Thursday, September 10, 2020

50. 47ஆவது சர்க்கம் - அக்ஷகுமாரன் வதம்

ஐந்து படைத்தலைவர்களும் அவர்கள் சேனைகள், வாகனங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து அழிக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும், இளவரசன் அக்ஷகுமாரன் போரின் மீது காதல் கொண்டவனாக போர் புரியத் தயாராக அரக்க அரசன் ராவணனின் முன்னால்  போய் நின்றான்.

ராவணனின் ஒரு கண் அசைவினால் ஆணையிடப்பட்டு,தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு தனித்தன்மை வாய்ந்த வில்லை ஆயுதமாக எடுத்துக் கொண்டு துள்ளிக் குதித்து அங்கு கூடி இருந்தவர்கள் முன்பு ஒரு யாகத்தீயைப் போல் அவன் நின்றான்.

பிறகு அந்த வீரம் மிகுந்த அரக்க வீரன் தூய தங்கத்தால் ஆன கவசத்தால் பாதுகாக்கப்பட்ட, உதய சூரியன் போல் ஒளிர்ந்த ஒரு பெரிய தேரில் அமர்ந்து அந்த உயர்ந்த வானரரைத் தாக்குவதற்குக் கிளம்பினான்.

போற்றப்பட்ட அந்த வில் வீரன் அமர்ந்த தேர் அவனுடைய தவ வலிமையால் பெறப்பட்டது. அது தங்கப் பூச்சுடன், பதாகைகளும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கொடிக்கம்பங்களும் கொண்டதாக இருந்தது. 

காற்றைப் போல் வேகம் கொண்ட எட்டு உயர்சாதிக் குதிரைகள் அதில் பூட்டப்பட்டிருந்தன. அதனால் தரையிலும், ஆகாயத்திலும் எந்த ஒரு தடையும் இன்றியும் தேவர்களாலும் அசுரர்களாலும் கூட அழிக்கப்படும் அபாயம் இன்றியும் செல்ல முடியும்.

அந்தத் தேர் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்தது அதில் அம்புகள் நிரப்பபட்டிருந்த அம்பறாவும் எட்டு வாட்களும் வைக்கப்பட்டிருந்தன. ஈட்டிகள், கம்புகள் மற்றும் சூரியனையும், சந்திரனையும் போல் ஒளி மிகுந்த கம்பிகளுடன் கூடிய எல்லா விதமான ஆயுதங்களும் அதில் இருந்தன.

எல்லா விதங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தேர் அது. அப்படிப்பட்ட தேரில் அமர்ந்தபடி அக்ஷகுமாரன் போரைத் துவக்கினான். 

யானைகள், குதிரைகள், தேர்கள் கொண்ட அவனுடைய சேனைகள் எழுப்பிய ஒலி ஆகாயத்தையும், மலைகளுடன் கூடிய பூமியையும் நிரப்பியது. அத்தகைய சேனை பின்தொடர, அவன் நுழைவாயில் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த அந்த வானரரை அணுகினான்.

சிங்கம் போன்ற தோற்றம் கொண்டிருந்த அக்ஷகுமாரன் எதிரிகளின் சேனைகளை அழிக்கும்போது பிரளயகால நெருப்பு போல் இருந்த அந்த வானரரை அணுகினான். 

அவரை அணுகியதும், அவருடைய அற்புதமான தோற்றத்தைக் கண்டு அவர் மீது அவனுக்கு ஒரு மரியாதை தோன்றியது. அந்த உணர்வு அவன் கண்களில் வெளிப்பட அவன் நின்று தன் எதிரியைப் பார்த்தான்.

தாக்குவதில் அந்த வானரருக்கு இருந்த பலத்தையும்,திறமையையும் தன்னுடைய சக்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு அந்த இளவரசன் பனிக்காலம் முடிந்ததும் ஏற்படும் சூரியனின் தோற்றத்தைப் போல் ஓளி விட்டு நின்றான்.

எதிரியின் கேள்விக்கிடமில்லாத பலத்தையும், திறமையையும் முழுவதும் உணர்ந்திருந்த அந்த அக்ஷன் தன் முழு சக்தியையும் மன உறுதியுடன் ஒருமைப்படுத்தி மிகுந்த கோபம் கொண்டவனாக, ஹனுமானைச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தூண்டுவதற்காக, அவர் மீது மீது மூன்று கூரிய அம்புகளைச் செலுத்தினான்.

போர்ச் செயல்களால் அந்த வானரர் சிறிது கூடச் சோர்வடையவில்லை என்பதையும், மாறாக அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், போர் குறித்து உற்சாகத்துடன் இருந்ததையும் கண்டு, தன் வில்லையும் அம்புகளையும் தாக்குதல் நடத்தத் தயாராக வைத்திருந்த அக்ஷகுமாரன் மனதுக்குள் சற்றே கவலை கொண்டவனாகச் சற்று நேரம் யோசனையில் அழ்ந்தான்.

தங்கச் சங்கிலிகளாலும், தோள் வளையங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, பெரும் தாக்குதலை நடத்தும் வல்லமை பெற்றவனாக இருந்த அவன் பிறகு அந்த வானரருடன் போர் புரிய ஆரம்பித்தான். 

அவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த போர் மிகவும் உக்கிரமாக இருந்தது. அது தேவர்கள் மற்றும் அசுரர்கள் மனங்களில் கூடக் கவலையை ஏற்படுத்தியது.

அக்ஷகுமாரனுக்கும் அந்த வானரருக்கும் இடையே நிகழ்ந்த போரைக் கண்டு பூமி நடுங்கியது, சூரியன் ஒளி குன்றியது, காற்று அசைவற்று நின்றது, மலைகள் வியப்பினால் ஸ்தம்பித்தன, ஆகாயம் அதிர்வு அலைகளால் நிறைந்தது, சமுத்திரங்கள் தங்கள் அடிப்பகுதி வரை கலங்கின.

பிறகு வில் வித்தையின் எல்லா வகைகளிலும் தேர்ந்தவனான அந்த வீரன் தங்கக் கம்பிகளால் ஆன, இறக்கைகள் கொண்ட, வீரியத்தில் பாம்புகளைப் போன்ற மூன்று விஷம் தோய்க்கப்பட்ட அம்புகளை அந்த வானரரின் தலையில் செலுத்தினான்.

ஒரே நேரத்தில் தன் தலையில் செலுத்தப்பட்ட அந்த மூன்று அம்புகளால் ஹனுமான் சிறிதும் கலங்கவில்லை. மாறாக அம்புகள் கதிர்கள் போல் தோற்றமளிக்க, ரத்தத் துளிகளால் சிவந்து, உதிக்கும் சூரியனைப் போல் சிவந்திருந்த கண்களை உருட்டியபடி அவர் உதய சூரியனைப் போல் ஒளி விட்டார்.

பிறகு வானர அரசனின் அமைச்சரான ஹனுமான் பல்வகை ஆயுதங்களுடனும், விற்களுடனும் இருந்த அரக்க அரசனின் மகனை போர்க்களத்தில் நெருக்கத்தில் பார்த்தார். போருக்குத் தயாரானவராக, ஹனுமான் ஒரு பயங்கரமான போர் முழக்கத்தை எழுப்பினார்.

சக்தி வாய்ந்தவரும், தைரியம் மிகுந்தவருமான ஹனுமான் பெரும் கோபம் கொண்டு மந்தர மலையின் மீது தோன்றும் சூரியனைப் போல் ஜொலித்தவராக, அக்ஷகுமாரன், அவன் சேனைகள் மற்றும் வாகனங்களைத் தன் கண்களிலிருந்து வெளிப்பட்ட சக்தி வாய்ந்த கதிர்களால் சுட்டெரித்தார்.

அந்த அரக்கன் என்ற மேகம் வில் என்ற வானவில்லைக் கொண்டு அம்புகள் என்னும் மழையைப் பொழிய, அந்த அம்பு மழை ஹனுமான் என்ற மலையை மூடியது.

 பயங்கரமான தாக்குதலைத் தொடுத்து, பெரும் துணிவு, வலிமை, அற்புதம் ஆகியவற்றை வெளிப் படுத்திய அக்ஷகுமாரனைப் போர்க்களத்தில் பார்த்து மகிழ்ச்சியடைந்த சோர்வற்ற வலிமை கொண்ட ஹனுமான் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் வாய் விட்டுச் சிரித்தார்.

தன் பலம் பற்றிய குழந்தைத்தனமான கர்வத்துடனும், கோபத்தினால் சிவந்த கண்களுடனும் அக்ஷகுமாரன் புற்களால் மூடப்பட்ட கிணற்றை நோக்கிச் செல்லும் யானையைப் போல் அந்த வானரரைத் தாக்கினான். 

அவன் தன் மேல் அம்பு மழை பொழிவதைக் கண்டதும், ஹனுமான் இடி போன்ற ஒரு முழக்கம் செய்து, தன் கால்களையும், கைகளையும் நீட்டி ஒரு பயங்கர உருவத்தை எடுத்துக் கொண்டு வானத்தில் விரைவாக எழும்பினார்.

பனிக்கட்டி மழை மலையின் மேல் பனிக்கட்டிகளைப் பொழிவதைப் போல், அந்த சக்தி வாய்ந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட, திறமை பெற்ற தேர் வீரனாகிய அந்த அரக்கன் வானத்தில் எழும்பிக் கொண்டிருந்த ஹனுமான் மீது அம்பு மழை பொழிந்தான்.

மிகவும் வீரியம் கொண்ட, காற்றைப் போன்ற வேகம் கொண்ட வானரர், தன்னை நோக்கி வந்த அம்புகளைப் புறம் தள்ளி விட்டு, அம்புகளுக்கிடையே காற்றைப் போல் நுழைந்து காற்றின் பாதையான வானில் சிரித்துக் கொண்டே நின்றார்.

போரின் மீது மிகுந்த விருப்பம் கொண்டு, நாணேற்றப்பட்ட தன் வில்லுடனும் தன் கூரிய அம்புகளால் வானை மறைத்தபடியும் சண்டையிடத் தயாராக நின்ற அக்ஷனைப் பார்த்த வாயுபுத்திரர் தன் மனதுக்குள் அவன் மீது ஒரு மரியாதை ஏற்பட்டவராக அவனை உற்றுப் பார்த்தபடி ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த இளவரசன் செலுத்திய அம்புகளால் தன் மார்பில் காயம் பட்டவராக, செயல்களின் நியாயத்தன்மை பற்றி நன்கு உணரக் கூடிய அந்த சக்தி வாய்ந்த வானரர் அடுத்தாற்போல் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தன் மனதுக்குள் முடிவு செய்தார்.

அவர் நினைத்தார்:

"சக்தி வாய்ந்தவனும், உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்டவனுமான இந்தச் சிறுவன் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு மனிதன் செய்யக் கூடிய செயலைச் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் திறமை வாய்ந்த போர் வீரனை உடனே கொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

"இவன் சக்தி வாய்ந்தவன், துணிவுள்ளவன், மிகவும் மதிக்கத் தகுந்தவன். மிகவும் கடுமையான சூழ்நிலைகளிலும் இவன் அசைக்க முடியாதவன். போரில் எல்லாச் சூழ்நிலைகளிலும் இவன் மிகவும் பொறுமையுடனும் அமைதியாகவும் செயல்படுகிறான். தன் திறமையான செயல்பாட்டால் இவன் நாகர்கள், யட்சர்கள் மற்றும் முனிவர்களால் புகழத் தக்கவன் என்பதில் ஐயமில்லை.

"தைரியத்தாலும், உற்சாகத்தாலும் உந்துதல் பெற்று, இவன் என்னை கவனமாகப் பார்த்துக்கொண்டே என்னுடன் போர் புரிகிறான். மிகவும் வேகமான அசைவுகள் கொண்ட இவனுடைய தாக்குதல் எல்லா தேவர்கள் மற்றும் அசுரரர்கள் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்.

"நான் இவனைத் தவிர்த்தாலும் இவன் தாக்குதலை நிறுத்த மாட்டான். போரின்போது இவனுடைய போர் வெறி அதிகமாகிறது. பரவிக் கொண்டிருக்கும் நெருப்பை ஆரம்பத்தில் அலட்சியம் செய்யக்கூடாது."

இவ்வாறு எதிரியின் வேகத்தையும் தன் இலக்கு என்ன என்பதையும் மனதில் கணக்குப் போட்ட வலுவானவரும், சக்தி படைத்தவருமான ஹனுமான் இந்தத் தீயவன் உடனே கொல்லப்பட வேண்டும் என்று மனதில் தீர்மானம் செய்து கொண்டார்.

வாயுபுத்திரரான அந்த வானர வீரர், வானிலிருந்து தாக்குதல் நடத்தபடியே சோர்வே அறியாத, தேர் அதிரும்போதோ அல்லது எந்தத் திசையிலேனும் திரும்பும்போதோ தேரின் எடையைத் தாங்கும் சக்தி பெற்ற எட்டு குதிரைகளையும் அழித்தார்.

ஹனுமானின் கைகளால் அடிக்கப்பட்ட அந்தத் தேர், குதிரைகள் கொல்லப்பட்டு, சட்டங்கள் விழுந்து, சேணக் கம்பங்கள் உடைந்து வானத்திலிருந்து தரையில் விழுந்தது.

பிறகு, அந்தச் சிறந்த தேர்ப்போர் வீரன் தேரை விட்டு விட்டு, வில்லுடனும், கையில் ஏந்திய கத்தியுடனும், பெரும் தவம் செய்தவர்கள் தங்கள் உடலை விட்டு விட்டு சொர்க்கத்துக்கு எழும்பிச் செல்வது போல் வானத்தில் எழும்பினான்.

அப்போது காற்றைப் போல் வேகம் கொண்ட அந்த வானரர், கருடன், வாயு, சித்தர்கள் ஆகியோரின் பாதையான வானத்தில் பறந்து அந்த அரக்கனைத் தன் கால்களுக்கிடையே இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவனுடன் போரில் ஈடுபட்டார்.

தன் இனத்தவருக்குள் மிகவும் சிறந்தவரும், தன் தந்தையைப் போல் சக்தி வாய்ந்தவருமான அந்த வானரர் கருடன் பாம்பைச் சுழற்றுவது போல் தன் எதிரியைச் சுழற்றி விசையுடன் அவனைத் தரையில் எறிந்தார்.

அந்த அரக்கன் அவன் உடல் உறுப்புக்கள், முதுகெலும்பு, கழுத்து எல்லாம் உடைந்து, எலும்புகள்  சிதறி, விழிகள் வெளிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தான்.

அவனைப் பிணமாகத் தரையில் விழச் செய்ததன் மூலம் அந்த வானர வீரர் அரக்க அரசனின் மனதில் பெரும் அச்சத்தை எழுப்பினார்.

அந்த இளவரசன் வானர வீரரால் கொல்லப்பட்டதை வானத்தில் சென்று கொண்டிருந்த தவ முனிவர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள், பூதர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் வியப்புடனும், களிப்புடனும் பார்த்தனர்.\

இந்திரனைப் போன்ற தேஜஸுடன் இருந்த அந்தச் சிவப்புக் கண் கொண்ட இளவரசன் அக்ஷனை இவ்வாறு கொன்ற பின், வீரரான ஹனுமான் நுழைவாயில் தூணுக்கு மீண்டும் திரும்பிச் சென்று, மேலும் எதிரிகளைக் கொல்வதற்காக யமனைப் போல் காத்திருந்தார்.

சர்க்கம் 48

3 comments:

  1. மன்னிக்கவும் அக்ஷயகுமாரன் என்று தானே பெயர். அன்னார் ஆஞ்சநேயர் உடன் யுத்தம் விளக்கிய முறை சிறப்பு!

    ReplyDelete
  2. அக்ஷகுமாரன் என்றுதான் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  3. புரிந்தது தகவலுக்கு நன்றி

    ReplyDelete