Sunday, September 28, 2014

4. முதல் ஸர்க்கம் தொடர்ச்சி - ஹனுமான் இலங்கைக் கரையை அடைதல்

வானில் மழை தூவிக்கொண்டிருக்க ஹனுமான் கருடன் போல் பறந்து சென்றார். பறவைகள் நிறைந்திருந்த வானத்தில் தும்புருவும்  மற்ற கந்தர்வர்களும் கைசிக ராகத்தில் பாடல்களைப் பாடிக்கொண்டே பயணம் செய்தனர். 

வானவில் ஒளிர்ந்தது. அலங்கரிக்கப்பட்ட வான் ஊர்திகள் சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை வாகனமாகக் கொண்டு பறந்தன. இடிகளிலிருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பினால் வானம் ஒளிர்ந்தது.

தங்கள் நற்செயல்களால் வீடு பேறு அடைந்த சான்றோர்கள் அந்த வான்வெளியில்  இருந்தனர். யாகங்களில் அளிக்கப்பட்ட பொருட்களை ஏந்திக்கொண்டு அக்னிதேவர் வானில் பயணம் செய்தார்.


கோள்கள், நட்சத்திர மண்டலங்கள், சந்திரன், சூரியன், முனிவர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், யட்சகர்கள் என்று பலராலும் நிறந்த அந்த வானம் தூய்மையாகவும், உயர்ந்தும் காணப்பட்டது. கந்தர்வர்களின் அரசனான விஸ்வாவஸுவும், இந்திரனின் யானையும் அங்கே வளைய வந்தன. சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சிப்பாதையில் அமைந்திருந்த அந்த வானம் உயிரினங்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக பிரம்மாவினால் அமைக்கப்பட்ட கூடாரம் போல் தோன்றியது. அது வித்யாதரர்களின் இருப்பிடமாகவும் இருந்தது.


காற்று மேகங்களை அடித்துச் செல்வது போல் ஹனுமானும் மேகங்களை  இழுத்துச் சென்றார். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மேகங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களில் ஒளிர்ந்தன. மேகங்களுக்கு இடையே புகுந்து வெளிப்படும்போது ஹனுமான் நிலவைப் போல் ஒளிர்ந்தார். வாயு புத்திரரான ஹனுமான் மலைபோன்ற உருவம் கொண்ட இறக்கைகள் இல்லாத ஒரு பறவை வானிலிருந்து தொங்குவது போல் தோற்றமளித்தார்.

ஹனுமானைப் பார்த்த, விரும்பியபடி உருவம் எடுக்கக்கூடிய ஸிம்ஹிகை என்னும் அரக்கி இவ்வாறு நினைத்தாள்: "நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று எனக்கு வயிற்றுக்கும் மனதுக்கும் நிறைவான உணவு கிடைக்கப் போகிறது. மிகப் பெரிய உருவம் கொண்ட ஒரு உயிரினம் என் கைக்குள் சிக்கப் போகிறது."

இவ்வாறு நினைத்த ஸிம்ஹிகை ஹனுமானின் நிழலைப் பற்றி இழுத்தாள். "புயலால் அலைக்கழிக்கப்படும் கப்பல்போல் நான் தடைபட்டு பலம் இழப்பதாக உணர்கிறேனே!" என்று நினைத்த ஹனுமான், மேலேயும், கீழேயும், பக்கவாட்டிலும் என்று எல்லாத் திசைகளிலும் பார்த்தார். கடல் நீர்ப் பரப்பின் மீது ஒரு பெரிய உருவம் மிதப்பதைக் கண்டு, "என் நிழலைப் பற்றி இழுக்கும் வல்லமை பெற்ற கோர முகம் கொண்ட அரக்கி இவள்தான் போலும். இவளைப் பற்றித்தான்  சுக்ரீவர் குறிப்பிட்டிருப்பர் போலிருக்கிறது" என்று நினைத்த ஹனுமான் தன் உடலை மழைக்கால மேகம் போல் பெரிதாக்கி கொண்டார்.

அந்த வானரரின் உடல் விரிவதைக் கண்ட ஸிம்ஹிகை, பாதாள உலகத்துக்கும், வானத்துக்கும் இருக்கும் தூரம் அளவுக்குத் தன் வாயை அகலமாகத் திறந்தாள்.

மேகக்கூட்டம் போல் இடி முழக்கம் செய்தபடி அவள் அந்த வானர வீரரை நோக்கி விரைந்தாள். வானத்தில் இருந்தபடியே, அவள் வாயின் அகலத்தையும் உடல் அளவையும் கணித்த ஹனுமான், கண நேரத்தில் தன் உடலைச் சுருக்கிக்கொண்டு அவள் வாய்க்குள் இடிபோல் பிரவேசித்தார். ராகுவின் வாய்க்குள் நிலவு நுழைவது போன்ற அந்தக் காட்சியை சித்தர்களும், சரணர்களும் பார்த்தனர்.

எண்ணிய அக்கணத்திலேயே தம் எண்னத்தைச் செயல்படுத்தும் திறன் பெற்ற வானர வீரர் அவள் உடலைக் கிழித்துக்க்கொண்டு வெளியே வந்தர். தனது துரிதமான சிந்தனையினாலும், செயலினாலும் அவளை அழித்த ஹனுமான் தம் பயணத்தைத் தொடர்ந்தார். மார்பு பிளந்த நிலையில் ஸிம்ஹிகை உப்புக் கடலுக்குள் விழுந்தாள். அவளை அழிப்பதற்காகவே பிரம்மா ஹனுமானைப் படைத்திருப்பார் போலும்!

அந்த அரக்கியைக் கண நேரத்தில் அழித்து விட்ட ஹனுமானின் செயலைப் பார்த்து, வானத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் அவரிடம் கூறினர்: "வானர வீரரே! நீங்கள் அரியதொரு செயலைச் செய்திருக்கிறீர்கள். அந்த அரக்கி கொல்லப்பட்டாள். உங்கள் பயணம் இனி வெற்றிகரமாக முடியட்டும். உங்களைப்போல் அறிவுக் கூர்மை, வீரம், செயல்திறன் அனைத்தும் கொண்டவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்குத் தடையாக நிற்கும் எதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்."

மேனமை படைத்தவர்களால் பெருமைப் படுத்தப்பட்ட ஹனுமான் மீண்டும் கருடனைப்போல் வானில் எழும்பினார்.

சுமார் நூறு யோஜனைகள் கடந்து மறுகரைக்கு அருகே வந்தபோது, கீழே ஒரு அடர்ந்த கானகத்தை அவர் பார்த்தார். ஆகாயத்தில் பறந்து வரும்போதே அந்தத் தீவையும், மலைய மலையைச் சார்ந்த காடுகளையும் பார்த்தார். "என் பெரிய உடலையும் வேகத்தையும் பார்த்தால் அரக்கர்கள் என்னைக் கண்டுகொண்டு என்னைப் பிடிக்க முற்படுவார்கள்" என்று நினைத்த ஹனுமான், தமது உடலைச் சுருக்கிக்கொண்டு தமது இயல்பான உருவத்துக்கு வந்தார். அவரது செயல், மூன்றடிகள் எடுத்து வைத்து மஹாபலியைக் கொன்ற பிறகு வாமன உருவுக்குத் திரும்பிய விஷ்ணுவின் செயல் போல் இருந்தது. பலவகை உருவங்களையும் எடுத்துக் கொள்ளும் திறமை படைத்த ஹனுமான், மறுகரையை அடைந்ததும் தாம் செய்ய வேண்டிய செயலைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற உருவத்தை எடுத்துக் கொண்டார்.

பிறகு திரிகூட மலையின் சிகரங்களில் ஒன்றான லம்பா என்ற சிகரத்தில் இறங்கினார். இந்தச் சிகரம் கேதகி மலர்களும், தூய நீரும், தென்னை மரங்களும் நிறைந்ததாக இருந்தது. தாம் நின்றிருந்த இடத்திலிருந்து இலங்கையைப் பார்த்த ஹனுமான்  தம் உருவைக் குறுக்கிக்கொண்டு திரிகூட மலையின் மீது குதித்தார். அவர் குதித்த அதிர்ச்சியினால் அந்த மலையில் இருந்த மிருகங்களும், பறவைகளும் அதிர்ந்தன.

பாம்புகளும், பல்வகையான பயங்கரமான உயிரினங்களும் நிறைந்த புயல் போன்ற கடலைத் தன் திறமையினால் தாண்டி இலங்கையின் கரையை அடைந்த ஹனுமான், இலங்கை நகரம், இந்திரனின் அமராவதி நகரம் போல் பொலிவதைக் கண்டார்.

(முதல் ஸர்க்கம் முற்றியது) 

1 comment:

  1. good work god bless you can you send this complete sunara kandam to my mail rameshbpharm@gmail.com my no is 9381193803

    ReplyDelete