Tuesday, September 23, 2014

3. முதல் ஸர்க்கம் தொடர்ச்சி - ஹனுமான் சந்தித்த இடர்கள்

வான் வழியே கடலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த ஹனுமானை கௌரவிக்க விரும்பினான் சமுத்திராஜன். 

"ராமனின் முன்னோர் வழி வந்த இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த சாகரரால்தான் என் எல்லை விரிவு படுத்தப்பட்டது. ராமனுக்கு உதவுவதற்காகக் கடல் கடந்து செல்லும் இந்த வானர வீரருக்கு நான் உதவாவிட்டால் நான் நன்றி கெட்டவன் என்று கருதப்படுவேன். மீதமுள்ள தூரத்தை எளிதாகக் கடக்க உதவியாக அவர் சற்றே ஓய்வெடுக்க நான் உதவ வேண்டும்" என்று முடிவு செய்தான்.

கடலுக்குள் மறைந்திருந்த மைனாகம் என்ற மலையை அழைத்து, "பாதாள உலகிலிருந்து அசுரர்கள் நில உலகுக்கு வராமல் தடுக்க ஒரு தடுப்பாக உன்னைக் கடலுக்கடியில் இருக்கச் செய்திருக்கிறான் தேவேந்திரன். மேலே, கீழே, பக்கவாட்டில் என்று எல்லாத் திசைகளிலும் வளரும் சக்தி படைத்தவன் நீ. ராமனின் பொருட்டு ஹனுமான் ஒரு கடினமான செயலில் ஈடுபட்டு கடலுக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போது நீ இருக்கும் இடத்துக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறார். நீ மேலே எழும்பி அவர் உன் மீது அமர்ந்து ஓய்வெடுக்க வகை செய். இக்ஷ்வாகு வம்சத்தவருக்கு உதவ நாம் கடமைப் பட்டிருக்கிறோம்." என்று கேட்டுக்கொண்டான்.

சமுத்திரராஜன் கேட்டுக்கொண்டபடி, தங்கம் போல் மின்னும் சிகரங்களையும் பலவகை மரங்களையும் தன்னுள்ளே கொண்ட மைனாகம் கடலிலிருந்து மேலெழும்பியது. மேகத்தைப் பிளந்து வெளியே வரும் சூரியன் போல் கடலிலிருந்து மேலெழுந்தது மைனாகம்.

தனக்கு முன்னால் மேலே எழும்பிக் கொண்டிருந்த மலையைப் பார்த்த ஹனுமான் அது தன் வழியை மறிப்பதாகக் கருதித் தனது மார்பினால் இடித்து அந்த மலையைப் புறம் தள்ளினார்.

மைனாக மலை மனித உருவம் எடுத்து ஹனுமான் முன் தோன்றியது. "வானர வீரரே! இக்ஷ்வாகு குலத்துக்குத் தன் நன்றிக் கடனைச் செலுத்துவதற்காக சமுத்திரராஜன் என்னை உங்களுக்கு உதவப் பணித்திருக்கிறார். என் மீது அமர்ந்து நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுக்க வேண்டும். மலையில் உள்ள சுவையான பழங்களை உண்டு உங்கள் பசியைப் போக்கிக்கொண்டு இளைப்பாற வேண்டும். உங்களுக்கும் எனக்கும் இன்னொரு விதத்தில் கூட உறவு இருக்கிறது. கிருத யுகத்தில் மலைகளுக்கு இறக்கைகள் இருந்தன. அதனால் காற்றைப் போலவும், கருடனைப் போலவும் அவை பல திசைகளிலும் பறந்து திரிந்தன. அவை தங்கள் மீது விழுந்து விடுமோ என்று முனிவர்களும் மற்றவர்களும் அஞ்சினர். அதனால் இந்திரன் மலைகளின் மீது கோபம் கொண்டு மலைகளின் இறக்கைகளை வெட்டத் துவங்கினான். அவன் என் இறக்கைகளை வெட்ட முயன்றபோது, உங்கள் தந்தையான வாயு என்னைக் கடலுக்குள் தள்ளி என் இறக்கைகள் வெட்டப்படாமல் காப்பாற்றினார். எனவே உங்களுக்கு உபசாரம் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் என் வேண்டுகோளை ஏற்று என்மீது அமர்ந்து இளைப்பாறிச் செல்ல வேண்டும்" என்று கேட்டுக்கொண்டது.

மைனாகமலையின் வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான், "மைனாகமே! உன் உபசாரத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உன் உபசாரத்தை நான் ஏற்கவில்லையே என்று வருந்த வேண்டாம். அதை ஏற்றால் என் கடமையைச் செய்வதில் தாமதம் ஏற்படும். சூரிய அஸ்தமனம் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் முயற்சிக்கு இடையே நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்று நான் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறேன்." என்று கூறி, மலையைத் தன் கையால்  அன்பாகத் தட்டிக்கொடுத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். 

சமுத்திரராஜனும், மைனாகமலையும் அவரை வாழ்த்தி வணங்கினர். 

பிறகு ஹனுமான் இன்னும் மேலே எழும்பித் தன் தந்தையான வாயுவின் இருப்பிடமான காற்று மண்டலத்தில் பறக்கத் துவங்கினார். மைனாக மலையைத் தன் வழியிலிருந்து தள்ளிய அவரது இரண்டாவது அரிய செயலை தேவர்கள், சித்தர்கள் முதலானோர் வியந்து பாராட்டினர்.

தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் மற்றும் சில முனிவர்கள் பாம்புகளின் அன்னையான சுரஸையை அழைத்து அவளிடம் இவ்வாறு கூறினர்: வாயுபுத்திரரான ஹனுமான் வானில் பறந்து கொண்டிருக்கிறார். நீ. கூரிய நகங்களுடனும், சிவந்த கண்களுடனும் விண்ணை எட்டும் மலை போன்ற உயரத்துடனும் ஒரு பயங்கரமான அரக்கனைப் போன்ற உருவம் எடுத்துக்கொண்டு, அவரைச் சற்று நேரம் வழி மறிக்க வேண்டும். அவர் உன்னைத் தந்திரத்தால் வெல்லுகிறாரா அல்லது  உன்னுடன் போரிட முயன்று தோல்வி அடைகிறாரா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். இதன் மூலம் அவரது பலத்தையும் வீரியத்தையும் நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்."

தேவர்கள் கேட்டுக்கொண்டபடி சுரஸை ஒரு பயங்கரமான அரக்கியைப் போன்ற தோற்றத்துடன் வானில் பறந்து கொண்டிருந்த ஹனுமானை வழி மறித்தாள். "வானரத் தலைவனே! தேவர்கள் உன்னை எனக்கு உணவாக வழங்கி இருக்கிறார்கள். உன்னை நான் விழுங்கப் போகிறேன். என் திறந்த வாய்க்குள் நுழை" என்றாள். 

சுரஸை கூறியதைக் கேட்ட வானரத் தலைவர் தன் இரு கைகளையும் கூப்பியபடி இன்முகத்துடன் கூறினார்: "தசரதரின் மைந்தரான ராமர், தன் மனைவி சீதையுடனும், தம்பி லக்ஷ்மணனுடனும் தண்டகாரண்யத்தில் இருந்தபோது, சீதை ராவணானால் கடத்திச் செல்லப்பட்டாள்.


"ராமருடைய கட்டளைப்படி நான் அவரது தூதனாக, சீதையைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். என்னை வழி மறித்திருக்கும் நீங்கள் உங்களால் இயன்ற உதவியை எனக்குச் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், சீதையைப் பார்த்து விட்டு, பார்த்த விவரத்தை ராமரிடம் சொல்லி விட்டுத் திரும்பி வந்து உங்கள் வாய்க்குள் விழுகிறேன். இது என் வாக்குறுதி. நான் எப்போதுமே வாக்குத் தவறாதவன்."

ஹனுமானின் பதிலைக் கேட்டபின், விரும்பும் உருவத்தை எடுக்கும் சக்தி பெற்ற சுரஸை கூறினாள்: "என்னைத் தாண்டி யாரும் செல்ல முடியாது. இது எனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம் என் வாய்க்குள் நுழைந்தபின் தான் நீ உன் பயணத்தைத் தொடர முடியும்." 



இவ்வாறு கூறியபின் தனது அகன்ற வாயை அவள் பெரிதாகத் திறந்தாள். அவள் பேச்சைக் கேட்டுக் கோபம் கொண்ட ஹனுமான், "நான் உன் வாயில் நுழையும் அளவுக்கு உன் வாயைப் பெரிதாகத் திற" என்றார். 

இவ்வாறு சொல்லிவிட்டு சுரஸையின் உயரமான 10 யோஜனைகள் அளவுக்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டார் ஹனுமான்.

பத்து யோஜனை உயரம் கொண்ட ஒளி பொருந்திய மேகம் போல் தன் முன் நின்ற ஹனுமானைப் பார்த்த சுரஸை தன் வாயை 20 யோஜனைகள் அளவுக்குத் திறந்தாள். 

இருபது யோஜனைக்கு விரிந்த சுரஸையின் வாயைப் பார்த்ததும் ஹனுமானின் கோபம் மேலும் வளர்ந்தது. அவரது உயரம் இப்போது முப்பது யோஜனைகள் வளர்ந்தது. சுரஸை தன் வாயை 40 யோஜனைகள் விட்டத்துக்குத் திறக்க, ஹனுமானின் உருவம் ஐம்பது யோஜனைகளுக்கு வளர்ந்தது.

இதுபோல் ஹனுமான் தன் உயரத்தையும், சுரஸை தான் வாயின் அகலத்தையும் அதிகரித்துக் கொண்டே போக, சுரஸையின் வாய் 100 யோஜனை அளவுக்கு விரிந்தது. சுரஸையின் அகலமான வாயையும், நீளமான நாக்கையும் பயங்கரமான தோற்றத்தையும் கண்ட ஹனுமான் ஒரு கணத்தில் தன் உடலைக் கட்டை விரல் அளவுக்குக் குறுக்கிக் கொண்டார். அந்தச் சிறிய உருவத்துடன் அவள் வாய்க்குள் புகுந்து உடனே வெளியே வந்தார்.


பிறகு வானில் எழும்பி, சுரஸையைப் பார்த்து, "தக்ஷனின் புதல்வியே! உன் விருப்பப்படியே நான் உன் வாய்க்குள் புகுந்து வந்து விட்டேன். இதன் மூலம் நீ வாங்கிய வரமும் உண்மையாகி விட்டது. நான் இப்போது சீதையின் இருப்பிடத்தை நோக்கிச் செல்லப் போகிறேன்" என்றார்.


கிரகணத்தின்போது ராகுவின் வாயிலிருந்து வெளிப்படும் சந்திரன் போல, தன் வாயிலிருந்து வெளி வந்த ஹனுமானைப் பார்த்து, தன் இயல்பான உருவத்துக்கு வந்த சுரஸை கூறினாள்: 



"வானரத் தலைவரே! உங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வருவீர்களாக! விதேஹ தேசத்து இளவரசியுடன் (சீதையுடன்) உத்தமரான ராமர் ஒன்று சேர்ந்து மகிழட்டும்"

ஹனுமானின் இந்த மூன்றாவது அற்புதச் செயலைக் கண்டு எல்லா உயிரினங்களும் "அற்புதம்! அற்புதம்!" என்று அவரைப் புகழ்ந்தனர்.


வருணனின் இருப்பிடமான சமுத்திரத்தைத் தாண்டி கருடனைப் போன்று வானத்தில் அதிவேகமாகப் பறந்தார் ஹனுமான்.

No comments:

Post a Comment