
மையத்தில் கருப்பு வெள்ளை நிறத்திலும், ஓரங்களில் வில் போன்ற புருவங்களால் சூழப்பட்டும், சிவந்தும் இருந்த, அந்த அழகிய பெண்ணின் பெரிய இடது கண், மீனால் அசைக்கப்படும் தாமரை மலர் போல் துடித்தது.
வாசனை திரவியங்கள் பூசப்பட வேண்டிய, இணையற்ற பெருமை கொண்ட அவருடைய கணவரால் அன்புடன் பற்றப்பட்ட, அவருடைய நீண்ட, உருண்ட, அழகான இடது புஜமும் நீண்ட நேரம் துடித்தது.
அவருடைய உருவத்துக்கு ஏற்ற அளவில் இருந்த, யானையின் துதிக்கை போன்று இருந்த அவருடைய இடது தொடை துடித்ததிலிருந்து, ராமபிரான் சீக்கிரமே தன் கண் முன் வரப்போவதற்கான அறிகுறியையும் அவர் பெற்றார்.
தெளிவான கண்களும், மல்லிகை மொட்டுக்கள் போன்ற பற்களும் கொண்ட அந்த அழகிய பெண் நின்று கொண்டிருந்தபோது, அவருடைய மஞ்சள் நிற, அழுக்கடைந்த உடை பக்கவாட்டில் சற்று நழுவி விழுந்ததையும் அவர் பார்த்தார்.
காற்றினாலும், வெயிலினாலும் உலர்ந்து போன ஒரு விதையின் மீது மழைத்துளிகள் விழுந்ததும் அது முளை விடுவது போல், இத்தகைய அறிகுறிகள் மகிழ்ச்சியான நிகழ்வுகள் வரப்போவதைக் காட்டுவதாகப் பழைய அனுபவங்களிலிருந்து அறிந்திருந்த அந்தப் பெண்ணின் மனத்தில் மகிழ்ச்சி துளிர் விட்டது.
கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகளாலும், விற்களைப் போன்ற புருவங்களாலும், நீண்ட புருவ முடிகளாலும், அழகிய இமைகளாலும், மிகவும் வெண்மையான பொருட்களுக்கும் கூட வெண்மையூட்டக் கூடிய வெண்மையான பற்களாலும் அழகு சேர்க்கப்பட்ட அவருடைய முகம், ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட சந்திரனைப் போல் ஒளிர்ந்தது.
இந்த அனுபவங்களால் தன் மனத்துயரிலிருந்து விடுபட்டு, சோகம் ஏற்படுத்திய வெப்பத்திலிருந்தும் விடுபட்ட சீதை, மகிழ்ச்சியினால் அதிக வலுப்பெற்றவராக, வானில் எழும் வளர்பிறை காலத்து ஒளி மிகுந்த சந்திரன் போல் ஒளிர்ந்தார்.
No comments:
Post a Comment