Wednesday, August 14, 2019

30. 27ஆவது சர்க்கம் - திரிஜடையின் கனவு

சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, கொடூரம் நிறைந்த அரக்கிகள் மிகுந்த கோபம் கொண்டனர். சிலர் இதை ராவணனிடம் சொல்ல விரைந்தனர்.

பிறகு, கொடிய தோற்றம் கொண்ட அந்த அரக்கிகள் சீதையைச் சூழ்ந்து கொண்டு பாவத்தை மட்டுமே விளைவிக்கக் கூடிய அந்தப் பாவச் செயலைப் பற்றிக் கடுமையாகப் பேசத் தொடங்கினர்.

"சீதா! தற்கொலை என்னும் இந்தப் பாவச் செயலில் ஈடுபட எண்ணும் முட்டாள் பெண்ணே! அரக்கிகளாகிய நாங்கள் உன் உடலை விருந்தாக உண்ணப் போகிறோம்" என்று அவர்கள் கூறினர்.

பிறகு, அந்த விகாரத் தோற்றம் கொண்ட, இரக்கமற்ற பெண்களால் அச்சுறுத்தப்பட்டிருந்த சீதையைப் பார்த்து, சீதையின் மனதைப் புரிந்து கொண்ட திரிஜடை என்னும் அரக்கி இவ்வாறு கூறினாள்: 

"ஓ, பாவம் நிறைந்தவர்களே! நீங்கள் என்னை உண்ணலாம். ஆனால், ஜனகரின் மகளும், தசரதரின் மருமகளும், எல்லோராலும் விரும்பப்படுபவளுமான சீதையை உண்ண முடியாது.

"உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்போது நான் ஒரு கனவு கண்டேன். அதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. என் உடல் முழுவதிலும் மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. அது மொத்த அரக்கர்களின் அழிவையும், சீதையின் கணவனின் வெற்றியையும் பற்றியது."

கோபத்தினால் எது சரி, எது தவறு என்று சிந்திக்கும் சக்தியைக் கூட இழந்திருந்த அந்த அரக்கிகள் திரிஜடையின் வார்த்தைகளைக் கேட்டு பீதி அடைந்தனர். 

"நேற்று இரவு நீ கண்ட கனவைப் பற்றி விரிவாகச் சொல்" என்று அவர்கள் அவளிடம் கேட்டுக் கொண்டனர்.

அரக்கிகள் இவ்வாறு கூறியதும், திரிஜடை தன் கனவு மூலம் தான் அறிந்து கொண்ட விஷயத்தை விவரிக்கத் தொடங்கினாள்.

"ரகுகுலத் திலகர்களான ராமனும், லக்ஷ்மணனும், பட்டாடையும், பூமாலையும் அணிந்து, ஆயிரம் அன்னங்களால் தூக்கிச் செல்லப்படும், தந்தத்தினால் செய்யப்பட ஒரு விமானத்தில் சுகமாக அமர்ந்திருக்கிறார்கள். 

"கடலுக்கு நடுவில் ஒரு வெள்ளை யானை மீது, சூரியன் பிரபையுடன் இணைந்திருப்பது போல், சீதையும் ராமனும் மகிழ்ச்சியாக அமர்ந்திருப்பதையும் நான் பார்க்கிறேன்.

"ராமனும் லக்ஷ்மணனும் நான்கு தந்தங்கள் கொண்ட மலை போன்ற யானையின் மீது சவாரி செய்வதையும் நான் பார்த்தேன். 

"பிறகு அந்த இரண்டு வீரர்களும் வெள்ளைப் பட்டாடைகள், வெள்ளை மாலைகள் அணிந்து தங்கள் இயல்பான பிரகாசத்துடன் ஜனகரின் மகளான சீதையின் அருகில் வந்தனர்.

"விண்ணை எட்டும் மலையின் உச்சியில், யானையின் கழுத்தில் ஏறிய சீதை யானையின் மேல் அமர்ந்திருந்த ராமனுடன் இணைந்ததை நான் பார்த்தேன்.

"தாமரைக் கண் கொண்ட ராமனின் மடியிலிருந்து எழுந்து நின்ற சீதை, தன் கைகளைத் தூக்கி சூரியனையும் சந்திரனையும் தாண்டித் தன் கைகளை நீட்டுவதைப் பார்த்தேன்.

"அதற்குப் பிறகு, அந்த இரண்டு அரச குமாரர்களையும், அழகிய சீதையையும் தன் கழுத்தில் தாங்கிய அந்த கம்பீரமான யானை இலங்கைக்கு மேல் வானத்தில் நின்றது.

''காகுஸ்த வம்சத்தைச் சேர்ந்த ராமன் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் எட்டு ஜோடி வெள்ளைக் காளைகள் பூட்டிய தேரில் அமர்ந்து வந்தார். பிறகு வீரச்செயல்கள் புரிந்துள்ள ராமன் மூன்று உலகங்களையும் விழுங்கிய பயங்கரமான காட்சியைப் பார்த்தேன்.

''பாற்கடலிலிருந்து ஒரு வெள்ளை மலை எழுந்தது. அதன் உச்சியில் நான்கு தந்தங்கள் கொண்ட ஒரு வெள்ளை யானை தோன்றியது. அதன் முதுகில் ராமன் தன் தம்பி லக்ஷ்மணர், தன் மனைவி சீதை ஆகியோருடன் அமர்ந்திருந்தார்.

''அங்கிருந்து சீதை எழுந்து நின்று அழகான தோற்றத்துடன் இருந்த முழுநிலவைத் தழுவி விட்டுப் பிறகு தன் கணவன் மடியில் அமர்ந்தார்.

''அதற்குப் பிறகு தாமரைக் கண் கொண்ட, புகழ் பெற்ற, காகுஸ்த வம்ச வீரரான ராமன் ஒரு அற்புதமான அரியணையில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். 

"எல்லாப் புனித நதிகளின் நீராலும் அவர் பிரம்மரிஷிகளால் நீராட்டப்பட்டார். எல்லா தேவர்களும் அவரை வாழ்த்தினர். அங்கே ஜனகரின் அழகிய மகளான சீதை பட்டாடைகள், வெள்ளை மாலைகள் அணிந்து, வாசனை திரவங்களின் நறுமணத்துடன் ஓளி பொருந்தியவராக இருந்தாள்.

''பிறகு, பிரம்மாவின் தலைமையில் வந்த தேவர்கள், கந்தர்வர்கள், மகரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் ராமனை வணங்கினர். அனைவரையும் மகிழ்விக்கும் ராமன் அந்த அற்புதமான அரியணையில் அமர்ந்தபடி தன்னை மகாவிஷ்ணுவாக வெளிப்படுத்தினார். மேலும் நான் பார்த்த விஷயங்களை விளக்குகிறேன்.

"அங்கே ராமன் தன் எல்லாப் புகழும் விளங்கும் விதத்தில், உயர்ந்த தத்துவமாகவும், உயர்ந்த ஞானமாகவும், உயர்ந்த உணர்வாகவும், மூல காரணமாகவும், உயர்ந்த தவமாகவும், புனிதத்துக்கெல்லாம் புனிதமாகவும், காரணங்களுக்கெல்லாம் காரணமாகவும் விளங்கும் பரமாத்மாவான மஹாவிஷ்ணுவாகத் தன்னை வெளிக்காட்டினார்.

"அவர் சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் தாமரைக் கண்கள் கொண்டவராக, திருமார்பில் லக்ஷ்மியுடன், எப்போதும் விடுபட்ட நிலையில் இருப்பவராக, நிலையானவராக, அழிவற்றவராக, ஒளி பொருந்தியவராகத் தோன்றினார்.

"தாமரைக் கண் கொண்ட ரகுகுலத்தவரின் ஆனந்தமான அவர், எல்லா உலகங்களுக்கும் கடவுளாகத் தன்னை வெளிப்படுத்தினார்.

"பிறகு, தேவர்கள், பித்ருக்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் ஆகியோர் ராமனைச் சூழ்ந்து கொண்டு அவருக்கு சக்ரவர்த்தியாக முடி சூட்டினார்கள். 

"பிறகு, அவர்கள் அவரைக் கை கூப்பி வணங்கியபடி, அவர் புகழைப் பாடினர். பிறகு, அப்சரஸ்கள் ஒன்று கூடி, மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடி, குழல், வீணை, முரசு, கொட்டு போன்ற வாத்தியங்களையும் இசைத்தனர்.

"வீரரும் நேர்மையானவருமான ராமனை நான் இன்னொரு விதத்திலும் பாரத்தேன். தன் தம்பி லக்ஷ்மணன், மற்றும் மனைவி சீதையுடன் அவர் சூரியன் போன்று ஒளிர்ந்த தெய்வீகமான புஷ்பக விமானத்தில் ஏறி வடக்குத் திசை நோக்கிப் பயணம் செய்தார்.

"இந்த எல்லா வடிவங்களிலும், லக்ஷ்மணன் மற்றும் சீதையுடன் கூடியவராக, விஷ்ணுவின் ஆற்றலுடனும், பெருமையுடனும் ராமன் விளங்குவதைப் பாரத்தேன்.

"பாவம் செய்தவர்கள் எப்படி சொர்க்கத்துக்குப் போக முடியாதோ, அது போல் தேவர்கள், அசுரர்கள் அல்லது வேறு யாராலும் எல்லையற்ற ஆற்றல் கொண்ட ராமனை வெல்ல முடியாது.

''அது மட்டுமல்ல. ராவணன் மொட்டையடித்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணெய் தடவிக்கொண்டு, அரளிப்பூ மாலை அணிந்து கொண்டு இருப்பதையும் நான் பார்த்தேன்.

''இன்னொரு சமயம், ராவணன் மொட்டையடித்துக் கொண்டு கருப்பு உடை அணிந்து புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழ, அவரை ஒரு பெண் இழுத்துச் செல்வதை நான் பார்த்தேன்.

''சிவப்பு நிற மாலை அணிந்து, உடல் முழுவதும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு, கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் ராவணன் செல்வதையும் நான் பார்த்தேன். தெற்குத் திசையில் சென்ற அவர் புதைகுழியில் சிக்கிக் கொண்டார்.

"உடல் முழுவதும் சகதி பூசப்பட்ட, சிவப்பு நிற ஆடை அணிந்த ஒரு கருப்பு நிறப் பெண் அவர் கழுத்தைப் பிடித்து தெற்குத் திசையில் இழுத்துக் கொண்டு போனாள். 

"அவர் எண்ணெயைக் குடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும், போதையுடனும், சோர்வடைந்தும் தெற்குத் திசை நோக்கி ஒரு கழுதை மீது அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தார்.

''பிறகு அரக்கர்களின் அரசரான ராவணன் அதிர்ச்சியுடனும், பயத்துடனும், கழுதை மேலிருந்து தலை குப்புற விழுவதை நான் பார்த்தேன். பிறகு குடிகாரன் போல் அச்சத்துடனும் குழப்பத்துடனும் அவர் எழுந்தார். 

"ஆடை எதுவும் அணியாமல் பைத்தியக்காரன் போல் தெளிவில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தார். பிறகு நரகம் போல் இருட்டாகவும், பயங்கரமாகவும் தோன்றிய ஒரு மலக்குழியில் அவர் விழுந்தார்.

"பிறகு கும்பகர்ணனுக்கும் இதே கதி நேர்ந்ததை நான் பார்த்தேன். ராவணனின் எல்லாப் புதல்வர்களும் மொட்டையடித்துக் கொண்டு, உடல் முழுவதும் எண்ணெய் தடவியபடி நின்றதை நான் பார்த்தேன். 

"ராவணன் ஒரு பன்றி மீதும், இந்திரஜித் ஒரு முதலை மீதும், கும்பகர்ணன் ஒரு ஒட்டகத்தின் மீதும் தெற்குத் திக்கில் சவாரி செய்வதையும் நான் பார்த்தேன்.

"என் கனவில் விபீஷணன் ஒருவரை மட்டும்தான் வெள்ளைக் குடையின் கீழ், வெள்ளை மாலைகள் அணிந்து, வெள்ளை உடை அணிந்து, வெண் சந்தனம் பூசியபடி நிற்பதைப் பார்த்தேன்.

"சங்குகள், முரசுகள் போன்ற இசைக்கருவிகள் முழங்க, பாடல்களாலும், ஆடல்களாலும் அவர் கௌரவிக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். மேக நிறம் கொண்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானை மீது, நான்கு அமைச்சர்களுடன் அவர் ராமனை நோக்கிச் செல்வத்தையும் நான் பார்த்தேன்.

''முரசுகளும், பிற இசைக்கருவிகளும் முழங்க, அரக்கர்கள் தனித் தனிக் குழுக்களாக நின்று கொண்டு, சிவப்பு மாலைகள் அணிந்து, மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். 

"குதிரைகள், தேர்கள் யானைகள் கொண்ட இலங்கைக் கோட்டையின் உயரமான கதவுகள் கடலுக்குள் விழுவதை நான் பார்த்தேன்.

"ராவணனால் நன்கு பாதுக்காக்கப்பட்டிருந்தாலும், ராமனின் தூதனான ஒரு குரங்கால் இலங்கை எரிக்கப்படுவதைப் பார்த்தேன்.

"எண்ணெய் குடித்து, போதையில் இருந்த அரக்கர் குலப் பெண்கள் வெறித்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

"எரித்துச் சாம்பலாக்கப்பட்டிருந்த இலங்கை நகரில், கும்பகர்ணனும் மற்ற அரக்கர் குல வீரர்களும் சிவப்பு ஆடை அணிந்து மலக்குழியில் அழுந்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

"ராவணனையும் அவர் ஆதரவாளர்களையும், தாட்சண்யம் பார்க்காமல் கொன்று, ராமர் சீதையை மீட்கப் போகிறார். இதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். எனவே, காலம் கடக்கும் முன் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்.

"காட்டுக்குத் தன்னைப் பின் தொடர்ந்து வரும் அளவுக்கு விஸ்வாசமாக இருந்த தன் மனைவி உங்களால் அச்சுறுத்தப்பட்டதாக அறிந்த பின், அவர் உங்களை மன்னிக்கத் தயாராக இருக்க மாட்டார். 

"எனவே உங்கள் அச்சுறுத்தும் பேச்சுக்களை நிறுத்துங்கள். இப்போதாவது ஆறுதலான வார்த்தைகளைப் பேசுங்கள். விதேஹ நாட்டு இளவரசியான சீதையிடம் நாம் மன்னிப்புக் கோருவது நலம் என்று நினைக்கிறேன்.

"என் கனவின் முக்கிய கருப்பொருளான இந்தத் துயரடைந்த பெண் அவருடைய துன்பங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவள் கணவருடன் ஒன்று சேர்க்கப்படப் போவது நிச்சயம். 

"எனவே நீங்கள் பயமுறுத்திக் கொண்டிருந்த நபரிடம் மன்னிப்புக் கேளுங்கள். அரக்க குலப் பெண்களே! இதில் எந்த விதத் தயக்கமும் காட்ட வேண்டாம்.

"ஐயோ! அரக்கர் குலத்துக்கு ராமனால் பெரும் அழிவு ஏற்படப் போகிறது. அரக்கர் குலப் பெண்களே! ஜனகரின் மகளும், மிதிலையின் இளவரசியுமான சீதை தன்னை வணங்கும் எவரையும் மன்னிக்கக் கூடியவர். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் மூலம் பெரும் அபாயத்திலிருந்து நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

"அது மட்டும் இல்லை. இந்த அழகிய பெண்ணின் உடலில் நான் எந்த ஒரு அமங்கலமான அடையாளத்தையும் காணவில்லை. நியாயமற்ற முறையில் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண் விமானத்தில் ஏறுவதை என் கனவில் நான் கண்டபோது, அவளிடம் நான் கண்ட ஒரே குறை அழுக்கினால் அவள் நிறம் சற்று மங்கி இருந்தது மட்டும்தான்.

"அரக்கர்களின் முடிவையும், ராமனின் வெற்றியையும், மிதிலை நாட்டு இளவரசியின் விருப்பங்கள் நிறைவேறுவதையும் என்னால் முன் கூட்டியே காண முடிகிறது. அவளுக்கு நல்ல செய்தி வரப் போகிறது என்பதற்கான பல அடையாளங்களை நான் பார்க்கிறேன்.

"தாமரை இதழ் போன்ற அவள் இடது கண் துடிக்கிறது. இந்த அழகிய பெண்ணின் இரண்டு கைகளில், இடது கையில் மட்டும் நடுக்கமும், மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. யானையின் துதிக்கை போன்ற அவள் இடது தொடையும் துடிக்கிறது.

"ராமன் சீக்கிரமே வந்து விடுவார் என்பதை இவை எல்லாம் காட்டுகின்றன. அது மட்டும் இல்லை. தூரத்தில் இருக்கும் ஒரு மரத்திலிருந்து ஒரு பறவை, ஒரு நெருக்கமான, உயர்ந்த நண்பனின் வரவை எதிர்பார்த்து, அளவு கடந்த உற்சாகத்தில், இனிமையான ராகங்களைப் பாடிக் கொண்டிருக்கிறது."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:











No comments:

Post a Comment