Monday, November 16, 2020

58. 55 ஆவது சர்க்கம் - ஹனுமானின் மனக்குழப்பம்

இலங்கை நகரின் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகி விட்டதையும், அரக்கர்கள் பீதியுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதையும் பார்த்த ஹனுமான் இவ்வாறு நினைத்தார்:

"இலங்கை எரிக்கப்பட்டு விட்டது? ஆனால், இதனால் விளைந்த பயன் என்ன?" 

இவ்வாறு நினைத்ததும், ஹனுமானின் மனதில் ஒரே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியும், தன் மீதே வெறுப்பும் ஏற்பட்டன.

"தீப்பிடித்தால், நீர் ஊற்றி அதை அணைப்பது போல், தங்களுக்கு ஏற்படும் கோபத்தைத் தங்கள் அறிவைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்திக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், உயர்ந்தவர்கள்.

"கோபத்தால் உந்தப்பட்டுப் பாவச்செயல் புரியாமல் இருப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? கோபத்தின் வசப்பட்ட ஒருவன் தான் மதிக்கும் பெரியோர்களைக் கொல்வான்; நல்ல மனிதர்களை மரியாதைக் குறைவான சொற்களால் அவமதிப்பான்.

"கோபத்தின் பிடியில் இருப்பவன் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற வேறுபடுத்திப் பார்க்கும் அறிவையே இழக்கிறான். கோபத்துக்கு வசப்பட்டவன் செய்ய மாட்டான் என்று சொல்லக் கூடிய முறையற்ற செயல் எதுவுமே இல்லை. அந்த நிலையில் அவன் எதையும் செய்யக் கூடியவன்.

"பாம்பு தன் தோலை உரித்துக் கொள்வதைப் போல் பொறுமையின் மூலம் கோபமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவன்தான் உண்மையான மனிதன். 

"உயர்ந்த பெண்மணியான சீதாப்பிராட்டியைப் பற்றி ஒரு கணம் கூடச் சிந்திக்காமல் இலங்கைக்குத் தீ வைத்த நான் ஒரு அறிவிலியான முட்டாளாகவும், பாவியாகவும், வெட்கங்கெட்டவனாகவும், தன் எஜமானருக்கு துரோகம் செய்தவனாகவும் கருதப்பட வேண்டும்.

"இந்த இலங்கை நகரம் எரிக்கப்பட்டபோது, உயர்ந்த உள்ளம் கொண்ட சீதாப்பிராட்டியும் எரிக்கப்பட்டிருப்பார். இது நிச்சயம். எனவே என் எஜமானர் என்னை அனுப்பிய நோக்கத்தை நான் கெடுத்து விட்டேன்.

"இந்த நோக்கத்துக்காக இதுவரை நான் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி விட்டன. ஏனெனில், இலங்கையை எரித்த நான் சீதையைத் தீயிலிருந்து காப்பற்ற எதையும் செய்யவில்லை.

"இந்தப் பெரிய செயலைச் செய்தபோது, அது ஒரு முக்கியமில்லாத விஷயம் போல் நடந்து கொண்டு விட்டேன். இந்தச் செயலின் அடிப்படை நோக்கத்தையே நான் தோற்கடித்து விட்டேன். இது பற்றி எந்த ஐயமும் இல்லை.

"இலங்கை முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தீயிலிருந்து எந்த இடமும் தப்பவில்லை. எனவே, ஜனகரின் மகளும் இந்தத் தீக்கு பலியாகி இருப்பார் என்பதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது.

"என் முட்டாள்தனத்தினால் என் செயலின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டிருக்குமானால், என் உயிரை இங்கேயே, இப்போதே விடுவதுதான் இதற்கு மாற்றாக இருக்கும். 

"பிரளயத் தீ போல் எரியும் இந்த நெருப்பின் கொடிய ஜுவாலைகளில் விழுந்து என் உயிரை மாய்த்துக் கொள்ளட்டுமா, அல்லது இந்தக் கடலில் வழும் உயிரினங்களுக்கு என் உடலை இரையாக அளித்து விடட்டுமா?

 "என் செய்கையால் என் முயற்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விட்டு இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கும் என்னால் வானரர்களின் பெரிய தலைவரான சுக்ரீவர் மற்றும் இரண்டு உன்னதமான இளவரசர்களான ராமர், லக்ஷ்மணர் இவர்களின் முகங்களை எப்படிப் பார்க்க முடியும்?

"குரங்குகள் இயல்பாகவே நிலையற்ற சிந்தனை கொண்டவை, மற்றவர்களால் ஊகிக்க முடியாத வகையில் செயல்படுபவை என்று எல்லா உலகங்களிலும் நன்கு அறியப்பட்டிருப்பதைத்தான் என் பெரிய குறை, கோபம் இவற்றின் காரணமாக நான் நிரூபித்திருக்கிறேன்.

"அறிவீனால் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையற்ற இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை கொடிது! ஏனெனில், பெரும் செயல்களைச் செய்யும் வல்லமை படைத்த நான் கூடக் கோபத்தால் சீதையைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டேனே!

"சீதை இறந்து விட்டால், அந்த இரண்டு இளவரசர்களும் கூட இறந்து விடுவார்கள். அவர்கள் இருவரும் இறந்தால், சுக்ரீவரும் தன் உறவினர்கள் அனைவருடனும் மரணத்தைத் தழுவி விடுவார்.

"இதைக் கேள்வியுற்றதும் சகோதரப் பாசம் மிகுந்த, அற வழி நடக்கும் பரதரும் சத்ருக்னரும் உயிர் வாழ விரும்ப மாட்டார்கள். தர்மத்தின் வழி நடக்கும் இக்ஷ்வாகு வம்சம் முடிவுக்கு வந்தால், அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் சோக நெருப்பால் வாட்டப்படுவார்கள்.

"எனவே, கோபம் என்னும் தீமை என்னை அடிமைப்படுத்த இடம் கொடுத்து, அதன் மூலம் என் அதிர்ஷ்டத்தையும், தர்மத்தின் மற்றும் நடைமுறை உலக வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த என் மேன்மையையும் இழந்து விட்ட நான் சந்தேகமின்றி இந்த உலகுக்குத் தீமை செய்பவன்தான்." 

இவ்வாறு தன் விதியை நொந்து கொண்ட ஹனுமானுக்குத் தன் முந்தைய அனுபவங்கள் சிலவற்றை நினைவு கூற வேண்டுமென்று தோன்றியது.

"ஒருவேளை, மங்களமே உருவான அந்த அழகிய பெண்மணி தன் அசாதாரணமான சக்தியினால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருப்பரோ? தீயையே தீயால் எப்படி எரிக்க முடியும்?

"அளவற்ற சக்தி கொண்டவரும், தர்மத்தின் உருவமுமான அந்த உயர்ந்த மனிதரான ராமரின் மனைவியும், தன் கற்பினால் பாதுகாக்கப்பட்டிருப்பவருமான சீதையைத் தீயினால் அணுகக் கூட முடியாது.

"ராமரின் உயர்வினாலும், சீதையின் கற்பின் சக்தியினாலும்தான்  எல்லாவற்றையும் எரிக்கும் தன்மை கொண்ட தீயினால் என்னை அவ்வாறு எரிக்க முடியவில்லை.

"ராமரிடம் பக்தி கொண்ட மனைவியாகவும், அவருடைய மூன்று தம்பிகளாலும் வணங்கப்படுபவராகவும் உள்ள ஒருவருக்கு எவ்வாறு அழிவு ஏற்படும்?

"எரிக்கும் தன் நோக்கத்தில் எப்போதும் தோல்வி அடையாத இந்த நெருப்பு என் வாலைக் கூட பாதிக்கவில்லை. அப்படி இருக்கையில், கற்புடைப் பெண்களில் சிறந்தவரான சீதையை அது எப்படி எரிக்க முடியும்?"

இத்தகைய சிந்தனைகளைத் தவிர, சமுத்திரத்தின் மத்தியில் மைநாக மலை எழுந்ததைப் பற்றியும் மிகுந்த வியப்புடன் நினைத்துப் பார்த்தார் அவர்:

"அந்த உயர்ந்த பெண்மணி, தன் கற்பின் சக்தியாலும், உண்மையுடன் இருப்பதாலும், தன் கணவனிடம் கொண்ட முழுமையான பக்தியாலும் ஒருவேளை நெருப்பையே எரிக்கக் கூடும். அத்தகைய நபர் எப்படி நெருப்பால் பாதிக்கப்பட முடியும்?"

இவ்வாறு ஹனுமான் தன் மனதுக்குள் சீதையின் தர்ம வலிமையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, உயர்ந்தவர்களான சாரணர்கள் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் கேட்டது. அவர்கள் கூறினர்:

"நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இந்த பயங்கரமான தீயை அரக்கர்களின் வீடுகளில் பரவச் செய்யும் இயலாத செயலை ஹனுமான் செய்து காட்டி இருக்கிறார். 

"இலங்கை நகரம் முழுவதும், அதன் மாளிகைகள், சுவர்கள், நுழைவாயில் கோபுரங்கள் ஆகியவற்றுடன் எரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு மலையின் குகைகளுக்கிள்ளிருந்து வரும் முனகல் சத்தங்கள் போல், இங்குமங்கும் பறந்தோடிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அரக்கர்களின் துயர முனகல்கள் எழுகின்றன.

"ஆயினும், இலங்கை முழுவதும் எரிந்தாலும், ஜனகரின் குமாரி மட்டும் பாதிக்கப்படாமல் இருக்கிறார். இது மிகவும் வியப்புக்குரிய ஒன்று."

ராமர், சீதை இருவரின் மேன்மை பற்றி அவர் மனதில் தோன்றிய எண்ணங்களாலும், உயர்ந்த செயல்கள் தார்மீக ரீதியில் சரியானவை என்ற அவரது நம்பிக்கையாலும், சாரணர்கள் மேற்கூறியவாறு பேசியதைக் கேட்டதாலும் தன் மனதில் ஏற்பட்ட உறுதியால் ஹனுமான் பெரிதும் அமைதியாக உணர்ந்தார்

சீதாப்பிராட்டிக்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கை ஹனுமானுக்கு இப்போது ஏற்பட்டிருந்தாலும், சீதையை மீண்டும் ஒருமுறை நேரில் பார்த்து விட்டுத் தன் எண்ணம் சரிதான் என்று உறுதி செய்து கொள்ள விரும்பினார் அவர். 

சர்க்கம் 56

2 comments:

  1. தொடர்ந்து எழுதவும். ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அடுத்த சர்க்கம் துவங்கி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      Delete