Tuesday, October 13, 2020

54. 51ஆவது சர்க்கம் - ஹனுமான் சொன்ன புத்திமதி

வீரமுள்ள அந்த உயர்ந்த வானரர், சக்தி வாய்ந்த பத்து தலைகள் கொண்ட ராவணனின் முகத்தை நேராகப் பார்த்து, சற்றுக் கூடத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அவனிடம் இவ்வாறு கூறினார்:

"ஓ, அரக்கர்களின் அரசனே! நான் சுக்ரீவரின் கட்டளைப்படி உன் அரண்மனைக்கு வந்திருக்கிறேன். தன் நண்பர்களிடம் அன்புள்ளவரான அந்த வானர அரசர் உன் நலனைப்பற்றி விசாரிக்கும்படி என்னிடம் கூறினார். 

"உன் நெருங்கிய நண்பரும், உயர்ந்தவருமான சுக்ரீவரின் வார்த்தைகளைக் கேள் - தர்மத்துக்கும், உலக நன்மைக்கும் உகந்த அந்த வார்த்தைகள் வருமாறு:

"இந்திரனுக்கு நிகரான தசரதர் என்ற ஒரு மாபெரும் அரசர் இருந்தார். அவர் இந்த உலகத்துக்கே ஒரு தந்தையாகவும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் கொண்ட ஒரு பெரிய சேனைக்குத் தலைவராகவும் இருந்தார்

"சக்தியும், மேன்மையும், உயர்வும் கொண்ட, எல்லோர் மனதுக்கும் இனிமையானவரான அவரது மூத்த புதல்வர் தன் தந்தையின் கட்டளைப்படி, தர்மத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் தன் தம்பி லக்ஷ்மணர் மற்றும் மனைவி சீதை ஆகியோருடன் காட்டில் வசிக்கும்படி நேர்ந்தது.

"அவர்கள் தண்டகாரண்யத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டில் வசித்து வந்த போது, தன் கணவரை விட்டுப் பிரியாத ஜனகரின் மகளான அவர் மனைவி ஒரு நாள் காணாமல் போய் விட்டார். 

"தன் சகோதரனுடன் சேர்ந்து அவரைத் தேடிக் கொண்டிருந்த அந்த இளவரசர் ரிஷ்யமுக மலைக்கு வந்து சுக்ரீவரின் நட்பைப் பெற்றார். சீதையைத் தேடும் பணியில் ஈடுபடுவதாக அவருக்கு சுக்ரீவர் வாக்களித்தார். வானரர்களின் நாட்டை சுக்ரீவருக்குப் பெற்றுத் தருவதாக ராமர் அவருக்கு வாக்களித்தார்.

"அதை நிறைவேற்றும் வகையில், அவர் போரில் வாலியைக் கொன்று சுக்ரீவரை அந்த நாட்டில் வானரர்களுக்கும் கரடிகளுக்கும் தலைவராக ஆக்கினார்.

"வானர அரசர் வாலியை முன்பு நீ அறிந்திருக்கிறாய். அந்த வானரர் போரில் ராமரால் ஒரு அம்பால் கொல்லப்பட்டார். தன் வாக்கை எப்போதும் காப்பாற்றுபவரான வானர அரசர் சுக்ரீவர் முழு வேகத்தில் சீதையைத் தேடும் பணியை மேற்கொண்டு, அந்தப் பணியில் வானரர்களை எல்லாத் திசைகளிலும் அனுப்பியுள்ளார்.

"லட்சக்கணக்கான குரங்குகள் இப்போது எல்லாத் திசைகளிலும், பூமிக்கு மேலேயும், கீழேயும், வானத்திலும் சீதையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

"அவர்களில் சக்தி வாய்ந்த சிலர் வலுவில் கருடனுக்கு ஒப்பானவர்கள். இன்னும் சிலர் வேகத்தில் காற்றைப் போன்றவர்கள், காற்றைப் போலவே எந்த இடத்தையும் தடையின்றி விரைவாகச் சென்றடையக் கூடியவர்கள்.

"நான் வாயுவின் புதல்வனான ஹனுமான். சீதையைக் கண்டு பிடிக்கும் பொருட்டு நூறு யோஜனை அகலமுள்ள இந்த சமுத்திரத்தைக் கடந்து நான் இங்கு வர நேர்ந்தது. எல்லா இடங்களிலும் தேடியபின் கடைசியாக ஜனகரின் மகளான அந்த இளவரசியை நான் உன் அரண்மனையில் கண்டு பிடித்தேன். 

"உயர்ந்தவனே! நீ தர்மத்தின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவன். நீ தவம் செய்து அதனால் பெரும் பலன்களை அடைந்தவன். எனவே மற்றவர்களின் மனைவிகளைக் கடத்திச் சிறை வைத்திருப்பது உனக்கு உகந்ததல்ல.

"உன்னைப் போன்ற அறிவுள்ளவர்கள் தர்மத்துக்கு எதிரான செயல்களைக் கண்மூடித்தனமாகத் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். ஏனெனில் அத்தகைய செயல்கள் முழு அழிவு உட்படப் பல அபாயங்களை விளைவிக்கும்.

"ராமரின் கோபத்துடன் சேர்ந்து, லக்ஷ்மணரின் அதிரும் அம்புகளையும் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தேவர்களிலோ, அசுரர்களிலோ யார் இருக்கிறார்கள்?

"ஓ, அரசனே! ராமருக்குத் தீங்கு விளைவித்த பின், நிம்மதியாக இருக்கக் கூடியவர் இந்த மூன்று உலகங்களிலும் யார் இருக்கிறார்கள்? அவ்வாறு செய்யக் கூடியவர் யாரும் இல்லை.

"எனவே, தர்மத்தின் வழிமுறைகளின்படியும், உனக்கு எல்லையற்ற நன்மைகள் விளைவிக்கும் விதமாகவும், உன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கருதி உன் நன்மைக்காக நான் கூறும் வார்த்தைகளைக் கேள், 

"மனிதர்களுக்குள் மேம்பட்டவரான ராமரிடம் ஜனகரின் மகளான சீதையை ஒப்படைத்து விடு.

"அந்த உயர்ந்த பெண்மணியை நான் கண்டு விட்டேன். இந்தக் கடினமான செயலை நான் செய்து விட்டேன். இதன் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது ராமரால் தீர்மானித்துச் செயல்படுத்தப்பட வேண்டிய விஷயம்.

"விவரிக்க முடியாத சோகத்தில் சீதை ஆழ்ந்திருப்பதை நான் பார்த்தேன். அவரை உன் இடத்தில் வைத்திருப்பது ஐந்து தலை நாகத்தை வைத்திருப்பதைப் போல் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை. அதிக அளவில் உட்கொள்ளப்பட்ட விஷ உணவை ஜீரணிக்க முடியாது என்பது போல் இந்தப் பெண்மணியை தேவர்கள் அசுரர்களுள் எவராலும் பெற முடியாது.

"புலன்களைக் கட்டுப்படுத்தியும், தர்மத்தைப் பின்பற்றியும் நீ அடைந்த நீண்ட ஆயுள் என்னும் பெரும் பேற்றைக் குறைத்துக் கொள்ளும் செயலில் நீ ஈடுபடுவது முறையல்ல.

"உன் தவத்தின் சக்தியால், நீ தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பதாக உனக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருக்கிறது. அந்த நிலையிலும், நான் குறிப்பிடப் போகும் அபாய நிலைகளை உன்னால் சரி செய்ய முடியாது.

"சுக்ரீவர் தேவரும் அல்ல. மனிதரும் அல்ல, ராட்சஸரும் அல்ல, தானவரும் அல்ல, கந்தர்வரும் அல்ல, யட்சரும் அல்ல, பன்னகரும் அல்ல. அவர் குரங்குகளின் அரசர். ராமர் ஒரு மனிதர்.

"ஓ, அரசனே! இந்தச் சூழ்நிலையில் நீ எப்படி உன் உயிரைக் காப்பற்றிக் கொள்ளப் போகிறாய்? 

"அதர்மத்தின் விளைவுகளை ஒருவன் செய்த தர்மத்தின் பலன்களால் வெற்றி  கொள்ள முடியாது. தர்மத்தின் பலன்களும் அதர்மத்தின் விளைவுகளும் தனித்தனியே அனுபவிக்கப்பட வேண்டும். பிராயச்சித்தமோ அல்லது பரிகாரமோதான் அதர்மத்தின் விளைவைப் போக்க முடியும். 

"நீ உன் தர்மத்தின் பலன்களை முன்பே அனுபவித்து விட்டாய். அதில் எனக்கு ஐயமில்லை. நீ இப்போது செய்யும் அதர்மத்தின் விளைவுகளால் நீ விரைவிலேயே வீழ்த்தப்படப் போகிறாய்.

"ஜனஸ்தானம் அழிக்கப்பட்டது, வாலி கொல்லப்பட்டது, சுக்ரீவருக்கும் ராமருக்கும் இடையிலான ஒப்பந்தம் இவற்றைக் கருத்தில் கொண்டு, உன் நலனுக்கு உகந்தது எது என்பதை நீயே முடிவு செய்து கொள்.

"குதிரைகள், தேர்கள், யானைகள் கொண்ட சேனைகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும் இலங்கை நகரை அழிக்க நான் மட்டுமே போதும். அதற்குத் தேவையான சக்தி எனக்கு இருக்கிறது. 

"ஆனால் இது ராமரின் விருப்பத்துக்கு இசைந்ததல்ல. சீதையைக் கடத்திச் சென்றவர்களின் அழிவு தன்னால் ஏற்படும், தன் கையாலேயே ஏற்படும் என்று கரடிகள் மற்றும் குரங்குகள் கூடியிருந்த அவையின் முன்பு அவர் சபதம் செய்திருக்கிறார்.

"ராமருக்குத் தீங்கு செய்தவர்கள் எவரும் பிழைத்திருக்க முடியாது. ராமருக்குத் துன்பம் விளைவித்து விட்டு அமைதியாக வாழ முடியும் என்று இந்திரனால் கூட நினைக்க முடியாது. அப்படி இருக்கும்போது, உன்னைப் போன்றவர்களைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

"சீதை என்று நினைத்து நீ சிறை வைத்திருக்கும் பெண்மணி உன் இலங்கை தேசம் முழுவதையும் அழிக்கப் போகும் சக்தியின் உருவம் என்பதை உணர்ந்து கொள்.

"எனவே சீதையின் வடிவில் உள்ள பாசக் கயிற்றின் சுருக்குக்குள் உன் தலையை நுழைத்துக் கொண்டு உனக்கே நீ இழைத்துக் கொண்டிருக்கும் தீங்கு போதும். இது இதோடு நிற்கட்டும். இப்போது உன் நலனுக்கு எது உகந்ததோ அதைச் செய்.

"இந்த இலங்கை நகரம் அதன் எல்லா மாளிகைகளுடனும் சீதையின் பிரகாசத்தால் எரியூட்டப்பட்ட மற்றும் ராமரின் கோபத்தால் துன்பத்துக்குள்ளான ஒரு நகரமாக ஆகி விட்டது என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்.

"உன் நண்பர்கள், அமைச்சர்கள், உறவினர்கள், சகோதரர்கள், பிள்ளைகள், உனக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரையும், உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள், மனைவிகள் மற்றும் இந்த நகரம் ஆகியவற்றையும் அழிவுக்கு இட்டுச் செல்லாதே.

"அரக்கர்களின் அரசனே! ராமரின் ஊழியனும், அவருடைய தூதனாக அனுப்பபட்டவனுமான என்னால் உனக்கு தர்மத்தின் அடிப்படையில் கூறப்பட்ட யோசனையை ஏற்று அதன்படி நடப்பாயாக.

"ராமர் எல்லா உலகங்களையும், பஞ்ச பூதங்களையும், எல்லா அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் உடனடியாக அழிக்கவும், அவற்றை மீண்டும் உருவாக்கவும் வல்லமை பெற்ற ஒரு அமானுஷ்யப் பிறவி. அவருடைய சக்தி அப்படிப்பட்டது. 

"சக்தியில் விஷ்ணுவுக்கு நிகரானவரான ராமரைப் போரில் சந்திக்க அவருக்கு இணையானவர் தேவர்களிலோ, அசுரர்களிலோ, மனிதர்களிலோ, யக்ஷர்களிலோ, ராட்சஸர்களிலோ, வித்யாதரர்களிலோ, கந்தர்வர்களிலோ, ஊரகர்களிலோ, சித்தர்களிலோ, கின்னரர்களிலோ, பறவைகளிலோ, சுருக்கமாகச் சொல்வதென்றால், எல்லா உலகங்களிலும் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் யாரும் இல்லை.

"பேரரசரும், எல்லா உலகங்களுக்கும் நாயகருமான ராமருக்கு இப்படிஒரு அவமரியாதையைச் செய்த பின், இந்த உலகில் நீ உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு சிறிதும் இல்லை.

"அரக்கர்களின் அரசனே! எல்லா தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும் ஒன்று சேர்ந்தாலும் மூன்று உலகங்களுக்கும் தலைவரான ராமருக்கு அவர்கள் இணையாக மாட்டார்கள்.

"ராமர் போரில் அழிக்க உறுதி பூண்ட ஒருவனுக்கு நான்கு தலைகள் கொண்ட, தானே உருவான பிரம்மா, முப்புரத்தை எரித்த சிவன், தேவர்களின் தலைவனும், விருத்திரனை அழித்தவனுமான இந்திரன் இவர்களால் கூடப் பாதுகாப்பு அளிக்க முடியாது."

அந்த வானரரின் இந்த வலுவான, விவேகமுள்ள, தனக்குப் பிடிக்காத வார்த்தைகளைக் கேட்டு, தனக்கு இணை எவரும் இல்லாத, பத்து தலைகள் கொண்ட ராவணன் கோபத்தினால் கொதித்தவனாக தன் கண்களை உருட்டி அந்த வானரரைக் கொல்லும்படி உத்தரவிட்டான்.

சர்க்கம் 52



"

 

2 comments: