Tuesday, April 14, 2015

9. ஆறாவது சர்க்கம் - ராவணனின் மாளிகைக்குள் ஹனுமான் நுழைதல்

தான் விரும்பிய எந்த உருவத்தையும் ஏற்கும் சக்தி படைத்த ஹனுமான், இலங்கை நகரில் இருந்த எல்லா மாளிகைகளிலும் சீதையை விரைந்து தேடினார்.

எல்லா மங்களங்களும் நிரம்பப் பெற்ற அவர் ராட்சஸ அரசன் ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தார். பெரிய உருவம் கொண்ட அரக்கர்களால் காவல் காக்கப்பட்டு வந்த அந்த மாளிகைக்குள், அடர்ந்த கானகத்துக்குள் ஒரு பெரிய சிங்கம் நுழைவது போல் நுழைந்தார் அந்த வானர வீரர்.

அந்த மாளிகைக்குள் தங்கத்தால் இழைக்கப்பட்ட பல வீடுகளும், வெள்ளியால் செய்யப்பட்ட கதவுகளும் மிகுந்திருந்தன. அலங்கார அமைப்புகள் கொண்ட வாயிற் கதவுகளுடன் கூடிய பல சதுரங்களும் அங்கே  இருந்தன.

வீரர்கள் ஏறி அமரும் யானைகள், தேர்களில் பூட்டப்படும் களைப்பறியாத, கட்டுப்படுத்த முடியாத குதிரைகள் ஆகியவையும் அங்கே மிகுந்து காணப்பட்டன.

தந்தம், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்டு, சிங்கம், சிறுத்தை ஆகியவற்றின் தோல்களால் மூடப்பட்டிருந்த, இனிமையான ஓசையுடன் வேகமாகச் செல்லக் கூடிய அற்புதமான தேர்களும் அங்கே இருந்தன. 

விலையுயர்ந்த ஆசனங்கள் அமைக்கப்பட்ட, நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட, திறமையான சாரதிகளால் ஓட்டப்பட்ட தேர்கள் ஓடும் சத்தம் இடை விடாது கேட்டுக்கொண்டே இருந்தது.

அழகான தோற்றத்தையும், அலாதியான உடலமைப்பையும் கொண்டிருந்த பல மிருகங்களும், பறவைகளும் அங்கே இருந்தன. பணிவாக நடந்து கொண்ட பல அரக்கர்களால் அந்த மாளிகை காவல் காக்கப்பட்டு வந்தது.

உயர்குலப் பெண்கள் எங்கும் மகிழ்ச்சியுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். பெண்கள் ஆபரணங்கள் மாற்றிக் கொள்ளும் ஓசை தொடர்ந்து ஒலித்ததால், அந்த அரண்மனை பெரும் கடல் போல் ஆர்ப்பரித்தது.

அகில் மற்றும் சந்தன மணம் வீசிய அந்த அரண்மனையில் ஒரு அரசனின் மாளிகைக்கே உரித்தான வேலைப்பாடுகள் மிகுந்து காணப்பட்டன.

அந்த இடம் முழவதும் மிருதங்கம், முரசு போன்ற தாள வாத்தியக் கருவிகளின் ஓசையாலும், சங்குகளின் ஒலியாலும் நிறைந்திருந்தது. பல இடங்களில் அரக்கர்கள் ஹோமங்கள் செய்து கொண்டிருந்தனர்.

எல்லோராலும் மதித்துப் போற்றப்பட்ட அந்த இடம் கடலைப் போல் கம்பீரமாக விளங்கியது.  கடலின் இனிய ஓசையும் அங்கே நிறைந்திருந்தது. 

அந்த இடம் முழுவதும் விலை உயர்ந்த கற்களாலும், தரை விரிப்புகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வானர வீரர் கண்ட, அந்த ராட்சஸ அரசனின் நகரமான இலங்கையின் தோற்றம் இதுதான்!

யனைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றின் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த அரண்மனை இலங்கை நகருக்கே ஒரு அணிகலனாகத் தோன்றியது.

ராவணனுக்கு அண்மையில் இருப்பதை உணர்ந்த ஹனுமான் அந்த இடம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். 

மனதில் சிறிதும் அச்ச உணர்வு இன்றி அந்த ராட்சஸர்களின் நகரத்தில் வீடு வீடாகப் புகுந்து தேடினார். தோட்டங்களுக்குள்ளும் புகுந்து தேடினார்.

விரைந்து செல்லக்கூடிய சக்தி படைத்த ஹனுமான், முதலில் பிரஹஸ்தனின் இல்லத்துக்குள் புகுந்து தேடினார். பிறகு மகாப்ரஸ்வனின் இல்லத்தில் தேடினார். 

அதன் பிறகு ஒரு பெரிய மேகக் கூட்டம் போன்ற உருவம் கொண்ட கும்பகர்ணன் இல்லத்திலும், பிறகு விபீஷணன் இல்லத்திலும் புகுந்து தேடினார்.

பிறகு மஹோதரன், விரூபாட்சன், வித்யுத்ஜீவன், வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், சுக்ரன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரஸ்மிகேது, சூர்யசத்ரு, வஜ்ரகாயன், தும்ராக்ஷன், சம்பாதி, பீமன், வித்யுத்ரூபன், கனன், விகனன், சுகநாசன், வக்ரன், சடன், விகடன், பிரம்மகர்ணன், தம்ஷ்ட்ரன், ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன்,  நாதினன், அதிகாயன், அக்ஷன், வித்யுத்ஜீவன், இந்த்ரஜீவன், ஹஸ்திமுகன், அகம்பனன், கராளன், பிசாசன், ஸோணிதாக்ஷன், தேவாந்தகன், நராந்தகன், கும்பன், நிகும்பன், உக்ரவக்த்ரன், கோரன், கோராராவன் உள்ளிட்ட பல அரக்கர்களின் இல்லங்களுக்குள்ளும் புகுந்து தேடினார்.

அனைத்து அரக்கர்களின் இல்லங்களிலும் செல்வவளம் மிகுந்திருந்ததை அவர் கண்டார்.

ராவணன் இல்லத்துக்கு அருகில் இருந்த எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து தேடிய பிறகு, ஹனுமான் ராவணனின் வீட்டுக்குள் நுழைந்தார். 

அங்கே விகாரமான கண்கள் கொண்ட அரக்கிகள் கையில் ஈட்டிகள், அம்புகள், தடிகள்,  கூரான கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் காவல் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தார்.

இவர்களைத் தவிர வேறு பல போர் வீரர்களும், பெரும் உருவம் கொண்ட அரக்கர்களும் கைகளில் ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்தனர். 

பல உயர் ஜாதிக் குதிரைகள் வெண்மை மற்றும் சிகப்பு நிறத்தில், அழகான தோற்றத்துடன், போரில் பங்கேற்கத் தேவையான அமைப்புகளுடன் நின்றன.

பெரிய மேகம் போல் தோன்றிய யானைகள் தடங்களில் நின்று கொண்டிருந்தன. அவற்றின் தலைகளிலிருந்து மத நீர் பெருகி வழிந்த காட்சி மலையிலிருந்து அருவிகள் கொட்டுவது போல் இருந்தது. 

(இந்திரனின் யானையான) ஐராவதம் போல் தோற்றமளித்த அந்த யானைகளின் பிளிறல் இடி முழக்கம் போல் ஒலித்தது. போர்க்களத்தில் யாராலும் வெல்ல முடியாத அந்த யானைகள் எதிரிப் படைகளைத் தாக்கவும், அழிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தன.

தங்கச் சேணம் பூட்டப்பட்ட குதிரைகள், தங்க வேலைப்பாடுகளால் சூரியன் போல் மின்னிய பல்லக்குகள் ஆகியவற்றையும் அவர் பார்த்தார்.

பல அரிய வகைச் செடிகொடிகள், கலைப் பொருட்களுக்கான காட்சி அரங்குகள், கேளிக்கை விடுதிகள், மரத்தால் குன்றுகள் போல் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்குகள், காதலர்களுக்கான தனி அறைகள், தங்கும் விடுதிகள் ஆகியவையும் அங்கே இருந்தன.

மற்ற எல்லாக் கட்டிடங்களையும் மிஞ்சும் வகையில், மிகச் சிறந்த வல்லுநர்களால் கட்டப்பட்டிருந்த ராவணனின் அரண்மனை, சிவபெருமானின் இல்லம் போலவே காட்சி அளித்தது.

மயில்கள் அமர்வதற்கான இடங்கள், கொடிக்கம்பங்கள் இவை மிகுந்திருந்த அந்த அரண்மனை ஹனுமானின் கண்களுக்கு மந்தர மலை போலவே தோன்றியது.

எல்லா இடங்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருந்தன. சூரியன் தன் ஒளிக்கதிர்களால் ஜொலிப்பது போல், அந்த அரண்மனை அரிய கற்களின் வேலைப்பாட்டினாலும், ராவணனின் சிறப்பினாலும் ஜொலித்தது.

அங்கே கட்டில்கள், தங்க அரியணைகள், பளபளக்கும் பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த வானர வீரர் பார்த்தார். தேன், மது ஆகியவற்றின் ஈரம் இன்னும் நீங்காத விலை உயர்ந்த கோப்பைகள் அங்கே பரவலாக நிறைந்திருந்தன.

குபேரனின் இல்லத்தைப் போல் பிரம்மாண்டமாக இருந்த அந்த மாளிகையில் கொலுசுகள், ஒட்டியாணங்கள் ஆகியவற்றின் ஓசைகள், மிருதங்கம், ஜால்ரா போன்ற தாள வாத்தியக் கருவிகளின் ஓசையுடன் கலந்து ஒலித்தது.

அந்த அரண்மனை பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றில் பல அழகிய பெண்கள் நிறைந்திருந்தனர்.

6ஆவது சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment