Sunday, November 8, 2020

57. 54ஆவது சர்க்கம் - இலங்கையை எரித்தல்

இவ்வாறு தன் நோக்கத்தை நிறைவேற்றிய அந்த சக்தி வாய்ந்த வானரர், இலங்கை நகரத்தை உற்சாகத்துடன் நோக்கி, தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்.

'இங்கே நான் இன்னும் செய்ய வேண்டியது என்ன மீதம் இருக்கிறது? என்ன செய்தால் இந்த அரக்கர்களுக்கு இன்னும் அதிகத் துன்பத்தை விளைவிக்க முடியும்?

'அசோக வனம் அழிக்கப்பட்டு விட்டது. சக்தி வாய்ந்த அரக்கர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். சேனையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது. கோட்டையை அழிப்பதை மட்டும்தான் இன்னும் செய்யவில்லை.

'அதிக முயற்சி இன்றியே என்னால் கோட்டையை அழிக்க முடியும். என் நோக்கமும் நிறைவேறி விடும். என் முயற்சிகளின் அளவுக்குப் பலன்களும் இருக்கும்.

'என் வாலில் எரியும் இந்த நெருப்பு எனக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. எனவே அதற்கு அந்த மாளிகைகளை உணவாகக் கொடுத்து, அதை நான் போதுமான அளவுக்குத் திருப்திப்படுத்த வேண்டும்.'  

விரைவிலேயே, மின்னலுடன் கூடிய மழை மேகம் போல் ஹனுமான் தன் எரியும் வாலுடன் இலங்கையிலிருந்த எல்லா மாளிகைகளின் உச்சிகளிலும் தாவிச் சென்றார்.

அச்சமற்ற அந்த வானரர் தன் முன் தெரிந்த வீடுகளைப் பார்த்தபடியே அரக்கர்களின் ஒரு தோட்டத்து வீட்டிலிருந்து இன்னொரு தோட்டத்து வீட்டுக்கு என்று தொடர்ந்து நகர்ந்தார்.

அந்த சக்தி வாய்ந்த, துணிவு மிக்க ஹனுமான் வாயு வேகத்தில் உற்சாகத்துடன் பிரஹஸ்தனின் மாளிகைக்குச் சென்று அதற்குத் தீ வைத்தார். 

அங்கிருந்து அவர் மஹாபார்ஸ்வனின் மாளிகைக்குச் சென்று அதற்குத் தீ வைத்தார். அதன் ஜுவாலைகள் பிரளய கால நெருப்பை ஒத்திருந்தன.

வானரர்களின் தலைவரான, அந்த உயர்ந்த பிரகாசமான வானரர் பிறகு வஜ்ரதம்ஷ்டரன், சுகன், சரணன் மற்றும் இந்திரஜித்தின் மாளிகைகளுக்குச் சென்று அவற்றுக்குத் தீ வைத்தார்.

பிறகு அவர் ஜம்புமாலி, சுமாலி ஆகியோரின் வீடுகளுக்குத் தீ வைத்தார். 

மாளிகைகளின் வரிசையில் நகர்ந்தபடி அந்த ஒளி பொருந்திய வானரத் தலைவர் ரஸ்மிகேது, சூர்யசத்ரு. ஹ்ரஸ்வகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமஸன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், பயங்கரமான வித்யுஜ்ஜிஹ்வன், ஹஸ்திமுகன், கராளன், பிஸாசன், சோனிதாக்ஷன், கும்பகர்ணன், மகராக்ஷன், யமசத்ரு, பிரம்மசத்ரு, தீயவனான நிகும்பன், நராந்தகன் மற்றும் கும்பன் ஆகியோரின் வீடுகளுக்கு ஒவ்வொன்றுக்காகத் தீ வைத்தார். ஆனால் விபீஷணனின் வீட்டை அவர் தொடவில்லை. 

அந்தப் புகழ் பெற்ற வானரர் எல்லா வீடுகளையும் அவற்றில் வசித்த செல்வம் மிக்கவர்களின் சொத்துக்களையும் எரித்து விட்டார்.

மற்ற எல்லோருடைய மாளிகைகளையும் எரித்த பிறகு அந்த வீரம் மிகுந்த வானரர் ராவணனின் அரண்மனையை வந்தடைந்தார்.

மேரு மற்றும் மந்தர மலையை ஒத்திருந்த, விலை உயர்ந்த மற்றும் கலையம்சம் கொண்டிருந்த பொருட்கள் நிறைந்த, முத்துக்கள் முதலான நவரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த, எல்லா மாளிகைகளையும் விட உயர்ந்திருந்த அந்த மாளிகைக்குச் சென்றதும், வீரம் மிகுந்த அந்த வானரர் அந்த மாளிகைக்குத் தன் வாலின் நுனியினால் தீ வைத்து விட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் பிரளய காலத்து மேகத்தின் முழக்கம் போன்ற ஒரு உரத்த கர்ஜனை செய்தார்.

தீயின் ஜுவாலைகள் பிரளய கால நெருப்பின் ஜுவாலைகளைப் போல் எழும்பத் தொடங்கின. சாதகமாக வீசிய காற்றினால் விசிறப்பட்டு அந்தத் தீ இன்னும் பெரிதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் ஆகியது. 

நீயை அந்தப் பெரிய மாளிகைகளிலிருந்து அவற்றைச் சுற்றியிருந்த இடங்களுக்குக் காற்று பரப்பியது. காற்றினால் நெருப்பு அதிக உயரமாக எரிந்தது.

தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட ஜன்னல்கள், முத்துக்கள் கோர்க்கப்பட்ட அலங்காரங்கள், விலை உயர்ந்த உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுடன் கூடிய அந்த மாளிகைகள் நெருப்பின் செயலால் சாம்பலாகின.

சித்தர்களின் புண்ணியம் தீர்ந்ததும் அவர்களுடைய மாளிகைகள் விண்ணிலிருந்து கீழே விழுவது போல், இலங்கையின் அந்த ஏழடுக்கு மாளிகைகள் தரையில் விழுந்தன.

அரக்கர்கள் தங்கள் வீடுகளைக் காப்பாற்ற ஓடினர். தங்கள் வீரம் எல்லாம் அடக்கப்பட்ட நிலையில், அவர்கள், "ஐயோ! அக்னி தேவன்தான் இங்கே குரங்கு உருவில் வந்திருக்கிறான்!" என்று கூவினர். இது போன்ற பல குரல்கள் அந்த இடத்தை நிரப்பின.

மிரண்டு போன சில அரக்கர்களும், அரக்கிகளும் கூச்சலிட்டபடியே, கலைந்த கூந்தல்களுடன், தங்கள் குழந்தைகளைக் கைகளில் ஏந்தியபடி, தங்கள் மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து வேகமாகக் கீழே இறங்கினர்.

மேலிருந்து கீழே விழுந்தவர்கள் மேகங்களிலிருந்து கீழிறங்கும் மின்னல் போல் ஜொலித்தனர்.

வைரங்கள், முத்துக்கள், வைடூரியங்கள், பவழங்கள், வெள்ளி ஆகியவற்றால் அமைக்கப்பட்ட மாளிகைகள் உருகுவதை ஹனுமான் பார்த்தார்.

புல், மரக்கட்டைகள் ஆகியவற்றால் நெருப்பு திருப்தி அடைவதில்லை. அது போல் ஹனுமானும் சில அரக்கர்களை அழிப்பதால் மட்டும் திருப்தி அடையவில்லை.

ஹனுமானால் கொல்லப்பட்டுத் தன் மேற்பரப்பில் கிடத்தப்பட்ட அரக்கர்களால் பூமியும் திருப்தி அடையவில்லை. 

நெருப்பின் ஜுவாலைகள் சில இடங்களில் கிம்சுகப் பூக்கள் போலவும், சில இடங்களில் சால்மலிப் பூக்கள் போலவும், சில இடங்களில் குங்குமப் பூக்கள் போலவும் ஒளி விட்டன.

திரிபுரம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது போல், பெரும் வல்லமை கொண்ட அந்த வானரரால் இலங்கை நகரம் சாம்பலாக்கப்பட்டது.

வல்லமை கொண்ட ஹனுமானால் மூட்டப்பட்ட தீ, இலங்கை நகரம் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவிய பின், இலங்கை நகரம் அமைந்திருந்த திரிகூட மலையின் உச்சிக்கு மேல் உயர்ந்த ஜுவாலைகளுடன் எழும்பியது.

காற்றினாலும், அரக்கர்களின் உடல்களில் இருந்த கொழுப்பினாலும் பெரிதாக்கப்பட்டு, அந்த நெருப்பு எல்லா வீடுகளுக்கும் பரவியது. அதன் ஜுவாலைகள் பிரளய காலத் தீயைப் போல் விண்ணை முட்டும் அளவுக்கு உக்கிரமாக எழும்பின.

இலங்கை முழுவதும் பரவிய அந்த நெருப்பு, கோடி சூரியன்களைப் போல் ஒளி விட்டு, இடிகள் மோதிக் கொள்வது போன்ற பல ஒலிகளை உண்டாக்கியது. அது அண்டம் முழுவதையுமே உடைக்கப் போவது போன்ற தோற்றத்தை உண்டாக்கியது.

மலை உச்சியில் எரிந்த நெருப்பின் ஜுவாலைகள் கிம்சுக மரத்தின் மலர்களைப் போல் தோன்றின.

எல்லாவற்றையும் எரித்த பின் தீ தணியத் தொடங்கியபோது, பெருமளவிலான புகை வானம் வரை எழும்பி, மேகங்களுடன் கலந்து நீல நிற அல்லிப்பூக்களின் வண்ணத்தை அடைந்தது.

மொத்த நகரமும், அதன் வீடுகள், மரங்கள், உயிரினங்கள் அனைத்துடனும் சேர்ந்து ஒன்றாக எரிந்ததைப் பார்த்த பல அரக்கத் தலைவர்கள் ஒன்றாகக் கூடி தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொள்ளத் துவங்கினர்:

"இவன் விண்ணுலகங்களின் அரசனான வஜ்ராயுதம் கொண்ட இந்திரனா, தர்மத்தின் கடவுளான யமனா, கடல்களின் அரசனான வருணனா, அல்லது காற்றுக் கடவுளான வாயுதேவனா? ஒருவேளை இவன் ருத்ரனாகவோ, அக்கினி தேவனாகவோ, சூரியக் கடவுளாகவோ, குபேரனாகவோ, சந்திரனாகவோ இருப்பானோ?

"இது குரங்கல்ல, மரணமே ஒரு வடிவெடுத்து வந்திருக்கிறது.

"நான்முகம் கொண்ட இவ்வுலகின் நாயகனான பிரம்மாவின் பெரும் கோபம்தான் அரக்கர்களை மொத்தமாக அழிப்பதற்காக ஒரு குரங்கின் வடிவெடுத்து வந்திருக்கிறதோ?

"அல்லது சர்வ வல்லமை கொண்ட, அளவிட முடியாத, மனதால் உணர முடியாத, ஈடு இணையற்ற விஷ்ணுவின் சக்திதான் தன் மாயையினால் குரங்கு வடிவம் எடுத்து வந்திருக்கிறதோ?" 

அந்த இலங்கை நகரிலிருந்த அரக்கர்கள், குதிரைகள், யானைகள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் ஆகியோர் எரித்துச் சாம்பலாக்கப்பட்டபோது, அவர்களுடைய உரத்த, பரிதாபமான ஓலங்கள் கேட்டன.

"ஓ, அப்பா! ஓ, மகனே! ஓ, பிரபு! ஓ, நண்பனே! ஐயோ, என்ன பரிதாபம்! நாம் வாழ்ந்து வந்த வசதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன ஆயிற்று?"

அரக்கர்களிடமிருந்து வந்த இது போன்ற உரத்த, அச்சம் மிகுந்த ஓலங்கள் வான்வெளியை நிரப்பின.

ஹனுமானின் கோபத்தால் அந்த இலங்கை நகரம், எங்கும் தீ பரவிய நிலையில், அதன் வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, அதன் சேனைகள் தூள் தூளாக்கப்பட்டு, சாபத்தினால் அழிக்கப்பட்ட ஒரு நகரம் போல் தோற்றமளித்தது.

அரக்கர்களால் நிறைந்திருந்த அந்த இலங்கை நகரத்தை இத்தகைய துயரமான நிலையில் அந்த உயர்ந்த ஹனுமான் பார்த்தார். 

கடவுளின் கோபத்தால் உலகம் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது போல் அவரால் மூட்டப்பட்ட தீயால் அந்த நகரம் அழிக்கப்பட்டதை அவர் பார்த்தார்.

அவர் இதுவரை காட்டுப்பகுதிகளை, அங்குள்ள எல்லா மரங்களுடனும் அழித்து விட்டார். உயர்ந்த நிலையில் இருந்த பல அரக்கர்களைப் போரில் கொன்று விட்டார். அவர் மூட்டிய தீ இலங்கையில் இருந்த மாளிகைகளின் பல வரிசைகளை விழுங்கி விட்டது.

இலங்கையை எரித்த பிறகு, வாயுவின் குமாரரான ஹனுமான் சற்று நேரம் அமைதியாக இருந்தார். 

தன் வால் எரிந்து கொண்டிருந்த நிலையில் திரிகூட மலையின் சிகரம் ஒன்றின் மீது நின்று கொண்டிருந்த அந்த வீரமுள்ள வானரர் கதிர்களால் சூழப்பட்ட சூரியன் போல் இருந்தார்.

அந்தக் காட்டின் எல்லா மரங்களையும் அழித்த பிறகு, பலம் மிகுந்த அரக்கர்களைக் கொன்ற பிறகு, அரக்கர்களின் பல மாளிகைளுக்குத் தீயிட்ட பிறகு, அந்த உன்னத ஆத்மா இப்போது தன் மனதில் ராமரை தியானித்தார்.

அப்போது, வானரர்களுக்குள் சிறந்த வீரரும், அளவற்ற வல்லமை கொண்டவரும், காற்றைப் போல் வேகம் கொண்டவரும், புத்திக் கூர்மை கொண்டவருமான அந்த  ஹனுமானின் புகழை தேவர்கள் பாடத் தொடங்கினர். 

காடுகளை அழித்து, அரக்கர்களைக் கொன்று, இலங்கை நகரை எரித்த பின், அந்த உயர்ந்த வானரர் ஒளி துலங்க நின்றார்.

வானர இனத்தில் மிக உயர்ந்தவரான அந்தச் சக்தி வாய்ந்த வானரர், இலங்கை நகரம் முழுவதையும் எரித்த பின் தன் வாலைக் கடலில் தோய்த்து அதிலிருந்த தீயை அணைத்தார்.

உயர்ந்த வானரரான ஹனுமானைப் பார்த்து எல்லா உயிரினங்களும் பிரளய கால நெருப்பைப் பார்த்தது போல் நடுக்கம் கொண்டன.

அந்தத் தருணத்தில் தேவர்கள், மாமுனிவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், நாகர்கள், யக்ஷர்கள் மற்றும் பல உயர்ந்தவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சர்க்கம் 55 

 

2 comments:

  1. இலங்கையை எரித்தல் நன்கு விவரிக்கப்பட்டு உள்ளது. நன்றி

    ReplyDelete