Thursday, December 3, 2020

60. 57ஆவது சர்க்கம் - வடக்குக் கரையை அடைந்தார் ஹனுமான்

ஆகாயம் என்னும் எல்லையற்ற கடலில் ஒரு பெரிய கப்பலைப் போல் சிறிதும் சோர்வின்றிக் காற்றைப் போல் நீந்திச் சென்றார் ஹனுமான். 

கடலைப் போன்ற அந்த ஆகாயம் அழகிய நிலவை அல்லி மலராகவும், சூரியனை நீரில் மூழ்கிச் செல்லும் வாத்தாகவும், பூசம் மற்றும் ஸ்ரவண நட்சத்திரங்களைத் தன் மேற்பரப்பில் நீந்தும் அன்னப்பறவைகளாகவும், மேகங்களை நீர்க்கொடிகளாகவும், புனர்ப்பூச நட்சத்திரத்தைப் பெரிய மீனாகவும், செவ்வாய் கிரகத்தை முதலையாகவும், வானவில்லை ஒரு பெரிய தீவாகவும், தன் மீது வீசும் புயல் காற்றை அலைகளாகவும், நிலவொளியைத் தன் குளிர்ந்த நீராகவும், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களை முழுவதும் மலர்ந்த சிவப்பு மற்றும் பச்சைத் தாமரைப் பூக்களாகவும்  கொண்டிருந்தது. 

மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றிருந்த வாயுபுத்திரரான ஹனுமான் வானத்தில் பயணம் செய்தபோது அவர் வானத்தை விழுங்கப் போவது போலவும். நிலவைத் தேய்த்து அழிக்கப் போவது போலவும் தோன்றியது.

வானத்தின் செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காக அவர் வானத்தையும், அதிலிருந்த சூரியனையும், நட்சத்திரங்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அவர் ஆகாயத்தில் சென்றபோது, வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை கலந்த ஊதா ஆகிய பல நிறங்களில் இருந்த பெரிய மேகங்களை அவர் தன்னுடன் சேர்த்து இழுத்துச் செல்வது போல் இருந்தது.

பெரிய மேகங்களுக்கிடையே ஒரு கணம் மறைந்து மறுகணம் வெளிப்படும்  நிலவைப் போல் அவர் ஒளி விட்டார்.

வெள்ளை உடை அணிந்திருந்த ஹனுமான் பல்வேறு நிறங்களிலிருந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்து பிறகு வெளிப்பட்டபோது அவரது உடல் மறைவதும் பிறகு வெளிப்படுவதுமாக இருந்த காட்சி அவரை நிலவு போலவே தோன்றச் செய்தது.

மேகங்களுக்கிடையே நுழைந்து அவற்றைப் பிளந்து மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஹனுமான் வானத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றமளித்தார். 

ஒளிர் விடும் சக்தியுடன் விளங்கிய ஹனுமான் பல அரக்கர்களைக் கொன்று, சேனைகளைச் சிதைத்து, ஒரு நகரத்தையே அழித்து, ராவணன் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி, சீதையைச் சந்தித்துப் பேசி, இவ்விதமாகத் தன் புகழை எல்லா இடத்திலும் பரப்பிய பிறகு, வான்வெளியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டும், இடியைப் போல் முழங்கிக் கொண்டும் வான் வழியே பயணம் செய்தார்.

வழியில் அவர் மைனாக மலையைத் தன் கைகளால் தொட்டு வருடி விட்டு, அதன் பிறகு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வெகு வேகமாக முன்னேறிச் சென்றார்.

விரைவிலேயே பெரியதான மஹேந்திர மலை தூரத்தில் ஒரு மேகத்தைப் போல் தெரிந்ததைக் கண்டு, அந்த உயர்ந்த வானரர் உரத்த குரலில் கர்ஜனை செய்தார். இடி போன்ற அவர் முழக்கம் அதன் பெருத்த ஓசையால் பத்துத் திசைகளிலும் பரவியது.

தன் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற அதிகமான ஆவலால், அவர்கள் இருக்கும் பகுதியை நெருங்கியதும், அவர் உரத்துக் கூச்சலிட்டுத் தன் வாலை ஆட்டினார்.

வானில் பயணம் செய்தபோது ஹனுமான் எழுப்பிய பயங்கரமான கர்ஜனை வானத்தை அதிலிருந்த சூரியனையும் சேர்த்துப் பிளந்து விடும் போல் இருந்தது.

அப்போது ஹனுமானைக் காண்பதற்காகக் கடலின் வடக்குக் கரையில் முன்பிருந்தே காத்துக் கொண்டிருந்த வீரமும், சக்தியும் கொண்ட அவருடைய தண்பர்கள் ஹனுமான் வானில் பறந்ததாலும், அவருடைய கால்கள் வான்வெளீயில் உதைத்து நீந்தியதாலும் ஏற்பட்ட இடி போன்ற ஒலிகளைக் கேட்டனர். 

காட்டுவாசிகளான அந்த வானரர்கள் அனைவரும் ஹனுமான் பறந்ததால் ஏற்பட்ட அந்த இடி போன்ற முழக்கத்தை ஆவலுடன் கவனித்துக் கேட்டனர்.

அந்த அதிர்வொலி ஹனுமானால்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும் அந்த வானரர்கள் அனைவரும் தங்கள் நண்பரை வரவேற்க உற்சாகத்துடன் அங்கே நின்றனர். 

எல்லா வானரர்களுக்கும் பிரியமானவரான ஜாம்பவான் உவகையுடன் எல்லா வானரர்களையும் தன் அருகில் அழைத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஹனுமான் தன் பணியில் முழுவதுமாக வெற்றி அடைந்து விட்டார். அப்படி இல்லாவிட்டால் அவர் இப்படியெல்லாம் குரல் எழுப்ப மாட்டார்."

ஹனுமானின் கைகளும் கால்களும் காற்றில் நீந்தியதால் ஏற்பட்ட ஓசையையும் அவர் கர்ஜனைகளையும் கேட்டு எல்லா வானரர்களும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர்.

ஹனுமானைப் பார்க்கும் ஆவலில் அவர்கள் மரத்துக்கு மரமும், குன்றுக்குக் குன்றும் தாவிக் குதித்து, பிறகு ஓரிடத்தில் ஒன்றாகக் கூடினர்.

உற்சாகம் மிகுந்த அந்த வானரர்கள் மென்மையான இலைகளையும் பூக்களையும் கொண்ட மரக்கிளைகளை உடைத்து விலை உயர்ந்த ஆடைகளை ஆட்டுவதைப் போல் அவற்றை ஆட்டினர்.

குகைகளுக்குள் சிக்கிக்கொண்ட காற்று அதிர்வான ஒலிகளை ஏற்படுத்துவது போல், வாயு குமாரரான சக்தி வாய்ந்த ஹனுமான் ஆகாயத்தைத் தன் கூச்சல்களால் நிரப்பினார்.

மேகம் போன்ற தோற்றத்துடன் தங்கள் வீரர் தங்களை நெருங்கி வருவதைப் பார்த்த அந்த வானரர்கள் கை கூப்பி அவரை வணங்கியபடி அங்கே நின்றனர்.

சக்தி வாய்ந்தவரும் மலை போன்ற தோற்றம் கொண்டிருந்தவருமான ஹனுமான்  மரங்களால் மூடப்பட்டிருந்த மஹேந்திர மலையின் சிகரங்கள் ஒன்றின் மீது இறங்கினார்.

சிறகு வெட்டப்பட்ட மலை ஒன்று நீருக்குள் விழுவது போல் ஹனுமான் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன்  அந்த மலையின் இதமளிக்கும் நீரோடை ஒன்றில் குதித்தார்.

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, அந்த உயர்ந்த வானரர்கள் அனைவரும் ஹனுமானுக்கு அருகில் சென்று அவரைச் சூழ்ந்து கொண்டனர். 

அவரைச் சுற்றி நின்றபோது அவர்கள் உற்சாகம் இன்னும் அதிகரித்தது. அவருக்கு அருகில் சென்றபோது ஹனுமான் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டதும் அந்த வானரர்கள் மகிழ்ச்சியால் பூரித்தனர். 

வானரர்களின் தலைவரான வாயுகுமாரருக்கு அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் அளித்து உபசரித்தனர்.

ஜாம்பவான் போன்ற தன்னை விட வயதில் மூத்த மரியாதைக்குரிய வானரர்களுக்கும், இளவரசன் அங்கதனுக்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்தார் ஹனுமான். 

அவர்கள் இருவராலும் புகழப்பட்டு, தன் வானரத் தோழர்களால் வரவேற்கப்பட்ட, மிகுந்த வீரமும், திறமையும் கொண்ட ஹனுமான் தன் செய்தியைச் சுருக்கமாக ஒரே வரியில் சொன்னார்: "சீதை கண்டுபிடிக்கப்பட்டார், சீதை காணப்பட்டார்!"

மகிழ்ச்சி நிறைந்த மனத்துடன் இருந்த ஹனுமான் வாலியின் மகனான அங்கதனின் கைகளைப் பற்றிக்கொண்டு, மகிழ்ச்சியளிக்கும் அந்த மஹேந்தர மலையில் அமர்ந்து கொண்டு அந்த வானர வீரர்களிடம் இவ்வாறு கூறினார்:

"ஜனகரின் மகளான அந்த இளம் அரசகுமாரி கொடூரமான அரக்கப் பெண்களால் காவல் காக்கப்பட்டு அசோகவனத்தில் அமர்ந்திருந்த்தை நான் பார்த்தேன். அவருடைய மானத்துக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படவில்லை. அவருடைய உடல் தூசி படிந்து, உண்ணா நோன்பால் இளைத்திருக்கிறது. அவர் மனத்தில் ராமரைக் காண வேண்டும் என்ற பெரிய ஆவல் இருக்கிறது."

ஹனுமான் கூறிய "கண்டுபிடிக்கப்பட்டார்" என்ற இனிமையான, பொருள் பொதிந்த வார்த்தையால் எல்லா வானரர்களும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.

சக்தி வாய்ந்த அந்த வானரர்களில் சிலர் மகிழ்ச்சியில் நடனமாடினர், வேறு சிலர் உற்சாகக் கூச்சல்களை எழுப்பினர், இன்னும் சிலர் இடி கொண்ட மேகங்கள் போல் முழங்கினர், வேறு சிலர் குரங்குகளுக்கே உரித்தான சத்தங்களை எழுப்பினர், மற்றும் சிலர் தாங்கள் கேட்டிருந்த சில ஒலிகளை எழுப்பினர். 

அதிக உற்சாகம் கொண்ட சில வானர வீரர்கள் தங்கள் அழகிய வால்களை மேலே தூக்கி அவற்றை வட்டமாகச் சுழற்றினர். இணையற்ற சக்தி கொண்ட அந்த வானரர்கள் மலை உச்சியிலிருந்து இறங்கி வந்து யானையைப் போன்ற பெரிய உருவத்துடன் இருந்த ஹனுமானை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டனர்.

ஹனுமான் தன் செய்தியை வானரர்களிடம் சொல்லி முடித்ததும், அங்கதன் அவரிடம் பணிவுடன் கூறினான்:

"ஓ, உயர்ந்த வானரரே! அகண்ட சமுத்திரத்தைக் கடந்து சென்று திரும்பி வந்ததன் மூலம் சக்தியிலும் வீரத்திலும் உங்களுக்குச் சமமானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

"எத்தகைய எஜமான விசுவாசம் உங்களுக்கு! எத்தகைய சக்தி! எத்தகைய வீரம்! கடவுளின் அருளால் ராமரின் மனைவியான சீதையை நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள். இது மிகவும் நல்ல விஷயம். காகுஸ்தர் வழி வந்த ராமர் சீதையின் பிரிவானல் ஏற்பட்ட சோகத்திலிருந்து இனி விடுபடுவார்."

அந்த வானரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக, ஒரு அகலமான பாறையில் அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் ஆகியோரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். 

கடலைத் தாண்டியது பற்றியும், இலங்கை நகரத்தைப் பற்றியும், சீதை, ராவணன் இவர்களுடனான தன் சந்திப்புப் பற்றியும் ஹனுமான்  விரிவாகக் கூறப் போவதை எதிர்பார்த்து கைகளைக் கூப்பியபடி அவர்கள் அமைதியாகக் காத்திருந்தனர்.

வானுலகில் தேவர்கள் சூழ இந்திரன் அமர்ந்திருப்பது போல், உயர்ந்தவனான அங்கதன் வானரர்கள் சூழ அங்கே அமர்ந்திருந்தான். 

புகழ் மிகுந்த ஹனுமானும், தோள்களில் வளையங்கள் அணிந்திருந்த  அங்கதனும் அமர்ந்திருந்த அந்தப் பெரிய மலைச் சிகரம் பெரும் மகிழ்ச்சி, பெருமை இவற்றின் மையமாக இருந்தது.

58ஆவது சர்க்கம்

3 comments:

  1. "சீதை கண்டுபிடிக்கப்பட்டார், சீதை காணப்பட்டார்!" என்ற மகிழ்ச்சி செய்தி சொன்ன விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து, கருத்துரை வழங்கி வரும் உங்கள் ஊக்கத்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete