Monday, August 31, 2020

49. 46-ஆவது சர்க்கம் - ஐந்து படைத் தலைவர்கள் அழிக்கப் படுதல்

அந்த சக்தி வாய்ந்த வானரரால் ஐந்து மந்திரி குமாரர்கள் அழிக்கப்பட்டது ராவணனின் மனதில் பெரிய கிலேசத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஒரு முடிவை அவன் மேற்கொண்டான்.

பத்து தலைகள் கொண்ட ராவணன் விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்தரன், பிரகஸன், பாஸகர்ணன் ஆகிய அவனுடைய ஐந்து படைத்தலைவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பித்தான். 

இந்த அரக்கர்கள் அனைவரும் வீரம் மிகுந்தவர்கள், போர்க்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள், போர்க்களத்தில் வேகமாகச் சுழன்று செயல்படுபவர்கள், ஹனுமானைப் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.

ராவணன் அவர்களிடம் கூறினான்.

"என்னுடைய தளபதிளே! நீங்கள் எல்லோரும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகியவற்றுடன் கிளம்புங்கள். அந்தக் குரங்குக்கு நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

"ஆனால் நீங்கள் அதை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். மாறும் சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்பட்டு, நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல் பட வேண்டும்.

"அதனுடைய செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கும்போது அது ஒரு சாதாரணக் குரங்காக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு அசாதாரணமான சக்தி கொண்ட பிராணி என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை நம்முடன் போர் செய்வதற்காகவே இந்திரன் தன் தவ வலிமையால் அதை உருவாக்கி இருக்கலாம்.

"உங்கள் எல்லோருடைய துணையுடன் நாகர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், அசுரர்கள், மகரிஷிகள் ஆகிய எல்லோரையும் நான் தோற்கடித்தேன். தோற்கடிக்கப்பட்ட அந்தப் பிறவிகள் இப்போது நமக்கு எதிராக ஏதோ ஒரு உத்தியையோ, தந்திரத்தையோ பயன்படுத்தி இருக்கிறார்கள். குரங்கு என்று கருதப்படும் இந்தப் பிராணி சந்தேகமில்லாமல் அவர்களுடைய தூதுவன்தான்,

"எனவே உங்களிடம் இருக்கும் எல்லா வசதிகளையும் பயன்படுத்தி, அதைப் பிடித்துக் கட்டிப் போடுங்கள். தளாராத துணிவும், சக்தியும் கொண்டதாகத் தோன்றும் இந்தக் குரங்கை நீங்கள்  குறைத்து மதிப்பிடக் கூடாது. 

"ஏனெனில் வாலி, சுக்ரீவன் சக்தி வாய்ந்த ஜாம்பவான், நீலன், படைத்தலைவன் த்விவிதன் போன்ற மிகவும் சக்தியும்,துணிவும் கொண்ட குரங்குகளை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன்.  

"அவர்கள் இதைப் போல் இவ்வளவு வேகம் கொண்டவர்கள் அல்ல, இந்தப் பிராணியைப் போல் தேஜஸ், வீரம், பலம், உற்சாகம் எந்த வடிவமும் எடுக்கும் வல்லமை ஆகியவற்றையும் அவர்கள்  கொண்டிருக்கவில்லை. 

"இது குரங்கு வடிவத்தில் வந்திருக்கும் ஒரு பயங்கரமான மர்ம ஜந்து என்று நான் நினைக்கிறேன். நாம் அதிக முயற்சி எடுத்து  அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

"இந்த அண்டத்தில் இந்திரன், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் போரில் உங்களுக்கு இணையாக மாட்டார்கள். இது என் உறுதியான கருத்து.

"ஆயினும், ராஜதந்திரியாகவும், வெற்றியின் மீது கண் உள்ளவனாகவும் இருக்கும் ஒரு போர் வீரன் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பான். ஏனெனில், போரின் முடிவுகள் நிச்சயமற்றவை."

அந்த அரக்கர்கள் எல்லோரும் துணிவு மிக்கவர்கள், திறமையுள்ளவர்கள், நெருப்பு போல் ஒளி விடுபவர்கள். தேர்கள், யானைகள், அதி வேகக் குதிரைகள், கூர்மையான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் தங்கள் எஜமானர் விரும்பியபடி தங்கள் படையுடன் அவர்கள் போருக்கு விரைந்தனர்.

பிரகாசத்தில் சூரியனைப் போல் இருந்த அந்த வானர வீரரை அந்த வீரரர்கள் இப்போது பார்த்தனர்.

சக்தி, துணிவு, திறமை எல்லாம் நிறைந்தவராகவும், பெரிய உடலும், மிகுந்த அறிவும் படைத்தவராகவும் இருந்த இருந்த அவரைப் பார்த்ததும், அந்த அரக்கர்கள் அவரைப் பல திசைகளிலிருந்தும் சூழ்ந்து  கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.

கருப்பு நிறக் கைப்பிடியும், கூர்மையான முனைகளும் கொண்ட ஐந்து பெரிய இரும்பு அம்புகளால் ஹனுமானின் தலையை அரக்கன் துர்தரன் தாக்கினான்.

அந்த அம்புகளைத் தன் தலையில் வாங்கிக் கொண்ட ஹனுமான் தன்னுடைய கர்ஜனைகளால் எல்லாத் திசைகளையும் அதிர வைத்து வானில் எழும்பினார்.

வீரமும் சக்தியும் மிகுந்த துர்தரன் தன் தேரில் அமர்ந்து தன் வில்லின் நாணைச் சுண்டி கணக்கற்ற கூரிய அம்புகளை விட்டுப் போரிட்டபடி அவருக்கு அருகில் வந்தான்.

மழைக்கால முடிவில் காற்று மேகங்களைத் தடுத்து நிறுத்துவது போல் துர்தரன் வானத்தில் செலுத்திய எல்லா அம்புகளையும் அந்த வானரர் தடுத்து நிறுத்தினார். துர்தரன் ஹனுமானை பயங்கரமாகத் தாக்கியபோது, அவர் தன் உருவத்தை இன்னும் பெரிதாக்கி பயங்கரமான ஒலிகளை எழுப்பினார்.

அந்தத் திறமை வாய்ந்த வானரர் வானத்தில் மிக உயரமாக எழுந்து துர்தரனின் தேரின் மீது  இடியைப் போல் விழுந்தார். ஹனுமான் விழுந்த தாக்கத்தால் உடனே தேர்க் குதிரைகளும் தேரின் பாகங்களும் நொறுங்கி விழ, துர்தரன் தேரிலிருந்து விழுந்து இறந்தான்.

அவன் இறந்து விழுந்து கிடப்பதைக் கண்ட கலவரம் அடையாத போர் வீரர்களும், எதிரிகளை அழிப்பவர்களுமான அரக்கர்கள் விரூபாக்ஷன், யுபாக்ஷன் இருவரும் மிகுந்த கோபத்துடன் ஹனுமானின் முன்பு பாய்ந்து வந்தனர்.

வானத்தில் எழும்பி நின்று அவர்கள் முள் பதிக்கப்பட்ட கட்டைகளால் சக்தி வாய்ந்த அந்த வானர வீரரின் மார்பில் அடித்து அவரைத் தாக்கினர்.

தாக்குவதில் கருடனுக்கு நிகரான அந்த சக்தி வாய்ந்த ஹனுமான் அந்தப் போர் வீரர்களின் ஆவேசமான பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தரையில் இறங்கினார்.

வாயுவின் குமாரரான அந்த வானரர் ஒரு பெரிய ஆச்சா (சால) மரத்தைப் பார்த்தார். அதை வேரோடு பிடுங்கிய அவர் அந்த இரண்டு அரக்க வீரர்களையும் அந்த மரத்தால் அடித்துக் கொன்றார்.

அந்த சக்தி வாய்ந்த வானரரால் மூவரும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிரகஸன் மிகுந்த கோபத்துடன் வந்து தன் எதிரியின் மீது பாய்ந்தான்.

 பாஸகர்ணன் என்ற மற்றொரு சக்தி வாய்ந்த அரக்கன் கையில் ஒரு சூலத்தை ஏந்தியபடி மிகுந்த ஆவேசத்துடன் மனம் தளர்வடையாத அந்த வானரத் தலைவருடன் போரிட வந்தான்.

அரக்கன் பாஸகர்ணன் ஹனுமானை ஒரு சூலத்தினால் தாக்க, பிரகஸன் அவரை ஒரு கூரான வாளால் குத்தினான்.

இந்தத் தாக்குதல்களால் தன் உடல் காயமடைந்து தலை முழுவதும் ரத்தத்தில் ஊறியவராக இருந்த ஹனுமான் செவ்வானத்தில் உதிக்கும் சூரியன் போல் தோற்றமளித்தார். 

பிறகு வானரத் தலைவர் ஹனுமான் மிருகங்களும், பாம்புகளும் வாழ்ந்து வந்த மரங்கள் அடர்ந்த ஒரு மலையின் உச்சியைப் பிடுங்கி அந்த இரண்டு அரக்கர்களின் மீது எறிந்து அவர்களைக் கொன்றார்.

ஐந்து படைத்தலைவர்களும் கொல்லப்பட்ட பிறகு மீதமிருந்த அவர்களுடைய மொத்த சேனையையும் ஹனுமான் அழித்தார். 

குதிரைகளைக் குதிரைகளைக் கொண்டும், யானைகளை யானைகளைக் கொண்டும், மனிதர்களை மனிதர்களைக் கொண்டும், தேர்களைத் தேர்களைக் கொண்டும் அடித்து  இந்திரன் அசுரர்களை அழித்தது போல் அந்தச் சேனைகளை அந்த வானரர் அழித்தார்

தரை முழுவதும் யானைகள், குதிரைகள், அரக்க வீரர்கள் ஆகியோரின் சடலங்கள், தேர்களின் உடைந்த பகுதிகள் ஆகியவற்றால் மூடப்பட்டிருந்தது.

சேனைத்தலைவர்கள், அவர்களுடைய சேனைகள், வாகனங்கள் ஆகியவற்றைப் போரில் அழித்த பின்  அந்த வீர வானரர் நுழைவாயில் கோபுரத்துக்கு மீண்டும் ஓடி ராவணனின்  சேனைகளை அழிப்பதற்கான அடுத்த வாய்ப்புக்காக யமனைப் போல் காத்திருந்தார்.

சர்க்கம் 47




2 comments:

  1. விரூபாக்ஷன், யூபாக்ஷன், துர்தரன், பிரகஸன், பாஸகர்ணன் வதங்கள் பற்றிய விவரணம் சிறப்பு. நன்றி
    Sankara Narayanan

    ReplyDelete