தன.

ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்குள் நுழையத் தயாரானார் அந்தப் புகழ் பெற்ற வானர வீரர். 

ராவணனால் கடத்தப்பட்ட சீதை அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்ததால், ராவணன் உள்ளிட்ட சிறந்த வில்லாளிகளாலும், இரவும் பகலும் உலவிக்கொண்டிருந்த காவலாளிகளாலும் பாதுகாக்கப்பட்டு வந்தது அந்த இலங்கை. 

அந்த நகரம் எல்லாப்புறமும் அகழிகளால் சூழப் பட்டிருந்தது. நீலத்தாமரைகள் நிறைந்திருந்த அந்த அகழியின் சுவர்கள் தங்கத்தால் இழைக்கப் பட்டிருந்தன. 

அந்த நகரத்தில் இருந்த வீடுகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு கிரகம் போல அற்புதமாகத் தோற்றமளித்தன. 

சாலைகள் அகலமாகவும், சுத்தமாகவும், மேட்டுப்பாங்காகவும் இருந்தன. 

வீடுகளின் நுழைவாயிலில் கொடிகள் படர்ந்திருந்தன. எதிரிகள் யாரும் உள்ளே நுழைந்தால் அவர்களை நோட்டமிட ஏதுவாக உயரமான மேடைகள் ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்தன. 

எங்கு பார்த்தாலும் கொடிகளும், தோரணங்களும் தொங்கின. ஹனுமான் கண்ணுற்ற அந்த இலங்கை நகரம், எல்லா விதத்திலும் தேவலோகத்தை விஞ்சி நின்றது.

மலை உச்சியிலிருந்து பார்த்தபோது அந்த இலங்கை நகரின் பல கட்டிடங்கள் ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போல் காட்சியளித்தன.

விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டு, ராவணனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த நகரம் ஆகாயத்தில் மிதப்பது போலத் தோன்றியது. 

பாறைகளின் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட சுவர்கள் அந்த நகரத்தின் இடுப்புப் பகுதி போலவும், நீர் நிறைந்த அகழிகள் ஆடை போலவும், சுவர்களின் மீது பொருத்தப்பட்டிருந்த சூலங்கள், பீரங்கிகள் போன்ற ஆயுதங்கள் ரோமங்களைப் போலவும், நுழைவாயில்கள் காதணிகள் போலவும் தோற்றமளித்தன. 

விஸ்வகர்மாவால் கவனமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட அந்நகரம் கைலாச மலையின் ஒரு சிகரம் போல் தோற்றமளித்தது. 

அடுக்கடுக்காக மேலே எழும்பியிருந்த கட்டிடங்கள் ஆகாயத்தில் பறப்பது போலத் தோற்றமளித்தன. 

பாம்புகளின் நகரமான போகவதி பாம்புகளால் நிறைந்திருந்தது போல், அந்த நகரம் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கர்களால் நிரம்பியிருந்தது.

பாம்புகள் தங்கள் இருப்பிடத்தைக் காவல் புரிவது போல், சூலங்கள், ஈட்டிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்கி நின்ற ராட்சஸர்கள் குபேரனால் உருவாக்கப்பட்ட அந்த நகரத்தைக் காவல் புரிந்தனர்.

கற்பனைக்கெட்டாத அளவுக்கு விரிந்திருந்த அந்த நகரத்தின் வடக்கு நுழைவாயிலை அணுகிய ஹனுமானின் மனதில் சில எண்ணங்கள் தோன்றின.

"வானரச் சேனையால் கடலைக் கடந்து இந்த இடத்தை அடைய முயன்றாலும், அதனால் பயன் இருக்காது. ஏனெனில் தேவர்களால் கூட இந்த இலங்கையைப் போரில் வெல்ல முடியாது. 

"அரக்கர் குல அரசன் ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கைக்குள் நுழைவது மாவீரரான ராமரால் கூட இயலாது. 

"இந்த அரக்கர்களை நல்ல வார்த்தை பேசியோ, விலை உயர்ந்த பரிசுகளை அளித்தோ, நயமாகப் பேசியோ வழிக்குக் கொண்டு வர முடியாது. 

"இவர்களுடன் போர் புரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பலம் பொருந்திய வானரர்களில் கூட, வாலியின் மகன் அங்கதன், நீலன், எங்கள் அரசன் சுக்ரீவன், நான் ஆகிய நான்கு பேரால்தான் கடலைக் கடந்து இங்கே வர முடியும். 

"எப்படியிருந்தாலும், ஜனகபுத்ரியான வைதேஹி உயிருடன் இருக்கிறாரா என்பதை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம்"

ராமருக்கு நன்மை செய்வதற்கே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட அந்த வானரச் செம்மல், அந்த மலைச் சிகரத்தின் மீது நின்றபடி மேலும் யோசனை செய்தார்.

"கொடூரமான அரக்கர்களால் காவல் காக்கப்பட்டு வரும் இந்த இலங்கைக்குள் என்னால் இந்த உருவத்துடன் நுழைய முடியாது. 

"கொடூர குணம் கொண்ட, பலம் வாய்ந்த இந்த அரக்கர்கள் போரை விரும்புபவர்கள். எனவே எனக்குள்ள ஒரே வழி  இவர்களைத் தந்திரத்தினால் வெல்வதுதான். 

"யார் கண்ணுக்கும் புலப்படாத உருவத்தை எடுத்துக் கொண்டுதான் இரவு நேரத்தில் இலங்கைக்குள் புகுந்து அங்கே சீதையைத் தேட வேண்டும். நான் செய்ய வேண்டிய பெரும் பணியைத் துவக்க இதுதான் சரியான தருணம்."

இலங்கை நகரத்தை தேவர்களாலோ, அசுரர்களாலோ வெல்ல முடியாது என்று உணர்ந்த ஹனுமான் மூச்சை ஒருமுறை ஆழமாக இழுத்து விட்டு விட்டு, மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்:

"தீய மனம் கொண்ட அரக்கர் தலைவன் ராவணனுக்குத் தெரியாமல் சீதையைத் தேடிக் கண்டு பிடிக்க என்ன வழியைக் கடைப்பிடிக்கலாம்? சீதை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து வருவதாக ராமருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆக வேண்டும். 

"ஆனால் எந்த ஒரு உதவியும் இல்லாமல் சீதை இருக்குமிடத்தை நான் தேடிக் கண்டு பிடிப்பது எப்படி?

"ஒரு வேலை செய்து முடிக்கக் கூடியதாக இருந்தாலும், இடம் பொருள் அறிந்து செயல் பட முடியாத மன உறுதியற்ற ஒருவன் அதில் ஈடுபட்டால், கிடைத்திருக்க வேண்டிய வெற்றி பகலவன் முன்பு கரையும் இருளைப் போல் காணாமல் போய் விடும். 

"ஒரு திட்டம் நன்கு உருவாக்கப்பட்டிருந்தாலும், தன் திறமையில் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவனால் செயல்படுத்தப்படும்போது, அத்திட்டம் வெற்றி பெறாமல் போகக் கூடும். 

"செய்யும் காரியத்தில் தோல்வி ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது எப்படி? நான் இந்தக் கடலைக் கடந்து வந்தது வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்வது எப்படி? 

"என்னை அரக்கர்கள் யாராவது பார்த்து விட்டால், ராமபிரானால் ராவணனை அழிக்க முடியாமல் போய் விடும். நான் அரக்க உருவம் எடுத்துக்கொண்டால் கூட யாராவது என்னைக் கண்டு பிடித்து விடக் கூடும். 

"வேறு ஏதாவது உருவம் எடுத்துக் கொண்டால் என்னை இன்னும் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். 

"வாயு பகவான் கூட இங்கே யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலவ முடியாது என்று தோன்றுகிறது. சக்தி வாய்ந்த இந்த அரக்கர்களின் கண்களுக்கு எதுவுமே தப்பாது. 

"நான் என் சுய உருவத்துடன்  இங்கே இருந்தால், நான் கொல்லப்படுவது நிச்சயம். என் எஜமானரின் நோக்கம் நிறைவேறாமலேயே போய் விடும். 

"அதனால் ஒரு சிறிய குரங்கின் வடிவம் எடுத்துக்கொண்டு, ராமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இரவு நேரத்தில் இந்த நகரத்துக்குள் நுழைவேன். 

"எவராலும் உள்ளே புக முடியாத ராவணனின் நகரத்துக்குள் இரவில் நுழைந்து, ஒவ்வொரு வீடாகத் தேடி, ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிப்பேன்."

விதேஹ நாட்டு இளவரசியைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இவ்வாறு தன் மனதுக்குள் உறுதி செய்து கொண்ட ஹனுமான் சூரியன் மறைவதற்காகக் காத்திருந்தார். 

சூரியன் மறைந்து இருள் படரத் தொடங்கியதும் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு சிறிய குரங்கின் வடிவத்தை எடுத்துக் கொண்டு, அகலமான சாலைகள் கொண்ட இலங்கைக்குள் தாவிக் குதித்துப் பிரவேசித்தார்.

பெரிய வீடுகள், தங்கத்தாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட தூண்கள், தங்கத்தால் இழைக்கப்பட்ட ஜன்னல்கள், ஏழெட்டு தளங்கள் கொண்ட கட்டிடங்கள், கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்தால் இழைக்கப்பட்ட வராந்தாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த நகரம் கந்தர்வர்களின் நகரத்தை ஒத்திருந்தது. 

அரக்கர்களின் வீடுகள் வைடூரியத்தால் இழைக்கப்பட்ட நடைபாதைகளைக் கொண்டும், முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் அற்புதமாகத் தோன்றின. 

தங்க வேலைப்பாடுகள் மிகுந்த இலங்கை மனம் கவரும் தோற்றத்தைக் கொண்டிருந்தது.

பல அடுக்குகளைக் கொண்டிருந்த கட்டிடங்கள், தங்கத்தால் வேலைப்பாடு செய்யபட்டிருந்த முற்றங்கள் ஆகியவையும் காவலுக்கு நின்ற அரக்கர்களும் பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததை ஹனுமான் ரசித்தார்.

அப்போது ஹனுமானுக்கு உதவி செய்யவே வந்தது போல் நட்சத்திரங்கள் சூழ வானில் எழுந்த  நிலா  தன் குளிர்ச்சியான வெளிச்சத்தால் உலகுக்கு அழகூட்டியது. 

சங்கைப் போன்றும், பாலைப் போன்றும்  வெண்மையாக இருந்த சந்திரன் வானில் உயரே எழுந்தபோது தாமரைக் குளத்தில் நீந்தும் அன்னத்தைப் போல் தோற்றமளித்தது. 

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 3 - இலங்கையின் காவல் தேவதையை வெற்றி கொள்ளுதல்
லம்பா சிகரத்தின் மீது மேகக் கூட்டங்கள் வந்து இறங்கியதைப் போல் அமைந்திருந்த, மிகப் பெரிய தோட்டங்களும், நீர்நிலைகளும் மிகுந்த, ராவணனால் பாதுகாக்கப்பட்ட இலங்கைக்குள்  இரவு நேரத்தில் நுழைய வாயு புத்திரரும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவருமான வானரத் தலைவர் ஹனுமான் முடிவு செய்தார்.

அந்த நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த வீடுகளிலிருந்து எழுந்த, கடலிலிருந்து வருவது போன்ற ஓசையினாலும், கடற்காற்று அவற்றை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருந்ததாலும், அந்த வீடுகள் மழைக்கால மேகங்கள் போல் தோற்றமளித்தன. 

அந்நகரம் குபேரப்பட்டினமான அழகாபுரி போலவே இருந்தது. நகரம் முழுவதும் போர் வீரர்கள் உற்சாகத்துடன் உலவிக் கொண்டிருந்தனர்.

இந்திரனின் தலைநகரமான அமராவதி நகரத்தில் இருந்தத்தைப் போல் வெள்ளை நிற நுழைவாயில்களைக் கொண்டிருந்தது அந்நகரம்

நகரின் உட்பகுதி முழுவதும் தங்கக் கற்கள் பதிக்கப்பட்ட உயரமான சுவர்கள் அமைக்கப் பட்டிருந்தன. பரவலாக நிறுவப்பட்டிருந்த கொடிக்கம்பங்களிலிருந்து எழுந்த மணி ஓசை நகரம் முழுவதும் பரவியிருந்தது. 

பாம்புகளின் நகரமான போகவதியைப் போல் அந்நகரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. விண்ணுயர எழும்பியிருந்த நகரின் கட்டிடங்களின் உச்சியில் படர்ந்திருந்த மேகங்கள் மின்னல்களினால் ஒளியூட்டப்பட்டுக் காட்சியளித்தன. 

வியப்பு நீங்காதவராக  மீண்டும் மீண்டும் அந்நகரத்தை நோக்கிய ஹனுமான் நகர எல்லையில் அமைக்கப்பட்டிருந்த சுவர்களின் மீது தாவிக் குதித்தார்.

அந்த இலங்கை நகரத்தை நெருங்கிய ஹனுமான் அதன் கதவுகள் தங்கத்தாலும், நடைமேடைகள் வைடூரியத்தாலும், அலங்காரச் சின்னங்கள் முத்துக்கள் மற்றும் பல வகை ரத்தினக் கற்களாலும் இழைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து ரசித்தார். 

அந்த நகரம் காற்றில் மிதப்பதுபோல் தோன்றியது. நகரத்தின் வெளிக்கதவுகள் தங்கம் போன்ற ஒரு உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. படிகள் வைடூரியக் கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளியால் அமைக்கப்பட்டிருந்தன. 

நகரின் நடுவில் படிகம் போன்ற வெண்மணல் நிரப்பப்பட்ட முற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

கிரௌஞ்சம், மயில், அன்னம் போன்ற பறவைகளின் இனிய கூவல்கள், முரசுகள் எழுப்பிய ஒலியுடனும், மக்கள் அணிந்திருந்த ஆபரணங்களின் கிண்கிணிச் சப்தத்துடனும் கலந்து ஒலித்தன. 

விண்ணளவுக்கு (இந்திர லோகம் வரை) உயர்ந்திருந்த கட்டிடங்கள் இந்திர லோகத்துக்கு அழகு கூட்டுவது போல் தோன்றின. 

வேறு எந்த நகரத்துடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பொருள் வளமும், கலை வளமும், சிறப்பும் கொண்டிருந்த இலங்கை நகரம் பற்றி ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"எப்போதுமே தயார் நிலையில் உள்ள போர் வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் ராவணனின் நகரத்துக்குள் யாராலும் நுழைய முடியாது. 

"ஒருவேளை குமுதன், அங்கதன், சுஷேனன், மயிந்தன், த்விவிதன் போன்ற சில வானர வீரர்களால் முடியலாம். 

"சூரிய புத்திரரான சுக்ரீவர், குசபர்வணன், ஜாம்பவான், கேதுமாலன் போன்றோரும் நானும் கூட இதற்குள் நுழைய முடியும். 

"ஆனால் இவர்களால் எல்லாம் நகரத்துக்குள் நுழைய முடிந்தாலும், அதை வெல்ல முடியாது."

ஆயினும், ஹனுமான் உடனேயே ரகுவம்சத்தில் பிறந்த வீரர்களான ராமரையும், லட்சுமணரையும் நினைத்துப் பார்த்து நம்பிக்கை கொண்டார்.

அரக்கர்களின் நகரத்துக்குள் ஹனுமான் நுழைந்தபோது, அது  உயரமான கட்டிடங்களால் ஒளியூட்டப்பட்டு, ஒரு அழகான பெண்மணி போல் தோற்றமளித்தது. 

எங்கும் நிறைந்திருந்த நவரத்தினக் கற்கள் அந்தப் பெண்ணின் ஆடை போலவும், பசுக்கள் அடைக்கப்பட்டிருந்த தொழுவங்கள் காதணிகள் போலவும், தொழிற்சாலைகள் அவளுடைய மார்பகங்கள் போலவும் தோன்றின.

அந்த நகரத்தின் காவல் தேவதையான லங்காஸ்ரீ, வாயுபுத்திரரான ஹனுமான் நகருக்குள் நுழைவதைப் பார்த்தாள். 

ஹனுமான் முன் தனது உண்மையான உருவத்தில், கோபத்தினால் விகாரமான முகத்துடன் அவள் தோன்றினாள். 

அவரைப் பார்த்து உரத்த குரலில் கர்ஜனை செய்து விட்டு அவரிடம் பேசத் தொடங்கினாள்.

"ஏ குரங்கே! நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? உயிர் பிழைக்க வேண்டுமானால் உண்மையைச் சொல். 

"அருவருக்கத்தக்க குரங்கே! எல்லாப்புறமும் ராவணனின் படைகளினால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்துக்குள் உன்னால் ஒரு போதும் நுழைய முடியாது."

வழியை மறித்துக்கொண்டு நின்ற அவளிடம் ஹனுமான் கூறினார்: 

"நீ கேட்டதற்கு உண்மையான பதிலை நான் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன், நீ யார், நீ ஏன் என்னை வழிமறித்துக்கொண்டு என்னைக் கோபமாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 

"நீ உன் மிரட்டலான பேச்சினால் என்னை அச்சுறுத்தப் பார்க்கிறாய்."

பெண்ணுருவம் எடுத்து வந்த அந்த, எந்த உருவமும் எடுக்கக்கூடிய இலங்கையின் ஆத்மா, வாயுபுத்திரரான ஹனுமானைக் கோபத்துடன் பார்த்து மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கினாள்.

"அரக்கர்களின் அரசனான சக்தி வாய்ந்த ராவணனின் ஆணைக்கு உட்பட்டு அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். 

"என்னை யாராலும் வெல்ல முடியாது. இந்த நகரத்தை நான் பாதுகாத்து வருகிறேன். குரங்கே! என்னை மீறி நீ இந்த நகரத்துக்குள் நுழைய முயல்கிறாய். இந்தக் கணமே நீ கொல்லப்பட்டு மீளாத உறக்கத்தில் விழப் போகிறாய்.  

"நான் இந்த இலங்கையே பெண்ணுருவாக இருப்பவள். இந்த நகரத்தை நான் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறேன். நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்."

இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சற்றும் அஞ்சாத வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு மலையைப் போல் உறுதியாக நின்றார். 

தாவும் உயிர்களுக்குள் மிகச் சிறந்தவரான அந்த வானரத் தலைவர் அவளிடம் இதமான வார்த்தைகளால் பேசினார்: 

"கோபுரங்கள், நுழைவாயில்கள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் மிகுந்த இந்த இலங்கை நகரத்தைச் சுற்றிப் பார்க்க விழைகிறேன். 

"இந்த நகரத்தைக் காணும் ஆவலால் உந்தப்பட்டுதான் நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த நகரத்தில் உள்ள காடுகள், பயிர்கள், தோட்டங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கண்டு களிக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்."

ஹனுமானின் இந்த பதிலைக் கேட்டும் கோபம் அடங்காத, பெண் உருவில் இருந்த இலங்கை சொன்னது: 

"தீய எண்ணம் கொண்ட குரங்கே!அரக்கர்களுக்குப் பணி செய்பவளான என்னை வெல்லாமல் உன்னால் இந்த நகரத்தைக் காண முடியாது."

அதற்கு ஹனுமான் சொன்னார்: "பெண்மணியே! இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்த பிறகு நான் வந்த வழியாகவே போய் விடுவேன்."

இலங்கையின் ஆத்மா பெரிதாகக் குரல் எழுப்பிக்கொண்டு ஹனுமானை பலமாக அடித்தாள்.

அந்த அடியின் தாக்கத்திலிருந்து உடனே மீண்ட ஹனுமான் கோபமாக கர்ஜனை செய்தபடியே தன் இடது கை விரல்களை மடக்கி அவள் மீது ஒரு குத்து விட்டார். 

அவள் ஒரு பெண் என்பதால் அவர் தம் கோபத்தை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை.

அவரது அடியின் தாக்கத்தினால் அந்த அரக்கி தனது அவயவங்கள் உடைபட்டு முகம் விகாரமாகித் தரையில் விழுந்தாள். 

கீழே விழுந்த உயிர் ஒரு பெண் என்பதால் ஹனுமான் அவள் மீது இரக்கம் கொண்டார்.

அவரை அச்சத்துடன் நோக்கிய அந்த இலங்கையின் ஆத்மா உடல் நடுங்க வாய் குழற இவ்வாறு சொன்னாள்: 

"மாவீரரே! கோபம் தணியுங்கள். வானர வீரரே! மனம் இரங்கி என்னைக் காப்பாற்றுங்கள். தர்மவான்கள் சக்தி படைத்தவர்களாக இருந்தாலும் நீதியின் வழி நடப்பார்கள். 

"சக்தி வாய்ந்த வானரரே! நான் இலங்கையின் ஆத்மா. என்னை நீங்கள் உங்கள் பலத்தால் வென்று விட்டீர்கள்.  

"வானர வீரரே! பிரம்ம தேவர் எனக்குக் வரம் கொடுத்தபோது சொன்னார், 'எப்போது உன்னை ஒரு வானரம்  தனது பலத்தால் வெற்றி கொள்கிறதோ, அப்போதே அரக்கர்களுக்குக் கெட்ட காலம் துவங்கி விட்டது' என்று. 

"உங்களுடனான எனது சந்திப்பு அந்த நேரம் வந்து விட்டதைக் காட்டுகிறது. பிரம்ம தேவர் விதித்தது நடந்துதான் தீரும். அது தவறாகப் போகாது. 

"தீய மனம் படைத்த அரக்கர்களின் தலைவனான ராவணனும், அவனைப் பின்பற்றும் அரக்கர்களும் சீதையின் பொருட்டு அழிந்து போகப் போகிறார்கள். 

"வானர வீரரே! ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த நகரத்துக்குள் நுழைந்து, நீங்கள் வந்திருக்கும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதில் இனி எந்தத் தடையும் இல்லை. 

"வானர வீரரே! ராவணால் காக்கப்பட்டு வரும் இந்த நகரத்துக்குள் நீங்கள் புகுந்து, நீங்கள் விரும்பிய செயல்களைச் செய்யலாம். 

"செல்வச் செழிப்பு மிகுந்த, ஆனால் சாபத்துக்கு ஆளாகியிருக்கும் இந்த நகரத்துக்குள்  நீங்கள் சுதந்திரமாக உலாவி, தூய மகள் ஜானகியைத் தேடலாம்."

3ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 4 - இலங்கையில் ஹனுமானின் 
தேடுதல் வேட்டை
வானரங்களுக்குள் மிகச் சிறந்தவரும், மிகச் சக்தி வாய்ந்தவருமான ஹனுமான் இலங்கை தேவதையைத் தன் பலத்தினால் வென்ற பிறகு, நுழைவாயிலைப் பொருட்படுத்தாமல் சுவரைத் தாண்டிக் குதித்தார்.

வானர அரசன் சுக்ரீவனின் விசுவாசியான ஹனுமான், எதிரியின் தலையில் காலை வைத்து அவனை அழிப்பதுபோல், அந்த இலங்கையின் மண்ணில் தனது இடது காலை எடுத்து வைத்தார். 

முத்துக்களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இலங்கை நகரின் தெருக்களில் நடந்து சென்றபடியே அந்நகரத்தின் பொதுவான தோற்றத்தை அறிந்து கொண்டார் அவர்.

இந்திரனின் யானையான ஐராவதத்தைப் போல் தோற்றமளித்த பிரம்மாண்டமான பல கட்டிடங்கள் அழகான முகப்புகளையும், வைரங்கள் பதிக்கப்பட்ட சாளரங்களையும் கொண்டிருந்தன. மிருதங்கம் மற்றும் பல தாள வாத்தியக் கருவிகளின் நாதம் பரவலாக ஒலித்தது.

மேகங்கள் நிறைந்த வானம் போல் அழகிய தோற்றம் கொண்டிருந்தது அந்நகரம். அரக்கர்களின் அழகிய வீடுகள் நகருக்கு அழகு சேர்த்தன. வர்த்தமான முறைப்படி (செல்வச் செழிப்பைப் பெருக்கும் கட்டுமான  வடிவம்) தாமரை மற்றும் ஸ்வஸ்திகா வடிவில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கவனத்தை ஈர்த்தன. 

அழகிய வேலைப்பாடுகளுடன் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடங்கள் அந்நகருக்கு வெண்மேகங்களால் மூடப்பட்ட வானம் போன்ற தோற்றத்தை அளித்தன.

ராம தூதரும், சுக்ரீவனின் நலம் நாடுபவருமான ஹனுமான் நகரம் முழுவதையும் உற்சாகத்துடன் சுற்றி வந்தார். பல வகையான அமைப்புகள் கொண்ட வீடுகள் ஒவ்வொன்றுக்குள்ளும் புகுந்து பார்த்தார் வாயுபுத்திரர்.

போதையிலிருந்த பெண்கள், தலையிலிருந்து வெளிப்படும் தரம், கழுத்திலிருந்து வெளிப்படும் மத்யம், மார்பிலிருந்து எழும்பும் மந்தரம் ஆகிய மூன்று ஸ்தாயிகளிலும் அப்ஸரஸ்களைப் போல் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தை அவர் கேட்டார்.

செல்வந்தர்களின் வீடுகளிலிருந்து உரத்த சிரிப்புகளும், ஒட்டியாணங்களும் கால் சிலம்புகளும் குலுங்கியதால் ஏற்பட்ட ஒலிகளும், கைதட்டல்களின் ஒலியும், வீட்டில் இருந்தவர்கள் மாடிப்படிகளில் ஏறியபோது ஏற்பட்ட டங் டங் என்ற ஓசைகளும் அவர் செவிகளில் விழுந்தன. 

சில அரக்கர்கள் வேதங்கள் ஓதிக் கொண்டிருந்ததையும், வேறு சிலர் ராவணனின் புகழைப் பாடிக் கொண்டிருந்ததையும் அவர் கேட்டார்.

ராட்சஸ வீரர்களின் பெரிய அணிவகுப்பையும் அந்த வீரர்களிடையே ராவணனின் ஒற்றர்கள் ஊடுருவியிருந்ததையும் ஹனுமான் பார்த்தார்.

பல வகை அரக்கர்களை அவர் அங்கே பார்த்தார். சிலர் ஒரு குறிப்பிட்ட யாகத்தின் நியமத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட முடியுடன் இருந்தனர். சிலர் தலையையும் முகத்தையும் மழுங்கச் சிரைத்துக் கொண்டிருந்தனர். 

சிலர் மாட்டுத்தோலால் செய்யப்பட்ட ஆடையை அணிந்திருந்தனர். சிலர் கைகளில் தர்ப்பைகளை ஆயுதம் போல் ஏந்திக் கொண்டிருந்தனர். சிலர் தீச் சட்டிகளையும், வேறு சிலர் சுத்தியல்கள், கம்புகள், உலக்கைகள், கம்பிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். 

சில அரக்கர்கள் ஒரு கண்ணுடனும், ஒரு காதுடனும், தொங்கும் மார்புடனும் இருந்தனர்.

அந்த அரக்கர்களில் பெரும் வில்லாளிகளும், கத்தி வீசுவதில் கை தேர்ந்தவர்களும், வேறு பல வீரர்களும் இருந்தனர்.

பீரங்கிகள், கனமான இரும்புத் தடிகள் போன்றவற்றை ஆயுதமாகக் கொண்டவர்களும் இருந்தனர். சிலர் விகாரமான அங்கங்களும், முக அமைப்பும் கொண்டிருந்தனர். 

குள்ளமானவர்கள், உயரமானவர்கள், வெளுத்த நிறம் கொண்டவர்கள், கருத்த நிறம் கொண்டவர்கள், அழகான தோற்றம் கொண்டிருந்தவர்கள், அருவருப்பான தோற்றம் கொண்டிருந்தவர்கள், கூன் விழுந்தவர்கள் என்று பலவகையினர் அங்கே காணப்பட்டனர்.

சிலர் உயரமான கொடிகளையும், சிலர் சிறிய கொடிகளையும் ஏந்தியிருந்தனர். ஈட்டிகள், மரங்கள், நீண்ட வாட்கள், இடி போன்று தாக்கும் ஆயுதங்கள் இன்னும் பல்வகை ஆயுதங்களையும் கையில் வைத்திருந்தனர். 

மணம் வீசிய, அலங்கரமான மாலைகளை அணிந்திருந்த சில வீரர்கள், கைகளில் உண்டிவில்லுடன் திரிந்தனர்.

பெண்கள் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதிகளில் சில வீரர்கள் கவனமாகக் காவல் காத்து வந்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராவணனின் அரண்மனையை ஹனுமான் பார்த்தார். 

தங்கத்தால் இழைக்கப்பட்ட நுழைவாயிலைக் கொண்டிருந்த அந்த அரண்மனை தாமரை மலர்கள் நிறைந்த அகழிகளால் சூழப்பட்டிருந்தது.

சொர்க்கலோகம் போல் தோற்றமளித்த அந்த அரண்மனையின் வெளிப்புற நடைமேடையில் அவர் அடியெடுத்து வைத்தார். அங்கு நின்றபோது அவர் செவிகளில் பல மங்களகரமான ஒலிகளும், குதிரைகளின் கனைப்புச் சத்தங்களும், ஆபரணங்கள் உரசிக்கொள்ளும் ஓசையும் கலந்து ஒலித்தன. 

தேர்கள், பல்லக்குகள், வான் ஊர்திகள், ஜாதிக் குதிரைகள், நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் ஆகியவை பெரும் எண்ணிக்கையில் அங்கே இருந்தன. 

நன்கு பராமரிக்கப்பட்ட பல்வகை மிருகங்களும் பறவைகளும் அந்த இடத்துக்கு அழகூட்டின. அந்த அரண்மனை, நான்கு புறங்களிலும் அரக்க சேனையால் காவல் காக்கப்பட்டிருந்தது.

அரண்மனையின் வெளிப்புறத்திலிருந்து இவற்றை கவனித்த பிறகு, ஹனுமான் அரண்மனைக்குள் நுழைந்தார். அந்த மாளிகையின் உட்புறச் சுவர்கள் சில இடங்களில் தங்கத்தால் இழைக்கப்பட்டும், சில இடங்கள் தங்க முலாம் பூசப்பட்டும் இருந்தன. 

பவழம் போன்ற அரிய நவரத்தினக் கற்களால் அழகூட்டப்பட்டிருந்த அந்த மாளிகையிலிருந்து சந்தனத்தின் நறுமணமும், ஊதுவத்திகளின் நறுமணமும் வெளிப்பட்டன.

4ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 5 - ஹனுமான் கண்ட 
அரக்கர்களும் அரக்கிகளும்
வானத்தின் மையப்பகுதிக்கு வந்திருந்த சந்திரன் எல்லாப் பகுதிகளிலும் தனது ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி ஒரு கூடாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தது. 

போதை கொண்ட ஒரு காளை தொழுவத்துக்குள் உலவுவது போல் வானில் உலவியது நிலா. 

தனது வான் பயணம் மூலம் எல்லா உயிர்களுக்கும் ஒளி வழங்கி, அவர்களின் துயரைப் போக்கிய சந்திரன் கடலைக் கூடத் தன் ஒளியினால் குளிப்பாட்டியது.

மந்தர மலையில் இருந்தபடி உலகை உய்விக்கும் லக்ஷ்மி தேவி, ஏரிகளில் தாமரை மலர்களிலும், மாலை வேளைகளில் கடலிலும் வாசம் செய்வதுபோல், அப்போது நிலவில் இருந்தபடி உலகுக்கு அழகு கூட்டிக் கொண்டிருந்தார்.

கொடிகள் நிறைந்த தோட்டத்தில் உலவும் அன்னம் போலவும், மந்தர மலையின் குகையில் வாசம் செய்யும் சிங்கம் போலவும், ராஜவீதியில் நடந்து செல்லும் யானையின் மீது அமர்ந்திருக்கும் வீரனைப் போலவும் நிலா வானில் திகழ்ந்தது.

கூரான கொம்புகளைக் கொண்ட காளையைப் போலவும், உயர்ந்த சிகரங்களைக் கொண்ட வெள்ளிமலையைப் போலவும், தங்கக் கவசம் போடப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையைப் போலவும் வானில் தோற்றமளித்தது நிலா.

சூரியனிடமிருந்து பெற்ற ஒளியின் மூலம் இருளைப் போக்கிக் கொண்டிருந்த, பிரகாசத்தின் தூய இருப்பிடமான சந்திரன், பனி மூட்டத்தினால் ஒளி குன்றாமல், அதன் வட்ட முகத்தில் இயல்பாகத் தோன்றும் கருப்புப் புள்ளியுடன் வானில் தோற்றமளித்தது.

மலை உச்சியின் மீது நிற்கும் சிங்கத்தைப் போலவும், போர்க்களத்துக்குள் நுழையும் யானையைப் போலவும், நாடு திரும்பும் அரசனைப் போலவும் நிலா வானில் திகழ்ந்தது.

முன்னிரவின் இருட்டைப் போக்கிய நிலா, புலால் உண்ணும் அரக்கர்களின் இரவு நேரக் கேளிக்கைகளுக்கு உதவியும், காதலர்களின் ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தும், பூலோகத்தை சொர்க்கலோகம் போல் மாற்றிக் கொண்டிருந்தது.

இசைக்கருவிகளிலிருந்து எழுந்த இனிமையான சங்கீதம் கணவனை தெய்வமாக மதிக்கும் பெண்களையும், அவர்கள் கணவர்களையும் உறக்கத்தில் ஆழ்த்தியது. 

அதே சமயம், பயங்கரமான செயல்களையும், வியத்தகு செயல்களையும் செய்யும் இயல்பு கொண்ட அரக்கர்கள் தங்கள் கேளிக்கைகளைத் தொடங்கினர்.

அளவுக்கு மீறிக் குடித்து விட்டுத் தங்களை மறந்திருந்த மனிதர்களையும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த தொழுவங்களையும் ஹனுமான் பார்த்தார்.

சில அரக்கர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருந்தனர். சிலர் மற்றவர்களின் தோள்கள் மீது கைபோட்டுக் கொண்டிருந்தனர். சிலபேர் உரத்த குரலில் ஆபாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். 

இன்னும் சிலர் போதையில் தள்ளாடியபடி மற்றவர்களைப் பிடித்துக் கொண்டும், கீழே விழுந்து கொண்டும் இருந்தனர்.

சில அரக்கர்கள் திறந்த மார்புடன் தங்கள் காதலிகளை அணைத்துக் கொண்டிருந்தனர். சிலர் தங்களை அலங்காரம் செய்து கொள்வதில் ஈடுபட்டிருந்தனர். 

இன்னும் சிலர் தங்கள் கைகளிலிருந்த விற்களிலிருந்து தங்கள் இறுக்கமான பிடியை விடுவித்துக்கொண்டிருந்தனர்.

சில பெண்கள் தங்கள் உடல்களில் அழகூட்டும் களிம்புகளைத் தடவிக் கொண்டிருந்தனர். சில பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். சில அழகான பெண்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். 

சிலர் கோபமாக இருந்ததையும், சிலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததையும் ஹனுமான் பார்த்தார்.

பலவிதமான காட்சிகளாலும், ஒலிகளாலும் அந்நகரம் அழகாகத் தோன்றியது. 

யானைகளின் பிளிறல், நண்பர்களின் உற்சாகமான பேச்சுக்கள், பாம்பு சீறும் ஓசையைப் போல் கேட்ட, சில வீரர்களின் பெருமூச்சுக்கள் போன்ற ஒலிகளை அவர் கேட்டார்.

அந்நகரில் இருந்த அரக்கர்களில் அறிவாளிகள், இனிமையாகப் பேசக்கூடியவர்கள், ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள், உயர்ந்த சமுதாய நிலையில் இருந்தவர்கள், அழகான உடை அணிந்தவர்கள், அழகான பெயர் கொண்டவர்கள் ஆகியோர் இருந்தனர்.

தன்னைப்போலவே கண்ணியமான தோற்றமும், ஒழுக்கமான நடத்தையும் கொண்ட பலரை அங்கே பார்த்து ஹனுமான் மகிழ்ச்சி அடைந்தார். 

அழகற்றவர்களாக இருந்த சிலர் தங்கள் உருவ அமைப்புக்கு ஏற்றபடித் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்ததையும் அவர் பார்த்தார்.

சில அரக்கர்களின் மனைவிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் தோற்றமளித்தனர். அவர்கள் அழகானவர்களாகவும், நல்ல மனம் கொண்டவர்களாகவும், நன்னடைத்தையை அனுசரிப்பவர்களாகவும், குடிபோதையில் இருந்தபோதும்  தங்கள் கணவர்கள் மீது மனதைச் செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.

மலர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் பறவைகளைப்போல், அழகும், நாணமும் ஒருங்கே கொண்ட சில அரக்கிகள் காதல் ஏக்கம் கொண்டு, அந்த நள்ளிரவு நேரத்தில், தங்கள் கணவர்களின் பிடியில் இருந்தனர்.

மேல் மாடத்தில் இருந்த சில பெண்கள், தங்கள் கணவர்களின் மடிகளில் அமர்ந்தபடி காதல் போதையால் உந்தப்பட்டு, அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தாலும், ஒழுக்கம் பற்றித் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

சில பெண்கள் தங்கம் போல் ஓளி விட்டனர். சில உயர் குலப் பெண்கள் திறந்த மேனியுடன் தங்கள் அங்கங்களின் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  தங்கள் கணவர்களுடன் இணைந்திருந்த வேறு சில பெண்கள் தங்கள் அழகான தோற்றத்தால் நிலவைப் போல் காட்சியளித்தனர்.

தங்கள் காதலர்களைத் தேடி அலைந்த வேறு சில பெண்கள், காதலர்கள் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நிலவு முகத்தையும், அதில் வில் போன்ற புருவங்களையும் கொண்டிருந்த அந்தப் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்கள் மின்னல் போல் ஒளிர்ந்தன.

ஆயினும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து தோன்றாத, தர்மத்திலிருந்து சற்றும் வழுவாத குடும்பத்தைச் சேர்ந்த, பூத்துக் குலுங்கும் கொடியைப் போன்ற தோற்றம் கொண்ட சீதாப்பிராட்டி எங்குமே தென்படவில்லை. 

வீரத்திலும், சொல்லாற்றலிலும் சிறந்த ராமபிரானின் பத்தினியும், தர்மத்தின் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவரும், அழகிய கண்களை உடையவரும், அன்பே வடிவானவரும், தனது கணவரின் மனதில் நீங்காத வண்ணம் நிலைத்திருப்பவரும், உயர்ந்த குணங்கள் கொண்ட சாதாரணப் பெண்களை விடப் பல மடங்கு உயர்ந்தவரும், பிரிவென்னும் தீயில் எரிந்து கொண்டிருந்தவரும், முன்பு தங்க அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தில் வழியும் அளவுக்குக் கண்ணீர் வடித்து வருபவரும், காட்டில் நடனம் ஆடும்போது பளிச்சிடும் கழுத்துடன் விளங்கும் பெண்மயிலைப் போன்ற தோற்றம் கொண்டவரும், தேய்ந்த சந்திரன் போலவும், தூசு படிந்த தங்கம் போலவும் ஒளி குறைந்து காணப்பட்டவரும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சப்பட்டவர் போல் துன்பம் கொண்டவரும், காற்றினால் கலைக்கப்பட்ட மேகக் கூட்டம் போல் தோன்றியவருமான  சீதையை,   நீண்ட நேரம் எங்கும் வலை போட்டுத் தேடியும் கண்டு பிடிக்க முடியாதது ஹனுமானுக்குப் பெரும் வருத்தத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியது.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 6 -  ராவணனின் மாளிகைக்குள் 
ஹனுமான் நுழைதல்
தான் விரும்பிய எந்த உருவத்தையும் ஏற்கும் சக்தி படைத்த ஹனுமான், இலங்கை நகரில் இருந்த எல்லா மாளிகைகளிலும் சீதையை விரைந்து தேடினார்.

எல்லா மங்களங்களும் நிரம்பப் பெற்ற அவர் ராட்சஸ அரசன் ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தார். பெரிய உருவம் கொண்ட அரக்கர்களால் காவல் காக்கப்பட்டு வந்த அந்த மாளிகைக்குள், அடர்ந்த கானகத்துக்குள் ஒரு பெரிய சிங்கம் நுழைவது போல் நுழைந்தார் அந்த வானர வீரர்.

அந்த மாளிகைக்குள் தங்கத்தால் இழைக்கப்பட்ட பல வீடுகளும், வெள்ளியால் செய்யப்பட்ட கதவுகளும் மிகுந்திருந்தன. அலங்கார அமைப்புகள் கொண்ட வாயிற் கதவுகளுடன் கூடிய பல சதுரங்களும் அங்கே  இருந்தன.

வீரர்கள் ஏறி அமரும் யானைகள், தேர்களில் பூட்டப்படும் களைப்பறியாத, கட்டுப்படுத்த முடியாத குதிரைகள் ஆகியவையும் அங்கே மிகுந்து காணப்பட்டன.

தந்தம், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்டு, சிங்கம், சிறுத்தை ஆகியவற்றின் தோல்களால் மூடப்பட்டிருந்த, இனிமையான ஓசையுடன் வேகமாகச் செல்லக் கூடிய அற்புதமான தேர்களும் அங்கே இருந்தன. 

விலையுயர்ந்த ஆசனங்கள் அமைக்கப்பட்ட, நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட, திறமையான சாரதிகளால் ஓட்டப்பட்ட தேர்கள் ஓடும் சத்தம் இடை விடாது கேட்டுக்கொண்டே இருந்தது.

அழகான தோற்றத்தையும், அலாதியான உடலமைப்பையும் கொண்டிருந்த பல மிருகங்களும், பறவைகளும் அங்கே இருந்தன. பணிவாக நடந்து கொண்ட பல அரக்கர்களால் அந்த மாளிகை காவல் காக்கப்பட்டு வந்தது.

உயர்குலப் பெண்கள் எங்கும் மகிழ்ச்சியுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். பெண்கள் ஆபரணங்கள் மாற்றிக் கொள்ளும் ஓசை தொடர்ந்து ஒலித்ததால், அந்த அரண்மனை பெரும் கடல் போல் ஆர்ப்பரித்தது.

அகில் மற்றும் சந்தன மணம் வீசிய அந்த அரண்மனையில் ஒரு அரசனின் மாளிகைக்கே உரித்தான வேலைப்பாடுகள் மிகுந்து காணப்பட்டன.

அந்த இடம் முழவதும் மிருதங்கம், முரசு போன்ற தாள வாத்தியக் கருவிகளின் ஓசையாலும், சங்குகளின் ஒலியாலும் நிறைந்திருந்தது. பல இடங்களில் அரக்கர்கள் ஹோமங்கள் செய்து கொண்டிருந்தனர்.

எல்லோராலும் மதித்துப் போற்றப்பட்ட அந்த இடம் கடலைப் போல் கம்பீரமாக விளங்கியது.  கடலின் இனிய ஓசையும் அங்கே நிறைந்திருந்தது. 

அந்த இடம் முழுவதும் விலை உயர்ந்த கற்களாலும், தரை விரிப்புகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வானர வீரர் கண்ட, அந்த ராட்சஸ அரசனின் நகரமான இலங்கையின் தோற்றம் இதுதான்!

யனைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றின் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த அரண்மனை இலங்கை நகருக்கே ஒரு அணிகலனாகத் தோன்றியது.

ராவணனுக்கு அண்மையில் இருப்பதை உணர்ந்த ஹனுமான் அந்த இடம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். 

மனதில் சிறிதும் அச்ச உணர்வு இன்றி அந்த ராட்சஸர்களின் நகரத்தில் வீடு வீடாகப் புகுந்து தேடினார். தோட்டங்களுக்குள்ளும் புகுந்து தேடினார்.

விரைந்து செல்லக்கூடிய சக்தி படைத்த ஹனுமான், முதலில் பிரஹஸ்தனின் இல்லத்துக்குள் புகுந்து தேடினார். பிறகு மகாப்ரஸ்வனின் இல்லத்தில் தேடினார். 

அதன் பிறகு ஒரு பெரிய மேகக் கூட்டம் போன்ற உருவம் கொண்ட கும்பகர்ணன் இல்லத்திலும், பிறகு விபீஷணன் இல்லத்திலும் புகுந்து தேடினார்.

பிறகு மஹோதரன், விரூபாட்சன், வித்யுத்ஜீவன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுக்ரன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரஸ்மிகேது, சூர்யசத்ரு, வஜ்ரகாயன், தும்ராக்ஷன், சம்பாதி, பீமன், வித்யுத்ரூபன், கனன், விகனன், சுகநாசன், வக்ரன், சடன், விகடன், பிரம்மகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன்,  நாதினன், அதிகாயன், அக்ஷன், வித்யுத்ஜீவன், இந்த்ரஜீவன், ஹஸ்திமுகன், அகம்பனன், கராளன், பிசாசன், ஸோணிதாக்ஷன், தேவாந்தகன், நராந்தகன், கும்பன், நிகும்பன், உக்ரவக்த்ரன், கோரன், கோராராவன் உள்ளிட்ட பல அரக்கர்களின் இல்லங்களுக்குள்ளும் புகுந்து தேடினார்.

அனைத்து அரக்கர்களின் இல்லங்களிலும் செல்வவளம் மிகுந்திருந்ததை அவர் கண்டார்.

ராவணன் இல்லத்துக்கு அருகில் இருந்த எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து தேடிய பிறகு, ஹனுமான் ராவணனின் வீட்டுக்குள் நுழைந்தார். 

அங்கே விகாரமான கண்கள் கொண்ட அரக்கிகள் கையில் ஈட்டிகள், அம்புகள், தடிகள்,  கூரான கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தார்.

இவர்களைத் தவிர வேறு பல போர் வீரர்களும், பெரும் உருவம் கொண்ட அரக்கர்களும் கைகளில் ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்தனர். 

பல உயர் ஜாதிக் குதிரைகள் வெண்மை மற்றும் சிகப்பு நிறத்தில், அழகான தோற்றத்துடன், போரில் பங்கேற்கத் தேவையான அமைப்புகளுடன் நின்றன.

பெரிய மேகம் போல் தோன்றிய யானைகள் தடங்களில் நின்று கொண்டிருந்தன. அவற்றின் தலைகளிலிருந்து மத நீர் பெருகி வழிந்த காட்சி மலையிலிருந்து அருவிகள் கொட்டுவது போல் இருந்தது. 

(இந்திரனின் யானையான) ஐராவதம் போல் தோற்றமளித்த அந்த யானைகளின் பிளிறல் இடி முழக்கம் போல் ஒலித்தது. போர்க்களத்தில் யாராலும் வெல்ல முடியாத அந்த யானைகள் எதிரிப் படைகளைத் தாக்கவும், அழிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தன.

தங்கச் சேணம் பூட்டப்பட்ட குதிரைகள், தங்க வேலைப்பாடுகளால் சூரியன் போல் மின்னிய பல்லக்குகள் ஆகியவற்றையும் அவர் பார்த்தார்.

பல அரிய வகைச் செடிகொடிகள், கலைப் பொருட்களுக்கான காட்சி அரங்குகள், கேளிக்கை விடுதிகள், மரத்தால் குன்றுகள் போல் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்குகள், காதலர்களுக்கான தனி அறைகள், தங்கும் விடுதிகள் ஆகியவையும் அங்கே இருந்தன.

மற்ற எல்லாக் கட்டிடங்களையும் மிஞ்சும் வகையில், மிகச் சிறந்த வல்லுநர்களால் கட்டப்பட்டிருந்த ராவணனின் அரண்மனை, சிவபெருமானின் இல்லம் போலவே காட்சி அளித்தது.

மயில்கள் அமர்வதற்கான இடங்கள், கொடிக்கம்பங்கள் இவை மிகுந்திருந்த அந்த அரண்மனை ஹனுமானின் கண்களுக்கு மந்தர மலை போலவே தோன்றியது.

எல்லா இடங்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. சூரியன் தன் ஒளிக்கதிர்களால் ஜொலிப்பது போல், அந்த அரண்மனை அரிய கற்களின் வேலைப்பாட்டினாலும், ராவணனின் சிறப்பினாலும் ஜொலித்தது.

அங்கே கட்டில்கள், தங்க அரியணைகள், பளபளக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த வானர வீரர் பார்த்தார். தேன், மது ஆகியவற்றின் ஈரம் இன்னும் நீங்காத விலை உயர்ந்த கோப்பைகள் அங்கே பரவலாக நிறைந்திருந்தன.

குபேரனின் இல்லத்தைப் போல் பிரம்மாண்டமாக இருந்த அந்த மாளிகையில் கொலுசுகள், ஒட்டியாணங்கள் ஆகியவற்றின் ஓசைகள், மிருதங்கம், ஜால்ரா போன்ற தாள வாத்தியக் கருவிகளின் ஓசையுடன் கலந்து ஒலித்தது.

அந்த அரண்மனை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் பல அழகிய பெண்கள் நிறைந்திருந்தனர்.

6ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 7 - புஷ்பக விமானம்
வைடூர்யம் பதிக்கப்பட்ட, தங்கத்தால் ஆன ஜன்னல் கதவுகளைக் கொண்ட மூன்று கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார். அவை மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட பெரும் மழை மேகங்கள் போல் காட்சியளித்தன. 

நிலவைக் கண்டு களிப்பதற்காக அந்தக் கட்டிடங்களில் திறந்த வெளி மேல் மாடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அந்தக் கட்டிடங்களில் இருந்த அறைகளுக்குள் சங்குகளும், விற்கள் முதலான ஆயுதங்களும் இருந்தன.

தேவர்களையும் அசுரர்களையும் ஒருங்கே கவர்ந்த பல கட்டிடங்களை ஹனுமான் பார்த்தார். எந்த விதக் குறையும் இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடங்கள் செல்வச் செழிப்பின் அடையாளங்களாக விளங்கின. அவை யாவும் ராவணனின் திறமையால் உருவாக்கப்பட்டிருந்தன.

ஹனுமான் அங்கே பார்த்த வீடுகள் யாவையும் கடும் உழைப்பினால் உருவாக்கப் பட்டிருந்தன. எல்லா வசதிகளும் கொண்ட அந்தக் கட்டிடங்கள் மயனால் உருவாக்கப் பட்டவை போல் தோற்றமளித்தன. 

அவற்றுள் ஒரு கட்டிடம் மற்ற எல்லாவற்றையும் விட உயரமாக இருந்தது. தங்க நிற மேகக் கூட்டம் போல் காட்சியளித்த அந்தக் கட்டிடம் அதன் அழகான தோற்றத்தாலும், கலைச் சிறப்பாலும், ராவணனின் மேன்மையை ஒத்திருந்தது.

அங்கே அவர் ஒரு மாளிகை போல் தோற்றமளித்த புஷ்பக விமானத்தைப் பார்த்தார். அதன் அற்புதமான தோற்றம், வானுலகமே பூமியில் வந்து இறங்கியது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. பல மரங்களிலிருந்து வந்து படிந்திருந்த மகரந்தங்களால் மூடப்பட்ட மலைச் சிகரம் போல் அது காட்சியளித்தது.

பல உயர் குலப் பெண்கள் அந்த விமானத்துக்குள் அமர்ந்திருந்தனர். அன்னப் பறவைகளால் வானில் தூக்கிச் செல்லப்படுவது போல் அது தோற்றமளித்தது.

பல மேகங்களை ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டதுபோல் தோன்றிய அந்த விமானம் சந்திரன் உள்ளிட்ட கிரகங்களால் சூழப்பட்ட மலைச் சிகரம் போல் காட்சி அளித்தது. 

அந்த விமானத்தின் உட்புறத்தில் மலைகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள், தாமரை போன்ற மலர்களால் நிரம்பிய ஏரிகள், அடர்ந்த காடுகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன.

அதன் மீது பதிக்கப்பட்டிருந்த நவரத்தினக் கற்களின் ஒளியால், புஷ்பக விமானம், கலையழகுடன் உருவாக்கப்பட்டிருந்த கட்டிடங்களிலிருந்து வேறுபட்டுத் தெரிந்தது. (இல்லாவிட்டால், பார்ப்பதற்கு அதுவும் ஒரு பெரிய கட்டிடம்போல்தான் தோன்றியிருக்கும்!)

வெள்ளியாலும், பவழத்தாலும்  செய்யப்பட்டு, வைடூரியம் பதிக்கப்பட்ட பறவைகளின் உருவங்கள் விமானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. விமானம் வானில் பறக்கும்போது இந்தப் பறவைகளும் விமானத்துக்குக் கீழே பறந்து செல்வது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தியது.

இவை தவிர உயர் ஜாதிக் குதிரைகளின் உருவங்களும், நவரத்தினங்களால் செய்யப்பட்ட பலவகைப் பாம்புகளும் அந்த விமானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. 

மன்மதனின் உதவியாளர்கள் போல் வளைந்த சிறகுகளுடன் அழகான தோற்றத்துடன் விளங்கிய பல அழகிய பறவைகளின் உருவங்களும் அங்கே இருந்தன. 

நீலத் தாமரைப் பூக்களைத் துதிக்கைகளில் ஏந்தியபடி தாமரைத் தடாகங்களில் விளையாடிக் கொண்டிருந்த யானைகள், கையில் ஒரு தாமரையுடன் மங்களகரமாகத் தோன்றும் லக்ஷ்மி ஆகிய உருவங்களும் இருந்தன. 

மணம் வீசும் மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்த கால மரங்கள் போலவும், அழகிய குகைகளைக் கொண்ட ஒரு மலையைப்போலவும் விளங்கியது அந்த விமானம்.

அந்த அழகிய நகரம் முழுவதும் அலைந்து திரிந்த பிறகும் சீதையைக் காண முடியவில்லையே என்று வருந்தினார் ஹனுமான். 

7ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 8 - புஷ்பக விமான வர்ணனை
அந்த அரண்மனையின் மையப் பகுதியில் ஆகாயத்தில் கட்டப்பட்ட மாளிகை போல் அமைந்திருந்த புஷ்பக விமானத்தை அந்த வானர வீரர் கண்டார்.

முத்துக்களாலும், வைரங்களாலும் அழகு செய்யப்பட்டிருந்த அந்த விமானத்தின் ஜன்னல்கள் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் கலையழகுடன் செய்யப்பட்டிருந்தன.

தேவலோகச் சிற்பி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டிருந்த அந்த விமானத்தின் சக்தியை எவராலும் அளவிட முடியாது. அதை யாராலும் அழிக்கவும் முடியாது. அது போன்ற வேறு எந்த வாகனத்தையும் விஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அது உருவாக்கப்பட்டிருந்தது.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அது அந்தரத்தில் நின்றது. அந்த விமானத்தால் எந்த இடத்துக்கும் செல்ல முடியும்.  

சூரியனுக்குச் செல்லும் பாதையில் ஒரு மைல்கல் போல் அது நின்றது. அதன் ஒவ்வொரு பகுதியும் மிகவும் திறமையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. எல்லாப் பகுதிகளுமே நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. 

தேவர்களிடம் இருந்த எந்தப் பொருளிலும் இல்லாத சிறப்புகள் அந்த விமானத்தில் இருந்தன. அதன் எல்லாப் பகுதிகளுமே வியப்பூட்டும் வண்ணம் இருந்தன.

அரிய தவத்தின் மூலமே பெறக்கூடிய எல்லா சக்திகளையும் கொண்டிருந்தது அந்த விமானம். அது எந்தத் திசையிலும் பறக்கக் கூடியது. அதில்  பிரமிக்க வைக்கும் அழகு கொண்ட அறைகள் இருந்தன. 

அதன் எல்லாப் பகுதிகளுமே சீராகவும் சிறப்புத் தன்மையுடனும் அமைக்கப்பட்டிருந்தன. தன் எஜமானனின் விருப்பத்துக்கேற்ப எங்கும் செல்லும் அந்த விமானத்தைக் காற்றால் கூடத் தடை செய்ய முடியாது. 

தேவர்களாலும், புனித வாழ்க்கை நடத்திய மனிதர்களாலும் மட்டுமே அடையக்கூடிய சொர்க்க லோகத்தை ஒத்திருந்தது அந்த விமானம்.

மலை உச்சிக்குச் செல்ல அமைக்கப்பட்டது போல் தோற்றமளித்த  சுழற்படிக்கட்டுகள் அதில் இருந்தன. இலையுதிர் காலச் சந்திரன் போல் அது தூய்மையான தோற்றம் கொண்டிருந்தது.  

அதில் விண் முட்டும் அளவுக்கு உயரம் கொண்ட பெரிய அரக்கர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த காதணிகளால் அவர்கள் முகம் ஒளி விட்டது. 

வசந்த காலத்தில் மலரும் பூக்களைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அந்த விமானத்தைப் பார்க்கும்போது ஏற்பட்டது.

இந்தப் பதிவின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 9 - ராவணனின் அந்தப்புரம்
ராவணனின் அரண்மனை ஒரு யோஜனை (சுமார் 10 மைல்) நீளமும், அரை யோஜனை (சுமார் 5 மைல்) அகலமும் கொண்டிருந்தது. எதிரிகளை அழிக்கும் வல்லமை பெற்றவரான ஹனுமான், மற்ற எல்லா அரக்கர்களின் இல்லங்களிலும் தேடி அலைந்து அங்கெல்லாம் சீதையைக் காணாததால், கடைசியாக ராவணனின் இல்லத்துக்குள் நுழைந்தார்.

ராவணனின் அந்தப் பெரிய அரண்மனை, எப்போதும் தயார் நிலையில் இருந்த ஆயுதம் தாங்கிய காவலர்களாலும், மூன்று மற்றும் நான்கு தந்தங்கள் கொண்ட யானைகளாலும் காக்கப்பட்டு வந்தது.

அந்த அரண்மனைக்குள், ராவணனின் மனைவிகளும், அவனால் சிறை பிடிக்கப்பட்ட அரச குலப் பெண்களும் இருந்தனர். முதலைகள், திமிங்கிலங்கள், பாம்புகள், மீன்களால் நிறைந்த, அலைகளால் பொங்கிக் கொண்டிருக்கும் கடலைப்போல், அணுகுவதற்கு அரிதானதாக இருந்தது அந்த அரண்மனை.

குபேரன், இந்திரன், சூரியன் ஆகியோரின் இல்லங்களுக்கே உரித்தான செல்வங்களும், சிறப்புகளும் ராவணனின் அரண்மனையிலும் இருந்தன. ராவணனின் அரண்மனையின் செல்வச் செழிப்பு இந்திரன், குபேரன், வருணன், யமன் ஆகியோரின் இல்லங்களின் செல்வச் செழிப்பை விட அதிகமாகவே இருந்தது.

ராவணனின் அரண்மனைக்குள் வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு விமானத்தைப் பார்த்தார் அந்த வாயுபுத்திரர். மாளிகை போன்று பிரும்மாண்டமாக அமைந்திருந்த அந்தப் புஷ்பக விமானத்தை விண்ணுலகில் விஸ்வகர்மா உருவாக்கியிருந்தார். விமானத்தில் அமர்ந்திருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப எங்கும் செல்லக் கூடிய சக்தி படைத்தது அந்த விமானம்.

முழுவதும் நவரத்தினக் கற்களால் இழைக்கப்பட்ட, மூவலகில் வசிப்பவர்களாலும் போற்றப்பட்ட அந்த விமானத்தை, குபேரன் கடுமையான தவம் செய்து பிரம்மாவிடமிருந்து பெற்றான். குபேரனை வெற்றி கொண்டு, ராட்சஸ அரசன் ராவணன் அந்த விமானத்தைத் தனதாக்கிக் கொண்டான்.

அந்த விமானத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த மான் போன்ற பல உருவங்கள் செதுக்கப்பட்ட தூண்கள் தங்கள் பளபளப்பினால் நெருப்புத் தூண்கள் போல் ஒளிர்ந்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அதன் நுழைவாயில் கோபுரங்கள் மேரு மலை போலவும், மந்தர மலை போலவும் உயர்ந்து விண்ணைத் தொட்டன.

அந்தப் புஷ்பக விமானத்திற்குள் நுழைந்து பார்த்தார் ஹனுமான். அதைச் சுற்றிப் பல தாழ்வாரங்கள் இருந்தன. உள்ளே நுழைந்தபோதே பல்வேறு உணவுப் பண்டங்கள், பானங்கள் ஆகியவற்றின் இனிய நறுமணம் வீசியது. அந்த நறுமணம் உள்ளே வருமாறு அவரை நட்புடன் வரவேற்பது போல் இருந்தது.

பிறகு, அந்த அரண்மனையில் ராவணனின் அந்தப்புரத்தை அவர் பார்த்தார். ஒரு அழகான உயர் குலப் பெண்ணைப் போல் அது பார்ப்போரைக் கவர்வதாகவும், மங்களகரமாகவும் இருந்தது. அதன் படிகளில் எண்ணற்ற நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. அந்த அறையின் சாளரங்கள் தங்கத்தகடுகளால் ஆன பலகைகளைக் கொண்டிருந்தன.

அதன் தரை வைரத்தாலும் தந்தத்தாலும் அமைக்கப்பட்டிருந்தது. தங்கம், மற்றும் வெள்ளியால் அமைக்கப்பட்டிருந்த தூண்களில் பவளம் மற்றும் முத்துச் சரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய சில உயரமான தூண்களைப் பார்த்தபோது, அவை அந்த அரண்மனையை வானுக்கு இட்டுச் செல்வதற்காக அமைக்கப்பட்ட இறக்கைகள் போல் தோன்றின.

ராட்சஸ அரசன் வசதியாக உட்காருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஆசனங்கள் பறவைகளின் இனிமையான கூவல்களும், இனிமையான நறுமணமும் நிறைந்திருக்கும் சூழலில் அமைக்கப்பட்டிருந்தன. பல்வகை ஊதுவத்திகளின் நறுமணம் எங்கும் நிறைந்திருந்தது. அங்கிருந்த எல்லாப் பொருட்களுமே அன்னப்பறவையைப்போல் வெண்மையாகவும், பிரகாசமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருந்தன.

தரை முழுவதிலும் பலவகை மலர்கள் பரப்பப் பட்டிருந்தன. விரும்பியதைக் கொடுக்கும் காமதேனுவைப்போல் இருந்த அந்த அந்தப்புரம், செல்வத்தின் இருப்பிடமாகக் காட்சி அளித்தது. மக்கள் மனதிலிருந்த வருத்தம் அனைத்தையும் போக்கும் சிறப்பைப் பெற்றிருந்த அந்த அந்தப்புரம் உலகத்தில் எல்லோர் போற்றுதலுக்கும் உள்ளாகி இருந்தது.

ஒரு தாய் தன் குழந்தைகளின் ஐம்புலன்களையும் மகிழ்விக்கும் வண்ணம் அவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதுபோல் அந்த அந்தப்புரம் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

அதன் அழகைப் பார்த்த ஹனுமான், "இதென்ன தேவலோகமா, தெய்வங்களின் இல்லமா, இந்திரனின் மாளிகையா அல்லது கந்தர்வர்களின் கோட்டையா!" என்று வியந்தார். அங்கிருந்த விளக்குகளின் அழகைக் கண்டு பிரமித்தார்.

அங்கு திகழ்ந்த ஒளி, ஆபரணங்களின் பிரகாசம், அந்த இடத்தில் வெளிப்பட்ட ராவணனின் சக்தி இவை எல்லாம் அங்கே காமத்தீ கொழுந்து விட்டு எரிவதைக் காட்டுவதாக ஹனுமானுக்குத் தோன்றின.

அங்கே விலையுயர்ந்த படுக்கை விரிப்புகளில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த, பலவகை ஆபரணங்கள், மாலைகள், அழகு சாதனங்களின் துணையுடன் அழகாகத் தோன்றிய பல பெண்களை ஹனுமான் பார்த்தார்.

காமக் கேளிக்கைகளால் ஏற்பட்ட உடல் சோர்வினாலும், இனிய மதுவகைகள் ஏற்படுத்திய போதையாலும் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் ஏற்படுத்திய கிண்கிணிச் சத்தத்தினால், அந்தப் பெண்கள் அன்னப்பறவைகளும், தேனீக்களும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் தாமரைக் குளம்போல் தோற்றம் அளித்தனர்.

கண்களும், உதடுகளும் மூடிய நிலையில், தாமரை மலர்களின் நறுமணத்தை வெளிப்படுத்தியபடி உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் முகத்தை ஹனுமான் பார்த்தார்.

மது அருந்தியதால் போதை அடைந்திருந்த தேனீக்கள் அந்தப் பெண்களின் முகங்களைத் தாமரை மலர்கள் என்று நினைத்து அம்முகங்களின் மீது திரும்பத் திரும்ப வந்து அமர்ந்தன.

அழகிய பெண்களால் நிறைந்திருந்த ராவணனின் அந்தப்புரம் விண்மீன்கள் நிறைந்த வானம்போல் நிலவியது. அந்தப் பெண்களின் நடுவில் இருந்த ராவணன் விண்மீன்களுக்கு இடையில் திகழும் சந்திரன் போல் இருந்தான்.

அந்தப் பெண்களைப் பார்த்தபோது, ஹனுமானுக்கு, அவர்கள் தங்கள் நற்பலன்கள் தீர்ந்து விட்டதால் பூமியில் விழுந்து விட்ட வானத்து நட்சத்திரங்களைப் போல் தோன்றினர். 

தங்கள் வெண்மையான நிறத்தினாலும், பிரகாசமான உருவத்தாலும், அமைதியான தோற்றத்தாலும் அவர்கள் அந்த அந்தப்புரத்தில் ஒளி விடும் பெரிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளித்தனர்.

போதையூட்டும் பானங்களை அருந்தியதாலும், காமக்கேளிக்கைகளால் களைப்படந்ததாலும், அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த மாலைகளும் ஆபரணங்களும் அங்கே சிதறிக் கிடந்தன.

சிலரது நெற்றிப் பொட்டுகள் கலைந்திருந்தன. சிலரது கொலுசுகள் கழன்றிருந்தன. சிலரது முத்துமாலைகள் தரையில் விழுந்திருந்தன.

முத்துமாலைகள் உடைந்து சிதறியும், ஆடைகள் கலைந்தும், ஒட்டியாணங்கள் உடைந்தும் இருந்த நிலையில், அப்பெண்கள், பாரம் சுமந்ததால் ஏற்பட்ட களைப்பைப் போக்கிக் கொள்ள தரையில் விழுந்து கிடந்த வண்டிச் சக்கரங்கள் போல் தோற்றமளித்தனர். 

யானைகளால் மிதித்துத் தள்ளப்பட்ட சில காட்டுக்கொடிகள் சில பூக்களுடன் தரையில் கிடப்பது போல், சில பெண்கள், மற்ற ஆபரணங்கள் கீழே விழுந்த நிலையில், காதணிகள் மட்டும் அப்படியே இருந்த நிலையில் படுத்திருந்தனர்.

வேறு சில பெண்களின் மார்புகளை அலங்கரித்த முத்து மாலைகள் சந்திரன் போலப் பிரகாசித்தன. அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னப் பறவைகள் போல் தோற்றமளித்தனர். 

சில பெண்கள் அணிந்திருந்த வைடூர்ய ஆபரணங்கள் மீன் கொத்திப் பறவைகள் போல் பிரகாசித்தன. வேறு சில பெண்கள் அணிந்திருந்த தங்க ஒட்டியாணங்கள் சக்ரவாகப் பறவைகள் போல் தோற்றமளித்தன. 

நதிக்கரை போல் பரந்திருந்த அவர்கள் இடுப்பு அப்பெண்களுக்கு அன்னம், கொக்கு, சக்ரவாகம் போன்ற பறவைகள் நிறைந்த நதியைப் போன்ற தோற்றத்தை அளித்தது.

மணிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணங்களை அணிந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் நதிகள் போல் தோற்றமளித்தனர். 

அவர்கள் முகங்கள் நதிகளில் மிதக்கும் தங்கத் தாமரைகள் போலவும், அவர்கள் உடல்களில் இருந்த நகக் கீறல்கள் முதலைகள் போலவும், அவர்கள் அழகு, நதியின் இரு கரைகள் போலவும் காணப்பட்டன. 

ஆபரணங்களின் அழுத்தத்தினால் அந்தப் பெண்களின் மென்மையான உடல்களில் ஏற்பட்டிருந்த தழும்புகள் அந்த ஆபரணங்களைப் போலவே அழகாக இருந்தன. 

அவர்களின் மூச்சுக் காற்றினால் படபடத்த அப்பெண்களின் உடைகளின் ஓரங்கள் அவர்கள் முகங்களின் மீது பட்டும் விலகியும் விளையாடிக் கொண்டிருந்தன.

பல்வகை ஆடைகள் அணிந்திருந்த, உடல் நிறத்தில் வேறுபட்டிருந்த பெண்களின் கன்னங்களைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அழகிய உடைகள் காற்றில் ஆடும் தோரணங்கள் போல் பளபளத்தன. 

சில அழகிய பெண்கள் அணிந்திருந்த காதணிகள் கூட அவர்கள் மூச்சுக் காற்று பட்டதால் படபடத்துக் கொண்டிருந்தன.

அந்தப் பெண்களின் முகங்களிலிருந்து வெளிப்பட்ட மணம் மிகுந்த மூச்சுக் காற்று ராவணனின் முகத்திலிருந்து வெளி வந்த இனிய மதுவின் மணம் கொண்ட மூச்சுக் காற்றுடன் கலந்தது. 

ராவணன் மீது அந்தப் பெண்களுக்கு இருந்த மயக்கத்தினால் ஒவ்வொரு பெண்ணும் ராவணனின் பிற மனைவிகளுடன் நேசமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. 

சில பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உடையையே தரை விரிப்பாகவும் தங்கள் வளைக்கரங்களையே தலையணைகளாகவும் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்தனர்.

போதை மயக்கத்தினாலும், காம வசப்பட்டதாலும் அந்தப் பெண்கள் மற்ற பெண்களைத் தொட்டுக்கொண்டும் தழுவிக்கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தனர். 

சிலர் மற்றவர்களின் கைகளைத் தலையணைகளாகக் கொண்டு உறங்கினர். எல்லோருமே மிக மகிழ்ச்சியான மன நிலையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

மற்ற பெண்களுடன் கைகோத்தபடி உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் தோற்றம் ஆங்காங்கே மயங்கிய நிலையில் சில தேனீக்கள் அமர்ந்திருக்கும் பூமாலை போல் தோற்றமளித்தது.

அங்கே உறங்கிக் கொண்டிருந்த ராவணனின் அந்தப்புரப் பெண்களின் தோற்றம் வைகாசி மாதத்தில் பூத்துக் குலுங்கும் ஒரு பூந்தோட்டம் போல் காட்சி அளித்தது.

எல்லாப் பெண்களின் உடைகள், கை கால் போன்ற உறுப்புகள், ஆபரணங்கள் ஆகியவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும் எது யாருடையது என்று இனம் காண முடியாதவையாக இருந்தன.

அங்கிருந்த தங்க விளக்குகள் ராவணன் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்களைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தன.

அந்தப் பெண்களில் அரக்கர் குலப் பெண்களைத் தவிர, அரச குமாரிகள், முனிவர்களின் பெண்கள், தேவர் குல மற்றும் கந்தர்வ குலப் பெண்களும் இருந்தனர். 

அவர்கள் எல்லோரும் ராவணால் விரும்பப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பாலோர் போரில் வெற்றி பெற்ற பின் ராவணனால் கொண்டு வரப் பட்டவர்கள். மற்றவர்கள் ராவணனிடம் மையல் கொண்டு அவனிடம் வந்து சேர்ந்தவர்கள்.

சீதையைத் தவிர மற்ற எல்லாப் பெண்களுமே ராவணனின் வீரத்தால் கொண்டு வரப்பட்டவர்கள். 

அவர்கள் யாருமே தங்கள் விருப்பத்துக்கு விரோதமாக அவனால் கொண்டு வரப் படவில்லை. அவர்களில் யாருமே வேறு யாரையும் காதலித்தவர்களோ மணந்து கொண்டவர்களோ இல்லை. 

அவர்கள் யாருமே மோசமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் யாருமே அழகில்லாதவர்கள் இல்லை. யாருமே அறிவிலிகளோ, அவமானத்துக்கு உள்ளானவர்களோ, அமங்கலமானவர்களோ இல்லை. காதலுக்குத் தகுதியற்றவர்களும் அவர்களில் யாரும் இல்லை.

"ராவணனின் மனைவிகள் அவனுடன் இருப்பது போல் ராமபிரானின் மனைவியும் அவருடன் இருந்தால் நான் எவ்வளவு பாக்கியம் செய்திருப்பேன்! என் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி இருக்குமே!" என்று நினைத்தார் அறிவாளியான ஹனுமான்.

"சீதாப்பிராட்டி நற்பண்புகள் நிறைந்தவர். இலங்கை அரசன் ராவணன் அவர் விஷயத்தில் அக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறானே!" என்று நினைத்து வருந்தினார் அந்த வானர வீரர்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 10 - மண்டோதரியைக் காணுதல்
படிகத்தால் செய்யப்பட்டு, தங்கத்தாலும் தந்தத்தாலும் இழைக்கப்பட்டு, வைரம் மற்றும் பல கற்கள் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டிலை ஹனுமான் பார்த்தார். அதன் மீது போடப்பட்டிருந்த மெத்தைகள், விரிப்புகள், தலையணைகள் ஆகியவற்றிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் அது சொர்க்கலோகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்டிலைப் போலவே தோன்றியது.

தங்க வேலைப்பாடுகள் மிகுந்து சூரியன் போல் ஜொலித்த நாற்காலி ஒன்றும் அங்கே இருந்தது. ஓய்வெடுக்கத் தேவையான எல்லா வசதிகளும் அதில் அமைக்கப் பட்டிருந்தன. அதன் அருகில் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்திரன் போல் தோற்றமளித்த ஒரு வெள்ளை நிறக் குடை இருந்தது.

கட்டிலைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் சாமரம் வீசத் தயாராகப் பணிப் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். பலவகை ஊதுவத்திகளின் மணம் எங்கும் பரவியிருந்தது. கட்டிலின் மீது விலையுயர்ந்த கம்பளங்களும், தோலினால் செய்யப்பட்ட விரிப்புகளும்  விரிக்கப்பட்டிருந்தன. கட்டிலைச் சுற்றிலும் உயர் ரக மலர்களால் செய்யப்பட்ட மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

கட்டிலின் மீது ஆடம்பரமான படுக்கையில் படுத்து ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ராவணனை ஹனுமான் பார்த்தார். அவன் உடல் கார்மேகம் போல் கருத்திருந்தது. அவன் கண்கள் சிவந்திருந்தன. அவன் கைகள் நீளமாக இருந்தன. அவன் அணிந்திருந்த உடையின் ஓரங்கள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தன.

அவன் உடல் முழுவதும் நறுமணம் வீசிய சிவந்த சந்தனக் கலவை தடவப்பட்டிருந்தது. அவன் உடலில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் மேகத்தின் ஊடே ஒளி விடும் மின்னல் கீற்றுக்களைப் போல் ஜொலித்தன. அழகிய தோற்றம் கொண்டிருந்த அவன், தான் விரும்பும் வடிவத்தை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்தவன். மரங்களாலும் காடுகளாலும் மூடப்பட்டிருக்கும் மந்தர மலையைப் போல் இருந்தது அவன் தோற்றம்.

அரக்கர்களுக்கு ஊக்கமளிப்பவனாகவும், அரக்கர் குலப் பெண்களால் விரும்பபட்டவனாகவும் இருந்த அந்த ராவணன் இரவில் நடந்த காதல் விளையாட்டுகளால் களைத்துப் போயிருந்தான். போதையூட்டும் பானங்களை அருந்தியிருந்தாலும் அவன் போதையில் இருந்தவனாகத் தோன்றவில்லை.

நாகப்பாம்பு சீறுவதுபோல் மூச்சு விட்டுக் கொண்டிருந்த  ராவணனை நெருங்கிய ஹனுமான், முதலில் பயந்து போனது போல் பின் வாங்கினார். அதன் பிறகு சில படிகள் ஏறி ஒரு மேடை மீது நின்று ராவணனை கவனித்தார். ராவணனின் படுக்கை ஒரு பரந்த ஏரியைப் போலவும், அதன் மீது படுத்திருந்த ராவணன் அந்த ஏரியில் படுத்திருந்தஒரு யானையைப் போலவும் தோற்றமளித்தனர்.

அவனது பலம் பொருந்திய கைகளைப் பார்த்தார் ஹனுமான். அவன் தனது  புஜங்களில் தங்க வளையங்கள் அணிந்திருந்தான். இந்திரனின் கொடிக்கம்பம் போல் தோற்றமளித்த அவன்  பரந்த தோள்களில் ஐராவதத்தின் தந்தம், இந்திரனின் வஜ்ராயுதம், திருமாலின் சக்கரம் ஆகியவை ஏற்படுத்திய வடுக்கள் மிகுந்திருந்தன.

அவன் தோள்கள் வலுவாகவும், அளவாகவும், அழகாகவும் தோற்றமளித்தன. அவன் கைகள் அழகான விரல்களையும், அதிர்ஷ்ட ரேகைகளையும் கொண்டிருந்தன. அவன் கைகளின் முழுத் தோற்றம் இரும்புத் தடியைப் போலவும், யானையின் தந்தத்தைப் போலவும் இருந்தது. இரண்டு ஐந்து தலை நாகங்கள் படுக்கையில் படுத்திருப்பது போல் அவை தோற்றமளித்தன.
அவன் கைகளில் முயல் ரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் நறுமணம் வீசும் உயர் ரக சந்தனக் கலவை பூசப்பட்டிருந்தது. பலம் கொண்ட கைகளைக் கொண்ட பெண்களால் அவன் கைகள் பதமாக அழுத்தப்பட்டிருந்தன. (மசாஜ் செய்யப்பட்டிருந்தன). அந்தக் கைகள் (தங்கள் செயல்களால்) பல யக்ஷர்கள், பன்னகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் தானவர்களைக் கண்ணீர் விட்டு அழச் செய்திருக்கின்றன. மலை போல் தோற்றம் கொண்ட ராவணனின் கைகள் மந்தர மலையின் இரு சிகரங்களைப் போல் விளங்கின

ராவணனின் மூச்சுக் காற்றின் மணம் மா, புன்னாகம் மற்றும் வகுள மலர்களின் நறுமணத்துடன் அவன் உட்கொண்ட உணவுவகைகள், மதுபானங்கள் ஆகியவற்றின் மணமும் சேர்ந்த கலவையாக இருந்தது. அவனுடைய பரந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட மூச்சுக்காற்று அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது.

முத்துக்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மகுடம் அவன் தலையில் இருந்தது. அவன் காதணிகளின் ஜொலிப்பால் அவன் முகம் பிரகாசமாகக் காணப்பட்டது. முத்து மாலைகளாலும், சிவந்த சந்தனக் கலைவையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவன் மார்பு பரந்தும் உறுதியாகவும் காணப்பட்டது. அவன் மார்பின் மீது போடப்பட்டிருந்த உயர்ந்த ரக வெள்ளைப் பட்டாடை கலைந்திருந்தது. மஞ்சள் நிறப் பட்டாடையை அவன் அணிந்திருந்தான்.

அவன் கண்கள் சிவந்திருந்தன. கருப்பு உளுந்து குவிக்கப்பட்டது போல் இருந்தது அவனுடைய தோற்றம். அவன் மூச்சு நாகத்தின் சீற்றம் போல் இருந்தது. கங்கைக்குள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த யானையைப் போல் அவன் தோற்றமளித்தான்.

நான்கு தங்க விளக்குகள் அவன் தோற்றத்தை எடுத்துக் காட்டின. மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகம் போல் அவன் காட்சி அளித்தான். அவனது மனைவிமார்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவன் அவன்.

மேலே விவரிக்கப்பட்டவாறு தோற்றமளித்த அந்த ராட்சத அரசனையும் அவன் கால்மாட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவன் மனைவிகளையும் ஹனுமான் பார்த்தார்.

ஒளி வீசிய காதணிகளையும், வாடாத மலர்களையும் அணிந்திருந்த
பெண்களை ஹனுமான் பார்த்தார். நாட்டியத்தில் தேர்ந்த சில பெண்களும், தாள இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் பெற்ற சில பெண்களும் அங்கே அமர்ந்திருந்தனர்.

அரிய ஆபரணங்களை அணிந்திருந்த சில பெண்கள் ராவணனின் தோள் மீதும், மடி மீதும் சாய்ந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் தங்கத்தால் செய்யப்பட்ட கங்கணங்களையும், காதுகளில் வைரம், வைடூர்யம் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகளையும் கண்டார் ஹனுமான்.

விண்மீன்களால் வானம் ஒளியூட்டப்படுவது போல், அந்தப் பெண்கள் அணிந்திருந்த அழகிய காதணிகளாலும், நிலவை ஒத்த அவர்கள் முகங்களாலும் அந்த அறையே ஒளி பெற்று விளங்கியது. ராவணனின் அந்தப்புரப் பெண்கள் அனைவருமே காம விளையாட்டுக்களால் களைப்படைந்து அங்கும் இங்குமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

நாட்டியம் அறிந்த ஒரு பெண் நாட்டிய முத்திரை பதிப்பது போன்ற தோற்றத்தில் தன் உடலை வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். வீணையைத் தன் மார்பில் சாய்த்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் ஓடத்தில் சிக்கிக் கொண்ட தாமரைக் கொடியை ஒத்திருந்தது.

இன்னொரு பெண் தனது தாள வாத்தியக் கருவியைக் குழந்தையை அணைப்பது போல் அணைத்தபடிபடுத்திருந்தாள். இன்னொரு கரு விழி மங்கை நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பிய கணவனை அணைத்துக் கொள்வது போல் ஒரு முரசைத் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தாமரை விழியாள் தனிமையில் காதலனுடன் இருப்பது போல் தன் வீணையை அணைத்தபடி படுத்திருந்தாள்.

தூக்கத்தில் தன் கணவனை அணைத்தபடி படுத்திருப்பதுபோல் மிருதங்கத்தை இறுகத் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள் பொன் நிறமும், மென்மையான சருமமும், கட்டுடலும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு பெண். மத்தளத்தைப் பக்கவாட்டில் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஒரு அழகி. கணவனை ஒரு புறமும் குழந்தையை இன்னொரு புறமும் அணைத்தபடி உறங்குவதுபோல், திண்டிமம்  என்ற இரட்டைத் தாள வாத்தியக் கருவியை இருபுறமும் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி.

தாமரை விழி நங்கை ஒருத்தி ஒரு பெரிய முரசை இறுக அணைத்தபடி மிகுந்த களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தாள். கடம் என்ற தாள வாத்தியக் கருவியைத் தன் மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் வசந்த காலத்தில் பலவித மலர்களால் கோர்க்கப்பட்டு நீர் தெளிக்கப்பட்ட மாலையைப் போல் இருந்தது. இன்னொரு பெண் தங்கக்குடம் போன்ற தன் மார்பகங்களைத் தன உள்ளங்கைகளால் மூடி மறைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். போதையில் இருந்த அழகிய கண்களையுடைய இன்னொருத்தி தன் பக்கத்தில் படுத்திருந்த பெண்ணை அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்கள் பலரும் காம வயப்பட்ட நிலையில் தங்கள் காதலர்களை அணைத்துக் கொள்வது போல் இசைக்கருவிகளை மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

இவர்களிடமிருந்தெல்லாம் விலகி அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்றில் படுத்திருந்த ஒரு அழகிய பெண்ணை ஹனுமான் பார்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள், ரத்தினங்கள் ஆகியவற்றால் செய்யப்பட அணிகலன்களை அவள் அணிந்திருந்தாள். அவள் அழகு அந்த அரண்மனைக்கே அழகு சேர்ப்பதாக இருந்தது. எல்லோருக்கும் பிரியமானவளான அந்தத் தங்க நிற மங்கை வேறு யாரும் இல்லை, அந்த அரண்மனை அந்தப்புரத்தின் ராணியான மண்டோதரிதான்.

அவள் அழகு, இளமை, மேன்மையான தோற்றம் ஆகியவற்றை வைத்து முதலில் அவளை சீதை என்று எண்ணி வாயுபுத்திரர் பெருமகிழ்ச்சி அடைந்தார். குரங்குகளின் இயல்பைப் பின்பற்றி, தன் வாலை முத்தமிட்டும், கைகளைத் தட்டியும், நடனமாடியும், ஒவ்வொரு தூணாக ஏறிக் குதித்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஹனுமான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


.சர்க்கம் 11 - உணவுக் கூடத்தில் தேடுதல் 
மண்டோதரியைச் சீதை என்று நினைத்ததைத் தவறென்று உடனேயே உணர்ந்து கொண்ட ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"ராமனைப் பிரிந்த நிலையில் சீதாப் பிராட்டி உண்ண மாட்டார், உறங்க மாட்டார், ஆபரணங்களை அணிய மாட்டார், ஏன் தண்ணீரைக் கூடத் தொட மாட்டார். 

"எந்த ஆண் அருகிலும் - அவன் தேவேந்திரனாகவே இருந்தாலும் - போக மாட்டார். தேவர்களிடையே கூட ராமனுக்கு இணையானவர் எவரும் இல்லை. அதனால் நான் பார்த்த பெண்மணி வேறு யாராவதாவோதான் இருக்க வேண்டும்."

இந்த முடிவுக்கு வந்த பின் ஹனுமான் உணவுக் கூடத்தில் சீதையைத் தேட ஆரம்பித்தார்.

காமக் கேளிக்கைகளினாலும், ஆடல் பாடலினாலும் களைப்படைந்த பல பெண்களை ஹனுமான் அங்கே பார்த்தார். இன்னும் சிலர் மதுவுண்ட மயக்கத்தில் விழுந்து கிடந்தனர். 

சிலர் மிருதங்கங்கள் மீது சாய்ந்தபடியும், சிலர் முரசுகள் மற்றும் சிறு மர இருக்கைகள் மீது சாய்ந்தபடியும், இன்னும் சிலர்  மென்மையான படுக்கைகள் மீது படுத்தும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அழகை அற்புதமாக விவரிக்கும் கலைத்திறன் கொண்ட பெண்கள், பாடல்களின் பொருளைச் சிறப்பாக விளக்கும் திறன் பெற்ற பெண்கள், காலத்துக்கும், இடத்துக்கும் தக்கவாறு பேசும் திறமை பெற்ற பெண்கள் ஆகியோர் அடங்கிய நூற்றுக் கணக்கான பெண்களிடையே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ராவணன்.  

அந்தப் பெண்களுக்கிடையே ராவணன் படுத்திருந்த காட்சி பல ஜாதிப் பசுக்களிடயே ஒரு காளை படுத்திருப்பது போல் இருந்தது. பல பெண்களால் அவன் சூழப்பட்டிருந்த காட்சி பெண் யானைக் கூட்டத்துக்கு நடுவே இருக்கும் ஒரு கொம்பன் யானையைப் போலவும் இருந்தது.

மனிதர்கள்  உண்ண விழையும் எல்லா உணவுப் பண்டங்களும் அங்கே இருந்தன. மான், எருமை, காட்டுப் பன்றி ஆகியவற்றின் மாமிசங்கள் அங்கே தனித் தனியே வைக்கப்பட்டிருந்தன. 

பாதி உண்ணப்பட்ட மயில் மற்றும் கோழி இறைச்சிகள் நிறைந்த தங்கப் பாத்திரங்களையும் ஹனுமான் அங்கே பார்த்தார். 

தயிரில் சமைக்கப்பட்டு, கடுக்காய், கார உப்பு ஆகியவற்றால் பதப்படுத்தப்பட்ட பன்றிகள் மற்றும் பருந்துகளின் மாமிசமும், முள்ளம்பன்றி, மான், மயில் போன்றவற்றின் இறைச்சியும்  உண்ணத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

பலவகைப் புறாக்கள், எருமைகள் ஆகியவற்றின் இறைச்சி, மீன்கள் ஆகியவற்றுடன் பலவகைக் காய்களால் சமைக்கப்பட்ட உணவுகள், பானங்கள் மற்ற தின்பண்டங்களும் அங்கு நிறைந்திருந்தன. 

புளிப்பு, உப்பு சுவை மிகுந்த உணவுகள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை ஆகிய பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறுக் கலவைகள், பழச்சாறுடன், பாலும், தேனும் கலந்த தயாரிப்புகள் ஆகியவையும் அங்கு இருந்தன.

அந்த அறையில் பெண்களின் உடல்களிலிருந்து நழுவி விழுந்த காப்புகள், வளையல்கள், சங்கிலிகள் போன்றவை பரவிக் கிடந்தன. பழங்கள் நிறைந்த பல தட்டுக்களும், பூங்கொத்துக்கள் நிறைந்த பூச்சாடிகளும் அந்த இடத்துக்கு ஒரு அழகிய தோற்றத்தை அளித்தன. 

விளக்குகள் ஏதும் எரியாத நிலையிலும், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் சாய்வு நாற்காலிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளியினால் அந்த உணவுக்கூடம் ஒளி பெற்று விளங்கியது.

சாதாரண மற்றும் போதையூட்டும் பானங்கள், இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள், தேன், பழ ரசங்கள், பூக்களின் சாறுகள், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தி, திறமையான சமையற்காரர்களால் சமைக்கப்பட்ட இறைச்சி வகைகள் ஆகிய பல்வகை உணவு வகைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடங்களில்  வைக்கப்பட்டிருந்தது அந்த அறைக்கு ஒரு அலாதியான தோற்றத்தை அளித்தது.  

தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்த கோப்பைகள் மதுவகைகளால் நிரம்பி இருந்தன. தங்கம், படிகம் ஆகியவற்றால் செய்யப்பட பூச்சாடிகளும், தங்கத்தினால் ஆன கைகழுவும் தொட்டிகளும் அங்கே காணப்பட்டன. காலியான மற்றும் பாதி நிரம்பிய கோப்பைகளையும் ஹனுமான் அங்கே பார்த்தார்.

பல இடங்களிலும் காணப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள், மீதம் வைக்கப்பட்ட அரிசி உணவுகள் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே ஹனுமான் நடந்தார். சில இடங்களில் உடைந்த பாத்திரங்களையும், கீழே கவிழ்ந்திருந்த தண்ணிர் கூஜாக்களையும், வேறு சில இடங்களில் பழக் குவியல்களையும், அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்க்கொத்துக்களையும் அவர் பார்த்தார்.

மென்மையாக அமைக்கப்பட்டிருந்த பல படுக்கைகள் காலியாக இருந்தன. சிலவற்றில் சில பெண்கள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்தனர். 

உறங்கிக் கொண்டிருந்த பெண்களில் சிலர் தூக்கக் கலக்கத்தில் மற்ற பெண்களின் மேலாடைகளை உருவி அவற்றைத் தங்கள் மீது போர்த்தியபடி படுத்திருந்தனர்.

அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும், மாலைகளையும் அவர்கள் மூச்சுக் காற்று தென்றலைப் போல் அசைத்துக் கொண்டிருந்தது.

அங்கே வீசிக் கொண்டிருந்த மென்மையான காற்று சந்தனக்கலவையின் மணத்தையும், பல்வகை பானங்களின் மணத்தையும், மலர்மாலைகளின் நறுமணத்தையும் சுமந்து கொண்டிருந்தது. 

புஷ்பக விமானத்தின் மீது ஊற்றப்பட்டிருந்த வாசனைத்திரவியத்தின் மணமும், பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட சந்தனம் மற்றும் ஊதுவத்தியின் மணமும் அந்த அறை முழுவதும் நிறைந்திருந்தன. 

அந்த இல்லத்தில் இருந்த பெண்களில் சிலர் சிவப்பு நிறத்தினர், சிலர் கருத்த நிறத்தினர், சிலர் இடைப்பட்ட நிறத்தினர், இன்னும் சிலர் தங்க நிறத்தினர். தூக்கக் கலக்கத்தினாலும், காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாலும் அவர்கள் வாடிய தாமரை மலர்களைப் போல் சோர்ந்து காணப்பட்டனர்.

அந்தப்புரம் முழுவதும் தேடிய பின்பும் ஹனுமானால் சீதையைக் காண முடியவில்லை. அந்தப் பெண்களை நெருக்கமாகப் பார்த்ததால் தாம் ஒழுக்க நெறியிலிருந்து வழுவி விட்டோமோ என்று அவர் மனம் வருந்தினார்.

"எதிரி அரசனின் மனைவிகளாக இருந்த போதிலும், இந்தப் பெண்களை அவர்கள் உறங்கும்போது பார்த்தது பாவச் செயல்தான். மற்றவர்களின் மனைவிமார்களை இவ்வாறு பார்த்தது சமுதாயத்தால் ஏற்கப்பட்ட ஒழுக்க நெறியை மீறிய செயல்தான்.

"ஆயினும், உயர்ந்தவரான ராமபிரானின் மனைவியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான் இப்படிச் செய்தேன் என்ற ஆறுதல் எனக்கு இருக்கிறது."

ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவரான ஹனுமான், தன் முன் இருக்கும் கடமையைப் பற்றிய ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்காக ஒரு புதிய வழிமுறையைப் பற்றிச் சிந்தித்தார்.

"அனேகமாக ராவணனின் அந்தப்புரத்தில் இருக்கும் எல்லாப் பெண்களையுமே நான் பார்த்து விட்டேன். ஆயினும் என் மனதில் எந்த விதத் தவறான எண்ணமும் எழவில்லை. 

"புலன்களை நல்வழியிலோ தீயவழியிலோ செலுத்துவது மனம்தான். என் மனதில் எந்த ஒரு சஞ்சலமும் ஏற்படவில்லை. ஒரு பெண்ணைத் தேட வேண்டுமென்றால் பெண்கள் மத்தியில்தான், பெண்கள் எங்கே இருப்பார்களோ அங்கேதான் தேட வேண்டும். வேறு இடங்களில் அவர்கள் இருக்க மாட்டார்கள். 

"மான் கூட்டத்தில் போய் ஒரு பெண்ணைத் தேட முடியாது. அதனால்தான் ராவணனின் அந்தப்புரத்தில் நான் சீதையைத் தேடினேன். ஆயினும் அந்தப்புரம் முழுவதும் தேடியும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை."

தேவ லோகம், கந்தர்வ லோகம் மற்றும் நாகலோகத்தைச் சேர்ந்த பெண்களை அங்கே ஹனுமான் பார்த்தார். ஆனால் சீதையை அவர் அங்கே காணவில்லை. 

"பல  உயர் குலப் பெண்களைப் பார்த்தும் சீதையைப் பார்க்க முடியவில்லையே!" என்று கவலைப்பட்ட ஹனுமான் அந்த உணவுக் கூடத்திலிருந்து வெளியே வந்து தனது தீவிரத் தேடலைத் தொடர்ந்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 12 - ராவணனின் அந்தப்புரம்
கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கலையரங்குகள், ஓய்வறைகள் என்று ராவணனின் அந்தப்புரத்தில் இருந்த பல இடங்களில் தேடியும் ஹனுமானால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

ராமபிரானின் மனைவியைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஹனுமான் இவ்வாறு சிந்தித்தார்:

"என்னால் சீதையை எங்கும் காண முடியவில்லையே! ஒருவேளை அவர் இறந்து போயிருப்பாரோ? 

"தர்மத்தின் வழியிலிருந்து வழுவாமல் தன் கணவருக்கு விஸ்வாசமாக இருந்ததால், சிந்தையிலும் செயலிலும் கொடியவனான ராவணன் சீதையைக் கொன்றிருப்பானோ? 

"அல்லது ராவணனின் அரண்மனையில் இருந்த பெண்களின் குரூரத் தோற்றத்தைக் கண்டு பயந்த சீதை அந்த பயத்தினாலேயே இறந்திருப்பாரோ?

"மற்ற வானரங்களுடன் நீண்ட காலம் செலவழித்து விட்டு இப்போது சீதையின் இருப்பிடத்தையும் கண்டு பிடிக்காமல் என்னால் எப்படி சுக்ரீவனைப் பார்க்க முடியும்? தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கும் இயல்புடையவர் ஆயிற்றே சுக்ரீவன்?

"அந்தப்புரம் முழுவதும் தேடியதில் ராவணனின் பெண் துணைகள் அனைவரையும் பார்த்து விட்டேன். ஆனால் கற்புக்கரசி சீதையை என்னால் காண முடியவில்லை. என் முயற்சி எல்லாம் வியர்த்தம் ஆகி விட்டது. 

"நான் திரும்பிச் சென்றதும் என் நண்பர்கள் 'வீரனே, நீ அங்கு போய் என்ன செய்தாய்? அதை விவரமாகச் சொல். உனக்குக் கொடுக்கப்பட்ட வேலை என்ன ஆயிற்று?'என்றெல்லாம் கேட்பார்கள். சீதையைக் கண்டு பிடிக்க முடியாதபோது நான் அவர்களுக்கு  என்ன பதில் சொல்ல முடியும்?

"நான் திரும்பி வருவதற்கு மிகவும் தாமதம் ஆனால், நான் இறந்து விட்டதாக அவர்கள் நினைத்து விடக் கூடும். நான் திரும்பிச் சென்றதும், அங்கதன், ஜாம்பவான் போன்றோர்  என்னைச் சூழ்ந்து கொண்டு என்னைக்  கேலி பேசத் தொடங்கி விடுவார்கள். 

"ஆனால் விரக்தியின் மூலம்   செல்வத்தையோ, நன்மையையோ அடைய முடியாது. விரக்தியிலிருந்து மீள்வதுதான் மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும். ஒரு பொழுதும் விரக்தி அடையாதவனால்தான் எந்த வேலையிலும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஈடுபட முடியும். 

"விரக்தியால் பாதிக்கப்படாத மனநிலையில் செய்யப்படும் செயல்தான் வெற்றியைத் தேடித் தரும். எனவே விரக்தியான மனநிலைக்கு ஆளாகாமல் உற்சாகத்துடன் நான் இன்னொரு முறை முயன்று பார்க்கப் போகிறேன். இதுவரை நான் தேடாத இடங்களில் தீவிரமாகத் தேடப் போகிறேன்."

இவ்வாறு உறுதி எடுத்துக் கொண்டு அவர் தன் தேடலைத் தொடர்ந்தார்.

இதுவரை அவர் உணவுக்கூடங்கள், உயர் வசதி கொண்ட மாளிகைகள், கலைக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் தேடி விட்டார்.

அடுத்தபடியாக அவர் தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள், நகரின் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கட்டிடங்கள், பாதாள அறைகள், நினைவு மண்டபங்கள் ஆகிய இடங்களில் தன் தேடலைத் தொடர்ந்தார்.

அரண்மனைக்கு உள்ளும் வெளியும் இருந்த எல்லா இடங்களிலும் தேடினார். பல கட்டிடங்களுக்குள் நுழைந்து வெளி வந்தார். 

சில இடங்களில் உள் புகுந்து தேடினார். சில கதவுகளைத் திறந்து பார்த்தார். திறக்க முடியாத கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே போனார். எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தார்.

ராவணனின் அந்தப்புரத்துக்குள் அவர் தேடாத இடம் ஒரு உள்ளங்கை அளவு கூட இல்லை.  சுவர்களுக்கு இடையே இருந்த குறுகிய சந்துகள், நினைவு கோபுரங்கள், கிணறுகள், குளங்கள் என்று எல்லா இடங்களிலும் தேடினார். 

அவர் தேடிய இடங்களில் எல்லாம் கோரமான தோற்றம் கொண்ட பல அரக்கிகளைக் கண்டார்; ஆனால் சீதை மட்டும் காணப்படவில்லை.  

நிகரில்லாத அழகு படைத்த வித்யாதரப் பெண்களை அவர் கண்டார்; ஆனால் சீதையைக் காணவில்லை. 

ராவணனால் பலவந்தமாக அழைத்து வரப்பட்ட முழு நிலவு போல் முகம் படைத்த நாகலோகப் பெண்களை அவர் பார்த்தார்; ஆனால் ராமரின் பத்தினியான சீதையைப் பார்க்கவில்லை.

இந்தப் பெண்களையெல்லாம் பார்த்த ஹனுமான் சீதையைக் காணவில்லையே என்று மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தார். 

பல வானரர்களின் முயற்சியும், தான் கடலைத் தாண்டி வந்ததும் பயனளிக்காமல் போய் விட்டதே என்று வருந்திய  வாயுபுத்திரரான ஹனுமான் மனம் உடைந்தவராக தான் இருந்த உயரமான கட்டிடத்திலிருந்து கீழே இறங்கினார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 13 - விரக்தியில் ஹனுமான்
குறிப்பு: இந்த வலைப்பதிவின் அறிமுக இடுக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, இந்த சர்க்கத்தைப் பாராயணம் செய்தால் மனக்கவலைகள் மறைந்து நம்பிக்கையான மனநிலை ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறவும் செய்யும். 

இதை அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். (பாராயணம் செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் youtube இணைப்பில் ஸ்லோகங்களைக்  கேட்டு உடன் சொல்லிப் பழகலாம். 

சுந்தர காண்டம் புத்தகம் ஒன்று வாங்கி அதைப் படித்துக் கொண்டே ஒலி வடிவத்திலும் கேட்டுப் பழகினால் தெளிவான உச்சரிப்பு கிடைப்பதுடன், ஸ்லோகங்கள் சீக்கிரம் மனனம் ஆகும். 

தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சமஸ்கிருதம், தமிழ் அல்லது வேறு மொழி வடிவங்களில் சுந்தர கண்டச் செய்யுள்கள் நூல் வடிவில் பல கடைகளில், குறிப்பாக பக்தி நூல்கள் விற்கப்படும் கடைகளில், கிடைக்கும். 

பாராயணம் செய்து ஹனுமானின் அருளையும், சீதாப்பிராட்டியுடன் கூடிய ராமபிரானின் அருளையும் பெறுவீர்களாக)


பதின்மூன்றாவது சர்க்கம் 

மேகக்கூட்டங்களுக்கு நடுவே மின்னல் தோன்றுவதைப் போல் அந்த உயர்ந்த கட்டிடத்தின் சுவரை வேகமாகத் தாண்டிக் குதித்தார் அந்த வானரத் தலைவர். 

ராவணனின் மாளிகை முழுதும் தேடியும் ஜனகரின் மகளான சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் ஹனுமானின் சிந்தனை இவ்வாறு ஓடியது:

"ராமபிரானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இலங்கை முழுவதும் தேடி விட்டேன். ஆயினும் என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. 

ஏரிகள், குளங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், கோட்டைகள், மலைகள் என்று ஒரு இடம் கூட விடாமல் தேடி விட்டேன். ஆயினும் சீதையைக் காணவில்லை. கழுகு அரசர் சம்பாதி சீதை ராவணனின் மாளிகையில்தான் இருக்கிறார் என்ற தகவலை அளித்தார். ஆனால் சீதையை இங்கே என்னால் காண முடியவில்லை.

சீதை ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்லர். விதேஹ அரசர் ஜனகரால் மிதிலை என்னும் உயர் பண்பாட்டு நகரில் வளர்க்கப்பட்ட அவர் வேறு வழியில்லாமல் ராவணனின் விருப்பத்துக்கு இணங்கி இருப்பார் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

ராமபிரானின் அம்புகள் தன் மீது பாயுமோ என்ற அச்சத்துடன் சீதையைத் தூக்கிக் கொண்டு வானத்தில் ராவணன் பறந்தபோது ஒருவேளை சீதை அவன் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து இறந்திருப்பாரோ என்று ஐயமாக இருக்கிறது.

அல்லது, கடலுக்கு மேல் சித்தர்கள் செல்லும் பாதையில் ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு பறந்தபோது கீழே தெரிந்த கடலைப் பார்த்து அவருக்கு மூச்சு நின்றிருக்கலாம். 

அல்லது, ராவணன் பறந்து சென்ற வேகத்தில் கூட சீதைக்கு மூச்சு நின்று போயிருக்கலாம். அல்லது ராவணனின் பிடியிலிருந்து விடுபட அவர் முயன்றபோது கடலில் விழுந்து கூட இறந்திருக்கலாம்.

சீதை தனது கற்பு நெறியில் உறுதியாக இருந்ததால் ராவணன் ஆத்திரமடைந்து அவரைத் தின்றிருக்கலாம். அல்லது, ராவணனின் மனைவிகள் கூட அவரைத் தின்றிருக்கலாம். 

அல்லது, வேறு வழியில்லாமல், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட, முழுநிலவு போன்ற இராமபிரானின் திருமுகத்தை மனதில் தியானித்தபடியே சீதாப் பிராட்டி உயிர் நீத்திருக்கலாம்.

மிதிலை தேசத்து அரசரின் மகள் தனது விதியை நொந்தபடி, 'ராமா! லக்ஷ்மணா! அயோத்தி மாநகரே!' என்றெல்லாம் புலம்பிக் கொண்டே தன் உயிரை விட்டிருக்கலாம். 

அல்லது ராவணனின் ஏதாவது ஒரு சிறையில் அவர் ஒரு கூண்டுப் பறவை போல் சிறை வைக்கப்பட்டிருக்கலாம். 

ராமபிரானை மணமுடித்தவரும், ஜனகரின் அரண்மனையில் வளர்ந்தவரும், அழகுக்கும் பண்புக்கும் பெயர் பெற்றவருமான சீதை எப்படி ராவணனுக்கு அடி பணிவார்?

சீதையிடம் ராமபிரான் அளவற்ற அன்பு வைத்திருக்கும்போது அவரிடம் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றோ, துயரத்தினால் அவர் இறந்து விட்டார் என்றோ தெரிவிப்பது சரியாக இருக்காது. 

உண்மையைச் சொல்வதிலும் ஆபத்து இருக்கிறது, சொல்லாமல் இருப்பதிலும் ஆபத்து இருக்கிறது. 

இந்த நிலையில் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. 

இது போன்ற சந்தர்ப்பங்களில் எது சரியான வழி? எது நிலைமைக்கு ஏற்றதாக இருக்கும்? எது எல்லோருக்கும் பயனளிப்பதாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும்?" 

இது போன்று திரும்பத் திரும்பச் சிந்தித்து மனம் குழம்பினார் ஹனுமான்.

அவரது சிந்தனை தொடர்ந்து ஓடியது:

"சீதையைக் கண்டு பிடிக்காமல் வானர அரசனிடம்  நான் திரும்பச் சென்றால் அதனால் என்ன பயன் இருக்கும்? நான் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்து அரக்கர்களைப் பார்த்ததெல்லாம் வீணாகி விடாதா? 

இந்த நிலைமையில் நான் திரும்பிப் போனால் கிஷ்கிந்தாவில் உள்ள சுக்ரீவன், என் வானர நண்பர்கள், தசரத புத்திரர்கள் ஆகியோர் என்னிடம் என்ன சொல்வார்கள்?

நான் திரும்பிப் போய் காகுஸ்த குடும்பத்தில் பிறந்த ராமனிடம், 'என்னால் சீதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை' என்று சொன்னால், இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அவர் உடனே உயிரை விட்டு விடலாம். 

சீதையைப் பற்றிய மனதைப் பிளக்கும் துயரச் செய்தியை  நான் சொல்லக் கேட்டு அதிர்ச்சியினால் அவர் உடனே இறந்து விடலாம். 

தன் அண்னன் துயரத்தினால் இறந்து போவதைப் பார்த்து அவரது அன்புத் தம்பி லக்ஷ்மணனும் உயிரைத் துறந்து விடலாம். 

தனது இரண்டு சகோதரர்களும் இறந்த செய்தியைக் கேட்டு பரதனும் இறந்து விடுவார். அவரைத் தொடர்ந்து சத்ருக்னனும் இறந்து விடுவார். 

தங்கள் பிள்ளைகள் இறந்ததை அறிந்ததும் கௌசல்யா, கைகேயி, சுமித்திரை ஆகியோரும் உயிரை விட்டு விடுவார்கள்.

"ராமரை இந்த நிலையில் பார்த்ததும், நன்றிக்கும், உண்மைக்கும் பெயர் பெற்ற சுக்ரீவனும் தன் உயிரை விட்டு  விடுவார். தனது கணவன் இறந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் அவர் மனைவி ருமையும் இறந்து விடுவார். 

சுக்ரீவன் இறந்து போனால், ஏற்கெனவே வாலியின் மரணத்தினால் துயரடைந்து எலும்பாகத் தேய்ந்து போயிருக்கும் தாரை இந்த இன்னொரு துயரத்தையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் இறந்து விடுவார்.

தனது பெற்றோர் இறந்த துயரத்தைத் தாங்கிக் கொண்டு அங்கதனால் மட்டும் எப்படி உயிர் வாழ முடியும்? தங்கள் தலைவன் இறந்த துயரத்தைத் தாங்க முடியாமல் வானரர்களும் தங்கள் தலைகளை முஷ்டிகளால் அடித்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள். 

புகழ் பெற்றவரும், பரந்த மனப்பான்மை உடையவரும், இனிமையாகப் பேசும் குணம் உடையவருமான வானரத் தலைவர் சுக்ரீவன் இதுவரை வானரர்களைப் பாதுகாத்து வந்திருப்பதால், அவர் இறந்த பிறகு உயிர் வாழ்வதை விட மடிந்து போவதையே வானரர்கள் விரும்புவார்கள்.

இந்த அற்புதமான வானரர்கள் இனிமேல் விளையாட்டுப் போட்டிகளுக்காக கிராமங்களில் கூட மாட்டார்கள். அவர்களின் இருப்பிடமான மலைகளுக்கோ, காடுகளுக்கோ போக மாட்டார்கள்.  

தங்களுக்கென ஒரு குடும்பம் இருப்பவர்கள், தங்கள் தலைவரின் மரணத்தின் வழியைத் தாங்க முடியாமல் மலைகளிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள். 

இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி அடையாவிட்டால், அவர்கள் விஷம் குடித்தோ, பட்டினி கிடந்தோ, தீயில் குதித்தோ அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்தியோ தற்கொலை செய்து கொள்வார்கள்.

இந்தத் தோல்வியோடு நான் திரும்பப் போனால் இக்ஷ்வாகு வம்சத்துக்கும், வானரர்களுக்கும் பெரும் துயரம் நேரிடும். அதனால், இந்தத் துயரங்களுக்குக் காரணமாக விளங்கப் போகிற நான் கிஷ்கிந்தாவுக்கே போகப்போவதில்லை.

மிதிலா தேசத்து அரசரின் திருமகளைக் கண்டு பிடிக்காமல் சுக்ரீவனைச் சந்திப்பது எனக்கு இயலாத காரியம். நான் இங்கிருந்து போகாவிட்டால், இந்த இரு உத்தமமான வீரர்களும் என்னுடைய முயற்சி வெற்றி அடையும் என்று எதிர்பார்த்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வானரர்களும் இந்த எதிர்பார்ப்போடு உயிர் வாழ்வார்கள்.

என்னால் ஜனகரின் மகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போனால், நான் காட்டுக்குள் இருந்து கொண்டு ஏதோ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தபடி, என் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு என் கையிலோ, வாயிலோ எந்த உணவுப் பொருள் வந்து விழுகிறதோ அதை உண்டு ஒரு துறவி போல் வாழ்வேன். 

அல்லது கடற்கரையில், மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தில் தீயை மூட்டி அதில் குதித்து உயிரை விட்டு விடுவேன். அல்லது பட்டினி கிடந்து உயிர் விட்டு என் உடலைக் காக்கைகளுக்கும் மற்ற பறவைகளுக்கும் இரையாக்குவேன். இது போன்ற மரணம்  உயர்ந்த முனிவர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜனகரின் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், நான் நீரில் மூழ்கி இறந்து போவேன். நல்ல சகுனங்களுடனும், சாதகமான நிகழ்வுகளுடனும் தொடங்கிய இந்த நீண்ட இரவு முடிவதற்குள் சீதையை நான் கண்டுபிடிக்காவிட்டால் இது எனக்கு ஒரு வீணான இரவாக முடிந்து விடும்.

புலன்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு மரத்தடியில் அமர்ந்து நான் ஒரு துறவியாக ஆகப்போவதுதான் அதன் விளைவாக  இருக்கும். அழகிய வடிவம் கொண்ட சீதையைக் கண்டுபிடிக்காமல் நான் இங்கிருந்து போகப்போவதில்லை.

அவரைக் காணாமல் நான் திரும்பப் போனால் மற்ற வானரர்களுடன் சேர்ந்து அங்கதனும் மடிந்து போவான். இறந்து போவதில் பல இழப்புகளும் இருக்கலாம். ஆனால் உயிருடன் இருப்பவனால் பல விஷயங்களைச் சாதிக்க முடியும்.  இந்தக் கோணத்தில் பார்க்கும்போது உயிருடன் இருப்பதே நல்லது."

இது போன்று பல விஷயங்களைச் சிந்தித்த பிறகும், ஹனுமானின் துயரம் குறையவில்லை. அவர் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார். 

"ராமபிரானின் பத்தினிக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற சிந்தனையை மறந்து விட்டு, பத்து தலைகள் கொண்ட ராவணன் என்ற அரக்கனை நான் கொல்லப்  போகிறேன்.  

அப்படிச் செய்தால்தான்  பழி வாங்கிய திருப்தி எனக்கு ஏற்படும். அல்லது அவனைக் கடலுக்கு மேலே தூக்கிச் சென்று, நெருப்புக்கு மிருகத்தைப் பலி கொடுப்பது போல் ராமருக்கு அர்ப்பணிப்பேன்."

துயரத்தால் பீடிக்கப்பட்டும், கனவு நிலையில் ஆழ்ந்தும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினார் ஹனுமான். 

"உயர்ந்த குணங்களுக்குப் பெயர் பெற்ற சீதையைக் கண்டுபிடிக்கும் வரையில் நான் இந்த இலங்கை முழுவதும் தேடிக் கொண்டே இருப்பேன். 

சம்பாதியின் வார்த்தைகளை நம்பி நான் ராமரை இங்கே அழைத்து வந்திருந்தால், சீதையைக் கண்டு பிடிக்க முடியாத கோபத்தில் அவர் எல்லா வானரர்களையும் கொன்றிருப்பார். 

என் புலன்களைக் கட்டுப்படுத்தி, சிறிதளவே உணவு உட்கொண்டு நான் இங்கேயே இருக்கப் போகிறேன். இப்படிச்  செய்வதால் என்னால் அந்த மனிதர்களுக்கும், வானரர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதோ அசோக மரங்கள் நிறைந்த ஒரு பெறிய தோட்டம்  தெரிகிறது.நான் இன்னும் அங்கே சென்று   பார்க்கவில்லை. இப்போதே அந்த அசோக வனத்துக்குள்  நுழைகிறேன்."

இவ்வாறு  சொல்லிக்கொண்டே ஹனுமான் எட்டு வசுக்களையும், பதினோரு ருத்ரர்களையும், பன்னிரண்டு ஆதித்யர்களையும், அஸ்வினி தேவர்களையும், ஏழு மருத்களையும் வணங்கி விட்டு "இந்த அரக்கர்களுக்கு நான்  பெரும் நாசத்தை விளைவிப்பேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

"இந்த அரக்கர்களை அழித்து, சீதையை எடுத்துச் சென்று இக்ஷ்வாகு வம்சத்து வழித் தோன்றலான ராமனிடம், தவத்தின் பயனை அளிப்பது போல்  சீதையை அளிப்பேன்."

இவ்வறு நினைத்துச்  சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்ட பின் சக்தி வாய்ந்த ஹனுமான் வருத்தம் என்ற தளையிலிருந்து விடுபட்டு, தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தார்.

"ராம லட்சுமணர்களுக்கு வணக்கம். ஜனகரின் மகளான சீதைக்கும் வணக்கம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு, சந்திரன், சூரியன், மருத்கணங்கள் ஆகியோருக்கும் வணக்கம்" என்று எல்லாரையும் மனத்துக்குள் வணங்கி விட்டு, சுக்ரீவனையும் வணங்கி விட்டு, அசோக வனத்துக்குச் செல்லும் எல்லாப்  பாதைகளையும் உற்று நோக்கினார்.

தனது நோக்கம் நிறைவேறுவதற்கு அசோகவனம்தான் வழி காட்டப் போகிறது என்று கருதி தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். 

"மரங்கள் அடர்ந்ததும், அரக்கர்களால் நிறைந்திருப்பதும் கலை உணர்வுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதுமான அசோக வனத்துக்கு உடனே சென்று சீதையைத் தேடப் போகிறேன்.

மரங்களுக்குப் பக்கத்தில் காவலர்கள் நிற்கிறார்கள். காற்றும் மெதுவாகத்தான் வீசுகிறது. ராவணன் மற்றும் அவன் வீரர்களின் கண்களுக்குப் புலப்படாமல் என் உடலைச் சுருக்கிக் கொள்வேன். 

ராமரின் நோக்கம் நிறைவேறும் பொருட்டு முனிவர்களும் தேவர்களும் என் முயற்சி வெற்றி பெற என்னை வாழ்த்தட்டும்.

தானே தோன்றிய பிரமன், மற்ற தேவர்கள், அக்னி, வாயு, வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் ஆகியோர் என் முயற்சி வெற்றி அடைய வாழ்த்தட்டும்.

கயிற்றைக் கையில் வைத்திருக்கும் வருணன், சூரியன், சந்திரன், அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், கணங்களுக்குத் தலைவரான பரமேஸ்வரன், மற்ற தேவதைகள், நான் செல்லும் வழியில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஆகியோர் என் முயற்சிகளுக்கு முழு வெற்றி அளிக்கட்டும்.

நீண்ட  நாசியும், வெண்மையான பற்களும், மயக்கும் புன்சிரிப்பும், தாமரை இதழ் போன்ற கபடமற்ற கண்களும் கொண்ட சீதையின் முழுநிலவு போன்ற முகத்தை நான் எப்போது பார்க்கப் போகிறேன்? 

நல்லவன் போல் வேஷமிட்டு வந்த கொடூர குணம் படைத்த அரக்கனான ராவணனால் கடத்தப்பட்டு, எந்த உதவியும் இல்லாமல் இருக்கும் சீதை என் கண்களுக்கு எந்தத் தோற்றத்தில் காட்சி அளிக்கப் போகிறாரோ!"

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 14 - அசோக வனத்தில் தேடுதல் வேட்டை
வல்லமை படைத்த ஹனுமான் இது போன்ற சிந்தனைகளுக்குப் பிறகு, சீதையை மனதில் தியானித்து விட்டு, ராவணனின் அரண்மனையின் முன்புறச் சுவர் மீது தாவிக் குதித்தார்.

அந்தச் சுவற்றின் மீது நின்றபடி அவர் பூத்துக் குலுங்கிய, பழங்கள் நிறைந்த சாலா, சம்பகா, அசோகா, உத்தாலகா, நாகா, மா போன்ற மரங்களைப் பார்த்து உடல் சிலிர்த்தார்.   

பல்வகைக் கொடிகளால் சூழப்பட்ட அந்த மரங்களை நோக்கி அவர் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் பாய்ந்தார்.

அந்தத் தோட்டத்தில் உதய சூரியனின் நிறம் கொண்ட மரங்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்று ஒளிர்ந்தன. அவற்றின் கிளைகளில் பல்வேறு பறவைகள் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. 

மான்கள் கூட்டமாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட சிறிய தோட்டங்கள்  காணப்பட்டன.

மரங்கள் பூக்களாலும் பழங்களாலும் நிறைந்திருந்தன. குதூகலம் நிறைந்த குயில்கள், தேனீக்கள், போதை கொண்ட மயில்கள் மற்றும் பல்வேறு பறவைகள் அங்கே நிறைந்து காணப்பட்டன.

இத்தகைய சூழலில்தான் ஹனுமான் அங்கே நுழைந்தார். 

எழில்மிகு சீதையைத் தேடி அவர் அந்த அசோக வனத்துக்குள் நுழைந்தபோது உறங்கிக் கொண்டிருந்த பல பறவைகள் விழித்துக் கொண்டன. 

மரங்களுக்கு மேலே பறந்த பறவைகளின் சிறகுகளிலிருந்து வந்த தென்றல் காற்றில் அசைந்த மரங்கள், பல வண்ணங்கள் கொண்ட பூக்களை உதிர்த்தன.

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் ஹனுமானின் உடல் முழுவதும் விழுந்திருந்ததால் அவர் ஒரு மலர் மலை போல் காணப்பட்டார். இந்தக் கோலத்தில் அவர் மரங்களுக்கு இடையே உலவுவதைப் பார்த்த மிருகங்கள் வசந்த காலமே ஒரு உருவம் எடுத்து வந்து விட்டதோ என்று நினைத்தன.

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களால் நிறைந்திருந்த பூமி பல்வகை ஆபரணங்களை அணிந்த ஒரு பெண்ணைப் போல் தோற்றமளித்தது.

ஹனுமானின் வலுவான கைகளினால் அசைக்கப்பட்ட மரங்கள் மேலும் மலர்களை உதிர்த்தன. இலைகளும், சிறு கிளைகளும் உதிர்ந்து விட்டதால் பூக்களும் பழங்களும் இல்லாமல் காணப்பட்ட மரங்கள், தனது ஆபரணங்களையும், நகைகளையும் கூடப் பணயம் வைத்துத் தோற்று விட்ட சூதாடியைப் போல் தோற்றம் அளித்தன.

புயலால் வீழ்த்தப்பட்டது போல் அழிக்கப்பட்டிருந்த மரங்களை விட்டுப் பறவைகள் வெளியேறின. மரங்களின் அடிப்பாகம் மட்டும்தான் மிஞ்சி இருந்ததால் பறவைகளால் அங்கே வசிக்க முடியவில்லை.

ஹனுமானின் வாலினாலும், கைகளினாலும், கால்களினாலும் அடித்துத் தூக்கி எறியப்பட்டதால் அடிப்பாகம் கன்றிப் போய், கிளைகள் முறிக்கப்பட்ட மரங்கள், காமக் களியாட்டங்களினால் சோர்வடைந்து தலை கலைந்து, பூசிய சந்தனம் களையப்பட்டு, உதடுகள் வெளிறி, உடல் முழுவதும் நகங்கள் மற்றும் பற்களின் அடையாளங்கள் பதிந்த பெண்ணைப் போல் காட்சி அளித்தன.

மழைக்காலத்தில் விந்திய மலை மீது படிந்திருக்கும் மேகங்களைக் காற்று அலைக்கழித்து போல் தன்னைச் சுற்றிக்கொண்ட பெரிய கொடிகளை ஹனுமான் அறுத்துக் கீழே தள்ளினார்.

தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவை பதிக்கப்பட்ட பல கட்டிடங்கள் சுற்றிலும் நிறைந்திருந்தந்தை அவர் பார்த்தார். 

நீர் நிறைந்த பல குளங்களின் படிக்கட்டுகளில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

அந்தக் குளங்களின் அடியில் முத்துக்களும், பவழங்களும் நிறைந்து காணப்பட்டன. குளங்களுக்கு நடுவே படிகக் கற்களால் ஆன மண்டபங்கள் கட்டப்பட்டிருந்தன. 

குளங்களின் நீர்ப்பரப்பு முழுவதும்  முழுவதும் சிவப்பு மற்றும் பச்சைத் தாமரைகள் நிறைந்திருந்தன.

சக்கரவாகம், அன்னம், கொக்கு போன்ற பறவைகள் அங்கே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. வெந்நீர் ஊற்றுக்களிலிருந்து தெளிவான நீர்  கொண்ட நீரோட்டங்கள் அந்தக் குளங்களுக்குள் பாய்ந்து கொண்டிருந்தன.

குளங்களுக்கு அருகே பல தோட்டங்கள் இருந்தன. தோட்டங்களை சுற்றிக்  கரவீரச் செடிகள் வேலியாக அமைந்திருந்தன.

அங்கே மேகம் போல் காட்சியளித்த, ஒரு அழகான, உயர்ந்த சிகரத்தைக் கொண்ட ஒரு மலையை ஹனுமான் பார்த்தார்.

காவலர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த மலையில் இருந்த வீடுகள் பளபளப்பான கற்களால் கட்டப்பட்டிருந்தன. அந்த மலையைச் சுற்றிலும் பல்வகை மரங்களும் அழகிய கொடிகளும் இருந்தன.

அந்த மலையிலிருந்து ஒரு ஆறு கீழே இறங்கி வந்த காட்சி ஒரு பெண் தன் காதலனின் மடியிலிருந்து இறங்கி வருவது போல் இருந்தது. 

அந்த மலையில் இருந்த மரங்கள் ஆற்று நீரில் சாய்ந்தபடி நீரைத் தடுத்து நீரோட்டத்தை எதிர்த் திசையில் செலுத்திக் கொண்டிருந்தன. 

அந்தக் காட்சி தன் காதலனுடன் ஊடல் கொண்டு விலகிச் சென்ற பெண், தோழிகளால் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் காதலனிடம் திரும்பி வருவது போல் இருந்தது.

அந்த நதிக்குப் பக்கத்தில் பறவைகள் நிறைந்திருந்த தாமரைக் குளங்கள் இருந்தன. 

கைகளினால் வெட்டப்பட்ட குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு ஏரியும் இருந்தது. 
அதன் படிகள் விலையுயர்ந்த கற்களால் அமைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்பகுதியில் முத்துக்களும், பவழங்களும் நிறைந்திருந்தன. 

அந்த ஏரியைச் சுற்றிலும் அழகிய மான்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. பல அழகிய பூந்தோட்டங்களும் அங்கே இருந்தன. அதன் நுழைவாயில்கள் விஸ்வகர்மாவால் கலையழகுடன் உருவாக்கப்பட்டிருந்தன.

தோட்டத்திலிருந்த மரங்களில் பூக்களும், பழங்களும் நிறைந்திருந்தன. அந்தத் தோட்டத்தில் பல அலங்காரப் பதாகைகள் இருந்தன. தங்கப் படிகள் கொண்ட பல மேடைகள் இருந்தன.

அங்கே ஒரு தங்க நிற சிம்ஸுபா மரத்தை ஹனுமான் பார்த்தார். அதைச் சுற்றிலும் கிளைகளும், இலைகளும் நிறைந்த கொடிகள் இருந்தன. அதைச் சுற்றிலும் தங்க மேடைகள் இருந்தன.

அங்கே பல நீரூற்றுகள் இருந்தன. அருகே தங்க நிற மரங்கள் நிறைந்த சமவெளிகளும் இருந்தன. மேரு மலை போன்ற தோற்றம் கொண்ட அந்த மரங்களின் ஒளி ஹனுமான் மேல் பட்டு அவரும் தங்க நிறம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

தங்க நிறக் கிளைகளும், காற்றில் அசைந்து மணி போல் ஒலித்த இலைகளையும் கொண்ட அந்த சிம்ஸுபா மரத்தைப் பார்த்து ஹனுமான் வியந்தார்.

இலைகள் அடர்ந்த, பூக்களும், மொட்டுக்களும் மிகுந்த அந்த சிம்ஸுபா மரத்தின் உச்சியில் தாவி ஏறினார் ஹனுமான்.

"சோகமே உருவானவராகவும், ராமபிரானை மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற சிந்தனையோடும் இருக்கும் விதேஹ அரசரின் மகளை (சீதையை) ஒருவேளை நான் இங்கே காணலாம். 

"தீயவனான ராவணனின் இந்த அசோக வனம் சந்தன மரங்களாலும், சம்பக மரங்களாலும் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் தாமரைக்குளம் அழகாகவும் பறவைகள் நிறைந்தும் காணப்படுகிறது.

"அரசகுலத்தில் பிறந்தவரான சீதை இந்தக் குளத்துக்கு வரக் கூடும். அவர் ஒரு அரசியாக இருந்தாலும், காட்டில் வசிக்கும் அனுபவம் பெற்றிருக்கிறார். ஜனகரின் மகளும், ராமபிரானின் மனைவியும், குற்றமற்றவருமான சீதை நிச்சயம் இங்கே வருவார்.

"மானின் கண்களைப் போன்ற கண்களைப் பெற்றவரும், ராமரையே நினைத்து நினைத்து உடல் மெலிந்தவரும், காட்டு வாழ்க்கையின் கடுமைக்குப் பழகியவருமான அந்த தேவி இங்கே வர வாய்ப்பு உள்ளது. 

"காட்டு வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டிருக்கக் கூடிய அந்த அழகிய சீதை, ராமரைப் பிரிந்ததால் தளர்ந்து போனவராக, இங்கே தினமும் வரக் கூடும்.

"ராமருக்குப் பிரியமானவரும், குற்றமற்றவரும், இளவயதினருமான ஜானகிக்குக் காட்டில் வாழும் உயிர்களிடம் அன்பு ஏற்பட்டிருக்கும். 

"தன் மாலைக் கடன்களைச் செய்வதற்காக அவர் சூரியன் மறையும் தருவாயில் தூய நீர் நிறைந்த இந்த நீர்நிலைக்கு வரக் கூடும். 

"இந்த அசோக வனம் சீதை வசிப்பதற்கு மிகவும் ஏற்ற இடம். நிலவுமுகம் கொண்ட சீதை இன்னமும் உயிருடன் இருப்பார் என்றால், இந்தத் தூய நீர்நிலையை நாடி நிச்சயம் வருவார்."

இவ்வாறு நினைத்த மகாத்மாவான ஹனுமான் சீதையைக் காண வேண்டும் என்ற துடிப்பு மிகுந்தவராக, ஒரு அடர்த்தியான புதருக்குள் மறைந்து நின்றபடி, பூக்கள் நிறைந்த அந்த அசோக வனத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 15 - சீதையைக் கண்டார்!
சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்தபடி சீதை எங்காவது தென்படுகிறாரா என்று பார்த்துக்கொண்டிருந்த ஹனுமான் அந்த அசோக வனத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

கற்பகக் கொடிகளும், பிற மரங்களும் அந்த இடத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தன. அங்கே இதமான தென்றல் வீசிக் கொண்டிருந்தது. 

மரங்களும், செடிகளும் அளவாக வெட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்த அந்த வனம் தேவலோகத் தோட்டமான நந்தவனத்துக்கு ஒப்பானதாக இருந்தது.

அந்த வனத்தில் மிருகங்களும், பறவைகளும் நிறைந்திருந்தன. மனிதர்கள் தங்குவதற்கான குடில்களும் இருந்தன. குயில்களின் இனிய குரல் அந்த வனம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அங்கிருந்த குளங்களில் தங்க நிறத் தாமரைகளும் மற்ற பூக்களும் மலர்ந்திருந்தன. அந்த வனத்தில் அலங்கரிப்பட்ட ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், கம்பளங்களும் விரிக்கப்பட்டிருந்தன. பூமிக்குக் கீழேயும் அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த பல மரங்கள் எல்லாப் பருவங்களிலும் பூக்களையும், பழங்களையும் கொடுக்கக் கூடியவை. பூக்கள் மற்றும் பழங்களின் எடையினால் பல மரங்களின் கிளைகள் கீழே சாய்ந்து தரையைத் தொட்டுக் கொண்டிருந்தன.

அசோக வனம் என்றால் சோகத்தைப் போக்கக் கூடிய வனம் என்ற பொருளுக்கு ஏற்ப, அந்த வனம் மனிதர்களின் மனத்துயர் அனைத்தையும் போக்கக் கூடியது.

கர்ணிகாரா போன்ற மரங்கள் பூத்துக் குலுங்கி அந்த வனத்தை அழகுபடுத்தின. அந்த மரங்களில் பூத்துக் குலுங்கிய பூக்களின் ஒளியினால் அந்த வனம் சூரிய ஒளியால் பிரகாசிப்பது போல் பிரகாசித்தது.

பல மரங்களின் கிளைகளிலிருந்து பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்ததால் பல மரங்கள் இலைகள் இல்லாமல் பூக்கள் மட்டும் நிறைந்தவையாகக் காணப்பட்டன. 

சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்தபடி ஹனுமான் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த மரங்கள் அந்த இடத்தையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தன. புன்னாகம், சப்தபர்ணம், சபகம், உத்தாலகம் போன்ற மரங்கள் அகலமான அடிப்பகுதியைக் கொண்டிருந்தன. 

அங்கிருந்த ஆயிரக்கணக்கான அசோக மரங்களில் சில பொன்னிறத்திலும், சில தீக்கொழுந்துகளைப் போன்ற பிரகாசத்துடனும், சில மை போன்று கருத்தும் இருந்தன.

பல தோட்டங்களை உள்ளடக்கிய அந்த அசோக வனம் இந்திரனின் தோட்டமான நந்தவனம் போலவும், குபேரனின் தோட்டமான சைத்ரரதம் போலவும் இருந்தது.

அந்த வனத்தின் அழகையும் தனித்தன்மையையும் முழுமையாக விவரிக்க இயலாது. நட்சத்திரங்கள் நிறைந்த வானம் போல் விளங்கியது பூக்கள் நிறைந்த அந்த அசோக வனம். 

பூக்கள் என்னும் நவரத்தினங்களைக் கொண்ட ஐந்தாவது சமுத்திரம் அது என்றும் கூறலாம்.

எல்லாக் காலங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்கள், நறுமணத்தைத் தாங்கி வரும் தென்றல், விதவிதமாக ஒலியெழுப்பும் மான்கள், பறவைகள், எங்கும் நிறைந்திருக்கும் இனிமையான மணம் இவையெல்லாம் சேர்ந்து அந்த வனத்தை இன்னொரு கந்தமாதன மலை போல் தோன்றச் செய்தன.

அந்த அசோக வனத்தின் நடுவில், ஆயிரம் தூண்களைக் கொண்ட ஒரு கோயிலை ஹனுமான் கண்டார். விண்ணை முட்டும் உயரத்துடன் ஒரு மேடான பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோயில் கைலாச மலையைப் போல் வெண்மை நிறத்தில் இருந்தது. 

அதன் படிகளில் முத்துக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதன் தரை பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தது, பார்ப்பவர்களின் கண் கூசும் அளவுக்குப் பிரகாசமாக இருந்தது அந்தக் கோவில்.

அங்கு, அழுக்கடைந்த ஆடையுடன், உணவருந்தாததால் இளைத்த உடலுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். 

சுற்றிலும் ராட்சஸப் பெண்கள் அமர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண் நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக் கொண்டிருந்தார்.

சுக்லபட்சத்தின் (அமாவாசைக்குப் பின் வரும் பதினைந்து நாட்கள் அடங்கிய காலம்) முதல் நாளில் வானில் தோன்றும் சந்திரன் போல் இருந்தது அவர் தோற்றம். 

புகையால் மறைக்கப்பட்டிருக்கும் நெருப்பின் ஜுவாலை போல் மறைந்து காணப்பட்ட அவர் அழகை, உற்று நோக்கினால்தான் உணர முடியும்.

அவர் அழுக்கடைந்த மஞ்சள் நிற ஆடை உடுத்தியிருந்தார். நகைகள் எதுவும் அணியாமலும், தூசு படர்ந்தும் இருந்த அவர் உடல், பூக்கள் இல்லாத தாமரைக்குளம் போல் தோற்றமளித்தது.

துக்கத்தினாலும், அவமானத்தினாலும் அழுத்தப்பட்டவராக அவர் காணப்பட்டார். ஒரு தவசியைப் போல் பற்றற்ற நிலையில்  இருப்பது போல் அவர் காணப்பட்டார். 

செவ்வாய் கிரகத்தால் அச்சுறுத்தப்பட்ட ரோகிணி நட்சத்திரத்தைப் போல் அவர் தோன்றினார். அவரது ஆழ்ந்த துயரை வெளிப்படுத்தும் வண்ணம் அவர் கண்களில் நீர் மல்கி இருந்தது.

உணவு உட்கொள்ளாததால் இளைத்திருந்த அவர், சோகம், பயம், விரக்தி ஆகிய உணர்வுகளால் பீடிக்கப்பட்டவராக இருந்தார். 

அவரைச் சுற்றி அரக்கர்கள் மட்டுமே இருந்ததால், தனக்கு ஆதரவாக ஒருவர் கூட அருகில் இல்லாத நிலையில், அவர் துயரத்தில் ஆழ்ந்திருந்தார். 

தன் கூட்டத்திலிருந்து பிரிந்து விட்ட மான் ஒன்று ஓநாய்களால் சூழப்பட்டது போல் இருந்தார் அவர்.

அவரது முதுகின் மேல் கருநாகம் போல் நீளமாகத் தொங்கிக் கொண்டிருந்த அவரது தலைமுடி, இலையுதிர் காலத்தில் பசுமையான இலைகளுடன் விளங்கிய மரங்களின் வரிசை போல் இருந்தது. 

சிறப்பாக வாழ வேண்டிய, அழகிய கண்களுடைய அந்தப் பெண்மணி துயரினால் வாட்டப்பட்டு, எலும்பு தெரிய இளைத்து கலைந்த தோற்றத்துடன் இருந்ததை ஹனுமான் கண்டார்.

தான் விரும்பிய உருவத்தை எடுத்துக் கொள்ளும் சக்தி பெற்ற ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது இருந்த அதே தோற்றத்துடன் இருந்ததால் அவர் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தார் ஹனுமான்.

அவர் முகம் முழுநிலவு போல் இருந்தது. அவரது இமைகள் அழகாக இருந்தன. அவரது மார்பகங்கள் எடுப்பாக இருந்தன. அவருடைய ஒளி மிகுந்த தோற்றம் சுற்றியிருந்த இருளை அகற்றியது. 

அவரது தலைமுடி கருமையாக இருந்தது. அவர் உதடுகள் பிம்பப் பழம் போல் தோற்றமளித்தன .அவர் இடை மிக அழகாக இருந்தது. அவர் கண்கள் தாமரை இதழ்கள் போல் இருந்தன.

கலப்பையால் நிலத்தை உழுதபோது ஏற்பட்ட பள்ளத்திலிருந்து தோன்றிய அவர் மன்மதனின் துணைவி ரதி போன்ற தோற்றத்துடன் அனைவரையும் கவரும் தோற்றம் கொண்டவராக இருந்தார். 

அவர் மேனி சந்திரனின் மென்மையைக் கொண்டிருந்தாலும், அது புலன்களை அடக்கிக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டவரின் மேனி போல் தோற்றமளித்தது.

தரையில் அமர்ந்தபடி, சோகத்தினாலும், பயத்தினாலும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததால், அவர் நாக லோகத்து இளவரசி போல் தோன்றினார்.

புகையினால் நெருப்பின் ஜ்வாலைகள் மறைக்கப்படுவது போல் அவரது பிரகாசம் அவரது ஆழமான, நாள்பட்ட சோகத்தினால் மறைக்கப்பட்டிருந்தது.

கடினமான உட்பொருளைக் கொண்டிருந்ததால், சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் போன சாத்திரம் போலவும், ஏழ்மையினால் கவரப்பட்ட செல்வம் போலவும், தேய்ந்து போன நம்பிக்கை போலவும், அடக்கிக் கொள்ளப்பட்ட ஆசைகள் போலவும், தோல்வி பயத்தினால் அழுத்தப்பட்ட வெற்றி போலவும், குழப்பமான சிந்தனைகளினால் மங்கிப் போன அறிவு போலவும், அவதூறுகளால் பாதிக்கப்பட்ட நற்பெயர் போலவும் அவர் தோற்றமளித்தார்.

ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சோகத்தினால் மிகவும் இளைத்திருந்த அவர் ராமருக்கு அருகில் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்தினால் பீடிக்கப்பட்டவராக இருந்தார்.

தனியாக மாட்டிக் கொண்டு, எங்கு போவதென்று தெரியாமல் இங்கும் அங்கும் பார்வையைச் செலுத்தும் மான் போல் தோற்றமளித்த அவர் நீர் நிரம்பிய கருநிறக் கண்களுடனும், வில் போன்ற பருவங்களுடனும் நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது அவரது துயரை வெளிக்காட்டியது.

ஆபரணங்களுடன் துலங்க வேண்டிய அவர் உடல், ஆபரணங்கள் ஏதும் இல்லாமல், தூசும் அழுக்கும் படர்ந்ததாக இருந்தது .மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரன் போல் இருந்தார் அவர்.

மேலே விவரிக்கப்பட்டது போல் இருந்த சீதையைக் கண்ணால் கண்ட பின்பும்  ஹனுமானுக்கு அவர் சீதைதானா என்ற ஐயம் இருந்தது.

அடிக்கடி ஒதாததால் சரியாக நினைவில்லாமல் போன வேத மந்திரம் போல் இருந்தார் அந்தப் பெண்மணி. 

ஒரு வாக்கியத்துக்கு விளக்கம் கூறும் வாக்கியங்கள் அந்த வாக்கியத்தின் பொருளைத் தவறாகக் கூறினாலோ, இலக்கணத்தை மீறினாலோ, அந்த வாக்கியத்தில் உள்ள அலங்காரச் சொற்களைக் குறிப்பிடாமல் போனாலோ அந்த வாக்கியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது போன்ற நிலையில் இருந்தார் ஹனுமான்.

அழகிய தோற்றம் கொண்ட அந்த ராஜகுமாரியைக் கூர்ந்து கவனித்தபின், பின்வரும் அடையாளங்களைக் கொண்டு, அவர் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற இறுதியான முடிவுக்கு வந்தார்  ஹனுமான்

சீதையைக் கண்டு பிடிக்க உதவும் வகையில் ராமர் குறிப்பிட்டுச் சொன்ன ஆபரணங்களின் பிரகாசத்தை அவர் கவனித்தார்.

"இவர் அணிந்திருக்கும்  இந்த ஆபரணங்களால் சீதையை அடையாளம் காணலாம் என்று ராமர் என்னிடம் கூறியிருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் உடலிலேயே இருப்பதால் இந்த ஆபரணங்கள் அவர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

"அவர் கைகளிலும் விரல்களிலும் அணிந்திருக்கும் முத்துக்களாலும் பவளங்களாலும் செய்யப்பட்ட ஆபரணங்கள் கருத்திருக்கின்றன. 

"அவர் காதுகளில் தொங்கும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தொங்கட்டான்களையும், ஸ்வதம்ஷ்டிரா என்ற காதணிகளையும் என்னால் காண முடிகிறது.

"ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, ரிஷ்யமுக மலையில் அவரால் கீழே போடப்பட்ட ஆபரணங்கள் அவர் உடலில் இல்லை. அவை நீங்கலாக மற்ற ஆபரணங்கள் அவர் உடலில் இருக்கின்றன.

"அவருடைய தங்க நிற மேலாடை ஒரு மரத்தின் மீது விழுந்திருந்ததை சில வானரர்கள் பார்த்திருக்கிறார்கள். கீழே விழுந்திருந்த ஆபரணங்களை வானரர்கள் பார்த்திருக்கிறார்கள். 

"அவற்றை அவர்தான் கீழே போட்டிருக்க வேண்டும். நீண்ட நாட்களாக அணியப்பட்டிருப்பதால் அவர் உடை அழுக்குப் படிந்தும் மங்கியும் இருந்தாலும், அது கீழே விழுந்திருந்த மேலாடையின் நிறத்தை ஒத்த நிறத்தில்தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

"அதனால் இந்தப் பெண்மணி, இன்னொருவனால் தூக்கிச் செல்லப்பட்ட பிறகும் ராமபிரானின் நெஞ்சிலிருந்து நீங்காமல் இருக்கும் தங்க நிற மங்கையான ராமரின் கற்புடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும்.

"இரக்கத்துடனும், அன்புடனும், துயரத்துடனும், ஒட்டுதலுடனும் ராமரால் எப்போதும் நினைத்துக் கொள்ளப்பட்டபடி இருக்கும் அந்தப் பெண்மணியாகத்தான் இருக்க வேண்டும் இவர். 

"தன்னால் காப்பாற்றப்பட வேண்டிய பெண் இன்னொருவன் வசத்தில் இருப்பதை நினைத்து ராமர் இரக்கம் கொண்டிருக்கிறார். தன்னை நம்பி இருப்பவர் என்பதால் ராமர் அவரிடம் அன்புடன் இருக்கிறார். தன் மனைவியைப் பிரிந்ததால் அவர் துயரத்துடன் இருக்கிறார். தனது அன்புக்குரியவர் என்பதால் அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.

"இவருடைய உடலுறுப்புகள் அத்தனையும்  அமைப்பிலும், அழகிலும் ராமரின் உடலுறுப்புகளுடன் ஒத்தவையாக இருக்கின்றன. ராமரின் உடலுறுப்புகள் இவருடையவையுடன் ஒத்திருக்கின்றன.

"இந்த தேவியின் மனம் ராமரைப் பற்றிய சிந்தனையில்தான் ஆழ்ந்திருக்கிறது, ராமரின் மனம் இவரது சிந்தனையிலேயே ஆழ்ந்திருப்பது போல். அதனால்தான் இருவருமே இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

"சீதையின் பிரிவுக்குப் பிறகும் சோகத்தினால் தன் உடல் சுக்குநூறாக உடைந்து விடாமல் ராமர் பார்த்துக் கொண்டிருக்கிறார். 

"இந்த அரிய செயல் அவரைத் தவிர வேறு யாருக்கும் இயலாத ஒன்று. சீதை இல்லாத நிலையில் தன் உயிரைப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கும் ராமரின் சாதனை வேறு யாராலும் செய்ய முடியாதது."

சீதையை அடையாளம் கண்டு கொண்டதால் வாயுபுத்திரர்  மிகவும் உற்சாகம் அடைந்தார். ராமரை நினைத்து, அவரது பெருமையை உணர்ந்து அவர் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 16 - சீதையின் நிலை கண்டு 
ஹனுமான் வருத்தம்
புகழுக்குரியவரான சீதையையும், குணசீலரான ராமரையும் மனதில் வணங்கிய பின், மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் அந்த வானரத் தலைவர்.

சீதையின் நிலையை நினைத்து, அவர் கண்ணீர் சிந்தினார்.

"பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட, லக்ஷ்மணரால் சேவை செய்யப்பட்ட சீதையே இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால், காலத்தின் கட்டளையை யாராலும் வெல்ல முடியாது என்பதுதான் பொருள். 

"ராமரும் லக்ஷ்மணரும் தங்கள் ஆழ்மனதில் தன்னைப் பற்றிய சிந்தனையைத்தான் கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்திருப்பதால்தான், மழைக்காலத்தில் பெருகும் நீரினாலும் கரை உடையாத கங்கையைப் போல் இவரும் உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்படாமல் இருக்கிறார்.

"குணம், வயது, நடத்தை, குடும்பப் பெருமை, மங்களமான உடல் சின்னங்கள் ஆகியவற்றில் ராமருக்கு இணையானவராக விளங்கும் சீதை ராமருக்கு மனைவியாக இருக்கும் தகுதி படைத்தவர்தான், ராமர் எப்படி இவருக்குக்  கணவராக இருக்கும் தகுதி படைத்தவரோ அதுபோல்."

"தங்க நிறம் கொண்ட, உலகில் எதனுடனும் ஒப்பிட முடியாத அழகு படைத்த, லக்ஷ்மிக்கு நிகரான அந்த சீதையைப் பார்த்த ஹனுமான், மீண்டும் ராமரைப் பற்றி நினைத்து, தனக்குள் பேசிக் கொள்ளத் துவங்கினார்.

"இந்த அழகிய பெண்மணியின் பொருட்டுத்தான் வலிமை படைத்த வாலி வதம் செய்யப்பட்டான். ராவணனுக்கு நிகரான வலிமை படைத்த கபந்தனும் கொல்லப்பட்டான். அதே போல், பயங்கரமானவனும், சக்தி வாய்ந்தவனுமான விராதனும், காட்டில் நடந்த யுத்தத்தில், சம்பரன் இந்திரனால் கொல்லப்பட்டது போல், கொல்லப்பட்டான்.

"ஜனஸ்தானம் என்ற இடத்தில் கொடூர குணம் கொண்ட, பயங்கரமான பதினான்காயிரம் அரக்கர்கள், ராமபிரானின் தீப்பிழம்புகள் போன்ற அம்புகளினால் கொல்லப்பட்டனர். நிகரற்ற வலிமை கொண்ட கரன், திரிசிரர்கள், தூஷணன் ஆகியோரும், எல்லாம் அறிந்த ராமரால் கொல்லப்பட்டனர்.

"இவரால்தான் வாலியினால் பாதுகாக்கப்பட்ட வளம் மிகுந்த நாடு சுக்ரீவனின் கைக்கு வந்தது. இவரால்தான் எல்லா நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் அதிபதியான இந்தப் பெருங்கடல் என்னால் கடக்கப்பட்டது, இந்த நகரமும் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.

"இவர் பொருட்டு ராமபிரான் கடலால் சூழப்பட்ட இந்த உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டியிருந்தாலும், அது உகந்ததுதான். சீதாப்பிராட்டியையும், மூவுலகங்களையும் ஒப்பிட்டால், சீதாப்பிராட்டியின் மதிப்புதான் மிக அதிகமாக இருக்கும்.

"இந்த சீதை தன் கணவர் மீது கொண்ட அன்பில் உறுதியாக இருக்கிறார். தர்மம் தவறாத மிதிலை நாட்டு அரசர் நிலத்தை உழுத பள்ளத்திலிருந்து தோன்றிய இவர், தாமரைப்பூ மகரந்தப் பொடிகளால் மூடப்பட்டிருப்பது போல், மண் துகள்களால் மூடப்பட்டிருந்தார்.

"யுத்தத்தில் எப்போதுமே பின்வாங்காத, ஒழுக்கத்துக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மருமகள் இவர். சத்திய சீலரும், அப்பழுக்கற்ற குணம் கொண்ட தர்மிஷ்டருமான ராமபிரானின் மனைவி இவர். இப்படிப்பட்ட புனிதவதி இப்போது இந்த அரக்கிகளிடம் சிறைப்பட்டிருக்கிறார்.

"தன் கணவர் மீது கொண்ட அன்பினாலும், தனது கடமை உணர்ச்சியினாலும்  உந்தப்பட்டு, தனது கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எல்லா சுகங்களையும் உதறித் தள்ளி விட்டு இவர் கானகத்துக்குச் சென்றார்.

"காட்டில் இருந்த மரங்களின் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு உயிர் வாழ்ந்த இவர், எப்போதும் தனது கணவருக்குப் பணிவிடை செய்து கொண்டு அரண்மனையில் வாழ்ந்தபோது இருந்த அதே திருப்தியுடன் காட்டில் வாழ்ந்து வந்தார்,

"இத்தகைய நற்பண்புகள் நிறைந்தவரும், பொன் போன்று மின்னும் உடல் படைத்தவரும், புன்னகை மாறாத வதனத்துடன் இருந்தவரும், துயரம் என்றால் என்னவென்று அறியாதவருமான இவர்  இப்போது  கடுமையான சூழ்நிலையில் இருக்கிறார்.

"தாகத்துடன் இருப்பவன் தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது போல், ராவணன் எப்போதும் இவரைத் தாக்குவதற்குத் தயார் நிலையிலேயே இருக்கிறான்.

"இன்னும் தன் கற்பு நெறியிலிருந்து மாறாமல் இருக்கும் இவர் ராமபிரானுடன் சேர்ந்திருக்க வேண்டியவர்தான். ராமருக்கு இவர் திரும்பக் கிடைத்தால், நாட்டை இழந்த அரசன் ஒருவன் தன் நாடு திரும்பக் கிடைத்ததும் அடைவது போன்ற மகிழ்ச்சியை  அவர் அடைவது நிச்சயம்.

"எல்லா சுகங்களையும் விட்டு விட்டு, உறவினர்களை விட்டுப் பிரிந்து, தான் மீண்டும் எப்போது ராமருடன் இணையப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே தன் உடலை வைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

"இவர் இந்த அரக்கிகளைப் பார்க்கவில்லை. பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்கள் மீதும் இவர் பார்வை இல்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி இவர் ராமரையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியமானதும், மிகவும் மதிப்பு வாய்ந்ததுமான  ஆபரணம் அவருடைய கணவன்தான். பல்வகை ஆபரணங்களை அணிந்து ஜொலிக்க வேண்டிய இவர், அவசியமான ஆபரணம் இல்லாததால் ஒளியிழந்து காணப்படுகிறார்.

"சீதையை விட்டுப் பிரிந்த பிறகும், ராமர் தன் உடலை வைத்துக் கொண்டிருக்கிறார். துயரத்தினால் அவர் உடல் இன்னும் இளைக்கவில்லை. இதன் மூலம் யாராலுமே செய்ய முடியாத ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் அவர். 

கரிய கூந்தலும், தாமரைக் கண்களும் கொண்ட, மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையுமே பெறக் கூடாத  இந்த அழகிய பெண்மணியின் துன்பத்தைப் பார்த்து  என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

பொறுமைக்குப் பெயர் பெற்ற, தாமரைக் கண்கள் கொண்ட, ராம லக்ஷ்மணர்களால் பாதுகாக்கப்பட்ட இந்தப் பெண்மணி, இப்போது கொடூரமான தோற்றம் கொண்ட அரக்கிகளின் காவலில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.

"தொடர்ந்து தன் மீது விழும் பனித்துளியால் காய்ந்தும், நிறம் மங்கியும் போகும் தாமரை மலரைப் போல், இவரும், தொடர்ந்து வரும் துயரினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். தனது ஆண் ஜோடியைப் பிரிந்த பெண் சாதகப் பறவை துயரடைவது போல், ஜனகரின் மகளும் பெரும் துயரில் ஆழ்ந்திருக்கிறார்.

"ஹேமந்த ருதுவின் (முன்பனிக் காலம்) இறுதியில், நிலவொளியில்,  மலர்களின் எடையால் தலை சாய்ந்திருக்கும் அசோக மரங்கள் அவர் மனதில் பெரும் துயரைத்தான் ஏற்படுத்த முடியும்."

சக்தி வாய்ந்தவரும், வேகம் மிகுந்தவருமான அந்த வானரத் தலைவர் இதுபோல் தனக்குள் சிந்தனை செய்த பின், தான் பார்த்த பெண்மணி சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அந்த சிம்ஸுபா மரத்தின் மீதே மறைந்து அமர்ந்திருந்தார். 

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 17 - அரக்கிகளின் தோற்றம்
அப்போது, ஏரியின் நீல நிறத் தண்ணீரில் ஒரு அன்னம் தோன்றுவது போல், தாமரை நிறம் கொண்ட, இயற்கையிலேயே தூய்மையான சந்திரன், தெளிந்த வானத்தில் எழுந்தது. வாயுபுத்திரருக்கு உதவி செய்வது போல், தன் குளிர்ந்த, ஒளிமிகுந்த கிரணங்களை வீசியது.

அதிக எடை ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று, அதைக் கரையேற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த பின், கைவிடப்பட்டது போன்ற தோற்றத்துடன், துயரினால் அழுத்தப்பட்டு, விரக்தியான மன நிலையில் அமர்ந்திருந்த சீதையின் முகத்தை அந்த ஒளியில், ஹனுமானால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

அப்போது சீதைக்கு அருகில் அமர்ந்திருந்த பல்வகையான கொடூரத் தோற்றங்களுடன் காட்சியளித்த அரக்கிகளை ஹனுமான் பார்த்தார்.

சிலர் ஒரு கண்ணுடனும், சிலர் ஒரு காதுடனும், சிலர் கொம்பு போன்ற காதுடனும், சிலர் காதே இல்லாமலும், சிலர் பாதிக் காதுடனும் இருந்தனர்.

சிலரது மூக்குத் துவாரம் அவர்கள் தலையில் இருந்தது. சிலருக்கு மிகப் பெரிய தலையும், உருவமும் இருந்தன. சிலர் மெலிந்த உடலுடனும், உயரமாகவும், கழுத்து மெலிந்தும் காணப்பட்டனர்.

சிலர் உடலில் அடர்த்தியான ரோமம் இருந்தது. சிலர் உடலில் ரோமமே இல்லை. சிலர் உடலில் கம்பளி போன்ற ரோமம் இருந்தது,

சிலரது நெற்றிகளும், காதுகளும் சாய்ந்திருந்தன. சிலரது வயிறுகளும், மார்பகங்களும் சாய்ந்திருந்தன. சிலரது உதடுகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. 

சிலரது முகங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. சிலரது முழங்கால் முட்டிகள் தொங்கியபடி காணப்பட்டன.

சிலர் குள்ளமாகவும், பருமனாகவும் இருந்தனர். சிலரது முதுகில் கூன் விழுந்திருந்தது. சிலர் உடல் பருத்தும், சிலர் உடல் சிறுத்தும் காணப்பட்டனர். 

சிலரது அவயவங்கள் உடைந்திருந்தன. சிலரது கண்கள் மஞ்சளாக இருந்தன. சிலரது முகங்கள் விகாரமாக இருந்தன. சிலரது தோற்றம் அச்சமூட்டுவதாக இருந்தது.

வேறு பல விகாரமான தோற்றங்களையும் அவர் கண்டார். சிலர் மஞ்சள் நிறம் கொண்டவர்களாகவும், சிலர் கருப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

சிலர் கோபம் கொண்டவர்களாகவும், சிலர் சண்டை போடும் இயல்புடையவர்களாகவும் காணப்பட்டனர். சிலர் கையில் சூலம் வைத்திருந்தனர். சிலர் கையில் சுத்தியல்களையும், சிலர் கட்டைகளையும் வைத்திருந்தனர்.

பன்றி, மான், புலி, எருமை, ஆடு, நரி போன்ற பலவகை மிருகங்களின் முகத்தோற்றங்களைக் கொண்டவர்கள் அங்கே இருந்தனர். 

யானை, ஒட்டகம், குதிரை போன்ற மிருகங்களின் கால்களைப் போன்ற கால்களைக் கொண்டவர்கள் அங்கே இருந்தனர்.

சிலரது உடலுக்கு மேல் கழுத்தே இல்லாமல் தோள்களுக்கு மேல் தலை அமர்ந்திருந்த தோற்றத்துடன் இருந்தனர். 

சிலருக்கு ஒரு கை மட்டும் இருந்தது, சிலருக்கு ஒரு கால் மட்டும் இருந்தது. சிலரது காதுகள் கழுதை, நாய், பசு, யானை, சிங்கம் போன்ற மிருகங்களின் காதுகளை ஒத்திருந்தன.

சிலர் மூக்கே இல்லாமலும், சிலர் நீண்ட மூக்குடனும், சிலர் குறுக்கு வாட்டில் அமைந்த மூக்குடனும் இருந்தனர். யானையின் தும்பிக்கை போன்று மூக்கு அமைந்தவர்கள் சிலரும், நெற்றியில் மூக்கு அமைந்த சிலரும் அங்கே இருந்தனர்.

யானையின் பாதம் போன்றும், பசுவின் குளம்பு போன்றும் பாதங்கள் அமைந்தவர்களும் இருந்தனர். சிலருக்குக் கால்களில் நீளமாக முடி வளர்ந்திருந்தது.

சிலர் பெரிய கழுத்துடனும், பெரிய தலையுடனும் இருந்தனர். சிலரது மார்புகளும், வயிறுகளும் பெருத்திருந்தன. 

சிலரது கண்களும், வாயும் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. சிலருக்கு நீண்ட நாக்கும், நீண்ட நகங்களும் இருந்தன.

ஆடு, யானை, பசு, காட்டுப்பன்றி, குதிரை, ஒட்டகம், கழுதை போன்ற முகம் கொண்டவர்களும் அங்கே இருந்தனர். சிலரது கைகளில் சூலம், கம்பு போன்ற ஆயுதங்கள் இருந்தன.

சிலர் எளிதில் கோபப்படுவார்கள், சிலர் சண்டை போடும் இயல்புடையவர்கள். சிலருக்கு ரம்பம் போன்ற பற்கள் இருந்தன. சிலருக்குச் செப்பு நிறத்தில் நீண்ட முடி இருந்தது.

சிலர் மாமிசம் உண்பதிலும், மது அருந்துவதிலும் ஆர்வம் மிகுந்தவர்கள். சிலரது உடல்களில் ரத்தமும், சதைத் துணுக்குகளும் பதிந்திருந்தன, சிலர் மாமிசமும் மதுவும் மட்டுமே அருந்துபவர்கள்.

சிலரது தோற்றம் பார்ப்பவர்களை மயிர்க்கூச்செரியச் செய்யும் அளவுக்கு பயங்கரமாக இருந்தது. சிலருக்கு தந்தம் போல் நீளமான பற்கள் இருந்தன.

அந்த மரத்தைச் சுற்றிலும் இருந்த அரக்கிகள் இது போன்று பல்வகைத் தோற்றங்களுடன் இருந்ததை ஹனுமான் பார்த்தார்.

அந்த அசோக வனத்தின் நடுவில் சீதை அமர்ந்திருந்ததை ஹனுமான்  பார்த்தார். குற்றமற்ற அந்த ஜானகி ஒளி இழந்து துயரின் அழுத்தத்தினால் துவண்டு போயிருந்தார்.

வாரப்படாமல், புழுதி படர்ந்த தலையுடன் இருந்த அவர் தோற்றம், தன் புண்ணிய காலம் முடிந்த ஒரு நட்சத்திரம் பூமியில் விழுந்தது போல் இருந்தது.

பதிவிரதையான அவர் இப்போது தன் கணவரைச் சந்திக்க வழியில்லாதவராக, பெரும் துயரில் ஆழ்ந்திருந்தார். 

விலையுயர்ந்த ஆபரணங்கள் ஏதும் அணிந்திராத அவருக்கு, பதிபக்தி ஒன்றே ஆபரணமாக அமைந்திருந்தது. 

உறவினர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து, இப்போது அவர் அரக்கர் தலைவனான ராவணனின் கட்டுப்பாட்டில் இருந்தார்.

தன் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு சிங்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட யானைக்குட்டியின் நிலை போன்றிருந்தது அவர் நிலை. 

மழைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் துவங்கும் சமயம், மேகங்களுக்கு இடையே மங்கலாகத் தோன்றும் இளம்பிறை போல் காணப்பட்டார் அவர்.

நீராடாததால் அவர் சருமம் மங்கலாகி இருந்தது. தந்திகள் அறுக்கப்பட்ட வீணை போன்று தோற்றமளித்தார் அவர். 

முன்பு தன் கணவருடன் இணைந்திருந்த அவர், இப்போது அரக்கிகளுடன் இருக்கும் நிலையைத் தாங்க முடியாமல் துயரக்கடலில் ஆழ்ந்திருந்தார்.

பூத்துக் குலுங்கும் கொடி போன்ற தோற்றமுடைய அவர், அரக்கர்களால் சூழப்பட்டிருந்த நிலையில், தீமை விளைவிக்கும் கிரகங்களினால் சூழப்பட்ட ரோகிணி நட்சத்திரம் போல் இருந்தார்.

அலங்காரம் ஏதும் இல்லாமலே இயல்பாகவே அழகான தோற்றமுடைய அவர், சேறு படிந்த தாமரை மலர் அழகாக இருந்தாலும் பிரகாசமாக இல்லாதது போல் தோன்றினார்.

அவர் கசங்கிய, அழுக்கடைந்த ஒற்றை ஆடை அணிந்திருந்தார். அவரது மான் விழிகள் மங்கலாக இருந்தாலும் ஒளியை இழக்கவில்லை. 

தன் கணவரின் ஆற்றலைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு கற்பு மட்டும்தான் காவலாக இருந்தது.

சீதையைக் கண்டதில் தன் முயற்சிகள் பலன் அடைந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார் வாயுபுத்திரர். மிரண்டு போன மானைப்போல் அங்கும் இங்கும் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த சீதையின் மூச்சுக்காற்றின் உஷ்ணம் அந்த வனத்திலிருந்த எல்லா மரங்களின் இலைகளையும் வாடி விடச் செய்யும் அளவுக்குக் கடுமையாக இருந்தது.

ஆபரணங்கள் ஏதும் அணியாத நிலையிலும் அழகாகவும், அங்கங்கள் அனைத்தும் அவர் உடல் அளவுக்கு ஏற்ற விதத்தில் அளவாக அமைந்தும் இருந்த அவர் எல்லாவிதமான துயரங்களும் மொத்தமாக ஒரு வடிவம் எடுத்தது போல் தோற்றமளித்தார்.

சீதையைக் கண்டதில் ஆனந்தக் கண்ணீர் வடித்த ஹனுமான் தன் மனதுக்குள் ராமரை வணங்கினார். 

சீதையைக் கண்டதால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த அந்த வீரர் தன் மனதில் ராமரையும் லக்ஷ்மணரையும் வணங்கியபடி அந்த மரத்தின் மீது மறைந்தபடி அமர்ந்திருந்தார். 

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 18 - ராவணன் வருகை
ஹனுமான் மரத்தின் மீது அமர்ந்தபடியே அந்த அசோகவனத்தை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது, இரவு முடிந்து விடிவெள்ளி எழுந்தது.

அந்த அதிகாலைப் பொழுதில், வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்களும், யாகங்கள் செய்வதில் வல்லுனர்களுமான அந்தணர்களால் (அரக்கர்களுக்குள் அந்தணர்களும் இருந்தனர்) ஓதப்பட்ட வேத மந்திரங்கள் ஹனுமானின் காதில் விழுந்தன.

அப்போது சக்தி படைத்த, பத்து தலைகள் கொண்ட ராவணன் அதிகாலை ராகங்களில் பாடப்பட்ட துதிகளினால் துயில் எழுப்பப்பட்டான். 

சரியான நேரத்தில் கண் விழித்த ராவணனின் உடலில் இருந்த ஆடைகளும், பூமாலைகளும் கலைந்திருந்தன. 

எழுந்து உட்கார்ந்ததுமே அவன் மனம் சீதையின் பால் சென்றது. சீதையின் மீது அதீதமான காதல் கொண்டிருந்த அவனால் தன்  மனத்தை அடக்க முடியவில்லை,

அரசனுக்கு உரிய எல்லா ஆபரணங்களையும் அணிந்து ஜொலிப்புடன் அரண்மனையிலிருந்து கிளம்பிய ராவணன், தங்கத்தாலும்  முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தெருக்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.

பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்களைக் கொண்டதும், உல்லாசமாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்த பறவைகள் நிறைந்ததும், தாமரை மலர்கள் நிறைந்த குளங்களைக் கொண்டதும், கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்த மான்கள் நிறைந்ததும், பூக்களும், பழங்களும் படர்ந்திருந்த தரையைக் கொண்டதும், பல்வகை மிருகங்களின் சிற்பங்களைக் கொண்டதுமான அசோக வனத்துக்கு அவன் சென்றான். 

இந்திரனைப் பின் தொடர்ந்து தேவலோக, கந்தர்வ லோகக் கன்னிகள் செல்வது போல், ராவணனைப் பின்தொடர்ந்து ஒரு பெண்கள் கூட்டம் போய்க் கொண்டிருந்தது.

சில பெண்கள் தங்கள் கைகளில் சவரிகளையும், சிலர் அலங்காரமான மயிலிறகு விசிறிகளையும், சிலர் தங்க விளக்குகளையும் ஏந்தியபடி வந்தனர். 

சிலர் நீர் நிறைந்த தங்கப்பானைகளைச் சுமந்தபடி அவனுக்கு முன்னால் நடந்து சென்றனர்.

வேறு சிலர் கம்பளங்களை ஏந்தியபடியும், இன்னும் சிலர் கத்திகளைப்  பின்புறம் சாய்த்தபடி ஏந்திக் கொண்டும் அவனுக்கு முன்னே நடந்து  சென்றனர். 

ஒரு புத்திசாலியான பெண் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர்ப் பாத்திரத்தைத் தன் கையில் சுமந்தபடி தனியாக நடந்து வந்தாள்.

தங்கப் பிடி கொண்ட, அன்னம் போன்று  வெண்மை நிறத்தில் இருந்த, சந்திரன் போல் மின்னிய ஒரு சம்பிராதயக் குடையைப் பிடித்தபடி இன்னொரு பெண் பின்னால் நடந்து வந்தாள். 

தூக்கத்தினாலும், போதையினாலும் சிவந்த கண்களுடன், ராவணனின் மனைவிகள், மேகத்தைத் தொடர்ந்து செல்லும் மின்னல் கீற்றுகளைப் போல் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் கழுத்துக்களிலும், கைகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள் தவறான முறையில் அணியப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் மேனிகளில் பூசியிருந்த பூச்சு நிறம் மங்கியிருந்தது. அவர்கள் பின்னல்கள் தளர்ந்து போயிருந்தன. அவர்கள் முகத்தில் வியர்வை முத்துக்கள் காணப்பட்டன.

அவர்களுடைய கலைந்த கூந்தல்களை புதிய மலர்கள் அலங்கரித்தன. போதையாலும், தூக்கத்தாலும் அவர்கள் தள்ளாடியபடி நடந்தனர். 

ராவணன் மீது கொண்ட மரியாதையாலும், அன்பாலும் அவனைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த அவனுடைய அழகிய மனைவிகளின் தோற்றம் இப்படித்தான் இருந்தது.

அந்தப் பெண்களின் கணவனாக இருந்தபோதிலும், சீதையின் மீது கொண்ட மோகத்தினால் அவரைத் தேடித் சென்று கொண்டிருந்தான் சக்தி வாய்ந்த ராவணன். அவன் நடை அவன் பெருமையையும், மிடுக்கையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

நடந்து சென்ற பெண்களின் ஒட்டியாணங்களிலும் கொலுசுகளிலும் கோர்க்கப்பட்டிருந்த மணிகளின் கிண்கிண் ஒலிகள் ஹனுமானின் காதுகளில் விழுந்தன.

ராவணன் சீதை இருக்கும் இடத்துக்கு அருகில் வந்தபோது நறுமணம் கமழும் எண்ணெய்களினால் ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளி அவன் மீது விழுந்தது.

அசாத்தியமான பலம் கொண்டவனும், வியக்கத் தக்க செயல்களைச் செய்யும் திறன் படைத்தவனுமான ராவணனின் தோற்றம் காமம், பெருமிதம், தீய எண்ணங்கள் ஆகியவை சேர்ந்த கலவையாக இருந்தது. நீண்டும் வளைந்தும் இருந்த அவன் கண்கள் சிவந்திருந்தன.

மன்மதனைப் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த ராவணன் புதிதாகச் சலவை செய்யப்பட்ட, பால் போன்று வெண்மையாயிருந்த அங்கவஸ்திரத்தைத் தன் மீது போட்டுக் கொண்டிருந்தான். 

தோள் மீது பாதி தொங்கிக் கொண்டிருந்த அந்த அங்கவஸ்திரத்தை அவன் தன் கையினால் அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

அடர்த்தியான இலைகளும், மலர்களும் நிறைந்த மரத்தின் பின் மறைந்து நின்று கொண்டு ஹனுமான் ராவணனை அருகிலிருந்து கவனமாகப் பார்த்தார்.

அங்கிருந்தபடியே அவர்,  இளமையும் அழகும் நிறைந்த ராவணனின் மனைவிமார்களைப் பார்த்தார். 

அந்த அழகான பெண்கள் பின்தொடர, ராவணன் அந்த அரண்மனையின் உள்ளிருந்த தோட்டத்துக்குள் நுழைந்தான்.

கூர்மையான காதுகளுடனும், அபூர்வமான பல்வகை ஆபரணங்களை அணிந்தும், அமைதியில்லாத தோற்றத்துடனும் இருந்த விஸ்ரவஸின் புதல்வனான அந்த சக்தி வாய்ந்த அரக்கர் தலைவன், அந்தப் பெண்களுடன் சூழ்ந்திருந்த நிலையில், நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போல் காட்சியளித்தான். 

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட ஒளி எல்லாப் பக்கங்களிலும் வீசிக் கொண்டிருந்ததை ஹனுமான் பார்த்தார்.

"நகரின் மையத்திலிருந்த அரண்மனையில், சற்று முன்பு, அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானே அவன்தான் இவன்!" என்று உறுதி செய்து கொண்ட மகிழ்ச்சியால் துள்ளினார் ஹனுமான்.

சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், ஹனுமானுக்கு ராவணனின் வலிமையையும், கம்பீரத்தையும் கண்டு சற்று பிரமிப்பு ஏற்பட்டது. 

அவன் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று தன்னை மரத்தின் பின்னால் இன்னும் நன்றாக மறைத்துக் கொண்டார் அவர்.

கொடியிடையும் பரந்த மார்பும் கொண்ட சீதையைப் பார்க்கும் ஆவலில் ராவணன் அவர் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினான்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 19 - சீதையின் தவக்கோலம்
இளமையும் அழகும் பொருந்திய ராவணன் உடல் முழுவதும் ஆபரணங்களை  அணிந்து நடந்து வருவதைத் தொலைவிலிருந்து பார்த்த சீதை, பெருங்காற்றில் ஆடும் வாழைமரத்தைப் போல் நடுங்கினார்.

வயிற்றையும் மார்பையும் தன் கைகளாலும் கால்களாலும் மறைத்தபடி குத்திட்டு அமர்ந்திருந்த சீதையைப் பத்து தலைகள் கொண்ட அழகிய ராவணன் பார்த்தான்.

அரக்கிகளால் சூழப்பட்டிருந்த சீதை துயரத்தால் சோர்ந்து போய், கண்ணீருடன் தரையில் அமர்ந்திருந்தார். அவரது தோற்றம் மோதி உடைந்த கப்பலையும், கீழே சாய்ந்து விட்ட மரத்தையும் ஒத்திருந்தது..கடுமையான விரதங்களை மேற்கொண்டிருந்த அவர் பல்வகை ஆபரணங்களை அணியத் தகுந்தவராயினும், உடலில் எந்த ஒரு ஆபரணமும் இல்லாமல் இருந்தார். அவர் மீது படிந்திருந்த தூசி மட்டும்தான் அவருக்கு ஒரே ஆபரணமாகத் தோற்றமளித்தது.

அந்த நிலையில், சேறு படிந்த தாமரைத்தண்டு ஒரே நேரத்தில் (தன் இயல்பினால்) அழகாகவும், (சேறு படித்ததால்) அழுக்காகவும்  தோன்றுவது போல் அவர் காணப்பட்டார்.

சீதை, தன் மனதளவில், திடசித்தம் என்ற குதிரை பூட்டப்பட்ட தேரில் ஏறி, எல்லாம் அறிந்தவரும், சக்தி வாய்ந்தவருமான ராமனை நோக்கிப்  பயணம் செய்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தார்.

உடல் தொய்வடைந்து, அழுது கொண்டிருந்த சீதை துயரில் மூழ்கி இருப்பது மட்டுமே தன் பணி  என்பது போல் இருந்தார். ராமரின் நினைவிலேயே எப்போதும் இருந்த அந்த உயர்ந்த பெண்மணி தன் துயரின் எல்லையை இன்னும் கண்டறியவில்லை.

பாம்புகளின் அரசனான நாகராஜன் மந்திரத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு அழுத்தப்பட்டது போலவும், ரோகிணி நட்சத்திரம் வால் நட்சத்திரத்தால் தாக்கப்பட்டது போலவும் இருந்தார் அவர்.

ஒரு சிறந்த  குடும்பத்தில் பிறந்து, இன்னொரு சிறந்த குடும்பத்தில் திருமணம் மூலம் இணைந்த சீதை இப்போது ஒரு எளிய, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் போல் காணப்பட்டார்.

அவதூறுகளால் களங்கப்படுத்தப்பட்ட புகழ் போலவும், சிதைக்கப்பட்ட நம்பிக்கை போலவும், தேய்ந்து போன அறிவு போலவும், இடிக்கப்பட்ட வீடு போலவும், மீறப்பட்ட ஆணை போலவும், தீக்கிரையான ஊர் போலவும், சரியான நேரத்தில் செய்யப்படாத வழிபாடு போலவும், வெள்ளம் பாய்ந்த தாமரைக்குளம் போலவும், படைத்தலைவன் இல்லாத சேனை போலவும், மங்கி விட்ட விளக்கு போலவும், வற்றிப்போன நதி போலவும், களங்கப்படுத்தப்பட்ட புனிதமான இடம் போலவும், அணையும் தருவாயில் இருந்த ஒளி போலவும், சந்திர கிரகணம் ஏற்பட்ட இரவு போலவும், யானையின் தும்பிக்கையினால் அடிவரை கலக்கப்பட்டு தன் மலர்களை இழந்து, அங்கிருந்த பறவைகளும் விரட்டப்பட்ட ஒரு ஏரி போலவும் இருந்தார் சீதை.

தன் கணவனைப் பிரிந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட அவர் வற்றிப்போன நதி போல் தோற்றமளித்தார். நீராடாமல் இருந்ததால், அவர் தேய்பிறை போல் மங்கலான தோற்றத்துடன் இருந்தார். 

உயர்குலப் பிறப்பும் அழகிய தோற்றமும் கொண்டவரான அவர் அரண்மனையில் வசிக்க வேண்டியவர்.

மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு சூரியனை நோக்கிச் சாய்ந்திருந்த தாமரைத் தண்டு போல் இருந்தார் அவர். பெண் யானை ஒன்று சிறை பிடிக்கப்பட்டு, அதன் ஜோடியிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டது போன்று இருந்தது அவர் நிலை.

அலங்காரம் ஏதுமின்றி ஒற்றை ஜடையாக அவர் முதுகுப்புறம் தொங்கிய அவர் தலைமுடி அழகாகவே இருந்தது. அது அவரை மழைக் காலத்தின் இறுதியில் பசுமையான இலைகள் கொண்ட மரங்கள் நிறைந்த காட்டைப் போல் தோன்றச் செய்தது.

உண்ணா நோன்பினாலும், துயரினாலும் அவர் உடல் எலும்புக் கூடாக ஆகியிருந்தது. பயம், பசி, துக்கம் இவற்றால் அழுத்தப்பட்டு, எப்போதும் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்துடனே இருந்த அவர் ராவணனின் அழிவுக்காக எப்போதுமே ராமபிரானையும், தன்னுடைய இஷ்டதெய்வத்தையும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

அழகிய புருவங்களும், நீண்டு விரிந்த கண்களும் கொண்டிருந்த அவர் எப்போதும் அழுதுகொண்டும், பயத்தினால் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும், ராமபிரானை மட்டுமே சார்ந்தும் இருந்தார்.

இந்த நிலையில் இருந்த, குறை ஏதும் சொல்ல முடியாத மிதிலை நாட்டு இளவரசியைத் தன் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் ராவணன். அந்த ஆசை இறுதியில் அவனுக்கு அழிவைத்தான் தேடித் தந்தது.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


 சர்க்கம் 20 - தன்னை ஏற்றுக் கொள்ளும்படி 
ராவணன் வற்புறுத்தல்
துயரினாலும், பயத்தினாலும் அழுத்தப்பட்டிருந்த, தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த கற்புக்கரசி சீதையிடம் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தும் வகையில் ராவணன் பேசத் தொடங்கினான்:

"அழகிய பெண்ணே! என்னைப் பார்த்ததுமே பயந்து போய், என் பார்வையில் படக் கூடாது என்பதற்காக உன் மார்பையும் வயிற்றையும்  நீ மூடிக் கொள்வதை கவனித்தேன்.

"அழகிய கண்கள் படைத்தவளே! எல்லா அவயவங்களிலும் அழகு நிரம்பப் பெற்றவளே! உலகம் முழுவதையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! நான் உன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறேன். என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்.

"சீதா! வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்த மனிதர்களோ, ராட்சஸர்களோ வேறு எவருமோ இங்கில்லை. நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! மற்றவர்களுக்குச் சொந்தமான பெண்களைக் கடத்துவதும் அவர்களைக் களங்கப்படுத்துவதும் அரக்கர்கள் வழக்கமாகச் செய்யக் கூடியதுதான். இது எங்கள் பழக்கம்தான் என்றாலும், மன்மதன் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தாலும், நீ என்னை ஏற்றுக் கொண்டாலொழிய நான் உன்னைத் தொடக் கூட மாட்டேன்.

"பெண்ணே! அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. அழகானவளே! என்னை நம்பு. என் மீது உண்மையான அன்பு கொள். வருத்தப்பட்டுக் கொண்டே காலத்தை வீணாக்காதே.

"சிடுக்கான தலைமுடியுடன், அழுக்கான ஆடை அணிந்து, தரையில் படுத்துக் கொண்டு, பட்டினி கிடந்து உன்னை வருத்திக் கொள்வது உனக்கு அழகல்ல.

"மிதிலை நாட்டு இளவரசியே! என்னை ஏற்றுக் கொள். பல்வேறு மாலைகளை அணிந்து கொள். வாசனைப் பொருட்களைப் பயன்படுத்து. உயர்தரமான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து கொள், சிறந்த பானங்களை அருந்து. அருமையான படுக்கைகளையும், இருக்கைகளையும் அனுபவி. பாடல்கள், நாட்டியம், இசைக்கருவிகள் ஆகியவற்றை ரசித்து அனுபவி.

"நிலவு போன்ற முகமும், அழகிய அங்கங்களும் கொண்டவளே! உன் உடலின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் என் கண்கள் அங்கேயே நிலைத்து விடுகின்றன. உன் சோக சிந்தனையை விட்டு விட்டு என் மனைவி ஆகி விடு. என்னுடைய அந்தப்புரத்தில் உள்ள உயர்ந்த பெண்கள் அனைவருக்கும் நீ அரசி ஆகி விடுவாய்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! எல்லா உலகங்களிலிருந்தும் நான் கொண்டு வந்திருக்கும் எல்லா விலையுயர்ந்த பொருட்களும்  உனக்குத்தான். என் சாம்ராஜ்யமும் நானும் கூட உனக்குச் சொந்தமாகி விடுவோம்.

"உலகம் முழுவதையும் ஈர்க்கும் அழகு படைத்தவளே! நான் எல்லா உலகங்களையும் வென்று அவற்றை உன் தந்தை ஜனகருக்கு அர்ப்பணிப்பேன். என்  அருகில் நிற்கும் அளவுக்கு பலம் படைத்த ஒருவர் கூட இந்த உலகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"போர்க்களத்தில் யாராலும் எதிர்த்து நிற்க முடியாத தன்னிகரற்ற என் பராக்கிரமத்தை நினைத்துப் பார். பலமுறை தேவர்களும் அசுரர்களும் தங்கள் படைகளுடன் என்னைப் போரில் எதிர்கொள்ள முடியாமல், என்னிடம் தோற்று, தங்கள் கொடிகள் சாய்க்கப்பட்டு, போர்க்களத்திலிருந்து ஓடிப் போயிருக்கிறார்கள்.

"இப்போதே என்னை ஏற்றுக் கொள், மிகச் சிறந்த ஆபரணங்களும், வேறு பல பரிசுகளும் உனக்குக் கிடைக்கும்.  உன் உடலில் தவழும் ஆபரணங்களால் உன் இயற்கையான அழகு பன்மடங்கு அதிகரிப்பதை என் கண்கள் அவை திருப்தி அடையும் வரை கண்டு மகிழட்டும்.

"அழகு முகத்தவளே! சாதுவானவளே! நன்றாக அலங்கரித்துக் கொள். நல்ல உணவையும், பானங்களையும் அருந்து. உனக்குப் பிடித்தவர்களுக்கு நிலங்களையும், பொருட்களையும் வாரி வழங்கு. என் நல்ல நோக்கத்தில் நம்பிக்கை வைத்து  மகிழ்ச்சியாக இரு. உனக்கு என்ன வேண்டும் என்று ஆணையிட்டு. உன் உறவினர்கள் உன் மூலம் மகிழ்ச்சியடைந்து, என் மாட்சிமையைப் புரிந்து கொள்ளட்டும்.

"ஒளி பொருந்தியவளே! என் பெருமையையும், செல்வத்தையும், புகழையும் பார். அழகு மிகுந்தவளே! மரவுரி உடுத்திக் கொண்டிருக்கும் ராமனை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?.

"ராமனின் வெற்றிகள், செல்வங்கள் ஆகியவை பழங்கதையாகி விட்டன. அவன் காட்டில் திரிந்து கொண்டு விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது.

"விதேஹ நாட்டு இளவரசியே! மழைக்காலத்தில் ஆகாயம் மேகங்களால் மூடப்பட்டு அவற்றுக்குக் கீழே கொக்குகள் பறந்து கொண்டிருக்கும்போது ஆகாயம் கண்ணுக்குப் புலப்படாது. அதுபோல் ராமனால் இனி உன்னைக் காணவே முடியாது. இந்திரன் கையில் மாட்டிக் கொண்ட தன் மனைவியை ஹிரண்யகசிபுவால் எப்படித் திரும்பப் பெற முடியவில்லையோ, அது போல் ராமனாலும் உன்னை என்னிடமிருந்து மீட்க முடியாது.

"பயந்த சுபாவம் கொண்டவளே! மனதைக் கவரும் புன்னகையும், அழகிய கண்களும் பற்களும் உடையவளே! எவரையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! கருடன் பாம்பைக் கொத்திக் கொண்டு போவது போல் நீ என் மனதைக் கொத்திக் கொண்டு போய் விட்டாய்.

"நீ அழுக்கான ஆடை அணிந்திருந்தாலும், அலங்காரம் ஏதும் இல்லாமல் இருந்தாலும், குச்சி போல் மெலிந்திருந்தாலும், உன்னைப் பார்த்த பிறகு, எனக்கு என் மற்ற எல்லா மனைவிகளிடமும் இருந்த ஆசை போய் விட்டது.

"என் அந்தப்புரத்தில் எல்லா விதத்திலும் மேன்மையான பல பெண்கள் இருக்கிறார்கள். ஜனகரின் மகளே! அவர்கள் மத்தியில் நீ ஒரு ராணியாக இருக்கலாம்.

"அழகிய கூந்தலை உடையவளே! என் மனைவிகள் மூவுலகிலும் சிறந்த அழகிகள் என்று புகழ் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும், மகாலஷ்மிக்கு அப்சரஸ்கள் சேவை செய்வது போல், உனக்குச் சேவை செய்வார்கள்.

"அழகிய புருவமும், அழகிய உருவமும் கொண்டவளே! என்னை ஏற்றுக் கொண்டு, குபேரனிடம் இருக்கும் எல்லாச் செல்வங்களையும், நகைகளையும், நிலங்களையும் ஏற்றுக் கொள்.

"பெண்ணே! அதிகாரத்திலோ, புகழிலோ, செல்வத்திலோ ராமன் எனக்கு இணையாக மாட்டான். விரதங்களை அனுஷ்டிப்பதிலோ, பலத்திலோ, வீரத்திலோ கூட அவன் எனக்கு இணையாக மாட்டான்.

"உயர்குலப் பெண்ணே! உனக்கு வேண்டிய அளவுக்கு நிலங்களையும், நகைகளையும் நான் கொடுக்கிறேன். நீ விரும்பியது எதையும் அனுபவிக்கலாம். என்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். உன்னுடைய உறவினர்கள் கூட அவர்கள் விரும்பும் எதையும் அனுபவிக்கலாம்.

"பயந்த சுபாவம் உடையவளே! உடல் முழுவதும் பவளங்கள் பதித்த தங்க நகைகளை அணிந்து, கடற்கரையில் உள்ள மரங்கள் அடர்ந்த சோலையில், வண்டுகளின் ரீங்காரத்துடன் கூடிய பூத்துக் குலுங்கும் மரங்களின் அருகில் இருந்தபடி என்னுடன் சேர்ந்து நீ வாழ்க்கையை அனுபவிக்கலாம்."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 21 - ராவணனின் கோரிக்கையை
நிராகரித்தார் சீதை
அரக்கர்கோனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு சீதை துக்கமும், பயமும் கொண்டார். அவனுக்கு புத்தி சொல்லும் விதத்தில் மெல்லிய, நடுங்கிய குரலில் பேசத் தொடங்கினார்.

பேரழகு படைத்தவரும், கற்புக்கரசியும், தன் கணவனிடம் உறுதியான அன்பு கொண்டவரும், எப்போதும் கணவனையே நினைத்தபடி துறவு நிலையில் வாழ்ந்து வந்தவரும், துயரத்தினால் விளைந்த கண்ணீருடனேயே எப்போதும் காணப்பட்டவருமான சீதை மனதுக்குள் பயம் நிறைந்திருந்தாலும், முகத்தில் புன்னகையுடன், கற்புடைய பெண்ணான தான் இன்னொரு ஆடவனுடன் நேரடியாகப் பேசக் கூடாது என்பதைக் காட்டும் விதத்தில் ஒரு புல்லைப் பிடுங்கித் தனக்கும் ராவணனுக்கும் இடையே போட்டு விட்டு, அவனிடம் பேசத் தொடங்கினார்.

"உன் மனதை என்னிடமிருந்து விலக்கிக் கொள். உன் ஆசையை உன்னைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் வை. பாவம் செய்தவன் எப்படி மோட்சத்தை வேண்ட முடியாதோ அது போல், இது போன்ற கோரிக்கையை நீ என்னிடம் வைக்க முடியாது. உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட என்னால்  கற்புடைய பெண்கள் செய்யக் கூடாத இந்த இழிவான செயலை ஒருபோதும் ஏற்க முடியாது."

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, விதேஹ நாட்டு இளவரசியான சீதை ராவணனை அலட்சியம் செய்யும் விதத்தில் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டு, அவனுக்கு ஒரு விரிவான அறிவுரை வழங்கினார்.

"இன்னொருவரின் மனைவியான, கற்பு நிலையிலிருந்து வழுவாத என்னிடம் நீ இவ்வாறு பேசுவது முறையற்றது. நான் உன் மனைவியாக ஆவது என்பது நடக்க முடியாத விஷயம். நல்லோர்களால் வரையறுக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி நடந்து கொள்.

"இரவில் திரியும் அரக்கனே! உன் மனைவிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ, அவ்வாறேதான் மற்றவர்களின் மனைவிகளும். உனக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆகையால், உனக்கு ஏற்கெனவே உள்ள மனைவிகளுடன் திருப்தி அடை.

"ஒருவன் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாதவனாக, தனக்கு ஏற்கெனவே இருக்கும் மனைவிகள் போதாதென்று மற்றவர்களின் மனைவிகளை நாடிச் சென்றால், அந்தப் பெண்களே அவன் அழிவுக்குக் காரணமாக அமைவார்கள். 

"நல்லொழுக்கத்தைப் பற்றி உனக்கு எடுத்துச் சொல்லக் கூடிய பெரியோர்கள் யாருமே இல்லையா அல்லது ஒழுக்க நெறிகளை நீ தெரிந்தே மீறுகிறாயா? உன் நடத்தை நல்லோர்களின் நடத்தைக்கு முரணாக இருக்கிறது.

"தீய செயல்களைப் புரிவதென்று கங்கணம் கட்டிக் கொண்டவனாக, தீய செயல்கள் விளைவிக்கும் அழிவை உணர்ந்த பெரியோர்களின் அறிவுரையை மதிக்காமல் நடந்து கொள்ளும் நீ அரக்கர் குலத்தின் அழிவுக்குக் காரணமாக அமையப் போகிறாய்.

"தவறான செயல்களில் ஈடுபடும் முட்டாள்களான அரசர்களால் ஆளப்பட்டால், வளம் கொழிக்கும் நாடுகளும், செல்வச் செழிப்புடன் விளங்கும் நகரங்களும் கூட அடியோடு அழிந்து போகும்.

"பாவச் செயல்களைப் புரியும் உன் கையில் சிக்கிக் கொண்டிருக்கும் செல்வம் கொழிக்கும் நாடான இலங்கை கூட அழிந்துதான் போகப் போகிறது.

"ராவணா! தாங்கள் செய்யும் தீய செயல்களின் ஆபத்தான விளைவுகளை உணராமல் பாவச் செயல்களைப் புரிபவர்களின் அழிவு எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

"நீ அழிந்து போனபின், உன்னுடைய குடிமக்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக் கொண்டு "பாவச் செயல்களில் ஈடுபட்ட இவன் கடவுளின் செயலினால் அழிவைச் சந்தித்தான்" என்று சொல்வார்கள்.

"செல்வம், அரசி என்ற அந்தஸ்து போன்றவற்றால் நான் செல்லும் நேர்மையான பாதையிலிருந்து என்னைத் திருப்ப முடியாது. 

"சூரியனின் கிரணங்களை சூரியனிடமிருந்து பிரிக்க முடியாதது போல் என்னையும் ராமரிடமிருந்து பிரிக்க முடியாது.

"உலகம் முழுவதும் போற்றும் ராமரின் கைகளில் சாய்ந்திருந்த என்னால் எப்படி இன்னொருவரிடம் பாதுகாப்பைத் தேட முடியும்? 

"தன்னை அறிந்தவரும், கடுமையான விரதங்களை மேற்கொண்டவருமான ஒரு துறவியிடம் ஞானம் இருப்பது எப்படிப் பொருத்தமாக இருக்குமோ, அதுபோல் ராமருக்குப் பொருத்தமாக இருப்பவள் நான்.

"ஆண் யானையிடம் செல்ல முடியாமல் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள பெண் யானை போல் வருந்திக் கொண்டிருக்கும் என்னை ராமரிடம் சேர அனுமதிப்பதுதான் உனக்கு நல்லது. 

"அந்த ராமர் மனிதர்களுக்குள் உயர்ந்தவர். தர்மம் எது என்பதை அறிந்தவர். தன்னை அடைக்கலம் புகுந்தவர்களிடம் கருணை காட்டக் கூடியவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"நீ உயிருடன் இருக்க விரும்பினால், நீ அவருடைய நட்பை நாட வேண்டும். தன்னிடம் சரண் புகுந்தவர்களின் மீது அன்பு காட்டும் அவரிடம் சென்று அவரைத் திருப்தி செய்.

"நீ மரணத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், நீ உயிர் வாழ விரும்பினால், நீ உனக்கும் நன்மை செய்து கொண்டு அவருக்கும் நன்மை செய்ய ஒரு வழிதான் இருக்கிறது. 

"உன் காம சிந்தனையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இப்போதே என்னை அவரிடம் கொண்டு சேர்த்து விடு. இப்படிச் செய்வதாக உறுதி செய்து கொள்.

"ராவணா! நீ என்னை ராமரிடம் அழைத்துச் சென்று அவரை மகிழ்ச்சி அடையச் செய்தால்தான் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வேறு விதமாகச் செயல்பட்டால், நீ அழிந்து போவது உறுதி.

"இடியைக் கூட விழாமல் நிறுத்தி வைக்கலாம். யமன் கூட நீண்ட காலம் உன்னிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால் இந்த உலகத்துக்கு அரசரான ராமர் கோபம் கொண்டால், உன் போன்றவர்களால் தப்பிக்க முடியாது.

"இந்திரனின் வஜ்ராயுதம் போல் இடி முழக்கம் செய்யும் ராமரின் வில்லின் ஓசையை நீ விரைவில் கேட்பாய். விஷ நாகங்களைப் போல் வீரியம் படைத்த, கூர்மையும், வேகமும் கொண்ட அம்புகள் உன்னை விரைவிலேயே வந்து தாக்கும்.

"இந்த நகரம் முழுவதும் ராமரின் அம்புகளாலும் இறக்கை முளைத்த ஈட்டிகளாலும் வீழ்த்தப்பட்ட அரக்கர்களின் பிணங்களால் நிரப்பப்படப் போகிறது. 

"மூன்று அடிகள் வைத்து இந்த உலகத்தையும் அதன் செல்வங்களையும் மகாவிஷ்ணு மீட்டது போல், ராமர் என்னை உன்னிடமிருந்து மீட்கப் போகிறார்.

"அரக்கனே! ஜனஸ்தானத்தில் அரக்கர் சேனை அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்க முடியாத நீ இந்த இழிய செயலைச் செய்திருக்கிறாய்.

"கீழ்த்தரமான சிந்தனை கொண்டவனே! இரு வீர சகோதரர்களும் எங்கள் ஆசிரமத்திலிருந்து சற்று தூரம் சென்றிருந்த சமயம், யாருமே இல்லாதபோதுதானே, திருட்டுத்தனமாக என்னைக் கடத்தினாய் நீ!

"இரண்டு புலிகள் மோப்பம் பிடிக்கும் தூரத்தில் ஒரு நாய் எப்படி நிற்க முடியாதோ, அதுபோல் உன்னால் ராமரையும், லக்ஷ்மணரையும் எதிர்த்து நிற்க முடியாது.

"ஒரு கை வெட்டப்பட்ட விருத்தாசுரன் போரில் இரு கரங்கள் கொண்ட இந்திரன் முன் எப்படி நிற்க முடியவில்லையோ, அதுபோல் உன்னால் ராமர், லக்ஷ்மணர்களுக்கு எதிரே நிற்க முடியாது.

"நீ வெற்றி பெறுவது என்பது நடக்க முடியாத விஷயம். விரைவிலேயே நீ ராமருடனும் லக்ஷ்மணருடனும் போரிடும்போது, ஒரு சிறிய குளத்தில் உள்ள நீரை சூரியன் தன் வெப்பத்தால் உறிஞ்சுவது போல், என் கணவர் ராமர், தன் அம்புகளால் உன் உயிரை எடுத்து விடுவார்.

"குபேரனின் மலை வாசஸ்தலத்திலோ, வருணனின் மாளிகையிலோ, இந்திரனின் சபையிலோ நீ அடைக்கலம் புகலாம். 

ஆனால், ஒரு வயது முதிர்ந்த மரம் மின்னலிலிருந்து எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதோ, அதுபோல், ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ள நீ தசரத குமாரனிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 22 - ராவணன் விதித்த இறுதிக்கெடு
ராவணனுக்குச் சரியான வழியைக் காட்டும் விதத்தில் அமைந்த சீதையின் பேச்சைக் கேட்டபின், அரக்கர் தலைவன் இவ்வாறு பதில் கூறினான்:

"ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எந்த அளவுக்குச் சமாதானமாகப் போக முயல்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனது மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்துகிறாள். 

"எந்த அளவுக்கு அவளை அவன் புகழ்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனுடைய வேண்டுகோளை நிராகரிக்கிறாள்.

"தறி கெட்டு ஓடும் குதிரைகளை ஓரு தேரோட்டி கட்டுப்படுத்துவது போல், உன் மீது எனக்கிருக்கும் காதல் என் கோபத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

"ஒரு ஆணின் உணர்வுகள் இவ்விதமாக மென்மைப்படுத்தப்படுகின்றன. ஏனெனில், ஒரு பெண் மீது ஒரு ஆணுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும்போது, அது உடனே அவள் மீதான காதலைத் தூண்டுகிறது.

"அழகான பெண்ணே! அதனால்தான், எளிமையானவன் போல் வேஷம் போடும் ராமனிடம் உறுதியான அன்பு கொண்டு என்னை அவமதிக்கும் உன்னை நான் சும்மா விடுகிறேன்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நீ என்னிடம் பேசிய ஒவ்வொரு கொடிய சொல்லுக்கும் உன்னை நான் கொன்றிருக்க வேண்டும்."

இந்த வார்த்தைகளைப் பேசிய பின் ராவணனின் கோபம் கிளர்ந்தெழுந்து. தொடர்ந்து பேசினான்.

"அழகான பெண்ணே! நான் உனக்கு விதித்திருந்த கெடு முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள், என் மனைவியாவதென்று முடிவெடுத்து விடு. 

"இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீ என்னை உன் கணவனாக ஏற்றுக் கொள்ளாவிட்டால், என் சமையற்காரர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டி, எனக்குக் காலை உணவு சமைத்து விடுவார்கள்."

ராவணனின் இந்தக் கொடிய சொற்களைக் கேட்டு ஜனகரின் மகள் பீதியடைந்ததைக் கண்டு அங்கிருந்த தேவர் குல, கந்தர்வ குலப் பெண்கள் மிகவும் வருத்தமடைந்தனர். 

சிலர் தங்கள் உதடுகளை அசைத்தும், சிலர் தங்கள் முகபாவங்களாலும், இன்னும் சிலர் தங்கள் கண்களை அசைத்தும் ராவணனின் அச்சுறுத்தலால் மிரண்டு போயிருந்த சீதைக்கு ஆறுதல் சொல்ல முயன்றனர்.

அவர்களின் இந்தச் செயல்களினால் சற்றே தேறுதல் அடைந்த சீதை அரக்கர் குலத் தலைவனான ராவணனிடம் கற்பின் மேன்மை பற்றிப் பேசத் துவங்கினார்.

"உன் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாரும் இங்கு இல்லை. அதனால்தான் நீ செல்லும் அழிவுப் பாதையிலிருந்து உன்னை யாரும் தடுக்க முயலவில்லை. 

"இந்திரனை மணந்த சசி போல், அற வழி நடக்கும் ராமபிரானை மணந்திருக்கும் என்னை மனைவியாக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்த மூவுலகிலும் உன்னைத் தவிர வேறு யார் ஆசைப்படுவார்கள்?

"கீழ்மை குணம் கொண்ட அரக்கனே! நிகரற்ற சக்திகள் கொண்ட ராமனின் மனைவியிடம் இது போன்ற அக்கிரமமான யோசனைகளைச் சொல்லி விட்டு, இங்கிருந்து ஓடினாலும், எங்கே உனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய்?

"ராமனுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு ஒரு முயலுக்கும், பள்ளத்தில் விழுந்திருக்கும் யானைக்கும் உள்ள வேறுபாடுதான். தீயவனே! அவருக்கு முன் நீ ஒரு முயல்தான்!

"இக்ஷ்வாகு குலத் தலைவனான ராமனை இவ்வாறு அவமானப்படுத்தி விட்டு, துவக்கத்திலிருந்தே சற்றும் வெட்கமில்லாமல் நீ மறைந்து கொண்டிருக்கிறாய். அவர் கண் முன்னால் வரும் துணிவு உனக்கு இல்லை.

"கொடியவனே! என் மீது பார்வையைச் செலுத்திய உன்னுடைய கொடிய, அருவருப்பான, கருமஞ்சள் நிறக் கண்கள் அவை இருக்கும் கூடுகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஏன் இன்னும் தரையில் விழவில்லை?

"பாவங்களைச் செய்பவனே! அறவழியில் நடப்பவரான ராமரின் மனைவியும், பெருமை வாய்ந்த தசரதரின் மருமகளுமான என்னிடம் இதுபோல் பேசிய உன் நாக்கு ஏன் இன்னும் அறுந்து விழவில்லை?

"பத்துத்தலை அரக்கனே! நீ எரிந்து சாம்பலாக வேண்டியவன். என் கற்பின் வலிமையால் என்னால் இதை நிகழச் செய்ய முடியும். 

"ஆனால் அப்படிச் செய்வதற்கு ராமரிடமிருந்து நான் அனுமதி பெறவில்லை என்பதாலும், என் செயல்கள் நான் பின்பற்றும் தர்மத்தை ஒட்டியவை என்பதாலும், என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

"எல்லாவிதத்திலும் ராமருக்குச் சொந்தமான என்னைக் கடத்துவது என்பது சாதாரணமாக நடக்க முடியாத விஷயம். உனக்கு அழிவைத் தேடித் தர வேண்டும் என்பதற்காக விதி இதை நடக்கும்படி செய்திருக்கிறது! 

"ராமரைச் சற்று நேரம் அப்புறப்படுத்தி விட்டு அவரது மனைவியை வஞ்சகமாக அவரிடமிருந்து பிரித்ததுதான் குபேரனின் சகோதரன் என்றும், பெரும் சேனைகளைக் கொண்டவன் என்றும், வீரம் மிகுந்தவன் என்றும் பெருமைப்பட்டுக் கொள்ளும் நீ செய்த வீரச்செயல்!"

காதில் ஈயத்தைப் பாய்ச்சியது போன்ற சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அரக்கர் தலைவன் தன் சிவந்த, உருளும் விழிகளை சீதையின் மீது நிலைநிறுத்தினான்.

ஒரு கருத்த மேகம் போல் இருந்தது அவன் தோற்றம். அவனது வலிமையான கரங்களும் கழுத்தும் அவனுக்கு ஒரு சிங்கத்தின் வலிமையையும், வேகமாகப்பாய்ந்து செல்லும் இயல்பையும் கொடுத்தன. 

அவன் உதடுகளும், கண்களின் ஓரங்களும் தீப்பிழம்புகள் போல் சிவந்திருந்தன. அவன் தலைக்கு மேல் இருந்த பரிவட்டம் உணர்ச்சி மிகுதியால் ஆடிக் கொண்டிருந்தது.

அவன் அலங்கார மாலைகள் அணிந்து, உடலில் வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டிருந்தான். அவன் உடைகளும், மாலைகளும் சிவப்பு நிறத்தில் இருந்தன. 

இடுப்பில் நீலக் கற்கள் பதித்த பட்டை அணிந்தபடி அவன் நின்ற தோற்றம், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடைந்த மந்தர மலையைப் போல் இருந்தது. அவனுடைய இரு கரங்களும், அந்த மலையின் சிகரங்கள் போல் தோற்றமளித்தன.

சூரிய ஒளி போல் மின்னிய அவன் இரு தோடுகளும் இருபுறமும் மலர்கள் பூத்துக் குலுங்கும் அசோக மரங்களைக் கொண்ட மலை போன்ற தோற்றத்தை அவனுக்கு அளித்தன. 

விரும்பிய வரங்களை அளிக்கும் கற்பக மரம் போலவும், வசந்த காலம் உருவெடுத்து வந்தது போலவும் அவன் காட்சியளித்தான்.

அவன் தோற்றம் மயானபூமியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் போலவும் இருந்தது. அவன் செய்து கொண்டிருந்த அலங்காரங்களையும் மீறி, கோரமான தோற்றத்துடன் காணப்பட்ட ராவணன், கோபத்தினால் சிவந்த கண்களுடனும், பாம்பு போல் சீறிக்கொண்டும் சீதையிடம் சொன்னான்:

"வெறுக்கத்தக்க பெண்ணே! நீ இன்னும் அந்த ஒழுக்கமற்ற பிச்சைக்காரனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய். இரவின் முடிவில் வரும் சந்தியாகாலத்தை சூரியன் அழிப்பது போல், உன்னை நான் இப்போதே அழிக்கப் போகிறேன்."

சீதையிடம் இவ்வாறு கோபமாகப் பேசிய பின் ராவணன் சீதையைக் காவல் காக்கும் பெண்களிடம் திரும்பினான். அவர்களில் சிலர் ஒரு கண் மட்டுமே உள்ளவர்கள், 

சிலர் ஒரு காது மட்டுமே உள்ளவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள், சிலர் மாட்டுக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள். சிலர் யானைக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள், சிலர் தொங்கும் காதுகளைக் கொண்டவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள்.

சிலர் யானை போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் குதிரைக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் மாட்டுக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள். 

சிலர் பின்னல் போன்று முறுக்கிக் கொண்ட கால்களைக் கொண்டவர்கள், சிலர் ஒரு கால் மட்டுமே உள்ளவர்கள், சிலர் பெரிய கால்களும், கழுத்தும் கொண்டவர்கள், சிலர் காலே இல்லாதவர்கள்.

சிலரது கண்கள் ஒரு பக்கமாக அமைந்திருந்தன. சிலர் துருத்திய மார்பகங்களும், சிலர் துருத்திய வயிறும் கொண்டவர்கள். சிலர் பெரிய கண்களும், பெரிய வாயும் கொண்டவர்கள். சிலர் பெரிய நாக்கு உள்ளவர்கள். சிலர் மூக்கு, நாக்கு இரண்டும் இல்லாதவர்கள்.

சிலர் சிங்க முகத்துடனும், சிலர் மாட்டு முகத்துடனும், சிலர் பன்றி முகத்துடனும் இருந்தனர். எல்லாவித குரூரத் தோற்றம் கொண்டவர்களும் அங்கே இருந்தனர்.

அவர்களைப் பார்த்து ராவணன் சொன்னான்:

"அரக்கிகளே! ஜனகரின் மகளான இந்த சீதை என் விருப்பத்துக்கு இணங்கும் விதத்தில் நீங்கள் செயல்பட வேண்டும். இதற்காக நீங்கள் நைச்சியமாகவோ, கொடுமையாகவோ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். அவளுக்கு நீங்கள் பரிசுகள் அளித்தோ அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தியோ செயல்படலாம்."

அரக்கிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்ட பின், காமத்தினாலும், கோபத்தினாலும் தன்னையே மறந்து விட்ட ராவணன் சீதையைப் பலமுறை திரும்பிப் பார்த்துத் தன் கடுமையான முகபாவத்தின் மூலம் அவளை பயமுறுத்தினான்.

அப்போது தான்யமாலினி என்ற அரக்கி வேகமாக ஒடி வந்து, பத்து தலைகள் கொண்ட அந்த ராவணனைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவனிடம் சொன்னாள்.

"ஓ! அரக்கர் குல அரசனே! இந்த மந்தமான, வெறுக்கத்தக்க பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? நீ என்னுடன் இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கலாம்! அரசே! உன் தோள்வலியால் நீ அடைந்திருக்கும் உயர்ந்த, நல்ல விஷயங்களை இந்தப் பெண் அனுபவிக்க வேண்டும் என்பது பிரம்மாவின் விருப்பம் இல்லை போலும்!

"தன்னை விரும்பாத பெண்ணைப் பின்தொடர்ந்து போகிறவனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து விடும். உன்னிடம் ஆசை உள்ள பெண்ணால்தான் உன் காதலை ஏற்று, அன்பு செய்து உனக்கு முழுத் திருப்தி அளிக்க முடியும்."

இவ்வாறு சொல்லி, அந்த அரக்கியால் இழுத்துச் செல்லப்பட்ட மேகம் போன்ற கருத்த நிறமுடைய, சக்தி வாய்ந்த அந்த அரக்கர் தலைவன் சிரித்துக் கொண்டே சீதையை விட்டு அகன்றான்.

சூரியன் போன்ற ஒளி பொருந்திய, பத்து தலைகள் கொண்ட அந்த அரசன் பூமி அதிரும் வண்ணம் நடந்து தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனைச் சூழ்ந்தபடி தேவர், கந்தர்வர், நாகர் குலப் பெண்கள் அவனுடன் அரண்மனைக்குள் நுழைந்தனர்.

காமம் நிறைந்த ராவணன் சீதை பயந்திருந்தாலும், தர்மத்தின் வழியிலிருந்து விலகி அவனுக்குக் கட்டுப்பட மறுத்து விட்டாள் என்பதை உணர்ந்தவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 23 - அரக்கிகள் சீதையை வற்புறுத்துதல்
 அரக்கிகளுக்கு இவ்விதமாக உத்தரவு பிறப்பித்து விட்டு, எதிரிகளை நடுங்கச் செய்பவனான ராவணன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனின் தலை மறைந்ததும், கோர உருவம் கொண்ட அரக்கிகள் மொத்தமாக சீதையைச் சூழ்ந்து கொண்டனர். கோபத்தில் தங்களையே மறந்தவர்களாக, அவர்கள் சீதையை பயமுறுத்துவது போல் பார்த்து, அவரை மிரட்டும் விதமாகப் பேசத் துவங்கினர்.

"ஓ, சீதையே! புலஸ்தியர் வம்சத்தைச் சேர்ந்தவனான பத்து தலை ராவணனின் மனைவி ஆவது எத்தகைய கௌரவம் என்பதை நீ உணரவில்லையா?"

கோபத்தினால் கண்கள் சிவந்த ஏகஜடா என்ற அரக்கி அழகிய சீதையைப் பார்த்து இவ்வாறு கூறினாள்:

"புகழ் பெற்ற புலஸ்தியர் பிரம்மாவின் மனதிலிருந்து உதித்தவர். ஆறு பிரஜாபதிகளில் நான்காமவர் அவர்.

"கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்தவரான விஸ்ரவஸ் புலஸ்தியரின் மனதிலிருந்து உதித்தவர். சக்தியில் அவர் பிரம்மாவுக்கு நிகரானவர்.

"எதிரிகளைக் கலங்க வைக்கும் ராவணன் அந்த விஸ்ரவஸின் புதல்வன்.
அரக்கர் குல அரசனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்.

"அழகானவளே! நீ என் பேச்சைக் கேட்கப் போகிறாயா, இல்லையா?"

அதற்குப் பிறகு, ஹரிஜடா என்ற அரக்கி, பூனை போன்ற தன் கண்களைக் கோபமாக உருட்டியபடி இவ்வாறு கூறினாள்:

"முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களுடைய அரசனையும் வென்ற அரக்கர் தலைவனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்."

ப்ரகஷா என்ற அரக்கி கோபத்துடன் படபடவென்று பேசினாள்: 

"வீரத்துக்கும், பலத்துக்கும் பெயர் பெற்றவனும், போரில் புறமுதுகு காட்டாதவனுமான மாவீரனின் மனைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?

"வல்லமை படைத்த ராவணன் தன்னிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் மனைவியை விட அதிகமாக உன்னை கௌரவித்து உனக்கு எல்லா நன்மைகளும் செய்வான். உன்னிடம் வருவதற்காக, ஆயிரக்கணக்கான பெண்களால் நிரம்பியிருக்கும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட தன் அந்தப்புரத்தை விட்டு விட்டு, நீ இருக்கும் இடத்துக்கு வருவான்.

விகடை என்ற அரக்கி கூறினாள்: "உன்னை விரும்பி வந்தவன் போரில் நாகர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், தேவர்கள் ஆகியோரை வென்றவன். கீழ்மையானவளே! அரக்கர்களின் அரசனும், எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான ராவணனின் மனைவியாக ஆக விரும்புகிறாயா என்று இப்போதாவது சொல்."

பிறகு, துர்முகி என்ற அரக்கி பேசினாள்: "அழகிய கண்களை உடையவளே! எவனைக் கண்டு சூரியன் கூட பயந்து போய்த் தன் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறதோ, காற்று கூடத் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்கிறதோ, அவனுடைய விருப்பத்துக்கு நீ இணங்குவாயா, மாட்டாயா?

"எவனுக்கு பயந்து மரங்கள் பூக்களை உதிர்க்குமோ, மலைகளும் மேகங்களும் நீரைப் பொழியுமோ அந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனான அரக்கர் அரசனின் மனைவியாக ஆக ஒப்புக்கொள்வதாக உன் உறுதியான பதிலைச் சொல்.

"அழகாகச் சிரிக்கும் ஆரணங்கே! உண்மை நிலையை உணர்ந்து, நாங்கள் சொன்ன யோசனையை ஏற்றுக்கொள். இல்லாவிடில், உன் ஆயுள் குறைக்கப்படும்."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 24 - அரக்கிகள் சீதையை மிரட்டுதல்
பிறகு கொடூரமான உருவமும், கொடிய குணமும் கொண்ட சில அரக்கிகள் சீதையின் பக்கத்தில் வந்து நின்று அவரை அச்சுறுத்தும் விதத்தில் பேசத்  துவங்கினர்.

"ஓ, சீதா! மென்மையான படுக்கை விரிப்புகளும், அருமையான இருக்கைகள் போன்ற வசதிகளும் கொண்ட ராவணனின் அந்தப்புரத்தில் வந்து இருக்க நீ ஏன் விரும்பவில்லை? 

"ஒரு மானுடப்  பெண் என்பதால் ராமனின் மனைவியாக நீ இருப்பதுதான் பொருத்தம் என்று நினைக்கிறாய். ஆனால் அது நடக்கப் போவதில்லை. உன் மனதை அவனிடமிருந்து விலக்கிக் கொள்.

"ராவணனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை அனுபவி. ராவணன் மூவுலகுக்கும் வேந்தன். அனுபவிக்கத்தக்க பொருள்களுக்கெல்லாம் எஜமானன்.

"குறைகள் ஏதும் இல்லாத மானிடப் பெண்ணான நீ ராஜ்யத்தை விட்டு விட்டு ஒடிய, நம்பிக்கைகள் சிதைந்த, துயரில் ஆழ்ந்திருக்கும் மனிதனான ராமனை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"

அரக்கிகள் பேச்சைக் கேட்டு தாமரை இதழைப் போன்ற கண்களை உடைய சீதை கண்ணீருடன் கூறினார்:

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து கூறும் பாவம் நிறைந்த, வெறுப்புக்குரிய வார்த்தைகள் என் மனதுக்கு உகந்ததாக இல்லை. ஒரு மானுடப் பெண் ஒரு அரக்கனின் மனைவியாக இருக்க முடியாது. வேண்டுமானால், என்னைத் தின்று விடுங்கள். ஆனால் உங்கள் யோசனையை நான் கேட்கப் போவதில்லை.

"ராமர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, கஷ்டமான நிலையில் இருந்தாலும், அவருக்கு விசுவாசமாக இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். சுவர்ச்சா தேவி எப்போதும் சூரியனுடன் இணைந்திருப்பது போல், நான் ராமருடன் அன்பு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறேன்.

"சசிதேவி இந்திரனுடனும், ரோகிணி சந்திரனுடனும், லோபாமுத்திரை அகஸ்தியருடனும், சுகன்யா ச்யவனருடனும், சாவித்திரி சத்தியவானுடனும், ஸ்ரீமதிதேவி கபிலருடனும், மதயந்தி சுதாஸரின் மகன் கல்மஷபாதருடனும், கேசினி சாகரருடனும், அரசர் பீமரின் மகள் தமயந்தி அரசன் நளனுடனும் இருப்பது போல், இக்ஷ்வாகு குலத்தின் பெருமையாக விளங்கும் என் கணவரான ராமனை நான் எப்போதும் விடமாட்டேன்."

ராவணனால் நியமிக்கப்பட்ட அரக்கிகள் சீதையின் உறுதியான பதிலினால் கோபமடைந்து அவளை அச்சுறுத்தும் வகையில் பேசத் தொடங்கினர்.

சிம்சுபா மரத்தின் மீது அமைதியாக அமர்ந்திருந்த ஹனுமானால்  அங்கிருந்து சீதையையும் அவரை மிரட்டும் அரக்கிகளையும் காண முடிந்தது.

பயந்திருந்த சீதையைப் பார்த்துக் கோபமுற்றிருந்த அரக்கிகள், வெளியே துருத்திக் கொண்டிருந்த தங்கள் காய்ந்த உதடுகளைக் கடித்தபடி பேசினார். கையில் கோடரியை வைத்துக்கொண்டு உரத்த குரலில் "இந்தப்  பெண் ராவணனைக் கணவனாகப் பெறும் அருகதையற்றவள்" என்றனர்.

அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட அழகிய முகம் கொண்ட சீதை, கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிம்சுபா மரத்துக்கு அருகில் சென்றார்.

அரக்கிகளால் சூழப்பட்ட, அகன்ற கண்களுடைய சீதை சோகத்தால் பீடிக்கப்பட்டவராக சிம்சுபா மரத்தின் அடியில் போய்  நின்றார். வாடிய முகத்துடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் இருந்த சீதையைச் சூழ்ந்து கொண்டு அந்த அரக்கிகள் அவரை மேலும் பயமுறுத்தத் தொடங்கினர்.

பெருத்த வயிறும், அச்சுறுத்தும் கண்களும், அருவருப்பான தோற்றமும் கொண்ட வினதா என்ற அரக்கி கோபத்துடன் சீதையிடம் பேசினாள்:

"ஓ, அழகான சீதையே! நீ இதுவரை உன் கணவரிடம் உனக்குள்ள விசுவாசத்தை வெளிக்காட்டி விட்டாய். அதிகமாக வெளிக்காட்டுவது துயரைத்தான் விளைவிக்கும்.

"மிதிலை நாட்டு இளவரசியே! ஒரு மானிடப் பெண்ணுக்கு எது கடமையோ அதை நீ இயன்ற அளவுக்குச் செய்து விட்டாய் என்பதில் எனக்குத் திருப்திதான். நீ.மகிழ்ச்சியாக இரு. உன் நலனை நாடுபவளான நான் சொல்வதைக் கேள்/

"அரக்கர்களின் அரசனும், அழகிய தோற்றம் கொண்டவனும், துணிவுள்ளவனும், அழகில் இந்திரனுடன் போட்டி போடுபவனும், எல்லோரிடமும் தாராளமாக இருப்பவனும், மற்றவர்களுக்கு எது நன்மையோ அதையே பேசுபவனுமான ராவணனை நீ உன் கணவனாக ஏற்றுக் கொள்.

"ஏதும் செய்ய முடியாத அந்த ராமனைக் கைவிட்டு விட்டு ராவணனை ஏற்றுக் கொள். விதேஹ நாட்டு அழகிய இளவரசியே! இன்று முதல் தேவலோகப் பெண்களைப் போல் நீ வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து கொள். அதன் பிறகு சசிதேவி இந்திரனுடனும், சுவாஹா அக்கினியுடனும் வலம் வருவது போல், நீ இந்த உலகுக்கே அரசியாக வலம் வரலாம்.

"விதேஹ நாட்டு இளவரசியே! ஏதும் செய்ய முடியாதவனும், ஆயுள் சீக்கிரமே முடியப் போகிறவனுமான அந்த ராமனைப் பற்றி நினைப்பதால் உனக்கு என்ன நன்மை? நான் சொல்லும் இந்த வார்த்தைகளை நீ ஏற்காவிட்டால், நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்போதே உன்னைத் தின்று விடுவோம்."

அடுத்தபடியாக, தொங்கும் மார்பகங்கள் கொண்ட விகடை என்ற பெண் கோபத்துடன் எழுந்து முஷ்டியை உயர்த்தி, சீதையைப் பார்த்துக் கத்தினாள். 

"ஓ, அறிவில்லாத மிதிலை நாட்டு இளவரசியே! யாராலும் கடக்க முடியாத கடலைக் கடந்து, நீ கொண்டு வரப்பட்டிருக்கிறாய். நீ ராவணனின் வலுவான அந்தப்புரத்தில் வைக்கப்பட்டிருக்கிறாய். போதுமான அளவுக்கு நீ கண்ணீர் விட்டு விட்டாய். இது உனக்கு நல்லதல்ல.

"ஒடுக்கப்பட்டிருப்பது போன்று எப்போதும் காட்சியளிக்கும் நிலையை விட்டு விட்டு, மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள். ஓ, சீதா! அரக்க அரசனுடன் மகிழ்ச்சியாக இரு.

"பயம் மிகுந்தவளே! பெண்களின் இளமை நிலையானதல்ல என்பது உனக்குத் தெரியும். ஆகவே, உன் இளமைக் காலம் முடிவதற்குள், மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொள்.

"அழகிய கண்களை உடையவளே! அரக்க அரசனுடன் சேர்ந்து நீ இந்தப் பூந்தோட்டங்களிலும் அழகிய காடுகளிலும் நடக்கலாம். அழகானவளே! ஏழாயிரம் அழகிய பெண்கள் உனக்குப் பணி விடை செய்யக் காத்திருப்பார்கள்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நல்ல எண்ணத்துடன் நான் சொன்னதை நீ கேட்காவிட்டால், நான் உன் மார்பைப் பிளந்து உன்னைத் தின்று விடுவேன்."

பிறகு கொடூரமான கண்களை உடைய சண்டோதரி என்னும் அரக்கி தன் சூலத்தை நீட்டியபடி பேச ஆரம்பித்தாள். 

"ராவணனால் கடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கி கொண்டிருக்கும் இந்த அழகிய சீதையைப் பார்த்ததும், எனக்கு ஒரு பெரிய ஆசை எழுகிறது. இவள் கல்லீரலையும், மண்ணீரலையும், இவள் மார்பையும், இதயத்தையும், இவள் சிறுகுடலையும், தலையையும் கடித்துத் தின்று விட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை."

இதற்குப் பிறகு பிரகஸை என்ற அரக்கி பேச ஆரம்பித்தாள். 

"நீங்கள் எல்லோரும் ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? இந்த பெண்ணின் கழுத்தை நெரித்து விட்டு அவள் இறந்து விட்டாள் என்று அரசனிடம் சொல்லி விடலாம் அதன் பிறகு நிச்சயமாக அவளைத் தின்று விடும்படி அவர் நமக்கு உத்தரவிடுவார்."

பிறகு, அஜமுகி என்ற அரக்கி பேசினாள். 

"சீக்கிரமே, நாம் அவளைத் துண்டம் துண்டமாக வெட்டி அவள் மாமிசத்தை நமக்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம். நமக்குள் சண்டை வேண்டாம். சீக்கிரமே, போதுமான அளவு மதுவும், அத்துடன் சேர்த்து அருந்த பழச்சாறுகளும்,  தின்பண்டங்களும் கொண்டு வாருங்கள்."

சூர்ப்பனகை என்ற அரக்கி முன்னே வந்து சொன்னாள். 

"அஜமுகி சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சீக்கிரமே போய் மனிதர்களின் கவலைகளை நீக்கும் மதுவைக் கொண்டு வாருங்கள். மனித மாமிசத்தைத் தின்று, மது அருந்திய பின் நாம் கூட்டமாக நடனம் ஆடலாம்.".

அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட தேவதை போன்ற சீதை நம்பிக்கை இழந்து அழ ஆரம்பித்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 25 - சீதையின் துயரம்
கொடுமையான வார்த்தைகளைப் பேசி, அரக்கிகள் சீதையை பயமுறுத்தியபோது, மிதிலை நாட்டு இளவரசியான சீதை மனம் நொந்து கண்ணீர் வடித்தார். 

வெள்ளமாகப் பெருகிய கண்ணீரினால் தன் மார்புகளை நனைத்துக் கொண்டு, வருத்தமான சிந்தனையினால் மனம் கலங்கி, அவர் எல்லையற்ற சோகத்தில் மூழ்கினார்.
அரக்கிகளின் மிரட்டலால் நடுங்கி, முகம் வெளுத்துப் போய், புயலால் சாய்க்கப்பட்ட வாழைமரம் போல் கீழே சாய்ந்தார் சீதை. அவர் உடல் நடுங்கியபோது, ஒற்றைப் பின்னலாக இருந்த அவர் தலைமுடியும் ஒரு பாம்பு போல் ஆடியது
அரக்கிகளின் பேச்சுக்களால் இவ்வாறு நிலைகுலைந்து போயிருந்தாலும், தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்வது என்ற மன உறுதியுடன், கண்களில் நீர் மல்க கம்மிய குரலில் சீதை சொன்னார்.

"ஒரு மானிடப் பெண் ராவணனின் மனைவியாக இருப்பது முறையாகாது. நீங்கள் எல்லோரும் உங்கள் விருப்பப்படி என்னைக் கடித்துத் தின்னலாம். உங்கள் வார்த்தைகளுக்கு நான் இணங்கப் போவதில்லை."

கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் மார்பில் வழிந்த நிலையில், சீதை மேலும் சொன்னார்.

"மனிதர்களின் வாழ்நாள் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பது, அதாவது  ஒருவர் அவருக்கு விதிக்கப்பட்ட நேரத்தில்தான் இறந்து போவார் என்று சொல்லியிருப்பது உண்மைதான். இல்லாவிட்டால், இந்த அரக்கிகளின் கொடிய சொற்களால் காயப்படுத்தப்பட்டு, ராமரிடமிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நான் நான் எப்படி ஒரு கணம் கூட உயிர் வாழ முடியும்?"

ராவணனால் சிறை பிடிக்கப்பட்டு, அரக்கிகளால் இவ்வாறு அச்சுறுத்தப்பட்ட சீதைக்குத் தப்பிக்கும் வழி தெரியவில்லை. தன் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ஓநாய்களால் சூழப்பட்டு, அச்சுறுத்தப்பட்ட மான் குட்டியைப் போல் இருந்த சீதை, அந்தத் துயரைப் பொறுக்க முடியாமல் தனக்குள் சோகத்தினால் மூழ்கினார்.

துயரத்தினால் மனம் உடைந்த சீதை, பூக்கள் மிகுந்த ஒரு அசோக மரத்தின் கிளையைப் பிடித்தபடி, தன் கணவனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்.

அவர் இவ்வாறு பலவிதங்களில் வருந்தினார். 

'ஓ ராமா! ஓ லக்ஷ்மணா! ஓ என் தாய் கௌசல்யா தேவி! ஓ சுமித்ரா தேவி! என்ன செய்வதென்று அறியாத இந்தப் பேதைப் பெண் புயலில் சிக்கிக்கொண்ட கப்பலைப் போல் மூழ்கிக் கொண்டிருக்கிறாள்.

'வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படும் நதியின் கரையைப் போல், ராமரைப் பார்க்காததாலும், அரக்கிகள் காவலில் இருப்பதாலும் விளைந்த துயரத்தினால் நான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

'தாமரை போன்ற கண்களும், சிங்கம் போன்ற நடையும் கொண்டு, எப்போதும் நன்றி உடையவராகவும், மற்றவர்களுக்கு இனிமையானதையும், நன்மை பயப்பதையும் பேசிக் கொண்டிருக்கும் ராமரைக் கண்ணால் கண்டு மகிழும் அதிர்ஷ்டசாலிகள் பலர் இருக்கிறார்கள்.

'உயிரைக் கொல்லும் விஷத்தைக் குடித்தவளைப் போல் நான் இருக்கும் நிலையில், ராமரிடமிருந்து பிரிக்கப்பட்ட என் உயிரைக் காப்பாற்றுவது கடினம். 
'இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை எனக்கு நேர, நான் போன ஜென்மங்களில் என்ன பாவமெல்லாம் செய்திருக்க வேண்டுமோ! அந்தப் பாவங்களுக்காகத்தான் நான் இந்தக் கொடுமையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் போலும்.

'அரக்கிகளின் காவலில் இருக்கும் என்னால் ராமரைப் பார்ப்பது இயலாத செயல். துயரினால் வாட்டப்பட்டிருப்பதால், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். 
'மனித வாழ்க்கை வெறுக்கத்தக்கது, குறிப்பாக, அது மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது. ஏனெனில், அந்த நிலையில், ஒருவர் தன்  விருப்பப்படி இறந்துபோகும் உரிமையைக் கூட அது அவரிடமிருந்து பறித்து விடுகிறது.'

இது போன்ற சோகமான எண்ணங்களில் ஈடுபட்டு, சீதை மிகுந்த துயரத்துக்கு ஆளானார்.
இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:
சர்க்கம் 26 - சீதையின் விரக்தி
தலையைக் குனிந்தபடியே அழுது கொண்டிருந்த சீதை சித்த சுவாதீனம் இழந்தவர் போல் பேசிக் கொண்டிருந்தார்.

களைப்படைந்த குதிரை, தன் களைப்பைப் போக்கிக் கொள்ள, தரையில் படுத்து உருள்வது போல் அவர் தரையில் உருண்டார். பிறகு இவ்வாறு பேசினார்:

"எந்த வடிவமும் எடுக்கக் கூடிய வல்லமை படைத்த ராவணன், ராமருக்குத் தெரியாமல், என்னைக் கதறக் கதற, வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து விட்டான்.

"அரக்கிகளால் அச்சுறுத்தப்பட்டு, பெரும் துன்பங்களுக்கு ஆளான நிலையில், நான் அவர்கள் மத்தியில் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை.

"வீரரான ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டு, இந்த அரக்கிகளிடையே சிக்கிக்கொண்ட நிலையில், எனக்கு வாழ்க்கையிலோ, செல்வங்களிலோ, அலங்காரங்களிலோ எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.

"என் இதயம் கடினமான கருங்கல்லாலோ, அல்லது உடைக்க முடியாத வேறு ஏதோ ஒரு பொருளாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் இத்தனை துயரத்திலும் அது தூள் தூளாக உடையாமல் இருக்கிறது.

"என் கற்பு நெறி அச்சுறுத்தப்பட்டும், என் நடத்தையின் மேன்மை அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில், இக்கணமே நான் இறக்க வேண்டும். ஆயினும், ராமரிடமிருந்து பிரிந்து, துரதிர்ஷ்டமான இந்த வாழ்க்கையை வாழும் நிலையிலும், நான் ஒரு நிமிடம் உயிர் வாழ்வது கூட சோகமான விஷயம்தான்.

"மாபெரும் அரசரும், இனிமையான சொற்களைப் பேசுபவருமான ராமரிடமிருந்து பிரிந்த பின்னும் நான் உயிர் வாழ்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது? என்னை இவர்கள் துண்டு துண்டாக வெட்டி உண்ணட்டும்.

"என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தீர்மானித்து விட்டேன். எனக்கு இனிமையானவரிடமிருந்து பிரிந்து இனியும் நான் உயிர் வாழ முடியாது. அற்பமான கள்வன் ராவணனை நான் என் இடது கையால் கூடத் தொட மாட்டேன் - அவனை விரும்புவதைப் பற்றிப் பேசுவானேன்?

"என்னை நெருங்க அவன் செய்யும் முயற்சிகளை நான் வெறுத்து நிராகரித்த போதும், நான் அவன் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்தத் தீய எண்ணம் கொண்டவனால் என் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் நிலை பற்றியோ, தன் குடும்பத்தின் பாரம்பரியம் பற்றியோ அவன் உணரவும் இல்லை.

"என்னை நசுக்கினாலும் சரி, துண்டு துண்டாக வெட்டி நெருப்பில் போட்டுச் சமைத்தாலும் சரி, நான் ராவணனை ஏற்க மாட்டேன். அதனால், உங்கள் வீண் பேச்சினால் என்ன பயன்?

"ரகுவின் வழித்தோன்றலும், அறவழியில் நடப்பவர், புகழ் பெற்றவர், அறிவுள்ளவர், துன்பப்படுபவர்களிடம் இரக்கம் காட்டுபவர், தனக்கு உதவி செய்பவர்களிடம் நன்றியுடன் இருப்பவர் என்றெல்லாம் அறியப்பட்டிருப்பவருமான ராமர் ஏன் என் விஷயத்தில் இரக்கம் இல்லாதவராகவும், செயல்படாதவராகவும் இருக்கிறார்? இது நிச்சயம் என் துரதிர்ஷ்டத்தினால்தான்.

"ஜனஸ்தானத்தில் தனி ஒருவராக நின்று 14,000 பேர் கொண்ட சேனையை வெற்றி கொண்டவர் ஏன் என்னைக் காக்க முன் வரவில்லை? சிறிதும் ஆற்றலில்லாத ராவணன் என்னைச் சிறை பிடித்து வைத்திருக்கிறான். 

"என் கணவர் ராமர் அவனைப் போரில் வெற்றி கொள்ளும் திறமை பெற்றவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தண்டகாரண்யத்தில், அரக்கன் விராதனை யுத்தத்தில் அழித்தவர் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?

"கடலுக்கு நடுவே அமைந்திருப்பதால் இலங்கையை யாராலும் அணுக முடியாது, அழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் ராமரின் அம்புகளால் இது தாக்கப்படுவதை எதுவும் தடுக்க முடியாது என்று நான் கருதுகிறேன். 

"அப்படியிருக்க, இந்த அரக்கனால் கவர்ந்து வரப்பட்ட தன் மனைவியை மீட்டுக்கொண்டு செல்ல, வீரரான ராமர் வராததற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

"நான் இங்கே சிறைப்பட்டிருப்பது வீரச் சகோதரர் லக்ஷ்மணருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். அவருக்குத் தெரிந்திருந்தால், ராவணனின் இந்த அக்கிரமமான செயலைப் பொறுத்துக் கொண்டிருப்பாரா?

"நான் ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டதை ராமரிடம் விரைந்து சென்று சொல்லியிருக்கக் கூடிய ஒரே நபர் பறவைகளின் அரசர் ஜடாயு மட்டும்தான். ஆனால் சண்டையில் அவர் வீழ்த்தப்பட்டு கீழே தள்ளப்பட்டார்.

"வயது முதிர்ந்தவராயிருந்தாலும், என்னைக் காப்பாற்ற முனைந்து ராவணனுடன் போரிட்டுத் தோல்வி அடைந்த ஜடாயு ஒரு மாபெரும் வீரச்செயலைச் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

"நான் இங்கே சிறைப்பட்டிருப்பது ரகுகுலத் தோன்றலான ராமருக்குத் தெரிந்திருந்தால், அவர் கோபத்துடன் கிளம்பி வந்து தன் அம்புகளால் இந்த உலகத்தை அரக்கர்கள் என்ற சாபக்கேட்டிலிருந்து மீட்டிருப்பார். இலங்கையை இல்லாமல் செய்து, கடலை வற்ற வைத்து, வெறுக்கத் தக்க ராவணனின் பெயரையும், புகழையும் மொத்தமாக அழித்திருப்பார்.

"எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமென்ற என் விதியோ, அதை விட மோசமான ஒன்றோ இந்த அரக்கிகளுக்கும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் விதவைகளாகி, இறந்து போன தங்கள் கணவர்களை நினைத்து வருந்திக் கொண்டு இருந்திருப்பார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை.

"லக்ஷ்மணருடன் சேர்ந்து தேடி, ராமர் அரக்கர்களின் நகரமான இந்த இலங்கையைக் கண்டு பிடிப்பார். அப்படி இந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டபின், எதிரி ஒரு கணம் கூட உயிர் வாழ மாட்டான். இது நிச்சயம்.

"விரைவிலேயே, இலங்கையின் தெருக்கள் அரக்கர்களின் பிணங்கள் எரிக்கப்பட்ட புகையால் நிரப்பப்படும். சுடுகாட்டின் மீது பறப்பது போல், இந்த நகரத்தின் மீது கழுகுகள் பறக்கும். 

"இந்த என் ஆசை விரைவிலேயே நிறைவேறும். உங்கள் தீய செயல்கள் நிச்சயம் உங்களுக்கு அழிவைத் தேடித் தரும். உங்களை நான் இது பற்றி எச்சரிக்கிறேன்.

"விரைவிலேயே, இலங்கை அழிக்கப்பட்டு சோகங்களின் நகரமாக ஆகும். இதைக் காட்டக் கூடிய கெட்ட சகுனங்கள் இலங்கையில் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித்து விட்டன.

"பாவம் செய்த ராவணன் கொல்லப்பட்டதும், யாராலும் நுழைய முடியாத இந்த இலங்கை ஒரு விதவையைப் போல் ஆகப் போகிறது. 

"தினமும் கொண்டாட்டங்கள் நிகழும் அரக்கர்கள் வாழும் இந்த நகரம் கணவனை இழந்த பெண்ணைப் போல், தலைவன் இல்லாமல் போகப் போகிறது.

"அரக்கர் குலப் பெண்கள் படப்போகிற துன்பங்கள் மற்றும் வலி மிகுந்த அனுபவங்களால் இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எழும் அவர்களின் ஓலங்களை விரைவிலேயே நான் கேட்கப் போகிறேன். 

"நான் ராவணனின் அரண்மனையில் இன்னும் உயிருடன் இருப்பது சிவந்த கடைக்கண் கொண்ட ராமருக்குத் தெரிய வந்தால், இந்த இலங்கை நகரம் அவருடைய அம்புகளால் எரிக்கப்படும். 

"தன் புகழ் அனைத்தையும் இழந்து, எல்லா அரக்கர்களும் மாண்ட நிலையில், இந்த நகரம் இருளுக்குள் தள்ளப்படும்.

"இரக்கமற்ற,அற்பர்களில் மிகவும் மோசமான ராவணன் எனக்கு விதித்த கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

"தீய செயல்களில் ஊறியிருக்கும் இந்த அரக்கர்களுக்கு அநியாயமான செயல்களின் விளைவுகள் பற்றியும், இந்த நகரத்தில் வசிப்பவர்களுக்கு நிகழப்போகும் கேடு பற்றியும் தெரியவில்லை .

"மனிதர்களைத் தின்னும் இந்த அரக்கர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒரு நாள் இவர்கள் என்னைக் காலை உணவாக உண்ணப் போவது நிச்சயம். அழகிய கண்களை உடைய ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டு சோகத்தில் ஊறியிருக்கும் நான்  என்ன செய்வது?

"இங்கே யாராவது எனக்கு விஷம் கொடுத்தால், என் கணவர்  துணை வராமலே கூட தர்மத்தைக் காக்கும் யமனிடம் நான் போய்ச் சேர்ந்து விடுவேன்.

"பரதனின் அண்ணனான ராமருக்கு நான் இன்னும் உயிருடன் இருப்பது தெரியாது. தெரிந்திருந்தால், அவர் லக்ஷ்மணருடன் சேர்ந்து  இந்த உலகம் முழுவதும் தேடி என்னைக் கண்டு பிடித்திருப்பார். அவர் இந்த வழியைப் பின்பற்றாமல் இருக்க மாட்டார்.

"அல்லது, ஒருவேளை என் பிரிவைத் தாங்க முடியாமல், வீரரான ராமர்  இந்த மண்ணுலகை விட்டு விட்டு விண்ணுலகை அடைந்திருக்கலாம். தாமரைக் கண்கள் கொண்ட என் கணவரைக் காணும் பேரின்பம் பெற்ற தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் தேவலோகத்தில் உள்ள சித்தர்கள் மற்றும் முனிவர்கள் எத்தகைய பேறு பெற்றவர்கள்!

"உயர்ந்தவரும், அறிவாற்றலுக்கும், தர்மத்தின் வழி நடப்பதற்கும் பெயர் பெற்றவருமான மகாத்மாவான ராஜரிஷி ராமருக்கு, மனைவியால் கிடைக்கக் கூடிய பலன் எதுவும் இல்லையா என்ன? 

"கண்ணெதிரில் இருக்கும் வரைதான் நன்றி கெட்டவர்களின் அன்பு நீடிக்கும். அவர்களைப்  பொறுத்தவரை, கண்பார்வையிலிருந்து மறைந்தால், மனதிலிருந்து மறைந்து விட  வேண்டியதுதான்: ஏனெனில், அத்தகைய சூழ்நிலைகளில் அவர்கள் அன்பு  சிறகு முளைத்துப் பறந்து விடும். ராமர் அப்படிப்பட்டவர்  இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

"அவசியம் இருக்க வேண்டிய சில நற்குணங்கள் என்னிடம் இல்லையா? அல்லது எனக்கு அதிர்ஷ்டம் என்பது அடியோடு இல்லாமல் போய் விட்டதா?

"ஒரு பெண்ணாகப் பிறந்த நான் ஏன் இத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் - ராமர் என்ற அந்த உயர்ந்த மனிதரிடமிருந்து பிரிக்கப்பட்ட துன்பம்?

"வீரரும், குற்றமற்றவரும், தூய்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான ராமனிடமிருந்து  பிரிக்கப்பட்ட நான் உயிர் வாழ்வதை விட இறப்பதே நல்லது.

"அல்லது தர்மத்தின் வழியில் நடக்கும் அந்த இரண்டு வீரர்களும் தங்கள்  ஆயுதங்களைத் துறந்து விட்டு, பழங்களையும், வேர்களையும்  உண்டு வாழும் துறவிகளாக ஆகி விட்டார்களா? அல்லது  வீர சகோதரர்களான ராம, லக்ஷ்மணர்களை ராவணன் தந்திரத்தால் கொன்று விட்டானா?

"இந்தச் சூழ்நிலையில் உயிர் வாழ்வதை விட இறப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தத் துயரமான நேரத்திலும் மரணம் என்னை விரும்பவில்லை போலும்!

"மகிழ்ச்சி, சோகம் இவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே மகத்தான மனிதர்கள்தான்.  அவர்கள் தங்கள் புலன்களை வென்ற முனிவர்கள்.

"நமக்குத் பிடித்த விஷயங்கள் நடக்கும்போது நம் மனம் மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போது நம் மனம் வேதனையால் பீடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளிலிருந்து விடுபட்டவர்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர்கள். அவர்களுக்கு என் வணக்கம்!

"இது போல் இன்பத்தையும், துன்பத்தையும் வெற்றி கொள்ள முடியாத நான், எல்லாம் அறிந்தவரான என் கணவர் ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டவளாக, ராவணனின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பாவம் செய்தவளான நான், உயிரை விடப் போகிறேன்."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 27 - திரிஜடையின் கனவு
சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, கொடூரம் நிறைந்த அரக்கிகள் மிகுந்த கோபம் கொண்டனர். சிலர் இதை ராவணனிடம் சொல்ல விரைந்தனர்.

பிறகு. கொடிய தோற்றம் கொண்ட அந்த அரக்கிகள் சீதையைச் சூழ்ந்து கொண்டு பாவத்தை மட்டுமே விளைவிக்கக் கூடிய அந்தப் பாவச் செயலைப் பற்றிக் கடுமையாகப் பேசத் தொடங்கினர்.

"சீதா! தற்கொலை என்னும் இந்தப் பாவச் செயலில் ஈடுபட எண்ணும் முட்டாள் பெண்ணே! அரக்கிகளாகிய நாங்கள் உன் உடலை விருந்தாக உண்ணப் போகிறோம்" என்று அவர்கள் கூறினர்.

பிறகு, அந்த விகாரத் தோற்றம் கொண்ட, இரக்கமற்ற பெண்களால் அச்சுறுத்தப்பட்டிருந்த சீதையைப் பார்த்து, சீதையின் மனதைப் புரிந்து கொண்ட திரிஜடை என்னும் அரக்கி இவ்வாறு கூறினாள்: 

"ஓ, பாவம் நிறைந்தவர்களே! நீங்கள் என்னை உண்ணலாம். ஆனால், ஜனகரின் மகளும், தசரதரின் மருமகளும், எல்லோராலும் விரும்பப்படுபவளுமான சீதையை உண்ண முடியாது.

"உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்போது நான் ஒரு கனவு கண்டேன். அதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. என் உடல் முழுவதிலும் மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. அது மொத்த அரக்கர்களின் அழிவையும், சீதையின் கணவனின் வெற்றியையும் பற்றியது."

கோபத்தினால் எது சரி, எது தவறு என்று சிந்திக்கும் சக்தியைக் கூட இழந்திருந்த அந்த அரக்கிகள் திரிஜடையின் வார்த்தைகளைக் கேட்டு பீதி அடைந்தனர். 

"நேற்று இரவு நீ கண்ட கனவைப் பற்றி விரிவாகச் சொல்" என்று அவர்கள் அவளிடம் கேட்டுக் கொண்டனர்.

அரக்கிகள் இவ்வாறு கூறியதும், திரிஜடை தன் கனவு மூலம் தான் அறிந்து கொண்ட விஷயத்தை விவரிக்கத் தொடங்கினாள்.

"ரகுகுலத் திலகர்களான ராமனும், லக்ஷ்மணனும், பட்டாடையும், பூமாலையும் அணிந்து, ஆயிரம் அன்னங்களால் தூக்கிச் செல்லப்படும், தந்தத்தினால் செய்யப்பட ஒரு விமானத்தில் சுகமாக அமர்ந்திருக்கிறார்கள். 

"கடலுக்கு நடுவில் ஒரு வெள்ளை யானை மீது, சூரியன் பிரபையுடன் இணைந்திருப்பது போல், சீதையும் ராமனும் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதையும் நான் பார்க்கிறேன்.

"ராமனும் லக்ஷ்மணனும் நான்கு தந்தங்கள் கொண்ட மலை போன்ற யானையின் மீது சவாரி செய்வதையும் நான் பார்த்தேன். 

"பிறகு அந்த இரண்டு வீரர்களும் வெள்ளைப் பட்டாடைகள், வெள்ளை மாலைகள் அணிந்து தங்கள் இயல்பான பிரகாசத்துடன் ஜனகரின் மகளான சீதையின் அருகில் வந்தனர்.

"விண்ணை எட்டும் மலையின் உச்சியில், யானையின் கழுத்தில் ஏறிய சீதை யானையின் மேல் அமர்ந்திருந்த ராமனுடன் இணைந்ததை நான் பார்த்தேன்.

"தாமரைக் கண் கொண்ட ராமனின் மடியிலிருந்து எழுந்து நின்ற சீதை, தன் கைகளைத் தூக்கி சூரியனையும் சந்திரனையும் தாண்டித் தன் கைகளை நீட்டுவதைப் பார்த்தேன்.

"அதற்குப் பிறகு, அந்த இரண்டு அரச குமாரர்களையும், அழகிய சீதையையும் தன் கழுத்தில் தாங்கிய அந்த கம்பீரமான யானை இலங்கைக்கு மேல் வானத்தில் நின்றது.

''காகுஸ்த வம்சத்தைச் சேர்ந்த ராமன் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் எட்டு ஜோடி வெள்ளைக் காளைகள் பூட்டிய தேரில் அமர்ந்து வந்தார். பிறகு வீரச்செயல்கள் புரிந்துள்ள ராமன் மூன்று உலகங்களையும் விழுங்கிய பயங்கரமான காட்சியைப் பார்த்தேன்.

''பாற்கடலிலிருந்து ஒரு வெள்ளை மலை எழுந்தது. அதன் உச்சியில் நான்கு தந்தங்கள் கொண்ட ஒரு வெள்ளை யானை தோன்றியது. அதன் முதுகில் ராமன் தன் தம்பி லக்ஷ்மணர், தன் மனைவி சீதை ஆகியோருடன் அமர்ந்திருந்தார்.

''அங்கிருந்து சீதை எழுந்து நின்று அழகான தோற்றத்துடன் இருந்த முழுநிலவைத் தழுவி விட்டுப் பிறகு தன் கணவன் மடியில் அமர்ந்தார்.

''அதற்குப் பிறகு தாமரைக் கண் கொண்ட, புகழ் பெற்ற, காகுஸ்த வம்ச வீரரான ராமன் ஒரு அற்புதமான அரியணையில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். 

"எல்லாப் புனித நதிகளின் நீராலும் அவர் பிரம்மரிஷிகளால் நீராட்டப்பட்டார். எல்லா தேவர்களும் அவரை வாழ்த்தினர். அங்கே ஜனகரின் அழகிய மகளான சீதை பட்டாடைகள், வெள்ளை மாலைகள் அணிந்து, வாசனை திரவங்களின் நறுமணத்துடன் ஓளி பொருந்தியவராக இருந்தாள்.

''பிறகு, பிரம்மாவின் தலைமையில் வந்த தேவர்கள், கந்தர்வர்கள், மகரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் ராமனை வணங்கினர். அனைவரையும் மகிழ்விக்கும் ராமன் அந்த அற்புதமான அரியணையில் அமர்ந்தபடி தன்னை மகாவிஷ்ணுவாக வெளிப்படுத்தினார். மேலும் நான் பார்த்த விஷயங்களை விளக்குகிறேன்.

"அங்கே ராமன் தன் எல்லாப் புகழும் விளங்கும் விதத்தில், உயர்ந்த தத்துவமாகவும், உயர்ந்த ஞானமாகவும், உயர்ந்த உணர்வாகவும், மூல காரணமாகவும், உயர்ந்த தவமாகவும், புனிதத்துக்கெல்லாம் புனிதமாகவும்,  காரணங்களுக்கெல்லாம் காரணமாகவும் விளங்கும் பரமாத்மாவான மஹாவிஷ்ணுவாகத் தன்னை வெளிக்காட்டினார்.

"அவர் சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் தாமரைக் கண்கள் கொண்டவராக, திருமார்பில் லக்ஷ்மியுடன், எப்போதும் விடுபட்ட நிலையில் இருப்பவராக, நிலையானவராக, அழிவற்றவராக, ஒளி பொருந்தியவராகத் தோன்றினார்.

"தாமரைக் கண் கொண்ட ரகுகுலத்தவரின் ஆனந்தமான அவர், எல்லா உலகங்களுக்கும் கடவுளாகத் தன்னை வெளிப்படுத்தினார்.

"பிறகு, தேவர்கள், பித்ருக்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள்,  பன்னகர்கள் ஆகியோர் ராமனைச் சூழ்ந்து கொண்டு அவருக்கு சக்ரவர்த்தியாக முடி சூட்டினார்கள். 

"பிறகு, அவர்கள் அவரைக் கை கூப்பி வணங்கியபடி, அவர் புகழைப் பாடினர். பிறகு, அப்சரஸ்கள் ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி, குழல், வீணை, முரசு, கொட்டு போன்ற வாத்தியங்களையும் இசைத்தனர்.

"வீரரும் நேர்மையானவருமான ராமனை நான் இன்னொரு விதத்திலும் பாரத்தேன். தன் தம்பி லக்ஷ்மணன், மனைவி சீதையுடன் அவர் சூரியன் போன்று ஒளிர்ந்த தெய்வீகமான புஷ்பக விமானத்தில் ஏறி வடக்குத் திசை நோக்கிப் பயணம் செய்தார்.

"இந்த எல்லா வடிவங்களிலும், லக்ஷ்மணன், சீதையுடன் கூடி, விஷ்ணுவின் ஆற்றலுடனும், பெருமையுடனும் ராமன் விளங்குவதைப் பாரத்தேன்.

"பாவம் செய்தவர்கள் எப்படி சொர்க்கத்துக்குப் போக முடியாதோ, அது போல் தேவர்கள், அசுரர்கள் அல்லது வேறு யாராலும் எல்லையற்ற ஆற்றல் கொண்ட ராமனை வெல்ல முடியாது.

''அது மட்டுமல்ல. ராவணன் மொட்டையடித்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு, அரளிப்பூ மாலை அணிந்து கொண்டு இருப்பதையும் நான் பாரத்தேன்.

''இன்னொரு சமயம், ராவணன் மொட்டையடித்துக் கொண்டு கருப்பு உடை அணிந்து புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழ, அவரை ஒரு பெண் இழுத்துச் செல்வதை நான் பார்த்தேன்.

''சிவப்பு நிற மாலை அணிந்து, உடல் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு, கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் ராவணன் செல்வதையும் நான் பார்த்தேன். தெற்குத் திசையில் சென்ற அவர் புதைகுழியில் சிக்கிக் கொண்டார்.

"உடல் முழுவதும் சகதி பூசப்பட்ட, சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு கருப்பு நிறப் பெண் அவர் கழுத்தைப் பிடித்து தெற்குத் திசையில் இழுத்துக் கொண்டு போனாள். 

"அவர் எண்ணெயைக் குடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும், போதையுடனும், சோர்வடைந்தும் தெற்குத் திசை நோக்கி ஒரு கழுதை மீது அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தார்.

''பிறகு அரக்கர்களின் அரசரான ராவணன் அதிர்ச்சியுடனும், பயத்துடனும், கழுதை மேலிருந்து தலை குப்புற விழுவதை நான் பார்த்தேன். பிறகு குடிகாரன் போல் அச்சத்துடனும் குழப்பத்துடனும் அவர் எழுந்தார். 

"ஆடை எதுவும் அணியாமல் பைத்தியக்காரன் போல் தெளிவில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு நரகம் போல் இருட்டாகவும், பயங்கரமாகவும் தோன்றிய ஒரு மலக்குழியில் அவர் விழுந்தார்.

"பிறகு கும்பகர்ணனுக்கும் இதே கதி நேர்ந்ததை நான் பார்த்தேன். ராவணனின் எல்லாப் புதல்வர்களும் மொட்டையடித்துக் கொண்டு, உடல் முழுவதும்  எண்ணெய் தடவியபடி நின்றதை நான் பார்த்தேன். 

"ராவணன் ஒரு பன்றி மீதும், இந்திரஜித் ஒரு முதலை மீதும், கும்பகர்ணன் ஒரு ஒட்டகத்தின் மீதும் தெற்குத் திக்கில் சவாரி செய்வதையும் நான் பார்த்தேன்.

"என் கனவில் விபீஷணன் ஒருவரை மட்டும்தான் வெள்ளைக் குடையின் கீழ், வெள்ளை மாலைகள் அணிந்து, வெள்ளை உடை அணிந்து, வெண் சந்தனம் பூசியபடி நிற்பதைப் பார்த்தேன்.

"சங்குகள், முரசுகள் போன்ற இசைக்கருவிகள் முழங்க, பாடல்களாலும், ஆடல்களாலும் அவர் கௌரவிக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். மேக நிறம் கொண்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானை மீது, நான்கு அமைச்சர்களுடன் அவர் ராமனை நோக்கிச் செல்வத்தையும் நான் பார்த்தேன்.

''முரசுகளும், பிற இசைக்கருவிகளும் முழங்க, அரக்கர்கள் தனித் தனிக் குழுக்களாக நின்று கொண்டு, சிவப்பு மாலைகள் அணிந்து, மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். 

"குதிரைகள், தேர்கள் யானைகள் கொண்ட இலங்கைக் கோட்டையின் உயரமான கதவுகள் கடலுக்குள் விழுவதை நான் பார்த்தேன்.

"ராவணனால் நன்கு பாதுக்காக்கப்பட்டிருந்தாலும், ராமனின் தூதனான ஒரு குரங்கால் இலங்கை எரிக்கப்படுவதைப் பார்த்தேன்.

"எண்ணெய் குடித்து, போதையில் இருந்த அரக்கர் குலப் பெண்கள் வெறித்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

"எரித்துச் சாம்பலாக்கப்பட்டிருந்த இலங்கை நகரில், கும்பகர்ணனும் மற்ற அரக்கர் குல வீரர்களும் சிவப்பு ஆடை அணிந்து மலக்குழியில் அழுந்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

"ராவணனையும் அவர் ஆதரவாளர்களையும், தாட்சண்யம் பார்க்காமல் கொன்று, ராமர் சீதையை மீட்கப் போகிறார். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். எனவே, காலம் கடக்கும் முன் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்.

"காட்டுக்குத் தன்னைப் பின் தொடர்ந்து வரும் அளவுக்கு விஸ்வாசமாக இருந்த தன் மனைவி உங்களால் அச்சுறுத்தப்பட்டதாக அறிந்த பின், அவர் உங்களை மன்னிக்கத் தயாராக இருக்க மாட்டார். 

"எனவே உங்கள் அச்சுறுத்தும் பேச்சுக்களை நிறுத்துங்கள். இப்போதாவது ஆறுதலான வார்த்தைகளைப் பேசுங்கள். விதேஹ நாட்டு இளவரசியான சீதையிடம் நாம் மன்னிப்புக் கோருவது நலம் என்று நினைக்கிறேன்.

"என் கனவின் முக்கிய கருப்பொருளான இந்தத் துயரடைந்த பெண் அவருடைய துன்பங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவள் கணவருடன் ஒன்று சேர்க்கப்படப் போவது நிச்சயம். 

"எனவே நீங்கள் பயமுறுத்திக் கொண்டிருந்த நபரிடம் மன்னிப்புக் கேளுங்கள். அரக்க குலப் பெண்களே! இதில் எந்த விதத் தயக்கமும் காட்ட வேண்டாம்.

"ஐயோ! அரக்கர் குலத்துக்கு ராமனால் பெரும் அழிவு ஏற்படப் போகிறது. அரக்கர் குலப் பெண்களே! ஜனகரின் மகளும், மிதிலையின் இளவரசியுமான சீதை தன்னை வணங்கும் எவரையும் மன்னிக்கக் கூடியவர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் மூலம் பெரும் அபாயத்திலிருந்து நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

"அது மட்டும் இல்லை. இந்த அழகிய பெண்ணின் உடலில் நான் எந்த ஒரு அமங்கலமான அடையாளத்தையும் காணவில்லை. நியாயமற்ற முறையில் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண் விமானத்தில் ஏறுவதை என் கனவில் நான் கண்டபோது, அவளிடம் நான் கண்ட ஒரே குறை அழுக்கினால் அவள் நிறம் சற்று மங்கி இருந்தது மட்டும்தான்.

"அரக்கர்களின் முடிவையும், ராமனின் வெற்றியையும், மிதிலை நாட்டு இளவரசியின் விருப்பங்கள் நிறைவேறுவதையும் என்னால் முன் கூட்டியே காண முடிகிறது. அவளுக்கு நல்ல செய்தி வரப் போகிறது என்பதற்கான பல அடையாளங்களை நான் பார்க்கிறேன்.

"தாமரை இதழ் போன்ற அவள் இடது கண் துடிக்கிறது. இந்த அழகிய பெண்ணின் இரண்டு கைகளில், இடது கையில் மட்டும் நடுக்கமும், மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. யானையின் துதிக்கை போன்ற அவள் இடது தொடையும் துடிக்கிறது.

"ராமன் சீக்கிரமே வந்து விடுவார் என்பதை இவை எல்லாம் காட்டுகின்றன. அது மட்டும் இல்லை. தூரத்தில் இருக்கும் ஒரு மரத்திலிருந்து ஒரு பறவை, ஒரு நெருக்கமான, உயர்ந்த நண்பனின் வரவை எதிர்பார்த்து, அளவு கடந்த உற்சாகத்தில், இனிமையான ராகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறது."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


சர்க்கம் 28 - சீதையின் தற்கொலை முயற்சி
மனதில்  அளவு கடந்த வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்திய அரக்கர்களின் அரசனின் பொறுக்க முடியாத வார்த்தைகளைக் கேட்ட பிறகு, சீதை சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட பெண் யானை போல் நடுங்கினார்.  

ராவணனின் வார்த்தைகளால் கலவரம் அடைந்தும், அச்சுறுத்திய அரக்கிகளுக்கிடையே சிக்கிக் கொண்டும், சீதை காட்டில் சிக்கிக் கொண்ட சிறு பெண்ணைப் போல் அச்சமடைந்து, தன் விதியை நினைத்து வருந்தினார். அவர் சிந்தனை இவ்வாறு ஓடியது.

"குறிப்பிட்ட காலத்தில்தான் மரணம் ஏற்படும் என்று பெரியோர்கள்  சொல்கிறார்கள். இது எவ்வளவு உண்மை! அதனால்தான், இவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவளாக இருந்தும், இந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டும் நான் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

"துயரத்தால் பீடிக்கப்பட்ட, நம்பிக்கைக்கு வழியில்லாத என் இதயத்தை அழிக்க முடியாது போலும்! ஏனெனில், இவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்த போதும், வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட மலைகள் சுக்கு நூறாகப் பிளந்தது போல், என் மனம் தூள் தூளாக உடைந்து போகவில்லையே!

"எனவே இந்தக் கணமே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். இப்படிச் செய்வதில் பாவம் எதுவும் இல்லை. தகுதியற்ற ஒருவருக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க ஒரு உயர்ந்த மனிதர் மறுப்பது போல், ராவணனின் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கங்களுக்கு நான் இணங்க மாட்டேன்.

"ராமர் வந்து என்னைக் காப்பாற்றாவிட்டால், இறந்து போன குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பது போல், ராவணன் என் உடல் உறுப்புகளைத் துண்டு துண்டாக வெட்டி விடுவான்.

"ஐயோ! மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஒரு இரவு மிக நீளமானதாகவும், பொறுத்துக்கொள்ள முடியாததாகவும் இருப்பது போல், இந்த இரண்டு மாத காலம் எனக்குப் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

"ஓ, ராமபிரானே! ஓ, லக்ஷ்மணா! ஓ, சுமித்ரா தேவி! ஓ, என்னிடம் அதிகம் கருணை கொண்ட மாமியார் கௌசல்யாதேவி! புயலில் சிக்கிய கப்பல் போல், இந்த அதிர்ஷ்டம் கெட்டவள் மிகக் கொடுமையான துயரை அனுபவிக்கிறேன்.

"இரண்டு சிங்கங்கள் மின்னலால் தாக்கப்பட்டது போல், இந்த இரண்டு இளவரசர்களும், என் பொருட்டு, மானாக வடிவெடுத்து வந்த அரக்கனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். 

"மரணம்தான் அந்த மான் வடிவில் வந்து  அதிர்ஷ்டம் கேட்ட பெண்ணான என்னுடைய மூளையை மழுங்கச் செய்திருக்க வேண்டும். முட்டாள் பெண்ணான நான்தான் ராமபிரானை அவருடைய சகோதரர் லஷ்மணரிடமிருந்து பிரித்து விட்டேன்.

"ஓ ராமா! பலம் வாய்ந்த தோள்களும் நிலவு போன்ற முகமும் கொண்ட நீங்கள்தான் உண்மையானவர்! எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு உதவுபவர்! இந்த அரக்கிகளுக்கு விருந்தாவதற்காக நான் கொல்லப்படப் போவதில்லை என்று உங்களுக்குத் தெரியும்.

"நன்றி கெட்டவருக்குச் செய்யப்படும் உதவி எப்படிப் பயனில்லாமல் போகுமோ, அது போல், நெறி உங்களைக் கடவுளாக நினைக்க வைத்து, சிறைப்படுத்தப்பட்டுத் தரையில் உறங்க வைத்து, இதுவரை என்னை ஒரு கற்பு நிறைந்த மனைவியின் பாதையில் வைத்திருந்த அந்தக் கற்புநெறி இப்போது எனக்கு எந்த நன்மையையும் செய்யாததாக ஆகி விட்டது.

"உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, உடலில் ரத்தமே இல்லாமல், வெறும் எலும்புக்கூடாக ஆகி, உங்களைச் சந்திக்க மீண்டும் வாய்ப்பே இல்லாமல், கற்புடைய பெண்ணான நான் ஒரு பரிதாபமான நிலையில் இருக்கிறேன். 

"நான் கடைப்பிடித்து வரும் கற்பு நெறியும், ஒரே ஒரு மனைவிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கடைப்பிடித்து வரும் விதியும், இரண்டுமே அர்த்தம் இல்லாதவையாகவும், வீணானவையாகவும் ஆகி விட்டன.

"நீங்களாவது, பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்து உங்கள் தந்தையின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, உங்கள் தந்தைக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் உங்கள் நாட்டுக்கு பத்திரமாகத் திரும்பி, உங்கள் அன்னைகளின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் இதயத்தின் ஆழத்திலிருந்து பிரார்த்திக்கிறேன்.

"ஓ, ராமா! என் சிந்தனைகள் எப்போதும் உங்களைப் பற்றியே இருந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, என் தவம், விரதம் எல்லாம் பயனில்லாதவை ஆகி விட்டன. எனவே, நான் இப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன்.

"விஷம் குடித்தோ, ஒரு கூரான ஆயுதத்தைப் பயன்படுத்தியோ என் உயிரை நான் மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரக்கர்களின் நகரத்தில் எனக்கு விஷமோ, கூரான ஆயுதமோ பெற்றுத் தருபவர் யாரும் இல்லை."

இவ்வாறு பலவிதங்களிலும் தன் விதியை நொந்து கொண்டு, நடுங்கிக் கொண்டு, வாய் உலர்ந்து போய், தன் மனதில் ராமனை எப்போதும் நினைத்துக் கொண்டு, அந்தப் பெரிய பூக்கள் நிறைந்த சிம்சுபா மரத்தை சீதை அணுகினார்.

பிறகு தன் துயரத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு, சோகத்தில் ஆழ்ந்தவராய், தன் தலைப் பின்னலைக் கையால் பற்றியபடி சீதை சொன்னார்: "இந்தப் பின்னலால் என் கழுத்தை நெரித்துக் கொண்டு, இந்தக் கணமே நான் எமலோகத்துக்குச் செல்லப் போகிறேன்."

இவ்வாறு சொல்லியபடி, எல்லா அங்கங்களும் அழகாக அமைந்ததாகப் போற்றப்படும் சீதை, அந்த மரத்தின் கிளையைப் பற்றியபடி, அங்கேயே ஒரு கணம் நின்றார்.

அவருக்கு எப்போதும் ராமன், லக்ஷ்மணன், தன் அரண்மனை இவற்றையே நினைத்துக் கொண்டிருந்த அந்த அழகிய சீதைக்கு, அப்போது பல சகுனங்கள் தோன்றின. அவருடைய சோகமான மனநிலைக்கு மாறாக, நல்லது நடக்கப் போவதைக் காட்டுபவையாகக் கருதப்படும் அந்த சகுனங்கள் அவர் மனத்துக்குத் தெம்பூட்டுபவையாக அமைந்தன.

சர்க்கம் 29 - நல்ல சகுனங்கள்
குற்றமற்றவராகவும், எல்லா விதங்களிலும் உயர்ந்தவராகவும் இருந்தும், மனமுடைந்து போய், மகிழ்ச்சியின் சாயை சிறிதளவு கூட இல்லாமல் இருந்த சீதையை, ஒரு செல்வந்தரை, அவரை நம்பி இருப்பவர்கள் சூழ்ந்து கொள்வது போல், நல்ல சகுனங்கள் சூழத் தொடங்கின.

மையத்தில் கருப்பு வெள்ளை  நிறத்திலும், ஓரங்களில் வில் போன்ற புருவங்களால் சூழப்பட்டும், சிவந்தும் இருந்த, அந்த அழகிய பெண்ணின் பெரிய இடது கண், மீனால் அசைக்கப்படும் தாமரை மலர் போல் துடித்தது.

வாசனை திரவியங்கள் பூசப்பட வேண்டிய, இணையற்ற பெருமை கொண்ட அவருடைய கணவரால் அன்புடன் பற்றப்பட்ட, அவருடைய நீண்ட, உருண்ட, அழகான இடது புஜமும்  நீண்ட நேரம் துடித்தது.

அவருடைய உருவத்துக்கு ஏற்ற அளவில் இருந்த, யானையின் துதிக்கை போன்று இருந்த அவருடைய இடது தொடை துடித்ததிலிருந்து, ராமபிரான் சீக்கிரமே தன் கண் முன் வரப்போவதற்கான அறிகுறியையும் அவர் பெற்றார்.

தெளிவான கண்களும், மல்லிகை மொட்டுக்கள் போன்ற பற்களும் கொண்ட அந்த அழகிய பெண் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய மஞ்சள் நிற, அழுக்கடைந்த உடை பக்கவாட்டில் சற்று நழுவி விழுந்ததையும் அவர் பார்த்தார்.

காற்றினாலும், வெயிலினாலும் உலர்ந்து போன ஒரு விதையின் மீது மழைத்துளிகள் விழுந்ததும் அது முளை விடுவது போல், இத்தகைய அறிகுறிகள் மகிழ்ச்சியான நிகழ்வுகள் வரப்போவதைக் காட்டுவதாகப் பழைய அனுபவங்களிலிருந்து அறிந்திருந்த அந்தப் பெண்ணின் மனத்தில் மகிழ்ச்சி துளிர் விட்டது.

கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகளாலும், விற்களைப் போன்ற புருவங்களாலும், நீண்ட புருவ முடிகளாலும், அழகிய இமைகளாலும், மிகவும் வெண்மையான பொருட்களுக்கும் கூட வெண்மையூட்டக் கூடிய வெண்மையான பற்களாலும் அழகு சேர்க்கப்பட்ட அவருடைய முகம் , ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சந்திரனைப் போல் ஒளிர்ந்தது.

இந்த அனுபவங்களால் தன் மனத்துயரிலிருந்து விடுபட்டு, சோகம் ஏற்படுத்திய வெப்பத்திலிருந்தும் விடுபட்ட சீதை, மகிழ்ச்சியினால் அதிக வலுப்பெற்றவராக, வானில் எழும் வளர்பிறை காலத்து ஒளி மிகுந்த சந்திரன் போல் ஒளிர்ந்தார்.

சர்க்கம் 30 - ஹனுமானின் சங்கடம்
சீதையின் வார்த்தைகள், திரிஜடையின் பேச்சு, அரக்கிகளின் பயமுறுத்தும் பேச்சுக்கள் அனைத்தையும் வீரரான ஹனுமான் கேட்டார். 

பிறகு, சீதையை நந்தனவனத்தில் இருந்த ஒரு தெய்வீகப் பெண்ணாகப் பார்த்த ஹனுமான் பல்வேறு சிந்தனைகளில் ஈடுபட்டார்.

"ஆயிரக்கணக்கான குரங்குகளாலும், இன்னும் பலராலும் பல திசைகளிலும் தேடப்பட்டு வரும் சீதை என்னால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். 

"என் எஜமானரால் அறிவார்ந்த யோசனையுடன் ஒரு ரகசிய தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் என்னால், எதிரியின் சக்தியை ரகசியமாக ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் என்னால், அவர் பார்க்கப்பட்டிருக்கிறார்.

"அரக்கர்களின் தன்மைகள், இந்த நகரம், அரக்கர் குல அரசனான  ராவணனின் சக்தி ஆகியவை என்னால் கண்டறியப்பட்டிருக்கின்றன.

"அளவற்ற சக்தி கொண்டவரும், எல்லா உயிர்களிடமும் கருணை கொண்டவருமான ராமரைக் காண வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ள அவருடைய மனைவிக்கு நான் ஆறுதல் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எதிர்பாராத துன்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள, முழுநிலவு போன்ற முகத்தைக் கொண்டிருக்கும், சோகத்தால் பீடிக்கப்பட்டு அந்த சோகத்துக்கு முடிவு காணாமல் இருக்கும் இந்தப் பெண்மணிக்கு நான் ஆறுதல் கூறுவேன்.

"சோகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ராமரின் மனைவியான இந்தப் பெண்மணிக்கு ஆறுதல் கூறாமல் நான் இங்கிருந்து கிளம்பினால், என் பயணம் மாசடைந்ததாக இருக்கும். 

"நான் கிஷ்கிந்தைக்குத் திரும்பியதும், தன் துயரத்திலிருந்து மீட்சி கிடைக்காமல், பெருமைக்குரிய இளவரசி ஜானகி தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.

"நீண்ட கரங்களைக் கொண்ட, முழு நிலவின் தோற்றமுடைய சீதையைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கும் ராமர் என்னால் ஆறுதல் கூறப்பட வேண்டியவர்.

"இந்த அரக்கியர் முன்னிலையில் சீதையிடம் பேசுவது உசிதமல்ல. இதை எப்படிச் செய்வது? எனக்குப் புரியவில்லை. 

"அவரை நான் சமாதானப்படுத்தா விட்டால், இந்த இரவு முடிவதற்குள் அவர் எந்த வழியிலாவது தன் உயிரை மாய்த்துக்கொள்வார். அதில் சந்தேகமில்லை.

"மெல்லிய இடை கொண்ட இந்தப் பெண்மணியிடம் பேசாமல் நான் இங்கிருந்து சென்றால், தன்னைப் பற்றி சீதை என்ன சொன்னார் என்று ராமர் என்னிடம் கேட்டால், நான் என்ன பதில் சொல்ல முடியும்? 

"சீதையிடம் செய்தி பெறாமல் நான் இங்கிருந்து அவசரமாகத் திரும்பிச் சென்றால், ராமர் கோபம் கொண்டு, தீப்பிழம்பு போன்ற தன் கண்களால் என்னை எரித்து விடுவார்.

"ராமருக்கு உதவ சிறந்த வகையில் செயல்படும்படி என்னால் சுக்ரீவரிடம் வலியுறுத்த முடிந்தாலும், படையுடன் அவர் இங்கே வருவது பயனளிக்காது.

"இங்கேயே இருந்து, அரக்கிகள் இருக்கும்போதே, அவர்கள் கவனம் திசை திரும்பியிருக்கும் நேரத்தில், ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, துயரத்தில் இருக்கும் சீதையை நான் மெல்லச் சமாதானப் படுத்துவேன்.

"நான் உருவத்தில் மிகவும் சிறியவன், அத்துடன் ஒரு வானரம். ஆயினும் மனிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தில் என்னால் பேச முடியும். 

"நான் ஒரு அந்தணன் பேசுவது போல் சம்ஸ்கிருதத்தில் பேசினால், ஒரு குரங்கால் எப்படி சம்ஸ்கிருதத்தில் பேச முடியும்  நினைத்து, நான் ராவணனாக இருப்பேனோ என்று நினைத்து சீதாப்பிராட்டி பயந்து விடக் கூடும்.

"மனிதர்கள் பேசும் அர்த்தமுள்ள விஷயங்களை நான் பேச வேண்டும். இல்லாவிட்டால் அப்பழுக்கற்ற சீதைக்கு ஆறுதல் கூற முடியாது.

"அரக்கர்களால் ஏற்கெனவே அச்சமடைந்திருக்கும் சீதை, என் உருவத்தாலும், மொழியாலும் மீண்டும் அச்சமடையக் கூடும். 

"பெரிய கண்களைக் கொண்ட இந்த சீதை, எந்த உருவத்தையும் எடுக்கும் வல்லமை கொண்ட ராவணனாக என்னைக் கருதி, அச்சமடைந்து பெரிதாகக் கூவக் கூடும்.

"சீதை கூச்சல் போட்டவுடனேயே, பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்திய, யமனைப் போன்ற பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கிகள் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டு விடும். 

"பிறகு கோர முகம்கொண்ட அந்த அரக்கிகள் என்னை எல்லாப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி, என்னைப்  பிடிக்கவும், கொல்லவும் முயலக் கூடும்.

"நான் வலுவான மரங்களின் பெரிய கிளைகளையும், கொம்புகளையும், அடிப்புறத்தையும் பிடித்துக் கொண்டு, இங்கும் அங்கும் ஓடுவதைக்கண்டு அவர்கள் கலவரம் அடையக் கூடும். 

"என் பெரிய உருவம் அந்தத் தோட்டத்தில் திரிவதைக் கண்டு அந்த கோர முகம் கொண்ட அரக்கிகள் அச்சம் கொள்ளக் கூடும்.

"பிறகு அந்த அரக்கிகள் ராவணனின் அரண்மனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் மற்ற அரக்கர்களைக் கூவி அழைக்கக் கூடும். 

"அந்த அரக்கர்கள் அதிக உத்வேகத்துடன். சூலம், கத்தி, ஈட்டி போன்ற பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு  விரைந்து வந்து என்னுடன் போர் புரியக் கூடும்.

"எல்லாப்புறமும் அவர்களால் சூழப்பட்ட பின், அவர்களோடு நான் போரிட வேண்டியிருக்குமென்பதால், என்னால் சமுத்திரத்தின் மறு கரைக்குப் போக முடியாமல் போகக் கூடும்.

"அல்லது பல அரக்கர்கள் ஒன்றாக என் மீது பாய்ந்து, வேகமாகச் செயல்பட்டு என்னைப் பிடித்து விடக் கூடும். அப்புறம் நான் வந்ததே சீதைக்குத் தெரியாமல் போகக் கூடும். நானும் சிறைப்பட்டு விடலாம்.

"அல்லது கொடிய மனம் கொண்ட அரக்கர்கள் சீதையைக் கொன்று விடலாம். அதன் விளைவாக ராமர் மற்றும் சுக்ரீவரின் பணி கெட்டு விடும். 

"கடல் சூழ்ந்த பகுதியில், அரக்கர்களால் சூழப்பட்டு, இந்த ரகசியமான இடத்தில் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

"போரிடும்போது நான் இறந்து போனாலோ அல்லது அரக்கர்களால் பிடிக்கப்பட்டாலோ, ராமரின் பொருட்டு, சீதையைத் தேடிக் கண்டு பிடிக்கும் இந்தப் பணியை நிறைவு செய்யும் இன்னொரு தோழர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"எவ்வளவு யோசித்துப் பார்த்தபோதும், நான் கொல்லப்பட்டால், அதற்குப் பிறகு நூறு யோஜனை அகலமுள்ள இந்தக் கடலைத் தாண்டக் கூடிய இன்னொரு குரங்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 

"ஆயிரக்கணக்கான அரக்கர்களையும் கொல்லக் கூடிய வல்லமை படைத்தவன் நான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் ஒரு பெரிய போருக்குப் பின், கடலின் மறுகரைக்குச் செல்வது என்னால் இயலாமல் போகலாம்.

"என்னைப் பொருத்தவரை சண்டைகள் உண்மையற்ற தன்மை உள்ளவை. நிச்சயமற்ற முடிவில் எனக்கு விருப்பமில்லை. புத்திசாலியான எவரும் கவலையான மனநிலையில், உறுதியாகச் செயலில் இறங்க மாட்டார். 

"நான் சீதையிடம் பேசா விட்டால் அவர் உயிரைத் துறந்து விடுவார். அவருடன் பேசினாலோ விபரீதம் ஏற்பட்டு விடும். 

"விரைவிலேயே செயல்படுத்தப்படக் கூடிய செயல்கள், குழப்பமான தூதரின் கையால் காலத்துக்கும் நேரத்துக்கும் விரோதமாகச் செயல்படுத்தப்பட்டால், சூரிய உதயத்தினால் இருள் மறைவது போல், கெட்டு விடும்.

"எது பயனுள்ளது எது பயனற்றது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தாலும் அது சோபிக்காமல் போய் விடக் கூடும். தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்ளும் தூதர்கள் உண்மையில் காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.

"நான் செய்யப் போகும் செயல் தவறாகாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது? என்னுடைய பலவீனங்களை நான் எப்படித் தவிர்ப்பது? நான் கடலைத் தாண்டி வந்தது வியர்த்தமாகி விடாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது?

"சீதை அச்சம் கொள்ளாமல், நான் சொல்வதைக் கேட்கும்படி செய்வது எப்படி?"

இவ்வாறு யோசித்தபடி ஹனுமான் கீழ்க்கண்டவாறு முடிவெடுத்தார்.

"செயல்களினால் சோர்வடையாதவரான, சீதையின் அன்புக்குரியவரான ராமரை நான் புகழ்ந்தால் சீதை பயப்பட மாட்டார்."

"இக்ஷ்வாகு குலத்தின் மிகச் சிறந்த இளவரசரும், மகாத்மாவுமான ராமரைப் பற்றி மங்களமான, உண்மையான வார்த்தைகளை நான் இனிமையான குரலில் பேசினால், சீதைக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து அவர் என்னை நம்பும்படி செய்ய முடியும்."

உயர்ந்த மனம் கொண்ட ஹனுமான் மரக்கிளைகளுக்கிடையே மறைந்து கொண்டு கீழ்க்கண்டவாறு பலவித விஷயங்களை, வீண் போகாத வார்த்தைகளில் கூறினார்.

சர்க்கம் 31 - ராமரின் கதையைக் கூறுதல் 

மேற்கண்டவாறு பலவாறு சிந்தித்த பின் ஒரு முடிவுக்கு வந்த அந்த உயர்ந்த வானரர் சீதைக்குக் கேட்கும்படியாக, இனிமையான குரலில் ராமரின் கதையைக் கூறத் தொடங்கினார். அவர் சொன்னார்:

"தசரதன் என்று ஒரு பலம் பொருந்திய அரசர் இருந்தார். அவர் பக்தி மிகுந்தவர். தேர்கள், யானைகள் போன்றவற்றுடன் கூடிய பெரிய ராணுவம் அவரிடம் இருந்தது. அவர் உண்மையானவர், உலகெங்கும் புகழ் பெற்றவர்.

"ராஜரிஷிகளுக்குள் அவர் மேன்மையானவர். விரதங்களை அனுசரிப்பதில் அவர் முனிவர்களுக்கு இணையானவர். அவர் சக்கரவர்த்திகளின் வழி வந்தவர். சக்தியில் அவர் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு ஒப்பானவர்.

"அஹிம்சைத் தத்துவத்தைப் பின்பற்றுவதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர் உயர்ந்த உள்ளம் கொண்டவர், கருணை நிறைந்தவர், உண்மையான வீரர். அதிர்ஷ்டம் மிகுந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்த அவர் இக்ஷ்வாகு குலத்தின் தலைவராக இருந்தார்.

"ஒரு அரசருக்கு உரித்தான எல்லாத் தன்மைகளும் அவரிடம் இருந்தன. அவர் செல்வம் அளவற்றதாக இருந்தது. அவர் அரசர்களுக்கெல்லாம் அரசராக இருந்தார். நான்கு கடல்களால் சூழப்பட்ட உலகம் முழுவதும் அவர் புகழ் பரவி இருந்தது. அவர்  நல்லவராக இருந்ததுடன் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்பவராகவும் இருந்தார்.

"அவருடைய அன்புக்குரிய, நிலவு முகம் கொண்ட மூத்த மகன் ராமன் என்று பெயரிடப்பட்டார். வில் வித்தையிலும், கல்வியிலும் ராமர் எல்லோரையும் விடச் சிறப்பானவராக இருந்தார். அவர் அறத்தின் காவலராகவும், தன் நாட்டு மக்களின் காவலராகவும் இருந்தார்.

"எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த அவர்  எல்லா மக்களுக்கும், தர்மத்துக்கும் புகலிடமாக இருந்தார். தர்மத்தில் நிலை பெற்றிருந்த அந்த வீரர் தன் தந்தையின் கட்டளையால் துறவு மேற்கொண்டு, தன் மனைவியுடனும், தம்பியுடனும் காட்டுக்குச் செல்ல நேர்ந்தது.

"அவர் காட்டில் வேட்டையாடியபோது எந்த வடிவத்தையும் எடுக்க கூடிய பல அசுரர்கள் அவரால் கொல்லப்பட்டனர். 

"ஜனஸ்தானத்தில் அவரால் அரக்கர்கள் அழிக்கப்பட்டதையும், கர தூஷணர்கள் கொல்லப்பட்டதையும் கேள்வியுற்ற ராவணன் ஒரு தந்திரச் செயலால், ஒரு அரக்கனை மான் வடிவம் எடுக்கச் செய்து, ஜானகி அந்த மானால் கவரப்பட்டதைப் பயன்படுத்தி, ராமரை அப்புறப்படுத்தினான்.

"அந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ராவணன் சீதையைக் கடத்தி விட்டான்.

நற்குணம் பொருந்திய ராமர் கானகத்தில் சீதையைத்  தேடிக் கொண்டிருந்தபோது, வானர அரசரான சுக்ரீவரின் துணை அவருக்குக்  கிடைத்தது. 

"சுக்ரீவர் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதாக சபதம் மேற்கொண்டார். பதிலுக்கு, வானரர்கள் ராஜ்யத்தை சுக்ரீவருக்குப் பெற்றுத்  தருவதாக ராமர் உறுதி அளித்தார்.

"இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்காக சக்தியும், வீரமும் மிகுந்த ராமர் வாலியைக் கொன்று சுக்ரீவரை வானரர்களின் அரசராக்கினார்.

"சுக்ரீவரால் அனுப்பப்பட்டு, எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடிய ஏராளமான வானரர்கள் சீதையைத் தேடி எல்லாத் திசைகளிலும் சென்றனர்.

"சம்பாதியின் வார்த்தைகளால் இயக்கப்பட்டு, நான் பெரும் உற்சாகத்துடன் சீதையைத் தேடுவதற்காக நூறு யோஜனைகள் அகலம் கொண்ட இந்த சமுத்திரத்தைத் தாண்டி வந்தேன்.

"எனக்குச் சொல்லப்பட்ட விவரங்களுடன் ஒத்துப் போகும் அவரை நான் கண்டு பிடித்து விட்டேன். அவருடைய வடிவம், நிறம் மற்றும் பிரகாசம் பற்றி ராமரிடமிருந்து நான் கேட்டறிந்திருக்கிறேன்."

இவ்வாறு பேசிய பிறகு, ஹனுமான் சற்று மௌனமாக இருந்தார். 

அவர் பேச்சைக் கேட்ட சீதை மிகுந்த திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார். பிறகு முனைகளில் சுருண்ட கேசத்தைக் கொண்ட அந்தப் பெண்மணி அச்சமடைந்து, முகத்தில் விழுந்த கேசத்தினால் மறைக்கப்பட்ட தன் முகத்தை நிமிர்த்தி சிம்சுபா மரத்தின் உச்சியைப் பார்த்தார்.

தன் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ராமனுக்கே அர்ப்பணித்திருந்த அந்தப் பெண்மணி, அந்த வானரரின் சொற்களைக் கேட்டு உடனே மனம் மகிழ்ந்தவராக எல்லாப் புறங்களிலும் பார்த்தார். 

மேலும், கீழும், சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்த அவர் எல்லையற்ற அறிவு கொண்டவரும், வானர அரசனின் அமைச்சரும், உதய சூரியனைப் போல் ஒளிர்ந்தவருமான  வாயுமைந்தனைப் பார்த்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 32 - சீதை ஹனுமானைப் பார்க்கிறார் 
தங்கம் போன்ற மஞ்சள் நிற வாலுடன், வெள்ளை ஆடை அணிந்து மரத்தின் கிளைகளுக்கிடையே ஒளிந்திருந்த ஹநுமானைப் பார்த்து முதலில் சீதை குழப்பமும், திகைப்பும் அடைந்தார்.

உருக்கிய தங்கம் போன்ற நிறம் கொண்ட கண்களுடைய அந்த வானரரின் உடல் அசோகமரத்தில் பூத்த மலர் போல் தோற்றமளித்தது.

அவர் மிகவும் பணிவுடன் இருந்ததையும் தனக்கு இசைவானவற்றை அவர் பேசியதையும் சீதை கவனித்தார்.

வியப்பு, ஐயம் இரண்டும் ஒருங்கே கொண்டவராக சீதை சிந்திக்க ஆரம்பித்தார்.

பெரிய, அசாதாரணமான, அச்சமூட்டுவதாக இருந்த அந்தக் குரங்கின் வடிவத்தைக் கண்டதும், அவர் அதை ஒரு கெட்ட சகுனம் என்று நினைத்து, மீண்டும் மனதில் அச்சமும், கிலேசமும் கொண்டார்.

அவர் பரிதாபமாக அழத் தொடங்கினார்.  துயரத்தில் தோய்ந்திருந்த அழகான, உயர்வான பெண்ணான சீதை விம்மிக்கொண்டே 'ராமா! ராமா! லக்ஷ்மணா! லக்ஷ்மணா!' என்று மெல்லிய குரலில் முனகத் தொடங்கினார்.

தன் முன் பணிவுடன் நின்று கொண்டிருந்த அந்த உயர்ந்த வானரத்தைப் பார்த்த அழகு நிறைந்த மிதிலை நாட்டு இளவரசி அது ஒரு கனவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினார்.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவர், வானர அரசனின் அமைச்சரும், தன் எஜமானவர்களுக்குக் கீழ்ப்படிபவரும், மிக அறிவுள்ளவரும், பெரிய, குவிந்த முகம் உடையவருமான வாயு குமாரரைப் பார்த்தார்.

அவரை நன்றாகப் பார்த்த அவர் மயக்கமடைந்து இறந்தவர் போல் ஆனார்.  விரைவிலேயே மயக்கம் தெளிந்த அவர் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தார்:

"ஐயோ! சாஸ்திரங்களால் கெட்ட சகுனம் என்று கூறப்பட்டுள்ள இந்த அழகற்ற குரங்கின் தோற்றத்தை என் கனவில் நான் பார்க்கிறேனே! ராமரும், லக்ஷ்மணரும் என் தந்தை ஜனகரும் நலமுடன் இருப்பார்களாக!

"ஆனால் நான் பார்த்தது கனவாக இருக்க முடியாது, ஏனெனில் துன்பங்களாலும், சோகத்தாலும் மனம் வருந்தியும், நிலவு முகம் கொண்ட ராமரிடமிருந்து பிரிந்ததால் வருத்தத்துடனும் இருக்கும் எனக்கு உறக்கமே வருவதில்லையே!

"மனதில் எப்போதும் நான் ராமரின் பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, அவர் பெயரையே நினைத்துக்கொண்டும், அவர் புகழைப் பாடிக்கொண்டும் இருப்பதால், அவர் புகழ் பேசப்படுவது போன்ற உணர்வுகள் எனக்குத் தோன்றி அவற்றை இவ்வாறு புரிந்து கொள்கிறேனோ என்னவோ!

"அவரைப் பற்றிய கவலையால் துயரடைந்த என் மனம் அவருடைய நினைவில் முழுமையாக ஈடுபட்டு, நான்  எப்போதும் அவரைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறேன். எனவே என் மனதில் நிரம்பியிருக்கும் எண்ணங்களுக்கு ஏற்ற விஷயங்களை நான் பார்ப்பதாகவும், கேட்பதாகவும் உணர்கிறேன்.

"இது என் மனப்பிரமைதான் என்று நினைக்கிறேன். ஆனால் சிந்தித்துப் பார்த்தால், என் முன் ஒரு உருவம் எப்படித் தோன்ற முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த வார்த்தைகளை, தெளிவாக என் முன் நின்று பேசிக் கொண்டிருக்கும் ஒரு உருவத்திடமிருந்து நான் கேட்கிறேன். அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும்?

"இந்திரனுக்கும், பிரஹஸ்பதிக்கும், பிரம்மாவுக்கும், அக்னிக்கும் வணக்கம்! இந்தக் குரங்கு என் முன் பேசியது உண்மையாக இருக்கட்டும்! வேறு விதமாக இல்லாமல் இருக்கட்டும்!

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

சர்க்கம் 33 - ஹனுமான் சீதையிடம் உரையாடுதல்
பவளம் போல் மின்னிய முகத்தைக் கொண்ட, ஒளிமயமான தோற்றத்துடன் விளங்கிய வாயுபுத்திரரான ஹனுமான் மரத்திலிருந்து இறங்கி, சோகம் நிறைந்த முகத்துடன் இருந்த சீதையின் முன் பணிவுடன் நின்றார்.

பிறகு அவர் சீதையின் காலில் விழுந்து வணங்கிய பின், தன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி நின்று அவரிடம் இனிய குரலில் பேசத் தொடங்கினார்.

"கசங்கிய பட்டாடை உடுத்தியிருக்கும், தாமரை போன்ற கண்களை உடைய அழகிய பெண்மணியே! தாங்கள் ஏன் இந்த மரத்தின் கிளையை உங்கள் கைகளில் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறீர்கள்? தாங்கள் யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா?

"தாமரை மலரிலிருந்து நீர் வடிவது போல் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதன் காரணம் என்ன? அழகானவரே! நீங்கள் யார்? - தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் அல்லது அரக்கர்கள் ஆகியோர்களில் ஒருவரா? அல்லது யக்ஷர்கள் அல்லது கின்னரர்களில் ஒருவரா?

"அழகிய முகமும், அழகான உடல் உறுப்புகளும் கொண்டு விளங்கும் பெண்மணியே! எனக்கு நீங்கள் தெய்வாம்சம் கொண்டவராகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் ருத்ரர்கள், மருத்கள் அல்லது வசுக்கள் வகையைச் சேர்ந்தவரா? அல்லது எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விட உயர்ந்த, தன் கணவன் சந்திரனை விட்டு விட்டுத் தரையில் விழுந்து விட்ட ரோகிணி நட்சத்திரமா தாங்கள்?

"குறையில்லாத கண்களைக் கொண்ட மங்களமானவரே! கோபத்தினாலோ, அஜாக்கிரதையாலோ தன் கணவர் வசிஷ்டரைப் பிரிந்து இங்கு வந்து விட்ட அருந்ததியாக ஒருவேளை நீங்கள் இருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.

"அழகிய பெண்மணியே! உங்கள் புதல்வர்கள் யார், உங்கள் தந்தை யார், உங்கள் சகோதரர்கள் யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா? உங்கள் கணவர் யார்? நீங்கள் எந்த கிரகத்திலிருந்து தவறாக இந்த பூமியில் வந்து இறங்கித் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள்?

"நீங்கள் அழுவதாலும், நீண்ட பெருமூச்சு விடுவதாலும், உங்கள் கால்கள் தரையைத் தொடுவதாலும், ஒரு உயர்ந்த பெயரை உங்கள் அரிய செல்வமாக நினைத்து நீங்கள் எப்போதும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதாலும் நீங்கள் ஒரு தேவலோகத்துப் பெண் இல்லை என்று நான் கருதுகிறேன்.

"தாங்கள் ஜனஸ்தானம் என்ற இடத்திலிருந்து ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட பெண்மணியான சீதை என்று நான் நினைக்கிறேன். அவ்வாறானால், என் ஊகத்தை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்: ஏனெனில், நான் உங்களைப் பற்றி விசாரித்தறிய வந்திருக்கிறேன். 

"உங்களிடம் நான் காணும் அழகு மனிதர்களிடம் காண முடியாதது. தவத்தால் உங்கள் மேனி ஒளிர்கிறது. உங்கள் மன வருத்தம் விவரிக்க இயலாதது. இவையெல்லாம் நீங்கள் ராமபிரானின் பட்டத்து ராணியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு என்னை வரவழைக்கின்றன."

ஹனுமானின் சொற்களையும், அவர் ராமபிரானைப் புகழ்ந்து பேசியதையும் கேட்ட வைதேஹியின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அசோக மரத்தின் மீது சாய்ந்தபடி, தலையை நிமிர்த்தி அவர் பேச ஆரம்பித்தார்.

"உலகம் முழுவதும் புகழ் பெற்றவரும், உலகத்தில் உள்ள அரசர்களுள் மிக மேலானவரும், தன் எதிரிகளுக்கு அச்சமூட்டுபவருமான தசரத சக்ரவர்த்தியின் மருமகள் நான். உயர்ந்த ஆத்மாவான விதேஹ நாட்டு அரசர் ராஜரிஷி ஜனகரின் மகள் நான். என் பெயர் சீதை. அறிவு மிகுந்தவரான ராமபிரானின் மனைவி நான்.

"என் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டும், ஒரு மனிதர் அனுபவிக்கக் கூடிய எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டும் ராமபிரானின் அரண்மனையில் 12 ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். அதற்குப் பிறகு, 13ஆவது ஆண்டில், இக்ஷ்வாகு குலத்தில் சிறந்தவரான ராமரை அரசாளும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி அரசரும், அவரது அரண்மனைப் புரோகிதர்களும் பணித்தனர்.

"இந்த முடிவைத் தொடர்ந்து, ராமரின் முடிசூட்டலுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது, அரசிகளில் ஒருவரான கைகேயி, அரசர் தனக்குத் தருவதாக வாக்களித்திருந்த வரத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.

"அவர் சொன்னார்: 'ராமன் அரசனாக முடி சூட்டப்பட்டால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். அன்றுதான் என் வாழ்வின் கடைசி நாளாக இருக்கும். பேரரசே! முன்பொரு நாள் உங்களிடமிருந்து உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் வெளிப்பட்ட சொற்களைப் பொய்யாக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.'

"நேர்மையான அந்த அரசர், அரசிக்குத் தான் வாக்குக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் கைகேயியின் கொடிய சொற்களால் அவர் மிகவும் புண்பட்டு மனம் வருந்தினார்.

"பிறகு உண்மையும், நேர்மையும் கொண்ட அந்த வயதான அரசர் கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தன்னுடைய அரசுரிமையை பரதனுக்கு விட்டுக் கொடுக்கும்படி ராமனிடம் இறைஞ்சினார்.

"அரசுரிமையை விடத் தன் தந்தையின் வாக்கைப் பெரிதாக மதித்த ராமர் தன் தந்தையின் வேண்டுதலுக்கு உடனே இணங்கினார்.

"நேர்மைக்குப் பெயர் பெற்ற ராமருக்கு எப்போதுமே கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கம் இல்லை. ராமர் இனிமையாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார், அது அவருடைய உயிருக்கு ஆபத்தாக இருந்தாலும் கூட.

"அதனால், கீர்த்தி பெற்ற அந்த மனிதர் தன் விலையுயர்ந்த உடைகளையும், அரசுரிமையையும் எந்த ஒரு தயக்கமும் இன்றி விருப்பத்துடன் விட்டுக் கொடுத்தார். என்னைத் தன் தாயிடம் ஒப்படைத்தார்.

"ஆனால் அவருக்கு முன்பே நான் காட்டுக்குக் கிளம்பி விட்டேன்; ஏனெனில் அவர் இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கவும் நான் விரும்ப மாட்டேன்.

"சுமித்ரையின் குமாரரும், எல்லோருக்கும் நல்லவரும் உயர்ந்தவருமான லக்ஷ்மணரும் காட்டுக்குப் போக முன்னதாகவே கிளம்பி, காட்டில் உடுத்திக் கொள்ள வேண்டிய மரவுரியுடன் தயாராக நின்றார்.

"எங்கள் பிரபுவின் உத்தரவுக்கு உரிய மதிப்புக் கொடுத்து, இதற்குமுன் நாங்கள் பழக்கப்பட்டிராத, மனிதர்கள் மனதில் அச்சத்தையம், மரியாதையையும் ஏற்படுத்தக் கூடிய காட்டு வாழ்க்கையை, கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்து நாங்கள் வாழ்ந்து வந்தோம்.

"நாங்கள் தண்டகாரண்யத்தில் வசித்து வந்தபோது, வீரம் பொருந்திய ராமரின் மனைவியான நான் தீய உள்ளம் கொண்ட ராவணனால் கடத்தப்பட்டேன். ஆனால் அவன் என் ஆயுளை இன்னும் இரண்டு மாதங்கள் நீட்டித்திருக்கிறான். எனவே இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என் வாழ்வு முடியப் போகிறது."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ: 


சர்க்கம் 34 - ராம லக்ஷ்மணர்கள் 
நலமாக இருப்பது பற்றிக் கூறுதல்

சீதையின் மிகவும் வருத்தம் தோய்ந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் அவருடைய நொந்து போன மனதுக்கு இதமளிக்கும் வகையில் இவ்வாறு பதிலளித்தார்.

"ஓ, மேலான பெண்மணியே! ராமர் பற்றியும், லக்ஷ்மணர் பற்றியும் உங்களிடம் தகவல் சொல்ல, ராமரின் ஆணையால் இங்கு வந்திருக்கும் ஒரு தூதுவன் நான்.

"விதேஹ நாட்டு இளவரசியே! ராமபிரான் நலமாக இருக்கிறார். தான் நலமாக இருப்பது பற்றித் தங்களிடம் தெரிவிக்கும்படி அவர் எனக்கு ஆணையிட்டுள்ளார்.

"மேலான பெண்மணியே! தசரதரின் புதல்வரும், வேதங்களை அறிந்தவர்களில் சிறந்தவரும், வேதங்களைக் கையாளும் அதே திறமையுடன் பிரம்மாஸ்திரத்தையும் கையாளக் கூடியவருமான ராமர் உங்கள் நலம் பற்றி விசாரித்தார்.

"மேலும்,  உங்கள் கணவருக்குப் பிரியமானவரும், பெரும் துயரால் வெந்து கொண்டிருப்பவருமான சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் மரியாதையுடன் கூடிய தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறார்."

அந்த இரு உயர்ந்த மனிதர்களும் நலமாக இருப்பதை அறிந்து அந்தப் பெண்மணி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவராக ஹனுமானிடம் கூறினார்:

"எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! எவருக்குமே நீண்ட காலம் கழித்தாவது ஒரு மகிழ்ச்சியான நேரம் வரும் என்ற பொதுவான நம்பிக்கை என் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது போலிருக்கிறது!"

சீதையை நேரே பார்த்ததில் ஹனுமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருவர் மனதிலும் நம்பிக்கை உருவாகி இருவரும் தங்களுக்கிடையே உரையாடத் தொடங்கினர்.

சோகத்தில் ஆழ்ந்திருந்த சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹனுமான் அவர் அருகில் வந்தார். ஹனுமான் அவருக்கு அருகில் வர வர சீதைக்கு அவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ராவணனோ என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

'இது நிச்சயம் மாறுவேடத்தில் வந்திருக்கும் ராவணன்தான். இவரிடம் இது போல் உரையாடியது எத்தனை முட்டாள்தனம்!'

அழகிய உருவம் கொண்ட சீதை அசோக மரத்தைப் பிடித்துக் கொண்டிருந்த தன் கையை எடுத்து விட்டு, ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியவராகத் தரையில் அமர்ந்தார்.

அவர் பயந்து போனதையும், பயத்தினால் எழுந்த சந்தேகத்துடன் இருந்ததையும் கண்ட வீரம் மிகுந்த ஹனுமான் அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.

ஆனால் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த சீதை தன் கண்ணைக் கூடத் திறக்கவில்லை.

அழகானவரும், இனிய குரல் உடையவருமான சீதை அந்த வானரர் நீண்ட நேரம் தன் காலடியில் விழுந்து கிடப்பதைக் கண்டு மனதில் சற்று துணிவு வரப் பெற்றவராக அவரிடம் இவ்வாறு கூறினார்:

"நீ அந்தத் தீயவனான ராவணனாக இருந்தால், நீ என் மனதுக்கு அதிகம் வலியைத்தான் ஏற்படுத்துகிறாய். நீ எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஜனஸ்தானத்தில் உன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு துறவி போல் தோன்றிய அதே ராவணன்தான் நீ.

"ஓ, எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடிய அரக்கனே! பயத்தினாலும், உணவு உண்ணாததாலும் மெலிந்து போயிருக்கும் எனக்கு நீ வலி ஏற்படுத்துகிறாய். இது சரியல்ல.

"ஆனால் என் சந்தேகங்கள் தவறாகக் கூட இருக்கலாம். ஏனெனில் உன்னைப் பார்க்கும்போது என் மனதில் சற்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓ, சிறந்த வானரமே! நீ உண்மையாகவே ராமரின் தூதராக இருந்தால் உனக்கு நன்மை உண்டாகட்டும்.

"ராமரைப் பற்றிய அனைத்தையும் கூறும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அவரைப் பற்றிக் கூறு. ஒரு ஆற்றின் ஓட்டம் அதன் கரைகளைக் கவர்வது போல் நீ என்னைக் கவர்கிறாய். என் வாழ்க்கையின் தலைவரான ராமரின் பெருமையைப் பற்றிப் பேசு.

"ஆச்சரியங்களின் ஆச்சரியமே! ஒரு கனவு கொடுக்கக் கூடிய மகிழ்ச்சியான அனுபவங்களைக் கண்டு நான் வியக்கிறேன். இவ்வளவு தூரம் தூக்கி வரப்பட்ட நான் ராமர் ஒரு குரங்கை தூதுவராக அனுப்பியதாகக் கற்பனை செய்து கொள்கிறேன்.

"வீரரான ராமரை லக்ஷ்மணருடன் கனவில் பார்த்தால் கூட, அதுவே என் மனச்சோர்விலிருந்து என்னைப் பெருமளவு விடுவிக்கும். ஆனால் கனவுகள் கூட எனக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கின்றனவா?

"ஆனால் இதை ஒரு கனவு என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், கனவில் ஒரு குரங்கைப் பார்ப்பதன் மூலம், ஒருவர் தன் சூழ்நிலைகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. மாறாக, எனக்கு இப்போது கிடைத்திருப்பது ஒரு நல்ல செய்தி.

"இது ஒரு கற்பனையான விருப்பமாக இருக்கலாம். இது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் தூண்டப்பட்டிருக்கலாம், அல்லது இது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அன்பினால் உருவாக்கப்பட்டிருக்கலாம். அல்லது பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர் போல் வெறும் மாயையாக இருக்கலாம்.

"ஆனால் இது பைத்தியக்காரத்தனமாகவோ, குழம்பிய மனத்தின் விளைவாக ஏற்பட்டதாகவோ இருக்க முடியாது, ஏனெனில் நான் யார் என்பதையும், இந்த வன வானரம் யார் என்பதையும் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது."

இவ்வாறு சாதகமான, மற்றும் பாதகமான அம்சங்களைப் பற்றிச் சிந்தித்த பின், அரக்கர்கள் எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்ட சீதாதேவி, தன் முன்னால் நிற்கும் குரங்கு, அரக்கர்களின் அரசனான ராவணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு மீண்டும் வந்தார்.

இந்த எண்ணத்தை மனதில் இருத்தியபடி, அழகிய தோற்றம் கொண்ட சீதை எதுவும் பேசாமல் அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வாயு புத்திரனான ஹனுமானால் சீதையின் மனக் குழப்பத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் இன்னும் ஆறுதலான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார்:

"ராமர் இப்படித்தான் இருப்பார்: அவர் சூரியனைப் போல் ஒளி மிகுந்தவர். சந்திரனைப் போல் அனைவருக்கும் சுகம் அளிப்பவர். குபேரனைப் போல் எல்லா செல்வங்களுக்கும் சொந்தக்காரர்.

"உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். விஷ்ணுவைப் போல் எல்லா சக்திகளையும் பெற்றவர். பிருஹஸ்பதி போல் உண்மையானவர். இனிமையாகப் பேசக் கூடியவர்.

"மன்மதனைப் போல் காண்பதற்கு அழகான தோற்றம் கொண்டவர். கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவார். எதிரிகளுக்கு பயமாக விளங்குபவர். தேரில் அமர்ந்து போர் செய்வதில் சிறந்த திறமை படைத்தவர். உலகில் உள்ள குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.

"உலகின் நலம் யாருடைய தோள்களின் வலுவின் மீது நிற்கிறதோ அந்த ராமர் தன் ஆசிரமத்திலிருந்து தொலைவிலிருந்த மாயமானால் ஈர்க்கப்பட்டார். அவர் இல்லாதபோது தாங்கள் ராவணனால் கடத்திச் செல்லப்பட்டீர்கள். அந்த ராவணன் விரைவிலேயே அழிவான். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.

"எந்த ராமரின் கடும் கோபத்துடன் செலுத்தப்படும் அம்புகள் ராவணனைக் கொல்லப் போகின்றனவோ, அந்த ராமர் என்னை தூதுவனாக அனுப்பி இருக்கிறார்.

"உங்கள் பிரிவினால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர் தன்னுடைய நலம் பற்றித் தங்களிடம் தெரிவிக்கும்படி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.

"சுமித்ரையின் புதல்வரும், எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பவருமான வீரர் லக்ஷ்மணர் உங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து, உங்கள் நலம் பற்றி விசாரிக்கிறார்.

"ஓ, பெண்மணியே! வானர அரசரும் ராமரின் நண்பருமான சுக்ரீவனும் உங்கள் நலம் குறித்து விசாரித்து, உங்களுக்குத் தன் மரியாதையைத் தெரிவிக்கிறார்.

"லக்ஷ்மணர் மற்றும் சுக்ரீவருடன் சேர்ந்து ராமர் எப்போதும் உங்களைப்  பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அரக்கப் பெண்கள் மத்தியில் நீங்கள் இன்னும் உயிருடன் இருப்பது ஒரு அதிர்ஷ்டவசமான விஷயம்தான்.

"விரைவிலேயே நீங்கள்  கோடிக்கணக்கான வானரர்கள் மத்தியில் ராமரையும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரையும், அளவற்ற ஆற்றல் கொண்ட சுக்ரீவரையும் சந்திக்கப் போகிறீர்கள்.

"கடலைக் கடந்து இலங்கையை அடைந்த நான் சுக்ரீவரின் அமைச்சரான ஹனுமான். என் ஆற்றல் மூலம் என் கால்களை ராவணனின் தலையில் வைப்பது போல், கடல் கடந்து உங்களைச் சந்திக்க, இலங்கைக்கு வந்திருக்கிறேன்.

"ஓ, பெருமை வாய்ந்த பெண்மணியே! என்னைப் பற்றி உங்கள் மனதில் இருக்கும் ஐயங்களையும், சந்தேகங்களையும் விரட்டி விடுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்."

சர்க்கம் 35 - ராமரின் அங்க அடையாளங்களைக் கூறுதல்

அந்த உயர்ந்த வானரரிடமிருந்து ராமர் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த விதேஹ நாட்டு இளவரசி சீதை இனிய, அன்பு நிறைந்த சொற்களில் பேசத் தொடங்கினார்.

அவர் கேட்டார்: உனக்கு எப்போது ராமருடன் பழக்கம் ஏற்பட்டது? லக்ஷ்மணரை உனக்கு எப்படித் தெரியும்? குரங்குகளும் மனிதர்களும் எப்படி நண்பர்கள் ஆயினர்?

"ஓ, வானரரே! இன்னொரு முறை ராம, லக்ஷ்மணர்களின் அங்க அடையாளங்களை விவரித்துச் சொல்லும். இது என் துயரத்தைக் குறைக்கப் பெருமளவு உதவும்.

"ராம, லக்ஷ்மணர்களின் தன்மைகள் என்ன? அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் கைகளும், தொடைகளும் எப்படி இருக்கும்? அவற்றை எனக்கு விவரித்துச் சொல்."

விதேஹ நாட்டு இளவரசியின் பேச்சைக் கேட்டதும், வாயு குமாரரான ஹனுமான் ராமரின் தோற்றத்தை விவரிக்கத் தொடங்கினார்.

"தாமரை இதழ்கள் போன்ற அழகான கண்களைக் கொண்ட விதேஹ நாட்டு இளவரசியே! உங்கள் கணவர் ராமர் மற்றும் லக்ஷ்மணர் ஆகியோரின் தோற்றத்தை விவரிக்கச் சொல்லி நீங்கள் என்னை அன்புடன் கேட்டுக் கொண்டது உண்மையில் ஒரு அதிர்ஷ்டமான சூழ்நிலைதான்.

"நான் கவனித்த விதத்தில் ராமர், லக்ஷ்மணர் ஆகியோரின் தோற்றத்தை நான் விவரிப்பதைக் கேளுங்கள்.

"ஜனகரின் புதல்வியே! ராமர் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர். அவை எல்லா உயிர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.
அவர் அழகு, அன்பு இவற்றின் மொத்த உருவம்.

"பிரகாசத்தில் அவர் சூரியனைப் போன்றவர், பொறுமையில் பூமியைப் போன்றவர். அறிவில் பிரஹஸ்பதியைப் போன்றவர். புகழில் இந்திரனைப் போன்றவர்.

"அவர் எல்லா ஜீவராசிகளுக்கும் பாதுகாவலர், குறிப்பாக, தன் குலத்தைப் பாதுகாப்பவர். அவர் தர்மத்தின் மற்றும் நன்னடத்தைக் கோட்பாடுகளின் பாதுகாவலர். அவர் தன் எதிரிகளுக்கு பயமாக விளங்குபவர்.

"ஓ, அழகிய பெண்மணியே! அவர் நான்கு வர்ணங்களைப் பாதுகாப்பவர். உலகில் நிலவும் நீதிக் கோட்பாட்டை உருவாக்கியவர் அவர்தான். தானே ஒரு உதாரணமாக விளங்கி, அதைச் செயல்படுத்துபவரும் அவரே.

"அவர் தோற்றம் ஒளி பொருந்தியது. அவர் எப்போதும் மற்றவர்களால் வணங்கப்படுகிறார். அவர் தன் புலன்களுக்கு எஜமானர். சாதுக்களுக்கு அவர் எப்போதும் நன்மை செய்பவர். எல்லா விஷயங்களிலும் எது சரியான வழி என்பதை அவர் அறிந்தவர்.

"அவர் ராஜதந்திரத்தில் நிபுணர். எனவே அவர் எப்போதும் சாதுக்களிடம் மரியாதையாக இருப்பார். அவர் எல்லா வேதங்களின் உட்பொருளையும் அறிந்தவர். அவர் உயர்ந்த குணமுடையவர். அவர் மிகவும் அடக்கமானவர், ஆனால் போரில் அச்சுறுத்தும் விதத்தில் இருப்பார்.

"அவர் யஜுர் வேதத்தை மிக நன்றாக அறிந்தவர். வேதம் அறிந்தவர் அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர். வேதங்கள், உபவேதங்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய அறிவு எல்லாவற்றிலும் அவர் ஒரு நிபுணர்.

"அவர் பரந்த தோள்களையும், நீண்ட புஜங்களையும் கொண்டவர். அவர் கழுத்தின் அமைப்பு ஒரு சங்கைப் போன்று இருக்கும். அவர் முகம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அவர் தோள்கள் சதைப்பிடிப்பு கொண்டவை. அவர் கண்களில் ஒரு சிவப்பு காணப்படும். ராமரின் பெயர் மனிதர்களிடையே பிரபலமானது.

"அவருடைய குரல் துந்துபியின் (முழவின்) ஒலியை ஒத்தது. அவர் மென்மையான நீல நிறம் கொண்டவர். அவர் உயரமும், பருமனும் உள்ளவர், அழகிய தோற்றம் உள்ளவர்.

"அவருடைய மூன்று உறுப்புக்கள் - மார்பு, மணிக்கட்டுகள் மற்றும் முஷ்டிகள் உறுதியானவை. அவருடைய முடிகள், முழங்கால் முட்டிகள், விரைகள் இவற்றின் முனைகள் சம நிலையில் உள்ளவை.

"அவருடைய அடிவயிறு, தொப்புள் மற்றும் மார்பு உயர் நிலையில் உள்ளவை. அவருடைய கண்கள், நகங்கள், உள்ளங்கைகள், பாதங்கள் ஆகியவற்றின் ஓரங்கள் செவ்வரி படர்ந்தவை.

"அவர் பாதங்களுக்கு அடியில் உள்ள கோடுகள், அவர் தலையில் உள்ள முடிகள், அவருடைய இனப்பெருக்க உறுப்பு ஆகியவை மென்மையானவை, பளபளப்பானவை; அவருடைய குரல், நடை மற்றும் நிற்கும் விதம் ஆகியவை ஈர்க்கக் கூடியவை.

"அவருடைய கழுத்திலும், அடிவயிற்றிலும் மூன்று மடிப்புகள் உள்ளன. அவர் மார்பு, மார்பின் முனைகள், உள்ளங்கால் கோடுகள் ஆகியவை ஆழமாகப் பதிந்தவை. அவர் கழுத்து, பிறப்புறுப்பு, முதுகு மற்றும் முழங்கால்கள் சிறியவை. அவர் தலையில் மூன்று சுழல் வட்டங்களும், அவருடைய அகன்ற பாதத்திலும், நெற்றியிலும் நான்கு கோடுகளும் உள்ளன.

"அவருடைய உயரம் நான்கு முழம். அவருடைய கைகள், முழங்கால்கள், தொடைகள் மற்றும் கன்னங்கள் சரியான அளவில் அமைந்தவை.

"அவருடைய முகம், வாய், கண்கள், நாக்கு, உதடுகள், தாடை, முகவாய், மார்பு, நகங்கள், கைகள், கால்கள் - இவை தாமரை போன்றவை.

"அவருடைய மார்பு, தலை, நெற்றி, கழுத்து, தோள்கள், கைகள், தொப்புள், பக்கங்கள், முதுகு, குரல் ஆகியவை சரியான அளவானவை.

"வீரம், புகழ், செல்வம் இந்த மூன்று குணங்களுக்காக அவர் எங்கும் அறியப்பட்டவர்.

"அவருடைய பற்களும், கண்களும் வெண்மையானவை. அவருடைய அக்குள்கள், அடிவயிறு, மார்பு, மூக்கு, கைகள், நெற்றி ஆகியவை உயர்ந்த நிலையில் இருப்பவை.

"அவருடைய தலைமுடி, முகத்தில் உள்ள முடி, நகங்கள், உடலில் உள்ள முடி, தோல், விரல்கள், கண்கள், பிறப்புறுப்பு, அறிவு ஆகியவை பண்பட்டவை.

"காலை, முற்பகல், பிற்பகல் ஆகிய ஒரு நாளின் மூன்று பகுதிகளிலும், இரவிலும் அவர் ஒழுங்கு, நேர்மை, செல்வம், உயர்வான சுகங்கள் ஆகியவற்றை இந்த வரிசையில் பின்பற்றுகிறார்.

"அவர் உண்மையிலும், தர்மத்தின் விதிகளிலும் நிலைபெற்றவர். அவர் மிகவும் அதிர்ஷ்டம் மிகுந்தவர். பொருளை ஈட்டுவதிலும் சரி, அதை விநியோகிப்பதிலும் சரி, அவர் திறமை பெற்றவர்.

"நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிந்தவர். உலகுக்கு நன்மை செய்வதில் அவர் எப்போதும் விருப்பம் உள்ளவர்.

"சுமித்ரையின் புதல்வரும், யாராலும் வெல்ல முடியாதவருமான அவருடைய இளைய சகோதரர் லக்ஷ்மணரும் தோற்றம், அன்பு மற்றும் நற்குணங்களில் அவருக்கு இணையானவர்.

"இந்த மேலான மனிதர்கள் எல்லா இடங்களிலும் உங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது நாங்கள் அவர்களை சந்திக்க நேர்ந்தது.

"உங்களைத் தேடி அவர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, தன் அண்ணனால் அவமானப்படுத்தித் துரத்தப்பட்டு, ரிஷ்யமுக பர்வதத்தின் அழகிய பகுதிகளில் அச்சத்துடன் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவரை அவர்கள் சந்தித்தனர்.

"தன் அண்ணனால் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த உண்மையுள்ள சுக்ரீவரை எங்களைப் போன்ற சிலர் மட்டும்தான் கவனித்துக் கொண்டிருந்தோம்.

"அந்தச் சமயத்தில்தான் அந்த வீரர்கள் மரவுரி தரித்துக் கொண்டு, கையில் சக்தி வாய்ந்த விற்களை ஏந்தியபடி ரிஷ்யமுக பர்வதத்தின் அழகிய பகுதிகளுக்கு வந்தனர்.

"அந்த இரண்டு வில் வீரர்களையும் பார்த்து, வானரத் தலைவர் சுக்ரீவர் பயந்து போய், மலையின் உச்சிக்கு ஓடினார். அதற்குப் பிறகு அந்த வானரத் தலைவர் மலையின் உச்சியின் மீது இருந்து கொண்டு, புதிதாக வந்தவர்களைச் சந்திக்க என்னை அனுப்பினார்.

"சுக்ரீவரின் ஆணைப்படி, அந்த அழகிய அரச குமாரர்களை நான் சந்தித்தேன். கைகளைக் குவித்து அவர்களை வணங்கி அங்கிருந்த நிலவரத்தைத் தெரிவித்தேன்.

"இவ்வாறு எங்களைப் பற்றிய தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்து அவர்களைத் திருப்தி அடையச் செய்தபின், அவர்களை என் முதுகில் சுமந்து கொண்டு சுக்ரீவர் இருந்த இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.

"மேன்மை தங்கிய சுக்ரீவருக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். இவ்வாறு அவர்கள் அறிமுகமானதும், அவர்கள் உரையாடிக் கொண்டனர். உரையாடலின் விளைவாக அவர்களுக்கிடையே பெரிய அளவில் நம்பிக்கை விளைந்தது.

"கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி அவர்களிடையே நிகழ்ந்த உரையாடலின்போது, வானரர்களின் அரசரும், அரச குலத்தைச் சேர்ந்த ராமரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் மிகவும் திருப்தி ஏற்பட்டது.

"மிகுந்த பலமும், வீரமும் கொண்ட தன் அண்ணன் வாலியால் ஒரு பெண்ணின் காரணமாக நாட்டிலிருந்து துரத்தப்பட்ட சுக்ரீவருக்கு லக்ஷ்மணரின் சகோதரரான ராமர் ஆறுதல் கூறினார்.

"அதே சமயம், செயல்களைச் செய்து முடிப்பதில் சமர்த்தரான லக்ஷ்மணர், உங்களைப் பிரிந்ததால் தன் அண்ணனுக்கு நேர்ந்த துயரம் பற்றி வானர அரசரான சுக்ரீவரிடம் எடுத்துக் கூறினார்.

"லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டதும், சுக்ரீவர் ராகு, கேதுவால் பீடிக்கப்பட்ட சூரியனைப் போல் துயரத்தால் சூழப்பட்டார்.

"அதற்குப் பிறகு, ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, வானிலிருந்து நீங்கள் கீழே எறிந்த எல்லா அணிகலன்களையும் வானரர்கள் எடுத்து வந்து ராமரின் முன்பு வைத்தனர். நீங்கள் இருக்குமிடம் மட்டும் தெரியவில்லை.

"மென்மையான ஒலியுடன் பூமியில் விழுந்து சிதறிய எல்லா அணிகலன்களையும் நான்தான் சேகரித்தேன். இவற்றை ராமரிடம் காட்டியபோது அவர் மூர்ச்சை அடைந்தார்.

"பிறகு, ஒரு தேவலோகத்தவரைப் போல் தோன்றும் உங்கள் கணவர் அந்த நகைகளைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு நீண்ட நேரம் உங்கள் விதியை நொந்து கொண்டார்.

"அந்த நகைகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர் துயரத்தால் அழுதார். அந்த நகைகளைப் பார்த்தது அவருடைய சோக நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரியச் செய்யும் நெருப்பாகத்தான் அமைந்தது. துயரத்தில் மூழ்கிய அவர் நீண்ட நேரம் கீழே விழுந்தே கிடந்தார். நிறைய ஆறுதல் கூறி நான் அவரை எழுந்து உட்காரச் செய்தேன்.

"லக்ஷ்மணருடன் சேர்ந்து ராமர் அந்த ஆபரணங்களை சுக்ரீவரிடம் பலமுறை காட்டி அவற்றை அவருடைய பொறுப்பில் ஒப்படைத்தார்.

"உயர்ந்த பெண்மணியே! உங்களைப் பிரிந்ததால் ரகுவம்ச திலகர் தனக்குள் எரிமலை போல் கனன்று கொண்டிருக்கிறார். உங்கள் பொருட்டு அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் பட்டினி, தூக்கமின்மை, கவலை ஆகியவை அடுப்பில் எரியும் நெருப்பு போல் எரிந்து கொண்டிருக்கின்றன.

"பூகம்பம் மலையைப் பிளப்பது போல் உங்கள் பொருட்டு அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரம் அவரை முழுவதுமாக நொறுக்கி விட்டது.

"ஓ, இளவரசியே! உங்களைக் கண்டு பிடிக்க முடியாததால், காடுகள், ஆற்றுப்படுகைகள், மலைச்சரிவுகள் போன்ற பல இடங்களிலும் திரிந்து கொண்டு அவர் பெரும் துயர மனநிலையில் இருக்கிறார்.

"ஜனகரின் மகளே! பெரும் வீரம் கொண்ட சிங்கம் போன்ற ராமர் விரைவிலேயே ராவணனையும், அவன் உறவினர்களையும், கூட்டாளிகளையும் கொன்று விட்டு உங்களிடம் வருவார்.

"ராமரும், சுக்ரீவரும் தங்கள் சந்திப்பின்போது வாலியைக் கொல்வது பற்றியும், உங்களைத் தேடுவது பற்றியும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

"அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு வீர இளவரசர்களும் கிஷ்கிந்தையில் வாலியுடன் போர் செய்து அவரைக் கொன்றார்கள்.

"ராமர் தன் புஜபலத்தினால் வாலியைக் கொன்று சுக்ரீவரை எல்லா வானரர்களுக்கும், கரடிகளுக்கும் அரசராக்கினார்.

"பெண்மணி! இவ்விதமாகத்தான் ராமருக்கும், சுக்ரீவருக்கும் இடையே நட்பும், ஒன்றிணைப்பும் ஏற்படுத்தப்பட்டன. எனவே என்னை அவர்கள் இருவரின் தூதன் என்று அறிவீர்களாக!

"ஆட்சியைத் திரும்பப் பெற்ற பிறகு, சுக்ரீவர் சக்தி வாய்ந்த எல்லா வானரர்களையும் அழைத்து, உங்களைத் தேடுவதற்காக அவர்களை பத்துத் திசைகளுக்கும் அனுப்பினார்.

"அந்த வானர அரசரின் கட்டளையால் அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த அந்த வானரர்கள் இமயமலையைப் போன்ற பெரிய தோற்றம் கொண்டவர்களாக, உலகில் உள்ள எல்லா இடங்களையும் நாடிச் சென்றனர்.

"அப்போதிலிருந்து, நாங்கள் அனைவரும், மற்ற வானரர்களுடன் சேர்ந்து சுக்ரீவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

"வாலியின் சக்தி வாய்ந்த புதல்வர் அங்கதன் மூன்றில் ஒரு பங்கு வானரர்கள் சூழத் தேடுதலுக்காகக் கிளம்பினார்.

"பல நாட்கள் விந்திய மலைப் பகுதியில் இரவும் பகலும் தேடியது பலனளிக்கவில்லை. எங்கள் முயற்சி தோல்வி அடைந்ததால், நாங்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினோம்.

"எங்கள் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன என்ற முடிவுக்கு வந்து, எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம் விரைவில் முடியப் போகிறது என்பதை உணர்ந்து, கோபம் கொண்ட அரசர் சுக்ரீவரை எதிர்நோக்குவதை விட எங்கள் உயிரை விடுவதே நல்லது என்று நாங்கள் நினைத்தோம்.

"காடுகள், கோட்டைகள், மலைகள், ஆறுகளில் எல்லாம் தேடிய பிறகு, எங்கள் உயிரை விடுவதற்கு நாங்கள் தயாரானோம்.

"விதேஹ நாட்டு இளவரசியே, நாங்கள் அனைவரும் உண்ணாமல் இருந்து உயிர் விடத் தயாரானதைக் கண்டு உயர்ந்த வானரரான அங்கதர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்.

"ஜடாயுவின் மரணம், வாலி அழிக்கப்பட்டது, தேவியைக் கண்டு பிடிப்பதில் நாங்கள் தோல்வி அடைந்தது, உண்ணாமல் இருந்து உயிர் துறப்பது என்ற எங்கள் உறுதி ஆகியவை குறித்து அவர் வருந்தினார்.

"எங்கள் எஜமானரின் கட்டளையை நிறைவேற்றத் தவறியதால் உயிர் துறக்கத் தயாராக இருந்த எங்களை நோக்கி உன்னத ஆத்மாவான ஒரு கழுகு அப்போது வந்தது.

"ஜடாயுவின் சகோதரரான சம்பாதி என்ற அந்தக் கழுகு அவருடைய சகோதரரின் மரணச் செய்தியைக் கேட்டதும் எங்களிடம் உணர்ச்சி பொங்கக் கூறியது:

"உயர்ந்த வானரர்களே! என் தம்பி எந்த இடத்தில் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதை உங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

"ஜனஸ்தானத்தில் ஜடாயு உங்களைக் காப்பாற்ற வந்தபோது அவர் ஒரு கொடிய அரக்கனால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதை நடந்தபடி விவரமாக அங்கதர் அவரிடம் எடுத்துரைத்தார்.

"அழகிய பெண்ணே! அருணரின் புதல்வரான அந்த சம்பாதி தன் சகோதரரின் மரணம் குறித்து வருந்தினார். தாங்கள் ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருப்பதையும் அவர் தெரிவித்தார்.

"சம்பாதி அளித்த இந்த உற்சாகமூட்டும் தகவலைக் கேட்ட பிறகு அங்கதர் உட்பட நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம். உங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையால் உற்சாகம் அடைந்து வானரர்கள் மிகுந்த எழுச்சியுடன் விந்திய மலையிலிருந்து கிளம்பி சமுத்திரத்தின் வடக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

"கடற்கரையைப் பார்த்ததும், அங்கதரும் மற்றவர்களும் உங்களைக் கண்டு பிடிக்க இந்தக் கடலைத் தாண்டிச் செல்ல வேண்டிய கடின செயலை நினைத்து மீண்டும் மனச்சோர்வு அடைந்தனர்.

"வானரர் சேனை முழுவதும் மன வருத்தத்துடனும், இயலாமை உணர்வுடனும் இருந்ததைக் கண்ட நான் இந்தப் பகுதியையும் முக்கிய நிலப்பகுதியையும் பிரிக்கும் நூறு யோஜனை அகலமுடைய இந்தக் கடலைக் கடந்து வந்தேன்.

"இந்த ஒரு இரவில் நான் அரக்கர்களால் நிறைந்த இந்த இலங்கை நகரம் முழுவதிலும் பயணம் செய்து விட்டேன். நான் ராவணனைப் பார்த்து விட்டேன். சோகத்தால் நிரம்பிய உங்களையும் பார்த்து விட்டேன்.

"குற்றமற்றவற்றவரே! நடந்தவற்றை நான் உங்களிடம் உண்மையாகக் கூறி விட்டேன். என்னை ராமபிரானின் தூதுவராக அறிந்து ஏற்றுக் கொள்வீர்களாக.

"பெண்மணியே! வாயு குமாரனும், சுக்ரீவரின் அமைச்சரும், ராமபிரானின் தூதனுமான நான் இங்கே உங்கள் காரணமாகவே வந்திருக்கிறேன்.

"காகுஸ்தகுல திலகரும், வில்வீரர்களில் சிறந்தவருமான ராமர் பத்திரமாகவும், நன்றாகவும் இருக்கிறார். ராமரைக் காப்பாற்ற உறுதி பூண்டிருப்பவரும், எல்லா மங்கள சின்னங்களும் கொண்டிருப்பவருமான லக்ஷ்மணரும் அவ்வாறே இருக்கிறார்.

"பெண்மணியே! ராமபிரானின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற விருப்பம் உள்ள நான் சுக்ரீவரின் ஆணையை ஏற்றுச் செயல்பட்டு நானாக முயன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

"விரும்பும் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடிய நான், நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவனாக தனியாகப் பயணம் செய்து யாருடைய உதவியும் இல்லாமல் இந்தத் தெற்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.

"உங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற வானரர்கள் வருத்தத்தை நான் உங்களைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதன் மூலம் போக்கப் போகிறேன்.

"தாயே! நான் கடலைக் கடந்து வந்தது வீண் போகவில்லை என்பது என் அதிர்ஷ்டம். உங்களைக் கண்டு பிடித்தேன் என்ற பெருமையை என் அதிர்ஷ்டத்தால் பெறப் போகிறேன்.

"வீரரான ராமர் விரைவிலேயே ராவணனையும், அவன் உறவினர்களையும் கூட்டாளிகளையும் அழித்து இந்த இடத்திலிருந்து உங்களை மீட்கப் போகிறார்.

"ஓ  விதேஹ நாட்டு இளவரசியே! மலைகளுக்குள் மால்யவான் என்ற மலை மிகவும் பெரிதானதும், புகழ் பெற்றதும் ஆகும். அந்த மலையிலிருந்து கேசரி என்ற வானரர் கோகர்ண மலைக்குச் சென்றார்.

"வருணனின் புனித பூமியில் தேவர்ஷிஸின் ஆணைப்படி சம்பாசாதனன் என்ற அரக்கனை அவர் கொன்றார். அந்த வானர வீரர்தான் என் தந்தை.

"மிதிலை நாட்டு இளவரசியே! அந்த வானரரின் மனைவியிடம் வாயு பகவானால் நான் பெறப்பட்டேன். என் செயல்களால் இவ்வுலகில் ஹனுமான் என்று பெயர் பெற்றேன்.

"விதேஹ நாட்டு இளவரசியே! நான் உண்மையானவன் என்று என் மீது   உங்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்வதற்காக, உங்கள் கணவரின் மேன்மைகளையும் சாதனைகளையும் பற்றி உங்களிடம் எடுத்துக் கூறினேன்.

"அந்த ரகுகுலத் திலகர் விரைவிலேயே உங்களை இந்த இடத்திலிருந்து மீட்கப் போகிறார்."

சோகத்தினால் எலும்பாக இளைத்திருந்த சீதை ராமரின் அடையாளங்களையும் குணங்களையும் பற்றி அளிக்கப்பட சான்றினால் ஹனுமானை ராமரின் உண்மையான தூதரென்று முழுமையாக நம்பினார்.

மிகுந்த மகிழ்ச்சியை அவரது வளைந்த புருவங்கள் எடுத்துக் காட்ட, அந்த மகிழ்ச்சியினால் உந்தப்பட்ட ஜனக புத்திரி கண்ணீர் வடித்தார்.

இணையற்ற அழகு கொண்ட செவ்வரி படர்ந்த நீண்ட கண்களுடன் கூடிய அவரது அழகிய முகம் ராகுவின் பிடியிலிருந்து மீண்ட சந்திரனைப் போல் பிரகாசித்தது.

அவருக்கு இப்போது ஹனுமான் யார் என்பது பற்றி எள்ளளவும் ஐயமில்லை. சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

சீதை ஹனுமானைக் கனிவுடன் பார்த்தபோது, அவர் தன் செய்தியின் மீதிப் பகுதியைக் கூறினார்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நான் எல்லா விவரங்களையும் உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் இனி அதிக மனத் தெம்புடன் இருங்கள். நான் இப்போது தங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமானால் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் விருப்பம் என்ன என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

"மிதிலை நாட்டு இளவரசியே! முனிவர்களின் விருப்பப்படி கேசரி என்ற ஒரு சிறந்த வானரர் சம்பசாதனர் என்ற அரக்கனைக் கொன்றார். முனிவர்களின் ஆசியால் சம்பசாதனரை அழித்தவரின் இன்னொரு வானர உருவாக, வாயுவின் குமாரராக நான் பிறந்திருக்கிறேன். அந்த வாயு தேவரின் சக்தியை நான் பெற்றிருக்கிறேன். 
சர்க்கம் 36 - அடையாள மோதிரத்தை அளித்தல் 
வாயுகுமாரரும் மிகுந்த சக்தியும் திறமையும் கொண்டவருமான ஹனுமான் சீதையின் மனதில் இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக மிகுந்த பணிவுடன் மேலும் சில வார்த்தைகளைக் கூறினார்:

"தாயே! புனிதவதியே! நான் உண்மையிலேயே ராமபிரானின் தூதன்தான். உங்கள் மனதில் இருக்கக் கூடிய இன்னும் சில ஐயங்களைப் போக்குவதற்காக ராமர் என்னிடம் கொடுத்தனுப்பிய அவர் பெயர் பொறித்த அடையாள மோதிரத்தைக் காட்டுகிறேன்.

"உங்கள் நிலை சீக்கிரமே மேன்மையடையும். உங்கள் துன்பம் நிறைந்த நாட்கள் முடிவுக்கு வரப் போகின்றன."

இவ்வாறு கூறி விட்டு அந்த உயர்ந்த வானரர் அந்த மோதிரத்தை சீதையிடம் அளித்தார். ஜனகரின் மகள் அந்த மோதிரத்தை கவனமாகப் பார்த்து விட்டு, தன் கணவரையே பார்த்து விட்டது போல் மகிழ்ச்சி அடைந்தார்.

தன கணவரைப் பற்றிய நம்பகமான நல்ல செய்தி கிடைத்ததில் அந்த நல்ல பெண்மணி சற்றே வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சி அடைந்தார். அந்த வானரத் தலைவரைத் தனக்கு நன்மை செய்பவராக ஏற்றுக்கொண்ட சீதை அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

சீதை சொன்னார்:
 "ஓ, சிறந்த வானரரே! உண்மையிலேயே நீங்கள் மிகவும் வீரமுள்ளவர், திறமை வாய்ந்தவர், அறிவுள்ளவர். அதனால்தான் யாருடைய உதவியும் இல்லாமல் அரக்கர்களின் இந்தக் கோட்டைக்குள் உங்களால் நுழைய முடிந்திருக்கிறது.

"அபாயமான சுறாக்களும், மீன்களும் நிறைந்த நூறு யோஜனை அகலமுடைய இந்த சமுத்திரத்தைத் தாண்டியதன் மூலம் நீங்கள் இந்த சமுத்திரத்தை ஒரு கன்றின் குளம்படி அளவே உள்ள சிறு பள்ளமாக மாற்றி விட்டீர்கள்.

" ஓ, உயர்ந்த வானரரே! உங்களை ஒரு சாதாரணக் குரங்காக நான் நினைக்கவில்லை. ஏனெனில் உங்களுக்கு ராவணனிடம் பயம் இல்லை, உங்கள் மனதில் சிறிதும் கலக்கம் இல்லை.

"குரங்குகளின் தலைவரே! நீங்கள் ராமரால் அனுப்பபட்ட தூதுவர் என்பதாலும், அனைவரின்  மனங்களையும், குணங்களையும் அறிந்தவர் என்பதாலும், நீங்கள் நான் பேசுவதற்கு ஏற்ற மனிதர்.

"வெல்ல முடியாத சக்தி படைத்த ராமர், ஒருவரின் தகுதியையும் துணிவையும் சோதிக்காமல் அவரை தூதராக அனுப்ப மாட்டார், அதுவும் என்னிடம்.

"நேர்மையானவரும், உண்மையை நேசிப்பவருமான ராமர் நலமாக இருக்கிறார் என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். சுமித்ரையின் புதல்வரும் அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரிப்பவருமான சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ராமர் நலமாக இருக்கிறார் என்பது நம்பிக்கை அளிக்கிறது. கோபத்தினால்  கடல் சூழ்ந்த இந்த உலகைப் பிரளய கால நெருப்பு போல் அவர் எரித்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன்.

"ராமர் லக்ஷ்மணர் இருவருமே தேவர்களைக் கூட தண்டிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள். ஆயினும் என் துயரங்களுக்கு முடிவே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

"உயர்ந்தவரான ராமர் மனச் சோர்வு அடையாமல் நிதானமான மனநிலையில் இருக்கிறார் என்றும், தன் விதியை நொந்து கொண்டிருக்காமல் செய்ய வேண்டியவை பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் நான் நம்புகிறேன்.

"இளவரசர் ராமர் நடந்தவற்றால் குழம்பி விடாமல் தைரியத்துடனும்,  சமநிலை கொண்ட மனத்துடனும் இருக்கிறார் என்று நம்புகிறேன். இந்தச் சூழ்நிலையில் அவர் ஆண்மை மிகுந்த செயல்களைச் செய்து கொண்டிருக்கறார் என்று நம்புகிறேன்.

"எதிரிகளை வீழ்த்துபவரான அவர் தன் நண்பர்களுக்குப் பரிசுகள் அளிப்பது, அவர்களுடன் இணக்கமாக இருப்பது, எதிரிகளை வெல்ல சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளைப் பயன்படுத்துவது என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறார் என்று நம்புகிறேன்.

"விசுவாசமுள்ள நண்பர் என்று எங்கும் புகழ் பெற்றிருக்கும் ராமரை அவர் நண்பர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அத்தகைய  நண்பர்களையும், துணைவர்களையும் அவர் இனிமையாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் அவர்களால் முறையாக கௌரவிக்கப்படுகிறார் என்றும் நம்புகிறேன்.

"சக்கரவர்த்தித் திருமகனான அவர் இன்னும் தேவர்களின் அருளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும், நம் முயற்சிகளால் அடையப்பட்டவை கூட கடவுளின் அருளினால் கிடைத்தவை என்பதைக் கருத்தில் கொள்கிறார் என்றும் நம்புகிறேன்.

"என்னிடமிருந்து அவர் நீண்ட தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், என் மீது அவருக்கு இருக்கும் அன்பு குறையவில்லை என்று நம்புகிறேன்.

"ஓ, வானரரே! என்னை இந்தத் துன்பமான சூழலிலிருந்து விடுவிக்கச் செய்ய வேண்டிய செயல்கள் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

"மகிழ்ச்சிக்கு மட்டுமே தகுதி உடையவரான, துன்பம் அடையக் கூடாதவரான ராமர் மிகவும் துயரமான இந்த அனுபவங்களால் மனச்சோர்வு அடைய மாட்டார் என்று நம்புகிறேன்.

''கௌசல்யா மற்றும் சுமித்ரா ஆகியோர் நலமாக இருப்பது பற்றிய செய்தி அவருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

"எனக்கு ஏற்பட்டுள்ள துயரம் பற்றிய செய்தி ரகு குல திலகரான ராமரிடம் கோபத்தை ஏற்படுத்தி இருக்குமென்று நினைக்கிறேன். அதன் விளைவாக என் துயரிலிருந்து என்னை மீட்பதற்கான வழிகளில் அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.

"தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் பரதர் என்னை மீட்பதற்கான பணியில் ஈடுபட அவருடைய அமைச்சர்கள் தலைமையில் பெரிய படைகளை அனுப்புவார் என்று நம்புகிறேன்.

"வானரத் தலைவர் சுக்ரீவருடன் தங்கள் பற்கள் மற்றும் நகங்களையே ஆயுதமாகக் கொண்டுள்ள குரங்குகளின் சேனை புடை சூழ ராமர் என் பொருட்டு இங்கு வருவார் என்று நம்புகிறேன்.

"வில் வித்தையில் மிகுந்த அனுபவம் உள்ள சுமித்ரையின் வீரப் புதல்வர் தன் அம்பு மழையால் அரக்கர்களை ஓடச் செய்வார் என்று  நான் நம்புகிறேன்.

"கோபம் கொண்ட ராமரின் சக்தி வாய்ந்த, அச்சமூட்டும் அம்புகளால் ராவணனும் அவன் கூட்டாளிகளும் விரைவிலேயே கொல்லப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

"தங்க நிறம் கொண்ட அவருடைய தாமரை போன்ற முகம் என் பிரிவின் காரணமாக நீர் வற்றிய குளங்களில் உள்ள தாமரைகளைப் போல் இப்போது வாடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

"தர்மத்தில் அவருக்கிருந்த உறுதியின் காரணமாக நாட்டைத் துறந்து விட்டு வந்து, எந்த ஒரு பயமும், வருத்தமும், மனச் சோர்வும்  இல்லாமல் என்னைக் காட்டுக்கு நடத்தியே அழைத்துச் சென்ற அவர் எந்தச் சூழ்நிலையாலும் பாதிக்கப்படாமல் தன் தைரியத்தைக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

"ஓ, தூதுவரே! எனக்கு அவர் மீது இருக்கும் அன்பு காரணமாக, உயர்ந்தவரான என் தந்தையையோ, தாயையோ அல்லது வேறு எவரையுமோ அவருக்குச் சமமாக நான் கருதவில்லை. எனவே அவரைப் பற்றிய செய்தி எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்வரைதான் நான் உயிர் வாழ விரும்புகிறேன்."

மிகவும் அறிவுடையவளான அந்தப் பெண்மணி இவ்வாறு இனிமையான,  பொருள் நிறைந்த வார்த்தைகளை அனுமனிடம் பேசிய பிறகு, ராமரின் பக்தரான அந்த தூதுவர் மேலும் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக  மௌனமாக இருந்தார்.

சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு வீரம் மிகுந்த ஹனுமான் தன்  கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் உயர்த்தி அவரை வணங்கிய பிறகு கீழ்க்கண்டவாறு கூறினார்:

"நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற உண்மை தாமரைக் கண்கள் கொண்ட ராமருக்குத் தெரியாது. அதனால்தான் இந்திரன் வந்து சசிதேவியை அழைத்துப் போவது போல் அவர் வந்து உங்களை அழைத்துச் செல்லவில்லை.

"நான் ராமருக்குத் தகவலைத் தெரிவித்த உடனேயே, அவர் குரங்குகளும், கரடிகளும் கொண்ட பெரிய சேனையுடன் இங்கே வருவார்.

"கடலில் உள்ள நீரின் மட்டத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோமுடியாது என்றாலும், அவர் அதைத் தன் அம்புகளால் செயலற்றுப் போகச் செய்து  விட்டு, கடலைக் கடந்து இலங்கைக்கு வந்து, இந்த இடத்தை அரக்கர்கள் இல்லாத இடமாகச் செய்யப் போகிறார்.

"தன் வழியில் நிற்பவர் யாராக இருந்தாலும், அது மரண தேவதையாக இருந்தாலும், அசுரர்கள் அல்லது தேவர்களாக இருந்தாலும், அவர்களை ராமர் அழிப்பது உறுதி.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால், ராமர் சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட யானையைப் போல் மனதில் பெரும் துயருடனும், வேதனையுடனும் இருக்கிறார்.

"மலய, விந்திய, மேரு, மந்தர மற்றும் துர்தர மலைகள் மீதும், எல்லாப் பழங்கள் மற்றும் வேர்கள் மீதும் சத்தியம் செய்து சொல்கிறேன். உதயசந்திரன் போன்ற முகத்துடனும், அழகிய கண்களுடனும், கவர்ந்திழுக்கும் சிவந்த உதடுகளுடனும், அற்புதமான காது வளையங்களுடனும் கூடிய ராமரை நீங்கள் விரைவிலேயே பார்க்கப் போகிறீர்கள்.

" விதேஹ நாட்டு இளவரசியே! ஐராவதம் என்ற தன் யானையின் மீது அமர்ந்தபடி இந்திரன் வானுலகத்தில் காணப்படுவது போல், ப்ரஸ்ரவண மலையின் மீது ராமர் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

"ராமர் மாமிசம் புசிப்பதில்லை, தேன் கூட அருந்துவதில்லை. வானப்ரஸ்தத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட சில கிழங்குகள் மற்றும் காய்கறிகளை மட்டும் தினமும் ஐந்தாம் ஜாமத்தில் அவர் தன்  உணவாக அருந்துகிறார்.

"முழுவதும் உங்கள் நினைவிலேயே ஆழ்ந்திருப்பதால், தன் மீது மொய்க்கும் ஈக்கள், கொசுக்கள், தன் மீது ஊறும் புழு பூச்சிகளைக் கூட அவர் விரட்டுவதில்லை..

"உங்கள் மீது இருக்கும் ஆழமான அன்பால், அவர் எப்போதும் ஆழ்ந்த சோகமும், சிந்தனையும் நிறைந்த மனநிலையில் இருக்கிறார். அதனால் வேறு எதையும் உணராமல் இருக்கிறார்.

"மனிதர்களில் மிகவும் உயர்ந்தவரான ராமர் எப்போதும் உறக்கமின்றி இருக்கிறார். சிறிது உறக்கம் வந்தாலும், 'ஓ, சீதா என்று இனிமையாகக் கூவிக்கொண்டே அவர் விரைவிலேயே உறக்கம் கலைந்து விடுகிறார்.

"பூக்களையோ, பழங்களையோ பெண்களுக்குப் பிடித்த வேறு எந்தப் பொருளையோ அவர் பார்க்க நேர்ந்தால், உங்களைப் பற்றி, 'ஓ, அன்புக்குரியவளே!' என்று மிகுந்த துயரத்துடன் கூவுகிறார்.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! தர்மத்தின் பாதையில் முதலில் நிற்பவரான அந்தச் சிறந்த இளவரசர் ராமர் உங்களை மீட்பதற்கான வழிகளையும், முறைகளையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். உங்களிடமிருந்து பிரிந்த சோகத்தால் எப்போதும் உங்கள் பெயரை அழைத்துக் கொண்டிருக்கிறார்."

ராமரைப் பற்றிய புகழுரையைக் கேட்டதும், தன் துயருக்குச் சிறிது ஆறுதல் கிடைத்ததாக சீதை கருதினார். அதே சமயம் ராமரின் துயரம் பற்றி அவர் அறிந்தது அவரிடத்திலும் இணையான சோக அனுபவத்தை ஏற்படுத்தியது.

இலையுதிர் கால இரவில் சந்திரன் சிறிது நேரம் வானத்தில் தோன்றுவதும், சிறிது நேரம் மேகத்துக்குள் மறையவும் செய்வது போல், அவர் முகத்தில் மகிழ்ச்சி, சோகம் இரண்டும் மாறி மாறித் தோன்றின. 

சர்க்கம் 37 - ஹனுமான் தன் விஸ்வரூபத்தைக் காட்டுதல்
ஹனுமான் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பின், நிலவு போன்ற முகம் கொண்ட சீதை கீழ்க்கண்டவாறு உயர்ந்த கருத்துக்களைக் கூறினார்:

"ஓ, வானரரே! என்னைக் காப்பாற்றுவதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் ராமர் தன் மனதைச் செலுத்துவதில்லை என்பது இனிமையானதும், வரவேற்கத்தக்கதும் ஆகும் என்பதால் சந்தேகமில்லை. ஆனால் அவர் துயர நெருப்பால் நிரப்பப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு விஷமாக இருக்கிறது.

"ஒரு மனிதன் செல்வம் பெற்றிருந்தாலும் சரி, அல்லது அழுத்தும் துன்பத்தின் பிடியில் இருந்தாலும் சரி, இந்த இரண்டு நிலையிலுமே, அவன் முன்பு செய்த கர்மம்தான் அவனை ஒரு கயிறு போல் அவனைக் கட்டி, பிடித்து இழுக்கிறது.

"ஓ, உயர்ந்த வானரரே! மனிதனால் விதியை வெல்ல முடியாது என்பது நிச்சயம். பல துரதிர்ஷ்டங்களாலும், துயரமான அனுபவங்களாலும் அழுத்தப்பட்டிருக்கும் சுமித்ரையின் புதல்வர் லக்ஷ்மணர், நான் மற்றும் ராமர் ஆகியோரின் உதாரணங்களையே பாரும்.

"கப்பல் உடைந்து போய், நீந்தியே மறுகரைக்குச் செல்ல முயல்பவரைப் போல் ராமர் இருக்கிறார். அவர் வீசப்பட்டிருக்கும் துயரக்கடலை சாதாரணமான வழியில் அவர் எப்படிக் கடப்பார்?

"அரக்கர்களை அழித்து, ராவணனைக் கொன்று, இலங்கையை வென்றபின் அவர் என்னை எப்போது சந்திக்கப் போகிறார்? ஓராண்டு முடிவதற்கு இன்னும் மீதமுள்ள சில நாட்கள்தான் என் உயிர் இருக்கப் போகிறது. எனவே விஷயங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமரிடம் கூறும்.

"ஓ, வானரரே! ராவணன் எனக்குக் கொடுத்துள்ள ஓராண்டு கால அவகாசத்தில், இது பத்தாவது மாதம். இன்னும் இரண்டு மாதங்கள்தான் மீதம் இருக்கின்றன.

"அவனுடைய சகோதரர் விபீஷணர் என்னைத் திரும்பக் கொண்டு விட்டு விடும்படியும், ராமரிடம் ஒப்படைத்து விடும்படியும், அதுதான் சிறந்த வழி என்றும் இனிமையான சொற்களால் அவனுக்கு ஆலோசனை கூறினார். ஆனால் அவன் அதைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

"என்னைத் திரும்பக் கொண்டு விட வேண்டும் என்ற யோசனை ராவணனுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. காலத்தின் பலியாக இருக்கும் அவனை யுத்த காலத்தில் எதிர்கொள்ள மரண தேவன் காத்துக் கொண்டிருக்கிறார்.

"ஓ, வானரரே! விபீஷணருக்கு அனலா என்று ஒரு பெண் இருக்கிறாள். அவருடைய மூத்த மகளான அவள் அவளுடைய தாயாரால் இங்கே அனுப்பப்பட்டாள். அவளே இந்த விவரங்களை என்னிடம் சொன்னாள்.

"ஓ, உயர்ந்த வானரரே! என் கணவர் என்னிடம் வருவார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் என் கணவர் தூய்மையானவர், பல உயர்ந்த பண்புகள் உள்ளவர்.

"ஓ வானரரே! ராமர் முன்முயற்சி, ஆண்மை, சக்தி, கருணை, நன்றி, துணிவு, மேன்மை ஆகியவை ஒன்றிணைந்தவர். தன் சகோதரர் லக்ஷ்மணரின் உதவி கூட இல்லாமல் பதினாலாயிரம் அரக்கர்களைத் தனியாகவே அழித்த அவர் ஒவ்வொரு எதிரியின் மனதிலும்  நடுக்கத்தை ஏற்படுத்துவார்.

"அந்த உயர்ந்த மனிதரை எந்தத் துயராலும் அசைக்க முடியாது. இந்திரனின் சக்தியை இந்திராணி அறிந்திருப்பது போல், ராமரின் சக்தியைப் பற்றி நான் முழுமையாக அறிவேன்.

"அரக்கர் சேனை என்ற நீர்ப்பரப்பை வீரம் மிகுந்த ராமர் அவருடைய அம்புகள் என்னும் கதிர்களால் வற்றச் செய்து விடுவார்."

ராமரின் விதியை நினைத்து, கண்களில் நீர் நிரம்பியிருந்த சீதையைப் பார்த்த ஹனுமான் அவரிடம் ஒரு யோசனையைத் தெரிவித்தார்:

"ரகுவம்ச திலகரான ராமர் என்னிடமிருந்து தகவலைக் கேட்டறிந்த உடனேயே குரங்குகளும், கரடிகளும் கொண்ட பெரிய சேனைகளுடன் இங்கே வருவார்.

"ஆனால், உயர்ந்த பெண்மணியே! நீங்கள் உடனடியாக மீட்கப்பட விரும்பினால், நீங்கள் என் தோளின் மீது அமர்ந்து கொள்ளலாம், ராவணனால் உருவாக்கப்பட்ட இந்தத் துயரமான  நிலையிலிருந்து  உங்களை நான் விரைவிலேயே விடுவிப்பேன்.

"உங்களை என் தோளில் உட்கார வைத்துக் கொண்டு என்னால்கடலை எளிதாகத் தாண்ட முடியும். ராவணனையும் சேர்த்து இலங்கை முழுவதையும் தூக்கிச் செல்வதற்கான பலம் எனக்கு இருக்கிறது.

"ஓ மிதிலை நாட்டு இளவரசியே! யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை அக்னி இந்திரனிடம் கொண்டு சேர்ப்பது போல், நான் உங்களை எடுத்துச் சென்று பராசர வனத்தில் அமர்ந்திருக்கும் ராமரிடம் கொண்டு சேர்ப்பேன்.

"விதேஹ நாட்டு இளவரசியே! எதிரிகளை அழிப்பதில் மஹாவிஷ்ணுவாகவே விளங்குபவரும், வானுலகில் அரியணையில் அமர்ந்திருக்கும் இந்திரனைப் போன்றவரும், உங்களைச் சந்திக்க மிகவும் விருப்பம் கொண்டிருப்பவரும், தன் ஆசிரமத்தில் இருந்து கொண்டே அதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பவரும், மிகுந்த சக்தி கொண்டவரும், லக்ஷ்மணரால் உதவப்படுபவருமான ராமரை தாமதமின்றி நீங்கள் சந்திக்கலாம்.

"ஓ, மங்களமான பெண்மணியே! என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள். தயங்க வேண்டாம். ரோகிணி சந்திரனோடு இணைந்தது போலும், இந்திராணி இந்திரனுடன் இணைந்தது போலவும், சுவர்ச்சலா தேவி சூரியனுடன் இணைந்தது போலவும் ராமருடன் இணையுங்கள். என் முதுகில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு நீங்கள் வானையும், கடலையும் கடக்கலாம்.

"உங்களை என் முதுகில் சுமந்து கொண்டு வேகமாகச் செல்லும்போது என்னைப் பின் தொடரும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இந்த இலங்கையில் யார் இருக்கிறார்கள்?

"விதேஹ நாட்டு இளவரசியே! நான் கடலைத் தாண்டி இந்தக் கரைக்கு வந்தது போல் உங்களை என் முதுகில் தூக்கிக் கொண்டு என்னால் சிரமமின்றி வானில் எழும்ப முடியும் என்பதை உங்களால் காண முடியும்."

ஹனுமானின் இந்த அற்புதமான வார்த்தைகளைக் கேட்ட சீதா மிகவும் மழிழ்ச்சி அடைந்து உடல் முழுவதும் புல்லரிப்பை அனுபவித்தார். அவர் இப்போது ஹனுமானிடம் வேறு விதமாகப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார்:

"ஓ ஹனுமான், வானர சேனைகளின் தளபதியே! இந்த நீண்ட தூரத்துக்கு நீ என்னைச் சுமந்து செல்ல விரும்புகிறாய்.  இதை உன் குரங்கு இயல்பின் வெளிப்பாடாகத்தான்  நான் பார்க்கிறேன்.

"ஓ, உயர்ந்த வானரே! சிறிய உடலைக் கொண்டிருக்கும் உன்னால் என்னை ராமர் இருக்கும் இடத்துக்கு எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?"

வாயுபுத்திரரும், எல்லையற்ற சக்திகளின் உறைவிடமுமான ஹனுமான் சீதை தன்னைக் குறைத்து எடை போட்டதைக் கேட்டு இவ்வாறு நினைத்தார்:

'அழகிய கண்களைக் கொண்ட விதேஹ நாட்டு இளவரசி  என்னுடைய இயல்பான சக்தியையும் திறமையையும் புரிந்து கொள்ளவில்லை. எனவே, என் விருப்பப்படி நான் எடுத்துக் கொள்ளக் கூடிய பல உருவங்களில் பொருத்தமான உருவத்தை நான் அவருக்குக் காட்டப் போகிறேன்.'

இவ்வாறு மனதில்முடிவு செய்த, கோபம், காமம் போன்ற ஆறு எதிரிகளை வெற்றி கொண்ட உயர்ந்த வானரரான ஹனுமான், அவருடைய பிறப்பின் மூலம் அவருக்கு சாத்தியமான வடிவங்களில் ஒன்றை விதேஹ நாட்டு இளவரசிக்குக் காட்ட முடிவு செய்தார்.

மிகவும் அறிவுள்ளவரும், உயர்ந்தவருமான அந்த வானரர் அந்த மரத்திலிருந்து சிறிது தூரம் தாவிச் சென்று, தன்னுடைய சக்தியின் நேரடியான அனுபவத்தை சீதைக்குக் கொடுப்பதற்காகத் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.

அந்த உயர்ந்த வானரர் இப்போது எரியும் தீயைப் போன்ற சக்தியுடனும், மேரு மலை அல்லது மந்தர மலை போல் பெரிதான உருவத்துடனும் சீதையின் முன்பு நின்றார்.

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சக்தி உள்ளவரும், முகம் சிவந்தவரும், வஜ்ராயுதத்தைப் போன்று தோற்றமளிக்கும் நகங்களும், பற்களும் கொண்டவரும், மலையைப் போன்ற பெரிய தோற்றம் கொண்டவருமான அந்த வானரர் சீதையிடம் இவ்வாறு கூறினார்:

"இந்த இலங்கை நகரம் முழுவதையும், அதில் உள்ள மலைகள், காடுகள், மாளிகைகள், சுவர்கள், கோபுரங்கள், அதன் எஜமானரையும் கூடச் சேர்த்துத் தூக்கிச் செல்வதற்கான பெரிய சக்தி எனக்கு இருக்கிறது.

"விதேஹ நாட்டு இளவரசியே!ஆகவே என் சக்தியைப் பற்றி எந்த ஐயமும் இன்றி நம்புங்கள். நீங்கள் விரைவிலேயே ராமர் மற்றும் லக்ஷ்மணரை  எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவியுங்கள்."

 மலைக்குப் போட்டியாக அமைந்த அளவுக்கு இருந்த தோற்றத்தில் வாயு குமாரரான ஹனுமானைப் பார்த்த தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஜனக புத்திரி சீதை இவ்வாறு கூறினார்:

"ஓ உயர்ந்த வானரத் தலைவரே! உன் இயல்பான தன்மைகள் மற்றும் சக்தியையும், காற்றைப் போன்ற உன் வேகத்தையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும் நீ வெளிக் காட்டியதை நான் இப்போது பார்த்தேன்.

"ஓ உயர்ந்த வானரரே! நினைத்துப் பார்க்க முடியாத இந்த தூரத்தைக் கடந்து இந்த இலங்கை நகரத்தை அடைவது பற்றி வேறு எவரால் கற்பனை செய்து பார்க்க முடியும்?

"என்னைச் சுமந்து கொண்டு வேகமாகச் செல்வதற்கான உன் சக்தி பற்றியும், வல்லமை பற்றியும் நான் இப்போது நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் நாம் ராமரின் நோக்கங்களையும், அவற்றை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் நாம் கருத்தில் கொண்டு, அதன் பிறகு ஒரு விரைவான முடிவுக்கு வர வேண்டும்.

"ஓ, உயர்ந்த வானரரே! என்னுடைய இப்போதைய நிலையில் என்னால் உன்னுடன் வர இயலாது.  உன் காற்றுக்கு இணையான வேகத்தில் நான் மூர்ச்சை அடைந்து விடுவேன்.

"நீ கடலுக்கு மேலே அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கும்போது நான் பயத்தில் உன் முதுகிலிருந்து விழுந்து விட மாட்டேனா? திமிங்கிலங்கள், முதலைகள், பல வகை மீன்கள் ஆகியவை நிறைந்த கடலில் விழுந்து நான் உடனே மரணமடைந்து இந்த உயிர்களுக்கு நான் உணவாகி விடுவேன்.

"ஓ, எதிரிகளை அழிப்பவரே! இன்னொரு காரணத்தினாலும் நான் உன்னுடன் வர முடியாது. என்னைக் காப்பாற்றும் முயற்சியில் நீயே நிச்சயம் ஆபத்துக்குள்ளாவாய்.

"உன்னுடன் நான் இந்தச் சிறையிலிருந்து தப்பி விட்டேன் என்பதை அறிந்ததும் ராவணன் நம்மைத் தேட அவனுடைய சக்தி வாய்ந்த தீய அசுர சேனையை அனுப்புவான்.

"வீரரே! சூலங்கள், இரும்பு உலக்கைகள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய அந்தத் துணிவு மிக்க போர் வீரர்கள் உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையின் சுமையைத் தங்கியிருக்கும் நீ அதன் காரணமாக ஆபத்துக்குள்ளாவாய்.

"அரக்கர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் அனைவரிடமும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால் நீ தனி ஆளாக, ஆயுதம் ஏதுமின்றி இருக்கிறாய் . உன்னால் எப்படி வானில் இருந்தபடி சண்டையிட்டுக் கொண்டே என்னைக் காப்பாற்ற முடியும்?

"ஓ உயர்ந்த வானரரே! எண்ணிக்கையில் மிக அதிகமாகவும், அதிக பலம் கொண்டவர்களாகவும் உள்ள இந்த அரக்கர்கள் போரில் உன்னைத் தோற்கடிக்கக் கூடும்.

"அப்படி நடக்கா விட்டாலும், நீ அவர்களுடன் சண்டையிடும்போது, நான் கீழே விழக் கூடும். அப்படி விழுந்தால், இந்தத் தீய மனம் கொண்ட அரக்கர்கள் என்னை உடனே தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.

"அவர்கள் என்னை உன் கைகளிலிருந்து பிடுங்கிக் கொள்ளலாம், அல்லது என்னைக் கொன்று விடலாம். ஒரு போரில் வெற்றியோ, தோல்வியோ முன் கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதது என்பது எல்லோருடைய அனுபவமும் ஆகும்.

"அரக்கர்களால் .அவமானப்படுத்தப்பட்டு, நானே என் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.அவ்வாறு நடந்தால், ஓ, வானரரே, உன் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து விடும்.

"நீ இந்த அரக்கர்கள் அனைவரையும் அழிக்கும் வல்லமை பெற்றவன் என்பது உண்மைதான். ஆனால், இந்த எல்லா அரக்கர்களும் உன் ஒருவனாலேயே கொல்லப்பட்டால், ராமரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும். (அவர்களைக் கொன்ற  பெருமை ராமரைச் சேராது, உன்னைத்தான் சேரும் என்பதால்.)

"அரக்கர்கள் என்னை மீண்டும் பிடித்து விட்டால், அவர்கள் என்னை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து வைப்பார்கள். ராமராலும், லக்ஷ்மணராலும் கூட அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இவ்வாறு நிகழ்ந்தால் கூட உன் முயற்சிகள் வீணானவையாக ஆகி விடும்.

"எனவே உன்னுடன் ராமரும் இங்கே வந்தால்தான் சிறப்பாக இருக்கும்.

"ஓ, வீரரே! உயர்ந்தவரான ராமருக்கும், அவருடைய சகோதரருக்கும், உனக்கும், நான் ஒரு வாழ்க்கைப் போராட்டமாக ஆகி விட்டேன்.

"தங்கள் நோக்கத்தை அடைய வேண்டும் என்ற விரக்தியில் ராமரும் லக்ஷ்மணரும் சோகத்தீயால் எரிக்கப் படுவார்கள். பிறகு எல்லா வானரர்களும், கரடிகளும் கூடத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.

"ஓ, உயர்ந்த வானரரே! கணவரின் மீது பக்தி கொண்டிருப்பதையே மிக உயர்ந்த குணமாக நினைக்கும் நான் இன்னொருவர் என் உடலைத் தொடுவதற்கு சம்மதிக்க முடியாது.

"அப்படியானால் ராவணன் என் உடலைத் தொட்டது எப்படி என்று கேட்கலாம். அது, கற்புடைய பெண்ணான நான் சுதந்திரமோ, பாதுகாப்போ இல்லாமால் இருந்த போது, நான் முறியடிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டபோது நிகழ்ந்தது. அப்போது நான் என்ன செய்திருக்க முடியும்?

"ராமர் ராவணனை அவன் உறவினர்கள் அனைவருடனும் அழித்து, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால் அது அவருக்குப் பொருத்தமான ஒரு சாதனையாக இருக்கும்.

"உயர்ந்தவரான அவருடைய போர்த்திறமை பற்றியும், எதிரிகளை அழிக்கக் கூடிய அவருடைய ஆற்றலைப் பற்றியும் நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மட்டும் இல்லை. அதை நான் செயலிலும் பார்த்திருக்கிறேன். தேவர்கள், கந்தர்வர்கள், பன்னகர்கள் அல்லது அரக்கர்களின் எவருமே ராமருக்குச் சமமாக மாட்டார்கள்.

"ராமரின் பாராக்கிரமத்தை உணர்ந்தவர்கள் யார்தான் அவருடன் மோதுவார்கள் - தன் அற்புதமான வில்லைப் பெற்றிருக்கும் ராமருடன், இந்திரனுக்கு நிகரான பலத்தையும் தைரியத்தையும் கொண்டிருக்கும் ராமருடன், லக்ஷ்மணரின் துணையைப் பெற்றிருக்கும் ராமருடன், போர்க்களத்தில் காற்றினால் வீரியம் அதிகரிக்கப்பட்ட தீயைப் போல் செயல்படும் ராமருடன்?

"ஓ, வானரர்கள் தலைவரே! போரில் ராமரை யாரால் எதிர்கொள்ள முடியும் - வெட்டவெளியில் இருக்கும் யானையைப் போன்ற ராமரை, போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவராகச் செயல் புரியும் ராமரை, லக்ஷ்மணரின் பக்கத்துணை உள்ள ராமரை, பிரளய கால சூரியனைப் போல் தன் அம்புகள் என்னும் கதிர்களை வீசிக்கொண்டு போர்க்களத்தில் அசைக்க முடியாதவராக நிற்கக் கூடிய ராமரை?

"எனவே, ஓ, உயர்ந்த வானரரே, ராமரை லக்ஷ்மணருடன், உங்கள் வானரச் சேனை புடை சூழ இந்த இடத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய். இத்தனை நாட்களாகத் திரும்பத் திரும்ப ராமரைப் பற்றி நினைத்து நினைத்துத் துக்கத்தில் மூழ்கியிருக்கும் என்னை மீட்க மனம் வை."

சர்க்கம் 38 - சூடாமணியை அளித்தல்
சீதை கூறிய வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அந்த உயர்ந்த வானரர் தர்மத்தின் அடிப்படையிலான அந்தப் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார். அவர் இவ்வாறு பதில் உரைத்தார்:

"ஓ, உயர்ந்த சீதையே! நேர்மையான செயல்பாடு பற்றி நீங்கள் ஒரு உபதேசமே செய்திருக்கிறீர்கள். 

"நீங்கள் சொன்னது கணவரிடம் விஸ்வாசமாக இருக்க உறுதி பூண்ட ஒரு பெண்ணின் இயல்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. 

"பெண்மைக்குரிய உங்கள் மென்மையான இயல்பு நூறு யோஜனை அகலம் உள்ள இந்தக் கடலின் மீது நீங்கள் என்னால் தூக்கிச் செல்லப்படும் கடினமான அனுபவத்தைத் தாங்குவதை அனுமதிக்காது.

"நற்குணங்களுக்குப் பெயர் பெற்ற ஜனக குமாரியே! ராமரைத் தவிர வேறு யாரும் உங்களைத் தொட அனுமதிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் சொன்ன இரண்டாவது காரணம் அந்த உயர்ந்த மனிதரின் மனைவியின் வாயிலிருந்து வந்தது பொருத்தமானதுதான்.

"ஓ, சிறந்த பெண்மணியே, உங்களைத் தவிர வேறு யார் தர்மத்தின் வழியிலான நடத்தை பற்றி இவ்வாறு விளக்க முடியும்!

"ஓ, உயர்ந்த பெண்மணியே!, நீங்கள் என்னிடம் சொன்னதையும், என் கண் முன் நீங்கள் செய்ததையும் காகுஸ்த குல திலகரான ராமரிடம் நான் உடனே சென்று தெரிவிப்பேன்.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! ராமர் மீது நான் கொண்டுள்ள அதீத அன்பினாலும் அவருக்குப் பிரியாமனதையும், நன்மை பயப்பதையும் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினாலும்தான் நீங்கள் என்னுடன் வர வேண்டும் என்ற யோசனையை நான் சொன்னேன். 

"கடலைக் கடந்து இலங்கைக்குள்  நுழைவது எவருக்கும் கடினமானது என்பதாலும் என் சக்தியின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையாலும்தான் நான் உங்களிடம் இவ்வாறு கூறினேன்.

"உங்களை ராமருடன் உடனே சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. எனவே பெரியவர்களிடம் எனக்கு இருக்கும் அன்பினாலும் மரியாதையாலும், உங்களிடம் இந்த யோசனையைச் சொன்னேன். அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

"ஓ, தூய்மையான பெண்மணியே! நீங்கள் என்னுடன் வர விரும்பாததால், நான் ராமரிடம் தெரிவிக்கப் போகும் செய்தி அவரிடம் நம்பிக்கை ஊட்டுவதற்கு அடையாளப் பொருள் ஏதாவது கொடுங்கள்."

ஹனுமான் இவ்வாறு கூறியதும், தேவலோகப் பெண் போன்று தோற்றமளித்த சீதை சில விஷயங்களை நினைத்துக் கண்களில் நீர் பெருகியவராக இவ்வாறு கூறினார்.

"ராமருக்குத் தெரிந்த, அவருக்கு இன்னும் நினைவிருக்கக் கூடிய சில விஷயங்களைப் பற்றி நான் உன்னிடம் கூறப் போகிறேன். இந்த விஷயங்களை நான் உன்னிடம் கூறப்போகும் அதே வார்த்தைகளில் அவரிடம் சொல்:

"ஒருமுறை சித்திரகூட மலையின் வடகிழக்குப் பகுதியில் மந்தாகினி நதிக்கு அருகில் நாம் வசித்து வந்தபோது, சித்தாசிரமத்தில் நீர்நிலைகளிலும் பூக்கள், பழங்கள், கிழங்குகள் மிகுந்த பசுமையான நிலங்களிலும் நாம் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்போம்.

"நீண்ட நேரம் விளையாடிய பிறகு, நீங்கள் களைத்துப் போய் ஆசிரமத்துக்கு வந்து உங்கள் தலையை என் மடி மீது வைத்துப் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தீர்கள்.

"அப்போது மாமிசம் உண்பதில் ஆசை கொண்டிருந்த ஒரு காகம் அங்கே காய வைத்திருந்த மாமிசத்தைத் தன் கூரிய அலகால் கொத்தியது. அதை பயமுறுத்தி விரட்டுவதற்காக நான் ஒரு மண்கட்டியை எறிந்தேன். 

"பசி மிகுந்த அந்தக் காகம் அந்த மாமிசத்தை விட்டு விட்டு பயந்து ஓடுவதற்கு பதில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து அதன் அலகினால் என்னைக் கொத்த ஆரம்பித்தது.

"இவ்வாறு அந்தக் காகத்தால் தொந்தரவு செய்யப்பட்டதும், நான் அதைத் துரத்துவதற்காக என் இடுப்புப் பட்டையைக் கழற்றினேன். அதனால் என் உடை தளர்வடைந்தது. 

"தற்செயலாகக் கண் விழித்த நீங்கள் என்னை அந்த நிலையில் பார்த்தீர்கள். பிறகு நீங்கள் என்னைக் கேலி செய்து சிரித்தீர்கள்.

"நான் மிகவும் கோபம் அடைந்தேன். காகம் என்னைக் குத்தியதால் சோர்வடைந்து போயிருந்தேன். அவமானத்தினால் உங்கள் மடியில் அமர்ந்தேன். கோபமமாக இருந்த என்னை நீங்கள் சமாதானப்படுத்தினீர்கள்.

"நான் கண்ணீர் சிந்தியபடி என் கண்களைத் துணியால் துடைத்துக் கொண்டதைப் பார்த்த நீங்கள், நான் அந்தக் காகத்தின் தாக்குதலால் எந்த அளவுக்கு மனம் வருந்தினேன் என்பதைப் புரிந்து கொண்டீர்கள்.

"களைப்படைந்திருந்ததால் உங்கள் மடியில் தலை வைத்து நான் சற்று நேரம் தூங்கினேன். அதற்குப் பிறகு நீங்கள் என் மடியில் தலை வைத்துத் தூங்கினீர்கள். அப்போது அந்தக் காகம் மீண்டும் என்னிடம் வந்தது.

"நான் அப்போதுதான் தூங்கி முடித்து வலியுடன் எழுந்தேன். அப்போது அந்தக் காகம் மீண்டும் திடீரென்று என் மார்பில் தாக்கியது. அந்தக் காகம் பலமுறை என்னைக் காயப்படுத்தியது. என் உடலிலிருந்து ரத்தம் ஒழுகி உங்கள் உடலை நனைத்தது.

"இவ்வாறு அந்தக் காகத்தால் துன்பப்படுத்தப்பட்டதால் என் மடியில் ஆழ்ந்து  உறங்கி கொண்டிருந்த உங்களை நான் எழுப்பினேன். 

"என் மார்பில் காயம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்ததும், ஓ, வீரரான ராமரே, சீண்டப்பட்டதால் சீற்றம் கொண்ட பாம்பைப் போல் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க ஆரம்பித்தீர்கள்.

" 'ஓ, அழகான பெண்ணே! உன் மார்பில் காயம் ஏற்படுத்தியது யார்? ஒரு ஐந்து தலை நாகத்தோடு விளையாடுவது யார்?' இவ்வாறு என்னிடம் கேட்ட பிறகு நீங்கள் சுற்று முற்றும் பார்த்தபோது தன் அலகும், கால்களும் ரத்தத்தில் ரத்தத்தில் தோய்த்தெடுத்தது போல் ஒரு காகம் என்னைப் பாரத்துக் கொண்டு நின்றதைப் பார்த்தீர்கள்.

"அந்தக் காகம் இந்திரனின் பிள்ளை. பறவைகளின் தலைவன். வேகத்தில் அது காற்றுக்கு நிகரானது. எனவே அது கணநேரத்தில் பூமிக்குள் மறைந்து விட்டது.

"அதற்குப் பிறகு, நீங்கள் கோபத்தினால் விழிகளை உருட்டியபடி அந்தக் காகம் குறித்து ஒரு பயங்கரமான சபதம் செய்தீர்கள்.

"ஆசனத்துக்காகப் போடப்பட்டிருந்த தர்ப்பையிலிருந்து ஒரு புல்லை எடுத்துக் கொண்டு அதில் பிரம்மாஸ்திரத்தை ஜபித்து அதை அந்தப் பறவையின் மீது செலுத்தத் தயாரானீர்கள். அது யுகம் முடியும் தருவாயில் கொழுந்து விட்டு எரியும் தீயைப் போல் ஜொலித்தது.

"அந்த எரியும் அஸ்திரத்தை நீங்கள் அந்தக் காகத்தை நோக்கி வீசினீர்கள். அந்தக் காகம் வானில் பறந்தபோது, அந்த அஸ்திரம் அதைத் துரத்தியது. உயர்ந்த நிலையில் இருந்த பலரிடமும் பாதுகாப்புக் கோரியபடி அது எல்லாப் பகுதிகளிலும் பறந்து சென்று எல்லா இடங்களிலிருந்தும் உதவி கோரியது.

"மூன்று உலகங்களிலும் திரிந்த பிறகு, மகரிஷிகளாலும், தேவர்களாலும் அதன் தந்தையான இந்திரனாலும் கூட உதவி மறுக்கப்பட்ட பின், இறுதியில் அது திரும்பி வந்து உங்கள் காலடியில் அடைக்கலம் கோரியது.

"ராமபிரானே, உங்களிடம் அடைக்கலம் கோருபவர்கள் எதிர்களேயானாலும், நீங்கள் அவர்களைக் காப்பது வழக்கம். அந்தக் காகம் கொல்லத் தகுந்தது என்ற போதும், கீழே விழுந்து அடைக்கலம் கோரி உங்கள் காலில் விழுந்த அந்தக் காகத்துக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்தீர்கள்.

"எந்த வழியும் காண முடியாமல் உங்களிடம் திரும்பி வந்த முக்கியத்துவமற்ற அந்த ஜீவனைப் பார்த்து, 'இந்த பிரம்மாஸ்திரம் வீணாகப் போக முடியாது. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று சொல்' என்று நீங்கள் கேட்டீர்கள்.

"அப்போது அந்தக் காகம் கூறியது: 'அப்படியானால் அந்த அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்.' அந்த அஸ்திரமும் அவ்வாறே செய்தது. 

"அதன் வலது கண் அழிக்கப்பட்டாலும், அந்தக் காகம் தன் இடது கண் பாதிக்கப்படாமல் தப்பியது. அதற்குப் பிறகு காகங்களுக்கு ஒரு கண்தான் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்தது (மற்றொரு கண் மாறு கண்ணாக இருக்கும்.)

"பிறகு அந்தக் காகம் உங்களுக்கும் தசரதருக்கும்  வணக்கம் தெரிவித்தது. உங்கள் அனுமதி பெற்று அது வீடு திரும்பியது.

"உலகங்களின் தலைவரே! எனக்காக நீங்கள் ஒரு காகத்தின் மீது கூட பிரம்மாஸ்திரத்தை ஏவினீர்கள்.அப்படி இருக்கும்போது என்னை உங்களிடமிருந்து கடத்தி வந்தவனை நீங்கள் ஏன் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

"ஓ, மனிதர்களுக்குள் மேலானவரே! இவ்வளவு சக்தி படைத்திருக்கும் நீங்கள், உங்களை என் கணவராகவும், பாதுகாவலராகவும் கொண்டிருக்கும், இப்போது எஜமானர் இல்லாத நிலைக்கு ஆளாகியிருக்கும் என் மீது கருணை கொள்ளுங்கள்.

"மற்றவர்களின் துயரத்தைப் போக்குவதும், அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவுவதும்தான் மிக உயர்ந்த தர்மச் செயல்கள் என்று நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 

"என் கணவரான உங்களை அளவற்ற சக்தியும், ஊக்கமும் உள்ளவராகவும், செய்ய இயலாதவை என்று கருதப்படும் செயல்களைச் செய்து முடிப்பவராகவும், எதற்கும் கலங்காதவராகவும், கடலைப் போன்ற ஆழம் உள்ளவராகவும், இந்த உலகம் முழுவதற்கும் தலைவராக விளங்குபவரின் கம்பீரம் உள்ளவராகவும் நான் அறிந்திருக்கிறேன்.

"இவ்வாறு எல்லா சாஸ்திரங்களிலும் விற்பன்னராகவும், உண்மையானவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் இருந்தும் ரகுகுல திலகரான ராமர் ஏன் தன் அஸ்திரங்களை அரக்கர்கள் மீது செலுத்தவில்லை?

"எந்த ஒரு நாகரோ, கந்தர்வரோ, அசுரரோ அல்லது மருத்தோ ராமருடன் மோதும் அளவுக்கு சக்தி படைத்தவர் அல்ல. என் நலத்தில் அவருக்குச் சிறிதளவாவது அக்கறை இருக்குமானால் அவர் ஏன் தன் கூர்மையான ஆயுதங்களினால் அரக்கர்களை அழிக்கவில்லை?

"எதிரிகளுக்கு அச்சத்தை விளைவிப்பவரான சக்தி மிக்க, வீரம் நிறைந்த லக்ஷ்மணர் ஏன் என்னை இந்த நிலையிலிருந்து மீட்க அவருடைய சகோதரரின் அனுமதியைப் பெறவில்லை?

"காற்றைப் போலவும், நெருப்பைப் போலவும் சக்தி உள்ளவர்களாக இருந்தும், மனிதர்களுக்குள் சிங்கங்களாக இருக்கும் இந்த இருவரும் தேவர்களால் கூட வெல்ல முடியாதவர்களாக இருந்தும் ஏன் என்னைக் கைவிட்டு விட்டார்கள்?

"எந்த எதிரியும் வீழ்த்தக் கூடிய வீரர்களாக இருந்தும் அவர்கள் என் நிலைமையைப் பற்றி அறிந்து கொள்வதில் கூட அக்கறை கூடக் காட்டவில்லை. இதற்கு  நான் செய்த பாவம் காரணமாக இருக்கலாம்."

கண்களில் நீர் மல்க விதேஹ நாட்டு இளவரசி பேசிய இந்தப் பரிதாபம் ஏற்படுத்தும், மனதைத் தொடும் சொற்களைக் கேட்டதும் வாயுபுத்திரரான வீர ஹனுமான் இவ்வாறு கூறினார்:

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்கள் பொருட்டுத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ராமருக்கு வேறு எதிலும் ஆர்வமில்லை என்பதை நான் உங்களிடம் சத்தியம் செய்து சொல்கிறேன். ராமர் இவ்வாறு சோகத்தில் மூழ்கியிருக்கும்போது, லக்ஷ்மணரும் அதே விதமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.

"ஓ, புனிதம் வாய்ந்தவரே! அதிர்ஷ்டவசமாக நீங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறீர்கள். இது துயரப்படுவதற்கான நேரமல்ல. ஏனெனில், உங்கள் துயரத்தின் முடிவு கண்ணுக்குத் தெரிகிறது.

"உங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் சோர்வின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கும்அந்த இரண்டு சக்தி வாய்ந்த சிங்கம் போன்ற வீரர்கள் இந்த  இலங்கை நகரத்தைச் சாம்பலாக்கி விடுவார்கள்.

"அழகிய பெண்மணியே! ராமர் ராவணனை, அவனுடைய எல்லா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போரில் அழித்து உங்களை அவருடைய நகரத்துக்குத் திரும்ப அழைத்துப் போகப் போகிறார்.

" ராமபிரானிடமும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரிடமும், தைரியம் மிக்க சுக்ரீவரிடமும் நான் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள்."

ஹனுமானின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்ட பிறகும் ஒரு தேவலோகப் பெண் போன்ற தேஜஸுடன் விளங்கிய சீதை தொடர்ந்து துயர மனநிலையிலேயே இருந்தார். அந்த வானரத் தலைவரிடம் அவர் இவ்வாறு கூறினார்:

"இந்த உலகைக் காப்பதற்காக கௌசல்யா பெற்றெடுத்த அந்த உயர்ந்த உள்ளம் கொண்டவருக்கு என் மரியாதை மிகுந்த வணக்கங்களைத் தெரிவியுங்கள். அவருடைய நலம் பற்றி நான் விசாரித்ததாக அவரிடம் சொல்லுங்கள்.

"காட்டில் ராமருக்கு சேவை செய்து கொண்டு தர்மவானான லக்ஷ்மணர் இருக்கிறார். அவரை ஈன்றெடுத்ததன் மூலம் சுமித்ரை ஒரு கீர்த்தியுள்ள மகனின் தாயாகி விட்டார்.

"மலர் மாலைகள், ரத்தினங்கள், அன்பு காட்டும் அழகிய பெண்கள், உலகில் பெறக் கடினமான பெரும் செல்வங்கள், சுகங்கள் இவை அனைத்தையும் துறந்து விட்டு தன் தாயையும், தந்தையையும் வணங்கி விட்டு அவர் ராமரைப் பின் தொடர்ந்து வந்தார்.

"சிங்கத்தைப் போன்ற தோள்களைக் கொண்ட உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த மனிதர் எனக்கும் ராமருக்கும் அவருடைய தாய் தந்தையருக்குச் சேவை செய்வது போல் சேவை செய்தார்.

"நான் கடத்தப்பட்டபோது லக்ஷ்மணர் என் அருகில் இல்லை. அவர் பெரியோர்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைபவர். அவர் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர், குறைவாகப் பேசுபவர். 

"அவர் என் மாமனாரான தசரத மகாராஜாவுக்கு நிகரானவர். ஒரு சகோதரராக அவர் ராமருக்கு என்னை விடவும் அதிகமாகச் சேவை புரிந்து வந்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் பிரியமான இளவரசர்.

"அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதில் ராமர் இறந்து போன தன்  தந்தையைக் கூட மறந்து விடும் அளவுக்கு அவர் ராமருக்குப் பிரியமானவர். 

"தனக்கு எந்தப் பணி கொடுக்கப்பட்டாலும், அதை மிகவும் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றும் திறமை படைத்தவர் அவர்.

"ராமருக்குப் பிரியமானவரான, அவருக்கு மிகவும் கீழ்ப்படிந்தவரான, எல்லா விதத்திலும் திறமை வாய்ந்த, ஒரு நண்பரைப் போன்ற விசுவாசம் கொண்ட அந்த லக்ஷ்மணரை நான் கனிவுடன் விசாரித்ததாக நீ தெரிவிக்க வேண்டும்.

"ஓ, உயர்ந்த வானரரே! என்னுடைய இந்தத் துன்பமான நிலையிலிருந்து என்னை மீட்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் ராமர் எடுக்கப் போகிறார் என்பதற்கான உறுதியாக நீ விளங்குகிறாய்,

"உன் முயற்சிகளாலும், எடுத்துச் சொல்லாலும், என் பொருட்டான இந்த விஷயத்தில் ராமர் செயல்பட வைக்கப்பட வேண்டும். என் பிரபுவும், எஜமானருமான வீரமிக்க ராமரிடம் நான் இப்போது உன்னிடம் சொல்லப் போவதைச் சொல்வாயாக.:

"ஓ, தசரதரின் குமாரரே! நான் ஒரு மாதம் மட்டும்தான் என்  உயிரை வைத்திருப்பேன் என்று சொல்லும்போது, உங்களிடம் நான் உண்மையாகச் சொல்லுகிறேன். அதற்கு மேல் நான் உயிரை வைத்திருக்க மாட்டேன்.

"வீரரே! கௌசிகி பாதாள உலகத்திலிருந்து மீட்கப்பட்டது போல்  இந்தத் தீய எண்ணம் கொண்ட அற்ப ராவணன் என்னை வைத்திருக்கும் சிறையிலிருந்து என்னை விடுவிக்க மனம் வையுங்கள்."

பிறகு சீதை தன் உடையிலிருந்து  சூடாமணி என்ற அந்த விலையுயர்ந்த ரத்தினக் கல் மோதிரத்தை அவிழ்த்து "இதை ரகு குல திலகரான ராமரிடம் கொடுங்கள்" என்று சொல்லி அதை ஹனுமானிடம் கொடுத்தார்.

வீரரான ஹனுமான் அந்த ஒப்பற்ற ஆபரணத்தை சீதையிடம் பெற்றுக் கொண்டு அதைத் தன் விரலில் அணிந்து கொண்டார். அது அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது.

அந்த ஆபரணத்தை அணிந்து அந்த உயர்ந்த வானரர் சீதையை வலம் வந்து அவர் முன் வந்து நின்று கைகளைக் கூப்பி அவரை வணங்கினார். 

"சீதையைக் கண்டு பிடித்ததால் அதிக மகிழ்ச்சியுடன் இருந்த அவர் உடலால் மட்டும்தான் அங்கே இருந்தார். அவர் மனம் ஏற்கெனவே ராமர் இருந்த இடத்துக்குப்போய் விட்டது.

சீதை அணிந்திருந்த அந்த ஆபரணத்தை பக்தியுடன் யாரும் பார்க்காமல் அவர் வாங்கிக் கொண்டு விட்டார். பெரும் காற்று அடித்துச் சென்ற பிறகு அமைதி அடைந்த மலையைப் போல் அமைதியாக இருந்த அவர் மனம் இப்போது இலங்கையிலிருந்து திரும்ப வேண்டியது குறித்த சிந்தனையில் இருந்தது.

சர்க்கம் 39 - சீதைக்கு ஆறுதல் கூறுதல்
ஹனுமானிடம் சூடாமணியைக் கொடுத்த பின் சீதை அவரிடம் கூறினார்:

"ராமர் அடையாளம் காண்பதற்காக நான் உன்னிடம் கொடுத்திருக்கும் இந்தச் சூடாமணி பற்றிய எல்லா விவரங்களும் அவருக்குத் தெரியும்.

"இந்த மணியைப் பார்த்த உடனேயே ராமருக்கு மூன்று பேரின் நினைவு வரும் - நான், அவருடைய தாய் மற்றும் அவர் தந்தை தசரதர்.

"ஓ உயர்ந்த வானரரே! உன்னிடம் இந்தப் பணியின் முதல் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நீ சிந்திக்க வேண்டும்.

"உயர்ந்த வானரரே! இந்தப் பணியைச் செய்து முடிப்பதில் முக்கிய பணி ஆற்ற வேண்டியது நீதான். நீ எப்போதும் பிரச்னைகளைப் பற்றி நன்கு சிந்தித்து விட்டுப் பிறகே செயலில் இறங்குவதால் உன் முயற்சிகள் வெற்றி அடையும்.

"ஓ ஹனுமான்! என் துயரங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுவாயாக!"

வீரரான ஹனுமான் "அப்படியே ஆகட்டும்!" என்று விதேஹ நாட்டு இளவரசிக்கு பதில் கூறினார்.  தன் தலையைத் தாழ்த்தி சீதைக்கு வணக்கம் செலுத்தி விட்டு,, கிளம்புவதற்கு அவர் அனுமதியைப் பெறத் தயாராக நின்றார்.

பிறகு அந்த மிதிலை நாட்டு இளவரசி ஹனுமான் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து, பொங்கி வந்த அழுகையால் கம்மிய குரலில் பேசினார்:

"ஓ, ஹனுமான்! ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிக்கப்பட முடியாத ராமருக்கும், லக்ஷ்மணருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பாயாக.

"ஓ, உயர்ந்த வானரரே! சுக்ரீவருக்கும், அவருடைய அமைச்சர்களுக்கும், மற்ற வானரர்களுக்கும் முறையான விதத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பாயாக.

"வீரரான ராமர் என்னை இந்தத் துயரக் கடலிலிருந்து மீட்பதற்குத் தேவையான செயல்களை நீ மேற்கொள்ள வேண்டும். 

"உலகம் முழுவதும் கீர்த்தி பெற்ற ராமர் என்னை உயிருடன் பார்க்க இயல்வதற்கான விதத்தில் நீ பேச வேண்டும். இந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிப்பதால் கிடைக்கும் பெருமை உனக்கே சேரட்டும்.

"நீ கூறிய மகிழ்ச்சியூட்டும் சொற்களால் என்னிடம் வந்து சேர்வதற்கான ராமரின் முயற்சிகள் மேலும் மேலும் வலுப்படும் என்று புரிந்து கொள்கிறேன். 

"உன்னிடமிருந்து என்னைப் பற்றிய செய்தியைப் பெற்ற உடனேயே என் கணவர் ராமர், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த வீரம் மிகுந்த நடவடிக்கைகள் பற்றி ஆணைகள் பிறப்பிக்கப் போவது நிச்சயம்."

சீதையின் வார்த்தைகளைக் கேட்டதும் வாயுபுத்திரரான அந்த உயர்ந்த வானரர் கைகளைத் தலைக்கு மேல் வைத்து அவரை வணங்கியபடி கூறினார்:

"ராமர் எதிரிகளைப்போரில் வீழ்த்தி உங்களைத் துயரத்திலிருந்து மீட்கப் போகிறார். விரைவிலேயே குரங்குகளும் வானரங்களும் புடை சூழ உங்களை மீட்கும் பயணத்தை அவர் தொடங்கப் போகிறார்.

"மனிதர்களுக்குள்ளோ, தேவர்களுக்குள்ளோ, அவர் முன் நின்று அவர் வில்லிலிருந்து வெளிப்படும் அம்பு மழைகளுக்குத் தப்பி உயிர் பிழைக்கக் கூடிய யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அசுரர்களிலும் யாரும் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

"இந்தத் துணைவர்கள் யாரும் இல்லாமலே, போரில் சூரியன், இந்திரன், அக்னி, யமன் ஆகியோரைக் கூடத் தோற்கடித்து  அவரால் தனியாகவே உங்களை மீட்க முடியும்.

"ஓ, ஜனகரின் மகளே, ராமரை எல்லா இடங்களிலும் வெற்றி அடையச் செய்யும் சக்தி நீங்கள்தான் என்று எல்லா வேத நூல்கள் மூலமும் நன்கு அறியப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான் அவர் கடல் சூழ்ந்த இந்த உலகை ஆளும் சக்தி படைத்தவராக இருக்கிறார்."

ஹனுமான் கூறிய இந்த சக்தி வாய்ந்த, உண்மையான, நன்கு  எடுத்துரைக்கப்பட்ட, சமயத்துக்குப் பொருத்தமான  வார்த்தைகளை மிகுந்த மரியாதையுடன் ஜனகரின் குமாரி கேட்டார்.

ஹனுமானின் வார்த்தைகள் ராமர் மீது அவருக்கு இருந்த அன்பினால் வெளிப்பட்டவை என்பதை அறிந்த சீதை அவர் கிளம்பத் தயாராயிருந்தபோது அவரிடம் இவ்வாறு கூறினார்:

"எதிரிகளை அழிப்பவனே! நீ விரும்பினால், இன்று ஒரு நாள் தனியான ஒரு இடத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டு உன் ஊர் திரும்பும் பயணத்தை நாளை மேற்கொள்ளலாம்.

"கடலைக் கடக்கும் வல்லமை உங்கள் மூவருக்குத்தான் இருக்கிறது.- காற்று, கருடன் மற்றும் நீ. வீரனே! எல்லாக்  கடினமான நிலைமைகளையும்  புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்குள் நீதான் சிறந்தவன். 

"எனவே, இந்தக் கடினமான நிலையை வெற்றி கொண்டு நம் நோக்கத்தை நிறைவேற்ற நீ எந்த வழிகளைப் பின்பற்ற உத்தேசிக்கிறாய்?

"ஓ, எதிரிகளை அழிப்பவனே! இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வல்லமை படைத்தவன் நீ ஒருவன்தான். எதிரிகளை அழித்ததற்கான பெருமை உனக்கே சேரும்.

"போதுமான அளவு படைபலத்துடன் வந்து ராவணனை வென்று என்னைத் திரும்பவும் தன் நாட்டுக்கு அழைத்துச் செல்வதுதான் ராமருக்கும், எனக்கும் ஏற்றதாக இருக்கும். 

"எதிரிகளின் படைகளை அழிப்பவரான அவர் தன் அம்புகளால் இலங்கையை நிர்மூலமாக்கி என்னை இந்த நிலைமையிலிருந்து மீட்பது அவருடைய தகுதிக்கு ஏற்ற செயலாக இருக்கும். 

"எனவே அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட, போர்க்களத்தில் வீரம் காட்டுபவரான ராமரின் கண்ணியத்துக்கும், வீரத்துக்கும் உகந்ததை நீ செய்வாயாக.

தர்ம வழிக்கு உகந்த அந்த விலை மதிப்பற்ற வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் தான் இன்னும் சொல்ல வேண்டியவற்றை அவரிடம் சொன்னார்:

"ஓ, சிறந்த பெண்மணியே! கரடிகள் மற்றும் வானரர்கள் சேனையின் தலைவரும் அவர்களை வழி நடத்துபவருமான சுக்ரீவர் உங்களை மீட்பதற்காகச் செயல்பட உறுதி பூண்டிருக்கிறார்.

"விதேஹ நாட்டு இளவரசியே! தன்னைச் சுற்றி கோடிக்கணக்கான வானரர்களைக் கொண்ட அவர் அரக்கர்களை அழிப்பதற்காக விரைவிலேயே இங்கே வருவார்.

"அவர் தலைமையில் உள்ள வானரர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் உறுதியான மனமும், துணிவும் கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்ய நினைத்தத்தைச் செய்யும் வல்லமை பெற்றவர்கள் .

"அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கக் கூடிய எந்த சக்தியும் வானத்திலோ, பூமியிலோ இல்லை. உயர்வான, பெரிய செயல்களை அவர்கள் புரியும்போது, அவர்கள் பலமும், வீரமும் அவர்களை எப்போதும் கை விடாது.

"காற்றில் பறந்து செல்லக் கூடிய பெரும்  சக்தியும் வல்லமையும் படைத்த அவர்கள் உலகின் மலைகள், கடல்களில் ஆகியவற்றைக் கடந்து உலகம் முழுவதும் சென்று வந்துள்ளனர். 

"சுக்ரீவர் பக்கம் இருக்கும் அந்த வானரர்கள் எனக்குச் சமமானவர்கள் அல்லது என்னை விடச் சிறப்பானவர்கள். ஆனால் அவர்கள் யாரும் என்னை விடக் குறைந்த வல்லமை கொண்டவர்கள் அல்லர்.

"சாதாரணமாணவர்கள்தான் தூதர்களாக அனுப்பப்படுவார்கள், உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். ஒரு தூதனாக என்னாலேயே இங்கே வர முடிந்தது என்றால், என்னை விட அதிக சக்தி படைத்தவர்களால் எவ்வளவு சாதிக்க முடியும்!

"ஆகவே, உயர்ந்த பெண்மணியே! மனம் தளராதீர்கள். உங்கள் துயரத்தை விட்டொழியுங்கள். வீரம் மிகுந்த வானரர்கள் ஒரே தாவலில் இலங்கையை  வந்தடைவார்கள்.

"அளவற்ற வலிமை கொண்ட,  எழும் சூரியனையும் சந்திரனையும் ஒத்த,  சிங்கங்களைப் போன்ற ராம லக்ஷ்மணர்கள் என் முதுகில் அமர்ந்து  உங்களுக்கு அருகே வந்து சேர்வார்கள். 

"ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத இந்த இரண்டு வீர ஆத்மாக்களும் இந்த இலங்கை நகரத்துக்கு வந்து தங்கள் அம்புகளால் இதைத் தூள் தூளாக்குவார்கள்.

"அழகிய பெண்மணியே! ரகுகுலத்தை மகிழ வைக்க வந்த ராமர் ராவணனை அவன் எல்லா உறவினர்களுடனும் சேர்த்து அழித்து விட்டு உங்களுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லப் போகிறார். 

"எனவே ஆறுதல் கொள்ளுங்கள்.உங்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும். அந்த நல்ல காலத்துக்காகச் சிறிது காத்திருங்கள். எரியும் நெருப்பைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட ராமரை நீங்கள் சீக்கிரமே பார்க்கப் போகிறீர்கள்.

"இந்த அரக்க குல அரசன் அவனுடைய மகன்கள், அமைச்சர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அழிக்கப்பட்டதுமே, ரோகிணிதேவி சந்திரனுடன் சேர்வது போல்,  நீங்கள் ராமருடன் சேரப் போகிறீர்கள்.

"மிதிலை நாட்டு இளவரசியே! விரைவிலேயே நீங்கள் உங்கள் துயரக் கடலைக் கடந்து மறுகரையை அடைவீர்கள். ராவணன் ராமரால் கொல்லப்படுவதையும் நீங்கள் அதி விரைவிலேயே காண்பீர்கள்.

விதேஹ நாட்டு இளவரசியான சீதைக்கு இவ்வாறு ஆறுதல் கூறிய பிறகு, ஹனுமான் தான்  திரும்பிச் செல்ல விரும்புவதை மீண்டும் அவரிடம் தெரிவித்தார். அவர் மீண்டும் கூறினார்:

"இலங்கையின் வாயிற்கதவுக்கருகே, எல்லா எதிரிகளையும் அழிப்பவரான வீரரான ராமரை லக்ஷ்மணருடனும், கையில் வில்லுடனும் நீங்கள் விரைவிலேயே காண்பீர்கள்.

"மலையைப் போன்ற பெரிய உருவத்துடன் மேகங்களைப் போல் தோற்றமளிக்கும், நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்ட, அளவில் யானையைப் போன்றும், தைரியத்தில் சிங்கங்கள், புலிகள் போன்றும் விளங்குபவர்களுமான வீரம் மிகுந்த வானரர்களின் சேனை இலங்கையில் மலய மலையின் பள்ளத்தாக்குகளைத் தங்கள் இடி முழக்கம் போன்ற கர்ஜனையால் நிரப்புவதை நீங்கள் விரைவிலேயே பார்ப்பீர்கள்.

"தன் இதயத்தின் மையப்பகுதி அன்புக்கணைகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள அந்த வீரமுள்ள ராமருக்கு சிங்கத்தினால் துன்புறுத்தப்பட்ட யானையைப் போல் சிறிது கூட மகிழ்ச்சி இல்லை.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! அழாதீர்கள்.உங்கள் மனம் துயரத்தால் வேதனைப்படாமல் இருக்கட்டும். இந்திராணி இந்திரனுடன் இணைந்திருப்பது போல் நீங்கள் ஏற்கெனவே உங்கள் கணவருடன் இணைந்திருப்பதாக நம்புங்கள் (நடக்கப் போகிறவை பற்றி நான் அவ்வளவு நிச்சயமாக இருக்கிறேன்.)

"ராமரை விட உயர்ந்தவர் யார்? சுமித்திரையின் புதல்வரான லக்ஷ்மணருக்குச் சமமானவர் யார்? காற்றையும், நெருப்பையும் போல் இவர்கள் இருவரும் உங்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்.

"ஓ, நல்ல பெண்மணியே! அரக்கர்கள் வசிக்கும் இந்த மோசமான இடத்தில் நீங்கள் அதிக நாட்கள் இருக்க வேண்டி இருக்காது. உங்கள் கணவரின் வருகை அதிக தாமதமாகாது. நான் அவரிடம் திரும்பிச் செல்லும் வரை பொறுமையாக இருங்கள்."

சர்க்கம் 40 - ஹனுமான் திரும்பச் செல்ல அனுமதிக்கப்படுதல் 

உயர்ந்தவரான ஹனுமான் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், தெய்வாம்சம் பொருந்தியவராகத் தோற்றமளித்த சீதை மிகவும் திருப்தியுடன் அந்த வாயு புத்திரரிடம் கூறினார்:

"ஓ, வானரரே! இவ்வளவு இனிமையான  சொற்களைப் பேசிய உன்னைப் பார்த்ததும், பாதி முளைத்த விதை மழையினால் புத்துயிர் பெறுவது போல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

"சோக நெருப்பில் வாட்டி எடுக்கப்பட்டுள்ள நான் வீரம் மிகுந்த ராமரை விரைவில் சந்தித்து என் விருப்பம் நிறைவேறும் வகையில் என் சார்பாக நீ பொருத்தமான விதத்தில் செயல்பட வேண்டும்.

"வானர சேனையின் தலைவரே! ஒரு புல்லினால் காகத்தின் கண்ணைப் பறித்த சம்பவத்துடன் கூட, நீ என்னைச் சந்தித்ததற்கு அடையாளமாக நான் இப்போது சொல்லப் போவதையும் சொல்ல வேண்டும்.

"ஒரு நாள் என் நெற்றிப் போட்டு மங்கலாகி மறைத்து விட்டபோது நீங்கள் விளையாட்டாக என் நெற்றியில் ஒரு சாயப்பொட்டை வைத்தீர்கள்.

"இந்திரனுக்கும், வருணனுக்கும் சமமானவரும், வீரத்துக்குப் பெயர் பெற்றவருமான நீங்கள், சீதை உங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு அரக்கர்களுக்கு நடுவில் வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதை எப்படிப் பொறுத்துக் கொள்கிறீர்கள்?

"குற்றமற்றவரே! இந்த தெய்வீகமான மணி என்னால் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் துயரத்தினால் பீடிக்கப்படும்போது, அதைப் பார்த்துக்கொண்டு, உங்களையே பார்ப்பது போல் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்று வந்தேன்.

"மகிழ்ச்சியை அளிக்கும் சக்தி பெற்ற, கடலில் பிறந்த இந்த மணியை இப்போது நான் உங்களுக்கு அனுப்புகிறேன். இனிமேல் நான் துயரப்படும்போது, இந்த மணியினால் கிடைக்கும் ஆறுதல் கூட இல்லாமல் என் உயிரை வைத்திருக்கும் சக்தி எனக்கு இல்லை.

"தாங்க முடியாத துயரத்தைப் பொறுத்துக் கொண்டும், அரக்கிகளின் கொடுரமான, துளைத்தெடுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும், உங்களுக்காக நான் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன்.

"எதிரிகளை அழிப்பவரே! அரசர்களின் வழி வந்தவரே! இன்னும் ஒரு மாதத்துக்கு நான் என் உயிரை வைத்திருப்பேன். அதற்குப் பிறகு, உங்களுடன் பிரிந்த நிலையில் நான் உயிருடன் இருக்க மாட்டேன்.

"இந்த அரக்கர்களின் அரசன் மிகவும் கொடூரமானவன். என் விஷயத்தில் அவனுக்கு இருக்கும் மனநிலை முறையற்றது. நீங்கள் இங்கே வருவது தாமதமாகும் என்று தெரிந்தால், ஒரு கணம் கூட நான் உயிருடன் இருக்க மாட்டேன்."

"விதேஹ நாட்டு இளவரசியின் அழுகையுடன் கூடிய இந்த வார்த்தைகளைக் கேட்ட வாயு தேவரின் அற்புதமான புதல்வரான ஹனுமான் அவரிடம் மீண்டும் கூறினார்.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்களிடம் நான் உண்மையைக் கூறுகிறேன். உங்கள் துயரத்தை நினைத்து ராமர் தனது எல்லா ஈடுபாடுகளையும் விட்டு விட்டார். ராமர் இவ்வாறு துயரத்தில் மூழ்கி இருக்கும்போது லக்ஷ்மணரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! அதிர்ஷ்டவசமாக நீங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். இது இனியும் துயரப்படுவதற்கான நேரமல்ல. உங்கள் துயரத்தின் முடிவை நீங்கள் உடனே பார்ப்பீர்கள்.

"இந்த இரண்டு குற்றமற்ற, வீரம் மிகுந்த இளவரசர்களும் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற அவர்களுடைய பெரும் ஆவலால் இந்த இலங்கையைச் சாம்பலாக்கப் போகிறார்கள்.

"ஒ அழகிய பெண்மணியே! ரகுவம்சத்தைச் சேர்ந்த இந்த இரண்டு இளவரசர்களும் ராவணனையும் அவன் ஆதரவாளர்களையும் போரில் அழித்து, உங்களைத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போவது உறுதி.

"குற்றமற்றவரே! ராமருக்கு அடையாளமாக விளங்கி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வேறு ஏதாவது பொருள் இருந்தால, தாங்கள் அதையும் என்னிடம் கொடுக்கலாம்.

அப்போது சீதை ஹனுமானிடம் சொன்னார்; ஓ, வீரரே! உன்னிடம் நான் கொடுத்திருக்கும் அடையாளச் சின்னமான என்னுடைய மணியே ராமர் மனதில் உன் வார்த்தைகள் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தும்.

அந்த மணியைப் பெற்றுக் கொண்டு விட்ட உயர்ந்தவரான அந்த வானரத் தலைவர் இப்போது சீதையை வணங்கி விட்டு, கிளம்புவதற்கு அவருடைய உத்தரவை எதிர்பார்த்து நின்றார்.

தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்த ஹனுமானிடம், மிகவும் துயரமான சூழலில் சிக்கிக் கொண்ட ஜனகபுத்திரி, கண்ணீர் பெருக, தடுமாற்றத்துடன் வந்த வார்த்தைகளைக் கூறினார்;

"ஓ, ஹனுமான்! சிங்கம் போன்ற சகோதரர்கள் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவரையும், அவருடைய அமைச்சர்களையும் மற்ற அனைவரையும் நான் அன்புடன் கேட்டதாகச் சொல்.

"ஓ, உயர்ந்த வானரரே! உங்கள் இடத்துக்குச் சென்றதுமே, என்னுடைய ஆழமான துயரம் பற்றியும், இந்த அரக்கர்கள் எனக்கு இழைக்கும் அவமானங்களைப் பற்றியும் ராமரிடம் எடுத்துச் சொல். உன் திரும்பிச் செல்லும் பயணம் எந்தத் தடையும் இல்லாததாக இருக்கட்டும்."

சீதை தன்னை உண்மையான தூதுவராக ஏற்றுக்கொண்டது பற்றியும், தன் நோக்கம் நிறைவேறியது பற்றியும் மகிழ்ச்சி அடைந்த ஹனுமான் மனதளவில் அப்போதே தான் செல்ல வேண்டிய இடத்தில் இருந்தார். ஆயினும் தான் இன்னும் செய்ய வேண்டிய சில செயல்கள் இருப்பதாக அவர் நினைத்தார்.


சர்க்கம்  41- அசோக வனத்தை அழித்தல்
புகழ்ச்சியான வார்த்தைகளுடன் சீதையால் கிளம்புவதற்கு அனுமதிக்கப்பட்ட அந்த வானர வீரர் கிளம்பத் தயாராகி, தோட்டத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்று இவ்வாறு சிந்தித்தார்:

"அழகிய பெண்மணியான சீதை இருக்கும் இடத்தை நான் கண்டு பிடித்து விட்டேன். இன்னும் சில விஷயங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. மூன்று வழிமுறைகளைக் கைவிட்டு விட்டு இப்போது நான் நான்காவதைப் பின்பற்ற வேண்டி இருக்கிறது.

"நல்ல வார்த்தைகள் அரக்கர்களிடம் எடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. செல்வம் மிகுந்தவர்களுக்குப் பரிசுகள் பயன்பட மாட்டா. சக்தி வாய்ந்த எதிரிகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்துதல்  அவர்களை சமாதானத்துக்கு வரவழைக்காது. 

"எனவே இந்த சந்தர்ப்பத்தில் பலத்தைப் பயன்படுத்துவது மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எதுவும் பயனளிக்காது. ஏனெனில் இப்போது சண்டையில் பல அரக்கர்கள் இறந்தால், அரக்கர்கள் நியாயத்துக்குக் கட்டுப்பட வாய்ப்பு உள்ளது.

"கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதுடன், முக்கியப் பணிக்கு முரணல்லாத வேறு பல சாதனைகளையும் செய்பவன்தான் சிறந்த தூதுவன்.

இந்த உலகத்தில் ஒரு சிறிய செயலைக் கூட ஒரே விதமான வழிமுறையைப் பயன்படுத்திச் செய்ய முடியாது. எனவே ஒரு திறமையுள்ள தூதுவன் தன் நோக்கம் நிறைவேறுவதற்காகப் பல்வகை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

"நான் இங்கே இருக்கும்போதே எதிரியின் பலத்தையும், போரில் அவன் பயன்படுத்தக் கூடிய தந்திரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவை பற்றித் திருப்தி செய்து கொண்ட பிறகு வானரர்களின் நகரத்துக்குத் திரும்பினால்தான் எனக்குக் கொடுக்கப்பட்ட பணியை முடித்தவனாக ஆவேன்.

"இந்த அரக்கர்களை ஒரு பயங்கரமான போருக்கு நான் எப்படி இழுப்பது? அது நடந்தால்தான் பத்து தலைகள் கொண்ட ராவணன் நன்கு பயிற்சி அளிக்கப்பட தன் படைகளை என்னுடன் போரிட அனுப்புவான். 

"அப்படி நடந்தால்தான் ராவணனை அவன் அமைச்சர்கள், ராணுவத் தலைவர்கள் ஆகியோருடன் நான் நேருக்கு நேராகச் சந்தித்து, அவர்களுடைய பலங்களையும், திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். அப்போதுதான் நான் இங்கிருந்து முழுத் திருப்தியுடன் திரும்ப முடியும்.

"தேவலோகத்தில் இருக்கும் நந்தனத் தோட்டத்துக்கு இணையான, கண்களுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியூட்டும் அடர்த்தியான மரக் கூட்டங்களையும், கொடிகளையும் கொண்ட இந்த அழகான தோட்டம் இந்தப் பாவப் பிறவிக்குச் சொந்தமானது.

"வறண்ட காட்டை நெருப்பு அழிப்பது போல் இதை நான் அழிக்கப் போகிறேன். இந்தத் தோட்டம் அழிக்கப்பட்டால் பத்து தலைகள் கொண்ட ராவணன் நிச்சயம் கோபம் கொள்வான். 

"அப்போதுதான் அரக்கர்களின் அரசன் குதிரைப்படை, ரதப்படை மற்றும் யானைப்படை உள்ளிட்ட, சூலங்கள், ஈட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கொண்ட ஒரு பெரிய சேனையை அனுப்புவான். அப்போது இந்தச் சண்டை ஒரு பெரிய போராகும்.

"அசைக்க முடியாத பலம் கொண்ட நான் இந்த பயங்கரமான அரக்கர்களுடன் ஒரு உக்கிரமமான போரில் ஈடுபடுவேன். இவ்வாறு ராவணனால் அனுப்பபட்ட படைகளை நான் அழித்த பிறகு, நான் மகிழ்ச்சியுடன் வானரர்களின் தலைவரிடம் திரும்பிச் செல்வேன்."

பிறகு எதிர்க்க முடியாத வல்லமை பெற்ற வாயுபுத்திரர் ஒரு சூறாவளியைப் போன்ற பயங்கரமான நிலை பெற்றவராகத் தன் தொடைகளால் அந்தத் தோட்டத்தில் இருந்த மரங்களை அடித்து வீழ்த்தத் தொடங்கினார்.

போதை கொண்ட பறவைகள் வசித்து வந்த மரங்களும் கொடிகளும் நிறைந்த அந்த அரண்மனைத் தோட்டத்தை வீரரான ஹனுமான் இவ்வாறு அழித்தார்.

கீழே விழுந்த மரங்கள், நிரம்பிய குளங்கள், சிதைந்த மேடுகள் ஆகியவற்றால் அந்தத் தோட்டம் விரைவிலேயே ஒரு ஒழுங்கற்ற தோற்றம் கொண்டதாக ஆகியது. 

பயத்தில் பறவைகள் கீச்சிட, குளங்கள் மண்ணால் நிரம்ப மென்மையான இலைகளைத் தாங்கி நின்ற மரக் கிளைகள் உடைந்தும், கீழே விழுந்தும் இருக்க, அந்தத் தோட்டம் தீயினால் எரிக்கப்பட்டு வறண்டு போன ஒரு கானகத்தைப் போன்ற அழிவுத் தோற்றத்துடன் காணப்பட்டது.

தங்களைத் தாங்கி நின்ற வேலிகள் அழிக்கப்பட்டதால் கொடிகள் பயத்தினால் நடுங்கும் பெண்களைப் போல் தோற்றமளித்தன.

கொடி மண்டபங்கள் அழிக்கப்பட்டும், மேடைகள் இடிபாடு அடைந்தும், மிருகங்களும், பாம்புகளும் நசுக்கப்பட்டும் குடில்களும், மண்டபங்களும் நொறுக்கப்பட்டும் அந்தத் தோட்ட நிலத்தில் பெரும் குழப்பம் நிலவியது.

பத்து தலைகள் கொண்ட ராவணனின் அந்தப்புரப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட, அசோகக் கொடிகள் எல்லா இடங்களிலும் மிக அழகான வடிவங்களில் படர்ந்திருந்த அந்த உல்லாச வனம், அந்த வானரரின் தாக்குதலால், சாய்ந்த கொடிகள் தங்களுக்கு நேர்ந்த கதியை நினைத்து வருந்துவது போன்ற தோற்றத்துடன் ஒரு அழிவுக் காட்சியாகத் தோற்றமளித்தது.

எல்லா இடங்களிலும் தாவிக் குதித்துக் கொண்டு அரசன் ராவணனின் கோபத்தைத் தூண்டுவதற்காக திட்டமிட்டு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தச் சிறந்த வானரர் அந்த இடத்தில் இருந்த பல அரக்கர்களுடன் தனி ஒருவராகப் போரிட விருப்பம்  கொண்டு, ஜொலிக்கும் தோற்றத்துடன்  அந்தத் தோட்ட வாயிலில் நின்றார்.

சர்க்கம் 42 - கிங்கரர்கள் வதம்
பறவைகள் உரத்த குரலில் கீச்சிட்டதையும், மரங்கள் கீழே விழுந்த சத்தங்களையும் கேட்டு இலங்கை நகர மக்கள் அனைவரும் பீதியும் கலக்கமும் அடைந்தனர்.

அச்சமடைந்த பறவைகள் மற்றும் பறவைகளின் ஓலங்களும், கீச்சிடுதல்களும் அரக்கர்களுக்கு ஒரு கெட்ட, அமங்கலமான சகுனமாகஇருந்தன.

அந்தச் சத்தங்களினால் உறக்கத்திலிருந்து விழித்து எழச் செய்யப்பட்ட கோர முகம் கொண்ட அரக்கிகள் தங்கள் முன்னாள் சேதப்படுத்தப்பட்ட தோட்டத்தையும், அந்தப் பெரிய குரங்கையும் தங்கள் முன் கண்டனர்.

அந்த அரக்கிகளைப் பார்த்ததும், சக்தி படைத்த வீரமுள்ள ஹனுமான்  அவர்கள் மனதில் அச்சம் விளைவிக்கும்படியான ஒரு பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டார்.

அந்தச் சக்தி வாய்ந்த, மலை போன்ற தோற்றம் கொண்ட ஹனுமானைத் தங்கள் முன் பார்த்ததும், அந்த அரக்கிகள் சீதையிடம் வினவினர்:

"யார் இந்த ஐந்து? யாரைச் சேர்ந்தவன் இவன்? எங்கிருந்து இங்கே வந்திருக்கிறான்? இங்கு அவனுடைய நோக்கம் என்ன? எங்களுக்கு இவையெல்லாம் தெரிய வேண்டும். உன்னால் எப்படி அவனிடம் பேச முடிந்தது?

"அழகானவளே! அவன்உன்னிடம் பேசியது உண்மைதானே? இது பற்றிய உண்மைகளை எங்களிடம் சொல். உனக்கு எந்தத் தீங்கும் வராது."

அப்போது, தன் உயர்ந்த உள்ளத்தைப் போலவே சிறந்த  தோற்றமும் கொண்ட சீதை அவர்களிடம் இவ்வாறு கூறினார்.

"தாங்கள் விரும்பும் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளும் அரக்கர்கள் விஷயத்தில் நான் என்ன கூற முடியும்? அவன் யார், அவனுக்கு என்ன வேண்டும் என்பதெல்லாம் நீங்களே அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

"பயணம் செய்பவர் செல்லும் வழியை கவனித்து அதைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது ஒரு திருடனின் வேலை. தான் விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடிய அரக்கர்களைப் போன்றவன்தான் அவன் என்று நான் நினைக்கிறேன். அவனுடைய சக்திகள் என்னவென்று எனக்குத் தெரியாது. நானும் அவனால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்."

சீதையின் வார்த்தைகளைக் கேட்டு அரக்கிகள் மிகவும் வியப்படைந்தனர். நிகழ்ந்த எல்லாவற்றையும் பற்றித் தகவல் தெரிவிக்க சிலர் ராவணனின் அரண்மனைக்கு விரைந்தனர்.

எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளும் வல்லமை பெற்ற அந்த பயங்கரமான பிராணியைப் பற்றிய எல்லா விவரங்களையும் கோரமான முகம் கொண்ட அரக்கிகள் ராவணனிடம் தெரிவிக்கத் தொடங்கினர்.

ஓ அரசரே! அசோக வனத்தில் பயங்கரமான சக்தி கொண்ட ஒரு குரங்கு சீதையிடம் பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் எவ்வளவோ கேட்டும் ஜனகரின் மகளான அழகிய சீதை அந்தக் குரங்கைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார்.

அவன் இந்திரன் அல்லது குபேரனின் தூதுவனாக இருக்கலாம், அல்லது அவன் சீதையைக் கண்டு பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ராமனின் தூதுவனாகவும் இருக்கலாம்.

அற்புதமான தோற்றம் கொண்ட அந்த ஜந்து மிக அழகான தோற்றத்துடன் இருந்த பல பிராணிகள் வசித்து வந்த உங்கள் அந்தப்புரத் தோட்டத்தை மொத்தமாக அழித்து விட்டது. அது அழிக்காத இடமே மீதி இல்லை. ஆனால் சீதை அமர்ந்திருந்த இடத்தை அது தொடக் கூட இல்லை.

சீதையைக் காப்பதற்காக அந்த இடத்தை அது தொடாமல் விட்டதா, அல்லது சோர்வடைந்ததால் அது அதைச் செய்யாமல் விட்டதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அது சோர்வாக இருக்க முடியாது. அதற்கு சோர்வு என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எந்த மரத்தடியின் கீழ் சீதை அமர்ந்திருக்கிறாளோ, அந்த ஏராளமான இலைகளும், பூக்களும் நிறைந்த சிம்சுபா மரத்தை அது கவனமாகத் தொடாமல் விட்டது சீதையைக் காப்பாற்றுவதற்காகத்தான் இருக்க வேண்டும்.

சீதையிடம் பேசவும், அசோக வனத்தை அழிக்கவும் துணிந்த இந்த பயங்கரமான ஜந்துவுக்கு நீங்கள் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். 

"ஓ, அரக்கர்களின் அரசனே! நீங்கள் விருப்பம் வைத்திருக்கும் சீதையிடம் பேசுவதற்கு யாருக்குத் துணிவு வரும்? அவ்வாறு செய்யத் துணிபவன் அவன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறான் என்றுதான் பொருள்."

அரக்கிகளின் வார்த்தைகளைக் கேட்ட ராவணன் கோபத்தினால் விழிகளை உருட்டியபோது அவன் கண்கள் யாகக் குண்டத்தில் எரியும் தீயைப் போல் தோற்றமளித்தன. 

மிகவும் கோபம் கொண்ட ராவணனின் இரண்டு கண்களிலிருந்தும் எரியும் விளக்கிலிருந்து எண்ணெய்த் துளிகள் விழுவது போல் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

கிங்கரர்கள் என்ற பெயர் கொண்ட, எல்லா விதத்திலும் அவனுடைய உண்மையான சீடர்களான ஒரு பயங்கரமான அரக்கர்கள் கூட்டத்தை ஹனுமானுடன் போரிட்டு அவருடைய தவறான செயலுக்காக அவரை தண்டிக்கும்படி ராவணன் உத்தரவிட்டான்.

உடனே, பெருத்த வயிறும், கூரான பற்களும், பயங்கரமான தோற்றங்களும் பெரும் சக்தியும் கொண்ட பயங்கரமான அரக்கர்கள் சுத்தியல்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட கம்புகள் ஆகிய ஆயுதங்களுடன் ஹனுமானைப் பிடிக்க அரண்மனையிலிருந்து கிளம்பினர்.

எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல் அவர்கள் வரவை எதிர்பார்ப்பது போல் வாயிற்கதவு அமைந்திருந்த கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த ஹனுமானை நோக்கி அவர்கள் ஓடினர்.

அவரை அவர்கள் பல்வேறு வடிவங்கள் கொண்ட கட்டைகளாலும், தங்க முனை கொண்ட உலக்கைகளாலும், சூரியனைப் போன்று ஒளி விடும் அம்புகளாலும் தாக்கினார்கள். 

ஈட்டிகள், ஆணிகள் பதிக்கப்பட்ட கம்புகள், வாட்கள் இன்னும் பல ஆயுதங்களுடன் இருந்த அவர்கள் வெறியுடன் ஹனுமானைச் சூழ்ந்து கொண்டனர்.

தோற்றத்தில் மலைபோன்று இருந்த, சக்தியால் ஒளிர்ந்த ஹனுமான் உரத்த குரலில் கர்ஜனை செய்து கொண்டே தரையைத் தன் வாலால் அடித்தார்.

வாயுவின் குமாரர் தன் உடலை மிகவும் பெரிதாக ஆக்கிக் கொண்டு, கைகளைத் தட்டுவதன் மூலமும், கர்ஜனை மூலமும் இலங்கையின் அடித்தளத்தையே அதிர வைத்தார்.

ஹனுமான் தன் கைகளைத் தட்டிய ஓசை வானத்தில் இருந்த பறவைகளை நடுங்க வைத்து அவற்றைத் தரையில் விழ வைத்தது. பிறகு அவர் உரத்த குரலில் கூறினார்: 

"ராமரின் வெல்ல முடியாத வலிமை போற்றி! சக்தி வாய்ந்த லக்ஷ்மணர் மற்றும் ராமரின் பாதுகாப்பில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுக்ரீவர் ஆகியோரின் புகழ் போற்றி! 

"நான் அந்த ராமருடைய ஊழியன் ஹனுமான். வாயுதேவரின் குமாரனான நான் எதிரிகளின் சேனைகளை அழிக்கவும் அநேகமாக எதையுமே மிக எளிதாக நிறைவேற்றவும் வல்லமை படைத்தவன்.

"நான் பாறைகளாலும், மரங்களாலும் பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தும்போது ஆயிரம் ராவணர்களாலும் என்னைப் போரில் எதிர் கொள்ள முடியாது. 

"எல்லா அரக்கர்களும் தங்கள் கண்களை அகல விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் இலங்கையை அதிர வைத்து, சீதையைச் சந்தித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு என் பணியை முடித்து விட்டுத் திரும்புவேன்."

ஹனுமானின் உரத்த கர்ஜனைகளைக் கேட்டும், சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தில் இருக்கும் மேகம் போல் உயரத்தில் அவரைப் பார்த்தும் அந்த அரக்கர்கள் நடுங்கிப் போனார்கள்.

பிறகு தங்கள் தைரியத்தைத் திரும்பப் பெற்ற சிலஅரக்கர்கள் தங்கள் எஜமானரின் கட்டளையை நினைவு கூர்ந்து ஹனுமானைத் தங்கள் பயங்கரமான ஆயுதங்களால் அடித்தனர்.

அவர்கள் தைரியத்துடன் ஹனுமானை எல்லாப் புறங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டார்கள். கதவு கோபுரத்தில் இருந்த ஒரு பெரிய இரும்பு உலக்கையைக் கையில் எடுத்துக் கொண்ட ஹனுமான் எல்லா அரக்கர்களையும் அந்த உலக்கையால் அடித்துக் கொன்றார்.

கருடன் தன் கால் நகங்களால் ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், கையில் அந்த உலக்கையைப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழும்பி இலங்கையைச் சுற்றிப் பறந்தார் ஹனுமான்.

கிங்கரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்த அரக்கர்களை இந்த வகையில் கொன்ற பிறகு, இன்னும் அதிகம் போரை விரும்பியவராக மீண்டும் அந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டார் அவர்.

அப்போது பயத்தினால் அவரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டிருந்த சில அரக்கர்கள் எல்லா கிங்கரர்களும் அழிக்கப்பட்டது பற்றி ராவணனிடம் தெரிவிக்கச் சென்றனர்.

தன்னுடைய சக்தி வாய்ந்த சேனை அழிக்கப்பட்டதை அறிந்த ராவணன் தன் கண்களை உருட்டியபடி போரில் யாராலும் வெல்ல முடியாத, இணையற்றவனான அமைச்சர் பிரஹஸ்தரின் மகனுக்கு உத்தரவுகள் பிறப்பித்தான்.

சர்க்கம் 43 - சுக்ரீவனின் வெற்றியை அறிவித்தல்
ராவணனால் அனுப்பப்பட்டவர்களை இவ்வாறு கொன்ற பிறகு ஹனுமான் சிந்தித்தார்:

'நான் தோட்டங்களை அழித்து விட்டேன்.ஆனால் இந்த மலை மீது இருக்கும் அரண்மனையை நான் இன்னும் அழிக்கவில்லை. அந்த அழிவை இப்போது நிகழ்த்துகிறேன்.'

மனதில் இவ்வாறு முடிவு செய்தபின், வாயு குமாரரும் வானரர்களின் தலைவருமான ஹனுமான் மேரு மலையைப் போல் உயர்ந்திருந்த அரண்மனையின் உச்சியில் தன் சக்தியை வெளிப்படுத்தியபடி ஏறினார்.

மற்றவர்களால் நெருங்கக் கூட முடியாத அந்த உயர்ந்த மாளிகையைத் தாக்கியபோது, வெற்றியின் புகழில் ஹனுமான் தேவலோகத்து மலையான பாரியத்ராவைப் போல் மின்னினார். 

தன் இயல்பான சக்தியால் பிரம்மாண்டமான உருவத்தை எடுத்துக் கொண்ட அந்த வாயுகுமாரர் தன் வாலால் பெரும் சத்தத்துடன் இலங்கையே ஆடும் விதத்தில் தரையில் அடித்தார்.

ஹனுமானின் காதைத் துளைக்கும் கர்ஜனையைக் கேட்டுப் பறவைகள் அச்சத்தினால் கீழே விழுந்தன. அங்கே காவலுக்கு இருந்த காவலாளி பயமும், குழப்பமும் அடைந்தான். 

அவர் இப்போது உரத்த குரலில் கூவினார்:

" மிகச் சிறந்த வில்லாளியான ராமரும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் புகழுடன் ஆட்சி செய்யட்டும். ராமரால் காக்கப்பட்டு அரசர் சுக்ரீவர் எல்லாப் புகழுடனும் ஆட்சி செய்யட்டும்!

"வாயுவின் குமாரனும், எதிரிகளை அழிப்பவனும், கடுமையான செயல்களைக் கூட எளிதாகச் செய்பவனுமான ஹனுமானாகிய நான் கோசல நட்டு அரசர் ராமரின் ஊழியன். நான் பெரிய பாறைகளாலும், மரங்களாலும் தாக்கும்போது ஆயிரம் ராவணர்களும் போரில் எனக்கு இணையாக மாட்டார்கள். 

"எல்லா அரக்கர்களும் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே இலங்கையை அதன் அடித்தளத்தைப் பிடித்து ஆட்டி, மிதிலை நாட்டு இளவரசிக்கு வணக்கம் செலுத்தி விட்டு என் பணியை முடித்தவனாகத் திரும்புவேன். 

கோபுரத்தின் மீது அமர்ந்து அரக்கர்களிடம் இவ்வாறு அறைகூவல் விடுத்த ஹனுமான் இன்னொரு உரத்த கர்ஜனை செய்து அவர்கள் மனதில் அச்சத்தை உண்டாக்கினார். 

அந்த பயங்கரமான சத்தத்தைக் கேட்டதும் பெரிய உருவம் கொண்ட நூற்றுக்கணக்கன காவலர்கள் வெளியே வந்தனர். அவர்கள் வாயு குமாரரைச் சூழ்ந்து கொண்டு அவரை அம்புகளாலும் ஈட்டிகள், வாட்கள், கோடரிகள் போன்ற ஆயுதங்களாலும் தாக்கினர்.

அவர்கள் அவரைப் பல்வகையான கம்புகள், கட்டைகள், மின்னல் போன்ற தீக்கக்கும் அம்புகள் போன்றவற்றால் தாக்கினர். அந்த அரக்கர் கூட்டம் அவரை கங்கை வெள்ளம் போல் சூழ்ந்து கொண்டது. வாயுபுத்திரர் வெகுண்டு எழுந்து பயங்கரமான ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டார்.

பிறகு, வாயுவின் குமாரரான அந்த சக்தியுள்ள ஹனுமான் ஓரங்களில் தங்க வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய தூணைப் பிடுங்கி அதை அதிக வேகத்தில் பல முறை சுழற்றினார். அதனால் அதிலிருந்து தீக்கொழுந்துகள் உருவாகி அவை அந்த மாளிகையை எரித்தன.

அந்த மாளிகையின் மேல் தளங்கள் பற்றி எரிவதைப் பார்த்த அந்த சக்தியுள்ள வானரத் தலைவர் அந்தத் தூணை இன்னும் வேகமாகவும், பலமாகவும் சுழற்றினார். இந்திரன் தன் எதிரிகளை வஜ்ராயுதத்தால் தாக்கிக் கொன்றது போல் ஹனுமான் அந்த நூறு அரக்கர்களையும் அழித்தார்.

தன் சாதனையைப் பற்றி மனதுக்குள் திருப்தி அடைந்த அவர் அந்தரத்தில் நின்று கொண்டு இவ்வாறு கூறினார்

"என்னைப் போன்ற சக்தியும், உத்வேகமும் கொண்ட ஆயிரக் கணக்கான வானரர்களைக் கொண்ட சேனைகள் பூமி முழுவதும் தேடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

"அவர்களில் சிலர் பத்து யானை பலம் கொண்டவர்கள், மற்றவர்கள் அதை விடப் பத்து மடங்கு அதிக பலம் கொண்டவர்கள். சிலர் தங்கள் தாக்கும் வல்லமையில் ஆயிரம் யானைகளுக்குச் சமமானவர்கள்.

சிலர் வெள்ளம் போன்ற சக்தி கொண்டவர்கள், மற்றவர்கள் அதை விடப் பத்து மடங்கு அதிக சக்தி கொண்டவர்கள். சிலர் பலத்தில் கருடனுக்கு இணையானவர்கள், மற்றவர்கள் காற்றுக்கு இணையானவர்கள்.

அவர்களுக்குள் அளவிட முடியாத சக்தி கொண்ட வானரத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

தங்கள் பற்களையும், நகங்களையுமே முக்கிய ஆயுதங்களாகக் கொண்ட கணக்கிலடங்காத அந்த வானரர்களால் சூழப்பட்டவராக உங்கள் அனைவரின் அழிவையும் செயல்படுத்துவதற்காக எங்கள் அரசர் சுக்ரீவர் இங்கே வந்து கொண்டிருக்கிறார்.

இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த உயர்ந்த ஆத்மாவான ராமரின் மீது ஏற்படுத்திக் கொண்ட விரோதம் விரைவிலேயே இலங்கையின் அழிவிலும், ராவணன் உள்ளிட்டநீங்கள் அனைவரும் இல்லாமல் போவதிலும் முடியப் போகிறது.

சர்க்கம் 44 - ஜம்புமாலி வதம்

அரக்கர்களின் அரசனின் ஆணப்படி, சக்தி வாய்ந்தவனும், கூர்மையான பற்களைக் கொண்டவனுமான பிரஹஸ்த புத்திரன் ஜம்புமாலி கையில் வில்லுடன் புறப்பட்டான்.

சிவப்பு நிற மாலைகளையும், சிவப்பு நிற உடைகளையும், சிறந்த காதணிகளையும் அணந்திருந்த, பெரிய உருவமும் போர் போன்ற தோற்றமும் கொண்ட ஜம்புமாலி, கோபத்தினால் கண்களை உருட்டியபடி தீப்பற்றிய திரிகூட மலையைப் போல் தோற்றமளித்தான்.

பெரிய மேகம் போன்ற தோற்றத்தையும், பெரிய கைகள், தலை, தோள்கள், பற்கள், முகம் ஆகியவற்றையும் கொண்ட அவன் மிகுந்த உற்சாகத்தை வெளிக்காட்டிக் கொண்டு மிகுந்த வேகத்துடன் வந்தான். சக்தியுடனும், உறுதியுடனும் ஒலித்த அவன் குரல் இடிமுழக்கம் போல் இருந்தது. 

அவன் கையிலிருந்த வானவில்லைப் போன்ற வில்லின் ஓசை இடி முழக்கம் போல் உரத்ததாக இருந்தது. சிறந்த அம்புகளைக் கொண்டிருந்த அவன், தன் வில்லின் நாணினால் ஒலி எழுப்பியபடியே போருக்கு அதி வேகமாக விரைந்தான். 

அவனுடைய வில் எழுப்பிய பெரும் சத்தம் விண்ணையும் எல்லாத் திசைகளையும் நிரப்பியது. செவ்வாய் கிரகத்தைப் போன்றும், உதய கால சூரியன் போலும் ஒளிர்ந்த அவன் செப்பினால் செய்யப்பட்ட கவசங்களால் பாதுகாக்கப்பட்டிருந்தான். ஹனுமானிடம் அவன் உரத்த குரலில் சவால் விட்டான்: "நில். நான் உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்."

குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அவன் வருவதைப் பார்த்த ஹனுமான் மனதுக்குள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த உற்சாகத்தில் அவர் உரத்து கர்ஜனை செய்தார்.

சக்தி வாய்ந்த ஜம்புமாலி நுழைவாயில் கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த ஹனுமானைக் கூர்மையான அம்புகளால் தாக்கினான். ஹனுமானின் கைகளின் மீது அவன் பத்து அம்புகளைச் செலுத்தினான். அவற்றில் ஒன்றின் முனையில் ஒரு கத்தி பதிக்கப்பட்டிருந்தது. பிறை போன்ற அரை வட்ட வடிவில் இருந்த ஒரு அம்பை அவர் முகத்தை நோக்கிச் செலுத்தினான் அவன்.

இந்த அம்புகளால் காயப்படுத்தப்பட்டு சிவந்து போன ஹனுமானின் முகம் சூரியக் கதிர்கள் பட்டு முழுமையாக மலர்ந்த தாமரை போல் பிரகாசித்தது. ஹனுமானின் சிவந்த முகத்தில் வடிந்த ரத்தத்தினால் அவர் முகம் வானத்தில் ஒரு பெரிய தாமரைப்பூவில் சிவப்பு சந்தனம் கொட்டியது போல் இருந்தது.

இவ்வாறு அந்த அரக்கனின் அம்புகளால் தாக்கப்பட்டதும் அந்தச் சிறந்த வானரர் அப்போது ஆவேசமும் கோபமும் கொண்டவராக ஆனார். சக்தி வாய்ந்த போர் வீரரான ஹனுமான் அருகிலிருந்து ஒரு பெரிய பாறையை எடுத்து அதை அந்த அரக்கன் மீது மிகுந்த வேகத்துடன் வீசினார். 

ஆவேசம் கொண்ட அந்த அரக்கன் பத்து அம்புகளால் அந்தப் பாறையைத் தூள் தூளாக்கினான்.

அதிகத் துணிவும், மிகுந்த சக்தியும் கொண்டவரான ஹனுமான் தன் தாக்குதல் பயன்ற்றுப் போய் விட்டதைக் கண்டு, ஒரு பெரிய பனை மரத்தைப் பிடுங்கி அதைச் சுழற்றினார்.

அந்த வானரர் பனை மரத்தைச் சுழற்றுவதைக் கண்ட ஜம்புமாலி அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதை உணர்ந்து அவர் மீது அம்பு மழை பொழிந்தான். அவர் கையில் பிடித்திருந்த பனை மரத்தை நான்கு அம்புகளாலும், அவர் கைகளை ஐந்து அம்புகளாலும், அவர் உடலை ஒரு அம்பினாலும், அவர் மார்பைப் பத்து அம்புகளாலும் தாக்கினான்.

உடல் முவதிலும் காயம் ஏற்பட்டது ஹனுமானின் பெரும் கோபத்தைத் தூண்டியது. முன்பு பயன்படுத்திய உலக்கையை அவர் மீண்டும் சுழற்றினார். சக்தியில் தன்னிகரற்றவரும், கோபத்தினால் அச்சமூட்டுபவராகத் தோன்றியவருமான ஹனுமான் அந்த உலக்கையை இன்னும் அதிக விசையுடன் சுழற்றி, அதைக் கொண்டு ஜம்புமாலியின் அகன்ற மார்பைத் தாக்கினார்.

இவ்வாறு தாக்கப்பட்ட பின், ஜம்புமாலியின் தலையோ, கைகளோ, முழங்கால்களோ, வில்லோ, தேரோ, குதிரைகளோ எதுவுமே அவை இருந்த இடத்தில் இல்லை. ஏனெனில் ஹனுமான் அவனைத் தாக்கிய வேகத்தில் ஜம்புமாலி அவனுடைய எல்லா உடல் உறுப்புகளும், ஆபரணங்களும் உடைந்து சிதறி உயிரற்றவனாகக் கீழே விழுந்தான்.

ஜம்புமாலி மற்றும் சக்தி வாய்ந்த கிங்கரர்கள் ஆகியோரின் மரணத்தைப் பற்றிய செய்தியை அறிந்ததும் ராவணனின் கண்கள் பெரும் கோபத்தினால் ஏற்பட்ட உணர்ச்சியால் சிவந்தன.

பிரஹஸ்தனின் மகனான சக்தி வாய்ந்த ஜம்புமாலியின் மரணத்துக்குப் பிறகு கோபத்தினால் கண்களை உருட்டிய ராவணன் அவனுடைய மற்ற அமைச்சர்களின் சக்தி வாய்ந்த புதல்வர்களை உடனே போருக்கு அனுப்பினான்.

சர்க்கம் 45 - அமைச்சர்களின் ஏழு குமாரரர்கள் வதம்

அரக்கர்களின் அரசனின் கட்டளைப்படி அமைச்சர்களின் குமாரர்கள் ஏழு பேர் அரண்மனையிலிருந்து வெளிப்பட்டனர்.

அந்த சக்தி வாய்ந்த வில் வீரர்கள் நெருப்பைப் போன்று ஒளிர்ந்தனர். அவர்கள் வில் வித்தையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள்.

பெரிய சேனை உடன் வர, தங்க முகப்புகளும், பட்டொளி வீசிப் பறக்கும் கொடிக் கம்பங்களும், ஓடும்போது மேகங்களின் முழக்கம் போல் ஒலி எழுப்பும் வேகமான குதிரைகளையும் கொண்ட பெரிய தேர்களில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், வெற்றியைப் பற்றிய உறுதியுடனும் இருந்தனர். இடியைப் போன்ற ஒலியையும், மின்னலைப் போன்ற ஒளியையும் வெளிப்படுத்திய வில்களைக் கையில் ஏந்தியபடி அவர்கள் போர்க்களத்தை அணுகினர்.

கிங்கரர்கள் போரில் வானரரால் கொல்லப்பட்டதையும், அதே எதிரியை அவர்கள் சந்திக்கப் போவதையும் அறிந்திருந்ததால், அவர்களுடைய தாயார்களும், உறவினர்களும் மிகுந்த துயரமும் பயமும் கொண்டனர்.

முதலில் செல்வதற்காக முண்டியடித்துக் கொண்டு, ஒளி பொருந்திய தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, போர் செய்வதற்கான ஆயுதங்களுடன் ஹனுமான் அமர்ந்திருந்த நுழைவாயிலை அவர்கள் அணுகினர்.

அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு சென்ற தேர்களின் இடி போன்ற ஓசையுடன் எல்லா இடங்களிலும் அம்பு மழைகளைப் பொழிந்தபடி அவர்கள் சென்றனர்.

அம்பு மழைகளால் மறைக்கப்பட்டிருந்த ஹனுமான் பெரும் மழையால் மறைக்கப்பட்டிருந்த மலையைப் போல் தோற்றமளித்தார்.

வேகமாக நகர்ந்த ஹனுமான் மேலே இருந்த மேகமற்ற ஆகாயத்துக்கு உயர்ந்து, அவர்களுடைய தேரின் வேகத்தையும், அம்புகளின் வேகத்தையும் பயனற்றதாகச் செய்தார்.

ஆகாயத்திலிருந்து கொண்டு இந்தச் சிறந்த வில் வீரர்களுடன் விளையாடுவது போன்ற செயலில் ஈடுபட்ட ஹனுமான் மேகங்களுக்கிடையே உள்ள வானவில்லினால் அலங்கரிக்கப்பட்ட வாயு பகவானைப் போல் தோற்றமளித்தார்.

வீரமுள்ள ஹனுமான் தன்னுடைய உரத்த கர்ஜனை மூலம் சேனையில் இருந்த அரக்கர்களின் மனங்களில் அதிர்வை ஏற்படுத்தினார். விரைவிலேயே அவர்களிடையே தன் சக்தியையும் வெளிப்படுத்தினார்.

எதிரிகளுக்கு அச்சமாக விளங்கும் அந்த வானர வீரர் அவர்களில் சிலரைத் தன் கையால் அடித்துக் கொன்றார், சிலரைத் தன் காலாலும், முஷ்டியாலும் நசுக்கினார், சிலரைத் தன் நகங்களால் துண்டு துண்டாகக் கிழித்தார். 

இன்னும் சிலரைத் தன் மார்பில் வைத்து அழுத்தியும், தொடைகளுக்கிடையே வைத்து அழுத்தியும் நெரித்துக் கொன்றார். இன்னும் சிலர் சிங்கம் போன்ற அவருடைய கர்ஜனையைக் கேட்டதுமே இறந்து விழுந்தனர்.

பலர் இவ்வாறு வீழ்ந்ததும், அந்தச் சேனையில் இருந்த வீரர்கள் அச்சமடைந்து பத்து திசைகளிலும் ஓடினர். 

யானைகள் பயத்தில் பிளிறின, குதிரைகள் கீழே விழுந்தன. தூள் தூளாக உடைந்த தேர்களின் முகப்புச் சட்டங்கள், கொடிக் கம்பங்கள், குடைகள் ஆகியவற்றால் தரை முழுவதும் மூடப்பட்டிருந்த்து.

அவர்களின் ரத்தம் சாலைகளில் ஆறுகளாக ஓடியது. இலங்கை முழுவதும் அலறல்களாலும், அழுகைகளாலும் நிரம்பியது.

தங்கள் சக்தியால் போதை கொண்டிருந்த அரக்கர்களை இவ்வாறு அழித்த பின், போரைப் போன்று தோற்றம் கொண்ட அந்த சக்தி வாய்ந்த  வானரர் இன்னும் பல அரக்கர்களுடன் மோதலை எதிர்பார்த்தவராக மீண்டும் நுழைவாயில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். 

சர்க்கம் 46 -  ஐந்து படைத் தலைவர்கள் 
அழிக்கப் படுதல்

அந்த சக்தி வாய்ந்த வானரரால் ஐந்து மந்திரி குமாரர்கள் அழிக்கப்பட்டது ராவணனின் மனதில் பெரிய கிலேசத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஒரு முடிவை அவன் மேற்கொண்டான்.

பத்து தலைகள் கொண்ட ராவணன் விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்தரன், பிரகஸன், பாஸகர்ணன் ஆகிய அவனுடைய ஐந்து படைத்தலைவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பித்தான். 

இந்த அரக்கர்கள் அனைவரும் வீரம் மிகுந்தவர்கள், போர்க்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், போர்க்களத்தில் வேகமாகச் சுழன்று செயல்படுபவர்கள், ஹனுமானைப் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

ராவணன் அவர்களிடம் கூறினான்.

"என்னுடைய தளபதிளே! நீங்கள் எல்லோரும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகியவற்றுடன் கிளம்புங்கள். அந்தக் குரங்குக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

"ஆனால் நீங்கள் அதை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். மாறும் சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்பட்டு, நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல் பட வேண்டும்.

"அதனுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கும்போது அது ஒரு சாதாரணக் குரங்காக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு அசாதாரணமான சக்தி கொண்ட பிராணி என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை நம்முடன் போர் செய்வதற்காகவே இந்திரன் தன் தவ வலிமையால் அதை உருவாக்கி இருக்கலாம்.

"உங்கள் எல்லோருடைய துணையுடன் நாகர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், அசுரர்கள், மகரிஷிகள் ஆகிய எல்லோரையும் நான் தோற்கடித்தேன். தோற்கடிக்கப்பட்ட அந்தப் பிறவிகள் இப்போது நமக்கு எதிராக ஏதோ ஒரு உத்தியையோ, தந்திரத்தையோ பயன்படுத்தி இருக்கிறார்கள். குரங்கு என்று கருதப்படும் இந்தப் பிராணி சந்தேகமில்லாமல் அவர்களுடைய தூதுவன்தான்,

"எனவே உங்களிடம் இருக்கும் எல்லா வசதிகளையும் பயன்படுத்தி, அதைப் பிடித்துக் கட்டிப் போடுங்கள். தளாராத துணிவும், சக்தியும் கொண்டதாகத் தோன்றும் இந்தக் குரங்கை நீங்கள்  குறைத்து மதிப்பிடக் கூடாது. 

"ஏனெனில் வாலி, சுக்ரீவன் சக்தி வாய்ந்த ஜாம்பவான், நீலன், படைத்தலைவன் த்விவிதன் போன்ற மிகவும் சக்தியும்,துணிவும் கொண்ட குரங்குகளை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்.  

"அவர்கள் இதைப் போல் இவ்வளவு வேகம் கொண்டவர்கள் அல்ல, இந்தப் பிராணியைப் போல் தேஜஸ், வீரம், பலம், உற்சாகம் எந்த வடிவமும் எடுக்கும் வல்லமை ஆகியவற்றையும் அவர்கள்  கொண்டிருக்கவில்லை. 

"இது குரங்கு வடிவத்தில் வந்திருக்கும் ஒரு பயங்கரமான மர்ம ஜந்து என்று நான் நினைக்கிறேன். நாம் அதிக முயற்சி எடுத்து  அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

"இந்த அண்டத்தில் இந்திரன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் போரில் உங்களுக்கு இணையாக மாட்டார்கள். இது என் உறுதியான கருத்து.

"ஆயினும், ராஜதந்திரியாகவும், வெற்றியின் மீது கண் உள்ளவனாகவும் இருக்கும் ஒரு போர் வீரன் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பான். ஏனெனில், போரின் முடிவுகள் நிச்சயமற்றவை."

அந்த அரக்கர்கள் எல்லோரும் துணிவு மிக்கவர்கள், திறமையுள்ளவர்கள், நெருப்பு போல் ஒளி விடுபவர்கள். தேர்கள், யானைகள், அதி வேகக் குதிரைகள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் தங்கள் எஜமானர் விரும்பியபடி தங்கள் படையுடன் அவர்கள் போருக்கு விரைந்தனர்.

பிரகாசத்தில் சூரியனைப் போல் இருந்த அந்த வானர வீரரை அந்த வீரரர்கள் இப்போது பார்த்தனர்.

சக்தி, துணிவு, திறமை எல்லாம் நிறைந்தவராகவும், பெரிய உடலும், மிகுந்த அறிவும் படைத்தவராகவும் இருந்த இருந்த அவரைப் பார்த்ததும், அந்த அரக்கர்கள் அவரைப் பல திசைகளிலிருந்தும் சூழ்ந்து  கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.

கருப்பு நிறக் கைப்பிடியும், கூர்மையான முனைகளும் கொண்ட ஐந்து பெரிய இரும்பு அம்புகளால் ஹனுமானின் தலையை அரக்கன் துர்தரன் தாக்கினான்.

அந்த அம்புகளைத் தன் தலையில் வாங்கிக் கொண்ட ஹனுமான் தன்னுடைய கர்ஜனைகளால் எல்லாத் திசைகளையும் அதிர வைத்து வானில் எழும்பினார்.

வீரமும் சக்தியும் மிகுந்த துர்தரன் தன் தேரில் அமர்ந்து தன் வில்லின் நாணைச் சுண்டி கணக்கற்ற கூரிய அம்புகளை விட்டுப் போரிட்டபடி அவருக்கு அருகில் வந்தான்.

மழைக்கால முடிவில் காற்று மேகங்களைத் தடுத்து நிறுத்துவது போல் துர்தரன் வானத்தில் செலுத்திய எல்லா அம்புகளையும் அந்த வானரர் தடுத்து நிறுத்தினார். துர்தரன் ஹனுமானை பயங்கரமாகத் தாக்கியபோது, அவர் தன் உருவத்தை இன்னும் பெரிதாக்கி பயங்கரமான ஒலிகளை எழுப்பினார்.

அந்தத் திறமை வாய்ந்த வானரர் வானத்தில் மிக உயரமாக எழுந்து துர்தரனின் தேரின் மீது  இடியைப் போல் விழுந்தார். ஹனுமான் விழுந்த தாக்கத்தால் உடனே தேர்க் குதிரைகளும் தேரின் பாகங்களும் நொறுங்கி விழ, துர்தரன் தேரிலிருந்து விழுந்து இறந்தான்.

அவன் இறந்து விழுந்து கிடப்பதைக் கண்ட கலவரம் அடையாத போர் வீரர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அரக்கர்கள் விரூபாக்ஷன், யுபாக்ஷன் இருவரும் மிகுந்த கோபத்துடன் ஹனுமானின் முன்பு பாய்ந்து வந்தனர்.

வானத்தில் எழும்பி நின்று அவர்கள் முள் பதிக்கப்பட்ட கட்டைகளால் சக்தி வாய்ந்த அந்த வானர வீரரின் மார்பில் அடித்து அவரைத் தாக்கினர்.

தாக்குவதில் கருடனுக்கு நிகரான அந்த சக்தி வாய்ந்த ஹனுமான் அந்தப் போர் வீரர்களின் ஆவேசமான பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தரையில் இறங்கினார்.

வாயுவின் குமாரரான அந்த வானரர் ஒரு பெரிய ஆச்சா (சால) மரத்தைப் பார்த்தார். அதை வேரோடு பிடுங்கிய அவர் அந்த இரண்டு அரக்க வீரர்களையும் அந்த மரத்தால் அடித்துக் கொன்றார்.

அந்த சக்தி வாய்ந்த வானரரால் மூவரும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிரகஸன் மிகுந்த கோபத்துடன் வந்து தன் எதிரியின் மீது பாய்ந்தான்.

 பாஸகர்ணன் என்ற மற்றொரு சக்தி வாய்ந்த அரக்கன் கையில் ஒரு சூலத்தை ஏந்தியபடி மிகுந்த ஆவேசத்துடன் மனம் தளர்வடையாத அந்த வானரத் தலைவருடன் போரிட வந்தான்.

அரக்கன் பாஸகர்ணன் ஹனுமானை ஒரு சூலத்தினால் தாக்க, பிரகஸன் அவரை ஒரு கூரான வாளால் குத்தினான்.

இந்தத் தாக்குதல்களால் தன் உடல் காயமடைந்து தலை முழுவதும் ரத்தத்தில் ஊறியவராக இருந்த ஹனுமான் செவ்வானத்தில் உதிக்கும் சூரியன் போல் தோற்றமளித்தார். 

பிறகு வானரத் தலைவர் ஹனுமான் மிருகங்களும், பாம்புகளும் வாழ்ந்து வந்த மரங்கள் அடர்ந்த ஒரு மலையின் உச்சியைப் பிடுங்கி அந்த இரண்டு அரக்கர்களின் மீது எறிந்து அவர்களைக் கொன்றார்.

ஐந்து படைத்தலைவர்களும் கொல்லப்பட்ட பிறகு மீதமிருந்த அவர்களுடைய மொத்த சேனையையும் ஹனுமான் அழித்தார். 

குதிரைகளைக் குதிரைகளைக் கொண்டும், யானைகளை யானைகளைக் கொண்டும், மனிதர்களை மனிதர்களைக் கொண்டும், தேர்களைத் தேர்களைக் கொண்டும் அடித்து  இந்திரன் அசுரர்களை அழித்தது போல் அந்தச் சேனைகளை அந்த வானரர் அழித்தார்

தரை முழுவதும் யானைகள், குதிரைகள், அரக்க வீரர்கள் ஆகியோரின் சடலங்கள், தேர்களின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றால் மூடப்பட்டிருந்தது.

சேனைத்தலைவர்கள், அவர்களுடைய சேனைகள், வாகனங்கள் ஆகியவற்றைப் போரில் அழித்த பின்  அந்த வீர வானரர் நுழைவாயில் கோபுரத்துக்கு மீண்டும் ஓடி ராவணனின்  சேனைகளை அழிப்பதற்கான அடுத்த வாய்ப்புக்காக யமனைப் போல் காத்திருந்தார்.

சர்க்கம் 47 - அக்ஷகுமாரன் வதம்

ஐந்து படைத்தலைவர்களும் அவர்கள் சேனைகள், வாகனங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து அழிக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும், இளவரசன் அக்ஷகுமாரன் போரின் மீது காதல் கொண்டவனாக போர் புரியத் தயாராக அரக்க அரசன் ராவணனின் முன்னால்  போய் நின்றான்.

ராவணனின் ஒரு கண் அசைவினால் ஆணையிடப்பட்டு,தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த வில்லை ஆயுதமாக எடுத்துக் கொண்டு துள்ளிக் குதித்து அங்கு கூடி இருந்தவர்கள் முன்பு ஒரு யாகத்தீயைப் போல் அவன் நின்றான்.

பிறகு அந்த வீரம் மிகுந்த அரக்க வீரன் தூய தங்கத்தால் ஆன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட, உதய சூரியன் போல் ஒளிர்ந்த ஒரு பெரிய தேரில் அமர்ந்து அந்த உயர்ந்த வானரரைத் தாக்குவதற்குக் கிளம்பினான்.

போற்றப்பட்ட அந்த வில் வீரன் அமர்ந்த தேர் அவனுடைய தவ வலிமையால் பெறப்பட்டது. அது தங்கப் பூச்சுடன், பதாகைகளும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கொடிக்கம்பங்களும் கொண்டதாக இருந்தது. 

காற்றைப் போல் வேகம் கொண்ட எட்டு உயர்சாதிக் குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. அதனால் தரையிலும், ஆகாயத்திலும் எந்த ஒரு தடையும் இன்றியும் தேவர்களாலும் அசுரர்களாலும் கூட அழிக்கப்படும் அபாயம் இன்றியும் செல்ல முடியும்.

அந்தத் தேர் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்தது அதில் அம்புகள் நிரப்பபட்டிருந்த அம்பறாவும் எட்டு வாட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஈட்டிகள், கம்புகள் மற்றும் சூரியனையும், சந்திரனையும் போல் ஒளி மிகுந்த கம்பிகளுடன் கூடிய எல்லா விதமான ஆயுதங்களும் அதில் இருந்தன.

எல்லா விதங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர் அது. அப்படிப்பட்ட தேரில் அமர்ந்தபடி அக்ஷகுமாரன் போரைத் துவக்கினான். 

யானைகள், குதிரைகள், தேர்கள் கொண்ட அவனுடைய சேனைகள் எழுப்பிய ஒலி ஆகாயத்தையும், மலைகளுடன் கூடிய பூமியையும் நிரப்பியது. அத்தகைய சேனை பின்தொடர, அவன் நுழைவாயில் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த அந்த வானரரை அணுகினான்.

சிங்கம் போன்ற தோற்றம் கொண்டிருந்த அக்ஷகுமாரன் எதிரிகளின் சேனைகளை அழிக்கும்போது பிரளயகால நெருப்பு போல் இருந்த அந்த வானரரை அணுகினான். 

அவரை அணுகியதும், அவருடைய அற்புதமான தோற்றத்தைக் கண்டு அவர் மீது அவனுக்கு ஒரு மரியாதை தோன்றியது. அந்த உணர்வு அவன் கண்களில் வெளிப்பட அவன் நின்று தன் எதிரியைப் பார்த்தான்.

தாக்குவதில் அந்த வானரருக்கு இருந்த பலத்தையும்,திறமையையும் தன்னுடைய சக்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு அந்த இளவரசன் பனிக்காலம் முடிந்ததும் ஏற்படும் சூரியனின் தோற்றத்தைப் போல் ஓளி விட்டு நின்றான்.

எதிரியின் கேள்விக்கிடமில்லாத பலத்தையும், திறமையையும் முழுவதும் உணர்ந்திருந்த அந்த அக்ஷன் தன் முழு சக்தியையும் மன உறுதியுடன் ஒருமைப்படுத்தி மிகுந்த கோபம் கொண்டவனாக, ஹனுமானைச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதற்காக, அவர் மீது மீது மூன்று கூரிய அம்புகளைச் செலுத்தினான்.

போர்ச் செயல்களால் அந்த வானரர் சிறிது கூடச் சோர்வடையவில்லை என்பதையும், மாறாக அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், போர் குறித்து உற்சாகத்துடன் இருந்ததையும் கண்டு, தன் வில்லையும் அம்புகளையும் தாக்குதல் நடத்தத் தயாராக வைத்திருந்த அக்ஷகுமாரன் மனதுக்குள் சற்றே கவலை கொண்டவனாகச் சற்று நேரம் யோசனையில் அழ்ந்தான்.

தங்கச் சங்கிலிகளாலும், தோள் வளையங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை பெற்றவனாக இருந்த அவன் பிறகு அந்த வானரருடன் போர் புரிய ஆரம்பித்தான். 

அவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த போர் மிகவும் உக்கிரமாக இருந்தது. அது தேவர்கள் மற்றும் அசுரர்கள் மனங்களில் கூடக் கவலையை ஏற்படுத்தியது.

அக்ஷகுமாரனுக்கும் அந்த வானரருக்கும் இடையே நிகழ்ந்த போரைக் கண்டு பூமி நடுங்கியது, சூரியன் ஒளி குன்றியது, காற்று அசைவற்று நின்றது, மலைகள் வியப்பினால் ஸ்தம்பித்தன, ஆகாயம் அதிர்வு அலைகளால் நிறைந்தது, சமுத்திரங்கள் தங்கள் அடிப்பகுதி வரை கலங்கின.

பிறகு வில் வித்தையின் எல்லா வகைகளிலும் தேர்ந்தவனான அந்த வீரன் தங்கக் கம்பிகளால் ஆன, இறக்கைகள் கொண்ட, வீரியத்தில் பாம்புகளைப் போன்ற மூன்று விஷம் தோய்க்கப்பட்ட அம்புகளை அந்த வானரரின் தலையில் செலுத்தினான்.

ஒரே நேரத்தில் தன் தலையில் செலுத்தப்பட்ட அந்த மூன்று அம்புகளால் ஹனுமான் சிறிதும் கலங்கவில்லை. மாறாக அம்புகள் கதிர்கள் போல் தோற்றமளிக்க, ரத்தத் துளிகளால் சிவந்து, உதிக்கும் சூரியனைப் போல் சிவந்திருந்த கண்களை உருட்டியபடி அவர் உதய சூரியனைப் போல் ஒளி விட்டார்.

பிறகு வானர அரசனின் அமைச்சரான ஹனுமான் பல்வகை ஆயுதங்களுடனும், விற்களுடனும் இருந்த அரக்க அரசனின் மகனை போர்க்களத்தில் நெருக்கத்தில் பார்த்தார். போருக்குத் தயாரானவராக, ஹனுமான் ஒரு பயங்கரமான போர் முழக்கத்தை எழுப்பினார்.

சக்தி வாய்ந்தவரும், தைரியம் மிகுந்தவருமான ஹனுமான் பெரும் கோபம் கொண்டு மந்தர மலையின் மீது தோன்றும் சூரியனைப் போல் ஜொலித்தவராக, அக்ஷகுமாரன், அவன் சேனைகள் மற்றும் வாகனங்களைத் தன் கண்களிலிருந்து வெளிப்பட்ட சக்தி வாய்ந்த கதிர்களால் சுட்டெரித்தார்.

அந்த அரக்கன் என்ற மேகம் வில் என்ற வானவில்லைக் கொண்டு அம்புகள் என்னும் மழையைப் பொழிய, அந்த அம்பு மழை ஹனுமான் என்ற மலையை மூடியது.

 பயங்கரமான தாக்குதலைத் தொடுத்து, பெரும் துணிவு, வலிமை, அற்புதம் ஆகியவற்றை வெளிப் படுத்திய அக்ஷகுமாரனைப் போர்க்களத்தில் பார்த்து மகிழ்ச்சியடைந்த சோர்வற்ற வலிமை கொண்ட ஹனுமான் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் வாய் விட்டுச் சிரித்தார்.

தன் பலம் பற்றிய குழந்தைத்தனமான கர்வத்துடனும், கோபத்தினால் சிவந்த கண்களுடனும் அக்ஷகுமாரன் புற்களால் மூடப்பட்ட கிணற்றை நோக்கிச் செல்லும் யானையைப் போல் அந்த வானரரைத் தாக்கினான். 

அவன் தன் மேல் அம்பு மழை பொழிவதைக் கண்டதும், ஹனுமான் இடி போன்ற ஒரு முழக்கம் செய்து, தன் கால்களையும், கைகளையும் நீட்டி ஒரு பயங்கர உருவத்தை எடுத்துக் கொண்டு வானத்தில் விரைவாக எழும்பினார்.

பனிக்கட்டி மழை மலையின் மேல் பனிக்கட்டிகளைப் பொழிவதைப் போல், அந்த சக்தி வாய்ந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட, திறமை பெற்ற தேர் வீரனாகிய அந்த அரக்கன் வானத்தில் எழும்பிக் கொண்டிருந்த ஹனுமான் மீது அம்பு மழை பொழிந்தான்.

மிகவும் வீரியம் கொண்ட, காற்றைப் போன்ற வேகம் கொண்ட வானரர், தன்னை நோக்கி வந்த அம்புகளைப் புறம் தள்ளி விட்டு, அம்புகளுக்கிடையே காற்றைப் போல் நுழைந்து காற்றின் பாதையான வானில் சிரித்துக் கொண்டே நின்றார்.

போரின் மீது மிகுந்த விருப்பம் கொண்டு, நாணேற்றப்பட்ட தன் வில்லுடனும் தன் கூரிய அம்புகளால் வானை மறைத்தபடியும் சண்டையிடத் தயாராக நின்ற அக்ஷனைப் பார்த்த வாயுபுத்திரர் தன் மனதுக்குள் அவன் மீது ஒரு மரியாதை ஏற்பட்டவராக அவனை உற்றுப் பார்த்தபடி ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த இளவரசன் செலுத்திய அம்புகளால் தன் மார்பில் காயம் பட்டவராக, செயல்களின் நியாயத்தன்மை பற்றி நன்கு உணரக் கூடிய அந்த சக்தி வாய்ந்த வானரர் அடுத்தாற்போல் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தன் மனதுக்குள் முடிவு செய்தார்.

அவர் நினைத்தார்:

"சக்தி வாய்ந்தவனும், உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவனுமான இந்தச் சிறுவன் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு மனிதன் செய்யக் கூடிய செயலைச் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் திறமை வாய்ந்த போர் வீரனை உடனே கொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

"இவன் சக்தி வாய்ந்தவன், துணிவுள்ளவன், மிகவும் மதிக்கத் தகுந்தவன். மிகவும் கடுமையான சூழ்நிலைகளிலும் இவன் அசைக்க முடியாதவன். போரில் எல்லாச் சூழ்நிலைகளிலும் இவன் மிகவும் பொறுமையுடனும் அமைதியாகவும் செயல்படுகிறான். தன் திறமையான செயல்பாட்டால் இவன் நாகர்கள், யட்சர்கள் மற்றும் முனிவர்களால் புகழத் தக்கவன் என்பதில் ஐயமில்லை.

"தைரியத்தாலும், உற்சாகத்தாலும் உந்துதல் பெற்று, இவன் என்னை கவனமாகப் பார்த்துக்கொண்டே என்னுடன் போர் புரிகிறான். மிகவும் வேகமான அசைவுகள் கொண்ட இவனுடைய தாக்குதல் எல்லா தேவர்கள் மற்றும் அசுரரர்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்.

"நான் இவனைத் தவிர்த்தாலும் இவன் தாக்குதலை நிறுத்த மாட்டான். போரின்போது இவனுடைய போர் வெறி அதிகமாகிறது. பரவிக் கொண்டிருக்கும் நெருப்பை ஆரம்பத்தில் அலட்சியம் செய்யக்கூடாது."

இவ்வாறு எதிரியின் வேகத்தையும் தன் இலக்கு என்ன என்பதையும் மனதில் கணக்குப் போட்ட வலுவானவரும், சக்தி படைத்தவருமான ஹனுமான் இந்தத் தீயவன் உடனே கொல்லப்பட வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

வாயுபுத்திரரான அந்த வானர வீரர், வானிலிருந்து தாக்குதல் நடத்தபடியே சோர்வே அறியாத, தேர் அதிரும்போதோ அல்லது எந்தத் திசையிலேனும் திரும்பும்போதோ தேரின் எடையைத் தாங்கும் சக்தி பெற்ற எட்டு குதிரைகளையும் அழித்தார்.

ஹனுமானின் கைகளால் அடிக்கப்பட்ட அந்தத் தேர், குதிரைகள் கொல்லப்பட்டு, சட்டங்கள் விழுந்து, சேணக் கம்பங்கள் உடைந்து வானத்திலிருந்து தரையில் விழுந்தது.

பிறகு, அந்தச் சிறந்த தேர்ப்போர் வீரன் தேரை விட்டு விட்டு, வில்லுடனும், கையில் ஏந்திய கத்தியுடனும், பெரும் தவம் செய்தவர்கள் தங்கள் உடலை விட்டு விட்டு சொர்க்கத்துக்கு எழும்பிச் செல்வது போல் வானத்தில் எழும்பினான்.

அப்போது காற்றைப் போல் வேகம் கொண்ட அந்த வானரர், கருடன், வாயு, சித்தர்கள் ஆகியோரின் பாதையான வானத்தில் பறந்து அந்த அரக்கனைத் தன் கால்களுக்கிடையே இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவனுடன் போரில் ஈடுபட்டார்.

தன் இனத்தவருக்குள் மிகவும் சிறந்தவரும், தன் தந்தையைப் போல் சக்தி வாய்ந்தவருமான அந்த வானரர் கருடன் பாம்பைச் சுழற்றுவது போல் தன் எதிரியைச் சுழற்றி விசையுடன் அவனைத் தரையில் எறிந்தார்.

அந்த அரக்கன் அவன் உடல் உறுப்புக்கள், முதுகெலும்பு, கழுத்து எல்லாம் உடைந்து, எலும்புகள்  சிதறி, விழிகள் வெளிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தான்.

அவனைப் பிணமாகத் தரையில் விழச் செய்ததன் மூலம் அந்த வானர வீரர் அரக்க அரசனின் மனதில் பெரும் அச்சத்தை எழுப்பினார்.

அந்த இளவரசன் வானர வீரரால் கொல்லப்பட்டதை வானத்தில் சென்று கொண்டிருந்த தவ முனிவர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள், பூதர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வியப்புடனும், களிப்புடனும் பார்த்தனர்.\

இந்திரனைப் போன்ற தேஜஸுடன் இருந்த அந்தச் சிவப்புக் கண் கொண்ட இளவரசன் அக்ஷனை இவ்வாறு கொன்ற பின், வீரரான ஹனுமான் நுழைவாயில் தூணுக்கு மீண்டும் திரும்பிச் சென்று, மேலும் எதிரிகளைக் கொல்வதற்காக யமனைப் போல் காத்திருந்தார்.

சர்க்கம் 48 - ஹனுமான் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்படுதல்

அக்ஷகுமாரன் ஹனுமானால் கொல்லப்பட்டதும் அரக்க அரசன் ராவணன் ஒருவிதமாகத் தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டு இந்திரனுக்கு நிகரானவான, கோபம் மிகுந்த இந்திரஜித்தை அழைத்து இவ்வாறு உத்தரவிட்டான்.

"வில்வித்தை அறிந்தவர்களில் நீ முதன்மையானவன், ஆயுதம் ஏந்துபவர்களில் நீ அதிகம் புகழ் பெற்றவன். நீ தேவர்களையும் அசுர்களையும் கலங்கச் செய்தவன். இந்திரன் உட்பட எல்லா தேவர்களுக்கு எதிராகவும் நீ உன் பலத்தை நிரூபித்திருக்கிறாய். படைப்புக் கடவுளான பிரம்மைவை ஆராதனை செய்து நீ எல்லா அஸ்திரங்களின் ரகசியத்தையும் கற்றிருக்கிறாய்.

"உன் வில்லாற்றல் முன் அசுரர்களால் நிற்க முடியாது. இந்திரனுடன் சேர்ந்த தேவர்களாலும் போரில் உன் முன்னால் நிற்க முடியாது.

"இந்த மூன்று உலகங்களிலும் போரில் களைப்படையாதவர்கள் யாரும் இல்லை, ஆனால் உன் தவத்தால் அத்தகைய எல்லா விதமான பலவீனங்களுக்கு எதிராகவும் நீ பாதுகாக்கப்பட்டிருக்கிறாய். 

"அத்துடன் இல்லாமல் உன் கைகளின் பலம்தான் உன் சிறந்த பாதுகாப்பு. காலத்துககும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மாறுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையான நுண்ணறிவு உன்னிடம் இருக்கிறது.

"போரில் உன்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. உன்னால் சிந்தித்து உணர முடியாதது எதுவும் இல்லை. உன்  வில்லாற்றலையும் சக்தியையும் அறியாதவர்கள் இந்த மூன்று உலகங்களிலும் எவரும் இல்லை.

"தவ வலிமையிலும், போர்க்களத்தில் துணிவிலும், ஆயுதங்கள் பற்றிய அறிவிலும் நீ எனக்கு நிகரானவன். எந்தப் போரிலும் உனக்கு வெற்றி உறுதி. நீ எனக்கு மகனாகக் கிடைத்த பிறகு, என் மனம் எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.

"எல்லா கிங்கரர்களும், அரக்கன் ஜம்புமாலி, நம் அமைச்சர்களின் வீரப் புதல்வர்கள், ஐந்து மூத்த சேனைத் தலைவர்கள் ஆகியோரும் அழிக்கப்பட்டு விட்டனர். 

"காலாட்கள், குதிரைகள், யானைகள் கொண்ட பெரும் சேனைகளும் அழிக்கப்பட்டு விட்டன. உன் அன்புச் சகோதரன் இளவரசன் அக்ஷனும் கொல்லப்பட்டு விட்டான்.

"உன்னிடம் எனக்கு இருக்கும் பெரும் நம்பிக்கை அவர்களிடம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. அறிவுள்ள புதல்வனே! அந்தக் குரங்கின் பெரும் பலம், திறமை மற்றும் துணிவு இவற்றைக் கருத்தில் கொண்டும், உன்னுடைய பலத்தைக் கருத்தில் கொண்டும், இந்தச் சூழலுக்கு எது தேவையோ அதை உன் வல்லமையைச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ செயல்பட வேண்டும்.

"ஓ, மிகச் சிறந்த வில்வீரனே! எதிரிகளை வெல்லும் வல்லமை பெற்றவனான நீ நம் சேனைகள் அழிந்து போவதைத் தடுக்கும் உத்திகளை மேற்கொள்ளவேண்டும். 

"உன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் கருத்தில் கொண்டு, இதற்குப் பிறகு என்ன செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்.

"ஓ, வீரனே! இந்த எதிரி ஒரே நேரத்தில் பலரை அழிக்கும் வல்லமை பெற்றவன். எனவே சேனையினால் பலன் இருக்காது. வஜ்ராயுதம் போன்ற ஒன்றை நம்பி அவனுடன் மோதுவதும் பயனளிக்காது. ஏனெனில் அவன் அசைவுகள் காற்றை விட வேகமானவையாக இருக்கின்றன. அவன் நெருப்பைப் போல் இருக்கிறான், மாயப்போரும் அவன் விஷயத்தில் பயனளிக்காது.

"நான் உன்னிடம் கூறியவற்றைப் பற்றி கவனமாகச் சிந்தித்த பிறகு, என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தன்னம்பிக்கையுடன் முடிவு செய்.

" தேவதைகளால் உனக்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீக ஆயுதங்களின் சக்தி பற்றி நன்கு ஆலோசனை செய்த பிறகு உன் போரைத் துவக்கு. செய்ய வேண்டிய பணியை எந்தத் தவறும் நேராமல் செய்து முடி..

"உன் மீது எனக்கு இருக்கும் பாசத்தின் அடிப்படையில் உன்னை நான் போருக்கு அனுப்புவது பொருத்தம் இல்லைதான். ஆனால் ஒரு அரசனின் கடமைகள் மற்றும் அரச நீதியின்படி இதுதான் சரி.

"எதிரிகளை அழிப்பவனே! ஒருவன் தனக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியறிவு, கலைகள் இவற்றில் தனக்குள்ள திறமையைப் போரில் மிகுந்த எச்சரிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் எதிரியை அழிப்பது ஒன்றுதான் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்."

தந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆற்றலில் தேவர்களுக்கு நிகரானவனானவனும், எப்போதும் சக்தி குறையாதவனுமான இந்தரஜித் போருக்குச் செல்வதென்று மனதில் முடிவு செய்து, தன் தந்தையும், எஜமானருமான ராவணனைச் சுற்றி வந்தான்.

தன் துணைவர்களால் மரியாதை செய்யப்பட்டு வழியனுப்பப்பட்ட இந்தரஜித் பெரும் உற்சாகத்துடன் போருக்குக் கிளம்பினான். 

ஒளி பொருந்திவனாக விளங்கிய, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டிருந்த அரக்க அரசனின் புதல்வன் அமாவாசையன்று பொங்கும் சூரியனைப் போல் வேகத்துடன் எழுந்தான்.

தேவர்களுக்கு நிகரானவனான இந்திரஜித் ஒரே அளவு உருவமும் வேகமும் கொண்ட, கருடனைப் போல் வேகம் கொண்ட, பளிச்சென்று தெரியும் வெண்மையான நகங்கள் கொண்ட, எல்லாத் தடைகளையும் தாண்டி எங்கு வேண்டுமானலும் செல்லக் கூடிய நான்கு சிறுத்தைகள் பூட்டப்பட்ட  ஒரு தேரில் ஏறினான்.

வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவனும், ஆயதங்கள் பற்றிய கல்வியில் பயிற்சி அளிக்கப்பட்டவனும், தெய்வீக அஸ்திரங்களைப் பயன்படுத்துவதில் விற்பன்னனுமான அந்த மாபெரும் போர் வீரன் ஹனுமான் அமர்ந்திருந்த இடத்துக்கு மிகுந்த வேகத்துடன் தேரில் விரைந்தான்.

அவன் தேரின் அதிர்வொலியையும், அவன் வில்லின் நாணின் ஒலியையும் கேட்டு வீரரான ஹனுமான் உற்சாகம் அடைந்தார். 

அந்த அனுபவம் வாய்ந்த போர் வீரன் தன் வில்லுடனும், கூரிய அம்புகளுடனும் ஹனுமானை நோக்கிச் சென்றான்.

அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு போருக்குக் கிளம்பியபோது திசைகள் அதிர்ந்தன. கொடிய விலங்குகள் பலவிதமாக ஒலி எழுப்பின.

அந்தச் சந்தர்ப்பத்தில் நாகர்கள், யக்ஷர்கள், மகரிஷகள், சித்தர்கள், வானில் இருந்த மற்றவர்கள் ஆகியோர் பெரும் கூட்டமாக ஒன்று கூடி மேகம் போல் வானத்தை மறைத்தபடி பெரிதாகக் கூச்சலிட்டனர்.

தேரில் அமர்ந்தபடி தன்னை நோக்கி வந்த இந்திரஜித்தைப் பார்த்த ஹனுமான் பெரிதாகச் சிரித்து விட்டுப் பெரும் உற்சாகத்துடன் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார்.

தன் தெய்வீகத் தேரில் அமர்ந்து, இயலாத சாதனைகளைப் புரியக் கூடிய அற்புதமான வில்லைத் தன் கையில் பிடித்தபடி, இடி போன்று முழங்கிய நாணேற்றும் ஒலிகளை இந்திரஜித் உருவாக்கினான்.

தேவர்களின் தலைவர் போல் விளங்கிய சக்தி வாய்ந்த வானரரும், அசுரர்களின் தலைவன் போல் விளங்கிய அரக்க இளவரசனும் போர்க்களத்தில் பயமற்றவர்களாக விளங்கி, தங்களுக்கிடையே மிகுந்த வீரியத்துடனும், கசப்புணர்வுடனும் போரிட்டனர்.

போர்களில் பெற்ற வெற்றிகளுக்காகப் புகழ் பெற்றிருந்த பெரிய, வீரம் மிகுந்த இந்திரஜித் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்த அம்புகளை ஹனுமான் வானத்தில் தாவிச் சென்றபடி தவிர்த்தார்.

எதிரிகளைத் தாக்குவதிலும், கொல்வதிலும் பெயர் பெற்றிருந்த இந்திரஜித் நீண்ட, கூரான, தங்கத்தால் இழைக்கப்பட்ட, இறகுகள் கொண்ட மின்னல் போன்ற அம்புகளை விட்டான்.

அவன் தேர் உருளும் சத்தம், மிருதங்கம், பேரி, படகம் போன்ற போரொலி எழுப்பும் இசைக்கருவிகள் ஆகியவற்றைக் கேட்டதும், ஹனுமான் மீண்டும் வானில் இன்னும் உயரமாக எழும்பினார்.

பழுப்பு நிறம் கொண்ட அந்த வானரர் ஹனுமான் இலக்குகளைத் தவற விடாமல் தாக்குவதில் வல்லவனான அந்த வில் வீரன் தன்னை நோக்கிச் செலுத்திய அம்புகளுக்கிடையே வேகமாக நகர்ந்து செல்வதன் மூலம், அவற்றைப் பலனற்றவையாகச் செய்தார்.

வாயுபுத்திரரான ஹனுமான் அவன் அம்புகளுக்கு முன் இலக்காக நின்றார், ஆனால் தன் கைகளை நீட்டி அவற்றை அடித்துத் தள்ளித் தாண்டிச் சென்றார்.

போரில் ஆற்றலும், நகர்வதில் வேகமும் கொண்ட அந்த இரு வீரர்களும் எல்லா உயிரினங்களின் கவனத்தையும் கவரும் வகையில் தங்களிடையே போர் செய்தனர். ஹனுமானின் பலவீனம் எதுவென்று அந்த அரக்கனுக்குத் தெரியவில்லை, அவனுடைய பலவீனம் எதுவென்று ஹனுமானுக்குத் தெரியவில்லை

இரண்டு தெய்வீகப் பிறவிகளின் துணிவுடன் இருவரும் மற்றவரால் தாங்கக் கடினமான வீரியத்துடன் போரிட்டனர். தன் இலக்குகளைத் தவறாமல் வீழ்த்துவதில் நம்பிக்கை கொண்டிருந்த அந்த அரக்க வீரன் தன் அம்புகள் இலக்குகளைத் தவற விட்டு முற்றிலும் வீணானவையாகத் தரையில் விழுந்ததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

அந்த வானரரரைக் கொல்வது இயலாத செயல் என்பதை உணர்ந்து கொண்ட அரக்க வேந்தனின் புதல்வன் அவரை எப்படிக் கட்டுப்படுத்திப் பிடிப்பது என்று சிந்தித்தான். 

வீரத்துக்கும், தாக்கும் திறமைக்கும் பெயர் பெற்ற அந்த வில்லாற்றல் மிகுந்தவன் இப்போது அந்த வானரர் மீது பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினான்.

எல்லா அஸ்திரங்களின் நுணுக்கங்களையும் அறிந்திருந்த அந்தப் பெரிய போர் வீரன் இந்திரஜித் அந்த வானரரை பிரம்மாஸ்திரத்தாலும் கொல்ல முடியாது என்பதை உணர்ந்து, அந்த தெய்வீக அஸ்திரத்தால் அவரைக் கட்டினான்.

அரக்கனின் அஸ்திரத்தால் தன் கைகளும், கால்களும் இவ்வாறு கட்டப்பட்ட ஹனுமான் அசைய முடியாதவராகித் தரையில் விழுந்தார்.

தன் வேகம் பிரம்மாவின் சக்தியால் தடுக்கப்பட்டதைக் கண்ட ஹனுமான் தான் எத்தகைய சக்தியால் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவராக அது தமக்கு பிரம்மாவால் அளிக்கப்பட்டுள்ள வரமாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தார்.

பிரம்மாவின் மந்திரத்தினால் சக்தியூட்டப்பட்டிருந்த பிரம்மாஸ்திரத்தைப் பற்றியும், அந்த அஸ்திரத்தின் கட்டு தனக்குக் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்று பிரம்மாவிடம் தான் பெற்ற வரத்தைப் பற்றியும் அவர் நினைத்துப் பார்த்தார்.

அவர் தனக்குள் நினைத்தார்: "இந்தக் கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வல்லமை எனக்கு இல்லை என்ற தவாறான புரிதலுடன் இந்த அஸ்திரம் எனக்கு எதிராக விடப்பட்டிருக்கிறது.ஆயினும் தானே உருவானவரின் அஸ்திரத்துக்கு நான் மதிப்பளிக்க வேண்டும்."

அந்த அஸ்திரத்தின் சக்தியை நன்கு உணர்ந்தும், பிரம்மாவின் வரத்தால் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வல்லமை தனக்கு இருப்பதை உணர்ந்தும், தற்போதைக்காவது உலகைப் படைத்தவரின் சக்திக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார்.

அவர் தனக்குள் நினைத்தார்; "நான் அஸ்திரத்தால் கட்டுண்டிருந்தாலும், பிரம்மா, இந்திரன், வாயு ஆகியோரால் காக்கப்பட்டிருப்பதால், மனதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

"அரக்கர்களால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும் அரக்கர்களின் அரசனைச் சந்தித்து அவனுடன் பேசும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். எனவே எதிரிகள் என்னைப் பிடிக்கட்டும்."

எதிரிகளின் சக்தியைப் பயனற்றுப் போகச் செய்யும் வல்லமை பெற்றவரும், நிலைமையின் தன்மையை உணர்ந்தவரும், இனி செய்ய வேண்டியது என்ன என்பது பற்றிய திட்டம் கொண்டவருமான ஹனுமான் தன் உடல் உறுப்புகள் எதையும் அசைக்காமல் அப்படியே இருந்தார்.

அவரைப் பிடிக்க வந்த எதிரிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு பலவழிகளிலும் அவரை பயமுறுத்த முயன்றபோது, அவர் ஒன்றும் செய்ய இயலாதவர் போல் முனகிக் கொண்டு அமைதியாக இருந்தார்.

தன் எதிரிகளுக்கு அச்சமாக விளங்கிய வானரர் அப்போது அசையாமல் இருந்ததைக் கண்ட அரக்கர்கள் சணல் மற்றும் மரப்பட்டைகளால் ஆன கயிறுகளை எடுத்து வந்து அவரை இறுக்கக் கட்டினர்.

ஒரு ஆர்வத்தினாலாவது அரக்கர்களின் அரசன் தன்னைப் பார்க்க வருவான், அவனை நேரே பார்க்க தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த ஹனுமான் எதிரிகள் தன்னைக் கட்டியதையும் அவர்களுடைய அச்சுறுத்தும் செயல்களையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டார்.

அந்த சக்தி மிகுந்தவர் சணல் கயிறுகளால் கட்டப்பட்ட உடனேயே அந்த அஸ்திரத்தின் தளையிலிருந்து விடுபட்டு கயிறுகளின் பிணையை மட்டுமே கொண்டிருந்தார். ஏனெனில், வேறொரு பிணை ஏற்பட்டதும் பிரம்மாஸ்திரத்தின் பிடி இல்லாமல் போய் விடும்.

கயிறுகளால் கட்டப்பட்டதும் அவர் பிரம்மாஸ்திரத்தின் பிடியிலிருந்து விடுபட்டு விட்டார் என்பதை இந்திரஜித் மட்டுமே உணர்ந்து கொண்டான். மிகவும் மனம் வருந்தியவனாக அவன் இவ்வாறு நினைத்தான்:

"வேறொரு பிணையினால் கட்டப்படும்போது பிரம்மாஸ்திரம் செயல்படாது. அந்தோ! என் பெரிய முயற்சி வீணாகி விட்டதே! மந்திரங்களின் சூட்சுமங்கள் அரக்கர்களுக்குத் தெரியவில்லை. பிரம்மாஸ்திரம் செயலிழந்து போனதும் வேறு எந்த அஸ்திரமும் பயன்படாது. அனைவரும் இப்போது மரண அபாயத்தில் இருக்கிறோம். 

ஆயினும் பிரம்மாஸ்திரத்தின் சக்தியிலிருந்து தான் விடுபட்டு விட்டோம் என்பதை ஹனுமான் அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை. கயிறுகளின் கட்டுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டு அரக்கர்களின் சீண்டல்களைப் பொறுத்துக் கொண்டு அவர்கள் தன்னை இழுத்துச் செல்வதை அவர் அனுமதித்தார்.

கொடூரம் கொண்ட அரக்கர்கள் நெருப்பில் காய்ச்சப்பட்ட கம்பிகளாலும், தங்கள் முஷ்டிகளாலும் அவரை அடித்து அரக்கர்களின் அரசனுக்கு முன் அவரை இழுத்துச் சென்றனர்.

ஹனுமான் பிரம்மாஸ்திரத்தின் சக்தியிலிருந்து விடுபட்டு விட்டார் என்பதையும், அவர் சணல் முதலியவற்றின் கட்டுக்களால் மட்டுமே பிணையுற்றிருந்தார் என்பதையும் இந்திரஜித் நன்கு அறிந்திருந்தான். 

ஆயினும், அவன் ஆட்கள் ஹனுமானைச் சூழ்ந்து கொண்டு அவரை  ராவணனின் முன் இழுத்துச் சென்றபோது அந்த சக்தி வாய்ந்த இளவரசன், ராவணனின் அவைக்குச் சென்றான்.

இதற்கிடையே, அரக்கர்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்:

"யார் இந்த ஜந்து? யாருடைய ஆள் இவன்?"

"இவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? இவனுடைய நோக்கம் என்ன? இவனுக்குப் பின்னால் இருக்கும் சக்தி யார்?" இது போன்றெல்லாம்.

மற்ற அரக்கர்கள் சிறு கூட்டங்களாக நின்றபடி, தங்களுக்குள் கோபமாக இவ்வாறு பேசிக் கொண்டனர்:

"இவனைக் கொல்லவேண்டும். இவனைக் கொளுத்த வேண்டும். இவனைத் தின்ன வேண்டும்" என்றெல்லாம்.

தூரத்தை விரைவாகக் கடந்து ஹனுமான் அரக்கர்களின் அரசன் இருந்த இடத்தை அடைந்தார். 

நவரத்தினக் கற்களால் அபரிமிதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அலங்காரமான அரண்மனையில் தன் முக்கியமான அவை உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்த அரக்கர்களின் அரசனை அவர் பார்த்தார்.

அரக்கர்களின் சக்தி வாய்ந்த அரசனான ராவணன் அந்த வானரர் தன்னுடைய ஆட்களால் தன் முன் இழுத்து வரப்படுவதைப் பார்த்தான். 

சூரியன் போல் ஒளி விட்ட, பெரும் சக்தியும் பெருமையும் கொண்ட அந்த அரக்க அரசனை ஹனுமான் பார்த்தார்.

பத்து தலைகள் கொண்ட அந்த அரக்க அரசன் மிகுந்த கோபத்தினால் சிவந்திருந்த தன் கண்களை உருட்டி அந்த வானரத் தலைவரைப் பாரத்தான்.

 பிறகு முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த குடிப்பிறப்புக்களான தன் அமைச்சர்களிடம் அவரை விசாரிக்குமாறு கூறினான்.

அவர்கள் அவரை அவருடைய வருகையின் நோக்கம் பற்றி முறையாக விசாரித்தனர். ஹனுமான் அவர்களுக்கு இவ்வாறு பதில் கூறினார்:

"நான் வானரர்களின் அரசரால் இங்கு அனுப்பபட்ட தூதன்."

சர்க்கம் 49 - ஹனுமான் ராவணனின் 
சிறப்பைக் காணல்

உயர்ந்தவரான ஹனுமான் ராவணன் என்ன செய்யப் போகிறான் என்று சிந்தித்தபடி, கோபத்தால்சிவந்திருந்த தன் கண்களால் அந்த அரக்க அரசனை நேரே உற்றுப் பார்த்தார்.

தன் கண் முன் எல்லா மேன்மைகளுடன் விளங்கிய ராவணனை அவர் பார்த்தார்.

அவன் தலையில் முத்துக்கள் பதித்த விலை உயர்ந்த தங்கக் கிரீடம் அணிந்திருந்தான். வைரங்கள் மற்றும் பல்வகை நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த, கற்பனையில் உருவாக்கப்பட்டவை போல் அழகுடன் மிளிர்ந்த ஏராளமான தங்க்க் கழுத்தணிகளுடன் அவன் மின்னிக் கொண்டிருந்தான்.

உயர்ந்த பட்டாடைகளை அணிந்திருந்த அவன் உடல் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டும், சந்தனப் பட்டைகள் தீட்டப்பட்டும் இருந்தது. 

அவன் கண்கள் விரிந்து சிவந்திருந்தன. பல வன விலங்குகள் வாழ்ந்து வந்த மந்தர மலையின் சிகரங்கள் போல் கூர்மையான, பிரகாசமான பற்களும், தொங்கும் உதடுகளும் கொண்டவையாக அவனுடைய பத்துத் தலைகள் விளங்கின.

அவனுடைய ஒளி பொருந்திய உடல் ஒரு நீலக்கல் மலைபோல் இருந்தது.  முழு நிலவு போன்ற தோற்றம் கொண்ட பல பவளக் கழுத்தணிகள் அவன் மார்பை அலங்கரித்து ஒரு பெரிய மேகத்துக்குள் பல கொக்குகள் பறந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

ஐந்து தலை நாகங்களைப் போல் தோற்றமளித்த அவனுடைய உருண்ட வலுவான கைகள் ஒளி மிகுந்த வளையல்களாலும் தோள் வளையங்களாலும் அலங்கரிக்கப்பட்டும், வாசனை மிகுந்த சந்தனம் பூசப்பட்டும் இருந்தன.. 

ஏராளமான விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு, விலை உயர்ந்த கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்த படிக சிங்காதனத்தில் அவன் அமர்ந்திருந்தான், அழகிய இளம் பெண்கள் மிகுந்த கலையம்சம் மிகுந்த சாமரங்களை வீசிக் கொண்டிருந்தனர்.

பூமியை நான்கு சமுத்திரங்கள் சூழ்ந்திருப்பது போல் துர்தரன், பிரஹஸ்தன், மஹாபார்ஸ்வன் மற்றும் விவேகம் மிகுந்த நிகும்பன் என்ற அவனுடைய நான்கு அமைச்சர்களும் அவனைச் சுற்றி நின்றனர்.

அவர்கள் அனைவரும் ராஜதந்திரத்தில் நிபுணர்களாகவும், தங்கள் சக்தி பற்றிப் பெருமை கொண்டவர்களாகவும், கொள்கைகள் பற்றி முடிவுகள் எடுப்பதில் ராவணனுக்கு எப்போதும் உதவுபவர்களாகவும் இருந்தனர். 

இந்திரனைச் சுற்றிலும் தேவர்கள் இருப்பது போல், ராவணனைச் சுற்றி மற்ற அரக்க அமைச்சர்களும் - ராஜதந்திரக் கோட்பாடுகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் சிறப்பான ஆலோசனைகளைக் கூறும் வல்லமை பெற்றவர்களாகவும் இருந்த அமைச்சர்கள் - இருந்தனர்.

மேரு மலையின் உச்சியிலிருந்து இறங்கிய கருத்த மழைமேகம் போல் அவன் ராஜ கம்பீரத்துடன் பிரகாசமாக விளங்கினான்.

மற்றவர்களுக்கு அச்சமூட்டும் சக்தி கொண்ட ஹனுமான் அரக்கர்களால் கடுமையான இன்னலுக்கு ஆளாகி இருந்தாலும், அத்தனை துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு அரக்க அரசனின் மேன்மையை  வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றார்.  

அரக்க அரசனின் பிரகாசத்தையும், வல்லமையையும் கண்ட ஹனுமான் இவ்வாறு நினைத்தார்:

"என்ன ஒருதோற்றம்! என்ன ஒரு வீரம்! என்ன ஒரு சக்தி! என்ன ஒரு பிரகாசம்! இந்த அரக்க அரசனிடம் இத்தகைய மங்கள சின்னங்கள் சேர்ந்திருப்பது உண்மையிலேயே வியப்பை அளிக்கிறது.

"இந்த சக்தி வாய்ந்த அரக்க அரசன் அதர்மமான நடத்தை இல்லாதவனாக இருந்திருப்பானேயானால், அவன் இந்திரன் உள்ளிட்ட தேவலோகத்தையே காப்பவனாக இருந்திருப்பான். 

"ஆனால் இவனுடைய கொடிய, இரக்கமற்ற சமூக விரோதச் செயல்பாடுகள், தேவர்கள், தானவர்கள் உட்பட எல்லா உலகங்களில் வசிப்பவர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவன் கோபம் கொண்டால், அதன் மூலம், உலகில் ஒரு பிரளயத்தையே கூட உண்டாக்க முடியும்."

தனக்குள் இத்தகைய சிந்தனைகளில் ஈடுபட்டார் ஹனுமான்.

சர்க்கம் 50 - பிரஹஸ்தன் ஹனுமானிடம் விசாரணை செய்தல்

உலகுக்கே ஒரு அச்சமாக விளங்கிய, சக்தி வாய்ந்த ராவணன் கோபத்தினால் கொதித்தபடி, தன் முன் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டிருந்த அந்த வீரரின் மஞ்சள் நிறக் கண்களை உற்றுப் பார்த்தான்.

வானர வீரரான ஹனுமானின் ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்து, மனதுக்குள் நடுக்கத்தை உணர்ந்த ராவணன் இவ்வாறு நினைத்தான்:

"இது எப்படி? நந்திகேஸ்வரரரே இங்கே வந்திருப்பது போல் அல்லவா இருக்கிறது! முன்பு கைலாச மலையை நான் அசைத்தபோது அவர் என்னை சபித்தார். ஒருவேளை அவர்தான் இந்தக் குரங்கு வடிவில் இங்கு வந்திருக்கிறாரோ? அல்லது இவன் பாணாசுரானாக இருப்பானோ?

கோபத்தினால் கண்கள் சிவந்திருந்த அந்த அரக்க அரசன் தன் அமைச்சர் பிரஹஸ்தனைப் பார்த்து அந்த நேரத்துக்கும் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வார்த்தைகளைக் கூறினான்.

"இவன் எங்கிருந்து வந்திருக்கிறான்? இவனுடைய நோக்கம் என்ன? அரக்கப் பெண்களை அச்சுறுத்தியதாலும், தோட்டதை அழித்ததாலும் இவனுக்குக் கிடைக்கப் போகும் பயன் என்ன? இந்தக் கேள்விகளை இந்தத் தீயவனிடம் கேளுங்கள்.

"இவனிடம் இவற்றையும் கேளுங்கள்:
யாராலும் நுழைய முடியாத என் நகரத்துக்குள் இவன் வந்தததன் நோக்கம் என்ன? அத்தனை அரக்கர்களையும் இவன் ஏன் கொன்றான்? இந்தக் கேள்விகளையெல்லாம் இவனிடம் கேளுங்கள்."

ராவணனின் வார்த்தைகளைக் கேட்டதும், பிரஹஸ்தன் இவ்வாறு கூறினான்;
"ஓ, குரங்கே! நீ பயப்பட வேண்டாம். உனக்கு எதுவும் நேராது. ஓ, குரங்கே! இந்த நகரத்துக்கு நீ இந்திரனால் அனுப்பப்பட்டிருந்தால், அந்த உண்மையைச் சொல்லி விடு. உனக்கு எந்தத் துன்பமும் நேராது. நாங்கள் உன்னை விட்டு விடுவோம்

"அல்லது குபேரன், யமன், வருணன் இவர்களில் ஒருவனால் இந்த நகரத்துக்கு ஒற்றனாக அனுப்பப் பட்டிருக்கிறாயா? அல்லது எங்களை அடக்க ஆவல் கொண்டிருக்கும் விஷ்ணுவால் நீ அனுப்பப்பட்டிருக்கிறாயா?

"ஓ, வானரமே! உன் குரங்குத் தோற்றம் ஒரு வேஷமாகத்தான் தோன்றுகிறது. நீ வெளிப்படுத்திய சக்தியை ஒரு குரங்கிடம் காண முடியாது. உண்மையைச் சொன்னால் நீ உடனே விடுதலை செய்யப்படுவாய்.

"நீ பொய் சொன்னால். நீ உயிர் பிழைப்பது சந்தேகம்தான். எனவே ராவணனின் நாட்டுக்குள் நீ ஏன் நுழைந்தாய் என்று உண்மையைச் சொல்லி விடு."

இவ்வாறு வினவப்பட்டதும், அந்த உயர்ந்த வானரர் அரக்கர்களின் அரசரிடம் இவ்வாறு கூறினார்:

"நான் இந்திரனையோ, யமனையோ, வருணனையோ சேர்ந்தவனல்லன். குபேரனுடன் எனக்குப் பரிச்சயம் இல்லை. நான் விஷ்ணுவால் அனுப்பப்படவில்லை. இங்கே வந்திருக்கும் நான் உண்மையிலேயே ஒரு குரங்குதான். நான் அந்த இனத்தைச் சேர்ந்தவன்தான்.

"அரக்கர்களின் அரசனை நேரே சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிட்டாததால், உன்னைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பூந்தோட்டத்தை நான் அழித்தேன். நான் அவ்வாறு செய்ததும், சக்தி வாய்ந்த அரக்கர்கள், என்னுடன் சண்டையிட முடிவு செய்து என்னை எதிர்த்தனர். நான் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டியது ஆயிற்று.

"தேவர்களாலோ, அசுரர்களலோ, என்னை எந்த ஒரு அஸ்திரத்தாலும் கட்ட முடியாது. இது பிரம்மாவிடமிருந்து நான் பெற்ற வரம். அரசனான உன்னைக் காண விரும்பியதால், பிரம்மாஸ்திரத்துக்கு நான் கட்டுப்பட்டேன். ஆனால் அரக்கர்கள் என்னைக் கயிற்றால் கட்டியதும், பிரம்மாஸ்திரத்தின் பிடியிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்.

"ஒரு அரசரால் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு பணியின் நிமித்தமாக உன்னைச் சந்திக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். ரகுவம்சத்தைச் சேர்ந்த அளவற்ற சக்தி படைத்த ராமரின் தூதன் நான். இதை உண்மை என்று அறிந்து கொள். அத்துடன், ஓ, அரசனே! நான் மேலும் சொல்லப் போவதையும் கேள். அது உன்னுடைய நன்மைக்காகத்தான்.

சர்க்கம் 51 - ஹனுமான் சொன்ன புத்திமதி

வீரமுள்ள அந்த உயர்ந்த வானரர், சக்தி வாய்ந்த பத்து தலைகள் கொண்ட ராவணனின் முகத்தை நேராகப் பார்த்து, சற்றுக் கூடத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அவனிடம் இவ்வாறு கூறினார்:

"ஓ, அரக்கர்களின் அரசனே! நான் சுக்ரீவரின் கட்டளைப்படி உன் அரண்மனைக்கு வந்திருக்கிறேன். தன் நண்பர்களிடம் அன்புள்ளவரான அந்த வானர அரசர் உன் நலனைப்பற்றி விசாரிக்கும்படி என்னிடம் கூறினார். 

"உன் நெருங்கிய நண்பரும், உயர்ந்தவருமான சுக்ரீவரின் வார்த்தைகளைக் கேள் - தர்மத்துக்கும், உலக நன்மைக்கும் உகந்த அந்த வார்த்தைகள் வருமாறு:

"இந்திரனுக்கு நிகரான தசரதர் என்ற ஒரு மாபெரும் அரசர் இருந்தார். அவர் இந்த உலகத்துக்கே ஒரு தந்தையாகவும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் கொண்ட ஒரு பெரிய சேனைக்குத் தலைவராகவும் இருந்தார்

"சக்தியும், மேன்மையும், உயர்வும் கொண்ட, எல்லோர் மனதுக்கும் இனிமையானவரான அவரது மூத்த புதல்வர் தன் தந்தையின் கட்டளைப்படி, தர்மத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் தன் தம்பி லக்ஷ்மணர் மற்றும் மனைவி சீதை ஆகியோருடன் காட்டில் வசிக்கும்படி நேர்ந்தது.

"அவர்கள் தண்டகாரண்யத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டில் வசித்து வந்த போது, தன் கணவரை விட்டுப் பிரியாத ஜனகரின் மகளான அவர் மனைவி ஒரு நாள் காணாமல் போய் விட்டார். 

"தன் சகோதரனுடன் சேர்ந்து அவரைத் தேடிக் கொண்டிருந்த அந்த இளவரசர் ரிஷ்யமுக மலைக்கு வந்து சுக்ரீவரின் நட்பைப் பெற்றார். சீதையைத் தேடும் பணியில் ஈடுபடுவதாக அவருக்கு சுக்ரீவர் வாக்களித்தார். வானரர்களின் நாட்டை சுக்ரீவருக்குப் பெற்றுத் தருவதாக ராமர் அவருக்கு வாக்களித்தார்.

"அதை நிறைவேற்றும் வகையில், அவர் போரில் வாலியைக் கொன்று சுக்ரீவரை அந்த நாட்டில் வானரர்களுக்கும் கரடிகளுக்கும் தலைவராக ஆக்கினார்.

"வானர அரசர் வாலியை முன்பு நீ அறிந்திருக்கிறாய். அந்த வானரர் போரில் ராமரால் ஒரு அம்பால் கொல்லப்பட்டார். தன் வாக்கை எப்போதும் காப்பாற்றுபவரான வானர அரசர் சுக்ரீவர் முழு வேகத்தில் சீதையைத் தேடும் பணியை மேற்கொண்டு, அந்தப் பணியில் வானரர்களை எல்லாத் திசைகளிலும் அனுப்பியுள்ளார்.

"லட்சக்கணக்கான குரங்குகள் இப்போது எல்லாத் திசைகளிலும், பூமிக்கு மேலேயும், கீழேயும், வானத்திலும் சீதையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

"அவர்களில் சக்தி வாய்ந்த சிலர் வலுவில் கருடனுக்கு ஒப்பானவர்கள். இன்னும் சிலர் வேகத்தில் காற்றைப் போன்றவர்கள், காற்றைப் போலவே எந்த இடத்தையும் தடையின்றி விரைவாகச் சென்றடையக் கூடியவர்கள்.

"நான் வாயுவின் புதல்வனான ஹனுமான். சீதையைக் கண்டு பிடிக்கும் பொருட்டு நூறு யோஜனை அகலமுள்ள இந்த சமுத்திரத்தைக் கடந்து நான் இங்கு வர நேர்ந்தது. எல்லா இடங்களிலும் தேடியபின் கடைசியாக ஜனகரின் மகளான அந்த இளவரசியை நான் உன் அரண்மனையில் கண்டு பிடித்தேன். 

"உயர்ந்தவனே! நீ தர்மத்தின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவன். நீ தவம் செய்து அதனால் பெரும் பலன்களை அடைந்தவன். எனவே மற்றவர்களின் மனைவிகளைக் கடத்திச் சிறை வைத்திருப்பது உனக்கு உகந்ததல்ல.

"உன்னைப் போன்ற அறிவுள்ளவர்கள் தர்மத்துக்கு எதிரான செயல்களைக் கண்மூடித்தனமாகத் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். ஏனெனில் அத்தகைய செயல்கள் முழு அழிவு உட்படப் பல அபாயங்களை விளைவிக்கும்.

"ராமரின் கோபத்துடன் சேர்ந்து, லக்ஷ்மணரின் அதிரும் அம்புகளையும் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தேவர்களிலோ, அசுரர்களிலோ யார் இருக்கிறார்கள்?

"ஓ, அரசனே! ராமருக்குத் தீங்கு விளைவித்த பின், நிம்மதியாக இருக்கக் கூடியவர் இந்த மூன்று உலகங்களிலும் யார் இருக்கிறார்கள்? அவ்வாறு செய்யக் கூடியவர் யாரும் இல்லை.

"எனவே, தர்மத்தின் வழிமுறைகளின்படியும், உனக்கு எல்லையற்ற நன்மைகள் விளைவிக்கும் விதமாகவும், உன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கருதி உன் நன்மைக்காக நான் கூறும் வார்த்தைகளைக் கேள், 

"மனிதர்களுக்குள் மேம்பட்டவரான ராமரிடம் ஜனகரின் மகளான சீதையை ஒப்படைத்து விடு.

"அந்த உயர்ந்த பெண்மணியை நான் கண்டு விட்டேன். இந்தக் கடினமான செயலை நான் செய்து விட்டேன். இதன் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது ராமரால் தீர்மானித்துச் செயல்படுத்தப்பட வேண்டிய விஷயம்.

"விவரிக்க முடியாத சோகத்தில் சீதை ஆழ்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவரை உன் இடத்தில் வைத்திருப்பது ஐந்து தலை நாகத்தை வைத்திருப்பதைப் போல் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை. அதிக அளவில் உட்கொள்ளப்பட்ட விஷ உணவை ஜீரணிக்க முடியாது என்பது போல் இந்தப் பெண்மணியை தேவர்கள் அசுரர்களுள் எவராலும் பெற முடியாது.

"புலன்களைக் கட்டுப்படுத்தியும், தர்மத்தைப் பின்பற்றியும் நீ அடைந்த நீண்ட ஆயுள் என்னும் பெரும் பேற்றைக் குறைத்துக் கொள்ளும் செயலில் நீ ஈடுபடுவது முறையல்ல.

"உன் தவத்தின் சக்தியால், நீ தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பதாக உனக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருக்கிறது. அந்த நிலையிலும், நான் குறிப்பிடப் போகும் அபாய நிலைகளை உன்னால் சரி செய்ய முடியாது.

"சுக்ரீவர் தேவரும் அல்ல. மனிதரும் அல்ல, ராட்சஸரும் அல்ல, தானவரும் அல்ல, கந்தர்வரும் அல்ல, யட்சரும் அல்ல, பன்னகரும் அல்ல. அவர் குரங்குகளின் அரசர். ராமர் ஒரு மனிதர்.

"ஓ, அரசனே! இந்தச் சூழ்நிலையில் நீ எப்படி உன் உயிரைக் காப்பற்றிக் கொள்ளப் போகிறாய்? 

"அதர்மத்தின் விளைவுகளை ஒருவன் செய்த தர்மத்தின் பலன்களால் வெற்றி  கொள்ள முடியாது. தர்மத்தின் பலன்களும் அதர்மத்தின் விளைவுகளும் தனித்தனியே அனுபவிக்கப்பட வேண்டும். பிராயச்சித்தமோ அல்லது பரிகாரமோதான் அதர்மத்தின் விளைவைப் போக்க முடியும். 

"நீ உன் தர்மத்தின் பலன்களை முன்பே அனுபவித்து விட்டாய். அதில் எனக்கு ஐயமில்லை. நீ இப்போது செய்யும் அதர்மத்தின் விளைவுகளால் நீ விரைவிலேயே வீழ்த்தப்படப் போகிறாய்.

"ஜனஸ்தானம் அழிக்கப்பட்டது, வாலி கொல்லப்பட்டது, சுக்ரீவருக்கும் ராமருக்கும் இடையிலான ஒப்பந்தம் இவற்றைக் கருத்தில் கொண்டு, உன் நலனுக்கு உகந்தது எது என்பதை நீயே முடிவு செய்து கொள்.

"குதிரைகள், தேர்கள், யானைகள் கொண்ட சேனைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும் இலங்கை நகரை அழிக்க நான் மட்டுமே போதும். அதற்குத் தேவையான சக்தி எனக்கு இருக்கிறது. 

"ஆனால் இது ராமரின் விருப்பத்துக்கு இசைந்ததல்ல. சீதையைக் கடத்திச் சென்றவர்களின் அழிவு தன்னால் ஏற்படும், தன் கையாலேயே ஏற்படும் என்று கரடிகள் மற்றும் குரங்குகள் கூடியிருந்த அவையின் முன்பு அவர் சபதம் செய்திருக்கிறார்.

"ராமருக்குத் தீங்கு செய்தவர்கள் எவரும் பிழைத்திருக்க முடியாது. ராமருக்குத் துன்பம் விளைவித்து விட்டு அமைதியாக வாழ முடியும் என்று இந்திரனால் கூட நினைக்க முடியாது. அப்படி இருக்கும்போது, உன்னைப் போன்றவர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

"சீதை என்று நினைத்து நீ சிறை வைத்திருக்கும் பெண்மணி உன் இலங்கை தேசம் முழுவதையும் அழிக்கப் போகும் சக்தியின் உருவம் என்பதை உணர்ந்து கொள்.

"எனவே சீதையின் வடிவில் உள்ள பாசக் கயிற்றின் சுருக்குக்குள் உன் தலையை நுழைத்துக் கொண்டு உனக்கே நீ இழைத்துக் கொண்டிருக்கும் தீங்கு போதும். இது இதோடு நிற்கட்டும். இப்போது உன் நலனுக்கு எது உகந்ததோ அதைச் செய்.

"இந்த இலங்கை நகரம் அதன் எல்லா மாளிகைகளுடனும் சீதையின் பிரகாசத்தால் எரியூட்டப்பட்ட மற்றும் ராமரின் கோபத்தால் துன்பத்துக்குள்ளான ஒரு நகரமாக ஆகி விட்டது என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்.

"உன் நண்பர்கள், அமைச்சர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பிள்ளைகள், உனக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரையும், உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள், மனைவிகள் மற்றும் இந்த நகரம் ஆகியவற்றையும் அழிவுக்கு இட்டுச் செல்லாதே.

"அரக்கர்களின் அரசனே! ராமரின் ஊழியனும், அவருடைய தூதனாக அனுப்பபட்டவனுமான என்னால் உனக்கு தர்மத்தின் அடிப்படையில் கூறப்பட்ட யோசனையை ஏற்று அதன்படி நடப்பாயாக.

"ராமர் எல்லா உலகங்களையும், பஞ்ச பூதங்களையும், எல்லா அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் உடனடியாக அழிக்கவும், அவற்றை மீண்டும் உருவாக்கவும் வல்லமை பெற்ற ஒரு அமானுஷ்யப் பிறவி. அவருடைய சக்தி அப்படிப்பட்டது. 

"சக்தியில் விஷ்ணுவுக்கு நிகரானவரான ராமரைப் போரில் சந்திக்க அவருக்கு இணையானவர் தேவர்களிலோ, அசுரர்களிலோ, மனிதர்களிலோ, யக்ஷர்களிலோ, ராட்சஸர்களிலோ, வித்யாதரர்களிலோ, கந்தர்வர்களிலோ, ஊரகர்களிலோ, சித்தர்களிலோ, கின்னரர்களிலோ, பறவைகளிலோ, சுருக்கமாகச் சொல்வதென்றால், எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் யாரும் இல்லை.

"பேரரசரும், எல்லா உலகங்களுக்கும் நாயகருமான ராமருக்கு இப்படிஒரு அவமரியாதையைச் செய்த பின், இந்த உலகில் நீ உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு சிறிதும் இல்லை.

"அரக்கர்களின் அரசனே! எல்லா தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும் ஒன்று சேர்ந்தாலும் மூன்று உலகங்களுக்கும் தலைவரான ராமருக்கு அவர்கள் இணையாக மாட்டார்கள்.

"ராமர் போரில் அழிக்க உறுதி பூண்ட ஒருவனுக்கு நான்கு தலைகள் கொண்ட, தானே உருவான பிரம்மா, முப்புரத்தை எரித்த சிவன், தேவர்களின் தலைவனும், விருத்திரனை அழித்தவனுமான இந்திரன் இவர்களால் கூடப் பாதுகாப்பு அளிக்க முடியாது."

அந்த வானரரின் இந்த வலுவான, விவேகமுள்ள, தனக்குப் பிடிக்காத வார்த்தைகளைக் கேட்டு, தனக்கு இணை எவரும் இல்லாத, பத்து தலைகள் கொண்ட ராவணன் கோபத்தினால் கொதித்தவனாக தன் கண்களை உருட்டி அந்த வானரரைக் கொல்லும்படி உத்தரவிட்டான்.

சர்க்கம் 52 - தூதர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது

ஒருவரிடமிருந்து செய்தி கொண்டு வந்ததற்காக ஒரு தூதர் கொல்லப்பட வேண்டும் என்று ராவணன் தண்டனை விதித்ததும், அவ்வாறு செய்வது முறையற்றது என்று விபீஷணன் கருதினான்.

ஒருவரின் நடத்தை முறையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்பது பற்றி எப்போதும் உறுதியான நிலை கொண்டிருந்த விபீஷணன் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என்பதையும், அரக்கர்களின் அரசன் மிகவும் கோபமான மனநிலையில் இருந்ததையும் உணர்ந்து, தான் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

தன் இனிமையான பேச்சினால் எதிரிகளையும் வெல்லும் திறமை படைத்த விபீஷணன் ஒரு வழியை முடிவு செய்த பின் தன் சகோதரனை இனிய சொற்களால் பாராட்டி விட்டு அவனுக்கு அதிகம் நன்மை பயக்கக் கூடியது எது என்பதைக் கூற ஆரம்பித்தான்:

"அரக்கர்களின் அரசனே! தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். கோபத்தை விட்டு விட்டு நான் பணிவுடன் கூறும் வார்த்தைகளைச் சற்றுக் கேளுங்கள். அரசர்களின் பாரம்பரியத்தை அறிந்த எந்த அரசரும் ஒரு தூதனுக்கு மரண தண்டனை விதிக்க மாட்டார்கள்.

"வீரம் மிகுந்தவரே! இந்தக் குரங்குக்கு மரண தண்டனை விதிப்பது  அரசர்களுக்கு விதிக்கப்பட்ட அறக் கோட்பாடுகளுக்கு முரணானதாகும். அது உலக வழக்கத்துக்கு மாறானது. அது உங்கள் தகுதிக்கு இசைந்ததாக இருக்காது.

"நீங்கள் தர்மம் அறிந்தவர். நீங்கள் முறையாக நடந்து கொள்பவர். அரசர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகளை நீங்கள் நன்கு அறிந்தவர். பாரம்பரியப் பழக்கங்களையும் இந்த உலக நடைமுறைகளின் நுணுக்கங்களையும் நீங்கள் நன்றாக அறிந்தவர்.

"உங்களைப் போன்ற சிறந்த அறிவுள்ளவர்கள் கூடக் கோபத்துக்கு பலியாகும்போது, சாஸ்திர அறிவு அடியோடு பயனற்றதாக ஆகி விடுகிறது.

"எனவே, அரக்கர்களின் அரசரே! எதிரிகளை அழிப்பவராகவும், யாராலும் எதிர்க்கப்பட முடியாதவராகவும் விளங்குபவரே! தயவு செய்து சமாதானம் அடைந்து, எது முறையானது, எது முறையற்றது என்பதை உணர்ந்து, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு தூதனுக்கு ஏற்ற தண்டனையை வழங்குங்கள்."

விபீஷணனின் வார்த்தைகளைக் கேட்டதும், ராவணன் இன்னும் அதிகக் கோபம் அடைந்தான். உணர்ச்சி மேலீட்டால் அவன் தன்னையே மறந்தவனாக இவ்வாறு கூறினான்:

"எதிரிகளை அழிப்பவனே! ஒரு தீயவனுக்கு மரண தண்டனை கொடுப்பது முறையற்ற செயல் அல்ல. எனவே பல தீய செயல்களைப் புரிந்து குற்றமிழைத்துள்ள இந்தக் குரங்கை நான் கொல்லப் போகிறேன்."

அந்த வார்த்தைகள் அதர்மத்தின் அடிப்படையில் அமைந்ததவை என்றும், தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்றும், தகுதியற்றவர்களுக்கே பொருத்தமானவை என்றும் விபீஷணன் நினைத்தான்.

எனவே மிகுந்த அறிவுடைய அந்த உயர்ந்த விபீஷணன் உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மீண்டும் இவ்வாறு கூறினான்:

"இலங்கை வேந்தரே! அரக்கர்களின் அரசரே! அமைதி அடையுங்கள். தர்மத்துக்கும் நியாயக் கோட்பாடுகளுக்கும் இசைவான என் வார்த்தைகளைக் கேளுங்கள்.

"அரசரே! எந்த நேரத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு தூதனைக் கொல்லக் கூடாது என்று உயர்ந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். 

"இந்த ஜந்து ஒரு கொடிய விரோதி என்பதில் ஐயமில்லை. இவன் பல குற்றங்களைப் புரிந்திருக்கிறான். ஒரு தூதனுக்குப் பல விதமான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் மரண தண்டனை எங்கும் அங்கீகரிக்கப்படவில்லை.

"ஏதாவது ஒரு உடல் உறுப்பைக் காயப்படுத்துதல், சாட்டையடி கொடுத்தல், தலையை மொட்டை அடித்தல், உடல் உறுப்புகளில் சூடு போடுதல் போன்ற சில தண்டனைகள்தான் தூதர்களுக்கு விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தூதனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.

"தர்மங்களையும், சரியான வழிமுறைகளையும், எது சரி, எது தவறு என்பதையும் நன்கு அறிந்தவரான உங்களைப் போன்ற ஒருவர் கோபத்துக்கு பலியானது எப்படி? ஒருவன் நியாயத்தின்படி நடக்க வேண்டுமென்றால், அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

"ஓ, வீரம் மிகுந்தவரே! எல்லா தர்மங்களையும் ஆராய்ந்து படித்தவர்களில் உஙுகளுக்கு நிகரானவர் யாரும் இல்லை. உலகத்துக்கு இசைவாக நடப்பதிலும், சாஸ்திரங்களின் நுணுக்கங்களையும் அறந்தவர்களில் கூட உங்களுக்கு நிகரானவர் எவரும் இல்லை. நீங்கள் எல்லா தேவர்களையும், அசுரர்களையும் விட உயர்ந்தவர்.

"அது மட்டுமின்றி, இந்தக் குரங்கைக் கொல்வதால் எந்த நன்மையும் நடக்குமென்று நான் கருதவில்லை. இவனை இங்கு அனுப்பியவர்களுக்குத்தான் நீங்கள் மரண தண்டனை வழங்க வேண்டும்.

"இந்த வானரன் நல்லவனா, தீயவனா என்பது முக்கியமில்லை. இவன் இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இயங்கும், அவர்கள் சொல்லியனுப்பிய செய்தியைத் தெரிவிப்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு தூதன். அவ்வளவுதான். இவன் இன்னொருவர் சொன்னபடி செயல்படும் ஒரு தூதன் மட்டும்தான, அத்தகைய ஒருவனைக் கொல்வதில் பொருள் இல்லை.

"எதிரிகளின் கோட்டைகளை வெல்பவரே! இந்தக் குரங்கு கொல்லப்பட்டால், கடலைக் கடந்து இவ்வளவு தூரம் வேறு யாரால் மறுபடியும் இங்கே வர முடியும்? வானத்தில் பறந்து வரக் கூடியவர்கள் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"எனவே தயவு செய்து இவனைக் கொல்ல நினைக்காதீர்கள். மாறாக, இந்திரன் தலைமையிலான தேவர்களிடம் உங்கள் கவனத்தையும், வீரத்தையும் செலுத்துவது பொருத்தமாக இருக்கும், 

"போரின் உருவானவரே! இந்தக் குரங்கு இப்போது கொல்லப்பட்டு விட்டால், அந்த இளவரசர்களைப் போருக்கு வரும்படி தூண்டக் கூடியவர்கள் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"குரங்குகளின் தலைவனான இவன் இப்போது கொல்லப்படால், நல்ல மனிதர்கள் உங்களைப் பற்றிப் பல அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். இந்தக் குரங்கைக் கொல்வதால் உங்களுக்கு எந்த ஒரு நன்மையோ, நற்பெயரோ கிடைக்காது என்று நான் கருதுகிறேன், பலரின் விமரிசனம் மட்டும்தான் மிஞ்சும்.

"வீரமுள்ள அரக்க வேந்தே! அத்துடனின்றி, இந்தக் குரங்கை இங்கே அனுப்பிய செயல் திறனற்ற, அறிவற்ற, தீய மனிதர்களை அழிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

"இந்திரனின் பகைவரே! இந்த தூதனைக் கொல்வதற்கு பதில் இந்தத் திசையில் உங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம், நீங்கள் தர்மத்தின் கோட்பாடுகளையும், முறையான நடத்தை விதிகளையும் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மத்தியிலும், தானவர்கள் உள்ளிட்ட தைத்யர்கள் மத்தியிலும்  நிலை நிறுத்த உதவுவீர்கள்.

"அரக்கர்களின் அரசரே! நான் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு வீர இளவரசர்களையும் அழிப்பதற்கான ஏற்பாடுகளில் உறுதியாகவும், விரைவாகவும் ஈடுபடுங்கள். உங்கள் முயற்சிகள் பெருமளவில் வெற்றி அடையட்டும்.

"அரக்கர்களின் மனங்களை மகிழச் செய்பவரே! வீரம், சக்தி, போர்க்குணம் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் நீங்கள், எல்லா தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்தாலும்னவர்களால் வெல்ல முடியாதவரான நீங்கள், கையில் இருக்கும் யுத்தத்துக்கான வாய்ப்பை அழித்து விடக் கூடிய தவறைச் செய்து விடாதீர்கள்.

"உங்களுக்கு எது நன்மையானதோ அதைச் செய்யத் தயாராக உள்ள, வீரமுள்ள, எப்போதும் உங்கள் நலத்தையே நாடும், நற்குடிகளில் பிறந்த, மிகுந்த உற்சாகமுள்ள, சிறப்பாகப் போர் புரியும் வல்லமைக்குப் பெயர் பெற்ற கணக்கற்ற போர் வீரர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கிறார்கள்.

"எனவே, அந்த இரண்டு இளவரசர்களையும் போரில் அழிக்கவும், அதன் மூலம் எதிரிகளை உங்கள் வல்லமையால் அடக்கவும், உங்கள் படையில் உள்ள போர்த் தளபதிகளில் சிலர் உங்கள் உத்தரவை ஏற்று இப்போதே கிளம்பட்டும்."

ராட்சஸ அரசர்களில் தலையானவனும், ராட்சஸ இனத்தின் தலைவனும், தேவர்களின் எதிரியுமான சக்தி வாய்ந்த ராவணன் தன் சகோதரன் விபீஷணனின் உயர்ந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மனதுக்குள் முடிவு செய்தான்.

அந்த அரக்க அரசன் தனக்குள் இவ்வாறு சிந்தித்தான்:
'இந்த ஜந்து என்னை அழிப்பதற்காக இங்கே குரங்கு வேடத்தில் வந்திருக்கும் விஷ்ணுவின் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.

'இந்த வீரமிக்க வானரன் தேவர்களுக்கெல்லாம் தேவனான, இந்த உலகங்களுக்கெல்லாம் காரணனான எதிர்க்க முடியாத சக்தியான விஷ்ணுவின் ஒளியின் வடிவமாக இருக்க முடியுமா? அல்லது இவனே பரப்பிரம்மமாக இருப்பானோ? எனக்குப் புரியவில்லை.'

தனக்குள் இவ்வாறு சிந்தித்தவன் அதிகக் கோபம் மிகுந்தவனாக, ஆனால். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஆயுதம் ஏந்தியவர்களில் சிறந்தவனான விபீஷணனின் யோசனையை ஏற்றுக் கொண்டு உயர்ந்த ஆத்மாவான ராவணன் இவ்வாறு கூறினான்.

சர்க்கம் 53 - ஹனுமான் வாலில் தீ வைக்கப்படுதல்

பத்து தலைகள் கொண்ட அந்த அரசன் உயர்ந்தவனான தன் சகோதரனால் கூறப்பட்ட வார்த்தைகளை  தர்மத்துக்கும் அந்தச் சூழ்நிலைக்கும் இசைந்த விதத்தில் அமைந்ததாகக் கருதி ஏற்றுக் கொண்டு இவ்வாறு பதிலளித்தான்:

"நீ கூறியது சரிதான். தூதுவனைக் கொல்வது இழுக்குதான். ஆயினும், மரண தண்டனை அல்லாத ஒரு பொருத்தமான தண்டனை இந்தக் குரங்குக்கு நிச்சயம் அளிக்கப்பட வேண்டும்.

"குரங்குகளுக்கு அவற்றின் வால்தான் முக்கியமான, மற்றும் பொருத்தமான அணிகலனாகக் கருதப்படுகிறது. எனவே இந்தக் குரங்கின் வால் தீ வைத்துக் கொளுத்தப்படட்டும். எரிந்து போன வாலுடன் இது வீடு திரும்பட்டும்.

"வால் வெட்டப்பட்ட இதன் துயரமான நிலை இதன் நண்பர்கள், உறவினர்கள், சகாக்கள் ஆகியோருக்கு ஒரு காட்சிப் பொருளாக அமையட்டும். தீ வைக்கப்பட்ட வாலை அரக்கர்கள்  நகரத்தின் எல்லா சாலைச் சந்திப்புகளின் வழியாகவும் இழுத்துச் செல்லட்டும்." 

அரக்க அரசன் இவ்வாறு உத்தரவிட்டான்.

ராவணனின் இந்த உத்தரவைக் கேட்டு அதிக உற்சாகமடைந்த அரக்கர்கள் ஹனுமானின வாலில் தங்கள் கையில் கிடைத்த எல்லா வகைப் பழைய கிழிந்த துணிகளையும் சுற்ற ஆரம்பித்தனர்.

தன் வாலில் இவ்வாறு துணி சுற்றப்பட்டபோது, காட்டிலுள்ள காய்ந்த சருகுகளில் பட்டதும் ஒரு நெருப்புப் பொறி மிகப் பெரிதாக வளர்வது போல் அந்த உயர்ந்த வானரர் தன் உடலை பிரும்மாண்டமான அளவுக்குப் பெருக்கிக் கொண்டார்.

பிறகு அந்த அரக்கர்கள் அவர் வாலை எண்ணெயில் தோய்த்து அதற்குத் தீயிட்டனர்.

அப்போது பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லா அரக்கர்களும் ஹனுமானை அவருடைய எரியும் வாலுடன் பார்ப்பதற்காக அங்கே வந்தனர். 

அப்போது உதிக்கும் சூரியனைப் போன்ற ஒளி கொண்ட முகத்துடன் இருந்த ஹனுமான் கோபமடைந்தவராக அரக்கர்களைத் தன் எரியும் வாலால் அடிக்க ஆரம்பித்தார்.

அதற்குப் பிறகு அந்தக் கொடிய அரக்கர் கூட்டத்தினர் அந்த உயர்ந்த, வீரமுள்ள வானரரை மேலும் பல கயிறுகளால் கட்டினர். 

அப்போது ஹனுமான் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்துச் செய்ய வேண்டியவை எவை என்பது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். 

"என்னால் மீண்டும் கயிறுகளை அறுத்துக்கொண்டு எம்பிக் குதித்து இவர்களைக்  கொல்ல முடியும். நான் இப்போது கட்டுண்டிருந்தாலும், இந்த அரக்கர்கள் எனக்குச் சமமானவர்கள் அல்ல.

"நான் அப்படிச் செய்தால் என் எஜமானருக்கு நன்மையானதையே செய்ய வேண்டிய நான், என் கடமையை எல்லா விதங்களிலும் சரியாகச் செய்வதிலிருந்து தவறி இருப்பேன். 

"இந்தத் தீயவர்கள்  அவர்கள் அரசனின் கட்டளைக்கிணங்க என்னைக் கட்டி இருக்கிறார்கள். இந்த எல்லா அரக்கர்களையும் தனியாகவே என்னால் போரில் எதிர்கொள்ள முடியும். ஆயினும், என் எஜமானர் ராமருக்காக, எல்லா முன்னெச்சரிக்கைகளையும்  நான் பின்பற்றப் போகிறேன்.

"இரவு நேரத்தில் இலங்கையில் எல்லாவற்றையும் என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. பகல் நேரத்தில் சரியாகப் பார்த்து இந்த நகரம் எப்படி வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டு செல்வதுதான் முறையாக இருக்கும். 

"இந்த நோக்கத்துக்காக நான் மீண்டும் ஒரு முறை இலங்கையைச் சுற்றிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

"என்னைக் கட்டிப் போட்டு விட்டு என் வாலுக்கு நெருப்பு வைத்ததுடன், இந்த அரக்கர்கள் என்னை வேறு விதங்களிலும் துன்புறுத்தட்டும், இவர்களுடைய எந்தச் செயலும் என் பொறுமைக்கோ எனக்கோ சோர்வு ஏற்படுத்தாது." 

அந்த உயர்ந்த, சிறந்த, சக்தி வாய்ந்த வானரரின் மனதில் ஓடிய எண்ணங்களை அறியாத அந்த அரக்கர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை இழுத்துக் கொண்டு அந்த மாளிகையை விட்டு வெளியேறினர்.

கொடிய செயல்களைச் செய்து பழகிய அவர்கள் ஹனுமானை இழுத்துக் கொண்டு, பெரும் இரைச்சலை ஏற்படுத்திக் கொண்டும், சங்குகள், முரசுகள் போன்ற வாத்தியங்களை முழக்கிக் கொண்டும் அந்த நகரை வலம் வந்தனர்.

எதிரிகளை அழிப்பவரான ஹனுமான் அரக்கர்கள் பின்தொடர அந்த நகரை வலம் வந்தார். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும்போதே, அவர் அரக்கர்களின் அந்த நகரம் பற்றிய எல்லா விவரங்களையும் மனதில் குறித்துக் கொண்டார்.

அங்கே அற்புதமான மாளிகைகளையும், உயர்ந்த சுவர்களைக் கொண்ட கட்டிடங்களையும் நன்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைச் சந்திப்புகளையும் அவர் பார்த்தார்.

வாயுவின் குமாரரான அந்த வானரர் நெருக்கம் மிகுந்த தெருக்களையும், எல்லாப் புறமும் சாலைகள் கொண்ட மையப்பகுதிகளையும், வீடுகளுக்கிடையிலான இணைப்புச் சாலைகள், சந்துகள் ஆகியவற்றையும், மேகங்கள் போல் தோற்றமளித்த பெரிய கட்டிடங்களையும் பார்த்தார்.

சாலைச் சந்திப்புகள், பொது விடுதிகள், நெடுஞ்சாலைகள் ஆகிய எல்லா இடங்களிலும், அரக்கர்கள் கூடி, முரசுகளை ஒலித்து ஹனுமானை ஒரு ஒற்றன் என்று அறிவித்தனர்.

வால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஹனுமான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைக் காண்பதற்காக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைவரும் பெரும் உற்சாகத்துடன் எல்லா இடங்களிலும் கூடினர்.

ஹனுமானின் வாலின் நுனி பற்றி எறியத் தொடங்கியதுமே, அந்தத் துயரச் செய்தியைச் சீதையிடம் சொல்ல கோரமான கண்களைக் கொண்ட பல அரக்கிகள் சீதையிடம் ஓடினர். அவர்கள் அவரிடம் கூறினர்:

"ஓ, சீதா! உன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்தச் சிவப்பு முகக் குரங்கு இப்போது அதன் வால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் நகரத்துக்குள் இங்குமங்கும் இழுத்துச் செல்லப்படுகிறது."

சீதைக்கு, இந்தச் செய்தி உயிர் போவதைப் போன்ற வேதனையை அளித்தது. துயரால் அழுத்தப்பட்டவராக அவர் அக்னி தேவதையை மனதில் நினைத்தார்.

அந்த அழகிய பெண்மணி தன் மனதுக்குள் அந்த வானரரின்  நலனுக்காகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். ஆழ்ந்த பக்தியுடன் அவர் அக்னி தேவதையிடம் இவ்வாறு வேண்டிக் கொண்டார்:

"என் கணவருக்கு நான் முறையாகச் சேவை செய்திருப்பேனேயானால், எல்லா விரதங்களையும் நான் சரியாக அனுசரித்திருப்பேனேயானால், என் கணவரை மட்டுமே என் ஒரே ஆதரவாக நான் கருதி வந்திருப்பேனேயானால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"என்னிடம் உனக்குச் சிறிதேனும் இரக்கம் இருக்குமானால், எனக்கு நற்பலன்கள் சிறிதேனும் மீதமிருக்குமானால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"அறத்தின் உருவமான என் கணவரை அடைவதுதான் ஒரே நோக்கமாக உள்ள கற்புடைய பெண் என்று என்னை நீ கருதினால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்.

"எந்த அளவுக்கு சக்தி உள்ளவராக இருக்கிறாரோ அந்த அளவுக்கு உண்மையானவராகவும் இருக்கும் வணக்கத்துக்குரிய சுக்ரீவர் என்னை இந்தத் துயரக் கடலிலிருந்து மீட்கப் போகிறார் என்றால், நீ ஹனுமானைக் குளிர்ச்சியாக உணரச் செய்."

ஹனுமானுக்குத் தன்னால் பாதிப்பு ஏற்படாது என்பதைக் காட்டும் விதத்தில், பொதுவாகக் கொழுந்து விட்டு எரியும் அக்னிதேவதையின் ஜுவாலைகள் தீமையற்ற தன்மையை  வெளிப்படுத்தும் விதத்தில் மென்மையாக இதமாக இருந்தன.

சீதையைத் திருப்திப்படுத்துவதற்காக, ஹனுமானின் தந்தையான வாயுதேவரும் ஹனுமானின் வாலைச் சுற்றியிருந்த நெருப்பை விசிறி விட்டாலும், குளிர்ச்சியாக வீசத் தொடங்கினார்.

நெருப்பு பெரிதாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வானரர் தன் மனதுக்குள் இவ்வாறு நினைத்தார்:

'கொழுந்து விட்டு எரியும் நெருப்பு என் உடல் முழுவதையும் ஏன் சுட்டுப் பொசுக்கவில்லை? ஜுவாலைகள் நிச்சயமாகப் பெரிதாகத்தான் இருக்கின்றன ஆனால் நான் உடல் வேதனை எதையும் உணரவில்லை. வாலின் நுனியில் பனிக்கட்டி வைக்கப்பட்டது போல் உணர்கிறேன்.

'இதன் காரணம் என்ன என்பது பற்றி எந்த ஐயமும் இல்லை. கடலைத் தாண்டி வந்து கொண்டிருந்தபோது, வழியில் என்னை ஒரு மலை வரவேற்று உபசரித்தது போல், இதுவும் ராமரின் சக்தியினால் விளைந்த ஒரு அதிசயம்தான்.

'சமுத்திரராஜனும், மைனாகம் என்ற பெரிய மலையும் ராமரின் காரியத்தில் பெரும் அக்கறை கொண்டிருந்தது போல், அக்னி தேவதையும் ஏன் உதவிகரமாக இருக்கக் கூடாது?

'சீதையின் கருணையாலும், ராமரின் சக்தியாலும், அக்னி தேவதையுடன் என் தந்தை கொண்டுள்ள நட்பினாலும், அக்னி என்னை எரிக்கவில்லை.'

பிறகு அந்தச் சிறந்த வானரர் பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு கணம் சிந்தித்தார். 

தான் ஏற்றுக்கொண்ட பணீயை முடிக்க உறுதி பூண்ட அந்த உயர்ந்த வானரர் எம்பிக் குதித்து ஒரு பயங்கரமான கர்ஜனை செய்தார். 

பிறகு வாயு தேவதையின் புகழ் பெற்ற அந்தப் புதல்வர் அரக்கர் கூட்டத்திலிருந்து விலகி, ஒரு கோபுரத்தின் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு, ஒரு சிகரம் போல் உயர்ந்து நின்றார்.

தன்னை முழுவுதும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்த ஹனுமான் ஒரு நொடியில் தான் முன்பு எடுத்துக் கொண்ட மலை போன்ற உருவத்தைக் கை விட்டு ஒரு சிறிய உருவத்தை எடுத்துக் கொண்டார். 

இதன் மூலம் தன்னைக் கட்டியிருந்த கயிறுகள் தளர்ந்து போகுமாறு செய்தார் அவர்.

எல்லாத் தளைகளிலிருந்தும் விடுபட்ட பின் மீண்டும் மலை போன்ற உருவத்தை எடுத்துக் கொண்டார் அவர். 

அருகிலிருந்த ஒரு நுழைவாயிலுக்கருகில் ஒரு பெரிய உலக்கை இருந்ததைக் கண்ட அந்த சக்தி வாய்ந்த வானரர், இரும்பு முனைகள் கொண்ட அந்த உலக்கையை எடுத்து அந்த நுழைவாயில் அருகில் இருந்த எல்லாக் காவலாளிகளையும் அடித்துக் கொன்றார்.

அங்கிருந்த எல்லா அரக்கர்களையும் போரில் வென்ற பிறகு, கதிர்களால் சூழப்பட்ட சூரியனின் பிரகாசத்தை அவர் வாலில் எரிந்த நெருப்பு அதிகரித்துக் காட்ட,  ஹனுமான் அங்கிருந்தபடியே இலங்கை நகரத்தை நோக்கினார்.

சர்க்கம் 54 - இலங்கையை எரித்தல்

இவ்வாறு தன் நோக்கத்தை நிறைவேற்றிய அந்த சக்தி வாய்ந்த வானரர், இலங்கை நகரத்தை உற்சாகத்துடன் நோக்கி, தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்.

'இங்கே நான் இன்னும் செய்ய வேண்டியது என்ன மீதம் இருக்கிறது? என்ன செய்தால் இந்த அரக்கர்களுக்கு இன்னும் அதிகத் துன்பத்தை விளைவிக்க முடியும்?

'அசோக வனம் அழிக்கப்பட்டு விட்டது. சக்தி வாய்ந்த அரக்கர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். சேனையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது. கோட்டையை அழிப்பதை மட்டும்தான் இன்னும் செய்யவில்லை.

'அதிக முயற்சி இன்றியே என்னால் கோட்டையை அழிக்க முடியும். என் நோக்கமும் நிறைவேறி விடும். என் முயற்சிகளின் அளவுக்குப் பலன்களும் இருக்கும்.

'என் வாலில் எரியும் இந்த நெருப்பு எனக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே அதற்கு அந்த மாளிகைகளை உணவாகக் கொடுத்து, அதை நான் போதுமான அளவுக்குத் திருப்திப்படுத்த வேண்டும்.'  

விரைவிலேயே, மின்னலுடன் கூடிய மழை மேகம் போல் ஹனுமான் தன் எரியும் வாலுடன் இலங்கையிலிருந்த எல்லா மாளிகைகளின் உச்சிகளிலும் தாவிச் சென்றார்.

அச்சமற்ற அந்த வானரர் தன் முன் தெரிந்த வீடுகளைப் பார்த்தபடியே அரக்கர்களின் ஒரு தோட்டத்து வீட்டிலிருந்து இன்னொரு தோட்டத்து வீட்டுக்கு என்று தொடர்ந்து நகர்ந்தார்.

அந்த சக்தி வாய்ந்த, துணிவு மிக்க ஹனுமான் வாயு வேகத்தில் உற்சாகத்துடன் பிரஹஸ்தனின் மாளிகைக்குச் சென்று அதற்குத் தீ வைத்தார். 

அங்கிருந்து அவர் மஹாபார்ஸ்வனின் மாளிகைக்குச் சென்று அதற்குத் தீ வைத்தார். அதன் ஜுவாலைகள் பிரளய கால நெருப்பை ஒத்திருந்தன.

வானரர்களின் தலைவரான, அந்த உயர்ந்த பிரகாசமான வானரர் பிறகு வஜ்ரதம்ஷ்டரன், சுகன், சரணன் மற்றும் இந்திரஜித்தின் மாளிகைகளுக்குச் சென்று அவற்றுக்குத் தீ வைத்தார்.

பிறகு அவர் ஜம்புமாலி, சுமாலி ஆகியோரின் வீடுகளுக்குத் தீ வைத்தார். 

மாளிகைகளின் வரிசையில் நகர்ந்தபடி அந்த ஒளி பொருந்திய வானரத் தலைவர் ரஸ்மிகேது, சூர்யசத்ரு. ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமஸன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், பயங்கரமான வித்யுஜ்ஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிஸாசன், சோனிதாக்ஷன், கும்பகர்ணன், மகராக்ஷன், யமசத்ரு, பிரம்மசத்ரு, தீயவனான நிகும்பன், நராந்தகன் மற்றும் கும்பன் ஆகியோரின் வீடுகளுக்கு ஒவ்வொன்றுக்காகத் தீ வைத்தார். ஆனால் விபீஷணனின் வீட்டை அவர் தொடவில்லை. 

அந்தப் புகழ் பெற்ற வானரர் எல்லா வீடுகளையும் அவற்றில் வசித்த செல்வம் மிக்கவர்களின் சொத்துக்களையும் எரித்து விட்டார்.

மற்ற எல்லோருடைய மாளிகைகளையும் எரித்த பிறகு அந்த வீரம் மிகுந்த வானரர் ராவணனின் அரண்மனையை வந்தடைந்தார்.

மேரு மற்றும் மந்தர மலையை ஒத்திருந்த, விலை உயர்ந்த மற்றும் கலையம்சம் கொண்டிருந்த பொருட்கள் நிறைந்த, முத்துக்கள் முதலான நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த, எல்லா மாளிகைகளையும் விட உயர்ந்திருந்த அந்த மாளிகைக்குச் சென்றதும், வீரம் மிகுந்த அந்த வானரர் அந்த மாளிகைக்குத் தன் வாலின் நுனியினால் தீ வைத்து விட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரளய காலத்து மேகத்தின் முழக்கம் போன்ற ஒரு உரத்த கர்ஜனை செய்தார்.

தீயின் ஜுவாலைகள் பிரளய கால நெருப்பின் ஜுவாலைகளைப் போல் எழும்பத் தொடங்கின. சாதகமாக வீசிய காற்றினால் விசிறப்பட்டு அந்தத் தீ இன்னும் பெரிதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் ஆகியது. 

நீயை அந்தப் பெரிய மாளிகைகளிலிருந்து அவற்றைச் சுற்றியிருந்த இடங்களுக்குக் காற்று பரப்பியது. காற்றினால் நெருப்பு அதிக உயரமாக எரிந்தது.

தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட ஜன்னல்கள், முத்துக்கள் கோர்க்கப்பட்ட அலங்காரங்கள், விலை உயர்ந்த உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுடன் கூடிய அந்த மாளிகைகள் நெருப்பின் செயலால் சாம்பலாகின.

சித்தர்களின் புண்ணியம் தீர்ந்ததும் அவர்களுடைய மாளிகைகள் விண்ணிலிருந்து கீழே விழுவது போல், இலங்கையின் அந்த ஏழடுக்கு மாளிகைகள் தரையில் விழுந்தன.

அரக்கர்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்ற ஓடினர். தங்கள் வீரம் எல்லாம் அடக்கப்பட்ட நிலையில், அவர்கள், "ஐயோ! அக்னி தேவன்தான் இங்கே குரங்கு உருவில் வந்திருக்கிறான்!" என்று கூவினர். இது போன்ற பல குரல்கள் அந்த இடத்தை நிரப்பின.

மிரண்டு போன சில அரக்கர்களும், அரக்கிகளும் கூச்சலிட்டபடியே, கலைந்த கூந்தல்களுடன், தங்கள் குழந்தைகளைக் கைகளில் ஏந்தியபடி, தங்கள் மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து வேகமாகக் கீழே இறங்கினர்.

மேலிருந்து கீழே விழுந்தவர்கள் மேகங்களிலிருந்து கீழிறங்கும் மின்னல் போல் ஜொலித்தனர்.

வைரங்கள், முத்துக்கள், வைடூரியங்கள், பவழங்கள், வெள்ளி ஆகியவற்றால் அமைக்கப்பட்ட மாளிகைகள் உருகுவதை ஹனுமான் பார்த்தார்.

புல், மரக்கட்டைகள் ஆகியவற்றால் நெருப்பு திருப்தி அடைவதில்லை. அது போல் ஹனுமானும் சில அரக்கர்களை அழிப்பதால் மட்டும் திருப்தி அடையவில்லை.

ஹனுமானால் கொல்லப்பட்டுத் தன் மேற்பரப்பில் கிடத்தப்பட்ட அரக்கர்களால் பூமியும் திருப்தி அடையவில்லை. 

நெருப்பின் ஜுவாலைகள் சில இடங்களில் கிம்சுகப் பூக்கள் போலவும், சில இடங்களில் சால்மலிப் பூக்கள் போலவும், சில இடங்களில் குங்குமப் பூக்கள் போலவும் ஒளி விட்டன.

திரிபுரம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது போல், பெரும் வல்லமை கொண்ட அந்த வானரரால் இலங்கை நகரம் சாம்பலாக்கப்பட்டது.

வல்லமை கொண்ட ஹனுமானால் மூட்டப்பட்ட தீ, இலங்கை நகரம் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவிய பின், இலங்கை நகரம் அமைந்திருந்த திரிகூட மலையின் உச்சிக்கு மேல் உயர்ந்த ஜுவாலைகளுடன் எழும்பியது.

காற்றினாலும், அரக்கர்களின் உடல்களில் இருந்த கொழுப்பினாலும் பெரிதாக்கப்பட்டு, அந்த நெருப்பு எல்லா வீடுகளுக்கும் பரவியது. அதன் ஜுவாலைகள் பிரளய காலத் தீயைப் போல் விண்ணை முட்டும் அளவுக்கு உக்கிரமாக எழும்பின.

இலங்கை முழுவதும் பரவிய அந்த நெருப்பு, கோடி சூரியன்களைப் போல் ஒளி விட்டு, இடிகள் மோதிக் கொள்வது போன்ற பல ஒலிகளை உண்டாக்கியது. அது அண்டம் முழுவதையுமே உடைக்கப் போவது போன்ற தோற்றத்தை உண்டாக்கியது.

மலை உச்சியில் எரிந்த நெருப்பின் ஜுவாலைகள் கிம்சுக மரத்தின் மலர்களைப் போல் தோன்றின.

எல்லாவற்றையும் எரித்த பின் தீ தணியத் தொடங்கியபோது, பெருமளவிலான புகை வானம் வரை எழும்பி, மேகங்களுடன் கலந்து நீல நிற அல்லிப்பூக்களின் வண்ணத்தை அடைந்தது.

மொத்த நகரமும், அதன் வீடுகள், மரங்கள், உயிரினங்கள் அனைத்துடனும் சேர்ந்து ஒன்றாக எரிந்ததைப் பார்த்த பல அரக்கத் தலைவர்கள் ஒன்றாகக் கூடி தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொள்ளத் துவங்கினர்:

"இவன் விண்ணுலகங்களின் அரசனான வஜ்ராயுதம் கொண்ட இந்திரனா, தர்மத்தின் கடவுளான யமனா, கடல்களின் அரசனான வருணனா, அல்லது காற்றுக் கடவுளான வாயுதேவனா? ஒருவேளை இவன் ருத்ரனாகவோ, அக்கினி தேவனாகவோ, சூரியக் கடவுளாகவோ, குபேரனாகவோ, சந்திரனாகவோ இருப்பானோ?

"இது குரங்கல்ல, மரணமே ஒரு வடிவெடுத்து வந்திருக்கிறது.

"நான்முகம் கொண்ட இவ்வுலகின் நாயகனான பிரம்மாவின் பெரும் கோபம்தான் அரக்கர்களை மொத்தமாக அழிப்பதற்காக ஒரு குரங்கின் வடிவெடுத்து வந்திருக்கிறதோ?

"அல்லது சர்வ வல்லமை கொண்ட, அளவிட முடியாத, மனதால் உணர முடியாத, ஈடு இணையற்ற விஷ்ணுவின் சக்திதான் தன் மாயையினால் குரங்கு வடிவம் எடுத்து வந்திருக்கிறதோ?" 

அந்த இலங்கை நகரிலிருந்த அரக்கர்கள், குதிரைகள், யானைகள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆகியோர் எரித்துச் சாம்பலாக்கப்பட்டபோது, அவர்களுடைய உரத்த, பரிதாபமான ஓலங்கள் கேட்டன.

"ஓ, அப்பா! ஓ, மகனே! ஓ, பிரபு! ஓ, நண்பனே! ஐயோ, என்ன பரிதாபம்! நாம் வாழ்ந்து வந்த வசதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன ஆயிற்று?"

அரக்கர்களிடமிருந்து வந்த இது போன்ற உரத்த, அச்சம் மிகுந்த ஓலங்கள் வான்வெளியை நிரப்பின.

ஹனுமானின் கோபத்தால் அந்த இலங்கை நகரம், எங்கும் தீ பரவிய நிலையில், அதன் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, அதன் சேனைகள் தூள் தூளாக்கப்பட்டு, சாபத்தினால் அழிக்கப்பட்ட ஒரு நகரம் போல் தோற்றமளித்தது.

அரக்கர்களால் நிறைந்திருந்த அந்த இலங்கை நகரத்தை இத்தகைய துயரமான நிலையில் அந்த உயர்ந்த ஹனுமான் பார்த்தார். 

கடவுளின் கோபத்தால் உலகம் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது போல் அவரால் மூட்டப்பட்ட தீயால் அந்த நகரம் அழிக்கப்பட்டதை அவர் பார்த்தார்.

அவர் இதுவரை காட்டுப்பகுதிகளை, அங்குள்ள எல்லா மரங்களுடனும் அழித்து விட்டார். உயர்ந்த நிலையில் இருந்த பல அரக்கர்களைப் போரில் கொன்று விட்டார். அவர் மூட்டிய தீ இலங்கையில் இருந்த மாளிகைகளின் பல வரிசைகளை விழுங்கி விட்டது.

இலங்கையை எரித்த பிறகு, வாயுவின் குமாரரான ஹனுமான் சற்று நேரம் அமைதியாக இருந்தார். 

தன் வால் எரிந்து கொண்டிருந்த நிலையில் திரிகூட மலையின் சிகரம் ஒன்றின் மீது நின்று கொண்டிருந்த அந்த வீரமுள்ள வானரர் கதிர்களால் சூழப்பட்ட சூரியன் போல் இருந்தார்.

அந்தக் காட்டின் எல்லா மரங்களையும் அழித்த பிறகு, பலம் மிகுந்த அரக்கர்களைக் கொன்ற பிறகு, அரக்கர்களின் பல மாளிகைளுக்குத் தீயிட்ட பிறகு, அந்த உன்னத ஆத்மா இப்போது தன் மனதில் ராமரை தியானித்தார்.

அப்போது, வானரர்களுக்குள் சிறந்த வீரரும், அளவற்ற வல்லமை கொண்டவரும், காற்றைப் போல் வேகம் கொண்டவரும், புத்திக் கூர்மை கொண்டவருமான அந்த  ஹனுமானின் புகழை தேவர்கள் பாடத் தொடங்கினர். 

காடுகளை அழித்து, அரக்கர்களைக் கொன்று, இலங்கை நகரை எரித்த பின், அந்த உயர்ந்த வானரர் ஒளி துலங்க நின்றார்.

வானர இனத்தில் மிக உயர்ந்தவரான அந்தச் சக்தி வாய்ந்த வானரர், இலங்கை நகரம் முழுவதையும் எரித்த பின் தன் வாலைக் கடலில் தோய்த்து அதிலிருந்த தீயை அணைத்தார்.

உயர்ந்த வானரரான ஹனுமானைப் பார்த்து எல்லா உயிரினங்களும் பிரளய கால நெருப்பைப் பார்த்தது போல் நடுக்கம் கொண்டன.

அந்தத் தருணத்தில் தேவர்கள், மாமுனிவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் பல உயர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சர்க்கம் 55 - ஹனுமானின் மனக்குழப்பம்

இலங்கை நகரின் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகி விட்டதையும், அரகர்கள் பீதியுடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதையும் பார்த்த ஹனுமான் இவ்வாறு நினைத்தார்:

"இலங்கை எரிக்கப்பட்டு விட்டது? ஆனால், இதனால் விளைந்த பயன் என்ன?" 

இவ்வாறு நினைத்துதும், ஹனுமானின் மனதில் ஒரே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியும், தன் மீதே வெறுப்பும் ஏற்பட்டது.

"தீப்பிடித்தால், நீர் ஊற்றி அதை அணைப்பது போல், தங்களுக்கு ஏற்படும் கோபத்தைத் தங்கள் அறிவைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், உயர்ந்தவர்கள்.

"கோபத்தால் உந்தப்பட்டுப் பாவச்செயல் புரியாமல் இருப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? கோபத்தின் வசப்பட்ட ஒருவன் தான் மதிக்கும் பெரியோர்களைக் கொல்வான்; நல்ல மனிதர்களை மரியாதைக் குறைவான சொற்களால் அவமதிப்பான்.

"கோபத்தின் பிடியில் இருப்பவன் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற வேறுபடுத்திப் பார்க்கும் அறிவையே இழக்கிறான். கோபத்துக்கு வசப்பட்டவன் செய்ய மாட்டான் என்று சொல்லக் கூடிய முறையற்ற செயல் எதுவுமே இல்லை. அந்த நிலையில் அவன் எதையும் செய்யக் கூடியவன்.

"பாம்பு தன் தோலை உரித்துக் கொள்வதைப் போல் பொறுமையின் மூலம் கோபமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவன்தான் உண்மையான மனிதன். 

"உயர்ந்த பெண்மணியான சீதாப்பிராட்டியைப் பற்றி ஒரு கணம் கூடச் சிந்திக்காமல் இலங்கைக்குத் தீ வைத்த நான் ஒரு அறிவிலியான முட்டாளாகவும், பாவியாகவும், வெட்கங்கெட்டவனாகவும், தன் எஜமானருக்கு துரோகம் செய்தவனாகவும் கருதப்பட வேண்டும்.

"இந்த இலங்கை நகரம் எரிக்கப்பட்டபோது, உயர்ந்த உள்ளம் கொண்ட சீதாப்பிராட்டியும் எரிக்கப்பட்டிருப்பார். இது நிச்சயம். எனவே என் எஜமானர் என்னை அனுப்பிய நோக்கத்தை நான் கெடுத்து விட்டேன்.

"இந்த நோக்கத்துக்காக இதுவரை நான் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. ஏனெனில், இலங்கையை எரித்த நான் சீதையைத் தீயிலிருந்து காப்பற்ற எதையும் செய்யவில்லை.

"இந்தப் பெரிய செயலைச் செய்தபோது, அது ஒரு முக்கியமில்லாத விஷயம் போல் நடந்து கொண்டு விட்டேன். இந்தச் செயலின் அடிப்படை நோக்கத்தையே நான் தோற்கடித்து விட்டேன். இது பற்றி எந்த ஐயமும் இல்லை.

"இலங்கை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தீயிலிருந்து எந்த இடமும் தப்பவில்லை. எனவே, ஜனகரின் மகளும் இந்தத் தீக்கு பலியாகி இருப்பார் என்பதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது.

"என் முட்டாள்தனத்தினால் என் செயலின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டிருக்குமானால், என் உயிரை இங்கேயே, இப்போதே விடுவதுதான் இதற்கு மாற்றாக இருக்கும். 

"பிரளயத் தீ போல் எரியும் இந்த நெருப்பின் கொடிய ஜுவாலைகளில் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா, அல்லது இந்தக் கடலில் வழும் உயிரினங்களுக்கு என் உடலை இரையாக அளித்து விடட்டுமா?

 "என் செய்கையால் என் முயற்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விட்டு இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கும் என்னால் வானரர்களின் பெரிய தலைவரான சுக்ரீவர் மற்றும் இரண்டு உன்னதமான இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் இவர்களின் முகங்களை எப்படிப் பார்க்க முடியும்?

"குரங்குகள் இயல்பாகவே நிலையற்ற சிந்தனை கொண்டவை, மற்றவர்களால் ஊகிக்க முடியாத வகையில் செயல்படுபவை என்று எல்லா உலகங்களிலும் நன்கு அறியப்பட்டிருப்பதைத்தான் என் பெரிய குறை, கோபம் இவற்றின் காரணமாக நான் நிரூபித்திருக்கிறேன்.

"அறிவீனால் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையற்ற இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை கொடிது! ஏனெனில், பெரும் செயல்களைச் செய்யும் வல்லமை படைத்த நான் கூடக் கோபத்தால் சீதையைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டேனே!

"சீதை இறந்து விட்டால், அந்த இரண்டு இளவரசர்களும் கூட இறந்து விடுவார்கள். அவர்கள் இருவரும் இறந்தால், சுக்ரீவரும் தன் உறவினர்கள் அனைவருடனும் மரணத்தைத் தழுவி விடுவார்.

"இதைக் கேள்வியுற்றதும் சகோதரப் பாசம் மிகுந்த, அற வழி நடக்கும் பரதரும் சத்ருக்னரும் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் இக்ஷ்வாகு வம்சம் முடிவுக்கு வந்தால், அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் சோக நெருப்பால் வாட்டப்படுவார்கள்.

"எனவே, கோபம் என்னும் தீமை என்னை அடிமைப்படுத்த இடம் கொடுத்து, அதன் மூலம் என் அதிர்ஷ்டத்தையும், தர்மத்தின் மற்றும் நடைமுறை உலக வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த என் மேன்மையையும் இழந்து விட்ட நான் சந்தேகமின்றி இந்த உலகுக்குத் தீமை செய்பவன்தான்." 

இவ்வாறு தன் விதியை நொந்து கொண்ட ஹனுமானுக்குத் தன் முந்தைய அனுபவங்கள் சிலவற்றை நினைவு கூற வேண்டுமென்று தோன்றியது.

"ஒருவேளை, மங்களமே உருவான அந்த அழகிய பெண்மணி தன் அசாதாரணமான சக்தியினால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பரோ? தீயையே தீயால் எப்படி எரிக்க முடியும்?

"அளவற்ற சக்தி கொண்டவரும், தர்மத்தின் உருவமுமான அந்த உயர்ந்த மனிதரான ராமரின் மனைவியும், தன் கற்பினால் பாதுகாக்கப்பட்டிருப்பவருமான சீதையைத் தீயினால் அணுகக் கூட முடியாது.

"ராமரின் உயர்வினாலும், சீதையின் கற்பின் சக்தியினாலும்தான்  எல்லாவற்றையும் எரிக்கும் தன்மை கொண்ட தீயினால் என்னை அவ்வாறு எரிக்க முடியவில்லை.

"ராமரிடம் பக்தி கொண்ட மனைவியாகவும், அவருடைய மூன்று தம்பிகளாலும் வணங்கப்படுபவராகவும் உள்ள ஒருவருக்கு எவ்வாறு அழிவு ஏற்படும்?

"எரிக்கும் தன் நோக்கத்தில் எப்போதும் தோல்வி அடையாத இந்த நெருப்பு என் வாலைக் கூட பாதிக்கவில்லை. அப்படி இருக்கையில், கற்புடைப் பெண்களில் சிறந்தவரான சீதையை அது எப்படி எரிக்க முடியும்?"

இத்தகைய சிந்தனைகளைத் தவிர, சமுத்திரத்தின் மத்தியில் மைநாக மலை எழுந்ததைப் பற்றியும் மிகுந்த வியப்புடன் நினைத்துப் பார்த்தார் அவர்:

"அந்த உயர்ந்த பெண்மணி, தன் கற்பின் சக்தியாலும், உண்மையுடன் இருப்பதாலும், தன் கணவனிடம் கொண்ட முழுமையான பக்தியாலும் ஒருவேளை நெருப்பையே எரிக்கக் கூடும். அத்தகைய நபர் எப்படி நெருப்பால் பாதிக்கப்பட முடியும்?"

இவ்வாறு ஹனுமான் தன் மனதுக்குள் சீதையின் தர்ம வலிமையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, உயர்ந்தவர்களான சாரணர்கள் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் கேட்டது. அவர்கள் கூறினர்:

"நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இந்த பயங்கரமான தீயை அரக்கர்களின் வீடுகளில் பரவச் செய்யும் இயலாத செயலை ஹனுமான் செய்து காட்டி இருக்கிறார். 

"இலங்கை நகரம் முழுவதும், அதன் மாளிகைகள், சுவர்கள், நுழைவாயில் கோபுரங்கள் ஆகியவற்றுடன் எரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு மலையின் குகைகளுக்கிள்ளிருந்து வரும் முனகல் சத்தங்கள் போல், இங்குமங்கும் பறந்தோடிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அரக்கர்களின் துயர முனகல்கள் எழுகின்றன.

"ஆயினும், இலங்கை முழுவதும் எரிந்தாலும், ஜனகரின் குமாரி மட்டும் பாதிக்கப்படாமல் இருக்கிறார். இது மிகவும் வியப்புக்குரிய ஒன்று."

ராமர், சீதை இருவரின் மேன்மை பற்றி அவர் மனதில் தோன்றிய எண்ணங்களாலும், உயர்ந்த செயல்கள் தார்மீக ரீதியில் சரியானவை என்ற அவரது நம்பிக்கையாலும், சாரணர்கள் மேற்கூறியவாறு பேசியதைக் கேட்டதாலும் தன் மனதில் ஏற்பட்ட உறுதியால் ஹனுமான் பெரிதும் அமைதியாக உணர்ந்தார்

சீதாப்பிராட்டிக்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கை ஹனுமானுக்கு இப்போது ஏற்பட்டிருந்தாலும், சீதையை மீண்டும் ஒருமுறை நேரில் பார்த்து விட்டுத் தன் எண்ணம் சரிதான் என்று உறுதி செய்து கொள்ள விரும்பினார் அவர். 

சர்க்கம் 56 - இலங்கையிலிருந்து கிளம்பினார் ஹனுமான்

சிம்ஸுபா மரத்தின் அடியில் அசையாமல் அமர்ந்திருந்த ஜனகரின் மகளிடம்  சென்று அவர் திருவடியை வணங்கிய ஹனுமான், "இந்த நிலையிலும் உங்களுக்கு ஏதும் ஆகாமல் இருப்பதைக் கடவுளின் அருளால் நான் காண்கிறேன்" என்றார்.

தன் கணவரான ராமரிடம் தனக்கு இருந்த அன்பையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைத் தன் முன் வந்து நின்ற ஹனுமானைப் பார்த்து சீதை கூறினார்.

"எதிர்களை அழிப்பவனே! திட்டமிட்டபடி உன் நோக்கத்தை நிறைவேற்றுவது உனக்கு மட்டுமே இயன்ற செயல். உன் சக்தியையும், மேன்மையையும் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசினாலும், அது மிகையாக இருக்காது.

"காகுஸ்தர் வழி வந்த ராமர் தன் அம்புகளால் இலங்கையைப் புரட்டிப் போட்டு இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றால், அது உன்னுடைய மேன்மைக்குப் பொருத்தமானதாக இருக்கும். எனவே தன் திறமையைப் பயன்படுத்தித் தன் எதிரிகளை வெற்றி கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான யோசனையை நீ அந்த மேன்மை பெற்ற வீரருக்கு வழங்க வேண்டும்."

சீதையின் இந்த அர்த்தமுள்ள, நியாயமான, அன்பு மிகுந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஹனுமான் அவருக்கு ஒரே வரியில் பதில் கூறினார்:

"காகுஸ்தர் வழியில் வந்த அந்த வீரர் நிச்சயமாகக் குரங்குகளும், கரடிகளும் கொண்ட சேனையுடன் வந்து எதிரிகளை வென்று உங்கள் துன்பங்களுக்கு முடிவு கட்டப் போகிறார்."

விதேஹ நாட்டு இளவரசிக்கு இவ்வாறு ஆறுதல் கூறிய பின், ஹனுமான் அவரிடம் விடை பெற்று திரும்பிச் செல்வதற்குத் தயாரானார்.

எதிரிகளை அழிப்பவரான அந்த வீரமுள்ள வானரர் தன் எஜமானரைச் சந்திக்க உறுதி கொண்டவராக அரிஷ்டம் என்ற பெரிய மலையின் மீது ஏறிக் கொண்டார். 

அந்த மலை பச்சை இலைகள் மிகுந்த பத்ம மரங்களால் நிறைந்திருந்தது. அதன் சிகரங்களால் மறைக்கப்பட்டிருந்த மேகங்கள், தன் உடலின் மேற்புறம் மட்டும் துணீயால் மறைக்கப்பட்டிருந்த ஒருவனைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன.

உதயசூரியனின் நட்பான, இனிய கதிர்களால் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டது போல் தோற்றமளித்தது அந்த மலை. அதிலிருந்து வெளிப்பட்ட வண்ணங்கள் ஒருவர் தன் கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

மலையில் நீர் ஓடிய உரத்த ஓசை அந்த மலை வேதங்களை ஓதுவதைப் போல் உணரச் செய்தது. அதில் ஓடிய பல சிற்றோடைகளின் மென்மையான ஒலி இனிய இசையை நினைவூட்டியது.

அந்த மலையில் எழுந்திருந்த உயர்ந்த தேவதாரு மரங்கள் கடுமையாகத் தவம் செய்யும் முனிவர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கி நிற்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

அதிலிருந்த நீர்வீழ்ச்சிகளின் ஓசை எல்லாத் திசைகளிலும் அதிர்வுகளைப் பரவச் செய்தது. இலையுதிர் காலத்துக்கே உரித்தான கருத்த நிறம் கொண்ட ஓடும் மேகங்கள் அந்த மலையை ஒரு நடுக்கம் கண்ட நபர் போல் தோன்றச் செய்தன.

மூங்கில்கள், நாணல்கள் இவற்றினூடேகாற்று சென்றதால் ஏற்பட்ட கீச்சொலி அந்த மலை கூவுவது போல் உணரச் செய்தது. அதன் மீது இருந்த மலைப்பாம்புகளின் உரத்த, அச்சமூட்டும் மூச்சொலி அந்த மலை பொறாமையால் பெருமூச்சு விடுவது போல் உணரச் செய்தது.

பனி மிகுந்த அதன் பெரிய குகைகள் புலனை அடக்கி தியானத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன. பெரும் மேகங்கள் போன்ற அதன் எண்ணற்ற குன்றுகளின் வரிசை எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்துவதற்காக முன்னேறிச் செல்லும் சேனையைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தது.

மேகம் சூழ்ந்த அதன் சிகரங்களைப் பார்க்கும் எவருக்கும் அந்த மலை மல்லாந்து படுத்துக் கொட்டாவி விடுவது போல் தோற்றமளிக்கும். 

பரவலாக இருந்த அதன் சிகரங்களும், குகைகளும் அதற்கு அழகூட்டின. மூங்கில்கள், நாணல்கள் தவிர, சாலம் (ஆச்சா மரம்), பனை, அஸ்வகர்மா போன்ற பல்வகை மரங்களும் அந்த மலை மீது இருந்தன, மலர்கள் நிறைந்த கொடிகள் பரவலாகப் படர்ந்து அந்த மலைக்குக் கூடாரமாக அமைந்தன.

பலவகையான மிருகங்கள் அதில் வசித்து வந்தன. அந்த மலையில் இருந்த கனிமச் சுரங்களிலிருந்து சுரந்த பொருட்களின் பல்வகை நிறங்கள் அந்த மலையை அலங்கரித்தன. கணக்கற்ற சிற்றோடைகள் அதில் ஓடிக் கொண்டிருந்தன.

எங்கு பார்த்தாலும் பாறைக் குவியல்கள் இருந்தன.

முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள்,, நாகர்கள் ஆகியோர் அந்த மலையில் வசித்து வந்தனர். 

அந்த மலையின் மீது கணக்கற்ற கொடிகளும், மரங்களும் விழுந்து கிடந்தன. சிங்கங்கள் வசித்து வந்த குகைகள் பல அதில் இருந்தன. புலிக் கூட்டங்களும் அந்த மலையில் வசித்து வந்தன.

உண்ணக் கூடிய பலவகையான காய்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை வழங்கும் மரங்கள் அங்கே வளர்ந்திருந்தன.

அத்தகைய மலையில் ராமரை விரைவிலேயே பார்க்கப் போகும் வாய்ப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த ஹனுமான் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏறினார்.

அந்த அழகிய மலையின் சரிவுப் பகுதியில் ஹனுமான் தன் காலை வைத்தபோது, அங்கிருந்த பாறைகள் சுக்கு நூறாக உடைந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தின.

அதப் பெரிய மலையின் உச்சியில் நின்ற ஹனுமான்கடலின் தெற்குக் கரையிலிருந்து வடக்குக் கரைக்குப் போகத் தீர்மானித்து அதற்குத் தயாராகத் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார்.

வாயுதேவரின் வீரப் புதல்வரான அவர் அந்தப் பெரிய மலையின் உச்சியில் நின்றபடி மீன்களும் பாம்புகளும் நிறைந்த அந்த சமுத்திரத்தைக் கண்களால் அளப்பது போல் பார்த்தார்.

வாயுதேவர் வானில் செல்வது போலவே, வாயுதேவரின் குமாரரான அந்த வீரமிகு வானரரும் தென்புறத்திலிருந்து வடபுறத்துக்குத் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஹனுமானின் கால்களால் அழுத்தப்பட்ட, பாறைகள் அடர்ந்த அந்த மலை அதன் சிகரங்களுடனும், அதில் வசித்தவர்களுடனும் சேர்ந்து நடுங்கியது. அதிலிருந்த மரங்கள் பெரும் சத்தத்தை எழுப்பியபடி தலை குப்புறச் சாய்ந்து, பூமியின் வயிற்றுக்குள் விழுந்து மறைந்தன.

மலர்கள் நிறைந்த மரங்கள் ஹனுமானின் தொடைகளின் தாக்கத்தின் விசையால், இடியால் தாக்கப்பட்டது போல் உடைந்து தரையில் விழுந்தன. 

தங்கள் குகைகளுக்குள் அடைந்திருந்த சக்தி வாழ்ந்த சிங்கங்களின் பயங்கரமான கர்ஜனைகள் வானைப் பிளப்பது போல் மேலெழும்பின.

தங்கள் உடைகள் தளர்ந்து, ஆபரணங்கள் கலைந்திருந்த நிலையில், வித்யாதரப் பெண்கள், அந்த மலையிலிருந்த தங்கள் இருப்பிடங்களிலிருந்து அச்சத்துடன், அவசரமாக வெளி வந்தனர்.

சக்தி வாய்ந்த பெரிய நாகங்கள் தங்கள் தலைகளையும், கழுத்துக்களையும் தாழ்த்திக் கொண்டும், உடலைச் சுருட்டிக் கொண்டும், நாக்குகளை வெளியே நீட்டிக் கொண்டும், விஷத்தைக் கக்கிக் கொண்டும் வெளியே வந்தன.

பெரும் சத்தங்களாலும், அதிர்வுகளாலும் பாதிக்கப்பட்டு கின்னரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அந்த மலையை விட்டு வெளியேறி வானில் நின்றனர்.

ஹனுமான் கால்களை வைத்து அழுத்தியதால் அந்த அழகிய மலை தன் பெரிய மரங்கள், சிகரங்கள் ஆகியவற்றுடன் பாதாள லோகத்தில் சரணடைந்தது. பத்து யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட அந்த மலை கீழே அழுந்தித் தரை மட்டத்துக்கு வந்தது.

பெரும் அலைகள் அடித்துக் கொண்டிருந்த உப்புக் கடலைத் தாண்ட விரும்பிய ஹனுமான் எளிதாக வானில் எழும்பினார்.

சர்க்கம் 57- வடக்குக் கரையை அடைந்தார் ஹனுமான்

ஆகாயம் என்னும் எல்லையற்ற கடலில் ஒரு பெரிய கப்பலைப் போல் சிறிதும் சோர்வின்றிக் காற்றைப் போல் நீந்திச் சென்றார் ஹனுமான். 

கடலைப் போன்ற அந்த ஆகாயம் அழகிய நிலவை அல்லி மலராகவும், சூரியனை நீரில் மூழ்கிச் செல்லும் வாத்தாகவும், பூசம் மற்றும் ஸ்ரவண நட்சத்திரங்களைத் தன் மேற்பரப்பில் நீந்தும் அன்னப்பறவைகளாகவும், மேகங்களை நீர்க்கொடிகளாகவும், புனர்ப்பூச நட்சத்திரத்தைப் பெரிய மீனாகவும், செவ்வாய் கிரகத்தை முதலையாகவும், வானவில்லை ஒரு பெரிய தீவாகவும், தன் மீது வீசும் புயல் காற்றை அலைகளாகவும், நிலவொளியைத் தன் குளிர்ந்த நீராகவும், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை முழுவதும் மலர்ந்த சிவப்பு மற்றும் பச்சைத் தாமரைப் பூக்களாகவும்  கொண்டிருந்தது. 

மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றிருந்த வாயுபுத்திரரான ஹனுமான் வானத்தில் பயணம் செய்தபோது அவர் வானத்தை விழுங்கப் போவது போலவும். நிலவைத் தேய்த்து அழிக்கப் போவது போலவும் தோன்றியது.

வானத்தின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக அவர் வானத்தையும், அதிலிருந்த சூரியனையும், நட்சத்திரங்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அவர் ஆகாயத்தில் சென்றபோது, வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை கலந்த ஊதா ஆகிய பல நிறங்களில் இருந்த பெரிய மேகங்களை அவர் தன்னுடன் சேர்த்து இழுத்துச் செல்வது போல் இருந்தது.

பெரிய மேகங்களுக்கிடையே ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்படும்  நிலவைப் போல் அவர் ஒளி விட்டார்.

வெள்ளை உடை அணிந்திருந்த ஹனுமான் பல்வேறு நிறங்களிலிருந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்து பிறகு வெளிப்பட்டபோது அவரது உடல் மறைவதும் பிறகு வெளிப்படுவதுமாக இருந்த காட்சி அவரை நிலவு போலவே தோன்றச் செய்தது.

மேகங்களுக்கிடையே நுழைந்து அவற்றைப் பிளந்து மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஹனுமான் வானத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றமளித்தார். 

ஒளிர் விடும் சக்தியுடன் விளங்கிய ஹனுமான் பல அரக்கர்களைக் கொன்று, சேனைகளைச் சிதைத்து, ஒரு நகரத்தையே அழித்து, ராவணன் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி, சீதையைச் சந்தித்துப் பேசி, இவ்விதமாகத் தன் புகழை எல்லா இடத்திலும் பரப்பிய பிறகு, வான்வெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டும், இடியைப் போல் முழங்கிக் கொண்டும் வான் வழியே பயணம் செய்தார்.

வழியில் அவர் மைனாக மலையைத் தன் கைகளால் தொட்டு வருடி விட்டு, அதன் பிறகு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வெகு வேகமாக முன்னேறிச் சென்றார்.

விரைவிலேயே பெரியதான மஹேந்திர மலை தூரத்தில் ஒரு மேகத்தைப் போல் தெரிந்ததைக் கண்டு, அந்த உயர்ந்த வானரர் உரத்த குரலில் கர்ஜனை செய்தார். இடி போன்ற அவர் முழக்கம் அதன் பெருத்த ஓசையால் பத்துத் திசைகளிலும் பரவியது.

தன் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற அதிகமான ஆவலால், அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கியதும், அவர் உரத்துக் கூச்சலிட்டுத் தன் வாலை ஆட்டினார்.

வானில் பயணம் செய்தபோது ஹனுமான் எழுப்பிய பயங்கரமான கர்ஜனை வானத்தை அதிலிருந்த சூரியனையும் சேர்த்துப் பிளந்து விடும் போல் இருந்தது.

அப்போது ஹனுமானைக் காண்பதற்காகக் கடலின் வடக்குக் கரையில் முன்பிருந்தே காத்துக் கொண்டிருந்த வீரமும், சக்தியும் கொண்ட அவருடைய தண்பர்கள் ஹனுமான் வானில் பறந்ததாலும், அவருடைய கால்கள் வான்வெளீயில் உதைத்து நீந்தியதாலும் ஏற்பட்ட இடி போன்ற ஒலிகளைக் கேட்டனர். 

காட்டுவாசிகளான அந்த வானரர்கள் அனைவரும் ஹனுமான் பறந்ததால் ஏற்பட்ட அந்த இடி போன்ற முழக்கத்தை ஆவலுடன் கவனித்துக் கேட்டனர்.

அந்த அதிர்வொலி ஹனுமானால்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும் அந்த வானரர்கள் அனைவரும் தங்கள் நண்பரை வரவேற்க உற்சாகத்துடன் அங்கே நின்றனர். 

எல்லா வானரர்களுக்கும் பிரியமானவரான ஜாம்பவான் உவகையுடன் எல்லா வானரர்களையும் தன் அருகில் அழைத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஹனுமான் தன் பணியில் முழுவதுமாக வெற்றி அடைந்து விட்டார். அப்படி இல்லாவிட்டால் அவர் இப்படியெல்லாம் குரல் எழுப்ப மாட்டார்."

ஹனுமானின் கைகளும் கால்களும் காற்றில் நீந்தியதால் ஏற்பட்ட ஓசையையும் அவர் கர்ஜனைகளையும் கேட்டு எல்லா வானரர்களும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர்.

ஹனுமானைப் பார்க்கும் ஆவலில் அவர்கள் மரத்துக்கு மரமும், குன்றுக்குக் குன்றும் தாவிக் குதித்து, பிறகு ஓரிடத்தில் ஒன்றாகக் கூடினர்.

உற்சாகம் மிகுந்த அந்த வானரர்கள் மென்மையான இலைகளையும் பூக்களையும் கொண்ட மரக்கிளைகளை உடைத்து விலை உயர்ந்த ஆடைகளை ஆட்டுவதைப் போல் அவற்றை ஆட்டினர்.

குகைகளுக்குள் சிக்கிக்கொண்ட காற்று அதிர்வான ஒலிகளை ஏற்படுத்துவது போல், வாயு குமாரரான சக்தி வாய்ந்த ஹனுமான் ஆகாயத்தைத் தன் கூச்சல்களால் நிரப்பினார்.

மேகம் போன்ற தோற்றத்துடன் தங்கள் வீரர் தங்களை நெருங்கி வருவதைப் பார்த்த அந்த வானரர்கள் கை கூப்பி அவரை வணங்கியபடி அங்கே நின்றனர்.

சக்தி வாய்ந்தவரும் மலை போன்ற தோற்றம் கொண்டிருந்தவருமான ஹனுமான்  மரங்களால் மூடப்பட்டிருந்த மஹேந்திர மலையின் சிகரங்கள் ஒன்றின் மீது இறங்கினார்.

சிறகு வெட்டப்பட்ட மலை ஒன்று நீருக்குள் விழுவது போல் ஹனுமான் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன்  அந்த மலையின் இதமளிக்கும் நீரோடை ஒன்றில் குதித்தார்.

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் ஹனுமானுக்கு அருகில் சென்று அவரைச் சூழ்ந்து கொண்டனர். 

அவரைச் சுற்றி நின்றபோது அவர்கள் உற்சாகம் இன்னும் அதிகரித்தது. அவருக்கு அருகில் சென்றபோது ஹனுமான் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டதும் அந்த வானரர்கள் மகிழ்ச்சியால் பூரித்தனர். 

வானரர்களின் தலைவரான வாயுகுமாரருக்கு அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் அளித்து உபசரித்தனர்.

ஜாம்பவான் போன்ற தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரிய வானரர்களுக்கும், இளவரசன் அங்கதனுக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்தார் ஹனுமான். 

அவர்கள் இருவராலும் புகழப்பட்டு, தன் வானரத் தோழர்களால் வரவேற்கப்பட்ட, மிகுந்த வீரமும், திறமையும் கொண்ட ஹனுமான் தன் செய்தியைச் சுருக்கமாக ஒரே வரியில் சொன்னார்: "சீதை கண்டுபிடிக்கப்பட்டார், சீதை காணப்பட்டார்!"

மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் இருந்த ஹனுமான் வாலியின் மகனான அங்கதனின் கைகளைப் பற்றிக்கொண்டு, மகிழ்ச்சியளிக்கும் அந்த மஹேந்தர மலையில் அமர்ந்து கொண்டு அந்த வானர வீரர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஜனகரின் மகளான அந்த இளம் அரசகுமாரி கொடூரமான அரக்கப் பெண்களால் காவல் காக்கப்பட்டு அசோகவனத்தில் அமர்ந்திருந்த்தை நான் பார்த்தேன். அவருடைய மானத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படவில்லை. அவருடைய உடல் தூசி படிந்து, உண்ணா நோன்பால் இளைத்திருக்கிறது. அவர் மனத்தில் ராமரைக் காண வேண்டும் என்ற பெரிய ஆவல் இருக்கிறது."

ஹனுமான் கூறிய "கண்டுபிடிக்கப்பட்டார்" என்ற இனிமையான, பொருள் பொதிந்த வார்த்தையால் எல்லா வானரர்களும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

சக்தி வாய்ந்த அந்த வானரர்களில் சிலர் மகிழ்ச்சியில் நடனமாடினர், வேறு சிலர் உற்சாகக் கூச்சல்களை எழுப்பினர், இன்னும் சிலர் இடி கொண்ட மேகங்கள் போல் முழங்கினர், வேறு சிலர் குரங்குகளுக்கே உரித்தான சத்தங்களை எழுப்பினர், மற்றும் சிலர் தாங்கள் கேட்டிருந்த சில ஒலிகளை எழுப்பினர். 

அதிக உற்சாகம் கொண்ட சில வானர வீரர்கள் தங்கள் அழகிய வால்களை மேலே தூக்கி அவற்றை வட்டமாகச் சுழற்றினர். இணையற்ற சக்தி கொண்ட அந்த வானரர்கள் மலை உச்சியிலிருந்து இறங்கி வந்து யானையைப் போன்ற பெரிய உருவத்துடன் இருந்த ஹனுமானை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டனர்.

ஹனுமான் தன் செய்தியை வானரர்களிடம் சொல்லி முடித்ததும், அங்கதன் அவரிடம் பணிவுடன் கூறினான்:

"ஓ, உயர்ந்த வானரரே! அகண்ட சமுத்திரத்தைக் கடந்து சென்று திரும்பி வந்ததன் மூலம் சக்தியிலும் வீரத்திலும் உங்களுக்குச் சமமானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

"எத்தகைய எஜமான விசுவாசம் உங்களுக்கு! எத்தகைய சக்தி! எத்தகைய வீரம்! கடவுளின் அருளால் ராமரின் மனைவியான சீதையை நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள். இது மிகவும் நல்ல விஷயம். காகுஸ்தர் வழி வந்த ராமர் சீதையின் பிரிவானல் ஏற்பட்ட சோகத்திலிருந்து இனி விடுபடுவார்."

அந்த வானரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக, ஒரு அகலமான பாறையில் அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் ஆகியோரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். 

கடலைத் தாண்டியது பற்றியும், இலங்கை நகரத்தைப் பற்றியும், சீதை, ராவணன் இவர்களுடனான தன் சந்திப்புப் பற்றியும் ஹனுமான்  விரிவாகக் கூறப் போவதை எதிர்பார்த்து கைகளைக் கூப்பியபடி அவர்கள் அமைதியாகக் காத்திருந்தனர்.

வானுலகில் தேவர்கள் சூழ இந்திரன் அமர்ந்திருப்பது போல், உயர்ந்தவனான அங்கதன் வானரர்கள் சூழ அங்கே அமர்ந்திருந்தான். 

புகழ் மிகுந்த ஹனுமானும், தோள்களில் வளையங்கள் அணிந்திருந்த  அங்கதனும் அமர்ந்திருந்த அந்தப் பெரிய மலைச் சிகரம் பெரும் மகிழ்ச்சி, பெருமை இவற்றின் மையமாக இருந்தது.

சர்க்கம் 58 - இலங்கையில் நடந்தவற்றை விவரிக்கிறார் ஹனுமான்

மஹேந்திர மலையின் உயர்ந்த சிகரத்தில் ஹனுமானும் மற்ற சக்தி வாய்ந்த வானரர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். 

உடல் முழுவதும் மயிர்க் கூச்செரியும் உணர்வு ஏற்படுத்திய மகிழ்ச்சியுடன் எல்லா வானரர்களும் அமர்ந்திருந்தபோது, முழுமையான மனத்திருப்தியுடன் இருந்த ஹனுமானிடம், இலங்கையில் நிகழ்ந்தவை குறித்த கேள்விகளை ஜாம்பவான் கேட்டார்.

"சீதையை நீ எவ்வாறு பார்த்தாய்? அவர் நிலைமை எப்படி இருக்கிறது? கொடிய மனம் கொண்ட பத்துத் தலை ராவணன் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறான்? இவற்றையெல்லாம் நாங்கள் கேட்டு அறிய விரும்புகிறோம்.

"குரங்குகளின் தலைவனே! இந்த விஷயங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை எங்களுக்குச் சொல். நிலைமையை அறிந்த பிறகு அடுத்து என்ன செய்வதென்று நாம் முடிவு செய்வோம். 

"நாம் எவற்றைச் சொல்ல வேண்டும், நாம் எப்போது திரும்பிச் செல்ல வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் நீயே முடிவு செய். அறிவுக் கூர்மை படைத்த நீதான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும்."

அதற்குப் பிறகு, மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியால் உடல் முழுவதும் மயிர்க் கூர்ச்செறிந்தவராக இருந்த ஹனுமான் சீதையை மனதில் நினைத்து வணங்கி விட்டு இவ்வாறு பதிலளித்தார்:

கடலின் தென்கரைக்குச் செல்ல விரும்பி, இந்த மஹேந்திர மலையின் உச்சியிலிருந்து நான் வானத்தில் எழும்பியது உங்கள் முன்னிலையில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வழியில், தெய்வீக உருவம் கொண்ட மனம் கவரும் ஒரு மலைச் சிகரம் என் பாதையை மறைத்துக்கொண்டு என் முன் வந்தது. என் வழியை மறைத்ததால் அந்த மலையை ஒரு தடை என்று நான் கருதினேன். 

அந்த தெய்வீக மலையை நான் நெருங்கியபோது, அதை உடைத்துக் கொண்டு அதனூடே வழி ஏற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று என் மனதில் தீர்மானித்தேன்.

சூரியன் போல் ஒளிவிட்ட அந்த மலையின் சிகரம் என் வாலால் அடிக்கப்பட்டு சுக்குநூறாக உடைந்தது. 

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்! என் பணி என்ன என்பதை அறிந்தது போல் அந்த உயர்ந்த மலை "ஓ, குழந்தாய்!" என்று என்னிடம் இனிய வார்த்தை பேசியது - என் இதயத்தைக் கரைத்த அன்பான சொல் அது.

அந்த மலை கூறியது:
"கடலுக்குள் வசிக்கும் மைனாகம் என்னும் மலை என்று என்னை அறிவாயாக. நான் வாயுதேவரின் நண்பன். உன் தந்தையுடன் எனக்கிருக்கும் தொடர்பால் நான் உன் நலன் விரும்பி.

"குழந்தாய்! அந்நாட்களில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை தங்கள் விருப்பப்படி பூமியின் மீது பறந்து பலருக்கும் இழப்புக்களை ஏற்படுத்தின. 

"பகன் என்ற அசுரனைக் கொன்ற, தேவர்களின் பெருந்தலைவனான இந்திரன் மலைகளின் இந்தத் தீய பழக்கத்தை அறிந்ததும், தன் வஜ்ராயுத்ததால் அவற்றின் இறக்கைகளை வெட்டி விட்டான்.

"பிரியமானவனே! உன் தந்தை வாயுதேவர் உரிய காலத்தில் செய்த உதவியால் நான் மட்டும் இந்திரனின் கோபத்திலிருந்து தப்பினேன். என்னை ஆழ் கடலை நோக்கித் தள்ளிச் சென்று, கடலில் மூழ்க வைத்ததன் மூலம் உன் தந்தை என்னைக் காப்பாற்றினார்.

"எதிரிகளை அழிப்பவனே! ராமர் விஷயத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பதுதான் முறை. ஏனெனில், ராமர் சக்தியில் இந்திரனுக்கு ஒப்பானவர், அத்துடன் அறவழியில் நிலைபெற்றவர்களுக்குள் அவர் மிக உயர்ந்தவர்."

மகாத்மாவான அந்த மலையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், என் திட்டங்களை அவரிடம் கூறி, என் பணியைத் தொடர ஆயத்தமானேன். 

அது ஒரு பெரிய மலையாக இருந்தாலும், அது ஒரு மனித வடிவை எடுத்திருந்தது. உயர்ந்த ஆத்மாவான அந்த மைனாகம் நான்  என் பயணத்தைத் தொடர அனுமதித்தது. பிறகு அது தன் மனித வடிவத்தை விட்டு விட்டுக் கடலின் நடுவே ஒரு மலையாக அமர்ந்தது.

கடந்து செல்ல வேண்டிய தூரத்தைக் கருத்தில் கொண்டு நான் நீண்ட நேரம் வேகமாகப் பயணம் செய்தேன்.

அதற்குப் பிறகு நான் நாகர்களின் தெய்வீகத் தாயான சுரஸையைப் பார்த்தேன். நடுக்கடலில் என் முன் நின்ற அவள் கூறினாள்:

"ஓ, குரங்கே! தேவர்கள் உன்னை எனக்கு உணவாக அளித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உன்னைப் போன்ற ஒருவன் எனக்குக் கிடைத்திருக்கிறான். எனவே உன்னை நான் உண்ணப் போகிறேன்."

சுரஸையின் வார்த்தைகளைக் கேட்டதும், என் முகம் வெளிறியது. கைகளைக் கூப்பியபடி அவள் முன் நின்று, நான் இவ்வாறு கூறினேன்:

"தசரதரின் புதல்வரான ராமர் தன் தம்பி லக்ஷ்மணருடனும், மனைவி சீதையுடனும் தண்டகாரண்யத்தில் வசித்து வருகிறார். தீய மனம் கொண்ட ராவணனால் அவர் மனைவி சீதை கடத்திச் செல்லப்பட்டார். 

"ராமரின் கட்டளைப்படி சீதையிடம் நான் ஒரு தூதனாகச் செல்கிறேன். ராமரின் நாட்டில் வசிக்கும் ஒரு பிரஜையாக, ராமர் விஷயத்தில் தேவையான உதவிகளை நீ எனக்குச் செய்வதுதான் பொருத்தமானது.

"இல்லாவிட்டால், மிதிலை நாட்டு இளவரசியைப் பார்த்து விட்டு , அவரைப் பற்றிய செய்தியை ராமரிடம் தெரிவித்து விட்டு, நான் இங்கே திரும்ப வந்து உன் வாய்க்குள் நுழைகிறேன். இந்த விஷயத்தில் என் சத்தியமான வாக்கை நான் உனக்குக் கொடுக்கிறேன்."

என் வேண்டுகோளை நான் கூறியதும், தான் விரும்பும் வடிவத்தை எடுக்கக் கூடிய வல்லமை பெற்ற சுரஸை கூறினாள்:

"நீ என்னைத் தாண்டிச் செல்ல முடியாது. உன்னை உண்பதற்கான வரம் பெற்றவள் நான்."

அவள் இவ்வாறு கூறியதும், கண் சிமிட்டும் நேரத்துக்குள், பத்து யோஜனை உயரமும், அதில் பாதி உயரமும் கொண்ட ஒரு வடிவத்தை நான் எடுத்துக் கொண்டேன்.

உடனே அவள் தன் வாயைத் திறந்து அதை என் உடலின் அகலத்துக்குப் பெரிதாக்கினாள். அவளுடைய மிகப் பெரிய வாயைப் பார்த்தததும், உடனே நான் என் உடம்பின் அளவை மீண்டும் குறைத்துக் கொண்டேன். 

அந்தக் கணமே, என் உடலைக் கட்டை விரல் அளவுக்குக் குறுக்கிக் கொண்டு, உடனே அவள் வாய்க்குள் புகுந்து ஒரு கணத்தில் வெளியே வந்தான்.

அந்த தேவ மங்கை சுரஸை அப்போது தன் உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் இவ்வாறு கூறினாள்:

"ஓ, வீரனே! நீ செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ தொடர்ந்து பயணித்து உன் பணியை நிறைவு செய். உயர்ந்த வானரனே! விதேஹ நாட்டு இளவரசியை உயர்ந்த ராமருடன் இணைப்பதற்கான அனைத்தையும் செய். ஓ, வானரனே! நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக!"

பிறகு எல்லா உயிர்களும் என்னைப் பாராட்டின. நான் கருடனைப் போல் எளிதாக வானத்தில் பறந்தபடி என் பயணத்தைத் தொடர்ந்தேன். 

நான் பறந்து கொண்டிருந்தபோது, என் நிழல் தடுக்கப்படுவதையும், என் வேகம் குறைந்ததையும் உணர்ந்தேன். ஆனால் இதைச் செய்வது யார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு தடைப்படுத்தப்பட்டதும், என் வேகத்தைக் குறைத்தது யார் என்று பத்துத் திசைகளிலும் கண்களைச் சுழற்றிப் பார்த்தேன். ஆனால் என்னால் யாரையும் காண முடியவில்லை.

நான் நினைத்துப் பார்த்தேன்: 'என்னால் யாரையும் காண முடியவில்லை. வானம் தெளிவாக இருந்தும், நான் ஒரு தடையை உணர்கிறேன். இது எதனால் இருக்கலாம்?'

இது போன்ற சிந்தனைகள் என் மனதில் எழுந்தன. நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் பார்வை கீழே செல்லவில்லை. எனவே நீரில் மிதந்து கொண்டிருந்த ஒரு பயங்கரமான அரக்கப் பெண்ணை நான் கவனிக்கத் தவறி விட்டேன்.

அந்தப் பெரிய பிறவி அப்போது தன் தீய நோக்கங்கள் பற்றி என்னிடம் தன் தெளிவான, உரத்த குரலில் கூறினாள்:

"பருத்த உருவம் கொண்டவனே! நீ எங்கே செல்கிறாய்? பசியுடன் இருக்கும் எனக்கு நீ சிறந்த உணவாக இருக்கிறாய். கடந்த பல நாட்களாக உணவு கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பசியை நீதான் போக்க வேண்டும்."

"அவ்வாறே இருக்கட்டும்" என்று சொல்லி நான் என் உடலை அவள் வாயை விடப் பெரிதாக ஆக்கிக் கொண்டேன். 

என்னை உண்ண வேண்டும் என்ற அவளுடைய ஆவலால், அவளுடைய பயங்கரமான வாய் மேலும் மேலும் பெரிதாகியது. ஆனால் என் பலத்தைப் பற்றியோ, என் திட்டத்தைப் பற்றியோ அவள் ஏதும் அறியவில்லை.

கண நேரத்தில் என் உடலைச் சிறிதாக்கிக் கொண்டு, அவள் வாய்க்குள் புகுந்து, அவள் இதயத்தைப் பிய்த்து வெளியில் இழுத்துப் போட்டு விட்டு மீண்டும்  வானில் எழும்பினேன்.

இவ்வாறு அவள் இதயம் வெளியே இழுத்துப் போடப்பட்டதால், மலை போன்ற உருவம் கொண்ட, உப்புக்கடலில் வசித்து வந்த அந்தப் பிறவி, உயிரிழந்து தன் கைகளை விரித்தபடி கடலுக்குள் மூழ்கினாள்.

அப்போது வானத்தில் சென்று கொண்டிருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டேன்:

''சிம்ஹிகை என்னும் கொடிய அரக்கி ஹனுமானால் ஒரு கணத்தில் எளிதாகக் கொல்லப்பட்டாள்."

அவளைக் கொன்ற பிறகு, நான் கடந்து வந்த ஆபத்துகளைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தபடி வானில் நீண்ட தூரம் பறந்த பிறகு, இலங்கை நகரம் இருக்கும் கடலின் மறு கரையில்  இருந்த மலைகள் என் கண்ணுக்குப் புலப்பட்டன. 

சூரியன் மறைந்த பிறகு, யாராலும் காண முடியாத ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த சக்தி கொண்ட அரக்கர்களின் நகரத்துக்குள் நான் நுழைந்தேன்.

நான் அங்கே நுழைந்ததும், நெருப்பைப் போல் கனன்ற தலைமுடியுடன் இருந்த ஒரு பெண் பிரளய காலத்து இடியைப் போல் முழங்கிக் கொண்டு என்னை எதிர்ப்பது போல் எதிரே வந்து நின்றாள்.

என்னைக் கொல்வதற்காக அவள் என் எதிரே வந்தபோது, நான் என் இடது கை முஷ்டியால் அவளை ஒரு குத்து விட்டேன். இவ்வாறு முறியடிக்கப்பட்டதும், அவள் பணிந்து போய் என்னிடம் கூறினாள்:

"வீரனே! நான் பெண் உருவில் வந்திருக்கும் இலங்கையின் தேவதை. உன் வல்லமையால் நான் வெல்லப்பட்டேன்.அதனால், நீ எல்லா அரக்கர்களையும் வெல்லும் வல்லமை பெற்றவன்."

அதற்குப் பிறகு, விடியற்காலையில் நான் இலங்கைக்குள் நுழைந்தேன்.

இரவு முழுவதும் நான் ஜனகரின் மகளைத் தேடினேன். ராவணனின் அந்தப்புரத்துக்குள் கூட நுழைந்தேன், ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. 

ராவணனின் அரண்மனைக்குள் எங்கும் அவரைக் காணாமல் நான் கரை காண முடியாத துயரக் கடலுக்குள் விழுந்தேன்.

இவ்வாறு நான் ஆழ்ந்த சோகத்தில் இருந்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட அற்புதமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு தோட்டத்தைப் பார்த்தேன். அந்தச் சுவற்றைத் தாண்டிக் குதித்துப் பல மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தேன்.

அசோக மரங்கள் மிகுந்த அந்தத் தோட்டத்தின் நடுவே நான் ஒரு பெரிய சிம்ஸுபா மரத்தைப் பார்த்தேன். அதன் மீது ஏறி, தங்க நிறம் கொண்ட வாழை மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தைப் பார்த்தேன்.

அத்தனை சிரமங்களுக்குப் பிறகு, சிம்ஸுபா மரத்தில் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து, சற்றுத் தொலைவில் அந்த அழகிய சீதை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரை என்னால் காண முடிந்தது.

அவர் இளமையான உடல் வண்ணமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டிருந்தார். பயங்கரமான தோற்றம் கொண்ட, இறைச்சியையும், ரத்தத்தையும் புசிக்கும் அரக்கப் பெண்களால் அவர் சூழப்பட்டிருந்தார்.

பட்டினி கிடந்ததால் அவர் பொலிவிழந்தவராக இருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. அவர் தலைமுடியில் தூசு படர்ந்திருந்தது. அவர் மிகவும் பலவீனமான தோற்றம் கொண்டிருந்தார். ஒற்றை ஆடைஅணிந்திருந்தார். 

தன் கணவரின் நலம் பற்றியே எப்போதும் நினைத்தபடி, இடை விடாமல் தன்னை அச்சுறுத்திக் கொண்டிருந்த அரக்கிகளுக்கு நடுவே அவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமே அவருடைய ஒரே செயல்பாடு. அவருடைய கூந்தல் ஒற்றையாக முடியப்பட்டிருந்தது.  

குளிர்காலத் தாமரையைப் போல் அவர் தரையில் கிடந்தார். ராவணனிடமிருந்து தப்பித்துச் செல்ல எந்த வழியும் அறியாமல் அவர் விரக்தியில் இருந்தார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட அவர் முடிவு செய்து விட்டார். 

அந்த நிலையிலும் தன் நற்புகழுக்கு ஒரு களங்கமும் இல்லாமல் இருந்த அவரைப் பார்த்த நான் அனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு அந்த சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்திருந்தேன்.

அப்போது ராவணனின் அரண்மனையிலிருந்து வந்த கொலுசுகள் மற்றும் ஒட்டியாணங்களின் உரத்த ஒலியை நான் கேட்டேன். 

அதனால் அதிகம் கவலையடைந்த நான் என் உருவத்தைச் சிறிதாக்கிக் கொண்டு, இலைகள் மிகுந்த அதே சிம்ஸுபா மரத்தின் மேல் ஒரு பறவையைப் போல் அமர்ந்திருந்தேன்.

சீதை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அந்தச் சக்தி வாய்ந்த ராவணனும், அவன் மனைவிகளும் வருவதைப் பார்த்தேன். 

அரக்கர்களின் அரசன் வருவதைக் கண்டதும், சீதை தன் கால்களை ஒடுக்கிக் கொண்டும், கைகளை மார்பின் குறுக்கே வைத்தும் தன் உடலை மறைத்தபடி அமர்ந்து கொண்டார்.

தலையைக் கீழே குனிந்து கொண்டு, இந்தப் புறமும், அந்தப் புறமும் நோக்கிக் கொண்டு மிகவும் பரிதாபமான, அச்சுறுத்தப்பட்ட தோற்றத்துடன் விரக்தியடைந்த நிலையில் இருந்த அந்த அறநெறி வழுவாத பெண்மணியிடம், கீழான நடத்தை உள்ள பத்துத் தலைகள் கொண்ட ராவணன் இவ்வாறு கூறினான்:

"ஓ, சீதா! என்னை மதித்து நடந்து கொள், கர்வம் பிடித்தவளே! உன் கர்வத்தினால்தான் நீ என்னை ஏற்க மறுக்கிறாய். என் கோரிக்கையை ஏற்காமல் இதே நிலையில் நீ தொடர்ந்தால், இன்னும் இரண்டு மாதங்களில் நான் உன் ரத்தத்தைக் குடித்து விடுவேன்."

தீய எண்ணம் கொண்ட அரக்கனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதை மிகுந்த கோபம் கொண்டு அவனுக்குப் பொருத்தமான பதிலை இவ்வாறு கூறினார்:

"தீய எண்ணம் படைத்த அரக்கனே! இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த பெருமை மிக்க அரசர் தசரதரின் மருமகளும், அளவற்ற வல்லமை கொண்ட ராமரின் மனைவியுமான என்னைப் பார்த்து, கூறக் கூடாத இத்தகைய வார்த்தைகளைக் கூறிய உன் நாக்கு இன்னும் ஏன் அறுந்து விழவில்லை?

"வெட்கமற்ற பாவியே! என் கணவர் அருகில் இல்லாதபோது, அவர் பார்வையில் நீ இல்லாதபோது,  என்னைக் கடத்தி வந்த உன் வீரம் மிகப் பெருமை வாய்ந்ததாகத்தான் இருக்க  வேண்டும்!

"நீ எப்போதும் ராமருக்குச் சமமாக மாட்டாய். எப்போதும் உண்மையாக இருப்பவரும், எப்போதும் மரியாதைக்குரியவராக இருப்பவரும், போரில் எப்போதும் தோற்கடிக்கப்பட முடியாதவருமான ராமரின் வேலைக்காரனாக இருக்கக் கூடத் தகுதியற்றவன் நீ."

ஜனகரின் மகளின் இந்தக் காதைக் குத்தும் பேச்சைக் கேட்டு ராவணன் கோபத்தில் நெருப்பாகக் கனன்றான். 

ரத்தம் பாய்ந்த தன் இரண்டு கண்களையும் உருட்டியபடி, அவரைக் கொல்லும் எண்ணத்தில் வலது முஷ்டியை மடக்கி உயர்த்தினான். அப்போது பெண்கள் "ஐயோ! ஐயோ!" என்று அலற ஆரம்பித்தனர்.

ராவணனின் மனைவி, உயர்ந்தவளான மண்டோதரி, பெண்களுக்கு நடுவிலிருந்து முன்னே வந்து அவனுடைய கொலைச் செயலைத் தடுக்கும் விதத்தில் நின்றாள். 

காமத்தின் பிடியில் இருந்த அந்த ராவணனிடம் அவள் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினாள்:

"இந்திரனுக்கு நிகரானவரே! இந்தச் சீதையிடம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? ஓ, பிரபுவே! இங்கிருக்கும் தேவ, கந்தர்வ மற்றும் யக்ஷப் பெண்களைக் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே! இந்தச் சீதையிடம் நீங்கள் இன்னும் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?"

அந்தச் சக்தி வாய்ந்த ராவணன் பெண்களால் இவ்வாறு சமாதானப்படுத்தப்பட்டு உடனே தன் அரண்மனைக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டான். 

பத்துத் தலைகள் கொண்ட ராவணன் கிளம்பிச் சென்றதும், கோர முகமும், இரக்கமற்ற இதயமும் கொண்ட அரக்கப் பெண்கள் எல்லா விதமான கொடிய சொற்களாலும் சீதையை அச்சுறுத்தத் தொடங்கினர்.

விதேஹ நாட்டு இளவரசி அவர்கள் பேச்சையெல்லாம் துரும்பாக மதித்து, அவற்றைப் புறம் தள்ளினார். எனவே அவர்களுடைய கடுஞ்சொற்கள் அவரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தங்கள் அச்சுறுத்தும் பேச்சுக்கள் பயனற்றுப் போனதை உணர்ந்து, இறைச்சியை உண்டு வாழும் அந்த அரக்கிகள் ராவணனுக்கு இணங்கப் போவதில்லை என்ற தன் முடிவில் சீதை உறுதியாக இருக்கிறார் என்பதை அவனிடம் தெரிவித்தனர்.

பிறகு அவர்கள் அனைவரும் விரக்தியும், தோல்வி உணர்வும் மிகுந்தவர்களாக, சீதையைச் சூழ்ந்து கொண்டு தூங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, தன் பரிதாபமான நிலையிலும் தன் கணவரின் நன்மையைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சீதை துயரத்தால் மனம் நொந்து அழுதார்.

அரக்கிகளில் திரிஜடை என்பவள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, பிற அரக்கிகளிடம் இவ்வாறு பேச ஆரம்பித்தாள்:

"தசரதரின் மருமகளும், ஜனகரின் மகளும், கற்புடைய மனைவியுமான சீதையைத் தின்ன நினைப்பதற்கு பதில் உங்களையே தின்று கொள்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். அவர் எப்போதுமே அழிக்கப்பட முடியாதவர்.

"உண்மையில் இப்போதுதான் நான் ஒரு கனவு கண்டேன். அது நினைக்கவே மிகவும் பயங்கரமானது. அது என் உடலில் மயிர்க் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அது அரக்கர்களின் அழிவு பற்றியும், இந்தப் பெண்ணின் கணவரின் வெற்றியையும் பற்றியது. 

"யாரைப் பற்றி நான் இப்படி ஒரு கனவு கண்டேனோ அந்தத் துயருறும் பெண்ணான இவர் நிச்சயம் அவருடைய துன்பங்களிலிருந்து விடுபட்டு இணையற்ற மகழ்ச்சி நிலவும் நிலைக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படப் போகிறார். 

"ஜனகரின் மகளும், மிதிலை நாட்டு இளவரசியுமான சீதை தன்னை வணங்குபவர்களிடம் கனிவு காட்ட எப்போதுமே தயாராக இருக்கிறார்.அதில் எந்த ஐயமும் இல்லை."

இதைக் கேட்டதும் அந்த உயர்ந்த பெண்மணி தன் கணவர் வெற்றி பெறப் போவதை நினைத்து மகிழ்ந்து, "இது உண்மையாகுமானால் நான் உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன்" என்று அவர்களிடம் கூறினார்.

சீதை இருந்த துயமான நிலையைக் கண்ட நான், அது பற்றி என் மனதில் பொறுமையாக நினைத்துப் பார்த்தேன். என்னால் என் மனத்தைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது ஜனகரின் மகளுடன் உரையாடுவதற்கான ஒரு வழி என் மனதில் தோன்றியது. அதன்படி, இக்ஷ்வாகு குலத்து மன்னர்களின் மேன்மைகள் பற்றி நான் பேச ஆரம்பித்தேன்.

அந்த அரச குலம் பற்றிய என் புகழுரைகளைக் கேட்டதும், பெருகி வந்த கண்ணீர் தன் பார்வையை மறைத்த நிலையில், சீதை என்னைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டார்:

"ஓ, உயர்ந்த வானரமே! நீ யார்? நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? உன்னால் எப்படி இங்கே வர முடிந்தது? ராமர் மீது உனக்கு அன்பு ஏற்பட்டது எதனால்? இவற்றையெல்லாம் என்னிடம் கூறுவாயாக."

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் இவ்வாறு பதில் கூறினேன்:

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்கள் கணவருக்கு உதவ இப்போது அவருக்கு சுக்ரீவர் என்ற நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் மிகவும் சக்தியும், துணிவும் கொண்டவர். அவர் ஒரு பெரிய போர் வீரர். அவர் வானரர்களின் அரசர்.

"உங்களிடம் வந்திருக்கும் நான் அந்த அரசரின் அமைச்சர் ஹனுமான் என்று அறிவீர்களாக. பெரும் செயல்களைப் புரிந்த உங்கள் கணவர் ராமர் என்னை உங்களிடம் ஒரு தூதுவனாக அனுப்பி இருக்கிறார்.

"ஓ, புகழ் மிக்க பெண்மணியே! தசரதரின் புதல்வரான அந்த உயர்ந்த ராமர் என்னை அவரது தூதுவனாக அடையாளம் காண ஒரு முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

"எனவே, ஓ, உயர்ந்த பெண்மணியே! நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கட்டளையை நான் எதிர் நோக்கி இருக்கிறேன். உங்களை இங்கிருந்து ராமரும் லக்ஷ்மணரும் இருக்கும் இடத்துக்குத் தூக்கிச் செல்லட்டுமா? உங்கள் கட்டளை என்ன?" 

என் வார்த்தைகளைக் கேட்டதும், அவை பற்றிச் சிறிது நேரம் யோசித்த பின், ஜனகரின் மகளான சீதை கூறினார்:

"ராமரே இங்கு வந்து ராவணனை அழித்து விட்டு என்னை அழைத்துச் செல்லட்டும்."

களங்கம் கூற முடியாத புகழ் கொண்ட அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, ராமர் அடையாளம் காணக் கூடிய, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நான் ராமருக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒரு செய்தியைத் தெரிவிக்குமாறு அவரிடம் வேண்டினேன். 

அப்போது சீதை என்னைப் பார்த்துக் கூறினார்:

"உன் மீது ராமருக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆபரணத்தை உன்னிடம் கொடுக்கிறேன். இதை உன்னுடன் எடுத்துச் செல்."

இவ்வாறு சொல்லி விட்டு அந்த உயர்ந்த பெண்மணி என்னிடம் அரிதான ஒரு ஆபரணத்தைக் கொடுத்தார். ராமரிடம் எல்லாத் தகவல்களையும் கூறும்படி துயரத்துடன் கூறினார்.

அதன் பிறகு எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்து முடித்து விட்ட உணர்வுடன், நான் திரும்பிப் போகத் தீர்மானித்து. அந்த உயர்ந்த இளவரசியை வலம் வந்து வணங்கினேன்.

பிறகு, எல்லாவற்றையும் பற்றிச் சிந்தித்த பின் அவர் என்னிடம் மீண்டும் ஒரு முறை கூறினார்:

"ஹனுமான்! தயவு செய்து என்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் ராமரிடம் கூறுவாயாக. ராமர், லக்ஷ்மணர் என்ற இரண்டு வீர இளவரசர்களும் சுக்ரீவருடன் இணைந்து இங்கே உடனே கிளம்பி வரும் விதத்தில் அனைவரிடமும் பேசி ஏற்பாடு செய்.

"நான் இன்னும் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன். எனவே அவர்கள் இங்கே வரும் திட்டம் தாமதிக்கப்பட்டால், என்னைக் காக்க யாரும் இல்லாமல் நான் இறந்து போவேன். காகுஸ்தரின் வழி வந்த ராமரால் அப்புறம் என்னைப் பார்க்க முடியாமலேயே போகலாம்."

அந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் மிகவும் கோபமடைந்து என் அடுத்த செயலைத் தீர்மானித்தேன்.

அப்போது என் உடல் ஒரு மலையளவு வளர்ந்தது. போரை உருவாக்க முடிவு செய்து, இலங்கையின் அந்தத் தோட்டத்தை நான் அழிக்கத் துவங்கினேன்.

கோர முகம் கொண்ட அரக்கிகள் அப்போது விழித்துக் கொண்டு, அந்தத் தோட்டம் அழிக்கப்பட்டதையும், அங்கே வசித்து வந்த விலங்குகளும், பறவைகளும் மிகுந்த பயத்துடன் பறந்து ஓடுவதையும் பார்த்தனர்.

அவர்கள் ஆங்காங்கே குழுக்களாகக் கூடி என்னை நோக்கி வந்தனர். எனக்கு அருகில் வந்ததும், என்னைப் பார்த்து விட்டு ராவணனிடம் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் கூறினர்: "ஓ, சக்தி வாய்ந்த அரசரே! உங்கள் சக்தியை அறியாமல், ஒரு தீய குரங்கு யாரும் நெருங்க முடியாத இந்தத் தோட்டத்துக்குள் நுழைந்து இதை அழித்து விட்டது.

"ஓ, உயர்ந்த அரசரே! இந்தக் குரங்கு கொல்லப்பட வேண்டும்.எனவே உங்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ள இந்த அறிவற்ற ஜிவனை உடனே கொல்ல நீங்கள் உத்தரவிட வேண்டும்."

அவர்கள் கூறியதைக் கேட்டதும், அரக்கர்களின் அரசனான ராவணன், கிங்கரர்கள் என்று அழைக்கப்படும், சக்தி வாய்ந்த, அவனுக்குக் கீழ்ப்படிந்த, காவல் காக்கும் அரக்கர்களை என்னை எதிர்க்க அனுப்பினான்.

சூலங்கள், கம்பிகள் பதிக்கப்பட்ட கட்டைகள், இன்னும் பல ஆயுதங்கள் கொண்ட எண்பதாயிரம் பேர் கொண்ட சேனை, அந்த அசோக வனத்தில் என்னால் கண்டெடுக்கப்பட்ட ஒரு இரும்பு உலக்கையால் என்னால் அழிக்கப்பட்டது.

உயிருடன் தப்பிய ஒரு சிலர் ராவணனிடம் விரைந்து ஓடி அவர்கள் பெரிய சேனை அழிக்கப்பட்டதைத் தெரிவித்தனர். 

அப்போது என் மனதில் புதிதாக ஒரு எண்ணம் தோன்றியது. அந்த இடத்திலிருந்து கிளம்பி அருகிலிருந்த ஒரு பெரிய மாளிகைக்கு அருகில் சென்றேன். அங்கிருந்த அரக்கர்களை ஒரு தூணால் அடித்துக் கொன்று விட்டு நான் அந்தக் கட்டிடத்தைத் தரை மட்டமாக்கினேன்.

அதற்குப் பிறகு, பிரஹஸ்தனின் மகனான ஜம்புமாலி, பல பயங்கரமான தோற்றமுடைய அரக்கர்களுடன் என்னைத் தாக்குமாறு பணிக்கப்பட்டான். போரைப் போன்ற அந்த அரக்கனையும் அவனுடன் வந்தவர்களையும் ஒரு இரும்பு உலக்கையை ஆயுதமாகக் கொண்டு  தாக்கி நான் அழித்தேன்.

இதைக் கேள்வியுற்றதும், அரக்கர்களின் அரசனான ராவணன் அதற்குப் பிறகு அவன் அமைச்சர்களின் சக்தி வாய்ந்த புதல்வர்களைப் பல்வேறு பிரிவுகள் கொண்ட ஒரு பெரிய சேனையுடன் அனுப்பினான். அவர்கள் அனைவரையும் அதே இரும்பு உலக்கையால் நான் அழித்தேன்.

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தன் அமைச்சர்களின் புதல்வர்கள் இறந்ததைக் கேள்விப்பட்டதும்,  வீரம் மிகுந்த ஐந்து தளபதிகளை ராவணன் எனக்கு எதிராகப் போரிட அனுப்பினான். நான் அவர்களையும், அவர்களுடைய சேனைகளையும் அழித்தேன்.

பிறகு அந்தப் பத்துத் தலை ராவணன் என்னை எதிர்க்க, அவனுடைய மகனான  மிகுந்த சக்தி வாய்ந்த அக்ஷனைப் பல அரக்கர்கள் கொண்ட சேனையுடன் அனுப்பினான்.

மண்டோதரியின் மகனும், சிறந்த வகையில் பயிற்சி பெற்ற வீரனுமான அக்ஷன், என்னுடன் போரிடும் முயற்சியில், கையில் ஒரு கத்தியுடன் வானில் எழும்பினான். 

நான் சட்டென்று அவனை என்  கால்களுக்கிடையே பிடித்துக் கொண்டு அவன் கழுத்தை நெரித்து அவனைக் கொன்ற பின் அவன் உடலைப் பல முறை சுழற்றித் தூக்கி எறிந்தேன்.

அக்ஷகுமாரனின் மரணம் ராவணனைக் கோபத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது. சக்தி வாய்ந்தவனும், போர்த்தாகம் கொண்டவனுமான அவனுடைய இன்னொரு மகனான இந்திரஜித்தை என்னைத் தாக்குவதற்காக அனுப்பினான்.

அந்தச் சேனை முழுவதையும் அழித்து, அரக்கர்களில் முதன்மையானவனான அந்த இந்திரஜித்தின் உற்சாகத்துக்கு முடிவு கட்டுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

எனக்கு எதிராகப் போரிட, ஆணவம் கொண்ட பல அரக்க வீரர்களுடன் கூட  அந்தச் சக்தி வாய்ந்த போர் வீரனை மிகுந்த நம்பிக்கையுடன் ராவணன் அனுப்பியிருந்தான்.

அவன் சேனை என்னால் அழிக்கப்பட்டதைக் கண்ட, என் திறமை பற்றி அறியாத இந்திரஜித் கவலை அடைந்த மனநிலையில் என்னை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். 

பிறகு அங்கிருந்த மற்ற அரக்கர்கள் என்னைக் கயிறுகளால் கட்டி ராவணன் முன்பு என்னை இழுத்துச் சென்றனர்.

தீய மனம் படைத்த ராவணன் முன்பு நான் நின்றபோது நான் இலங்கைக்கு வந்ததும், அரக்கர்களைக் கொன்றதும் ஏனென்று என்னிடம் கேட்கும்படி தன் அமைச்சரைப் பணித்தான். 

அவை எல்லாம் சீதை தொடர்பாகச் செய்யப்பட்டவை என்று நான் அவனிடம் தெரிவித்தேன்.

நான் சொன்னேன்: "ஓ, பேரரசனே! நான் வாயுவின் குமாரனான ஹனுமான் என்ற வானரன். உன்னைக் காண வேண்டும் எனபதற்காக இங்கு அழைத்து வரப்படுவதற்கான ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை ராமரின் தூதன் என்றும், சுக்ரீவனின் தூதனென்றம் அறிந்து கொள்.

"நான் உனக்கு ராமர் அனுப்பி இருக்கும் செய்தியுடன் வந்திருக்கிறேன். சக்தி வாய்ந்த அரசர் சுக்ரீவர் உன் நலம் பற்றி விசாரிக்கும்படி என்னிடம் கூறினார். தர்மத்தின்படியானதும், மனிதர்களின் உலக வாழ்க்கைக்கு இசைவானதும், நியாயமானதும், பயனுள்ளதுமான பின் வரும் செய்தியை உன்னிடம் கூறும்படி சுக்ரீவர் என்னிடம் கூறியிள்ளார்.

"அவருடைய செய்தி இதுதான்: 'காடுகள் அடர்ந்த ரிஷ்யமுக பர்வதத்தின் அரசனான எனக்கும், போரில் திறமை காட்டுவதற்குப் பெயர் பெற்ற ராமருக்கும் இடையே ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. ராமர் என்னிடம் கூறினார்: 'ஓ, அரசனே! ஒரு அரக்கன் என் மனைவியைக் கடத்தி விட்டான். இந்தக் கடினமான சூழலில் உன்னால் முடிந்த அதிகபட்ச உதவியை  எனக்குச் செய்யும்படி கோருகிறேன்.'

'இதற்கு நான் சொன்னேன்: வாலியை அழிக்க எனக்கு உதவ வேண்டுமென்று உங்களைக் கோருகிறேன்.

'பெருமை மிகுந்த இளவரசரான ராமர் லக்ஷ்மணருடன் சேர்ந்து வாலியால் நாடு பறிக்கப்பட்ட சுக்ரீவனான என்னுடன் அக்னி சாட்சியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 

'வாலியை ஒரு அம்பினால் அழித்த பிறகு, வானரர்களின் தலைவனான என்னை மொத்த வானர இனத்துக்கும் அரசனாக அவர் நியமித்தார். இந்த விஷயத்தில் ராமருக்கு எங்களால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்ய வேண்டியது எங்கள் கடமை.

'அரசர்களுக்கான நடத்தை முறைகளின் விதிக்கப்பட்டுள்ளபடி கீழ்க்கண்ட செய்தி என்னால் உங்களுக்கு அனுப்பப்படுகிறது:

'உடனடியாக சீதையைக் கொண்டு வந்து ரகுவம்சத்தில் வந்தவரான ராமரிடம் விட்டு விடவும். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சிக்கு அவமானம் ஏற்படுத்தி உங்களை அழிக்கும் எதையும் வீரர்களான வானரர்கள் செய்ய மாட்டார்கள்.

'வானில் உள்ள தேவர்களால் கூட உதவிக்கு அழைக்கப்படும் வானரர்களின் வல்லமையை அறியாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?'

"சுக்ரீவரின் இந்தச் செய்தியை உனக்கு நான் முழுமையாகத் தெரிவித்து விட்டேன்."

அப்போது ராவணன் கோபத்தினால் சிவந்திருந்த தன் கண்களால் என்னை எரித்து விடுவது போல் மிகுந்த கோபத்துடன் என்னைப் பார்த்தான்.

கொடிய செயல்களைச் செய்யக் கூடிய அந்தத் தீய உள்ளம் கொண்ட ராவணன் என் வல்லமையை முழுவதும் உணர்ந்தவனாக என்னைக் கொல்லும்படி உத்தரவிட்டான்.

அவன் அருகில் உயர்ந்த மனம் படைத்த அவன் சகோதரர் விபீஷணர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த அரக்க அரசனிடம் எனக்கு ஆதரவாகப் பேசினார்.

அவர் சொன்னார்: "ஓ, அரக்கர் குலத்தின் மாபெரும் அரசனே! தயவு செய்து இந்த தண்டனையை நிறைவேற்றாதீர்கள். உங்கள் கட்டளை அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நீதிக்கு எதிராக உள்ளது என்பதால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

"தூதுவனைக் கொல்வதை அரசநீதி அனுமதிக்கவில்லை. தூதுவனிடமிருந்துதான் அரசியல் தொடர்பான தகவல்கள் அறியப்படுகின்றன.

"எல்லையற்ற வல்லமை கொண்ட அரசரே! எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு தூதன் கொல்லப்படுவதை அரசர்களுக்கான நடத்தை விதிகள் அனுமதிக்கவில்லை. அதிக பட்சமாக அவனுடைய உடல் உறுப்பு ஏதாவது சேதப்படுத்தப்படலாம்."

விபீஷணரால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும், அவர் கூறியது சரி என்ற ஏற்றுக்கொண்ட ராவணன் என் வாலுக்கு நெருப்பு வைக்குமாறு அவனுடைய ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அவன் கட்டளையை நிறைவேற்றும் வகையில் அரக்கர்கள் என் வாலில் கந்தல் துணிகளையும், சணல் பைகளையும் பல சுற்றுகள் சுற்றிக் கட்டினர்.

அதற்குப் பிறகு, கொடிய குணம் கொண்ட அந்த அரக்கர்கள் பொறுமை இழந்து என்னைக் கொள்ளிக்கட்டைகளாலும்,தங்கள் முஷ்டிகளாலும் அடித்தனர். பிறகு அவர்கள் என் வாலுக்குத் தீ வைத்தனர்.

அந்த அரக்கர்கள் என்னைப் பல கயிறுகளால் கட்டியிருந்தாலும், அந்த நகரத்தைப் பகல் வெளிச்சத்தில் பார்க்க விருப்பம் கொண்டிருந்ததால் நான் சிறிதும் துன்பமடையவில்லை.

அந்த அரக்க வீரர்கள் என்னை அந்த நகரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்று, நான் கட்டப்பட்டு என் வாலில் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெருக்களில் நின்று கூவினர்.

அப்போது நான் என் பெரிய உடலைச் சிறிதாகச் சுருக்கிக் கொண்டு, கயிறுகளின் தளையிலிருந்த என்னை விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் மீண்டும் என் இயல்பான உருவத்துக்கு வந்தேன்.

ஒரு இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு, அதனால் எல்லா அரக்கர்களையும் அடித்துக் கொன்று விட்டு, ஒரே தாவில் அந்த நுழைவாயிலின் உச்சி மீது ஏறிக் கொண்டேன்.

அந்த நகரத்தின் மாளிகைகள், அரங்குகள் ஆகியவற்றின்  உச்சிகளுக்குச் சுலபமாகத் தாவிச் சென்று அவற்றுக்குத் தீ வைத்தேன். அந்த நெருப்பு பிரளய காலத் தீயைப் போல் எரிந்தது. 

அவ்வாறு செய்த பிறகு, நான் இவ்வாறு நினைத்து வருந்தினேன்: "இந்த நகரம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு விட்டது. இந்த நெருப்புக்குத் தப்பிய கட்டிடம் எதுவும் இல்லை. எனவே ஜனகரின் மகளும் இந்த நெருப்பில் எரிந்து போயிருப்பார் என்பது அநேகமாக நிச்சயம். ஐயமின்றி, இலங்கையை எரிக்கும் முயற்சியில், நான் சீதையையும் எரித்திருக்க வேண்டும். நான் இப்போது ராமரின் முக்கிய நோக்கத்தைச் சிதைத்து விட்டேனே!"

அப்போது மிக அற்புதமான நிகழ்வுகளுள் ஒன்றைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்த சாரணர்களின் காதுக்கினய சொற்களைக் கேட்டேன். அவர்கள்  கூறினாரகள்: "ஜனகரின் மகள் மட்டும் எரிக்கப்படவில்லை."

சீதை நெருப்பில் எரிந்து போகவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து வந்த அந்த வியக்கத் தக்க செய்தியைக் கேட்டதும் என் கவலை நீங்கியது. 

கீழ்க்கண்ட சிந்தனையால் என் மகிழ்ச்சியும் உறுதியும் இன்னும் வலுவானதாக ஆகின.

'என் வாலில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தபோது, நான் வெப்பம் எதையும் உணரவில்லை. காற்று கூடக் குளிர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வீசிக் கொண்டிருந்தது.' 

இந்தச் சிந்தனையாலும், சாரணர்களின் வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதாலும், என் செயல்களின் நியாயத் தன்மையாலும் எனக்கு மனத் திருப்தி ஏற்பட்டது.

இவ்வாறு நினைத்த போதும், விதேஹ நாட்டு இளவரசியை மீண்டும் பார்க்கவும், கிளம்பிச் செல்ல அவர் அனுமதியைப் பெறவும் நான் அவர் இருந்த இடத்துக்குச் சென்றேன்.

பிறகு மீண்டும் அரிஷ்ட மலை மீது ஏறி, உங்களை  எல்லாம் காண வேண்டும் என்ற ஆவலில் இந்தக் கரைக்குப் பறந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். 

காற்று, சந்திரன், சூரியன், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் பயணம் செய்யும் பாதையான ஆகாயத்தின் வழியே பறந்து வந்து இங்கே உங்கள் முன் வந்திருக்கிறேன்.

ராமரின் வல்லமையாலும், உங்கள் அனைவரின் சக்தி, உற்சாகம் ஆகியவற்றாலும், சுக்ரீவர் நமக்கு இட்ட பணியை நான் செய்து முடித்து விட்டேன்.

நடந்தவை அனைத்தையும் சுருக்கமாக உங்களிடம் கூறி விட்டேன். மேலே என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது நாம் செய்வோம்.

சர்க்கம் 59 - செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனை

 நடந்தவற்றை விவரித்த பின் வாயுபுத்திரரான ஹனுமான் ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறினார்:

"சீதையின் தூய்மையைப் பார்த்த பின் என் மனத்தில் பெரும் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. ராமரின் நோக்கமும், சுக்ரீவரின் கடின முயற்சிகளும் இப்போது நிறைவேறி இருக்கின்றன. 

"தவத்தினால் மேன்மை அடைந்துள்ள ராவணன் இந்த உலகங்களைப் பாதுகாக்கும் வல்லமை பெற்றவன். அவற்றை அவனால் அழிக்கவும் முடியும். இந்தத் தவம்தான் சீதையைக் கடத்துகையில் ராவணன் அவரைத் தொட்டபோது அவனை எரிந்து போகாமல் காப்பாற்றியது. உத்தம பத்தினியான சீதையின் கற்பு, அவருடைய கோபத்தைத் தூண்டும் எவரையும் எந்த ஒரு நெருப்பாலும் செய்ய முடியாத அளவுக்கு எரித்து விடக் கூடியது.

"அந்த உயர்ந்த பெண்மணி, தீய மனம் படைத்த ராவணனின் அரண்மனை நந்தவனத்தில் உள்ள அசோக வனத்தில் ஒரு சிம்ஸுபா மரரத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட நிலையில் பெரும் துயத்தில் உள்ளார். 

"சந்திரன் மேகங்களால் சூழப்பட்டிருப்பது போல், அந்த வைதேஹி அரக்கப் பெண்களால் சூழப்பட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பத்தினி தன் சக்தியால், போதை கொண்டிருக்கும் ராவணனை லட்சியம் செய்யவில்லை.

"இந்திராணி இந்திரனையே நினைத்துக் கொண்டிருப்பதைப் போல், தூய்மையே உருவானவரான வைதேஹி ராமரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ராமரிடம் மட்டும்தான் அன்பும், நம்பிக்கையும் உள்ளன.

"சீதை (தான் தூக்கிச் செல்லப்பட்டபோது அணிந்திருந்த) அதே ஆடையைத்தான் உடுத்திக் கொண்டிருக்கிறார். அவர் உடலில் தூசி படிந்து, அவர் துயரத்தினால் இளைத்திருக்கிறார். தன் கணவரின் நலம் பற்றிய ஒரே சிந்தனையுடன் மட்டும்தான் அவர் இருக்கிறார்.

"இலங்கையில் இருந்த அந்தத் தோட்டத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட அரக்கிகள் அவரை அச்சுறுத்த முயல்வதை நான் என் கண்களால் பார்த்தேன்.

"அந்த அழகிய பெண்மணி எப்போதும் தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையே தன் கடமையாகக் கருதுகிறார். 

"அவருடைய கூந்தில் ஒற்றையாக முடியப் பட்டிருக்கிறது. அவர் தரையில் படுத்திருக்கிறார். அவருடைய நிலை குளிர்காலத் தாமரை மலரைப் போல் இருக்கிறது.

"ராவணனின் பிடியிலிருந்து தப்பும் வழி அறியாததால் அவர் ஏமாற்றத்தின் உச்சத்துக்குச் சென்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தார்.

"ஆயினும் நான் மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு ஆறுதல் கூறி, நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தினேன். 

"அதற்குப் பிறகு அவர் என்னிடம் கூறியவற்றை நான் உங்களிடம் முழுமையாகத் தெரிவித்திருக்கிறேன்.

"ராமருக்கும் சுக்ரீவருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றி அறிந்து அவர் மிகவும் திருப்தி அடைந்திருக்கிறார். பெரும் உறுதி படைத்தவரும், உயர்ந்த நடத்தை உள்ளவருமான ராமர்தான் ராவணனை அழிக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்பது அவருடைய உறுதியான எண்ணம்.

"தன் கணவரின் கௌரவம் பற்றி அவர் கொண்டுள்ள இந்த அக்கறைதான் குற்றம் புரிந்த ராவணனைத் தன் கற்பின் சக்தியால் அழிக்காமல் அவரைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

"இயல்பாகவே மெலிந்திருக்கும் அவர் உடல் கணவரிடமிருந்து பிரிந்திருப்பதால் பிரதமையன்று கற்ற கல்வியைப் போல் பலவீனமானதாக ஆக்கி இருக்கிறது. 

"உயர்ந்த பெண்மணியான சீதை இவ்விதமாக சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். எனவே அவரை இந்த நிலையிலிருந்து மீட்பதற்கான அனைத்தும் செய்யப்பட வேண்டும்."

சர்க்கம் 60 - அங்கதன் பேச்சு

ஹனுமான் கூறியதைக் கேட்டதும் வாலியின் புதல்வனான அங்கதன் கூறினான்:

"ஹனுமான் தான் சென்று வந்தது பற்றிய எல்லா விவரங்களையும் உங்களிடம் கூறி விட்டார். 

"ஜாம்பவான் முதலான உயர்ந்த வானரர்களிடம் அனுமதி பெற்று ராமர், லக்ஷ்மணர் என்ற அந்த இரண்டு இளவரசர்களையும் சீதையுடன் ஒன்று சேர்க்கும் பணியில் நாம் ஈடுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

"இலங்கை நகரத்தை அந்த அரக்கர் சேனைகளுடனும், ராவணனுடனும் சேர்த்து அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரில் துணிவு காட்டுவதில் பெயர் பெற்றவர்களும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறமையானவர்களூமான சக்தி வாய்ந்த வானரர்களான நீங்களும் உடனிருந்தால் இன்னும் என்ன வேண்டும்?

"நான் ராவணனை அவன் சேனைகளுடனும் அவன் ஆதரவாளர்கள், புதல்வர்கள், சகோதரர்கள் ஆகியோருடனும் போரில் அழித்து விடுவேன்.  பிரம்மா, இந்திரன், ருத்ரன், வாயு, வருணன் ஆகியோரின் அஸ்திரங்களையும், இந்திரஜித்தின் கண்ணுக்குப் புலப்படாத அஸ்திரங்களையும் என்னால் முறியடிக்க முடியும்.

"ராவணனுடன் போரிட நீங்கள் என்னை அனுமதித்தால், என்னால் எல்லா அரக்கர்களையும் கொன்று விட முடியும். போரில் எதிரிகளை நோக்கி நான் வீசும் தொடர்ச்சியான பாறை மழை தேவர்களைக் கூட அழித்து விடும். அரக்கர்கள் மீது அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை.

"கடல் நிரம்பி வழிந்து நீர் கரையில் ஓடலாம், மந்தர மலை அதிரலாம், ஆனால் ஜாம்பவானைப் போரில் எதிரிகளால் அசைக்க முடியாது. முக்கியமான எல்லா அரக்க வீரர்களையும் அழிக்க வாயுவின் வீரப் புதல்வரான ஹனுமான் ஒருவரே போதும். 

"பனசன், உயர்ந்தவனான நீலன் ஆகியோரின் தாக்குதலில் மந்தர மலையே தூள் தூளாக உடைந்து விடும் என்றால் அரக்கர்களைப் பற்றிக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

"தேவர்கள், அசுரர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், பட்சிகள் ஆகியோரில், மைந்தன், த்விவிதன் ஆகியோரைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய ஒருவரைக் குறிப்பிடுங்கள். 

"அஸ்வினி தேவர்களின் புதல்வர்களான இந்த இரண்டு உயர்ந்த வானரர்களும் பெரும் சக்தி கொண்டவர்கள். அவர்களைப் போரில் எதிர்கொள்ளக் கூடிய எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

"இவர்கள் இருவரும் பிரம்மாவிடம் வரம் பெற்ற பெருமை கொண்டவர்கள், சாகாவரம் அளிக்கும் அமிர்தத்தை அருந்தியவர்கள், வானரர்களுக்குள் முன்னிலை வகிப்பவர்கள்.

"முன்னொரு காலத்தில், எல்லா உலகங்களுக்கும் தந்தையான பிரம்மா அஸ்வினி தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி அவர்களுடைய புதல்வர்கள் யாராலும் கொல்லப்பட மாட்டார்கள் என்ற அரிய வரத்தை அவர்களுக்கு அருளினார். 

"இந்த வரத்தின் சக்தியின் காரணமாக, இவர்கள் தேவர்களுடன் போரிட்டு அவர்களின் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சாகாவரம் அளிக்கும் பானமான அமிர்தத்தை அருந்தினர்.

"மற்ற எல்லா வானரர்களையும் விட்டு விடுவோம். எதிர்க்கப்பட முடியாத இந்த இரண்டு வானரர்களால் மட்டுமே தனியாகவே இலங்கையை அதன் எல்லா யானை, குதிரை, தேர்ப் படைகளுடன் சேர்த்து அழிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

"ஓ, வானரர்களே! சீதையைக் கண்டு பிடித்து விட்டதால், அவரை நம்முடன் அழைத்துச் செல்லாமல் நாம் ராமர் முன் போய் நிற்பது முறையல்ல. வீரத்துக்குப் பெயர் பெற்ற நீங்கள் 'சீதையை நாங்கள் கண்டு விட்டோம், ஆனால் அவரை எங்களுடன் அழைத்து வர முடியவில்லை' என்று அவரிடம் தெரிவிப்பது முறையாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.

"ஓ, உயர்ந்த வானரர்களே! எல்லா உலகங்களிலும் வசிக்கும் எல்லா தேவர்கள் மற்றும் அசுரர்களில் நம்மைப் போல் தாவிச் செல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. வீரத்திலும், தாக்கும் சக்தியிலும் கூட நம்முடன் ஒப்பிடக் கூடியவர்கள் எவரும் இல்லை.

"அரக்கர்களின் தலைவர்கள் ஹனுமானால் இவ்வாறு கொல்லப்பட்ட பிறகு, சீதையை நம்முடன் அழைத்துக் கொண்டுதான் நாம் ராமரிடம் செல்ல வேண்டும். இதை விடப் பொருத்தமான செயல் வேறென்ன இருக்க முடியும்?

எனவே, இந்தத் தருணத்தில் நாம் செய்ய வேண்டியது இதைத்தான்."

விவேகத்துக்கும் சிறப்பாக முடிவெடுத்துச் செயல்படுவதற்கும் பெயர் பெற்ற, வானரர்களின் தலைவரான ஜாம்பவான் அங்கதனின் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்  அப்போது ஒரு முக்கியமான ஆலோசனையை அவர் கூறினார்.

அவர் சொன்னார்: "இளவரசரே! நீங்கள் கூறியது நம்மால் செய்ய இயலாலதல்ல. ஆயினும், நம் நோக்கம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த விஷயத்தில் ராமரின் எண்ணம் என்ன என்று அறிந்து கொண்ட பிறகு நாம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும்."

சர்க்கம் 61 - மதுவனம் அழிக்கப்பட்டது!

உயர்ந்த வானரத் தலைவர்களான அங்கதன், ஹனுமான் முதலியோர் ஜாம்பவானின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.  

மந்தர மலை போலவும், மேரு மலை போலவும் பிரம்மாண்டமான உருவம் கொண்டிருந்த, தடத்தில் செல்லும் யானைகள் போல் தோற்றமளித்த அந்த வானரர்கள் ராமரின் புகழுக்கும், தங்கள் நோக்கத்துக்கும் உகந்த வகையில் செய்யக் கூடியது எதுவாக இருக்கும் என்று தங்களுக்குள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தாங்கள் செய்தவை பற்றிப் பெருமை கொண்டிருந்த அவர்கள் தங்கள் நோக்கம் வெற்றியடைந்ததை அறிவிப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். 

ராமரிடம் நன்றி கொண்டவர்காளாகவும், தங்கள் உற்சாகத்தால் உந்தப்பட்டவர்களாகவும், எல்லா வானரர்களும் வலிமை, திறமை மற்றும் அறிவுக்காகப் பெயர் பெற்ற ஹனுமானை முன்னே நிறுத்தி அவர் பின்னே நடந்து சென்றனர். அவர்கள் எல்லா உயிரினங்களாலும் புகழப்பட்டனர்.

பிறகு அவர்கள் மஹேந்திர மலையிலிருந்து, தங்கள் பெரிய உடல்களால் வானத்தை மறைத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் விரைந்து சென்றனர். 

அந்தரத்தில் தாவிக் குதித்துச் சென்று பழகிய வானரர்கள் தேவர்களின் தோட்டமான நந்தவனத்துக்கு நிகரான, மரங்கள் நிறைந்த ஒரு காட்டுத் தோட்டத்தைச் சென்றடைந்தனர்.

சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அந்த கண்ணுக்கினிய காட்டுத் தோட்டம் சுக்ரீவனின் மதுவனம் என்று அழைக்கப்பட்டது. யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அது நன்றாகப் பாதுகாப்பட்டு வந்தது, அது சுக்ரீவனின் மாமனான ததிமுகன் என்ற  திறமை வாய்ந்த வானரத் தலைவனின் பொறுப்பில் இருந்தது.

கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் அந்த வானரர்கள் வானர அரசனுக்கு மிகவும் விருப்பமான அந்தக் காட்டில் கூடினர். மதுவனத்தைக் கண்டதும் தேன் நிறம் கொண்ட அந்த வானரர்கள் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து  அங்கே இருக்கும் தேனை அருந்த அனுமதிக்குமாறு அங்கதனிடம் கேட்டனர்.

ஜாம்பவான் போன்ற மூத்தவர்களின் ஒப்புதலைப் பெற்றுத் தேனை அருந்த வானரர்களுக்கு அனுமதி அளித்தான் அங்கதன். 

ஏற்கெனவே உற்சாக மனநிலையில் இருந்த அந்த வானரர்கள், இந்த அனுமதி கிடைத்ததும் இன்னும் அதிக உற்சாகம் கொண்டனர். சிலர்  முரட்டுத்தனமாக நடனம் ஆடவும் தொடங்கினர்.

சிலர் பாடினர், சிலர் ஆடினர், சிலர் சிரித்தனர், சிலர் தாவிக் குதித்தனர், சிலர் அங்குமிங்கும் ஓடினர், சிலர் அதிவேகமாக ஓடினர், சிலர் இனம் காண முடியாத வார்த்தைகளை, உளறுவது போல் பேசினர்.

சிலர் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர், சிலர் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினர், சிலர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர், சிலர் கூடி விளையாடினர்.

சிரித்துக் கொண்டிருந்த ஒரு வானரர் பாடிக் கொண்டிருந்த வானரர் ஒருவருக்கு அருகில் சென்றார். பாடிக் கொண்டிருந்த ஒரு வானரர் அழுது கொண்டிருந்த ஒரு வானரருக்கு அருகே சென்றார். 

அழுது கொண்டிருந்த ஒரு வானரரின் அருகே இன்னொரு வானரர் வந்து அவரைப் பிடித்து உலுக்கினார். பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வானரருக்கு தண்டனை கொடுப்பது போல் இன்னொரு வானரர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.

தேனைக் குடித்ததும் அந்த வானரர் கூட்டம் பெரும் போதையில் ஆழ்ந்தது. அந்தக் கூட்டதில் ஒருவர் கூட போதை அடையாமல் இல்லை. ஆயினும் ஒருவர் கூட மது அருந்தியதில் திருப்தி கொள்ளவில்லை. 

அப்போது, அந்தத் தோட்டத்தைப் பராமரிப்பவனான ததிமுகன், பூக்கள் மிகுந்த மரங்கள் அழிக்கப்பட்டதையும், அந்தத் தோட்டமே சிதைக்கப்பட்டதையும் பார்த்து அந்த வானரர்களைக் கடிந்து கொண்டான்.

அந்தத் தோட்டத்தின் பாதுகாவலனான வயது முதிர்ந்த, சக்தி வாய்ந்த அந்த வானரன் போதை அடைந்திருந்த, சிந்தனையையே இழந்திருந்த வானரர்களால் பல விதங்களிலும் அவமதிக்கப்பட்டான். தோட்டத்தை அவர்களிடமிருந்து பதுகாக்க அவன் வேறு வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவர்களில் சிலரைத் தன் வாயில் வந்த கடிய சொற்களால் எல்லாம் வைதான். சில பேரைக் காலால் உதைத்தான். சிலருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டான். வேறு சிலரிடம் நல்ல விதமாகப் பேசிப் புரிய வைக்க முயன்றான்.

தோட்டத்தின் பாதுகாவலனான ததிமுகன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் அவர்களைக் கடிந்து பேசி அவர்களை எதிர்த்து நின்றபோது, தாங்கள் செய்வது தவறு என்பதையே உணராத வானரர்கள் மொத்தமாக அவனைச் சூழ்ந்து கொண்டு, போதையில் அவன் மீது விழுந்து அவனை அங்கும் இங்கும் இழுத்துச் சென்றனர்.

போதையில் இருந்த வானரர்கள் அவனை நகங்களால் கீறினர். பல்லால் கடித்தனர். அந்தக் காட்டுத் தோட்டம் முழுவதையும் தங்கள் கைகளாலும், கால்களாலும் தொடர்ந்து நாசம் செய்தனர். 

சர்க்கம் 62 - தோட்டக் காவலர்கள் தாக்கப்படுதல்

வானரர்களின் தலைவர்களில் ஒருவரான ஹனுமான் வானரர்களிடம் கூறினார்:

"வானரர்களே! எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நீங்கள் தேனை அருந்துங்கள். உங்களைத் தடுக்க வருபவர்களை விரட்டியடிக்க நான் இருக்கிறேன்."

எல்லா வானரச் சேனைகளுக்கும் தலைவனான இளவரசன் அங்கதன் ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு உத்தரவிட்டான்:

"வானரர்கள் மதுவை (தேனை) அருந்தட்டும். நம் பயணத்தின் நோக்கத்தை வெற்றியடையச் செய்த ஹனுமானின் வார்த்தைகள், அவை முறையற்றதாக இருந்தாலும், பின்பற்றப்பட வேண்டும். அப்படி இருக்கும்போது முறையான செயல்பாட்டின் வரம்புக்குள் இருக்கும் இந்த விஷயம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன?"

அங்கதனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவனை வாழ்த்தினர். 

உற்சாகமூட்டிய வார்த்தைகளைக் கூறியதற்காக அங்கதனைப் புகழ்ந்த அந்த வானரர்கள் கரையைக் கடந்து ஓடும் நதியைப் போல் தேன் அதிகம் இருந்த தோட்டத்தின் பகுதிகளை நோக்கி விரைந்தனர்.

மிதிலை நாட்டு இளவரசியைக் கண்டு பிடித்து விட்டதால் அளவு கடந்த மகிழ்ச்சியிலும், தாங்கள் விரும்பியபடி தேனை அருந்த அனுமதி கிடைத்து விட்ட உற்சாகத்திலும், அவர்கள் தோட்டத்தின் காவலர்கள் தடுத்ததை மீறி அந்தக் காட்டுத் தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்தனர்.

தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்கு அவர்கள் தேனை அருந்தி, அங்கிருந்த சுவையான பழங்களையும் உண்டனர்.

அந்த மதுவனத்தின் மீது மிகவும் விருப்பம் கொண்ட காவலர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வானரர்களால் தாக்கப்பட்டனர்.

வானரர்கள் பெரிய பாத்திரங்கள் அளவுக்கு இருந்த தேன்கூடுகளை எடுத்துக் கொண்டு அவற்றிலிருந்த தேனைப் பருகினர். சிலர் காலியான தேன்கூடுகளைக் காவலர்கள் மீது வீசி அவற்றை உடைத்தனர்.

தேனைப் போன்ற உடல் நிறம் கொண்ட குரங்குகள், தாங்கள் மனத் திருப்தி அடையும் அளவுக்குத் தேனைக் குடித்த பின், மிகுந்தவற்றைக் கீழே கொட்டி வீணடித்தனர். குடிபோதையில் தேன்கூடுகளை ஒருவர் மீது ஒருவர் வீசத் தொடங்கினர்.

அதிக போதை கொண்டிருந்த அவர்களில் சிலர் மரங்களின் கிளைகளைப் பிடித்துக் கொண்டு கீழே விழாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். சிலர் மரங்களுக்குக் கீழே இலைகளைப் பரப்பி அவற்றின் மீது படுத்துக் கொண்டனர்.

போதை கொண்ட சில வானரர்கள் தரையில் உருண்டனர். தங்கள் சிந்திக்கும் திறனை இழந்து விட்ட சிலர் போதையால் ஏற்பட்ட உற்சாகத்தில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ள ஆரம்பித்தனர்.

தேன் குடித்த மயக்கத்தினால் சிலர் உறங்கினர், சிலர் நடனமாடினர், சிலர் உரத்த குரலில் கூச்சல் எழுப்பினர். சிலர் ஒன்றைச் செய்து விட்டு வேறொன்றைச் செய்ததாகப் பாசாங்கு செய்தனர்.

சிலர் குறும்பகள் செய்து விட்டுச் சிரித்தனர். சிலர் கத்தினர். போதை தெளிந்த சிலர் எழுந்து கொண்டனர்.

அந்தக் காட்டுத் தோட்டத்தில் இருந்த தேன் வளங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்த ததிமுகனின் எல்லா வேலையாட்களும் அந்தச் சக்தி வாய்ந்த வானரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் அந்தத் தோட்டத்தின் பலவேறு மூலைகளுக்கும் ஓடினர்.

முழங்கால்கள் பிடித்து இழுக்கப்பட்டு, வானரர்களின் அலங்கோலமான நிலைகளைக் காணும் நிலைக்குத் தள்ளப்பட்ட ததிமுகனின் ஆட்கள்  தங்கள் எஜமானனிடம் சென்று இவ்வாறு புகார் செய்தனர்:

"ஹனுமானின் அனுமதியோடு வானரர்கள் மதுவனத்தை அழித்து விட்டனர். அவர்கள் எங்கள் முழங்கால்களைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளித் தங்கள் பின்புறங்களை எங்களுக்குக் காட்டினர்."

வானரர்களின் இந்த அழிவுச் செயல்கள் குறித்து தோட்டங்களின் பாதுகாவலன் ததிமுகன் மிகவும் கோபமடைந்தாலும், அவன் தன் வானர ஊழியர்களிடம் இவ்வறு கூறி அவர்களைச் சமாதானம் செய்தான்:

"வாருங்கள். நாம் போய், தேனைக் குடித்த போதையுடனும், தங்கள் பலத்தைக் குறித்த கர்வத்தால் ஏற்பட்ட போதையுடனும் இருக்கும் அந்த வானரர்களை விரட்டி அடிப்போம்."

ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டதும், வீரம் மிகுந்த அந்த வானரக் காவலர்கள் அவனுடன் மீண்டும் மதுவனத்துக்கு விரைந்து சென்றனர். வழியில் ததிமுகன் ஒரு மரத்தைப் பிடுங்கி அதைத் தூக்கிக் காட்டியபடியே ஓடினான். அவன் ஆட்கள் அவனைப் பின் தொடர்ந்து ஓடினர்.

ததிமுகனும் அவன் ஆட்களும் மிகவும் கோபம் கொண்டவர்களாக கைகளில் மரங்களையும், மலைப்பாறைகளையும் தூக்கிக் கொண்டு வீரமிக்க வானர சேனையை நெருங்கினர்.

தங்கள் எஜமானனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, தைரியம் மிகுந்த காவல் வீரர்கள் பனை மரம், பிற மரங்கள், மற்றும் பாறைகளை ஆயுதமாகக் கொண்டு வேகமாக ஓடினர்.

பிறகு பல காவலர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு தங்கள் வலிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக, வானரர்களையும் அவர்களின் தலைவர்களையும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

ததிமுகன் கோபமாக இருப்பதைப் பார்த்த ஹனுமான் முதலான வானரத் தலைவர்கள் விரைந்து அவனிடம் சென்றனர்.

மிகுந்த வலிமையும், திறமையும் கொண்ட மதிப்பு நிறைந்த ததிமுகன் கையில் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டு அவர்களைத் தாக்க வந்து கொண்டிருந்தான். 

அங்கதன் கோபத்துடன் ததிமுகனை நெருங்கி அவனைத் தன் இரண்டு கைகளாலும் அடித்தான். போதையின் உச்சத்தில் இருந்த அங்கதன் தன் எதிரில் நிற்பவன் தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரியவன் என்பதை உணரத் தவறியவனாக, ததிமுகனைக் கீழே தள்ளி அவனைத் தன் கால்களால் உதைத்தான்.

அந்தச் சிறந்த வானரன் தோள்களிலும், தொடைகளிலும், கால்களிலும் அடிபட்டு  உடல் முழுதும் ரத்தம் வழிய சிறிது நேரம் மூர்ச்சையற்று இருந்தான்.

சுக்ரீவனின் மாமனான ததிமுகன் விரைவிலேயே எழுந்து நின்று, இன்னும் அதிகக் கோபம் கொண்டவனாக தேன் குடித்த போதையில் இருந்த குரங்குகளை ஒரு தடியால் அடித்து விரட்டினான். 

வானரர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ததிமுகன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்குச் சென்று தன் ஆட்களிடம் கூறினான்:

"இவர்கள் இங்கேயே இருக்கட்டும். ராமருடன் இருக்கும் நம் எஜமானர் சுக்ரீவரிடம் நாம் செல்வோம். இந்த அழிவுச் செயல்கள் அனைத்துக்கும் முழுக் காரணம் அங்கதன்தான் என்று அரசர் சுக்ரீவரிடம் நான் சொல்கிறேன். 

"அவர் உடனே கோபமடைந்து இந்த வானரர்களைக் கொன்று விடுவார். ஏனெனில் தேவர்களால் கூட நுழைய முடியாத இந்த மதுவனம் சுக்ரீவருக்கு அவர் முன்னோர் வழி வந்த சொத்து. இது அவருக்கு மிகவும் பிரியமானது.

"அதனால் இந்த வானரர்களுக்கு அழிவு நிச்சயம், இந்தத் தேன் பித்துக் கொண்ட வானரர்களை சுக்ரீவர் அடித்துக் கொன்று விடுவார்.

"அரசரின் ஆணையை மீறிய இந்தத் தீய பிறவிகள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான். பொறுக்க முடியாத நம் கோபத்துக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்."

இதைத் தன் ஆட்களிடம் தெரிவித்த பிறகு, சக்தி வாய்ந்த ததிமுகன் அவர்களுடன் சுக்ரீவனிடம் விரைந்து சென்றான். உயர்ந்த வானரத் தலைவரும், சூரியனின் புதல்வனுனான விவேகமுள்ள சுக்ரீவன் இருந்த இடத்தை அவன் கண நேரத்தில் அடைந்தான்.

ராமருடனும், லக்ஷ்மணருடனும் சுக்ரீவனைப் பார்த்ததும் ததிமுகன் வானிலிருந்து இறங்கினான். சக்தி வாய்ந்த ததிமுகன் தன் ஆட்களுடன் சுக்ரீவன் முன்பு சோகமான முகத்துடன் நின்று அவன் கால்களில் விழுந்து வணங்கி விட்டு அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான்.

சர்க்கம் 63 - மதுவனம் அழிக்கப்பட்ட 
செய்தியைக் கூறுதல்

தன் காலடியில் தலையைப் பதித்தபடி கிடந்த ததிமுகனைப் பார்த்து, சுக்ரீவன் அவனிடம் கவலையுடன் கேட்டான்.

"ஓ, வீரனே! எழுந்து நில். ஏன் என் காலில் விழுகிறாய்? எல்லாவற்றையும் என்னிடம் வெளிப்படையாகச் சொல். உனக்குத் தேவையான பாதுகாப்புக் கிடைக்கும்."

ததிமுகன் எழுந்து நின்று சுக்ரீவனிடம் சொன்னான்.

"அரசரே! வானரர்களின் அரசர்கள் மதுவனத்தில் யாரையும் நுழைய அனுமதித்ததில்லை. வாலி எப்போதும் அனுமதித்ததில்லை, நீங்களும் அனுமதித்ததில்லை. 

"அப்படி இருந்தும், இந்த வானரச் சேனைகள் இப்போது அந்த வனத்துக்குள் நுழைந்து எல்லாவற்றையும் உண்டும் அழித்தும் விட்டன.

"தோட்டக் காவலர்கள் அவர்களைத் தடுத்த போதும், காவலர்களைப் பொருட்படுத்தாமல் அந்த வானரர்கள் எல்லாத் தேன்கூடுகளிலிருந்தும் தேனைக் குடித்து விட்டார்கள். அவர்கள் இன்னும் குடித்துக் கொண்டும் தோட்டத்தை அழித்துக் கொண்டும்இருக்கிறார்கள். 

"சிலர் நிறையத் தேனைக் குடித்து விட்டு, தேன்கூடுகளைத் தரையில் தூக்கிப் போடுகிறார்கள். எல்லோருமே அழிவுச் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைத் தடுத்தால் தங்கள் புருவங்களை உயர்த்தி எங்களை முறைக்கிறார்கள்.

"ஓ, வானரர்களின் உயர்ந்த தலைவரே, கோபமான, கண்கள் சிவந்த அந்த வானரர்களால் இந்த வானரக் காவலர்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

"சிலர் கைகளால் அடிக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் முழங்கால்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள், சிலர் தரையில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த வானரர்கள் எல்லோருக்கும் தங்கள் பின்பக்கத்தைக் காட்டி இருக்கிறார்கள்.

"நீங்கள் எங்கள் அரசர். ஆயினும் அந்த வானரர்கள் எங்களைத் தாக்கத் துணிந்திருக்கிறார்கள். மதுவனம் அவர்களால் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது."

இந்த வார்த்தைகளைக் கேட்டதும், எதிரிகளை அழிப்பவனும், மிகுந்த அறிவு படைத்தவனுமான லக்ஷ்மணன் இவ்வாறு கூறினான்:

"அரசனே! காட்டின் காவலரான இந்த வானரர் இங்கு ஏன் வந்திருக்கிறார்? இவர் எதனால் வருத்தமடைந்திருக்கிறார்?"

லக்ஷ்மணன் இவ்வாறு கேட்டதும், பேச்சில் வல்லவனான சுக்ரீவன் இவ்வாறு பதில் கூறினான்:

"ஓ, உயர்ந்த லக்ஷ்மணரே! ததிமுகன் என்னிடம் சொல்ல விரும்புவது அங்கதனும் மற்ற வானரர்களும் சேர்ந்து மதுவனத்தை அழித்து விட்டார்கள் என்பதை. இப்போது அவர்கள் மதுவனத்தை வந்தடைந்து விட்டார்கள். அப்படியானால் அவர்கள் தங்கள் பணியில் வெற்றியடைந்து விட்டார்கள் என்று பொருள்.

"உயர்ந்தவரான சீதையை ஹனுமான் கண்டு பிடித்திருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை. வேறு எவராலும் இதைச் செய்திருக்க முடியாது. இந்தப் பணியைச் செய்வது ஹனுமானைத் தவிர வேறு யாராலும் இயலாது.

"சாதனை புரிவதற்கான வல்லமை, அறிவுக் கூர்மை, உறுதிப்பாடு, பணிவு, விஷயங்கள் பற்றிய அறிவு ஆகிய இந்தச் சிறந்த குணங்கள் தன்னிடம் ஒருங்கே இருக்கப் பெற்றவர் அந்த வானரர் மட்டுமே.

"அங்கதன் வழிநடத்துபவனாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் இயக்குபவராகவும் இருக்கும்போது, எந்தப் பணியும் முடிக்கப்படுவது நிச்சயம்.

"தென் பகுதிக்குச் சென்று தேடி விட்டுத் திரும்பிய அங்கதன் தலைமையிலான வீர வானரர்களால்தான் மதுவனம் அழிக்கப்பட்டிருக்கும். திரும்பி வந்த வானரர்களால் மதுவனம் அழிக்கப்பட்ட விதம் தங்கள் பணியில் தோல்வியுற்றவர்களால் நிகழ்த்தப்பட்டிருக்க முடியாது. எவ்வாறு தேன் முழுவதும் அருந்தப்பட்டு தோட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். 

"அது மட்டுமல்ல. அவர்hளை விரட்டியடிக்க மொத்தமாகச் சென்றவர்கள் முழங்கால்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

"துணிவுக்கும் இனிமையான பேச்சுக்கும் பெயர் பெற்ற ததிமுகன் இந்த நிகழ்வுகளைப் பற்றிப் புகார் செய்ய இங்கே வந்திருக்கிறான். ஓ, சுமித்ரையின் வீரப்புதல்வரே! இது எதைக் காட்டுகிறது என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்களால் சீதை கண்டு பிடிக்கப்பட்டிருப்பது உறுதி.

"ஓ, உயர்ந்தவரே! இல்லாவிட்டால், மதுவனத்தின் பாம்பரியம் அனைத்தையும் பற்றி நன்கு அறிந்த இந்த வானரர்கள் ஒரு தெய்வீக வரத்தின் மூலம் நமக்குக் கிடைத்த அந்தத் தோட்டத்தை அழித்திருக்க மாட்டார்கள்."

உயர்வான புகழைப் பெற்றிருந்த லக்ஷ்மணன் சுக்ரீவரின் இந்த வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தபோது, நல்ல காலம் நெருங்கி விட்டதை நினைத்து ராமர் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைந்தார். 

ததிமுகனின் வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுக்ரீவன் உடனே செய்யப்பட வேண்டியது என்ன என்பதை அவனிடம் கூறினான்:

"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி இருப்பதால்தான் அவர்கள் தோட்டத்தில் இருந்த தேனைக் குடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தங்கள் பணியை முடித்த பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதம் என் விருப்பத்தின்படிதான் இருக்கிறது.

"தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டுத் திரும்பி வரும் ஹனுமான் தலைமையிலான அந்த வானரர்களின் வருகையையும், ராமர், லக்ஷ்மணருடன் சேர்ந்து சீதையை மீட்க நாம் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்கவும் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்."

தங்கள் நோக்கம் நிறைவேறியது குறித்து வானரர்களின் அரசனான சுக்ரீவனும், அரசகுமாரர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களுடைய கண்கள் விரிந்தன.

அளவிட முடியாத மகிழ்ச்சியடைந்த அவர்கள் வரப் போகும் வெற்றியை நினைத்து உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தனர். 

சர்க்கம் 64 - ஹனுமானும் மற்றவர்களும் 
திரும்பி வருதல்

சுக்ரீவனின் வார்த்தைகளைக் கேட்டதும் ததிமுகன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். 

ரகுவம்சத்தைச் சேர்ந்த மேன்மையுடைய இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் ஆகியோரையும் சுக்ரீவனையும் வணங்கி விட்டு அவன் தன் ஆட்களுடன் ஆகாய வழியாகவே மதுவனத்துக்குத் திரும்பிச் சென்றான்.

சென்ற அதே வேகத்தில் திரும்பி வந்த அவன் ஆகாயத்திலிருந்து தரையில் இறங்கினான். 

மதுவனத்தை அடைந்ததும் அந்த வானர வீரர்கள் அனைவரும் தேன் குடித்த போதை தெளிந்து தாங்கள் குடித்தவற்றைச் சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

மதுவனத்தின் பாதுகாவலனான அந்த ததிமுகன் அவர்களிடம் சென்று அங்கதனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு இவ்வாறு கூறினான்: 

"இனிய குணம் கொண்ட இளவரசரே! அறியாமையாலும், கோபத்தாலும் எங்கள் தோட்டக் காவலர்கள் உங்களைத் தடுக்க முயன்றனர். அவர்களுடைய விவேகமற்ற செயல் குறித்து தயவு செய்து அவர்களிடம் கோபம் கொள்ளாதீர்கள்,

"சக்தி மிகுந்தவரே! நீங்கள் இளவரசர், மற்றும் இந்தக் காட்டின் அதிபதி. முட்டாள்தனத்தினால் நாங்கள் உங்களிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோம். அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள்.

"குற்றமற்றவரே! உங்கள் சிறிய தந்தையிடம் வானர வீரர்களான நீங்கள் திரும்பி வந்தது பற்றி நான் கூறி விட்டேன். இந்த வானர வீரர்கள் அனைவருடன் நீங்கள் திரும்பி வந்ததை அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எனவே இந்த மதுவனம் அழிக்கப்பட்டது பற்றி அவரிடம் சிறிது கூடக் கோபமில்லை.

"வானரர்களின் அரசரும் உங்கள் சிறிய தந்தையுமான சுக்ரீவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தவராக சற்றும் தாமதிக்காமல் உங்கள் அனைவரையும்  திருப்பி அனுப்பும்படி எனக்கு உத்தரவிட்டிருக்கிறார்."

உத்தரவுகளின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்வதில் நிபுணனான அங்கதன், ததிமுகனின் இனிய சொற்களக் கேட்டதும் தன் தோழர்களிடம் கூறினான்:

"ஓ, வானரத் தலைவர்களே! நாம் திரும்பி வந்த செய்தி ராமரைச் சென்றடைந்து விட்டது என்று அறிகிறேன். வெற்றிகரமான போர் வீரர்களே! வேறு இடங்களில் இனியும் நாம் நேரத்தை வீணாக்கி, தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டு தாமதம் ஏற்படுத்துவது முறையல்ல.

"ஓ, வானரர்களே! நீங்கள் திருப்தியடையும் அளவுக்குத் தேன் குடித்து விட்டீர்கள். போதுமான அளவு ஓய்வும் எடுத்துக் கொண்டு விட்டீர்கள். இனி நாம் மேலும் தாமதிக்காமல் நம் எஜமானரான சுக்ரீவரின் இருப்பிடத்துக்குச் செல்லலாம்.

"ஓ, வானர வீரர்களே! நான் உங்கள் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன். நீங்கள் கூடிப் பேசி விட்டு என்னிடம் என்ன சொல்கிறீர்களோ, அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 

"ஒரு வெற்றிகரமான பணியை முடித்து விட்டு வந்திருக்கும் உங்களுக்கு நான் உத்தரவிடுவது முறையாக இருக்காது. எனவே, நான் இளவரசனாக இருந்தாலும், உங்களுக்கு உத்தரவிட நான் தகுதி படைத்தவன் என்று நான் நினைக்கவில்லை."

அங்கதனின் இந்தக் குற்றமற்ற வார்த்தைகளைக் கேட்டு வானரர்கள் மகிழ்ச்சியடைந்து இவ்வாறு பதில் கூறினர்.

"ஓ, உயர்ந்த வானர இளவரசரே! கட்டளையிடக் கூடிய நிலையில் இருக்கும் யார் இவ்வளவு அடக்கமாகப் பேசுவார்? தன் அதிகாரத்தையும் செல்வத்தையும் உணர்ந்திருப்பவர்கள் எல்லாச் சாதனைகளையும் தங்களுடையதாக ஆக்கிக் கொள்வார்கள்.

"இந்த வார்த்தைகள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றை எல்லோரிடமும் பார்க்க முடியாது. உங்களுடைய இந்த அடக்கம் எதிர்காலத்தில் நாம் அதிக சிறப்புகளைப் பெற நீங்கள் எவ்வளவு பொருத்தமானவர் என்பதைக் கூறுகிறது.

"மிகுந்த சக்தி படைத்த வானர அரசர் சுக்ரீவர் இருக்கும் இடத்துக்குத் திரும்பிச் செல்ல உங்கள் உத்தரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் உத்தரவில்லாமல் வானரர்களான நாங்கள் எந்தத் திசையிலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டோம்.

"ஓ, உயர்ந்த வானரரரே! நாங்கள் இந்த வார்த்தைகளை உண்மையாக உணர்ந்து உங்களிடம் கூறுகிறோம்."

அவர்கள் இவ்வாறு கூறியதும் அங்கதன் அவர்கள் கிளம்புவதற்கான உத்தரவைப் பிறப்பித்தான். உடனே அந்த சக்தி வாய்ந்த வானரர்கள் அனைவரும் வானில் எழும்பினர்.

உண்டிவில்லிலிருந்து செலுத்தப்பட்ட கற்களைப் போல், அந்த வானரர்கள் ஒருவர் பின் ஒருவராக வானத்தை மறைப்பது போல் வான்வெளியில் தாவிச் சென்றனர்.

வேகம் மிகுந்த அந்த வானரர்கள் வான் வழியே சென்றபோது, மேகங்கள் நகர்ந்து செல்லும்போது ஏற்படும் ஒலிகளைப் போன்ற ஒலிகள் உருவாயின.

அங்கதனும் அவன் ஆட்களும் அருகில் வந்து கொண்டிருந்தபோது  வானரர்களின் அரசனான சுக்ரீவன் சோகத்தில் ஆழ்ந்திருந்த தாமரைக்கண் கொண்ட ராமரிடம் இவ்வாறு கூறினான்.

"தயவு செய்து மனச் சமாதனம் அடையுங்கள். உங்களுக்கு விரைவிலேயே நல்ல காலம் பிறக்கும். சீதாப்பிராட்டி கண்டு பிடிக்கப்பட்டு வீட்டார். அதில் எந்த ஐயமும் இல்லை. இல்லாவிட்டால் அவர்கள் திரும்ப வருவதற்காக விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை அவர்கள் மீறி இருக்க மாட்டார்கள்.

"தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்யாமல் என் வாரிசும் வானரத் தலைவர்களில் ஒருவனுமான அங்கதன் என்னிடம் ஒரு போதும் திரும்பி வர மாட்டான்.

"தன் பணியைச் செய்து முடிப்பதில் வெற்றி அடையாதவர்களின் மனப்பான்மை இவ்வாறு இருக்காது. அவர்கள் அச்சத்துடன் இருப்பார்கள். அவர்கள் முகங்கள் வாடி இருக்கும்,

"அங்கதன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இல்லாமல் இருந்திருந்தால், எங்கள் பாட்டன்கள், முப்பாட்டன்கள் என்று பழைய தலைமுறையிலிருந்து எங்களுக்கு வந்திருக்கும், நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்திருக்கும் மதுவனத்தை அவன் அழித்திருக்க மாட்டான்.

"ஓ, ராமரே! நீங்கள் கௌசல்யாவின் நற்றவப் பலனின் வடிவம். நீங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்பவர். ஹனுமான் சீதையைக் கண்டு பிடித்திருப்பார் என்று நம்பி மன அமைதியுடன் இருங்கள். வேறு யாராலும் இதைச் சாதிக்க முடியாது. இந்த உண்மைகள் பற்றி எந்த ஐயமும் இல்லை.

"மிகுந்த அறிவாற்றல் உள்ளவரே! இதைச் சாதித்ததில் ஹனுமானைத் தவிர வேறு யாரும் கருவியாக இருக்க முடியாது. அத்தகைய சாதனைச் சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனை உறுதிப்பாடு, துணிவு அத்தனையும் ஒருங்கே பெற்று சூரியனின் ஒளி போன்ற பிரகாசத்துடன் திகழ்பவர் ஹனுமான் மட்டும்தான். 

"அது மட்டுமல்ல, அங்கதன் தளபதியாகவும், ஜாம்பவான் தலைவராகவும், ஹனுமான் வழிகாட்டுபவராகவும் இருக்கும்போது எந்தப் பணியும் தோல்வியில் முடியாது.

"ஓ, துணிவுள்ளவரே! எனவே, உங்கள் வருத்தத்தை விட்டொழியுங்கள்."

அப்போது ஹனுமானின் சாதனையில் பெருமை கொண்டு, தங்கள் வெற்றியை அறிவிக்கும் ஆவலுடன் கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த வானரர்களின் பேச்சுக் குரல்கள் வானில் கேட்டன. 

வானரர்களிடமிருந்து வந்த ஒலிகளைக் கேட்டதும், வானர்ளின் அரசன் தன் மகிழ்ச்சியின் அடையாளமாக, வளைந்திருந்த தன் வாலை நிமிர்த்திக் கொண்டான்.

ராமரைச் சந்திக்க ஆவலாக இருந்த வானரர்கள் அங்கதன் மற்றும் ஹனுமானால் வழி நடத்தப்பட்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

அங்கதனும் மற்ற வானரர வீரர்களும் உற்சாகமான மனநிலையில் அரசன் சுக்ராவன் மற்றும் ராமர் முன் வானிலிருந்து வந்து இறங்கினர். 

வீரரான ஹனுமான் முதலில் ராமரின் காலடிகளில் விழுந்து வணங்கி, சீதை உடலளவில் காயப்படாமலும், கற்புடனும் இருக்கிறார் என்பதை அவரிடம் தெரிவித்தார்.

"சீதை கண்டு பிடிக்கப்பட்டார்" என்ற வார்த்தைகளை ஹனுமானின் வாயிலிருந்து, லக்ஷ்மணருடன் சேர்ந்து ராமர் கேட்டதும், அந்த  வார்த்தைகள் அமிர்தம் போன்று அவர்களுக்கு மகிழ்ச்சியளித்தன.

தன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக ஹனுமானுக்கு சுக்ரீவன் பாராட்டுத் தெரிவித்தான். லக்ஷ்மணன் ஹனுமானிடம் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர் முகத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

பிறகு எல்லா எதிரிகளையும் அழிப்பவரான ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவராக ஹனுமானை மலர்ச்சியுடனும், மரியாதையுடனும் நோக்கினார்.

சர்க்கம் 65 - சூடாமணியை ராமனிடம் அளித்தல்

அடர்ந்த காடுகள் மிகுந்த பிரஸ்ரவண மலைக்கு வந்த அவர்கள் ராமருக்கும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணருக்கும், சுக்ரீவருக்கும் வணக்கம் தெரிவித்த பின், அங்கதனை முன்னே நிற்கச் செய்து சீதையைப் பற்றிய விவங்களை விரிவாகச் சொல்ல, சுக்ரீவனின் உத்தரவுக்குக் காத்திருந்தனர்.

பிறகு சீதை ராவணனின் மாளிகையின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அரக்கிகளால் அவர் மிரட்டப்பட்டுவதையும், ராமரிடம் அவர் பக்தியுடனும், விஸ்வாசத்துடனும் இருப்பதையும், அவர் முடிவைத் தெரிவிக்க அவருக்கு கெடு வைத்திருப்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

சீதையின் கற்புக்குச் சேதம் ஏற்படவில்லை என்பதைக் கேட்டறிந்ததும், ராமர் வானரர்களிடம் கூறினார்: 

"சீதை இப்போது எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுங்கள். என்னைப் பற்றிய அவர் மனநிலை என்ன? சீதை தொடர்பான இந்த எல்லா விவரங்களையும் என்னிடம் கூறுங்கள்."

ராமரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதையின் நிலை பற்றி நேரடியாக அறிந்திருந்த ஹனுமானை முன் வந்து விவரங்களைத் தெரிவிக்குமாறு வானரர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வாயுவின் குமாரரும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவருமான ஹனுமான் சீதை இருக்கும் திசையைப் பார்த்து வணங்கி விட்டு, தான் சீதையைச் சந்தித்ததைப் பற்றிய விவரங்களைக் கூற ஆரம்பித்தார்:

"ஜனகரின் மகளான சீதையைச் சந்திப்பதற்காக, நான் கடலில் நூறு யோஜனைகளைக் கடந்து சென்றேன். தெற்கே உள்ள கடலின் கரையில் தீய மனம் கொண்ட ராவணனின் இலங்கை நகரம் இருக்கிறது.

"ஓ, ராமா! அங்கே ராவணனின் அந்தப்புரத்தில், மங்களம் வழங்கும் சீதை தூய கற்புடன் இருப்பதை நான் கண்டேன். அங்கே அவர் தன் எப்போதும் உங்களைப் பற்றிய எண்ணங்களுடனேயே இருந்து கொண்டிருக்கிறார்.

"ராவணனின் அந்தப்புரத் தோட்டத்தில் அவர் பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கிகளால் சூழப்பட்டு, தொடர்ந்து மிரப்பட்டு வருவதை நான் என் கண்ணால் பார்த்தேன்.

"அந்தக் கற்புடைய பெண்மணிக்கு இத்தகைய துயரம் ஏற்படுவதற்குச் சிறிதளவும் நியாயமில்லாத நிலையில் அவர் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்.

"அவர் தன் கூந்தலை ஒற்றையாக முடிந்து கொண்டிருக்கிறார். அவர் தரையில் படுத்திருக்கிறார். அவர் அரக்கிகளால் கடுமையாகப் பாதுகாக்கப்பட்டு ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

"பனிக்காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தில், ராவணனின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் அவர் நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறார்.

"நம்பிக்கை இழந்த அந்த நிலையில் அவர் தன் உயிரை விடக் கூடத் தீர்மானித்து விட்டார்.

"இவற்றையெல்லாம் மீறி, ஓ, காகுஸ்த குலச் செம்மலே, அவர் மனம் முழுவதும் உங்களிடம் பக்தி கொண்டு மிகுந்த வேதனையுடன், உங்களைப் பற்றிய நினைவுடனேயே இருக்கிறார்.

"இவற்றையெல்லாம் நான் மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்டறிந்தேன்.

"ஓ, வீரமுள்ளவராகவும், குற்றமற்றவராகவும் உள்ளவரே! இக்ஷ்வாகு குல மன்னர்களப் புகழ்ந்து பேசியதன் மூலம் என்னால் அவரிடம் நம்பிக்கையை உருவாக்க முடிந்தது.

"அதற்குப் பிறகு என்னால் அவரிடம் உரையாடி இங்குள்ள நிலவரங்கள் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் தெரிவிக்க முடிந்தது. உங்களுக்கும் சுக்ரீவருக்குமிடையே ஏற்பட்டுள்ள நட்பு பற்றி அறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

"உங்களிடம் அவருக்கு இருக்கும் பக்தியால், அவர் கவலைப்படுவது உங்களிடம் அவருக்கு இருக்கும் விஸ்வாசத்தை நிலைநிறுத்திக் கொள்வது பற்றி மட்டும்தான்.

"ஓ, உயர்ந்தவரே! உங்களிடம் நிலையான பக்தி மற்றும் விஸ்வாசம் என்ற இந்தத் தவத்தைச் செய்து கொண்டிருக்கும் அந்த உயர்ந்த பெண்மணியை என்னால் காண முடிந்தது.

"எல்லாம் அறிந்தவரான ரகுகுல திலகரே! நீங்கள் சித்ரகூடத்தில் இருந்தபோது ஒரு காகம் தொடர்பான ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்டும்படி அவர் என்னிடம் கூறினார். 

"அவர் கூறினார்:
'வாயுகுமாரரே! நான் தெரிவித்த எல்லா விவரங்களையும் ராமரிடம் கூறுங்கள். மனத்துக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்தச் சூடாமணியை நான் பாதுகாத்து வருகிறேன். அதை யாரும் பார்க்காத வண்ணம் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

'சுக்ரீவருடன் இருந்து கொண்டு என்னைப் பற்றிய விவரங்களை ராமர் உங்களிடமிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது, இதை நீங்கள் அவரிடம் கொடுங்கள்.'

"அவர் இதை உங்களுக்கு என் மூலம் அனுப்பி இருக்கிறார். நீங்கள் அவருக்குச் சாயப்பொட்டு வைத்த சம்பவத்தையும் அவர் உங்களுக்கு நினைவு படுத்தினார். 

"அளவற்ற பெருமை கொண்ட ராமபிரானே! மான் போன்ற கண்களும், சக்தி இழந்த உடலும் கொண்ட, ராவணனின் அந்தப்புரத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும், இன்னமும் ஒரு பத்தினிப் பெண்ணுக்கான கடமைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி, உங்களிடம் இவ்வாறு கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்:

'நான் மிகுந்த மனச்சோர்வு அடையும்போதெல்லாம் இந்தச் சூடாமணியைப் பார்த்து, உங்களிடமிருந்து பெறும் ஆறுதலைப் போன்ற ஆறுதலை அடைவேன். 

'இன்னும் ஒரு மாதம்தான் நான் உயிர் தரித்திருப்பேன். அதற்குப் பிறகு இந்த அரக்கிகளுக்கிடையே நான் உயிர் வாழ மாட்டேன்.'

"இவ்வாறு அவர் என்னிடம் கூறினார். ரகுகுல திலகரே! எல்லா விவரங்களையும் அப்படியே உங்களிடம் கூறி விட்டேன். கடலுக்குக் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட நீங்கள் ஆணையிட வேண்டும் என்று நான் கருதுகிறேன்."

இரண்டு இளவரசர்களும் அமைதி அடைந்ததைக் கண்டு வாயுகுமாரர் மகிழ்ச்சி அடைந்தார். அடையாளமாகச் சீதையால் கொடுக்கப்பட்ட சூடாமணியை ராமரின் கையில் கொடுத்து விட்டு, நடந்தவை அனைத்தையும் முதலிலிருந்து இறுதி வரை அவரிடம் கூறினார் ஹனுமான்.

சர்க்கம் 66 - சீதையின் செய்தி குறித்த கேள்விகள்

தசரதரின் புதல்வரான ராமர், லக்ஷ்மணன் உடனிருக்கையில், ஹனுமான் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார். பிறகு அந்தச் சூடாமணியைத் தன் மார்பில் வைத்துக்கொண்டு அவர் கண்ணீர் உகுத்தார்.

அந்த அற்புதமான மணியைப் பார்த்ததும், ராமர் தன் கண்களில் நீர் வழிந்தோட மிகுந்த மனவேதனையுடன் சுக்ரீவனிடம் கூறினார்.

"ஒரு பசு தன் கன்றின் மீது இருக்கும் மிகுந்த அன்பின் காரணமாக உணர்ச்சிகரமாகச் செயல்படுவது போல், இந்த மணியைப் பார்த்ததும் என் உள்ளம் உருகுகிறது.

"இந்த உயர்ந்த மணி விதேஹ நாட்டு இளவரசிக்கு என் மாமனாரால் (அவளுடைய தந்தையால்) பரிசாக அளிக்கப்பட்டது. எங்கள் திருமணத்தின்போது அவள் இதைத் தன் தலையில் அணிந்திருந்தபோது அவள் அழகு, இப்போது பார்த்தால் தெரிவதை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது.

"இந்த மணி நீரிலிருந்து தோன்றியது. பெரியோர்கள் இதைப் பற்றி மிக உயர்வாக நினைக்கிறார்கள். ஒருமுறை இது ஒரு யாகத்தில் இந்திரனால் அவன் மகிழ்ச்சியின் காரணமாக அளிக்கப்பட்டது.

"ஓ, அன்புள்ளவனே! இந்த உயர்ந்த மணியைப் பார்க்கும்போது, என் தந்தை மற்றும் தவ வாழ்க்கை வாழ்ந்த என் மாமனார் இவர்களின் முகங்களைப் பார்க்கும் அதே மனத் திருப்தி எனக்குக் கிடைக்கிறது.

"இந்த மணி மீண்டும் என் மனைவியின் தலைமுடியை அலங்கரிக்கும். இதைப் பார்க்கும்போது எனக்கு அவளையே நேரில் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது.

"ஓ, ஹனுமான்! சீதை என்ன சொன்னாள் என்பதை மீண்டும் சொல். தாகத்தால் தவிப்பவனுக்குத் தண்ணீர் எப்படி இருக்குமோ, அவள் வார்த்தைகள் எனக்கு அப்படி இருக்கும்.

"ஓ, லக்ஷ்மணா! வைதேஹியிடமிருந்து பிரிந்திருக்கும்போது, நீரில் தோன்றிய இந்தச் சூடாமணியை என் கையில் வைத்துக் கொண்டிருப்பதை விட அதிகத் துயரளிப்பது எதுவாக இருக்கும்?

"ஓ, அருமை நண்பனே! வைதேஹி இன்னும் ஒரு மாதம் உயிர் தரித்திருப்பாளேயானால், அவள் உண்மையில் நீண்ட காலம் உயிர் வாழ்வதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அவளைப் பிரிந்த நிலையில் என்னால் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது. 

"என் அருமை மனைவி இருக்கும் இடத்துக்கு என்னை இட்டுச் செல். அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட பின் நான் ஒரு கணத்தைக் கூட இங்கிருந்து கொண்டு வீணாக்க முடியாது.

"தன்னை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான அரக்கிகளின் நடுவில் இருந்து கொண்டு என் கற்புள்ள மனைவி வாழ்ந்து கொண்டிருப்பது எத்தகைய கொடுமை!

"என்னைப் பற்றிய செய்தியைக் கேட்டதும் சரத் (இலையுதிர்) காலச் சந்திரனைப் போல் மலர்ச்சி அடையத் தொடங்கி இருக்கும் அவளுடைய முகம் அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரக்கிகள் என்னும் மேகங்களால் மறைக்கப்பட்டு மீண்டும் மங்கலாகி இருக்கும்.

"ஓ, ஹனுமான்! சீதை உன்னிடம் என்ன கூறினாள்? எல்லாவற்றையும் என்னிடம் விவரமாகச் சொல். நோயுற்ற ஒருவன் மருந்துகள் மூலம் உயிர் தரிப்பிருப்பது போல், நான் இப்போது அவளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுதான் உயிர் வாழ வேண்டும்.

"கற்புள்ளவளும். அழகானவளும், இனிமையாகப் பேசுபவளும், பணிவுள்ளவளும் இப்போது என்னிடமிருந்து பிரிந்திருப்பவளுமான என் மனைவி உன் மூலம் எனக்கு என்ன செய்தி அனுப்பினாள்?

"ஓ, ஹனுமான்! எல்லாவற்றையும் எனக்கு விவரமாகச் சொல்."


சர்க்கம் 67 - சீதை பேசியவற்றை ஹனுமான் விவரமாக எடுத்துக் கூறல்


உயர்ந்தவரான ராமர் இவ்வாறு கூறியதும், ஹனுமான் சீதை தெரிவித்தது அனைத்தையும் விவரமாகக் கூறினார்.

"மனிதர்களில் உயர்ந்தவரே! நீங்கள் சித்திரகூடத்தில் வசித்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தன் நினைவுகளின் அடையாளமாக ஜனகரின் புதல்வி என்னிடம் விவரித்தார்.

"ஒருநாள் சீதாப்பிராட்டி உங்களுடன் இருந்தபோது, அவர் சற்று நேரம் தூங்கி விட்டுப் பிறகு விழித்துக் கொண்டார். ஒரு காகம் அவர் மார்பில் முரட்டுத்தனமாகத் தாக்கி அவரைக் காயப்படுத்தியது.

"பரதரின் சகோதரரே! அதற்குப் பிறகு நீங்கள் தேவியின் மடியில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். அப்போது அதே பறவை அவரை மீண்டும் தாக்கிப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

"காகம் பலமுறை அவரைத் தாக்கிக் காயப்படுத்தியது. கீழே வழிந்த ரத்தம் உங்கள் உடலை நனைத்தது. அதன் விளைவாக நீங்கள் விழித்துக் கொண்டீர்கள்.

"விரோதிகளை அழிப்பவரே! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நீங்கள், அந்தக் காகத்தால் தொடர்ந்து தாக்கப்பட்ட தேவியால் எழுப்பப்பட்டீர்கள்.

"வலுவான கரங்களை உடையவரே! அவர் மார்பகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து நீங்கள் மிகுந்த கோபம் கொண்டு பாம்பு போல் சீறியபடி அவரைக் கேட்டீர்கள்:

'ஓ, பயந்த சுபாவமுள்ளவளே! உன் மார்பகத்தில் நகங்களால் காயப்படுத்தியது யார்? மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஐந்து தலை நாகத்துடன் விளையாடுபவன் யார்?'

"சுற்றிலும் பார்த்தபோது, கூர்மையான ரத்தம் படிந்த நகங்களுடன் அவர் முன் நின்று கொண்டிருந்த அந்தக் காகத்தை நீங்கள் பார்த்தீர்கள். இந்திரனின் மகனும், பறவைகளின் தலைவனுமான அந்தக் காகம் காற்றைப் போன்ற வேகம் கொண்டது. எனவே அது உடனே பூமிக்கடியில் மறைந்து கொண்டது. 

"அறிவில் சிறந்தவரும் துணிவு மிக்கவருமான இளவரசே! அப்போது நீங்கள் அந்தக் காகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டு அதை தண்டிப்பது என்ற சபதத்தை மேற்கொண்டீர்கள்.

"நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு புல்லைப் பிடுங்கி, அதில் பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை ஏற்றி அதை அந்தக் காகத்தின் மீது செலுத்தினீர்கள். இவ்வாறு ஏவப்பட்ட அந்த மந்திரம் உலகம் அழியும் காலத்தில் எழும் நெருப்பைப் போல் ஜொலித்தது.

"எரியும் அந்த நெருப்பை  நீங்கள் அந்தக் காகத்தை நோக்கிச் செலுத்தினீர்கள். அந்த அஸ்திரம் அந்தக் காகத்தை எல்லா இடங்களிலும் துரத்திச் சென்றது.

"எல்லா உலகங்களுக்கும் வேகமாக ஓடிய அந்தக் காகத்துக்குப் பெரிய முனிவர்களிடமும், தேவர்களிடமும் புகலிடம் கிடைக்கவில்லை. அதன் தந்தையான இந்திரனால் கூடக் கைவிடப்பட்ட அது தன்னைக் காக்க  யாரும் இல்லை என்பதைக் கண்டது.

"காகுஸ்த குலத் திலகரே! எதிரிகளை அழிப்பவரே! பயத்தில் நடுங்கிக் கொண்டு அது உங்களிடம் திரும்பி வந்து, பாதுகாப்புக் கேட்டு உங்கள் காலடியில் விழுந்தது. அது கொல்லத் தகுந்தது என்றபோதும் நீங்கள் அதற்கு அடைக்கலம் அளித்தீர்கள். 

"ரகுவின் வழி வந்த இளவரசே! அந்த அஸ்திரம் வீணாகக் கூடாது என்பதால், நீங்கள் அந்த அஸ்திரத்தால் அந்தக் காகத்தின் வலது கண்ணை அழித்தீர்கள்.

"ஓ, ராமா! அந்தக் காகம் உங்களுக்கும், தசரதருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தது. பிறகு, நீங்கள் அதைச் செல்ல அனுமதித்ததும், அது பறந்து சென்றது.

"சீதாப்பிராட்டி மேலும் கூறினார்: 'ரகு வம்சத்தில் வந்தவரான ராமர் தெய்வீக அஸ்திரங்களைப் பிரயோகிப்பவர்களில் முதன்மை பெற்றவராக இருந்தும், அவர் ஏன் அவற்றை இந்த அரக்கர்களை நோக்கிச் செலுத்தாமல் இருக்கிறார்?

'நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத்களோ தனியாகவோ, மொத்தமாகவோ போரில் ராமருக்கு எதிரே நிற்க முடியாது. அந்த வீரருக்கு என் மீது சிறிதளவாவது அன்பு இருக்குமானால், அவர் தன் கூரிய அம்புகளால் ராவணனை உடனடியாக அழிக்க வேண்டும்.

'எதிரிகளை அழிப்பவரும், மனிதர்களுக்குள் உயர்ந்தவரும், ரகுவம்சத்தில் வந்த ஒரு இளவரசருமான லக்ஷ்மணர் ஏன் தன் சகோதரரின் அனுமதி பெற்று என்னை மீட்கவில்லை?

'காற்றையும், நெருப்பையும் போல் சக்தி வாய்ந்தவர்களான, தேவர்களைக் கூட பிரமிக்க வைப்பவர்களுமான இந்த இரு மனிதச் சிங்கங்களும் ஏன் இவ்வாறு என்னைக் கைவிட்டு விட்டார்கள்?

'இந்த இரு திறமைசாலிகளும் என்னை மறந்து விட்டார்கள் என்பது என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு பெரிய குற்றத்தின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.'

"பெருகி வரும் கண்ணீருக்கிடையே வெளிப்பட்ட விதேஹ நாட்டு இளவரசியின் இந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நான் மீண்டும் பேசினேன்.

"ஓ, தேவி! நான் கூறுவது உண்மை. உங்கள் விஷயத்தில் ஏற்பட்ட துயரத்தின் காரணமாக, ராமர் வாழ்க்கையில் அனைத்திலும் ஆர்வமற்றவராக ஆகி விட்டார். ராமர் இவ்வாறு சோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, லக்ஷ்மணரும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகத் துன்புறுகிறார்.

"ஓ, உயர்ந்தவரே! நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ஷ்டவசமாகத்தான், துயரப்படுவதற்கான காலம் இனி இல்லை. நீங்கள் விரைவிலேயே உங்கள் துயரின் முடிவைக் காண்பீர்கள்.

"உங்களைக் காண வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தினால், அந்த இரண்டு வீரர்களும் விரைவிலேயே இலங்கையைச் சாம்பலாக்கப் போகிறார்கள்.

"உயர் குலத்து இளவரசியே! தன் கோபத்தினால் ராமர் விரைவிலேயே ராவணனையும் அவன் எல்லா உறவினர்களையும் போரில் கொன்று விட்டு உங்களைத் தன் நகருக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போகிறார். 

"இந்த விஷயங்கள் பற்றிய உண்மையை ராமர் அறிந்து கொள்வதற்காக, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு அடையாளத்தை  நீங்கள் கொடுக்க வேண்டும்.

"எல்லையற்ற சக்தி கொண்ட ராமபிரானே! அந்த மாதரசி சீதை சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, இந்தச் சூடாமணியைத் தன் முடியிலிருந்து கழற்றி அதை என்னிடம் கொடுத்தார்.

"ரகு குல திலகரே! உங்கள் சார்பாக அந்த மணியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பின், நான் அவரை வணங்கி விட்டு இங்கு திரும்பி வருவதற்காக விரைந்தேன்.

"கிளம்பத் தயாராக என் உடலை நான் பெரிதாக்கிக் கொண்டதைப் பார்த்ததும், இப்போது மிகவும் துயரமான நிலையில் உள்ள, உயர்ந்தவரான ஜனகரின் மகள் தேற்ற முடியாத அளவுக்கு மீண்டும் அழ ஆரம்பித்தார். கம்மிய குரலில் என்னிடம் கூறினார்:

'ஓ, ஹனுமான்! இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சக்திவாய்ந்த இளவரசர்கள் ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கும், சுக்ரீவர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கும் தெரிவித்து விடு.

'ஓ, வீரம் மிகுந்தவனே! ரகுகுல திலகரான ராமர் தானே இங்கு வந்து என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து தூக்கிச் செல்வதற்கான எல்லா உதவிகளையும் நீ செய்ய வேண்டும்.

'ஓ, உயர்ந்த வானரனே! நீ ராமர் இடத்துக்குச் சென்றவுடனேயே, என் துன்பத்தின் தீவிரத்தை - இந்த அரக்கிகளால் நான் எப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளேன் என்பதை - அவரிடம் தெரிவிக்க வேண்டும். நீ திரும்பச் செல்லும் பயணம் உனக்குத் தடங்கல்கள் ஏதுமின்றி அமையட்டும்.'

"அரசர்களுக்கெல்லாம் அரசரே! தன் கொடிய துன்பத்தைத் தங்களிடம் மிகவும் பணிவுடன் தெரிவிக்கும்படி சீதாப்பிராட்டி என்னிடம் கூறினார். 

"சீதாப்பிராட்டி தன் கற்பை முழுவதுமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்களாக. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது உங்களுக்குத் தகும்."

சர்க்கம் 68 - சீதைக்கு ஆறுதல் கூறியது பற்றிய விவரம்

ஹனுமான் தொடர்ந்து கூறினார்:
மனிதர்களுக்குள் அதிகத் துணிவானவரே! நான் கிளம்பிய சமயம், சீதாப்பிராட்டி தங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அடுத்தபடி செய்யப்பட வேண்டியது என்ன என்பது பற்றி என்னிடம் கூறினார்.

'போரில் ராவணனை அழித்து விட்டு என்னை உடனே திரும்ப அழைத்துச் செல்வதற்கு தசரத குமாரரான ராமர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

'எதிரிகளை அழிப்பவரே! நீ விரும்பினால் இங்கே எங்காவது தனியாக ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை கிளம்பிச் செல்லலாம்.

'ஓ, வீரனே! நீ அருகில் எங்காவது இருக்கும் வரை, என் பாவங்களின் காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய என் துயரத்திலிருந்து எனக்குச் சிறிது ஆறுதல் கிடைக்கும்.

'நீ இங்கே திரும்ப வரும் நோக்கத்துடன்தான் இங்கிருந்து கிளம்பிச் செல்கிறாய் என்றாலும், நீ இந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றதும் என் உயிரும் கிளம்பிச் சென்று விடும் என்று தோன்றுகிறது.

'ஒரு துயரத்துக்குப் பின் இன்னொரு துயரம் என்று நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்த்ததால் இது ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. உன்னுடனான இந்தச் சந்திப்பு முடிவுக்கு வந்ததும், என் துயரம் முன்னை விடப் பன்மடங்கு அதிகரித்து விடும்.

'வானரர்களின் தலைவனே! குரங்குகளையும் கரடிகளையும் கொண்ட உன் சேனை பற்றி ஒரு விஷயம் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. அது பற்றி எனக்கு நீ விளக்க வேண்டும்.

'வானரர்களையும், கரடிகளையும் கொண்ட அந்தச் சேனை இந்தப் பரந்த கடலை எப்படிக் கடக்கும்? அந்த இரண்டு இளவரசர்கள் கூட எப்படி அதைக் கடப்பார்கள்?

'வான் வழியே இந்தக் கடலைக் கடக்கும் வல்லமை வாயு, கருடன், நீ ஆகிய மூவருக்கு மட்டுமே உள்ளது. ஓ, வீரனே! அனைத்திலும் நிபுணனே! இந்தக் கடினமான செயலை எப்படிச் செய்ய முடியும்? இந்தப் பிரச்னயைச் சமாளிப்பதற்கு என்ன உத்தியை நீ  சிந்தித்திருக்கிறாய்?

'எதிரிகளை அழிப்பவனே! இந்தச் செயலை முழுமையாக நிறைவேற்றக் கூடியவன் நீ ஒருவன்தான். அதனால், நீ உலக அளவில் புகழ் பெறப் போகிறாய்.

'ராமர் சேனையுடன் வந்து ரவணனைப் போரில் அழித்து அந்த வெற்றிக்குப் பின், என்னை அவருடைய நகரத்துக்கு அழைத்துச் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

'ராமரை நேருக்கு நேர் பார்க்க பயந்து, தந்திரமான முறையில் இந்த அரக்கன் என்னைக் காட்டிலிருந்து கடத்திச் சென்றான். ஆனால் எதிரிகளைப் போரில் வெல்லாமல் என்னை அழைத்துச் செல்வது வீரரான ராமருக்குப் பொருத்தமாக இருக்காது.

ஒரு சேனையின் தலைமையில் வந்து இலங்கையைத் தரைமட்டமாக ஆக்கிய பிறகு அவர் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால்தான் அது அவருடைய உயர்ந்த புகழுக்கு இசைந்ததாக இருக்கும்.

'எனவே உயர்ந்தவரான அந்தப் போர்வீரரின் வீரத்துக்குப் பொருந்தும் வகையில் நீ எல்லாவற்றையும் ஏற்பாடு செய்.'

"இந்த அர்த்தமுள்ள, அறவழியிலான, நியாயமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் சொல்ல வேண்டிய இன்னும் சிலவற்றை அவரிடம் கூறினேன்:

'தேவி! கரடிகள் மற்றும் குரங்குகளின் அரசரும், அந்த இனத்தவருள் மிகவும் உயர்ந்தவருமான சுக்ரீவர் வலிமை மிக்கவர். உங்கள் விஷயத்தில் அவர் ஒரு சபதம் செய்திருக்கிறார்.

'அவர் சேனையில் உள்ள வானரர்கள் மிகுந்த திறமை கொண்டவர்கள். அவர்கள் துணிவுள்ளவர்கள், வலிமை மிகுந்தவர்கள், அசைக்க முடியாத மன உறுதி கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்யத் தீர்மானித்த செயலை எப்போதும் செய்து முடிப்பவர்கள்.

'மேலும், கீழும், பக்கவாட்டிலும் அவர்கள் செல்வதை யாராலும் தடை செய்ய முடியாது. எல்லையற்ற துணிவு கொண்ட அவர்கள் எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படுவதில்லை.

'காற்றில் பறந்து செல்லக் கூடிய இந்த உயர்ந்த, சக்தி வாய்ந்த வானர சேனை பலமுறை இந்த உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறது.

'சுக்ரீவரின் தலைமையில் உள்ள வானரர்களில் எனக்குச் சமமான மற்றும் என்னை விடத் திறமை வாய்ந்த பல வானரர்களும் இருக்கிறார்கள், ஆனல் என்னை விடக் குறைவான திறமையுள்ளவர்கள் யாரும் இல்லை.

'சாதாரண நபர்கள்தான் தூதூவர்களாக அனுப்பப்படுவார்கள். உயர்ந்தவர்கள் அனுப்பப்படுவதில்லை. எனவே, என்னாலேயே இங்கே வர முடிந்ததென்றால், என்னை விட உயர்வான என் தோழர்கள் பற்றி என்ன சந்தேகம் இருக்க முடியும்?

'எனவே, தேவி! துயரத்தினால் சோர்ந்து விடாதீர்கள். துயரத்திலிருந்து விடுபடுங்கள். இந்த வானர வீரர்களால் ஒரே தாவலில் இலங்கைக்கு வர முடியும்.

'ஓ, உயர்ந்த பெண்மணியே! சூரியனையும், சந்திரனையும் ஒத்த இரண்டு வீர இளவரசர்களும் என் தோள்களின் மீது அமர்ந்து இஙுகு உங்கள் முன் வருவார்கள்.

'எல்லா எதிரிகளையும் அழிப்பவரான சிங்கம் போன்ற அந்த வீரர் லக்ஷ்மணருடன் கூட, கையில் வில்லுடன் இலங்கையின் நுழைவாயிலில் நிற்பதை நீங்கள் விரைவிலேயே காண்பீர்கள்.

'புலிகளையும், சிங்கங்களையும் போல் அச்சமூட்டும் தோற்றமும், துணிவும் கொண்ட, யானைகளைப் போல் பிரும்மாண்டமான தோற்றம் கொண்ட, நகங்களையும், பற்களையுமே ஆயுதமாகக் கொண்ட, வீரம் மிகுந்த வானரரர்களின் கூட்டத்தை நீங்கள் விரைவிலேயே பார்ப்பீர்கள்.

'மழை கொண்ட மேகங்களின் இடி முழக்கம் போன்ற வானரர்களின் உரத்த கர்ஜனைகள் இலங்கையின் மலைச் சிகரங்களில் ஒலிப்பதை நீங்கள் விரைவிலேயே கேட்பீர்கள்.

'இந்த எதிரிகளை அழித்து, தன் வனவாச காலம் முடிந்த பின், ராமபிரான் அயோத்தியில் உங்களுடன் சேர்ந்து முடிசூட்டப்படும் மகிழ்ச்சியான அனுபவத்தை விரைவிலேயே நீங்கள் பெறுவீர்கள்.;

"இத்தகைய உறுதியான. தீவிரமான வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்தப்பட்ட பிறகு, உங்கள் துயரத்தை நினைத்தே எப்போதும் துயரத்தில் ஆழ்ந்திருந்த மிதிலை நாட்டு இளவரசியான சீதாப்பிராட்டி, தன் துயரம் சற்றே குறைந்ததாக எண்ணிச் சிறிது ஆறுதல் அடைந்தார்."

(சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)


ஶ்ரீராமஜயம்


No comments:

Post a Comment