Wednesday, February 3, 2021

70. 67ஆவது சர்க்கம் - சீதை பேசியவற்றை ஹனுமான் விவரமாக எடுத்துக் கூறல்

 

உயர்ந்தவரான ராமர் இவ்வாறு கூறியதும், ஹனுமான் சீதை தெரிவித்தது அனைத்தையும் விவரமாகக் கூறினார்.

"மனிதர்களில் உயர்ந்தவரே! நீங்கள் சித்திரகூடத்தில் வசித்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியைத் தன் நினைவுகளின் அடையாளமாக ஜனகரின் புதல்வி என்னிடம் விவரித்தார்.

"ஒருநாள் சீதாப்பிராட்டி உங்களுடன் இருந்தபோது, அவர் சற்று நேரம் தூங்கி விட்டுப் பிறகு விழித்துக் கொண்டார். ஒரு காகம் அவர் மார்பில் முரட்டுத்தனமாகத் தாக்கி அவரைக் காயப்படுத்தியது.

"பரதரின் சகோதரரே! அதற்குப் பிறகு நீங்கள் தேவியின் மடியில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். அப்போது அதே பறவை அவரை மீண்டும் தாக்கிப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

"காகம் பலமுறை அவரைத் தாக்கிக் காயப்படுத்தியது. கீழே வழிந்த ரத்தம் உங்கள் உடலை நனைத்தது. அதன் விளைவாக நீங்கள் விழித்துக் கொண்டீர்கள்.

"விரோதிகளை அழிப்பவரே! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நீங்கள், அந்தக் காகத்தால் தொடர்ந்து தாக்கப்பட்ட தேவியால் எழுப்பப்பட்டீர்கள்.

"வலுவான கரங்களை உடையவரே! அவர் மார்பகத்தில் காயம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்து நீங்கள் மிகுந்த கோபம் கொண்டு பாம்பு போல் சீறியபடி அவரைக் கேட்டீர்கள்:

'ஓ, பயந்த சுபாவமுள்ளவளே! உன் மார்பகத்தில் நகங்களால் காயப்படுத்தியது யார்? மிகுந்த கோபத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஐந்து தலை நாகத்துடன் விளையாடுபவன் யார்?'

"சுற்றிலும் பார்த்தபோது, கூர்மையான ரத்தம் படிந்த நகங்களுடன் அவர் முன் நின்று கொண்டிருந்த அந்தக் காகத்தை நீங்கள் பார்த்தீர்கள். இந்திரனின் மகனும், பறவைகளின் தலைவனுமான அந்தக் காகம் காற்றைப் போன்ற வேகம் கொண்டது. எனவே அது உடனே பூமிக்கடியில் மறைந்து கொண்டது. 

"அறிவில் சிறந்தவரும் துணிவு மிக்கவருமான இளவரசே! அப்போது நீங்கள் அந்தக் காகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டு அதை தண்டிப்பது என்ற சபதத்தை மேற்கொண்டீர்கள்.

"நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒரு புல்லைப் பிடுங்கி, அதில் பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை ஏற்றி அதை அந்தக் காகத்தின் மீது செலுத்தினீர்கள். இவ்வாறு ஏவப்பட்ட அந்த மந்திரம் உலகம் அழியும் காலத்தில் எழும் நெருப்பைப் போல் ஜொலித்தது.

"எரியும் அந்த நெருப்பை  நீங்கள் அந்தக் காகத்தை நோக்கிச் செலுத்தினீர்கள். அந்த அஸ்திரம் அந்தக் காகத்தை எல்லா இடங்களிலும் துரத்திச் சென்றது.

"எல்லா உலகங்களுக்கும் வேகமாக ஓடிய அந்தக் காகத்துக்குப் பெரிய முனிவர்களிடமும், தேவர்களிடமும் புகலிடம் கிடைக்கவில்லை. அதன் தந்தையான இந்திரனால் கூடக் கைவிடப்பட்ட அது தன்னைக் காக்க  யாரும் இல்லை என்பதைக் கண்டது.

"காகுஸ்த குலத் திலகரே! எதிரிகளை அழிப்பவரே! பயத்தில் நடுங்கிக் கொண்டு அது உங்களிடம் திரும்பி வந்து, பாதுகாப்புக் கேட்டு உங்கள் காலடியில் விழுந்தது. அது கொல்லத் தகுந்தது என்றபோதும் நீங்கள் அதற்கு அடைக்கலம் அளித்தீர்கள். 

"ரகுவின் வழி வந்த இளவரசே! அந்த அஸ்திரம் வீணாகக் கூடாது என்பதால், நீங்கள் அந்த அஸ்திரத்தால் அந்தக் காகத்தின் வலது கண்ணை அழித்தீர்கள்.

"ஓ, ராமா! அந்தக் காகம் உங்களுக்கும், தசரதருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தது. பிறகு, நீங்கள் அதைச் செல்ல அனுமதித்ததும், அது பறந்து சென்றது.

"சீதாப்பிராட்டி மேலும் கூறினார்: 'ரகு வம்சத்தில் வந்தவரான ராமர் தெய்வீக அஸ்திரங்களைப் பிரயோகிப்பவர்களில் முதன்மை பெற்றவராக இருந்தும், அவர் ஏன் அவற்றை இந்த அரக்கர்களை நோக்கிச் செலுத்தாமல் இருக்கிறார்?

'நாகர்களோ, கந்தர்வர்களோ, அசுரர்களோ, மருத்களோ தனியாகவோ, மொத்தமாகவோ போரில் ராமருக்கு எதிரே நிற்க முடியாது. அந்த வீரருக்கு என் மீது சிறிதளவாவது அன்பு இருக்குமானால், அவர் தன் கூரிய அம்புகளால் ராவணனை உடனடியாக அழிக்க வேண்டும்.

'எதிரிகளை அழிப்பவரும், மனிதர்களுக்குள் உயர்ந்தவரும், ரகுவம்சத்தில் வந்த ஒரு இளவரசருமான லக்ஷ்மணர் ஏன் தன் சகோதரரின் அனுமதி பெற்று என்னை மீட்கவில்லை?

'காற்றையும், நெருப்பையும் போல் சக்தி வாய்ந்தவர்களான, தேவர்களைக் கூட பிரமிக்க வைப்பவர்களுமான இந்த இரு மனிதச் சிங்கங்களும் ஏன் இவ்வாறு என்னைக் கைவிட்டு விட்டார்கள்?

'இந்த இரு திறமைசாலிகளும் என்னை மறந்து விட்டார்கள் என்பது என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு பெரிய குற்றத்தின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.'

"பெருகி வரும் கண்ணீருக்கிடையே வெளிப்பட்ட விதேஹ நாட்டு இளவரசியின் இந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நான் மீண்டும் பேசினேன்.

"ஓ, தேவி! நான் கூறுவது உண்மை. உங்கள் விஷயத்தில் ஏற்பட்ட துயரத்தின் காரணமாக, ராமர் வாழ்க்கையில் அனைத்திலும் ஆர்வமற்றவராக ஆகி விட்டார். ராமர் இவ்வாறு சோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, லக்ஷ்மணரும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகத் துன்புறுகிறார்.

"ஓ, உயர்ந்தவரே! நீங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ஷ்டவசமாகத்தான், துயரப்படுவதற்கான காலம் இனி இல்லை. நீங்கள் விரைவிலேயே உங்கள் துயரின் முடிவைக் காண்பீர்கள்.

"உங்களைக் காண வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தினால், அந்த இரண்டு வீரர்களும் விரைவிலேயே இலங்கையைச் சாம்பலாக்கப் போகிறார்கள்.

"உயர் குலத்து இளவரசியே! தன் கோபத்தினால் ராமர் விரைவிலேயே ராவணனையும் அவன் எல்லா உறவினர்களையும் போரில் கொன்று விட்டு உங்களைத் தன் நகருக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போகிறார். 

"இந்த விஷயங்கள் பற்றிய உண்மையை ராமர் அறிந்து கொள்வதற்காக, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு அடையாளத்தை  நீங்கள் கொடுக்க வேண்டும்.

"எல்லையற்ற சக்தி கொண்ட ராமபிரானே! அந்த மாதரசி சீதை சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, இந்தச் சூடாமணியைத் தன் முடியிலிருந்து கழற்றி அதை என்னிடம் கொடுத்தார்.

"ரகு குல திலகரே! உங்கள் சார்பாக அந்த மணியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பின், நான் அவரை வணங்கி விட்டு இங்கு திரும்பி வருவதற்காக விரைந்தேன்.

"கிளம்பத் தயாராக என் உடலை நான் பெரிதாக்கிக் கொண்டதைப் பார்த்ததும், இப்போது மிகவும் துயரமான நிலையில் உள்ள, உயர்ந்தவரான ஜனகரின் மகள் தேற்ற முடியாத அளவுக்கு மீண்டும் அழ ஆரம்பித்தார். கம்மிய குரலில் என்னிடம் கூறினார்:

'ஓ, ஹனுமான்! இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சக்திவாய்ந்த இளவரசர்கள் ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கும், சுக்ரீவர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கும் தெரிவித்து விடு.

'ஓ, வீரம் மிகுந்தவனே! ரகுகுல திலகரான ராமர் தானே இங்கு வந்து என்னை இந்தத் துன்பக் கடலிலிருந்து தூக்கிச் செல்வதற்கான எல்லா உதவிகளையும் நீ செய்ய வேண்டும்.

'ஓ, உயர்ந்த வானரனே! நீ ராமர் இடத்துக்குச் சென்றவுடனேயே, என் துன்பத்தின் தீவிரத்தை - இந்த அரக்கிகளால் நான் எப்படி அச்சுறுத்தப்பட்டுள்ளேன் என்பதை - அவரிடம் தெரிவிக்க வேண்டும். நீ திரும்பச் செல்லும் பயணம் உனக்குத் தடங்கல்கள் ஏதுமின்றி அமையட்டும்.'

"அரசர்களுக்கெல்லாம் அரசரே! தன் கொடிய துன்பத்தைத் தங்களிடம் மிகவும் பணிவுடன் தெரிவிக்கும்படி சீதாப்பிராட்டி என்னிடம் கூறினார். 

"சீதாப்பிராட்டி தன் கற்பை முழுவதுமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவீர்களாக. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது உங்களுக்குத் தகும்."

சர்க்கம் 68


2 comments: