
பிறகு அவர் சீதையின் காலில் விழுந்து வணங்கிய பின், தன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பியபடி நின்று அவரிடம் இனிய குரலில் பேசத் தொடங்கினார்.
"கசங்கிய பட்டாடை உடுத்தியிருக்கும், தாமரை போன்ற கண்களை உடைய அழகிய பெண்மணியே! தாங்கள் ஏன் இந்த மரத்தின் கிளையை உங்கள் கைகளில் பிடித்தபடி நின்று கொண்டிருக்கிறீர்கள்? தாங்கள் யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா?
"தாமரை மலரிலிருந்து நீர் வடிவது போல் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வழிவதன் காரணம் என்ன? அழகானவரே! நீங்கள் யார்? - தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் அல்லது அரக்கர்கள் ஆகியோர்களில் ஒருவரா? அல்லது யக்ஷர்கள் அல்லது கின்னரர்களில் ஒருவரா?
"அழகிய முகமும், அழகான உடல் உறுப்புகளும் கொண்டு விளங்கும் பெண்மணியே! எனக்கு நீங்கள் தெய்வாம்சம் கொண்டவராகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் ருத்ரர்கள், மருத்கள் அல்லது வசுக்கள் வகையைச் சேர்ந்தவரா? அல்லது எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் விட உயர்ந்த, தன் கணவன் சந்திரனை விட்டு விட்டுத் தரையில் விழுந்து விட்ட ரோகிணி நட்சத்திரமா தாங்கள்?
"குறையில்லாத கண்களைக் கொண்ட மங்களமானவரே! கோபத்தினாலோ, அஜாக்கிரதையாலோ தன் கணவர் வசிஷ்டரைப் பிரிந்து இங்கு வந்து விட்ட அருந்ததியாக ஒருவேளை நீங்கள் இருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது.
"அழகிய பெண்மணியே! உங்கள் புதல்வர்கள் யார், உங்கள் தந்தை யார், உங்கள் சகோதரர்கள் யார் என்று நான் அறிந்து கொள்ளலாமா? உங்கள் கணவர் யார்? நீங்கள் எந்த கிரகத்திலிருந்து தவறாக இந்த பூமியில் வந்து இறங்கித் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறீர்கள்?
"நீங்கள் அழுவதாலும், நீண்ட பெருமூச்சு விடுவதாலும், உங்கள் கால்கள் தரையைத் தொடுவதாலும், ஒரு உயர்ந்த பெயரை உங்கள் அரிய செல்வமாக நினைத்து நீங்கள் எப்போதும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதாலும் நீங்கள் ஒரு தேவலோகத்துப் பெண் இல்லை என்று நான் கருதுகிறேன்.
"தாங்கள் ஜனஸ்தானம் என்ற இடத்திலிருந்து ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட பெண்மணியான சீதை என்று நான் நினைக்கிறேன். அவ்வாறானால், என் ஊகத்தை உறுதி செய்யுங்கள். அவ்வாறு செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்: ஏனெனில், நான் உங்களைப் பற்றி விசாரித்தறிய வந்திருக்கிறேன்.
"உங்களிடம் நான் காணும் அழகு மனிதர்களிடம் காண முடியாதது. தவத்தால் உங்கள் மேனி ஒளிர்கிறது. உங்கள் மன வருத்தம் விவரிக்க இயலாதது. இவையெல்லாம் நீங்கள் ராமபிரானின் பட்டத்து ராணியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு என்னை வரவழைக்கின்றன."
ஹனுமானின் சொற்களையும், அவர் ராமபிரானைப் புகழ்ந்து பேசியதையும் கேட்ட வைதேஹியின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அசோக மரத்தின் மீது சாய்ந்தபடி, தலையை நிமிர்த்தி அவர் பேச ஆரம்பித்தார்.
"உலகம் முழுவதும் புகழ் பெற்றவரும், உலகத்தில் உள்ள அரசர்களுள் மிக மேலானவரும், தன் எதிரிகளுக்கு அச்சமூட்டுபவருமான தசரத சக்ரவர்த்தியின் மருமகள் நான். உயர்ந்த ஆத்மாவான விதேஹ நாட்டு அரசர் ராஜரிஷி ஜனகரின் மகள் நான். என் பெயர் சீதை. அறிவு மிகுந்தவரான ராமபிரானின் மனைவி நான்.
"என் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டும், ஒரு மனிதர் அனுபவிக்கக் கூடிய எல்லா இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டும் ராமபிரானின் அரண்மனையில் 12 ஆண்டுகள் நான் வாழ்ந்தேன். அதற்குப் பிறகு, 13ஆவது ஆண்டில், இக்ஷ்வாகு குலத்தில் சிறந்தவரான ராமரை அரசாளும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்படி அரசரும், அவரது அரண்மனைப் புரோகிதர்களும் பணித்தனர்.
"இந்த முடிவைத் தொடர்ந்து, ராமரின் முடிசூட்டலுக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தபோது, அரசிகளில் ஒருவரான கைகேயி, அரசர் தனக்குத் தருவதாக வாக்களித்திருந்த வரத்தைக் கொடுக்கும்படி கேட்டார்.
"அவர் சொன்னார்: 'ராமன் அரசனாக முடி சூட்டப்பட்டால், நான் உண்ணாவிரதம் இருப்பேன். அன்றுதான் என் வாழ்வின் கடைசி நாளாக இருக்கும். பேரரசே! முன்பொரு நாள் உங்களிடமிருந்து உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் வெளிப்பட்ட சொற்களைப் பொய்யாக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.'
"நேர்மையான அந்த அரசர், அரசிக்குத் தான் வாக்குக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் கைகேயியின் கொடிய சொற்களால் அவர் மிகவும் புண்பட்டு மனம் வருந்தினார்.
"பிறகு உண்மையும், நேர்மையும் கொண்ட அந்த வயதான அரசர் கண்ணீர் நிரம்பிய கண்களுடன், தன்னுடைய அரசுரிமையை பரதனுக்கு விட்டுக் கொடுக்கும்படி ராமனிடம் இறைஞ்சினார்.
"அரசுரிமையை விடத் தன் தந்தையின் வாக்கைப் பெரிதாக மதித்த ராமர் தன் தந்தையின் வேண்டுதலுக்கு உடனே இணங்கினார்.
"நேர்மைக்குப் பெயர் பெற்ற ராமருக்கு எப்போதுமே கொடுத்துத்தான் பழக்கம், வாங்கிப் பழக்கம் இல்லை. ராமர் இனிமையாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார், அது அவருடைய உயிருக்கு ஆபத்தாக இருந்தாலும் கூட.
"அதனால், கீர்த்தி பெற்ற அந்த மனிதர் தன் விலையுயர்ந்த உடைகளையும், அரசுரிமையையும் எந்த ஒரு தயக்கமும் இன்றி விருப்பத்துடன் விட்டுக் கொடுத்தார். என்னைத் தன் தாயிடம் ஒப்படைத்தார்.
"ஆனால் அவருக்கு முன்பே நான் காட்டுக்குக் கிளம்பி விட்டேன்; ஏனெனில் அவர் இல்லாமல் சொர்க்கத்தில் இருக்கவும் நான் விரும்ப மாட்டேன்.
"சுமித்ரையின் குமாரரும், எல்லோருக்கும் நல்லவரும் உயர்ந்தவருமான லக்ஷ்மணரும் காட்டுக்குப் போக முன்னதாகவே கிளம்பி, காட்டில் உடுத்திக் கொள்ள வேண்டிய மரவுரியுடன் தயாராக நின்றார்.
"எங்கள் பிரபுவின் உத்தரவுக்கு உரிய மதிப்புக் கொடுத்து, இதற்குமுன் நாங்கள் பழக்கப்பட்டிராத, மனிதர்கள் மனதில் அச்சத்தையம், மரியாதையையும் ஏற்படுத்தக் கூடிய காட்டு வாழ்க்கையை, கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்து நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
"நாங்கள் தண்டகாரண்யத்தில் வசித்து வந்தபோது, வீரம் பொருந்திய ராமரின் மனைவியான நான் தீய உள்ளம் கொண்ட ராவணனால் கடத்தப்பட்டேன். ஆனால் அவன் என் ஆயுளை இன்னும் இரண்டு மாதங்கள் நீட்டித்திருக்கிறான். எனவே இன்னும் இரண்டு மாதங்களுக்குள் என் வாழ்வு முடியப் போகிறது."
இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment