Thursday, January 2, 2020

34. 31ஆவது சர்க்கம் - ராமரின் கதையைக் கூறுதல்

மேற்கண்டவாறு பலவாறு சிந்தித்த பின் ஒரு முடிவுக்கு வந்த அந்த உயர்ந்த வானரர் சீதைக்குக் கேட்கும்படியாக, இனிமையான குரலில் ராமரின் கதையைக் கூறத் தொடங்கினார். அவர் சொன்னார்:

"தசரதன் என்று ஒரு பலம் பொருந்திய அரசர் இருந்தார். அவர் பக்தி மிகுந்தவர். தேர்கள், யானைகள் போன்றவற்றுடன் கூடிய பெரிய ராணுவம் அவரிடம் இருந்தது. அவர் உண்மையானவர், உலகெங்கும் புகழ் பெற்றவர்.

"ராஜரிஷிகளுக்குள் அவர் மேன்மையானவர். விரதங்களை அனுசரிப்பதில் அவர் முனிவர்களுக்கு இணையானவர். அவர் சக்கரவர்த்திகளின் வழி வந்தவர். சக்தியில் அவர் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு ஒப்பானவர்.

"அஹிம்சைத் தத்துவத்தைப் பின்பற்றுவதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர் உயர்ந்த உள்ளம் கொண்டவர், கருணை நிறைந்தவர், உண்மையான வீரர். அதிர்ஷ்டம் மிகுந்தவராகவும், செல்வந்தராகவும் இருந்த அவர் இக்ஷ்வாகு குலத்தின் தலைவராக இருந்தார்.

"ஒரு அரசருக்கு உரித்தான எல்லாத் தன்மைகளும் அவரிடம் இருந்தன. அவர் செல்வம் அளவற்றதாக இருந்தது. அவர் அரசர்களுக்கெல்லாம் அரசராக இருந்தார். நான்கு கடல்களால் சூழப்பட்ட உலகம் முழுவதும் அவர் புகழ் பரவி இருந்தது. அவர் நல்லவராக இருந்ததுடன் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்பவராகவும் இருந்தார்.

"அவருடைய அன்புக்குரிய, நிலவு முகம் கொண்ட மூத்த மகன் ராமன் என்று பெயரிடப்பட்டார். வில் வித்தையிலும், கல்வியிலும் ராமர் எல்லோரையும் விடச் சிறப்பானவராக இருந்தார். அவர் அறத்தின் காவலராகவும், தன் நாட்டு மக்களின் காவலராகவும் இருந்தார்.

"எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த அவர் எல்லா மக்களுக்கும், தர்மத்துக்கும் புகலிடமாக இருந்தார். தர்மத்தில் நிலை பெற்றிருந்த அந்த வீரர் தன் தந்தையின் கட்டளையால் துறவு மேற்கொண்டு, தன் மனைவியுடனும், தம்பியுடனும் காட்டுக்குச் செல்ல நேர்ந்தது.

"அவர் காட்டில் வேட்டையாடியபோது எந்த வடிவத்தையும் எடுக்க கூடிய பல அசுரர்கள் அவரால் கொல்லப்பட்டனர். 

"ஜனஸ்தானத்தில் அவரால் அரக்கர்கள் அழிக்கப்பட்டதையும், கர தூஷணர்கள் கொல்லப்பட்டதையும் கேள்வியுற்ற ராவணன் ஒரு தந்திரச் செயலால், ஒரு அரக்கனை மான் வடிவம் எடுக்கச் செய்து, அந்த மானால் ஜானகி கவரப்பட்டதைப் பயன்படுத்தி, ராமரை அப்புறப்படுத்தினான்.

"அந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ராவணன் சீதையைக் கடத்தி விட்டான்.

நற்குணம் பொருந்திய ராமர் கானகத்தில் சீதையைத் தேடிக் கொண்டிருந்தபோது, வானர அரசரான சுக்ரீவரின் துணை அவருக்குக் கிடைத்தது. 

"சுக்ரீவர் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதாக சபதம் மேற்கொண்டார். பதிலுக்கு, வானரர்கள் ராஜ்யத்தை சுக்ரீவருக்குப் பெற்றுத் தருவதாக ராமர் உறுதி அளித்தார்.

"இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்காக சக்தியும், வீரமும் மிகுந்த ராமர் வாலியைக் கொன்று சுக்ரீவரை வானரர்களின் அரசராக்கினார்.

"சுக்ரீவரால் அனுப்பப்பட்டு, எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடிய ஏராளமான வானரர்கள் சீதையைத் தேடி எல்லாத் திசைகளிலும் சென்றனர்.

"சம்பாதியின் வார்த்தைகளால் இயக்கப்பட்டு, நான் பெரும் உற்சாகத்துடன் சீதையைத் தேடுவதற்காக நூறு யோஜனைகள் அகலம் கொண்ட இந்த சமுத்திரத்தைத் தாண்டி வந்தேன்.

"எனக்குச் சொல்லப்பட்ட விவரங்களுடன் ஒத்துப் போகும் அவரை நான் கண்டு பிடித்து விட்டேன். அவருடைய வடிவம், நிறம் மற்றும் பிரகாசம் பற்றி ராமரிடமிருந்து நான் கேட்டறிந்திருக்கிறேன்."

இவ்வாறு பேசிய பிறகு, ஹனுமான் சற்று மௌனமாக இருந்தார். 

அவர் பேச்சைக் கேட்ட சீதை மிகுந்த திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார். பிறகு முனைகளில் சுருண்ட கேசத்தைக் கொண்ட அந்தப் பெண்மணி அச்சமடைந்து, முகத்தில் விழுந்த கேசத்தினால் மறைக்கப்பட்ட தன் முகத்தை நிமிர்த்தி சிம்சுபா மரத்தின் உச்சியைப் பார்த்தார்.

தன் சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ராமனுக்கே அர்ப்பணித்திருந்த அந்தப் பெண்மணி, அந்த வானரரின் சொற்களைக் கேட்டு உடனே மனம் மகிழ்ந்தவராக எல்லாப் புறங்களிலும் பார்த்தார். 

மேலும், கீழும், சுற்றுமுற்றும் கவனமாகப் பார்த்த அவர் எல்லையற்ற அறிவு கொண்டவரும், வானர அரசனின் அமைச்சரும், உதய சூரியனைப் போல் ஒளிர்ந்தவருமான வாயுமைந்தனைப் பார்த்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:
 

No comments:

Post a Comment