பறவைகள் உரத்த குரலில் கீச்சிட்டதையும், மரங்கள் கீழே விழுந்த சத்தங்களையும் கேட்டு இலங்கை நகர மக்கள் அனைவரும் பீதியும் கலக்கமும் அடைந்தனர்.
அச்சமடைந்த பறவைகள் மற்றும் பறவைகளின் ஓலங்களும், கீச்சிடுதல்களும் அரக்கர்களுக்கு ஒரு கெட்ட, அமங்கலமான சகுனமாகஇருந்தன.
அந்தச் சத்தங்களினால் உறக்கத்திலிருந்து விழித்து எழச் செய்யப்பட்ட கோர முகம் கொண்ட அரக்கிகள் தங்கள் முன்னாள் சேதப்படுத்தப்பட்ட தோட்டத்தையும், அந்தப் பெரிய குரங்கையும் தங்கள் முன் கண்டனர்.
அந்த அரக்கிகளைப் பார்த்ததும், சக்தி படைத்த வீரமுள்ள ஹனுமான் அவர்கள் மனதில் அச்சம் விளைவிக்கும்படியான ஒரு பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டார்.
அந்தச் சக்தி வாய்ந்த, மலை போன்ற தோற்றம் கொண்ட ஹனுமானைத் தங்கள் முன் பார்த்ததும், அந்த அரக்கிகள் சீதையிடம் வினவினர்:
"யார் இந்த ஐந்து? யாரைச் சேர்ந்தவன் இவன்? எங்கிருந்து இங்கே வந்திருக்கிறான்? இங்கு அவனுடைய நோக்கம் என்ன? எங்களுக்கு இவையெல்லாம் தெரிய வேண்டும். உன்னால் எப்படி அவனிடம் பேச முடிந்தது?
"அழகானவளே! அவன்உன்னிடம் பேசியது உண்மைதானே? இது பற்றிய உண்மைகளை எங்களிடம் சொல். உனக்கு எந்தத் தீங்கும் வராது."
அப்போது, தன் உயர்ந்த உள்ளத்தைப் போலவே சிறந்த தோற்றமும் கொண்ட சீதை அவர்களிடம் இவ்வாறு கூறினார்.
"தாங்கள் விரும்பும் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளும் அரக்கர்கள் விஷயத்தில் நான் என்ன கூற முடியும்? அவன் யார், அவனுக்கு என்ன வேண்டும் என்பதெல்லாம் நீங்களே அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
"பயணம் செய்பவர் செல்லும் வழியை கவனித்து அதைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டியது ஒரு திருடனின் வேலை. தான் விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடிய அரக்கர்களைப் போன்றவன்தான் அவன் என்று நான் நினைக்கிறேன். அவனுடைய சக்திகள் என்னவென்று எனக்குத் தெரியாது. நானும் அவனால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்."
சீதையின் வார்த்தைகளைக் கேட்டு அரக்கிகள் மிகவும் வியப்படைந்தனர். நிகழ்ந்த எல்லாவற்றையும் பற்றித் தகவல் தெரிவிக்க சிலர் ராவணனின் அரண்மனைக்கு விரைந்தனர்.
எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளும் வல்லமை பெற்ற அந்த பயங்கரமான பிராணியைப் பற்றிய எல்லா விவரங்களையும் கோரமான முகம் கொண்ட அரக்கிகள் ராவணனிடம் தெரிவிக்கத் தொடங்கினர்.
ஓ அரசரே! அசோக வனத்தில் பயங்கரமான சக்தி கொண்ட ஒரு குரங்கு சீதையிடம் பேசிக் கொண்டிருந்தது. நாங்கள் எவ்வளவோ கேட்டும் ஜனகரின் மகளான அழகிய சீதை அந்தக் குரங்கைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார்.
அவன் இந்திரன் அல்லது குபேரனின் தூதுவனாக இருக்கலாம், அல்லது அவன் சீதையைக் கண்டு பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ராமனின் தூதுவனாகவும் இருக்கலாம்.
அற்புதமான தோற்றம் கொண்ட அந்த ஜந்து மிக அழகான தோற்றத்துடன் இருந்த பல பிராணிகள் வசித்து வந்த உங்கள் அந்தப்புரத் தோட்டத்தை மொத்தமாக அழித்து விட்டது. அது அழிக்காத இடமே மீதி இல்லை. ஆனால் சீதை அமர்ந்திருந்த இடத்தை அது தொடக் கூட இல்லை.
சீதையைக் காப்பதற்காக அந்த இடத்தை அது தொடாமல் விட்டதா, அல்லது சோர்வடைந்ததால் அது அதைச் செய்யாமல் விட்டதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அது சோர்வாக இருக்க முடியாது. அதற்கு சோர்வு என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எந்த மரத்தடியின் கீழ் சீதை அமர்ந்திருக்கிறாளோ, அந்த ஏராளமான இலைகளும், பூக்களும் நிறைந்த சிம்சுபா மரத்தை அது கவனமாகத் தொடாமல் விட்டது சீதையைக் காப்பாற்றுவதற்காகத்தான் இருக்க வேண்டும்.
சீதையிடம் பேசவும், அசோக வனத்தை அழிக்கவும் துணிந்த இந்த பயங்கரமான ஜந்துவுக்கு நீங்கள் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
"ஓ, அரக்கர்களின் அரசனே! நீங்கள் விருப்பம் வைத்திருக்கும் சீதையிடம் பேசுவதற்கு யாருக்குத் துணிவு வரும்? அவ்வாறு செய்யத் துணிபவன் அவன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறான் என்றுதான் பொருள்."
அரக்கிகளின் வார்த்தைகளைக் கேட்ட ராவணன் கோபத்தினால் விழிகளை உருட்டியபோது அவன் கண்கள் யாகக் குண்டத்தில் எரியும் தீயைப் போல் தோற்றமளித்தன.
மிகவும் கோபம் கொண்ட ராவணனின் இரண்டு கண்களிலிருந்தும் எரியும் விளக்கிலிருந்து எண்ணெய்த் துளிகள் விழுவது போல் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.
கிங்கரர்கள் என்ற பெயர் கொண்ட, எல்லா விதத்திலும் அவனுடைய உண்மையான சீடர்களான ஒரு பயங்கரமான அரக்கர்கள் கூட்டத்தை ஹனுமானுடன் போரிட்டு அவருடைய தவறான செயலுக்காக அவரை தண்டிக்கும்படி ராவணன் உத்தரவிட்டான்.
உடனே, பெருத்த வயிறும், கூரான பற்களும், பயங்கரமான தோற்றங்களும் பெரும் சக்தியும் கொண்ட பயங்கரமான அரக்கர்கள் சுத்தியல்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட கம்புகள் ஆகிய ஆயுதங்களுடன் ஹனுமானைப் பிடிக்க அரண்மனையிலிருந்து கிளம்பினர்.
எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல் அவர்கள் வரவை எதிர்பார்ப்பது போல் வாயிற்கதவு அமைந்திருந்த கோபுரத்தின் மீது அமர்ந்திருந்த ஹனுமானை நோக்கி அவர்கள் ஓடினர்.
அவரை அவர்கள் பல்வேறு வடிவங்கள் கொண்ட கட்டைகளாலும், தங்க முனை கொண்ட உலக்கைகளாலும், சூரியனைப் போன்று ஒளி விடும் அம்புகளாலும் தாக்கினார்கள்.
ஈட்டிகள், ஆணிகள் பதிக்கப்பட்ட கம்புகள், வாட்கள் இன்னும் பல ஆயுதங்களுடன் இருந்த அவர்கள் வெறியுடன் ஹனுமானைச் சூழ்ந்து கொண்டனர்.
தோற்றத்தில் மலைபோன்று இருந்த, சக்தியால் ஒளிர்ந்த ஹனுமான் உரத்த குரலில் கர்ஜனை செய்து கொண்டே தரையைத் தன் வாலால் அடித்தார்.
வாயுவின் குமாரர் தன் உடலை மிகவும் பெரிதாக ஆக்கிக் கொண்டு, கைகளைத் தட்டுவதன் மூலமும், கர்ஜனை மூலமும் இலங்கையின் அடித்தளத்தையே அதிர வைத்தார்.
ஹனுமான் தன் கைகளைத் தட்டிய ஓசை வானத்தில் இருந்த பறவைகளை நடுங்க வைத்து அவற்றைத் தரையில் விழ வைத்தது. பிறகு அவர் உரத்த குரலில் கூறினார்:
"ராமரின் வெல்ல முடியாத வலிமை போற்றி! சக்தி வாய்ந்த லக்ஷ்மணர் மற்றும் ராமரின் பாதுகாப்பில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சுக்ரீவர் ஆகியோரின் புகழ் போற்றி!
"நான் அந்த ராமருடைய ஊழியன் ஹனுமான். வாயுதேவரின் குமாரனான நான் எதிரிகளின் சேனைகளை அழிக்கவும் அநேகமாக எதையுமே மிக எளிதாக நிறைவேற்றவும் வல்லமை படைத்தவன்.
"நான் பாறைகளாலும், மரங்களாலும் பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்தும்போது ஆயிரம் ராவணர்களாலும் என்னைப் போரில் எதிர் கொள்ள முடியாது.
"எல்லா அரக்கர்களும் தங்கள் கண்களை அகல விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் இலங்கையை அதிர வைத்து, சீதையைச் சந்தித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு என் பணியை முடித்து விட்டுத் திரும்புவேன்."
ஹனுமானின் உரத்த கர்ஜனைகளைக் கேட்டும், சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தில் இருக்கும் மேகம் போல் உயரத்தில் அவரைப் பார்த்தும் அந்த அரக்கர்கள் நடுங்கிப் போனார்கள்.
பிறகு தங்கள் தைரியத்தைத் திரும்பப் பெற்ற சிலஅரக்கர்கள் தங்கள் எஜமானரின் கட்டளையை நினைவு கூர்ந்து ஹனுமானைத் தங்கள் பயங்கரமான ஆயுதங்களால் அடித்தனர்.
அவர்கள் தைரியத்துடன் ஹனுமானை எல்லாப் புறங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டார்கள். கதவு கோபுரத்தில் இருந்த ஒரு பெரிய இரும்பு உலக்கையைக் கையில் எடுத்துக் கொண்ட ஹனுமான் எல்லா அரக்கர்களையும் அந்த உலக்கையால் அடித்துக் கொன்றார்.
கருடன் தன் கால் நகங்களால் ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டிருப்பது போல், கையில் அந்த உலக்கையைப் பிடித்துக் கொண்டு வானத்தில் எழும்பி இலங்கையைச் சுற்றிப் பறந்தார் ஹனுமான்.
கிங்கரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்த அரக்கர்களை இந்த வகையில் கொன்ற பிறகு, இன்னும் அதிகம் போரை விரும்பியவராக மீண்டும் அந்த கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டார் அவர்.
அப்போது பயத்தினால் அவரிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டிருந்த சில அரக்கர்கள் எல்லா கிங்கரர்களும் அழிக்கப்பட்டது பற்றி ராவணனிடம் தெரிவிக்கச் சென்றனர்.
தன்னுடைய சக்தி வாய்ந்த சேனை அழிக்கப்பட்டதை அறிந்த ராவணன் தன் கண்களை உருட்டியபடி போரில் யாராலும் வெல்ல முடியாத, இணையற்றவனான அமைச்சர் பிரஹஸ்தரின் மகனுக்கு உத்தரவுகள் பிறப்பித்தான்.
சர்க்கம் 43
"எரியும் நெருப்பை நோக்கி விரையும் விட்டில் பூச்சிகளைப் போல்" போன்ற வர்ணனைகள் சிறப்பு!
ReplyDeleteவர்ணனைகள் வால்மீகியுடையவை! தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருவதற்கு நன்றி.
Deleteஉண்மைதான். அதை சுவை குறையாமல் கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteமீண்டும் என் நன்றி. அடுத்த சர்க்கத்தை இப்போதுதான் வெளியிட்டேன். நேரம் கிடைக்கும்போது படித்து விட்டுக் கருத்திடவும்.
Delete