Tuesday, April 7, 2015

7. நான்காவது ஸர்க்கம் - இலங்கையில் ஹனுமானின் தேடுதல் வேட்டை

வானரங்களுக்குள் மிகச் சிறந்தவரும், மிகச் சக்தி வாய்ந்தவருமான ஹனுமான் இலங்கை தேவதையைத் தன் பலத்தினால் வென்ற பிறகு, நுழைவாயிலைப் பொருட்படுத்தாமல் சுவரைத் தாண்டிக் குதித்தார்.

வானர அரசன் சுக்ரீவனின் விசுவாசியான ஹனுமான், எதிரியின் தலையில் காலை வைத்து அவனை அழிப்பதுபோல், அந்த இலங்கையின் மண்ணில் தனது இடது காலை எடுத்து வைத்தார். முத்துக்களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இலங்கை நகரின் தெருக்களில் நடந்து சென்றபடியே அந்நகரத்தின் பொதுவான தோற்றத்தை அறிந்து கொண்டார் அவர்.

இந்திரனின் யானையான ஐராவதத்தைப் போல் தோற்றமளித்த பிரம்மாண்டமான பல கட்டிடங்கள் அழகான முகப்புகளையும், வைரங்கள் பதிக்கப்பட்ட சாளரங்களையும் கொண்டிருந்தன. மிருதங்கம் மற்றும் பல தாள வாத்தியக்கருவிகளின் நாதம் பரவலாக ஒலித்தது.

மேகங்கள் நிறந்த வானம் போல் அழகிய தோற்றம் கொண்டிருந்தது அந்நகரம். அரக்கர்களின் அழகிய வீடுகள் நகருக்கு அழகு சேர்த்தன.  வர்த்தமான முறைப்படி (செல்வ்ச் செழிப்பைப் பெருக்கும் கட்டுமான  வடிவம்) தாமரை மற்றும் ஸ்வஸ்திகா வடிவில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கவனத்தை ஈர்த்தன. அழகிய வேலைப்பாடுகளுடன் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிடங்கள் அந்நகருக்கு வெண்மேகங்களால்  மூடப்பட்ட வானம் போன்ற தோற்றத்தை அளித்தன.

ராம தூதரும், சுக்ரீவனின்  நலம் நாடுபவருமான ஹனுமான் நகரம் முழுவதையும் உற்சாகத்துடன் சுற்றி வந்தார். பல வகையான அமைப்புகள் கொண்ட வீடுகள் ஒவ்வொன்றுக்குள்ளும்  புகுந்து பார்த்தார் வாயுபுத்திரர். போதையிலிருந்த பெண்கள், தலையிலிருந்து வெளிப்படும் தரம், கழுத்திலிருந்து வெளிப்படும் மத்யம், மார்பிலிருந்து எழும்பும் மந்தரம் ஆகிய மூன்று ஸ்தாயிகளிலும் அப்ஸரஸ்களை போல் இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தை அவர் கேட்டார்.

செல்வந்தர்களின் வீடுகளிலிருந்து  உரத்த சிரிப்புகளும், ஒட்டியாணங்களும் கால் சிலம்புகளும் குலுங்கியதால் ஏற்பட்ட ஒலிகளும், கைதட்டல்களின் ஒலியும், வீட்டில் இருந்தவர்கள் மாடிப்படிகளில் ஏறியபோது ஏற்பட்ட டங் டங் என்ற ஓசைகளும் அவர் செவிகளில் விழுந்தன. சில அரக்கர்கள் வேதங்கள் ஓதிக்கொண்டிருந்ததையும், வேறு சிலர் ராவணனின் புகழைப் பாடிக் கொண்டிருந்ததையும் அவர் கேட்டார்.

ராட்சஸ வீரர்களின் பெரிய அணிவகுப்பையும் அந்த வீரர்களிடையே ராவணின் ஒற்றர்கள் ஊடுருவியிருந்ததையும் ஹனுமான் பார்த்தார்.

பல வகை அரக்கர்களை அவர் அங்கே பார்த்தார். சிலர் ஒருகுறிப்பிட்ட யாகத்தின் நியமத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். சிலர் நீண்ட முடியுடன் இருந்தனர். சிலர் தலையயும் முகத்தையும் மழுங்கச் சிரைத்துக் கொண்டிருந்தனர். சிலர் மாட்டுத்தோலால் செய்யப்பட்ட ஆடையை அணிந்திருந்தனர்.  சிலர் கைகளில் தர்ப்பைகளை ஆயுதம் போல் ஏந்திக்கொண்டிருந்தனர். சிலர் தீச் சட்டிகளையும், வேறு சிலர் சுத்தியல்கள், கம்புகள், உலக்கைகள், கம்பிகள் ஆகியவற்றையும் ஏந்தியிருந்தனர். சில அரக்கர்கள் ஒரு கண்ணுடனும், ஒரு காதுடனும், தொங்கும் மார்புடனும் இருந்தனர்.

அந்த அரக்கர்களில் பெரும் வில்லாளிகளும், கத்தி வீசுவதில் கை தேர்ந்தவர்களும், வேறு பல வீரர்களும் இருந்தனர்.

பீரங்கிகள், கனமான இரும்புத் தடிகள் போன்றவற்றை ஆயுதமாகக் கொண்டவர்களும் இருந்தனர். சிலர் விகாரமான அங்கங்களும், முக அமைப்பும் கொண்டிருந்தனர். குள்ளமானவர்கள், உயரமானவர்கள், வெளுத்த நிறம் கொண்டவர்கள், கருத்த நிறம் கொண்டவர்கள், அழகான தோற்றம் கொண்டிருந்தவர்கள், அருவருப்பான தோற்றம் கொண்டிருந்தவர்கள், கூன் விழுந்தவர்கள் என்று பலவகையினர் அங்கே காணப்பட்டனர்.

சிலர் உயரமான கொடிகளையும், சிலர் சிறிய கொடிகளையும் ஏந்தியிருந்தனர். ஈட்டிகள், மரங்கள், நீண்ட வாட்கள், இடி போன்று தாக்கும் ஆயுதங்கள் இன்னும் பல்வகை ஆயுதங்களையும் கையில் வைத்திருந்தனர். மணம் வீசிய, அலங்கரமான மாலைகளை அணிந்திருந்த சில வீரர்கள்,  கைகளில் உண்டிவில்லுடன் திரிந்தனர்.

பெண்கள் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதிகளில் சில வீரர்கள் கவனமாகக் காவல் காத்து வந்தனர்.

இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, மலை உச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராவணனின் அரண்மனையை ஹனுமான் பார்த்தார். தங்கத்தால் இழைக்கப்பட்ட நுழைவாயிலைக் கொண்டிருந்த அந்த அரண்மனை,  தாமரை மலர்கள் நிறைந்த அகழிகளால் சூழப்பட்டிருந்தது.

சொர்க்கலோகம்போல் தோற்றமளித்த அந்த அரண்மனையின் வெளிப்புற நடைமேடையில் அவர் அடியெடுத்து வைத்தார். அங்கு நின்றபோது அவர் செவிகளில்  பல மங்களகரமான ஒலிகளும், குதிரைகளின் கனைப்புச் சத்தங்களும், ஆபரணங்கள் உரசிக்கொள்ளும் ஓசையும்  கலந்து ஒலித்தன.  தேர்கள், பல்லக்குகள், வான் ஊர்திகள், ஜாதிக் குதிரைகள், நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் ஆகியவை பெரும் எண்ணிக்கையில் அங்கே இருந்தன. நன்கு பராமரிக்கப்பட்ட பல்வகை மிருகங்களும் பறவைகளும் அந்த இடத்துக்கு அழகூட்டின. அந்த அரண்மனை, நான்கு புறங்களிலும் அரக்க சேனையால் காவல் காக்கப்பட்டிருந்தது.

அரண்மனையின் வெளிப்புறத்திலிருந்து இவற்றைக் கவனித்த பிறகு, ஹனுமான் அரண்மனைக்குள் நுழைந்தார். அந்த மாளிகையின் உட்புறச் சுவர்கள் சில இடங்களில் தங்கத்தால் இழைக்கப்பட்டும், சில இடங்கள் தங்கமுலாம் பூசப்பட்டும் இருந்தன. பவழம் போன்ற அரிய நவரத்தினக்கற்களால் அழகூட்டப்பட்டிருந்த அந்த மாளிகையிலிருந்து சந்தனத்தின் நறுமணமும், ஊதுவத்திகளின் நறுமணமும் வெளிப்பட்டன.

No comments:

Post a Comment