Sunday, November 22, 2020

59. 56ஆவது சர்க்கம் - . இலங்கையிலிருந்து கிளம்பினார் ஹனுமான்

சிம்ஸுபா மரத்தின் அடியில் அசையாமல் அமர்ந்திருந்த ஜனகரின் மகளிடம்  சென்று அவர் திருவடியை வணங்கிய ஹனுமான், "இந்த நிலையிலும் உங்களுக்கு ஏதும் ஆகாமல் இருப்பதைக் கடவுளின் அருளால் நான் காண்கிறேன்" என்றார்.

தன் கணவரான ராமரிடம் தனக்கு இருந்த அன்பையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைத் தன் முன் வந்து நின்ற ஹனுமானைப் பார்த்து சீதை கூறினார்.

"எதிர்களை அழிப்பவனே! திட்டமிட்டபடி உன் நோக்கத்தை நிறைவேற்றுவது உனக்கு மட்டுமே இயன்ற செயல். உன் சக்தியையும், மேன்மையையும் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசினாலும், அது மிகையாக இருக்காது.

"காகுஸ்தர் வழி வந்த ராமர் தன் அம்புகளால் இலங்கையைப் புரட்டிப் போட்டு இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றால், அது உன்னுடைய மேன்மைக்குப் பொருத்தமானதாக இருக்கும். எனவே தன் திறமையைப் பயன்படுத்தித் தன் எதிரிகளை வெற்றி கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான யோசனையை நீ அந்த மேன்மை பெற்ற வீரருக்கு வழங்க வேண்டும்."

சீதையின் இந்த அர்த்தமுள்ள, நியாயமான, அன்பு மிகுந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஹனுமான் அவருக்கு ஒரே வரியில் பதில் கூறினார்:

"காகுஸ்தர் வழியில் வந்த அந்த வீரர் நிச்சயமாகக் குரங்குகளும், கரடிகளும் கொண்ட சேனையுடன் வந்து எதிரிகளை வென்று உங்கள் துன்பங்களுக்கு முடிவு கட்டப் போகிறார்."

விதேஹ நாட்டு இளவரசிக்கு இவ்வாறு ஆறுதல் கூறிய பின், ஹனுமான் அவரிடம் விடை பெற்று திரும்பிச் செல்வதற்குத் தயாரானார்.

எதிரிகளை அழிப்பவரான அந்த வீரமுள்ள வானரர் தன் எஜமானரைச் சந்திக்க உறுதி கொண்டவராக அரிஷ்டம் என்ற பெரிய மலையின் மீது ஏறிக் கொண்டார். 

அந்த மலை பச்சை இலைகள் மிகுந்த பத்ம மரங்களால் நிறைந்திருந்தது. அதன் சிகரங்களால் மறைக்கப்பட்டிருந்த மேகங்கள், தன் உடலின் மேற்புறம் மட்டும் துணீயால் மறைக்கப்பட்டிருந்த ஒருவனைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன.

உதயசூரியனின் நட்பான, இனிய கதிர்களால் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டது போல் தோற்றமளித்தது அந்த மலை. அதிலிருந்து வெளிப்பட்ட வண்ணங்கள் ஒருவர் தன் கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

மலையில் நீர் ஓடிய உரத்த ஓசை அந்த மலை வேதங்களை ஓதுவதைப் போல் உணரச் செய்தது. அதில் ஓடிய பல சிற்றோடைகளின் மென்மையான ஒலி இனிய இசையை நினைவூட்டியது.

அந்த மலையில் எழுந்திருந்த உயர்ந்த தேவதாரு மரங்கள் கடுமையாகத் தவம் செய்யும் முனிவர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கி நிற்பது போன்ற தோற்றத்தை அளித்தன.

அதிலிருந்த நீர்வீழ்ச்சிகளின் ஓசை எல்லாத் திசைகளிலும் அதிர்வுகளைப் பரவச் செய்தது. இலையுதிர் காலத்துக்கே உரித்தான கருத்த நிறம் கொண்ட ஓடும் மேகங்கள் அந்த மலையை ஒரு நடுக்கம் கண்ட நபர் போல் தோன்றச் செய்தன.

மூங்கில்கள், நாணல்கள் இவற்றினூடேகாற்று சென்றதால் ஏற்பட்ட கீச்சொலி அந்த மலை கூவுவது போல் உணரச் செய்தது. அதன் மீது இருந்த மலைப்பாம்புகளின் உரத்த, அச்சமூட்டும் மூச்சொலி அந்த மலை பொறாமையால் பெருமூச்சு விடுவது போல் உணரச் செய்தது.

பனி மிகுந்த அதன் பெரிய குகைகள் புலனை அடக்கி தியானத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தன. பெரும் மேகங்கள் போன்ற அதன் எண்ணற்ற குன்றுகளின் வரிசை எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்துவதற்காக முன்னேறிச் செல்லும் சேனையைப் போன்ற தோற்றத்தை அந்த மலைக்கு அளித்தது.

மேகம் சூழ்ந்த அதன் சிகரங்களைப் பார்க்கும் எவருக்கும் அந்த மலை மல்லாந்து படுத்துக் கொட்டாவி விடுவது போல் தோற்றமளிக்கும். 

பரவலாக இருந்த அதன் சிகரங்களும், குகைகளும் அதற்கு அழகூட்டின. மூங்கில்கள், நாணல்கள் தவிர, சாலம் (ஆச்சா மரம்), பனை, அஸ்வகர்மா போன்ற பல்வகை மரங்களும் அந்த மலை மீது இருந்தன, மலர்கள் நிறைந்த கொடிகள் பரவலாகப் படர்ந்து அந்த மலைக்குக் கூடாரமாக அமைந்தன.

பலவகையான மிருகங்கள் அதில் வசித்து வந்தன. அந்த மலையில் இருந்த கனிமச் சுரங்களிலிருந்து சுரந்த பொருட்களின் பல்வகை நிறங்கள் அந்த மலையை அலங்கரித்தன. கணக்கற்ற சிற்றோடைகள் அதில் ஓடிக் கொண்டிருந்தன.

எங்கு பார்த்தாலும் பாறைக் குவியல்கள் இருந்தன.

முனிவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள்,, நாகர்கள் ஆகியோர் அந்த மலையில் வசித்து வந்தனர். 

அந்த மலையின் மீது கணக்கற்ற கொடிகளும், மரங்களும் விழுந்து கிடந்தன. சிங்கங்கள் வசித்து வந்த குகைகள் பல அதில் இருந்தன. புலிக் கூட்டங்களும் அந்த மலையில் வசித்து வந்தன.

உண்ணக் கூடிய பலவகையான காய்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை வழங்கும் மரங்கள் அங்கே வளர்ந்திருந்தன.

அத்தகைய மலையில் ராமரை விரைவிலேயே பார்க்கப் போகும் வாய்ப்பினால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த ஹனுமான் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏறினார்.

அந்த அழகிய மலையின் சரிவுப் பகுதியில் ஹனுமான் தன் காலை வைத்தபோது, அங்கிருந்த பாறைகள் சுக்கு நூறாக உடைந்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தின.

அதப் பெரிய மலையின் உச்சியில் நின்ற ஹனுமான்கடலின் தெற்குக் கரையிலிருந்து வடக்குக் கரைக்குப் போகத் தீர்மானித்து அதற்குத் தயாராகத் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார்.

வாயுதேவரின் வீரப் புதல்வரான அவர் அந்தப் பெரிய மலையின் உச்சியில் நின்றபடி மீன்களும் பாம்புகளும் நிறைந்த அந்த சமுத்திரத்தைக் கண்களால் அளப்பது போல் பார்த்தார்.

வாயுதேவர் வானில் செல்வது போலவே, வாயுதேவரின் குமாரரான அந்த வீரமிகு வானரரும் தென்புறத்திலிருந்து வடபுறத்துக்குத் தன் பயணத்தைத் தொடங்கினார்.

ஹனுமானின் கால்களால் அழுத்தப்பட்ட, பாறைகள் அடர்ந்த அந்த மலை அதன் சிகரங்களுடனும், அதில் வசித்தவர்களுடனும் சேர்ந்து நடுங்கியது. அதிலிருந்த மரங்கள் பெரும் சத்தத்தை எழுப்பியபடி தலை குப்புறச் சாய்ந்து, பூமியின் வயிற்றுக்குள் விழுந்து மறைந்தன.

மலர்கள் நிறைந்த மரங்கள் ஹனுமானின் தொடைகளின் தாக்கத்தின் விசையால், இடியால் தாக்கப்பட்டது போல் உடைந்து தரையில் விழுந்தன. 

தங்கள் குகைகளுக்குள் அடைந்திருந்த சக்தி வாழ்ந்த சிங்கங்களின் பயங்கரமான கர்ஜனைகள் வானைப் பிளப்பது போல் மேலெழும்பின.

தங்கள் உடைகள் தளர்ந்து, ஆபரணங்கள் கலைந்திருந்த நிலையில், வித்யாதரப் பெண்கள், அந்த மலையிலிருந்த தங்கள் இருப்பிடங்களிலிருந்து அச்சத்துடன், அவசரமாக வெளி வந்தனர்.

சக்தி வாய்ந்த பெரிய நாகங்கள் தங்கள் தலைகளையும், கழுத்துக்களையும் தாழ்த்திக் கொண்டும், உடலைச் சுருட்டிக் கொண்டும், நாக்குகளை வெளியே நீட்டிக் கொண்டும், விஷத்தைக் கக்கிக் கொண்டும் வெளியே வந்தன.

பெரும் சத்தங்களாலும், அதிர்வுகளாலும் பாதிக்கப்பட்டு கின்னரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அந்த மலையை விட்டு வெளியேறி வானில் நின்றனர்.

ஹனுமான் கால்களை வைத்து அழுத்தியதால் அந்த அழகிய மலை தன் பெரிய மரங்கள், சிகரங்கள் ஆகியவற்றுடன் பாதாள லோகத்தில் சரணடைந்தது. பத்து யோஜனை அகலமும், முப்பது யோஜனை உயரமும் கொண்ட அந்த மலை கீழே அழுந்தித் தரை மட்டத்துக்கு வந்தது.

பெரும் அலைகள் அடித்துக் கொண்டிருந்த உப்புக் கடலைத் தாண்ட விரும்பிய ஹனுமான் எளிதாக வானில் எழும்பினார்.

57 ஆவது சர்க்கம்


2 comments:

  1. அரிஷ்டம் என்ற மலை பற்றிய வர்ணனை மற்றும் ஹனுமன் புறப்பட்டது சொன்னது சிறப்பு

    ReplyDelete