Saturday, May 18, 2019

29. 26ஆவது சர்க்கம் - சீதையின் விரக்தி

தலையைக் குனிந்தபடியே அழுது கொண்டிருந்த சீதை சித்த சுவாதீனம் இழந்தவர் போல் பேசிக் கொண்டிருந்தார்.

களைப்படைந்த குதிரை, தன் களைப்பைப் போக்கிக் கொள்ள, தரையில் படுத்து உருள்வது போல் அவர் தரையில் உருண்டார். பிறகு இவ்வாறு பேசினார்:

"எந்த வடிவமும் எடுக்கக் கூடிய வல்லமை படைத்த ராவணன், ராமருக்குத் தெரியாமல், என்னைக் கதறக் கதற, வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து விட்டான்.

"அரக்கிகளால் அச்சுறுத்தப்பட்டு, பெரும் துன்பங்களுக்கு ஆளான நிலையில், நான் அவர்கள் மத்தியில் இனியும் உயிர் வாழ விரும்பவில்லை.

"வீரரான ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டு, இந்த அரக்கிகளிடையே சிக்கிக்கொண்ட நிலையில், எனக்கு வாழ்க்கையிலோ, செல்வங்களிலோ, அலங்காரங்களிலோ எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.

"என் இதயம் கடினமான கருங்கல்லாலோ, அல்லது உடைக்க முடியாத வேறு ஏதோ ஒரு பொருளாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் இத்தனை துயரத்திலும் அது தூள் தூளாக உடையாமல் இருக்கிறது.

"என் கற்பு நெறி அச்சுறுத்தப்பட்டும், என் நடத்தையின் மேன்மை அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில், இக்கணமே நான் இறக்க வேண்டும். ஆயினும், ராமரிடமிருந்து பிரிந்து, துரதிர்ஷ்டமான இந்த வாழ்க்கையை வாழும் நிலையிலும், நான் ஒரு நிமிடம் உயிர் வாழ்வது கூட சோகமான விஷயம்தான்.

"மாபெரும் அரசரும், இனிமையான சொற்களைப் பேசுபவருமான ராமரிடமிருந்து பிரிந்த பின்னும் நான் உயிர் வாழ்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது? என்னை இவர்கள் துண்டு துண்டாக வெட்டி உண்ணட்டும்.

"என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தீர்மானித்து விட்டேன். எனக்கு இனிமையானவரிடமிருந்து பிரிந்து இனியும் நான் உயிர் வாழ முடியாது. அற்பமான கள்வன் ராவணனை நான் என் இடது கையால் கூடத் தொட மாட்டேன் - அவனை விரும்புவதைப் பற்றிப் பேசுவானேன்?

"என்னை நெருங்க அவன் செய்யும் முயற்சிகளை நான் வெறுத்து நிராகரித்த போதும், நான் அவன் மனைவியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்தத் தீய எண்ணம் கொண்டவனால் என் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன் நிலை பற்றியோ, தன் குடும்பத்தின் பாரம்பரியம் பற்றியோ அவன் உணரவும் இல்லை.

"என்னை நசுக்கினாலும் சரி, துண்டு துண்டாக வெட்டி நெருப்பில் போட்டுச் சமைத்தாலும் சரி, நான் ராவணனை ஏற்க மாட்டேன். அதனால், உங்கள் வீண் பேச்சினால் என்ன பயன்?

"ரகுவின் வழித்தோன்றலும், அறவழியில் நடப்பவர், புகழ் பெற்றவர், அறிவுள்ளவர், துன்பப்படுபவர்களிடம் இரக்கம் காட்டுபவர், தனக்கு உதவி செய்பவர்களிடம் நன்றியுடன் இருப்பவர் என்றெல்லாம் அறியப்பட்டிருப்பவருமான ராமர் ஏன் என் விஷயத்தில் இரக்கம் இல்லாதவராகவும், செயல்படாதவராகவும் இருக்கிறார்? இது நிச்சயம் என் துரதிர்ஷ்டத்தினால்தான்.

"ஜனஸ்தானத்தில் தனி ஒருவராக நின்று 14,000 பேர் கொண்ட சேனையை வெற்றி கொண்டவர் ஏன் என்னைக் காக்க முன் வரவில்லை? சிறிதும் ஆற்றலில்லாத ராவணன் என்னைச் சிறை பிடித்து வைத்திருக்கிறான். 

"என் கணவர் ராமர் அவனைப் போரில் வெற்றி கொள்ளும் திறமை பெற்றவர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தண்டகாரண்யத்தில், அரக்கன் விராதனை யுத்தத்தில் அழித்தவர் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை?

"கடலுக்கு நடுவே அமைந்திருப்பதால் இலங்கையை யாராலும் அணுக முடியாது, அழிக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் ராமரின் அம்புகளால் இது தாக்கப்படுவதை எதுவும் தடுக்க முடியாது என்று நான் கருதுகிறேன். 

"அப்படியிருக்க, இந்த அரக்கனால் கவர்ந்து வரப்பட்ட தன் மனைவியை மீட்டுக்கொண்டு செல்ல, வீரரான ராமர் வராததற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

"நான் இங்கே சிறைப்பட்டிருப்பது வீரச் சகோதரர் லக்ஷ்மணருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். அவருக்குத் தெரிந்திருந்தால், ராவணனின் இந்த அக்கிரமமான செயலைப் பொறுத்துக் கொண்டிருப்பாரா?

"நான் ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டதை ராமரிடம் விரைந்து சென்று சொல்லியிருக்கக் கூடிய ஒரே நபர் பறவைகளின் அரசர் ஜடாயு மட்டும்தான். ஆனால் சண்டையில் அவர் வீழ்த்தப்பட்டு கீழே தள்ளப்பட்டார்.

"வயது முதிர்ந்தவராயிருந்தாலும், என்னைக் காப்பாற்ற முனைந்து ராவணனுடன் போரிட்டுத் தோல்வி அடைந்த ஜடாயு ஒரு மாபெரும் வீரச்செயலைச் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

"நான் இங்கே சிறைப்பட்டிருப்பது ரகுகுலத் தோன்றலான ராமருக்குத் தெரிந்திருந்தால், அவர் கோபத்துடன் கிளம்பி வந்து தன் அம்புகளால் இந்த உலகத்தை அரக்கர்கள் என்ற சாபக்கேட்டிலிருந்து மீட்டிருப்பார். இலங்கையை இல்லாமல் செய்து, கடலை வற்ற வைத்து, வெறுக்கத் தக்க ராவணனின் பெயரையும், புகழையும் மொத்தமாக அழித்திருப்பார்.

"எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமென்ற என் விதியோ, அதை விட மோசமான ஒன்றோ இந்த அரக்கிகளுக்கும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் விதவைகளாகி, இறந்து போன தங்கள் கணவர்களை நினைத்து வருந்திக் கொண்டு இருந்திருப்பார்கள். இதில் எந்த ஐயமும் இல்லை.

"லக்ஷ்மணருடன் சேர்ந்து தேடி, ராமர் அரக்கர்களின் நகரமான இந்த இலங்கையைக் கண்டு பிடிப்பார். அப்படி இந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டபின், எதிரி ஒரு கணம் கூட உயிர் வாழ மாட்டான். இது நிச்சயம்.

"விரைவிலேயே, இலங்கையின் தெருக்கள் அரக்கர்களின் பிணங்கள் எரிக்கப்பட்ட புகையால் நிரப்பப்படும். சுடுகாட்டின் மீது பறப்பது போல், இந்த நகரத்தின் மீது கழுகுகள் பறக்கும். 

"இந்த என் ஆசை விரைவிலேயே நிறைவேறும். உங்கள் தீய செயல்கள் நிச்சயம் உங்களுக்கு அழிவைத் தேடித் தரும். உங்களை நான் இது பற்றி எச்சரிக்கிறேன்.

"விரைவிலேயே, இலங்கை அழிக்கப்பட்டு சோகங்களின் நகரமாக ஆகும். இதைக் காட்டக் கூடிய கெட்ட சகுனங்கள் இலங்கையில் ஏற்கெனவே தோன்ற ஆரம்பித்து விட்டன.

"பாவம் செய்த ராவணன் கொல்லப்பட்டதும், யாராலும் நுழைய முடியாத இந்த இலங்கை ஒரு விதவையைப் போல் ஆகப் போகிறது. 

"தினமும் கொண்டாட்டங்கள் நிகழும் அரக்கர்கள் வாழும் இந்த நகரம் கணவனை இழந்த பெண்ணைப் போல், தலைவன் இல்லாமல் போகப் போகிறது.

"அரக்கர் குலப் பெண்கள் படப்போகிற துன்பங்கள் மற்றும் வலி மிகுந்த அனுபவங்களால் இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எழும் அவர்களின் ஓலங்களை விரைவிலேயே நான் கேட்கப் போகிறேன். 

"நான் ராவணனின் அரண்மனையில் இன்னும் உயிருடன் இருப்பது சிவந்த கடைக்கண் கொண்ட ராமருக்குத் தெரிய வந்தால், இந்த இலங்கை நகரம் அவருடைய அம்புகளால் எரிக்கப்படும். 

"தன் புகழ் அனைத்தையும் இழந்து, எல்லா அரக்கர்களும் மாண்ட நிலையில், இந்த நகரம் இருளுக்குள் தள்ளப்படும்.

"இரக்கமற்ற,அற்பர்களில் மிகவும் மோசமான ராவணன் எனக்கு விதித்த கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

"தீய செயல்களில் ஊறியிருக்கும் இந்த அரக்கர்களுக்கு அநியாயமான செயல்களின் விளைவுகள் பற்றியும், இந்த நகரத்தில் வசிப்பவர்களுக்கு நிகழப்போகும் கேடு பற்றியும் தெரியவில்லை.

"மனிதர்களைத் தின்னும் இந்த அரக்கர்களுக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒரு நாள் இவர்கள் என்னைக் காலை உணவாக உண்ணப் போவது நிச்சயம். அழகிய கண்களை உடைய ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டு சோகத்தில் ஊறியிருக்கும் நான் என்ன செய்வது?

"இங்கே யாராவது எனக்கு விஷம் கொடுத்தால், என் கணவர் துணை வராமலே கூட தர்மத்தைக் காக்கும் யமனிடம் நான் போய்ச் சேர்ந்து விடுவேன்.

"பரதனின் அண்ணனான ராமருக்கு நான் இன்னும் உயிருடன் இருப்பது தெரியாது. தெரிந்திருந்தால், அவர் லக்ஷ்மணருடன் சேர்ந்து இந்த உலகம் முழுவதும் தேடி என்னைக் கண்டு பிடித்திருப்பார். அவர் இந்த வழியைப் பின்பற்றாமல் இருக்க மாட்டார்.

"அல்லது, ஒருவேளை என் பிரிவைத் தாங்க முடியாமல், வீரரான ராமர் இந்த மண்ணுலகை விட்டு விட்டு விண்ணுலகை அடைந்திருக்கலாம். தாமரைக் கண்கள் கொண்ட என் கணவரைக் காணும் பேரின்பம் பெற்ற தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் தேவலோகத்தில் உள்ள சித்தர்கள் மற்றும் முனிவர்கள் எத்தகைய பேறு பெற்றவர்கள்!

"உயர்ந்தவரும், அறிவாற்றலுக்கும், தர்மத்தின் வழி நடப்பதற்கும் பெயர் பெற்றவருமான மகாத்மாவான ராஜரிஷி ராமருக்கு, மனைவியால் கிடைக்கக் கூடிய பலன் எதுவும் இல்லையா என்ன? 

"கண்ணெதிரில் இருக்கும் வரைதான் நன்றி கெட்டவர்களின் அன்பு நீடிக்கும். அவர்களைப் பொறுத்தவரை, கண்பார்வையிலிருந்து மறைந்தால், மனதிலிருந்து மறைந்து விட வேண்டியதுதான்: ஏனெனில், அத்தகைய சூழ்நிலைகளில் அவர்கள் அன்பு சிறகு முளைத்துப் பறந்து விடும். ராமர் அப்படிப்பட்டவர் இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

"அவசியம் இருக்க வேண்டிய சில நற்குணங்கள் என்னிடம் இல்லையா? அல்லது எனக்கு அதிர்ஷ்டம் என்பது அடியோடு இல்லாமல் போய் விட்டதா?

"ஒரு பெண்ணாகப் பிறந்த நான் ஏன் இத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் - ராமர் என்ற அந்த உயர்ந்த மனிதரிடமிருந்து பிரிக்கப்பட்ட துன்பம்?

"வீரரும், குற்றமற்றவரும், தூய்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான ராமரிடமிருந்து பிரிக்கப்பட்ட நான் உயிர் வாழ்வதை விட இறப்பதே நல்லது.

"அல்லது தர்மத்தின் வழியில் நடக்கும் அந்த இரண்டு வீரர்களும் தங்கள் ஆயுதங்களைத் துறந்து விட்டு, பழங்களையும், வேர்களையும் உண்டு வாழும் துறவிகளாக ஆகி விட்டார்களா? அல்லது வீர சகோதரர்களான ராம, லக்ஷ்மணர்களை ராவணன் தந்திரத்தால் கொன்று விட்டானா?

"இந்தச் சூழ்நிலையில் உயிர் வாழ்வதை விட இறப்பதையே நான் விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்தத் துயரமான நேரத்திலும் மரணம் என்னை விரும்பவில்லை போலும்!

"மகிழ்ச்சி, சோகம் இவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே மகத்தான மனிதர்கள்தான். அவர்கள் தங்கள் புலன்களை வென்ற முனிவர்கள்.

"நமக்குத் பிடித்த விஷயங்கள் நடக்கும்போது நம் மனம் மகிழ்ச்சியால் நிரம்பி இருக்கிறது. நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நடக்கும்போது நம் மனம் வேதனையால் பீடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளிலிருந்து விடுபட்டவர்கள் உண்மையிலேயே உயர்ந்த மனிதர்கள். அவர்களுக்கு என் வணக்கம்!

"இது போல் இன்பத்தையும், துன்பத்தையும் வெற்றி கொள்ள முடியாத நான், எல்லாம் அறிந்தவரான என் கணவர் ராமரிடமிருந்து பிரிக்கப்பட்டவளாக, ராவணனின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பாவம் செய்தவளான நான், உயிரை விடப் போகிறேன்."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment