Thursday, January 30, 2014

2. முதல் ஸர்க்கம் - ஹனுமான் கடலைத் தாண்டிச் செல்லுதல்

(சுக்ரீவனின் கட்டளைப்படி வானரர்கள் சீதையைத் தேடிப் பல திசைகளுக்கும் பயணிக்கின்றனர். ஹனுமான் கடல் தாண்டி இலங்கை சென்று சீதையைத் தேடுவது என்று வானரர்களால் முடிவு செய்யப்படுகிறது. 

அவ்வளவு பெரிய கடலைத் தன்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று ஹனுமானுக்குச் சற்றே ஐயம் எழுகிறது. 

அப்போது ஜாம்பவான்  ஹனுமானுக்கு அவருடைய பலத்தை உணர்த்தி அவரது ஐயத்தைப் போக்குகிறார். இந்த இடத்திலிருந்து சுந்தர காண்டம் தொடங்குகிறது.)

ஜாம்பவானின் உற்சாகமூட்டிய வார்த்தைகளைக் கேட்டபின், ராவணன் சீதையை மறைத்து வைத்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடிப்பது என்று ஹனுமான் உறுதி கொண்டார். 

தான் நின்றிருந்த மஹேந்திர மலைப்பகுதியின் மேடு பள்ளங்களில் சிங்கம் போல் ஏறி இறங்கினார். அவர் தாவிக் குதித்த வேகத்தில் மலையில் குடியிருந்த பல்வேறு பறவைகளும் மிருகங்களும் சற்றே மிரண்டன.

சூரியன், இந்திரன், பிரம்மா முதலான தேவர்களுக்குக் கைகூப்பி வணக்கம் செலுத்திய பின் தனது தந்தையான வாயுவுக்கும் வணக்கம் தெரிவித்தார் அந்த வானர வீரர். 

பிறகு ராம லட்சுமணர்களை மனதில் தியானித்தார். எல்லா நதிகளையும் கடல்களையும் மனதால் வணங்கினார். 

பின் தன்னை வழி அனுப்ப வந்த வானர வீரர்களைத் தழுவி அவர்களிடம் விடை பெற்றார்.

"பத்திரமாகவும், வெற்றியோடும் திரும்பி வருவாயாக" என்று கூடியிருந்த வானரர்கள் ஹனுமானை வாழ்த்தினர்.

பௌர்ணமி தினத்தன்று பொங்கும் சமுத்திரம் போல் எழுச்சி கொண்டவராக, ஹனுமான் தன் இரண்டு கைகளையும் முன்னே நீட்டி அந்த மலையைத் தன் கைகளாலும், கால்களாலும் பலமாக அழுத்தினார். 

ஜடப்பொருளான அந்த மலை கூட அவர் கொடுத்த அழுத்தத்தினால் இலேசாக நடுங்கியது.

ஹனுமான் தாவியபோது ஏற்பட்ட அழுத்தத்தால் மலையின் மீதிருந்த பல்வகை மரங்களிலிருந்தும் பூக்கள் உதிர்ந்து அந்த மலையே பூக்களால் ஆனது போன்ற தோற்றத்தை உருவாக்கின.

மலையின் மேற்புறம் சற்றே பிளவு பட்டதால், உள்ளே புதைந்திருந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் வெளிப்பட்டு மின்னின.

மலையில் இருந்த பல்வகை உயிரினங்களும் பயந்து இங்குமங்கும் ஓடின. 

விஷ நாகங்கள் தற்காப்புக்காகத் தங்கள் தலையை உயர்த்தி விஷத்தைக் கக்கின. அந்த மலையில் இருந்த சக்தி வாய்ந்த மூலிகைகளால் கூட அந்த விஷத்தை முறியடிக்க முடியவில்லை. 

விஷம் படிந்த மலைப்பாறைகள் தீக்கொழுந்துகள் போல் ஒளிர்ந்தன.

அந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்கள் 'இந்த மலையை ஏதோ சில  பூதங்கள் பிளக்கின்றன போலும்' என்று நினைத்தனர். 

அந்த மலையில்உல்லாசமாகப் பொழுதைக்  கழிப்பதற்காத் தங்கள் மனைவிமார்களுடன் வந்திருந்த வித்யாதரர்களும் இவ்வாறே கருதி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் முதலிய எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டுத் தங்கள் மனைவிமார்களுடன் மலையை விட்டு வெளியேற எண்ணி மேலே எழும்பினர்.

அப்போது அங்கே தியானம் செய்து கொண்டிருந்த சில முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரின் குரல் அசரீரியாக ஒலித்தது:

"மலை போன்ற பலம் கொண்ட வாயு புத்திரரான ஹனுமான் கடலைக் கடந்து செல்லத் தீர்மானித்து விட்டார். ராம லட்சுமணர் மற்றும் தனது சக வானரர்களுக்காக, யாராலும் செய்ய முடியாத இந்த சாகசச் செயலை ஹனுமான்  புரியப் போகிறார்."

இதைக் கேட்டதும், வித்யாதரர்கள், கற்பனைக்கு எட்டாத அளவு பெரிய உருவத்துடன் மலைமீது நின்ற ஹனுமானைக் கண்ணுற்றனர்.

இடிபோல் முழங்கி விட்டு ஹனுமான் தன் வாலைச் சுழற்றினார். அப்போது அவருடைய வால் கருடனால் இழுத்துச் செல்லப்படும் பாம்பு போலத் தோற்றமளித்தது.

தனது கால்களைக் கீழே ஊன்றியபடி தான் கடந்து செல்ல வேண்டிய வழியை வான்வெளியில் கண்களை உயர்த்திப் பார்த்தார். 

பிறகு வானர வீரர்களைப் பார்த்து, "ராமபிரானின் வில்லிலிருந்து கிளம்பிய அம்பு போல் நான் ராவணனால் பாதுகாக்கப்பட்டு வரும் இலங்கையை நோக்கிச் செல்வேன். 

"ஒருவேளை சீதாப்பிராட்டி அங்கே இல்லாமல் போனால், அங்கிருந்து தேவலோகத்துக்குப் போவேன். 

"அங்கேயும் சீதை இல்லாவிடில், ராவணனைக் கயிற்றால் கட்டி இங்கே இழுத்து வருவேன். தேவைப்பட்டால், ராவணனோடு சேர்த்து இலங்கையை அடியோடு பெயர்த்து எடுத்து வருவேன்" என்றார்.

பிறகு, கருடனை மனதில் தியானித்து விட்டு ஹனுமான் விசையுடன் வான்வெளியில் பாய்ந்தார். 

அவர் வானில் எழுந்தபோது, அந்த மலையிலிருந்த மரங்களும் அவருடைய உந்துவிசையால் இழுக்கப்பட்டு மேலெழுந்தன. 

ஹனுமானை வழி அனுப்புவது போல், அந்த மரங்கள் தங்கள் கிளைகளில் இருந்த பறவைகளுடன் சிறிது தூரம் அவர் பின்னால் சென்றன. பிறகு அவை கடலில் விழுந்தன. 

மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் கடல்நீரின் மேல் மிதந்ததால், கடல், நட்சத்திரங்கள் நிரம்பிய ஆகாயம் போல்  தோற்றமளித்தது.

ஹனுமான் வானில் எழுந்ததால் மேலே தள்ளப்பட்ட காற்று மேகமண்டலத்தைத் தாக்கி மின்னல்களை உருவாக்கியது. 

இரு கைகளையும் நீட்டியபடி ஹனுமான் வானத்தில் பறந்த காட்சி, மலை உச்சியிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் சீறிப் பாய்ந்து வருவது போல் இருந்தது. 

ஹனுமானின் வேகமான பாய்ச்சல் அவர் கடலைக் குடிக்கப் போகிறாரா அல்லது ஆகாயத்தையே விழுங்கப் போகிறாரா என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.

வானில் பிரகாசமாக ஒளிர்ந்த ஹனுமானின் இரண்டு கண்களும் மலை உச்சியில் எரியும் இரு நெருப்புகளைப் போல் தோற்றமளித்தன. 

அவரது இரு கண்களும் பௌர்ணமி இரவில் சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வானில் தோன்றியதைப்போல் காட்சியளித்தன. 

செப்பு நிற நாசியுடன் ஒளிர்ந்த அவர் முகம் அஸ்தமன சூரியன் போல் தோற்றமளித்தது. 

செங்குத்தாக இருந்த அவரது வால், வானில் நிறுவப்பட்ட இந்திரனின் கொடிக்கம்பம் போல் தோன்றியது.

ஹனுமான் வாலைச் சுழற்றியபோது அவர் ஒளிவட்டம் சூழ்ந்த சூரியன் போல் தோன்றினார். 

ஹனுமான் வானில் பறந்த காட்சி நீளமான வால் கொண்ட வால் நட்சத்திரம் ஒன்று வானத்தைக் கிழித்துக் கொண்டு போவது போல் இருந்தது.

கடலுக்கு மேலே ஹனுமான் பறந்தபோது அவருக்கு நேர் கீழே இருந்த கடல் நீர் அவரது விசையால் கொந்தளித்தது. மேலே எழுந்த பெரிய அலைகள் உடைந்து கடற்பரப்பின் மீதே விழுந்தன. 

வானுக்கும் பூமிக்கும் நடுவே எல்லைக்கோடு போடுவது போல் அவர் பறந்து சென்றார். 

கடலின் ஆழத்தில் இருந்த பாம்புகள் ஹனுமான் பறக்கும் வேகத்தைக் கண்டு அவரை கருடன் என்று நினைத்து அஞ்சின. 

ஹனுமானைப் பின் தொடர்ந்து வந்த அவரது நிழல் கடல் பரப்பின் மீது தவழ்ந்து வரும் வெண்மேகம் போல் தோற்றமளித்தது. 

பெரிய உருவமும், பிரகாசமான தோற்றமும் கொண்ட ஹனுமான் வானில் பறந்த காட்சி இறக்கை முளைத்த மலை ஒன்று அந்தரத்தில் தொங்குவது போல் இருந்தது.

கருடனைப் போல் வானில் ஹனுமான் பறந்து செல்ல, அவரது விசையால் ஈர்க்கப்பட்டு மேகங்கள் அவர் பின்னே வந்தன. 

மேகங்களால் சூழப்பட்டும், பிறகு மேகங்களிலிருந்து வெளிப்பட்டும் ஹனுமான் பறந்ததால் அவர் சந்திரனைப் போலத் தோற்றமளித்தார்.

இலங்கையை நோக்கிப் பறந்த ஹனுமான் மீது தேவர்களும், கந்தர்வர்களும் மலர் தூவி வாழ்த்தினர். 

வெயிலின் கடுமை அவர் மீது அதிகம் படாமல் சூரியன் பார்த்துக் கொண்டார். 

வாயு பகவான் அவர் மீது தென்றலாய் வீசி அவரைக் குளிர்வித்தார். 

முனிவர்களும், தேவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள் முதலானோரும் அவர் பெருமையைப் பாடினர்.

(முதல் சர்க்கம் அடுத்த பதிவிலும் தொடரும்)


No comments:

Post a Comment