Thursday, November 28, 2019

33. 30ஆவது சர்க்கம் - ஹனுமானின் சங்கடம்

சீதையின் வார்த்தைகள், திரிஜடையின் பேச்சு, அரக்கிகளின் பயமுறுத்தும் பேச்சுக்கள் அனைத்தையும் வீரரான ஹனுமான் கேட்டார். 

பிறகு, சீதையை நந்தனவனத்தில் இருந்த ஒரு தெய்வீகப் பெண்ணாகப் பார்த்த ஹனுமான் பல்வேறு சிந்தனைகளில் ஈடுபட்டார்.

"ஆயிரக்கணக்கான குரங்குகளாலும், இன்னும் பலராலும் பல திசைகளிலும் தேடப்பட்டு வரும் சீதை என்னால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். 

"என் எஜமானரால் அறிவார்ந்த யோசனையுடன் ஒரு ரகசிய தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் என்னால், எதிரியின் சக்தியை ரகசியமாக ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் என்னால், அவர் பார்க்கப்பட்டிருக்கிறார்.

"அரக்கர்களின் தன்மைகள், இந்த நகரம், அரக்கர் குல அரசனான  ராவணனின் சக்தி ஆகியவை என்னால் கண்டறியப்பட்டிருக்கின்றன.

"அளவற்ற சக்தி கொண்டவரும், எல்லா உயிர்களிடமும் கருணை கொண்டவருமான ராமரைக் காண வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ள அவருடைய மனைவிக்கு நான் ஆறுதல் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எதிர்பாராத துன்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள, முழுநிலவு போன்ற முகத்தைக் கொண்டிருக்கும், சோகத்தால் பீடிக்கப்பட்டு அந்த சோகத்துக்கு முடிவு காணாமல் இருக்கும் இந்தப் பெண்மணிக்கு நான் ஆறுதல் கூறுவேன்.

"சோகத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் ராமரின் மனைவியான இந்தப் பெண்மணிக்கு ஆறுதல் கூறாமல் நான் இங்கிருந்து கிளம்பினால், என் பயணம் மாசடைந்ததாக இருக்கும். 

"நான் கிஷ்கிந்தைக்குத் திரும்பியதும், தன் துயரத்திலிருந்து மீட்சி கிடைக்காமல், பெருமைக்குரிய இளவரசி ஜானகி தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.

"நீண்ட கரங்களைக் கொண்ட, முழு நிலவின் தோற்றமுடைய சீதையைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கும் ராமர் என்னால் ஆறுதல் கூறப்பட வேண்டியவர்.

"இந்த அரக்கியர் முன்னிலையில் சீதையிடம் பேசுவது உசிதமல்ல. இதை எப்படிச் செய்வது? எனக்குப் புரியவில்லை. 

"அவரை நான் சமாதானப்படுத்தா விட்டால், இந்த இரவு முடிவதற்குள் அவர் எந்த வழியிலாவது தன் உயிரை மாய்த்துக் கொள்வார். அதில் சந்தேகமில்லை.

"மெல்லிய இடை கொண்ட இந்தப் பெண்மணியிடம் பேசாமல் நான் இங்கிருந்து சென்றால், தன்னைப் பற்றி சீதை என்ன சொன்னார் என்று ராமர் என்னிடம் கேட்டால், நான் என்ன பதில் சொல்ல முடியும்? 

"சீதையிடம் செய்தி பெறாமல் நான் இங்கிருந்து அவசரமாகத் திரும்பிச் சென்றால், ராமர் கோபம் கொண்டு, தீப்பிழம்பு போன்ற தன் கண்களால் என்னை எரித்து விடுவார்.

"ராமருக்கு உதவ சிறந்த வகையில் செயல்படும்படி என்னால் சுக்ரீவரிடம் வலியுறுத்த முடிந்தாலும், படையுடன் அவர் இங்கே வருவது பயனளிக்காது.

"இங்கேயே இருந்து, அரக்கிகள் இருக்கும்போதே, அவர்கள் கவனம் திசை திரும்பியிருக்கும் நேரத்தில், ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, துயரத்தில் இருக்கும் சீதையை நான் மெல்லச் சமாதானப் படுத்துவேன்.

"நான் உருவத்தில் மிகவும் சிறியவன், அத்துடன் ஒரு வானரம். ஆயினும் மனிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தில் என்னால் பேச முடியும். 

"நான் ஒரு அந்தணன் பேசுவது போல் சம்ஸ்கிருதத்தில் பேசினால், ஒரு குரங்கால் எப்படி சம்ஸ்கிருதத்தில் பேச முடியும் என்று நினைத்து, நான் ராவணனாக இருப்பேனோ என்று சந்தேகித்து சீதாப்பிராட்டி பயந்து விடக் கூடும்.

"மனிதர்கள் பேசும் அர்த்தமுள்ள விஷயங்களை நான் பேச வேண்டும். இல்லாவிட்டால் அப்பழுக்கற்ற சீதைக்கு ஆறுதல் கூற முடியாது.

"அரக்கர்களால் ஏற்கெனவே அச்சமடைந்திருக்கும் சீதை, என் உருவத்தாலும், மொழியாலும் மீண்டும் அச்சமடையக் கூடும். 

"பெரிய கண்களைக் கொண்ட இந்த சீதை, எந்த உருவத்தையும் எடுக்கும் வல்லமை கொண்ட ராவணனாக என்னைக் கருதி, அச்சமடைந்து பெரிதாகக் கூவக் கூடும்.

"சீதை கூச்சல் போட்டவுடனேயே, பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்திய, யமனைப் போன்ற பயங்கரமான தோற்றம் கொண்ட அரக்கிகள் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டு விடும். 

"பிறகு கோர முகம் கொண்ட அந்த அரக்கிகள் என்னை எல்லாப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டு, தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி, என்னைப்  பிடிக்கவும், கொல்லவும் முயலக் கூடும்.

"நான் வலுவான மரங்களின் பெரிய கிளைகளையும், கொம்புகளையும், அடிப்புறத்தையும் பிடித்துக் கொண்டு, இங்கும் அங்கும் ஓடுவதைக் கண்டு அவர்கள் கலவரம் அடையக் கூடும். 

"என் பெரிய உருவம் அந்தத் தோட்டத்தில் திரிவதைக் கண்டு அந்த கோர முகம் கொண்ட அரக்கிகள் அச்சம் கொள்ளக் கூடும்.

"பிறகு அந்த அரக்கிகள் ராவணனின் அரண்மனையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் மற்ற அரக்கர்களைக் கூவி அழைக்கக் கூடும். 

"அந்த அரக்கர்கள் அதிக உத்வேகத்துடன். சூலம், கத்தி, ஈட்டி போன்ற பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு விரைந்து வந்து என்னுடன் போர் புரியக் கூடும்.

"எல்லாப் புறமும் அவர்களால் சூழப்பட்ட பின், அவர்களோடு நான் போரிட வேண்டியிருக்குமென்பதால், என்னால் சமுத்திரத்தின் மறு கரைக்குப் போக முடியாமல் போகக் கூடும்.

"அல்லது பல அரக்கர்கள் ஒன்றாக என் மீது பாய்ந்து, வேகமாகச் செயல்பட்டு என்னைப் பிடித்து விடக் கூடும். அப்புறம் நான் வந்ததே சீதைக்குத் தெரியாமல் போகக் கூடும். நானும் சிறைப்பட்டு விடலாம்.

"அல்லது கொடிய மனம் கொண்ட அரக்கர்கள் சீதையைக் கொன்று விடலாம். அதன் விளைவாக ராமர் மற்றும் சுக்ரீவரின் பணி கெட்டு விடும். 

"கடல் சூழ்ந்த பகுதியில், அரக்கர்களால் சூழப்பட்டு, இந்த ரகசியமான இடத்தில் சீதை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

"போரிடும்போது நான் இறந்து போனாலோ அல்லது அரக்கர்களால் பிடிக்கப்பட்டாலோ, ராமரின் பொருட்டு, சீதையைத் தேடிக் கண்டு பிடிக்கும் இந்தப் பணியை நிறைவு செய்யும் இன்னொரு தோழர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"எவ்வளவு யோசித்துப் பார்த்தபோதும், நான் கொல்லப்பட்டால், அதற்குப் பிறகு நூறு யோஜனை அகலமுள்ள இந்தக் கடலைத் தாண்டக் கூடிய இன்னொரு குரங்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 

"ஆயிரக்கணக்கான அரக்கர்களையும் கொல்லக் கூடிய வல்லமை படைத்தவன் நான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் ஒரு பெரிய போருக்குப் பின், கடலின் மறுகரைக்குச் செல்வது என்னால் இயலாமல் போகலாம்.

"என்னைப் பொருத்தவரை சண்டைகள் உண்மையற்ற தன்மை உள்ளவை. நிச்சயமற்ற முடிவில் எனக்கு விருப்பமில்லை. புத்திசாலியான எவரும் கவலையான மனநிலையில், உறுதியாகச் செயலில் இறங்க மாட்டார். 

"நான் சீதையிடம் பேசா விட்டால் அவர் உயிரைத் துறந்து விடுவார். அவருடன் பேசினாலோ விபரீதம் ஏற்பட்டு விடும். 

"விரைவிலேயே செயல்படுத்தப்படக் கூடிய செயல்கள், குழப்பமான தூதரின் கையால் காலத்துக்கும் நேரத்துக்கும் விரோதமாகச் செயல்படுத்தப்பட்டால், சூரிய உதயத்தினால் இருள் மறைவது போல், கெட்டு விடும்.

"எது பயனுள்ளது எது பயனற்றது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தாலும் அது சோபிக்காமல் போய் விடக் கூடும். 

"தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்ளும் தூதர்கள் உண்மையில் காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.

"நான் செய்யப் போகும் செயல் தவறாகாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது? என்னுடைய பலவீனங்களை நான் எப்படித் தவிர்ப்பது? நான் கடலைத் தாண்டி வந்தது வியர்த்தமாகி விடாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது?

"சீதை அச்சம் கொள்ளாமல், நான் சொல்வதைக் கேட்கும்படி செய்வது எப்படி?"

இவ்வாறு யோசித்தபடி ஹனுமான் கீழ்க்கண்டவாறு முடிவெடுத்தார்.

"செயல்களினால் சோர்வடையாதவரான, சீதையின் அன்புக்குரியவரான ராமரை நான் புகழ்ந்தால் சீதை பயப்பட மாட்டார்.

"இக்ஷ்வாகு குலத்தின் மிகச் சிறந்த இளவரசரும், மகாத்மாவுமான ராமரைப் பற்றி மங்களமான, உண்மையான வார்த்தைகளை நான் இனிமையான குரலில் பேசினால், சீதைக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து அவர் என்னை நம்பும்படி செய்ய முடியும்."

உயர்ந்த மனம் கொண்ட ஹனுமான் மரக்கிளைகளுக்கிடையே மறைந்து கொண்டு கீழ்க்கண்டவாறு பலவித விஷயங்களை, வீண் போகாத வார்த்தைகளில் கூறினார்.

No comments:

Post a Comment