Thursday, October 10, 2019

31. 28ஆவது சர்க்கம் - சீதையின் தற்கொலை முயற்சி

மனதில் அளவு கடந்த வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்திய அரக்கர்களின் அரசனின் பொறுக்க முடியாத வார்த்தைகளைக் கேட்ட பிறகு, சீதை சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட பெண் யானை போல் நடுங்கினார்.  

ராவணனின் வார்த்தைகளால் கலவரம் அடைந்தும், அச்சுறுத்திய அரக்கிகளுக்கிடையே சிக்கிக் கொண்டும், சீதை காட்டில் சிக்கிக் கொண்ட சிறு பெண்ணைப் போல் அச்சமடைந்து, தன் விதியை நினைத்து வருந்தினார். அவர் சிந்தனை இவ்வாறு ஓடியது.

"குறிப்பிட்ட காலத்தில்தான் மரணம் ஏற்படும் என்று பெரியோர்கள்  சொல்கிறார்கள். இது எவ்வளவு உண்மை! அதனால்தான், இவ்வளவு அதிர்ஷ்டம் கெட்டவளாக இருந்தும், இந்த அளவுக்கு அச்சுறுத்தப்பட்டும் நான் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

"துயரத்தால் பீடிக்கப்பட்ட, நம்பிக்கைக்கு வழியில்லாத என் இதயத்தை அழிக்க முடியாது போலும்! ஏனெனில், இவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்த போதும், வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட மலைகள் சுக்கு நூறாகப் பிளந்தது போல், என் மனம் தூள் தூளாக உடைந்து போகவில்லையே!

"எனவே இந்தக் கணமே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். இப்படிச் செய்வதில் பாவம் எதுவும் இல்லை. தகுதியற்ற ஒருவருக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க ஒரு உயர்ந்த மனிதர் மறுப்பது போல், ராவணனின் ஏற்றுக் கொள்ள முடியாத நோக்கங்களுக்கு நான் இணங்க மாட்டேன்.

"ராமர் வந்து என்னைக் காப்பாற்றாவிட்டால், இறந்து போன குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பது போல், ராவணன் என் உடல் உறுப்புகளைத் துண்டு துண்டாக வெட்டி விடுவான்.

"ஐயோ! மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஒரு இரவு மிக நீளமானதாகவும், பொறுத்துக் கொள்ள முடியாததாகவும் இருப்பது போல், இந்த இரண்டு மாத காலம் எனக்குப் பொறுத்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

"ஓ, ராமபிரானே! ஓ, லக்ஷ்மணா! ஓ, சுமித்ரா தேவி! ஓ, என்னிடம் அதிகம் கருணை கொண்ட மாமியார் கௌசல்யாதேவி! புயலில் சிக்கிய கப்பல் போல், இந்த அதிர்ஷ்டம் கெட்டவள் மிகக் கொடுமையான துயரை அனுபவிக்கிறேன்.

"இரண்டு சிங்கங்கள் மின்னலால் தாக்கப்பட்டது போல், இந்த இரண்டு இளவரசர்களும், என் பொருட்டு, மானாக வடிவெடுத்து வந்த அரக்கனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். 

"மரணம்தான் அந்த மான் வடிவில் வந்து அதிர்ஷ்டம் கெட்ட பெண்ணான என்னுடைய மூளையை மழுங்கச் செய்திருக்க வேண்டும். முட்டாள் பெண்ணான நான்தான் ராமபிரானை அவருடைய சகோதரர் லஷ்மணரிடமிருந்து பிரித்து விட்டேன்.

"ஓ ராமா! பலம் வாய்ந்த தோள்களும் நிலவு போன்ற முகமும் கொண்ட நீங்கள்தான் உண்மையானவர்! எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டு உதவுபவர்! இந்த அரக்கிகளுக்கு விருந்தாவதற்காக நான் கொல்லப்படப் போவதில்லை என்று உங்களுக்குத் தெரியும்.

"நன்றி கெட்டவருக்குச் செய்யப்படும் உதவி எப்படிப் பயனில்லாமல் போகுமோ, அது போல், உங்களைக் கடவுளாக நினைக்க வைத்து, சிறைப்படுத்தப்பட்டுத் தரையில் உறங்க வைத்து, இதுவரை என்னை ஒரு கற்பு நிறைந்த மனைவியின் பாதையில் வைத்திருந்த அந்தக் கற்புநெறி இப்போது எனக்கு எந்த நன்மையையும் செய்யாததாக ஆகி விட்டது.

"உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, உடலில் ரத்தமே இல்லாமல், வெறும் எலும்புக்கூடாக ஆகி, உங்களைச் சந்திக்க மீண்டும் வாய்ப்பே இல்லாமல், கற்புடைய பெண்ணான நான் ஒரு பரிதாபமான நிலையில் இருக்கிறேன். 

"நான் கடைப்பிடித்து வரும் கற்பு நெறியும், ஒரே ஒரு மனைவிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கடைப்பிடித்து வரும் விதியும், இரண்டுமே அர்த்தம் இல்லாதவையாகவும், வீணானவையாகவும் ஆகி விட்டன.

"நீங்களாவது, பதினான்கு ஆண்டுகள் காட்டில் இருந்து உங்கள் தந்தையின் ஆணையை நிறைவேற்றிய பிறகு, எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, உங்கள் தந்தைக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் உங்கள் நாட்டுக்கு பத்திரமாகத் திரும்பி, உங்கள் அன்னைகளின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் இதயத்தின் ஆழத்திலிருந்து பிரார்த்திக்கிறேன்.

"ஓ, ராமா! என் சிந்தனைகள் எப்போதும் உங்களைப் பற்றியே இருந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, என் தவம், விரதம் எல்லாம் பயனில்லாதவை ஆகி விட்டன. எனவே, நான் இப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன்.

"விஷம் குடித்தோ, ஒரு கூரான ஆயுதத்தைப் பயன்படுத்தியோ என் உயிரை நான் மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரக்கர்களின் நகரத்தில் எனக்கு விஷமோ, கூரான ஆயுதமோ பெற்றுத் தருபவர் யாரும் இல்லை."

இவ்வாறு பலவிதங்களிலும் தன் விதியை நொந்து கொண்டு, நடுங்கிக் கொண்டு, வாய் உலர்ந்து போய், தன் மனதில் ராமனை எப்போதும் நினைத்துக் கொண்டு, அந்தப் பெரிய பூக்கள் நிறைந்த சிம்சுபா மரத்தை சீதை அணுகினார்.

பிறகு தன் துயரத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு, சோகத்தில் ஆழ்ந்தவராய், தன் தலைப் பின்னலைக் கையால் பற்றியபடி சீதை சொன்னார்: "இந்தப் பின்னலால் என் கழுத்தை நெரித்துக் கொண்டு, இந்தக் கணமே நான் எமலோகத்துக்குச் செல்லப் போகிறேன்."

இவ்வாறு சொல்லியபடி, எல்லா அங்கங்களும் அழகாக அமைந்ததாகப் போற்றப்படும் சீதை, அந்த மரத்தின் கிளையைப் பற்றியபடி, அங்கேயே ஒரு கணம் நின்றார்.

அவருக்கு எப்போதும் ராமன், லக்ஷ்மணன், தன் அரண்மனை இவற்றையே நினைத்துக் கொண்டிருந்த அந்த அழகிய சீதைக்கு, அப்போது பல சகுனங்கள் தோன்றின. அவருடைய சோகமான மனநிலைக்கு மாறாக, நல்லது நடக்கப் போவதைக் காட்டுபவையாகக் கருதப்படும் அந்த சகுனங்கள் அவர் மனத்துக்குத் தெம்பூட்டுபவையாக அமைந்தன.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:




No comments:

Post a Comment