Friday, April 10, 2015

8. ஐந்தாவது சர்க்கம் - ஹனுமான் கண்ட அரக்கர்களும் அரக்கிகளும்

வானத்தின் மையப்பகுதிக்கு வந்திருந்த சந்திரன் எல்லாப் பகுதிகளிலும் தனது ஒளிக்கதிர்களைப் பாய்ச்சி ஒரு கூடாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தது. 

போதை கொண்ட ஒரு காளை தொழுவத்துக்குள் உலவுவது போல் வானில் உலவியது நிலா. 

தனது வான் பயணம் மூலம் எல்லா உயிர்களுக்கும் ஒளி வழங்கி, அவர்களின் துயரைப் போக்கிய சந்திரன் கடலைக் கூடத் தன் ஒளியினால் குளிப்பாட்டியது.

மந்தர மலையில் இருந்தபடி உலகை உய்விக்கும் லக்ஷ்மி தேவி, ஏரிகளில் தாமரை மலர்களிலும், மாலை வேளைகளில் கடலிலும் வாசம் செய்வதுபோல், அப்போது நிலவில் இருந்தபடி உலகுக்கு அழகு கூட்டிக் கொண்டிருந்தார்.

கொடிகள் நிறைந்த தோட்டத்தில் உலவும் அன்னம் போலவும், மந்தர மலையின் குகையில் வாசம் செய்யும் சிங்கம் போலவும், ராஜவீதியில் நடந்து செல்லும் யானையின் மீது அமர்ந்திருக்கும் வீரனைப் போலவும் நிலா வானில் திகழ்ந்தது.

கூரான கொம்புகளைக் கொண்ட காளையைப் போலவும், உயர்ந்த சிகரங்களைக் கொண்ட வெள்ளிமலையைப் போலவும், தங்கக் கவசம் போடப்பட்ட தந்தங்களைக் கொண்ட யானையைப் போலவும் வானில் தோற்றமளித்தது நிலா.

சூரியனிடமிருந்து பெற்ற ஒளியின் மூலம் இருளைப் போக்கிக் கொண்டிருந்த, பிரகாசத்தின் தூய இருப்பிடமான சந்திரன், பனி மூட்டத்தினால் ஒளி குன்றாமல், அதன் வட்ட முகத்தில் இயல்பாகத் தோன்றும் கருப்புப் புள்ளியுடன் வானில் தோற்றமளித்தது.

மலை உச்சியின் மீது நிற்கும் சிங்கத்தைப் போலவும், போர்க்களத்துக்குள் நுழையும் யானையைப் போலவும், நாடு திரும்பும் அரசனைப் போலவும் நிலா வானில் திகழ்ந்தது.

முன்னிரவின் இருட்டைப் போக்கிய நிலா, புலால் உண்ணும் அரக்கர்களின் இரவு நேரக் கேளிக்கைகளுக்கு உதவியும், காதலர்களின் ஊடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தும், பூலோகத்தை சொர்க்கலோகம் போல் மாற்றிக் கொண்டிருந்தது.

இசைக்கருவிகளிலிருந்து எழுந்த இனிமையான சங்கீதம் கணவனை தெய்வமாக மதிக்கும் பெண்களையும், அவர்கள் கணவர்களையும் உறக்கத்தில் ஆழ்த்தியது. 

அதே சமயம், பயங்கரமான செயல்களையும், வியத்தகு செயல்களையும் செய்யும் இயல்பு கொண்ட அரக்கர்கள் தங்கள் கேளிக்கைகளைத் தொடங்கினர்.

அளவுக்கு மீறிக் குடித்து விட்டுத் தங்களை மறந்திருந்த மனிதர்களையும், யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த தொழுவங்களையும் ஹனுமான் பார்த்தார்.

சில அரக்கர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டிருந்தனர். சிலர் மற்றவர்களின் தோள்கள் மீது கைபோட்டுக் கொண்டிருந்தனர். சிலபேர் உரத்த குரலில் ஆபாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். 

இன்னும் சிலர் போதையில் தள்ளாடியபடி மற்றவர்களைப் பிடித்துக் கொண்டும், கீழே விழுந்து கொண்டும் இருந்தனர்.

சில அரக்கர்கள் திறந்த மார்புடன் தங்கள் காதலிகளை அணைத்துக் கொண்டிருந்தனர். சிலர் தங்களை அலங்காரம் செய்து கொள்வதில் ஈடுபட்டிருந்தனர். 

இன்னும் சிலர் தங்கள் கைகளிலிருந்த விற்களிலிருந்து தங்கள் இறுக்கமான பிடியை விடுவித்துக்கொண்டிருந்தனர்.

சில பெண்கள் தங்கள் உடல்களில் அழகூட்டும் களிம்புகளைத் தடவிக் கொண்டிருந்தனர். சில பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். சில அழகான பெண்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். 

சிலர் கோபமாக இருந்ததையும், சிலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததையும் ஹனுமான் பார்த்தார்.

பலவிதமான காட்சிகளாலும், ஒலிகளாலும் அந்நகரம் அழகாகத் தோன்றியது. 

யானைகளின் பிளிறல், நண்பர்களின் உற்சாகமான பேச்சுக்கள், பாம்பு சீறும் ஓசையைப் போல் கேட்ட, சில வீரர்களின் பெருமூச்சுக்கள் போன்ற ஒலிகளை அவர் கேட்டார்.

அந்நகரில் இருந்த அரக்கர்களில் அறிவாளிகள், இனிமையாகப் பேசக்கூடியவர்கள், ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள், உயர்ந்த சமுதாய நிலையில் இருந்தவர்கள், அழகான உடை அணிந்தவர்கள், அழகான பெயர் கொண்டவர்கள் ஆகியோர் இருந்தனர்.

தன்னைப்போலவே கண்ணியமான தோற்றமும், ஒழுக்கமான நடத்தையும் கொண்ட பலரை அங்கே பார்த்து ஹனுமான் மகிழ்ச்சி அடைந்தார். 

அழகற்றவர்களாக இருந்த சிலர் தங்கள் உருவ அமைப்புக்கு ஏற்றபடித் தங்களை அலங்கரித்துக் கொண்டிருந்ததையும் அவர் பார்த்தார்.

சில அரக்கர்களின் மனைவிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் தோற்றமளித்தனர். அவர்கள் அழகானவர்களாகவும், நல்ல மனம் கொண்டவர்களாகவும், நன்னடைத்தையை அனுசரிப்பவர்களாகவும், குடிபோதையில் இருந்தபோதும்  தங்கள் கணவர்கள் மீது மனதைச் செலுத்துபவர்களாகவும் இருந்தனர்.

மலர்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் பறவைகளைப்போல், அழகும், நாணமும் ஒருங்கே கொண்ட சில அரக்கிகள் காதல் ஏக்கம் கொண்டு, அந்த நள்ளிரவு நேரத்தில், தங்கள் கணவர்களின் பிடியில் இருந்தனர்.

மேல் மாடத்தில் இருந்த சில பெண்கள், தங்கள் கணவர்களின் மடிகளில் அமர்ந்தபடி காதல் போதையால் உந்தப்பட்டு, அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தாலும், ஒழுக்கம் பற்றித் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

சில பெண்கள் தங்கம் போல் ஓளி விட்டனர். சில உயர் குலப் பெண்கள் திறந்த மேனியுடன் தங்கள் அங்கங்களின் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  தங்கள் கணவர்களுடன் இணைந்திருந்த வேறு சில பெண்கள் தங்கள் அழகான தோற்றத்தால் நிலவைப் போல் காட்சியளித்தனர்.

தங்கள் காதலர்களைத் தேடி அலைந்த வேறு சில பெண்கள், காதலர்கள் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நிலவு முகத்தையும், அதில் வில் போன்ற புருவங்களையும் கொண்டிருந்த அந்தப் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்கள் மின்னல் போல் ஒளிர்ந்தன.

ஆயினும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து தோன்றாத, தர்மத்திலிருந்து சற்றும் வழுவாத குடும்பத்தைச் சேர்ந்த, பூத்துக் குலுங்கும் கொடியைப் போன்ற தோற்றம் கொண்ட சீதாப்பிராட்டி எங்குமே தென்படவில்லை. 

வீரத்திலும், சொல்லாற்றலிலும் சிறந்த ராமபிரானின் பத்தினியும், தர்மத்தின் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவரும், அழகிய கண்களை உடையவரும், அன்பே வடிவானவரும், தனது கணவரின் மனதில் நீங்காத வண்ணம் நிலைத்திருப்பவரும், உயர்ந்த குணங்கள் கொண்ட சாதாரணப் பெண்களை விடப் பல மடங்கு உயர்ந்தவரும், பிரிவென்னும் தீயில் எரிந்து கொண்டிருந்தவரும், முன்பு தங்க அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தில் வழியும் அளவுக்குக் கண்ணீர் வடித்து வருபவரும், காட்டில் நடனம் ஆடும்போது பளிச்சிடும் கழுத்துடன் விளங்கும் பெண்மயிலைப் போன்ற தோற்றம் கொண்டவரும், தேய்ந்த சந்திரன் போலவும், தூசு படிந்த தங்கம் போலவும் ஒளி குறைந்து காணப்பட்டவரும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சப்பட்டவர் போல் துன்பம் கொண்டவரும், காற்றினால் கலைக்கப்பட்ட மேகக் கூட்டம் போல் தோன்றியவருமான  சீதையை,   நீண்ட நேரம் எங்கும் வலை போட்டுத் தேடியும் கண்டு பிடிக்க முடியாதது ஹனுமானுக்குப் பெரும் வருத்தத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியது.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment