Tuesday, December 15, 2020

61. 58ஆவது சர்க்கம் - இலங்கையில் நடந்தவற்றை விவரிக்கிறார் ஹனுமான்

மஹேந்திர மலையின் உயர்ந்த சிகரத்தில் ஹனுமானும் மற்ற சக்தி வாய்ந்த வானரர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தனர். 

உடல் முழுவதும் மயிர்க் கூச்செரியும் உணர்வு ஏற்படுத்திய மகிழ்ச்சியுடன் எல்லா வானரர்களும் அமர்ந்திருந்தபோது, முழுமையான மனத்திருப்தியுடன் இருந்த ஹனுமானிடம், இலங்கையில் நிகழ்ந்தவை குறித்த கேள்விகளை ஜாம்பவான் கேட்டார்.

"சீதையை நீ எவ்வாறு பார்த்தாய்? அவர் நிலைமை எப்படி இருக்கிறது? கொடிய மனம் கொண்ட பத்துத் தலை ராவணன் அவரிடம் எப்படி நடந்து கொள்கிறான்? இவற்றையெல்லாம் நாங்கள் கேட்டு அறிய விரும்புகிறோம்.

"குரங்குகளின் தலைவனே! இந்த விஷயங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை எங்களுக்குச் சொல். நிலைமையை அறிந்த பிறகு அடுத்து என்ன செய்வதென்று நாம் முடிவு செய்வோம். 

"நாம் எவற்றைச் சொல்ல வேண்டும், நாம் எப்போது திரும்பிச் செல்ல வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பவற்றையெல்லாம் நீயே முடிவு செய். அறிவுக் கூர்மை படைத்த நீதான் இது பற்றி முடிவு செய்ய வேண்டும்."

அதற்குப் பிறகு, மனதில் நிறைந்திருந்த மகிழ்ச்சியால் உடல் முழுவதும் மயிர்க் கூர்ச்செறிந்தவராக இருந்த ஹனுமான் சீதையை மனதில் நினைத்து வணங்கி விட்டு இவ்வாறு பதிலளித்தார்:

கடலின் தென்கரைக்குச் செல்ல விரும்பி, இந்த மஹேந்திர மலையின் உச்சியிலிருந்து நான் வானத்தில் எழும்பியது உங்கள் முன்னிலையில்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வழியில், தெய்வீக உருவம் கொண்ட மனம் கவரும் ஒரு மலைச் சிகரம் என் பாதையை மறைத்துக்கொண்டு என் முன் வந்தது. என் வழியை மறைத்ததால் அந்த மலையை ஒரு தடை என்று நான் கருதினேன். 

அந்த தெய்வீக மலையை நான் நெருங்கியபோது, அதை உடைத்துக் கொண்டு அதனூடே வழி ஏற்படுத்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று என் மனதில் தீர்மானித்தேன்.

சூரியன் போல் ஒளிவிட்ட அந்த மலையின் சிகரம் என் வாலால் அடிக்கப்பட்டு சுக்குநூறாக உடைந்தது. 

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்! என் பணி என்ன என்பதை அறிந்தது போல் அந்த உயர்ந்த மலை "ஓ, குழந்தாய்!" என்று என்னிடம் இனிய வார்த்தை பேசியது - என் இதயத்தைக் கரைத்த அன்பான சொல் அது.

அந்த மலை கூறியது:
"கடலுக்குள் வசிக்கும் மைனாகம் என்னும் மலை என்று என்னை அறிவாயாக. நான் வாயுதேவரின் நண்பன். உன் தந்தையுடன் எனக்கிருக்கும் தொடர்பால் நான் உன் நலன் விரும்பி.

"குழந்தாய்! அந்நாட்களில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அவை தங்கள் விருப்பப்படி பூமியின் மீது பறந்து பலருக்கும் இழப்புக்களை ஏற்படுத்தின. 

"பகன் என்ற அசுரனைக் கொன்ற, தேவர்களின் பெருந்தலைவனான இந்திரன் மலைகளின் இந்தத் தீய பழக்கத்தை அறிந்ததும், தன் வஜ்ராயுத்ததால் அவற்றின் இறக்கைகளை வெட்டி விட்டான்.

"பிரியமானவனே! உன் தந்தை வாயுதேவர் உரிய காலத்தில் செய்த உதவியால் நான் மட்டும் இந்திரனின் கோபத்திலிருந்து தப்பினேன். என்னை ஆழ் கடலை நோக்கித் தள்ளிச் சென்று, கடலில் மூழ்க வைத்ததன் மூலம் உன் தந்தை என்னைக் காப்பாற்றினார்.

"எதிரிகளை அழிப்பவனே! ராமர் விஷயத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பதுதான் முறை. ஏனெனில், ராமர் சக்தியில் இந்திரனுக்கு ஒப்பானவர், அத்துடன் அறவழியில் நிலைபெற்றவர்களுக்குள் அவர் மிக உயர்ந்தவர்."

மகாத்மாவான அந்த மலையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், என் திட்டங்களை அவரிடம் கூறி, என் பணியைத் தொடர ஆயத்தமானேன். 

அது ஒரு பெரிய மலையாக இருந்தாலும், அது ஒரு மனித வடிவை எடுத்திருந்தது. உயர்ந்த ஆத்மாவான அந்த மைனாகம் நான்  என் பயணத்தைத் தொடர அனுமதித்தது. பிறகு அது தன் மனித வடிவத்தை விட்டு விட்டுக் கடலின் நடுவே ஒரு மலையாக அமர்ந்தது.

கடந்து செல்ல வேண்டிய தூரத்தைக் கருத்தில் கொண்டு நான் நீண்ட நேரம் வேகமாகப் பயணம் செய்தேன்.

அதற்குப் பிறகு நான் நாகர்களின் தெய்வீகத் தாயான சுரஸையைப் பார்த்தேன். நடுக்கடலில் என் முன் நின்ற அவள் கூறினாள்:

"ஓ, குரங்கே! தேவர்கள் உன்னை எனக்கு உணவாக அளித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் உன்னைப் போன்ற ஒருவன் எனக்குக் கிடைத்திருக்கிறான். எனவே உன்னை நான் உண்ணப் போகிறேன்."

சுரஸையின் வார்த்தைகளைக் கேட்டதும், என் முகம் வெளிறியது. கைகளைக் கூப்பியபடி அவள் முன் நின்று, நான் இவ்வாறு கூறினேன்:

"தசரதரின் புதல்வரான ராமர் தன் தம்பி லக்ஷ்மணருடனும், மனைவி சீதையுடனும் தண்டகாரண்யத்தில் வசித்து வருகிறார். தீய மனம் கொண்ட ராவணனால் அவர் மனைவி சீதை கடத்திச் செல்லப்பட்டார். 

"ராமரின் கட்டளைப்படி சீதையிடம் நான் ஒரு தூதனாகச் செல்கிறேன். ராமரின் நாட்டில் வசிக்கும் ஒரு பிரஜையாக, ராமர் விஷயத்தில் தேவையான உதவிகளை நீ எனக்குச் செய்வதுதான் பொருத்தமானது.

"இல்லாவிட்டால், மிதிலை நாட்டு இளவரசியைப் பார்த்து விட்டு , அவரைப் பற்றிய செய்தியை ராமரிடம் தெரிவித்து விட்டு, நான் இங்கே திரும்ப வந்து உன் வாய்க்குள் நுழைகிறேன். இந்த விஷயத்தில் என் சத்தியமான வாக்கை நான் உனக்குக் கொடுக்கிறேன்."

என் வேண்டுகோளை நான் கூறியதும், தான் விரும்பும் வடிவத்தை எடுக்கக் கூடிய வல்லமை பெற்ற சுரஸை கூறினாள்:

"நீ என்னைத் தாண்டிச் செல்ல முடியாது. உன்னை உண்பதற்கான வரம் பெற்றவள் நான்."

அவள் இவ்வாறு கூறியதும், கண் சிமிட்டும் நேரத்துக்குள், பத்து யோஜனை உயரமும், அதில் பாதி உயரமும் கொண்ட ஒரு வடிவத்தை நான் எடுத்துக் கொண்டேன்.

உடனே அவள் தன் வாயைத் திறந்து அதை என் உடலின் அகலத்துக்குப் பெரிதாக்கினாள். அவளுடைய மிகப் பெரிய வாயைப் பார்த்தததும், உடனே நான் என் உடம்பின் அளவை மீண்டும் குறைத்துக் கொண்டேன். 

அந்தக் கணமே, என் உடலைக் கட்டை விரல் அளவுக்குக் குறுக்கிக் கொண்டு, உடனே அவள் வாய்க்குள் புகுந்து ஒரு கணத்தில் வெளியே வந்தான்.

அந்த தேவ மங்கை சுரஸை அப்போது தன் உண்மையான வடிவத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் இவ்வாறு கூறினாள்:

"ஓ, வீரனே! நீ செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ தொடர்ந்து பயணித்து உன் பணியை நிறைவு செய். உயர்ந்த வானரனே! விதேஹ நாட்டு இளவரசியை உயர்ந்த ராமருடன் இணைப்பதற்கான அனைத்தையும் செய். ஓ, வானரனே! நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக!"

பிறகு எல்லா உயிர்களும் என்னைப் பாராட்டின. நான் கருடனைப் போல் எளிதாக வானத்தில் பறந்தபடி என் பயணத்தைத் தொடர்ந்தேன். 

நான் பறந்து கொண்டிருந்தபோது, என் நிழல் தடுக்கப்படுவதையும், என் வேகம் குறைந்ததையும் உணர்ந்தேன். ஆனால் இதைச் செய்வது யார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு தடைப்படுத்தப்பட்டதும், என் வேகத்தைக் குறைத்தது யார் என்று பத்துத் திசைகளிலும் கண்களைச் சுழற்றிப் பார்த்தேன். ஆனால் என்னால் யாரையும் காண முடியவில்லை.

நான் நினைத்துப் பார்த்தேன்: 'என்னால் யாரையும் காண முடியவில்லை. வானம் தெளிவாக இருந்தும், நான் ஒரு தடையை உணர்கிறேன். இது எதனால் இருக்கலாம்?'

இது போன்ற சிந்தனைகள் என் மனதில் எழுந்தன. நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் பார்வை கீழே செல்லவில்லை. எனவே நீரில் மிதந்து கொண்டிருந்த ஒரு பயங்கரமான அரக்கப் பெண்ணை நான் கவனிக்கத் தவறி விட்டேன்.

அந்தப் பெரிய பிறவி அப்போது தன் தீய நோக்கங்கள் பற்றி என்னிடம் தன் தெளிவான, உரத்த குரலில் கூறினாள்:

"பருத்த உருவம் கொண்டவனே! நீ எங்கே செல்கிறாய்? பசியுடன் இருக்கும் எனக்கு நீ சிறந்த உணவாக இருக்கிறாய். கடந்த பல நாட்களாக உணவு கிடைக்காததால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பசியை நீதான் போக்க வேண்டும்."

"அவ்வாறே இருக்கட்டும்" என்று சொல்லி நான் என் உடலை அவள் வாயை விடப் பெரிதாக ஆக்கிக் கொண்டேன். 

என்னை உண்ண வேண்டும் என்ற அவளுடைய ஆவலால், அவளுடைய பயங்கரமான வாய் மேலும் மேலும் பெரிதாகியது. ஆனால் என் பலத்தைப் பற்றியோ, என் திட்டத்தைப் பற்றியோ அவள் ஏதும் அறியவில்லை.

கண நேரத்தில் என் உடலைச் சிறிதாக்கிக் கொண்டு, அவள் வாய்க்குள் புகுந்து, அவள் இதயத்தைப் பிய்த்து வெளியில் இழுத்துப் போட்டு விட்டு மீண்டும்  வானில் எழும்பினேன்.

இவ்வாறு அவள் இதயம் வெளியே இழுத்துப் போடப்பட்டதால், மலை போன்ற உருவம் கொண்ட, உப்புக்கடலில் வசித்து வந்த அந்தப் பிறவி, உயிரிழந்து தன் கைகளை விரித்தபடி கடலுக்குள் மூழ்கினாள்.

அப்போது வானத்தில் சென்று கொண்டிருந்த சித்தர்கள் மற்றும் சாரணர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டேன்:

''சிம்ஹிகை என்னும் கொடிய அரக்கி ஹனுமானால் ஒரு கணத்தில் எளிதாகக் கொல்லப்பட்டாள்."

அவளைக் கொன்ற பிறகு, நான் கடந்து வந்த ஆபத்துகளைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தபடி வானில் நீண்ட தூரம் பறந்த பிறகு, இலங்கை நகரம் இருக்கும் கடலின் மறு கரையில்  இருந்த மலைகள் என் கண்ணுக்குப் புலப்பட்டன. 

சூரியன் மறைந்த பிறகு, யாராலும் காண முடியாத ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த சக்தி கொண்ட அரக்கர்களின் நகரத்துக்குள் நான் நுழைந்தேன்.

நான் அங்கே நுழைந்ததும், நெருப்பைப் போல் கனன்ற தலைமுடியுடன் இருந்த ஒரு பெண் பிரளய காலத்து இடியைப் போல் முழங்கிக் கொண்டு என்னை எதிர்ப்பது போல் எதிரே வந்து நின்றாள்.

என்னைக் கொல்வதற்காக அவள் என் எதிரே வந்தபோது, நான் என் இடது கை முஷ்டியால் அவளை ஒரு குத்து விட்டேன். இவ்வாறு முறியடிக்கப்பட்டதும், அவள் பணிந்து போய் என்னிடம் கூறினாள்:

"வீரனே! நான் பெண் உருவில் வந்திருக்கும் இலங்கையின் தேவதை. உன் வல்லமையால் நான் வெல்லப்பட்டேன்.அதனால், நீ எல்லா அரக்கர்களையும் வெல்லும் வல்லமை பெற்றவன்."

அதற்குப் பிறகு, விடியற்காலையில் நான் இலங்கைக்குள் நுழைந்தேன்.

இரவு முழுவதும் நான் ஜனகரின் மகளைத் தேடினேன். ராவணனின் அந்தப்புரத்துக்குள் கூட நுழைந்தேன், ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. 

ராவணனின் அரண்மனைக்குள் எங்கும் அவரைக் காணாமல் நான் கரை காண முடியாத துயரக் கடலுக்குள் விழுந்தேன்.

இவ்வாறு நான் ஆழ்ந்த சோகத்தில் இருந்தபோது, தங்கத்தால் இழைக்கப்பட்ட அற்புதமான சுவர்களால் சூழப்பட்ட ஒரு தோட்டத்தைப் பார்த்தேன். அந்தச் சுவற்றைத் தாண்டிக் குதித்துப் பல மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தேன்.

அசோக மரங்கள் மிகுந்த அந்தத் தோட்டத்தின் நடுவே நான் ஒரு பெரிய சிம்ஸுபா மரத்தைப் பார்த்தேன். அதன் மீது ஏறி, தங்க நிறம் கொண்ட வாழை மரங்கள் நிறைந்த ஒரு தோட்டத்தைப் பார்த்தேன்.

அத்தனை சிரமங்களுக்குப் பிறகு, சிம்ஸுபா மரத்தில் நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து, சற்றுத் தொலைவில் அந்த அழகிய சீதை போன்ற தோற்றம் கொண்ட ஒரு நபரை என்னால் காண முடிந்தது.

அவர் இளமையான உடல் வண்ணமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டிருந்தார். பயங்கரமான தோற்றம் கொண்ட, இறைச்சியையும், ரத்தத்தையும் புசிக்கும் அரக்கப் பெண்களால் அவர் சூழப்பட்டிருந்தார்.

பட்டினி கிடந்ததால் அவர் பொலிவிழந்தவராக இருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. அவர் தலைமுடியில் தூசு படர்ந்திருந்தது. அவர் மிகவும் பலவீனமான தோற்றம் கொண்டிருந்தார். ஒற்றை ஆடைஅணிந்திருந்தார். 

தன் கணவரின் நலம் பற்றியே எப்போதும் நினைத்தபடி, இடை விடாமல் தன்னை அச்சுறுத்திக் கொண்டிருந்த அரக்கிகளுக்கு நடுவே அவர் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.

தன் கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது மட்டுமே அவருடைய ஒரே செயல்பாடு. அவருடைய கூந்தல் ஒற்றையாக முடியப்பட்டிருந்தது.  

குளிர்காலத் தாமரையைப் போல் அவர் தரையில் கிடந்தார். ராவணனிடமிருந்து தப்பித்துச் செல்ல எந்த வழியும் அறியாமல் அவர் விரக்தியில் இருந்தார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட அவர் முடிவு செய்து விட்டார். 

அந்த நிலையிலும் தன் நற்புகழுக்கு ஒரு களங்கமும் இல்லாமல் இருந்த அவரைப் பார்த்த நான் அனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு அந்த சிம்ஸுபா மரத்தின் மீது அமர்ந்திருந்தேன்.

அப்போது ராவணனின் அரண்மனையிலிருந்து வந்த கொலுசுகள் மற்றும் ஒட்டியாணங்களின் உரத்த ஒலியை நான் கேட்டேன். 

அதனால் அதிகம் கவலையடைந்த நான் என் உருவத்தைச் சிறிதாக்கிக் கொண்டு, இலைகள் மிகுந்த அதே சிம்ஸுபா மரத்தின் மேல் ஒரு பறவையைப் போல் அமர்ந்திருந்தேன்.

சீதை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அந்தச் சக்தி வாய்ந்த ராவணனும், அவன் மனைவிகளும் வருவதைப் பார்த்தேன். 

அரக்கர்களின் அரசன் வருவதைக் கண்டதும், சீதை தன் கால்களை ஒடுக்கிக் கொண்டும், கைகளை மார்பின் குறுக்கே வைத்தும் தன் உடலை மறைத்தபடி அமர்ந்து கொண்டார்.

தலையைக் கீழே குனிந்து கொண்டு, இந்தப் புறமும், அந்தப் புறமும் நோக்கிக் கொண்டு மிகவும் பரிதாபமான, அச்சுறுத்தப்பட்ட தோற்றத்துடன் விரக்தியடைந்த நிலையில் இருந்த அந்த அறநெறி வழுவாத பெண்மணியிடம், கீழான நடத்தை உள்ள பத்துத் தலைகள் கொண்ட ராவணன் இவ்வாறு கூறினான்:

"ஓ, சீதா! என்னை மதித்து நடந்து கொள், கர்வம் பிடித்தவளே! உன் கர்வத்தினால்தான் நீ என்னை ஏற்க மறுக்கிறாய். என் கோரிக்கையை ஏற்காமல் இதே நிலையில் நீ தொடர்ந்தால், இன்னும் இரண்டு மாதங்களில் நான் உன் ரத்தத்தைக் குடித்து விடுவேன்."

தீய எண்ணம் கொண்ட அரக்கனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சீதை மிகுந்த கோபம் கொண்டு அவனுக்குப் பொருத்தமான பதிலை இவ்வாறு கூறினார்:

"தீய எண்ணம் படைத்த அரக்கனே! இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த பெருமை மிக்க அரசர் தசரதரின் மருமகளும், அளவற்ற வல்லமை கொண்ட ராமரின் மனைவியுமான என்னைப் பார்த்து, கூறக் கூடாத இத்தகைய வார்த்தைகளைக் கூறிய உன் நாக்கு இன்னும் ஏன் அறுந்து விழவில்லை?

"வெட்கமற்ற பாவியே! என் கணவர் அருகில் இல்லாதபோது, அவர் பார்வையில் நீ இல்லாதபோது,  என்னைக் கடத்தி வந்த உன் வீரம் மிகப் பெருமை வாய்ந்ததாகத்தான் இருக்க  வேண்டும்!

"நீ எப்போதும் ராமருக்குச் சமமாக மாட்டாய். எப்போதும் உண்மையாக இருப்பவரும், எப்போதும் மரியாதைக்குரியவராக இருப்பவரும், போரில் எப்போதும் தோற்கடிக்கப்பட முடியாதவருமான ராமரின் வேலைக்காரனாக இருக்கக் கூடத் தகுதியற்றவன் நீ."

ஜனகரின் மகளின் இந்தக் காதைக் குத்தும் பேச்சைக் கேட்டு ராவணன் கோபத்தில் நெருப்பாகக் கனன்றான். 

ரத்தம் பாய்ந்த தன் இரண்டு கண்களையும் உருட்டியபடி, அவரைக் கொல்லும் எண்ணத்தில் வலது முஷ்டியை மடக்கி உயர்த்தினான். அப்போது பெண்கள் "ஐயோ! ஐயோ!" என்று அலற ஆரம்பித்தனர்.

ராவணனின் மனைவி, உயர்ந்தவளான மண்டோதரி, பெண்களுக்கு நடுவிலிருந்து முன்னே வந்து அவனுடைய கொலைச் செயலைத் தடுக்கும் விதத்தில் நின்றாள். 

காமத்தின் பிடியில் இருந்த அந்த ராவணனிடம் அவள் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினாள்:

"இந்திரனுக்கு நிகரானவரே! இந்தச் சீதையிடம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? ஓ, பிரபுவே! இங்கிருக்கும் தேவ, கந்தர்வ மற்றும் யக்ஷப் பெண்களைக் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே! இந்தச் சீதையிடம் நீங்கள் இன்னும் என்ன சாதிக்கப் போகிறீர்கள்?"

அந்தச் சக்தி வாய்ந்த ராவணன் பெண்களால் இவ்வாறு சமாதானப்படுத்தப்பட்டு உடனே தன் அரண்மனைக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டான். 

பத்துத் தலைகள் கொண்ட ராவணன் கிளம்பிச் சென்றதும், கோர முகமும், இரக்கமற்ற இதயமும் கொண்ட அரக்கப் பெண்கள் எல்லா விதமான கொடிய சொற்களாலும் சீதையை அச்சுறுத்தத் தொடங்கினர்.

விதேஹ நாட்டு இளவரசி அவர்கள் பேச்சையெல்லாம் துரும்பாக மதித்து, அவற்றைப் புறம் தள்ளினார். எனவே அவர்களுடைய கடுஞ்சொற்கள் அவரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தங்கள் அச்சுறுத்தும் பேச்சுக்கள் பயனற்றுப் போனதை உணர்ந்து, இறைச்சியை உண்டு வாழும் அந்த அரக்கிகள் ராவணனுக்கு இணங்கப் போவதில்லை என்ற தன் முடிவில் சீதை உறுதியாக இருக்கிறார் என்பதை அவனிடம் தெரிவித்தனர்.

பிறகு அவர்கள் அனைவரும் விரக்தியும், தோல்வி உணர்வும் மிகுந்தவர்களாக, சீதையைச் சூழ்ந்து கொண்டு தூங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, தன் பரிதாபமான நிலையிலும் தன் கணவரின் நன்மையைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சீதை துயரத்தால் மனம் நொந்து அழுதார்.

அரக்கிகளில் திரிஜடை என்பவள் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, பிற அரக்கிகளிடம் இவ்வாறு பேச ஆரம்பித்தாள்:

"தசரதரின் மருமகளும், ஜனகரின் மகளும், கற்புடைய மனைவியுமான சீதையைத் தின்ன நினைப்பதற்கு பதில் உங்களையே தின்று கொள்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். அவர் எப்போதுமே அழிக்கப்பட முடியாதவர்.

"உண்மையில் இப்போதுதான் நான் ஒரு கனவு கண்டேன். அது நினைக்கவே மிகவும் பயங்கரமானது. அது என் உடலில் மயிர்க் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. அது அரக்கர்களின் அழிவு பற்றியும், இந்தப் பெண்ணின் கணவரின் வெற்றியையும் பற்றியது. 

"யாரைப் பற்றி நான் இப்படி ஒரு கனவு கண்டேனோ அந்தத் துயருறும் பெண்ணான இவர் நிச்சயம் அவருடைய துன்பங்களிலிருந்து விடுபட்டு இணையற்ற மகழ்ச்சி நிலவும் நிலைக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படப் போகிறார். 

"ஜனகரின் மகளும், மிதிலை நாட்டு இளவரசியுமான சீதை தன்னை வணங்குபவர்களிடம் கனிவு காட்ட எப்போதுமே தயாராக இருக்கிறார்.அதில் எந்த ஐயமும் இல்லை."

இதைக் கேட்டதும் அந்த உயர்ந்த பெண்மணி தன் கணவர் வெற்றி பெறப் போவதை நினைத்து மகிழ்ந்து, "இது உண்மையாகுமானால் நான் உங்கள் அனைவரையும் பாதுகாப்பேன்" என்று அவர்களிடம் கூறினார்.

சீதை இருந்த துயமான நிலையைக் கண்ட நான், அது பற்றி என் மனதில் பொறுமையாக நினைத்துப் பார்த்தேன். என்னால் என் மனத்தைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்போது ஜனகரின் மகளுடன் உரையாடுவதற்கான ஒரு வழி என் மனதில் தோன்றியது. அதன்படி, இக்ஷ்வாகு குலத்து மன்னர்களின் மேன்மைகள் பற்றி நான் பேச ஆரம்பித்தேன்.

அந்த அரச குலம் பற்றிய என் புகழுரைகளைக் கேட்டதும், பெருகி வந்த கண்ணீர் தன் பார்வையை மறைத்த நிலையில், சீதை என்னைப் பார்த்து  சில கேள்விகள் கேட்டார்:

"ஓ, உயர்ந்த வானரமே! நீ யார்? நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? உன்னால் எப்படி இங்கே வர முடிந்தது? ராமர் மீது உனக்கு அன்பு ஏற்பட்டது எதனால்? இவற்றையெல்லாம் என்னிடம் கூறுவாயாக."

அவருடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் இவ்வாறு பதில் கூறினேன்:

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்கள் கணவருக்கு உதவ இப்போது அவருக்கு சுக்ரீவர் என்ற நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் மிகவும் சக்தியும், துணிவும் கொண்டவர். அவர் ஒரு பெரிய போர் வீரர். அவர் வானரர்களின் அரசர்.

"உங்களிடம் வந்திருக்கும் நான் அந்த அரசரின் அமைச்சர் ஹனுமான் என்று அறிவீர்களாக. பெரும் செயல்களைப் புரிந்த உங்கள் கணவர் ராமர் என்னை உங்களிடம் ஒரு தூதுவனாக அனுப்பி இருக்கிறார்.

"ஓ, புகழ் மிக்க பெண்மணியே! தசரதரின் புதல்வரான அந்த உயர்ந்த ராமர் என்னை அவரது தூதுவனாக அடையாளம் காண ஒரு முத்திரை மோதிரத்தைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

"எனவே, ஓ, உயர்ந்த பெண்மணியே! நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உங்கள் கட்டளையை நான் எதிர் நோக்கி இருக்கிறேன். உங்களை இங்கிருந்து ராமரும் லக்ஷ்மணரும் இருக்கும் இடத்துக்குத் தூக்கிச் செல்லட்டுமா? உங்கள் கட்டளை என்ன?" 

என் வார்த்தைகளைக் கேட்டதும், அவை பற்றிச் சிறிது நேரம் யோசித்த பின், ஜனகரின் மகளான சீதை கூறினார்:

"ராமரே இங்கு வந்து ராவணனை அழித்து விட்டு என்னை அழைத்துச் செல்லட்டும்."

களங்கம் கூற முடியாத புகழ் கொண்ட அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட பெண்மணியைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, ராமர் அடையாளம் காணக் கூடிய, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நான் ராமருக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒரு செய்தியைத் தெரிவிக்குமாறு அவரிடம் வேண்டினேன். 

அப்போது சீதை என்னைப் பார்த்துக் கூறினார்:

"உன் மீது ராமருக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆபரணத்தை உன்னிடம் கொடுக்கிறேன். இதை உன்னுடன் எடுத்துச் செல்."

இவ்வாறு சொல்லி விட்டு அந்த உயர்ந்த பெண்மணி என்னிடம் அரிதான ஒரு ஆபரணத்தைக் கொடுத்தார். ராமரிடம் எல்லாத் தகவல்களையும் கூறும்படி துயரத்துடன் கூறினார்.

அதன் பிறகு எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்து முடித்து விட்ட உணர்வுடன், நான் திரும்பிப் போகத் தீர்மானித்து. அந்த உயர்ந்த இளவரசியை வலம் வந்து வணங்கினேன்.

பிறகு, எல்லாவற்றையும் பற்றிச் சிந்தித்த பின் அவர் என்னிடம் மீண்டும் ஒரு முறை கூறினார்:

"ஹனுமான்! தயவு செய்து என்னைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் ராமரிடம் கூறுவாயாக. ராமர், லக்ஷ்மணர் என்ற இரண்டு வீர இளவரசர்களும் சுக்ரீவருடன் இணைந்து இங்கே உடனே கிளம்பி வரும் விதத்தில் அனைவரிடமும் பேசி ஏற்பாடு செய்.

"நான் இன்னும் இரண்டு மாதங்கள்தான் உயிருடன் இருப்பேன். எனவே அவர்கள் இங்கே வரும் திட்டம் தாமதிக்கப்பட்டால், என்னைக் காக்க யாரும் இல்லாமல் நான் இறந்து போவேன். காகுஸ்தரின் வழி வந்த ராமரால் அப்புறம் என்னைப் பார்க்க முடியாமலேயே போகலாம்."

அந்தப் பரிதாபமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் மிகவும் கோபமடைந்து என் அடுத்த செயலைத் தீர்மானித்தேன்.

அப்போது என் உடல் ஒரு மலையளவு வளர்ந்தது. போரை உருவாக்க முடிவு செய்து, இலங்கையின் அந்தத் தோட்டத்தை நான் அழிக்கத் துவங்கினேன்.

கோர முகம் கொண்ட அரக்கிகள் அப்போது விழித்துக் கொண்டு, அந்தத் தோட்டம் அழிக்கப்பட்டதையும், அங்கே வசித்து வந்த விலங்குகளும், பறவைகளும் மிகுந்த பயத்துடன் பறந்து ஓடுவதையும் பார்த்தனர்.

அவர்கள் ஆங்காங்கே குழுக்களாகக் கூடி என்னை நோக்கி வந்தனர். எனக்கு அருகில் வந்ததும், என்னைப் பார்த்து விட்டு ராவணனிடம் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் கூறினர்: "ஓ, சக்தி வாய்ந்த அரசரே! உங்கள் சக்தியை அறியாமல், ஒரு தீய குரங்கு யாரும் நெருங்க முடியாத இந்தத் தோட்டத்துக்குள் நுழைந்து இதை அழித்து விட்டது.

"ஓ, உயர்ந்த அரசரே! இந்தக் குரங்கு கொல்லப்பட வேண்டும்.எனவே உங்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ள இந்த அறிவற்ற ஜிவனை உடனே கொல்ல நீங்கள் உத்தரவிட வேண்டும்."

அவர்கள் கூறியதைக் கேட்டதும், அரக்கர்களின் அரசனான ராவணன், கிங்கரர்கள் என்று அழைக்கப்படும், சக்தி வாய்ந்த, அவனுக்குக் கீழ்ப்படிந்த, காவல் காக்கும் அரக்கர்களை என்னை எதிர்க்க அனுப்பினான்.

சூலங்கள், கம்பிகள் பதிக்கப்பட்ட கட்டைகள், இன்னும் பல ஆயுதங்கள் கொண்ட எண்பதாயிரம் பேர் கொண்ட சேனை, அந்த அசோக வனத்தில் என்னால் கண்டெடுக்கப்பட்ட ஒரு இரும்பு உலக்கையால் என்னால் அழிக்கப்பட்டது.

உயிருடன் தப்பிய ஒரு சிலர் ராவணனிடம் விரைந்து ஓடி அவர்கள் பெரிய சேனை அழிக்கப்பட்டதைத் தெரிவித்தனர். 

அப்போது என் மனதில் புதிதாக ஒரு எண்ணம் தோன்றியது. அந்த இடத்திலிருந்து கிளம்பி அருகிலிருந்த ஒரு பெரிய மாளிகைக்கு அருகில் சென்றேன். அங்கிருந்த அரக்கர்களை ஒரு தூணால் அடித்துக் கொன்று விட்டு நான் அந்தக் கட்டிடத்தைத் தரை மட்டமாக்கினேன்.

அதற்குப் பிறகு, பிரஹஸ்தனின் மகனான ஜம்புமாலி, பல பயங்கரமான தோற்றமுடைய அரக்கர்களுடன் என்னைத் தாக்குமாறு பணிக்கப்பட்டான். போரைப் போன்ற அந்த அரக்கனையும் அவனுடன் வந்தவர்களையும் ஒரு இரும்பு உலக்கையை ஆயுதமாகக் கொண்டு  தாக்கி நான் அழித்தேன்.

இதைக் கேள்வியுற்றதும், அரக்கர்களின் அரசனான ராவணன் அதற்குப் பிறகு அவன் அமைச்சர்களின் சக்தி வாய்ந்த புதல்வர்களைப் பல்வேறு பிரிவுகள் கொண்ட ஒரு பெரிய சேனையுடன் அனுப்பினான். அவர்கள் அனைவரையும் அதே இரும்பு உலக்கையால் நான் அழித்தேன்.

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தன் அமைச்சர்களின் புதல்வர்கள் இறந்ததைக் கேள்விப்பட்டதும்,  வீரம் மிகுந்த ஐந்து தளபதிகளை ராவணன் எனக்கு எதிராகப் போரிட அனுப்பினான். நான் அவர்களையும், அவர்களுடைய சேனைகளையும் அழித்தேன்.

பிறகு அந்தப் பத்துத் தலை ராவணன் என்னை எதிர்க்க, அவனுடைய மகனான  மிகுந்த சக்தி வாய்ந்த அக்ஷனைப் பல அரக்கர்கள் கொண்ட சேனையுடன் அனுப்பினான்.

மண்டோதரியின் மகனும், சிறந்த வகையில் பயிற்சி பெற்ற வீரனுமான அக்ஷன், என்னுடன் போரிடும் முயற்சியில், கையில் ஒரு கத்தியுடன் வானில் எழும்பினான். 

நான் சட்டென்று அவனை என்  கால்களுக்கிடையே பிடித்துக் கொண்டு அவன் கழுத்தை நெரித்து அவனைக் கொன்ற பின் அவன் உடலைப் பல முறை சுழற்றித் தூக்கி எறிந்தேன்.

அக்ஷகுமாரனின் மரணம் ராவணனைக் கோபத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது. சக்தி வாய்ந்தவனும், போர்த்தாகம் கொண்டவனுமான அவனுடைய இன்னொரு மகனான இந்திரஜித்தை என்னைத் தாக்குவதற்காக அனுப்பினான்.

அந்தச் சேனை முழுவதையும் அழித்து, அரக்கர்களில் முதன்மையானவனான அந்த இந்திரஜித்தின் உற்சாகத்துக்கு முடிவு கட்டுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

எனக்கு எதிராகப் போரிட, ஆணவம் கொண்ட பல அரக்க வீரர்களுடன் கூட  அந்தச் சக்தி வாய்ந்த போர் வீரனை மிகுந்த நம்பிக்கையுடன் ராவணன் அனுப்பியிருந்தான்.

அவன் சேனை என்னால் அழிக்கப்பட்டதைக் கண்ட, என் திறமை பற்றி அறியாத இந்திரஜித் கவலை அடைந்த மனநிலையில் என்னை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். 

பிறகு அங்கிருந்த மற்ற அரக்கர்கள் என்னைக் கயிறுகளால் கட்டி ராவணன் முன்பு என்னை இழுத்துச் சென்றனர்.

தீய மனம் படைத்த ராவணன் முன்பு நான் நின்றபோது நான் இலங்கைக்கு வந்ததும், அரக்கர்களைக் கொன்றதும் ஏனென்று என்னிடம் கேட்கும்படி தன் அமைச்சரைப் பணித்தான். 

அவை எல்லாம் சீதை தொடர்பாகச் செய்யப்பட்டவை என்று நான் அவனிடம் தெரிவித்தேன்.

நான் சொன்னேன்: "ஓ, பேரரசனே! நான் வாயுவின் குமாரனான ஹனுமான் என்ற வானரன். உன்னைக் காண வேண்டும் எனபதற்காக இங்கு அழைத்து வரப்படுவதற்கான ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை ராமரின் தூதன் என்றும், சுக்ரீவனின் தூதனென்றம் அறிந்து கொள்.

"நான் உனக்கு ராமர் அனுப்பி இருக்கும் செய்தியுடன் வந்திருக்கிறேன். சக்தி வாய்ந்த அரசர் சுக்ரீவர் உன் நலம் பற்றி விசாரிக்கும்படி என்னிடம் கூறினார். தர்மத்தின்படியானதும், மனிதர்களின் உலக வாழ்க்கைக்கு இசைவானதும், நியாயமானதும், பயனுள்ளதுமான பின் வரும் செய்தியை உன்னிடம் கூறும்படி சுக்ரீவர் என்னிடம் கூறியிள்ளார்.

"அவருடைய செய்தி இதுதான்: 'காடுகள் அடர்ந்த ரிஷ்யமுக பர்வதத்தின் அரசனான எனக்கும், போரில் திறமை காட்டுவதற்குப் பெயர் பெற்ற ராமருக்கும் இடையே ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. ராமர் என்னிடம் கூறினார்: 'ஓ, அரசனே! ஒரு அரக்கன் என் மனைவியைக் கடத்தி விட்டான். இந்தக் கடினமான சூழலில் உன்னால் முடிந்த அதிகபட்ச உதவியை  எனக்குச் செய்யும்படி கோருகிறேன்.'

'இதற்கு நான் சொன்னேன்: வாலியை அழிக்க எனக்கு உதவ வேண்டுமென்று உங்களைக் கோருகிறேன்.

'பெருமை மிகுந்த இளவரசரான ராமர் லக்ஷ்மணருடன் சேர்ந்து வாலியால் நாடு பறிக்கப்பட்ட சுக்ரீவனான என்னுடன் அக்னி சாட்சியாக ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 

'வாலியை ஒரு அம்பினால் அழித்த பிறகு, வானரர்களின் தலைவனான என்னை மொத்த வானர இனத்துக்கும் அரசனாக அவர் நியமித்தார். இந்த விஷயத்தில் ராமருக்கு எங்களால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்ய வேண்டியது எங்கள் கடமை.

'அரசர்களுக்கான நடத்தை முறைகளின் விதிக்கப்பட்டுள்ளபடி கீழ்க்கண்ட செய்தி என்னால் உங்களுக்கு அனுப்பப்படுகிறது:

'உடனடியாக சீதையைக் கொண்டு வந்து ரகுவம்சத்தில் வந்தவரான ராமரிடம் விட்டு விடவும். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்கள் ஆட்சிக்கு அவமானம் ஏற்படுத்தி உங்களை அழிக்கும் எதையும் வீரர்களான வானரர்கள் செய்ய மாட்டார்கள்.

'வானில் உள்ள தேவர்களால் கூட உதவிக்கு அழைக்கப்படும் வானரர்களின் வல்லமையை அறியாதவர்கள் இந்த உலகில் யார் இருக்கிறார்கள்?'

"சுக்ரீவரின் இந்தச் செய்தியை உனக்கு நான் முழுமையாகத் தெரிவித்து விட்டேன்."

அப்போது ராவணன் கோபத்தினால் சிவந்திருந்த தன் கண்களால் என்னை எரித்து விடுவது போல் மிகுந்த கோபத்துடன் என்னைப் பார்த்தான்.

கொடிய செயல்களைச் செய்யக் கூடிய அந்தத் தீய உள்ளம் கொண்ட ராவணன் என் வல்லமையை முழுவதும் உணர்ந்தவனாக என்னைக் கொல்லும்படி உத்தரவிட்டான்.

அவன் அருகில் உயர்ந்த மனம் படைத்த அவன் சகோதரர் விபீஷணர் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த அரக்க அரசனிடம் எனக்கு ஆதரவாகப் பேசினார்.

அவர் சொன்னார்: "ஓ, அரக்கர் குலத்தின் மாபெரும் அரசனே! தயவு செய்து இந்த தண்டனையை நிறைவேற்றாதீர்கள். உங்கள் கட்டளை அரசர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நீதிக்கு எதிராக உள்ளது என்பதால் உங்கள் முடிவை மாற்றிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

"தூதுவனைக் கொல்வதை அரசநீதி அனுமதிக்கவில்லை. தூதுவனிடமிருந்துதான் அரசியல் தொடர்பான தகவல்கள் அறியப்படுகின்றன.

"எல்லையற்ற வல்லமை கொண்ட அரசரே! எந்த ஒரு குற்றத்துக்காகவும் ஒரு தூதன் கொல்லப்படுவதை அரசர்களுக்கான நடத்தை விதிகள் அனுமதிக்கவில்லை. அதிக பட்சமாக அவனுடைய உடல் உறுப்பு ஏதாவது சேதப்படுத்தப்படலாம்."

விபீஷணரால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதும், அவர் கூறியது சரி என்ற ஏற்றுக்கொண்ட ராவணன் என் வாலுக்கு நெருப்பு வைக்குமாறு அவனுடைய ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

அவன் கட்டளையை நிறைவேற்றும் வகையில் அரக்கர்கள் என் வாலில் கந்தல் துணிகளையும், சணல் பைகளையும் பல சுற்றுகள் சுற்றிக் கட்டினர்.

அதற்குப் பிறகு, கொடிய குணம் கொண்ட அந்த அரக்கர்கள் பொறுமை இழந்து என்னைக் கொள்ளிக்கட்டைகளாலும்,தங்கள் முஷ்டிகளாலும் அடித்தனர். பிறகு அவர்கள் என் வாலுக்குத் தீ வைத்தனர்.

அந்த அரக்கர்கள் என்னைப் பல கயிறுகளால் கட்டியிருந்தாலும், அந்த நகரத்தைப் பகல் வெளிச்சத்தில் பார்க்க விருப்பம் கொண்டிருந்ததால் நான் சிறிதும் துன்பமடையவில்லை.

அந்த அரக்க வீரர்கள் என்னை அந்த நகரத்தின் நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்று, நான் கட்டப்பட்டு என் வாலில் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெருக்களில் நின்று கூவினர்.

அப்போது நான் என் பெரிய உடலைச் சிறிதாகச் சுருக்கிக் கொண்டு, கயிறுகளின் தளையிலிருந்த என்னை விடுவித்துக் கொண்டேன். அதற்குப் பிறகு நான் மீண்டும் என் இயல்பான உருவத்துக்கு வந்தேன்.

ஒரு இரும்பு உலக்கையை எடுத்துக் கொண்டு, அதனால் எல்லா அரக்கர்களையும் அடித்துக் கொன்று விட்டு, ஒரே தாவில் அந்த நுழைவாயிலின் உச்சி மீது ஏறிக் கொண்டேன்.

அந்த நகரத்தின் மாளிகைகள், அரங்குகள் ஆகியவற்றின்  உச்சிகளுக்குச் சுலபமாகத் தாவிச் சென்று அவற்றுக்குத் தீ வைத்தேன். அந்த நெருப்பு பிரளய காலத் தீயைப் போல் எரிந்தது. 

அவ்வாறு செய்த பிறகு, நான் இவ்வாறு நினைத்து வருந்தினேன்: "இந்த நகரம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு விட்டது. இந்த நெருப்புக்குத் தப்பிய கட்டிடம் எதுவும் இல்லை. எனவே ஜனகரின் மகளும் இந்த நெருப்பில் எரிந்து போயிருப்பார் என்பது அநேகமாக நிச்சயம். ஐயமின்றி, இலங்கையை எரிக்கும் முயற்சியில், நான் சீதையையும் எரித்திருக்க வேண்டும். நான் இப்போது ராமரின் முக்கிய நோக்கத்தைச் சிதைத்து விட்டேனே!"

அப்போது மிக அற்புதமான நிகழ்வுகளுள் ஒன்றைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்த சாரணர்களின் காதுக்கினய சொற்களைக் கேட்டேன். அவர்கள்  கூறினாரகள்: "ஜனகரின் மகள் மட்டும் எரிக்கப்படவில்லை."

சீதை நெருப்பில் எரிந்து போகவில்லை என்று கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து வந்த அந்த வியக்கத் தக்க செய்தியைக் கேட்டதும் என் கவலை நீங்கியது. 

கீழ்க்கண்ட சிந்தனையால் என் மகிழ்ச்சியும் உறுதியும் இன்னும் வலுவானதாக ஆகின.

'என் வாலில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தபோது, நான் வெப்பம் எதையும் உணரவில்லை. காற்று கூடக் குளிர்ச்சியுடனும், நறுமணத்துடனும் வீசிக் கொண்டிருந்தது.' 

இந்தச் சிந்தனையாலும், சாரணர்களின் வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதாலும், என் செயல்களின் நியாயத் தன்மையாலும் எனக்கு மனத் திருப்தி ஏற்பட்டது.

இவ்வாறு நினைத்த போதும், விதேஹ நாட்டு இளவரசியை மீண்டும் பார்க்கவும், கிளம்பிச் செல்ல அவர் அனுமதியைப் பெறவும் நான் அவர் இருந்த இடத்துக்குச் சென்றேன்.

பிறகு மீண்டும் அரிஷ்ட மலை மீது ஏறி, உங்களை  எல்லாம் காண வேண்டும் என்ற ஆவலில் இந்தக் கரைக்குப் பறந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். 

காற்று, சந்திரன், சூரியன், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் பயணம் செய்யும் பாதையான ஆகாயத்தின் வழியே பறந்து வந்து இங்கே உங்கள் முன் வந்திருக்கிறேன்.

ராமரின் வல்லமையாலும், உங்கள் அனைவரின் சக்தி, உற்சாகம் ஆகியவற்றாலும், சுக்ரீவர் நமக்கு இட்ட பணியை நான் செய்து முடித்து விட்டேன்.

நடந்தவை அனைத்தையும் சுருக்கமாக உங்களிடம் கூறி விட்டேன். மேலே என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது நாம் செய்வோம்.

சர்க்கம் 59




  
'



.



2 comments:

  1. ஹனுமான் இலங்கை விஜயத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். அருமை

    ReplyDelete