Tuesday, May 19, 2020

38. 35 ஆவது சர்க்கம் - ராமரின் அங்க அடையாளங்களைக் கூறுதல்

அந்த உயர்ந்த வானரரிடமிருந்து ராமர் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்த விதேஹ நாட்டு இளவரசி சீதை இனிய, அன்பு நிறைந்த சொற்களில் பேசத் தொடங்கினார்.

அவர் கேட்டார்: உனக்கு எப்போது ராமருடன் பழக்கம் ஏற்பட்டது? லக்ஷ்மணரை உனக்கு எப்படித் தெரியும்? குரங்குகளும் மனிதர்களும் எப்படி நண்பர்கள் ஆயினர்?

"ஓ, வானரரே! இன்னொரு முறை ராம, லக்ஷ்மணர்களின் அங்க அடையாளங்களை விவரித்துச் சொல்லும். இது என் துயரத்தைக் குறைக்கப் பெருமளவு உதவும்.

"ராம, லக்ஷ்மணர்களின் தன்மைகள் என்ன? அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் கைகளும், தொடைகளும் எப்படி இருக்கும்? அவற்றை எனக்கு விவரித்துச் சொல்."

விதேஹ நாட்டு இளவரசியின் பேச்சைக் கேட்டதும், வாயு குமாரரான ஹனுமான் ராமரின் தோற்றத்தை விவரிக்கத் தொடங்கினார்.

"தாமரை இதழ்கள் போன்ற அழகான கண்களைக் கொண்ட விதேஹ நாட்டு இளவரசியே! உங்கள் கணவர் ராமர் மற்றும் லக்ஷ்மணர் ஆகியோரின் தோற்றத்தை விவரிக்கச் சொல்லி நீங்கள் என்னை அன்புடன் கேட்டுக் கொண்டது உண்மையில் ஒரு அதிர்ஷ்டமான சூழ்நிலைதான்.

"நான் கவனித்த விதத்தில் ராமர், லக்ஷ்மணர் ஆகியோரின் தோற்றத்தை நான் விவரிப்பதைக் கேளுங்கள்.

"ஜனகரின் புதல்வியே! ராமர் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர். அவை எல்லா உயிர்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை.
அவர் அழகு, அன்பு இவற்றின் மொத்த உருவம்.

"பிரகாசத்தில் அவர் சூரியனைப் போன்றவர், பொறுமையில் பூமியைப் போன்றவர். அறிவில் பிரஹஸ்பதியைப் போன்றவர். புகழில் இந்திரனைப் போன்றவர்.

"அவர் எல்லா ஜீவராசிகளுக்கும் பாதுகாவலர், குறிப்பாக, தன் குலத்தைப் பாதுகாப்பவர். அவர் தர்மத்தின் மற்றும் நன்னடத்தைக் கோட்பாடுகளின் பாதுகாவலர். அவர் தன் எதிரிகளுக்கு பயமாக விளங்குபவர்.

"ஓ, அழகிய பெண்மணியே! அவர் நான்கு வர்ணங்களைப் பாதுகாப்பவர். உலகில் நிலவும் நீதிக் கோட்பாட்டை உருவாக்கியவர் அவர்தான். தானே ஒரு உதாரணமாக விளங்கி, அதைச் செயல்படுத்துபவரும் அவரே.

"அவர் தோற்றம் ஒளி பொருந்தியது. அவர் எப்போதும் மற்றவர்களால் வணங்கப்படுகிறார். அவர் தன் புலன்களுக்கு எஜமானர். சாதுக்களுக்கு அவர் எப்போதும் நன்மை செய்பவர். எல்லா விஷயங்களிலும் எது சரியான வழி என்பதை அவர் அறிந்தவர்.

"அவர் ராஜதந்திரத்தில் நிபுணர். எனவே அவர் எப்போதும் சாதுக்களிடம் மரியாதையாக இருப்பார். அவர் எல்லா வேதங்களின் உட்பொருளையும் அறிந்தவர். அவர் உயர்ந்த குணமுடையவர். அவர் மிகவும் அடக்கமானவர், ஆனால் போரில் அச்சுறுத்தும் விதத்தில் இருப்பார்.

"அவர் யஜுர் வேதத்தை மிக நன்றாக அறிந்தவர். வேதம் அறிந்தவர் அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர். வேதங்கள், உபவேதங்கள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய அறிவு எல்லாவற்றிலும் அவர் ஒரு நிபுணர்.

"அவர் பரந்த தோள்களையும், நீண்ட புஜங்களையும் கொண்டவர். அவர் கழுத்தின் அமைப்பு ஒரு சங்கைப் போன்று இருக்கும். அவர் முகம் எப்போதும் அமைதியுடன் இருக்கும். அவர் தோள்கள் சதைப்பிடிப்பு கொண்டவை. அவர் கண்களில் ஒரு சிவப்பு காணப்படும். ராமரின் பெயர் மனிதர்களிடையே பிரபலமானது.

"அவருடைய குரல் துந்துபியின் (முழவின்) ஒலியை ஒத்தது. அவர் மென்மையான நீல நிறம் கொண்டவர். அவர் உயரமும், பருமனும் உள்ளவர், அழகிய தோற்றம் உள்ளவர்.

"அவருடைய மூன்று உறுப்புக்கள் - மார்பு, மணிக்கட்டுகள் மற்றும் முஷ்டிகள் உறுதியானவை. அவருடைய முடிகள், முழங்கால் முட்டிகள், விரைகள் இவற்றின் முனைகள் சம நிலையில் உள்ளவை.

"அவருடைய அடிவயிறு, தொப்புள் மற்றும் மார்பு உயர் நிலையில் உள்ளவை. அவருடைய கண்கள், நகங்கள், உள்ளங்கைகள், பாதங்கள் ஆகியவற்றின் ஓரங்கள் செவ்வரி படர்ந்தவை.

"அவர் பாதங்களுக்கு அடியில் உள்ள கோடுகள், அவர் தலையில் உள்ள முடிகள், அவருடைய இனப்பெருக்க உறுப்பு ஆகியவை மென்மையானவை, பளபளப்பானவை; அவருடைய குரல், நடை மற்றும் நிற்கும் விதம் ஆகியவை ஈர்க்கக் கூடியவை.

"அவருடைய கழுத்திலும், அடிவயிற்றிலும் மூன்று மடிப்புகள் உள்ளன. அவர் மார்பு, மார்பின் முனைகள், உள்ளங்கால் கோடுகள் ஆகியவை ஆழமாகப் பதிந்தவை. அவர் கழுத்து, பிறப்புறுப்பு, முதுகு மற்றும் முழங்கால்கள் சிறியவை. அவர் தலையில் மூன்று சுழல் வட்டங்களும், அவருடைய அகன்ற பாதத்திலும், நெற்றியிலும் நான்கு கோடுகளும் உள்ளன.

"அவருடைய உயரம் நான்கு முழம். அவருடைய கைகள், முழங்கால்கள், தொடைகள் மற்றும் கன்னங்கள் சரியான அளவில் அமைந்தவை.

"அவருடைய முகம், வாய், கண்கள், நாக்கு, உதடுகள், தாடை, முகவாய், மார்பு, நகங்கள், கைகள், கால்கள் - இவை தாமரை போன்றவை.

"அவருடைய மார்பு, தலை, நெற்றி, கழுத்து, தோள்கள், கைகள், தொப்புள், பக்கங்கள், முதுகு, குரல் ஆகியவை சரியான அளவானவை.

"வீரம், புகழ், செல்வம் இந்த மூன்று குணங்களுக்காக அவர் எங்கும் அறியப்பட்டவர்.

"அவருடைய பற்களும், கண்களும் வெண்மையானவை. அவருடைய அக்குள்கள், அடிவயிறு, மார்பு, மூக்கு, கைகள், நெற்றி ஆகியவை உயர்ந்த நிலையில் இருப்பவை.

"அவருடைய தலைமுடி, முகத்தில் உள்ள முடி, நகங்கள், உடலில் உள்ள முடி, தோல், விரல்கள், கண்கள், பிறப்புறுப்பு, அறிவு ஆகியவை பண்பட்டவை.

"காலை, முற்பகல், பிற்பகல் ஆகிய ஒரு நாளின் மூன்று பகுதிகளிலும், இரவிலும் அவர் ஒழுங்கு, நேர்மை, செல்வம், உயர்வான சுகங்கள் ஆகியவற்றை இந்த வரிசையில் பின்பற்றுகிறார்.

"அவர் உண்மையிலும், தர்மத்தின் விதிகளிலும் நிலைபெற்றவர். அவர் மிகவும் அதிர்ஷ்டம் மிகுந்தவர். பொருளை ஈட்டுவதிலும் சரி, அதை விநியோகிப்பதிலும் சரி, அவர் திறமை பெற்றவர்.

"நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிந்தவர். உலகுக்கு நன்மை செய்வதில் அவர் எப்போதும் விருப்பம் உள்ளவர்.

"சுமித்ரையின் புதல்வரும், யாராலும் வெல்ல முடியாதவருமான அவருடைய இளைய சகோதரர் லக்ஷ்மணரும் தோற்றம், அன்பு மற்றும் நற்குணங்களில் அவருக்கு இணையானவர்.

"இந்த மேலான மனிதர்கள் எல்லா இடங்களிலும் உங்களைத் தேடிக் கொண்டிருந்தபோது நாங்கள் அவர்களை சந்திக்க நேர்ந்தது.

"உங்களைத் தேடி அவர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, தன் அண்ணனால் அவமானப்படுத்தித் துரத்தப்பட்டு, ரிஷ்யமுக பர்வதத்தின் அழகிய பகுதிகளில் அச்சத்துடன் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவரை அவர்கள் சந்தித்தனர்.

"தன் அண்ணனால் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த உண்மையுள்ள சுக்ரீவரை எங்களைப் போன்ற சிலர் மட்டும்தான் கவனித்துக் கொண்டிருந்தோம்.

"அந்தச் சமயத்தில்தான் அந்த வீரர்கள் மரவுரி தரித்துக் கொண்டு, கையில் சக்தி வாய்ந்த விற்களை ஏந்தியபடி ரிஷ்யமுக பர்வதத்தின் அழகிய பகுதிகளுக்கு வந்தனர்.

"அந்த இரண்டு வில் வீரர்களையும் பார்த்து, வானரத் தலைவர் சுக்ரீவர் பயந்து போய், மலையின் உச்சிக்கு ஓடினார். அதற்குப் பிறகு அந்த வானரத் தலைவர் மலையின் உச்சியின் மீது இருந்து கொண்டு, புதிதாக வந்தவர்களைச் சந்திக்க என்னை அனுப்பினார்.

"சுக்ரீவரின் ஆணைப்படி, அந்த அழகிய அரச குமாரர்களை நான் சந்தித்தேன். கைகளைக் குவித்து அவர்களை வணங்கி அங்கிருந்த நிலவரத்தைத் தெரிவித்தேன்.

"இவ்வாறு எங்களைப் பற்றிய தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்து அவர்களைத் திருப்தி அடையச் செய்தபின், அவர்களை என் முதுகில் சுமந்து கொண்டு சுக்ரீவர் இருந்த இடத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றேன்.

"மேன்மை தங்கிய சுக்ரீவருக்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். இவ்வாறு அவர்கள் அறிமுகமானதும், அவர்கள் உரையாடிக் கொண்டனர். உரையாடலின் விளைவாக அவர்களுக்கிடையே பெரிய அளவில் நம்பிக்கை விளைந்தது.

"கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி அவர்களிடையே நிகழ்ந்த உரையாடலின்போது, வானரர்களின் அரசரும், அரச குலத்தைச் சேர்ந்த ராமரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் மிகவும் திருப்தி ஏற்பட்டது.

"மிகுந்த பலமும், வீரமும் கொண்ட தன் அண்ணன் வாலியால் ஒரு பெண்ணின் காரணமாக நாட்டிலிருந்து துரத்தப்பட்ட சுக்ரீவருக்கு லக்ஷ்மணரின் சகோதரரான ராமர் ஆறுதல் கூறினார்.

"அதே சமயம், செயல்களைச் செய்து முடிப்பதில் சமர்த்தரான லக்ஷ்மணர், உங்களைப் பிரிந்ததால் தன் அண்ணனுக்கு நேர்ந்த துயரம் பற்றி வானர அரசரான சுக்ரீவரிடம் எடுத்துக் கூறினார்.

"லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டதும், சுக்ரீவர் ராகு, கேதுவால் பீடிக்கப்பட்ட சூரியனைப் போல் துயரத்தால் சூழப்பட்டார்.

"அதற்குப் பிறகு, ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டபோது, வானிலிருந்து நீங்கள் கீழே எறிந்த எல்லா அணிகலன்களையும் வானரர்கள் எடுத்து வந்து ராமரின் முன்பு வைத்தனர்.  நீங்கள் இருக்குமிடம் மட்டும் தெரியவில்லை.

"மென்மையான ஒலியுடன் பூமியில் விழுந்து சிதறிய எல்லா அணிகலன்களையும் நான்தான் சேகரித்தேன். இவற்றை ராமரிடம் காட்டியபோது அவர் மூர்ச்சை அடைந்தார்.

"பிறகு, ஒரு தேவலோகத்தவரைப் போல் தோன்றும் உங்கள் கணவர் அந்த நகைகளைத் தன் மடியில் வைத்துக் கொண்டு உங்களைப் பற்றித் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு நீண்ட நேரம் உங்கள் விதியை நொந்து கொண்டார்.

"அந்த நகைகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவர் துயரத்தால் அழுதார். அந்த நகைகளைப் பார்த்தது அவருடைய சோக நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரியச் செய்யும் நெருப்பாகத்தான் அமைந்தது. துயரத்தில் மூழ்கிய அவர் நீண்ட நேரம் கீழே விழுந்தே கிடந்தார். நிறைய ஆறுதல் கூறி நான் அவரை எழுந்து உட்காரச் செய்தேன்.

"லக்ஷ்மணருடன் சேர்ந்து ராமர் அந்த ஆபரணங்களை சுக்ரீவரிடம் பலமுறை காட்டி அவற்றை அவருடைய பொறுப்பில் ஒப்படைத்தார்.

"உயர்ந்த பெண்மணியே! உங்களைப் பிரிந்ததால் ரகுவம்ச திலகர் தனக்குள் எரிமலை போல் கனன்று கொண்டிருக்கிறார். உங்கள் பொருட்டு அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் பட்டினி, தூக்கமின்மை, கவலை ஆகியவை அடுப்பில் எரியும் நெருப்பு போல் எரிந்து கொண்டிருக்கின்றன.

"பூகம்பம் மலையைப் பிளப்பது போல் உங்கள் பொருட்டு அவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரம் அவரை முழுவதுமாக நொறுக்கி விட்டது.

"ஓ, இளவரசியே! உங்களைக் கண்டு பிடிக்க முடியாததால், காடுகள், ஆற்றுப்படுகைகள், மலைச்சரிவுகள் போன்ற பல இடங்களிலும் திரிந்து கொண்டு அவர் பெரும் துயர மனநிலையில் இருக்கிறார்.

"ஜனகரின் மகளே! பெரும் வீரம் கொண்ட சிங்கம் போன்ற ராமர் விரைவிலேயே ராவணனையும், அவன் உறவினர்களையும், கூட்டாளிகளையும் கொன்று விட்டு உங்களிடம் வருவார்.

"ராமரும், சுக்ரீவரும் தங்கள் சந்திப்பின்போது வாலியைக் கொல்வது பற்றியும், உங்களைத் தேடுவது பற்றியும் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

"அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த இரண்டு வீர இளவரசர்களும் கிஷ்கிந்தையில் வாலியுடன் போர் செய்து அவரைக் கொன்றார்கள்.

"ராமர் தன் புஜபலத்தினால் வாலியைக் கொன்று சுக்ரீவரை எல்லா வானரர்களுக்கும், கரடிகளுக்கும் அரசராக்கினார்.

"பெண்மணி! இவ்விதமாகத்தான் ராமருக்கும், சுக்ரீவருக்கும் இடையே நட்பும், ஒன்றிணைப்பும் ஏற்படுத்தப்பட்டன. எனவே என்னை அவர்கள் இருவரின் தூதன் என்று அறிவீர்களாக!

"ஆட்சியைத் திரும்பப் பெற்ற பிறகு, சுக்ரீவர் சக்தி வாய்ந்த எல்லா வானரர்களையும் அழைத்து, உங்களைத் தேடுவதற்காக அவர்களை பத்துத் திசைகளுக்கும் அனுப்பினார்.

"அந்த வானர அரசரின் கட்டளையால் அனுப்பப்பட்ட சக்தி வாய்ந்த அந்த வானரர்கள் இமயமலையைப் போன்ற பெரிய தோற்றம் கொண்டவர்களாக, உலகில் உள்ள எல்லா இடங்களையும் நாடிச் சென்றனர்.

"அப்போதிலிருந்து, நாங்கள் அனைவரும், மற்ற வானரர்களுடன் சேர்ந்து சுக்ரீவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

"வாலியின் சக்தி வாய்ந்த புதல்வர் அங்கதன் மூன்றில் ஒரு பங்கு வானரர்கள் சூழத் தேடுதலுக்காகக் கிளம்பினார்.

"பல நாட்கள் விந்திய மலைப் பகுதியில் இரவும் பகலும் தேடியது பலனளிக்கவில்லை. எங்கள் முயற்சி தோல்வி அடைந்ததால், நாங்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினோம்.

"எங்கள் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன என்ற முடிவுக்கு வந்து, எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசம் விரைவில் முடியப் போகிறது என்பதை உணர்ந்து, கோபம் கொண்ட அரசர் சுக்ரீவரை எதிர்நோக்குவதை விட எங்கள் உயிரை விடுவதே நல்லது என்று நாங்கள் நினைத்தோம்.

"காடுகள், கோட்டைகள், மலைகள், ஆறுகளில் எல்லாம் தேடிய பிறகு, எங்கள் உயிரை விடுவதற்கு நாங்கள் தயாரானோம்.

"விதேஹ நாட்டு இளவரசியே, நாங்கள் அனைவரும் உண்ணாமல் இருந்து உயிர் விடத் தயாரானதைக் கண்டு உயர்ந்த வானரரான அங்கதர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்.

"ஜடாயுவின் மரணம், வாலி அழிக்கப்பட்டது, தேவியைக் கண்டு பிடிப்பதில் நாங்கள் தோல்வி அடைந்தது, உண்ணாமல் இருந்து உயிர் துறப்பது என்ற எங்கள் உறுதி ஆகியவை குறித்து அவர் வருந்தினார்.

"எங்கள் எஜமானரின் கட்டளையை நிறைவேற்றத் தவறியதால் உயிர் துறக்கத் தயாராக இருந்த எங்களை நோக்கி உன்னத ஆத்மாவான ஒரு கழுகு அப்போது வந்தது.

"ஜடாயுவின் சகோதரரான சம்பாதி என்ற அந்தக் கழுகு அவருடைய சகோதரரின் மரணச் செய்தியைக் கேட்டதும் எங்களிடம் உணர்ச்சி பொங்கக் கூறியது:

"உயர்ந்த வானரர்களே! என் தம்பி எந்த இடத்தில் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதை உங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

"ஜனஸ்தானத்தில் ஜடாயு உங்களைக் காப்பாற்ற வந்தபோது அவர் ஒரு கொடிய அரக்கனால் எப்படிக் கொல்லப்பட்டார் என்பதை நடந்தபடி விவரமாக அங்கதர் அவரிடம் எடுத்துரைத்தார்.

"அழகிய பெண்ணே! அருணரின் புதல்வரான அந்த சம்பாதி தன் சகோதரரின் மரணம் குறித்து வருந்தினார். தாங்கள் ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருப்பதையும் அவர் தெரிவித்தார்.

"சம்பாதி அளித்த இந்த உற்சாகமூட்டும் தகவலைக் கேட்ட பிறகு அங்கதர் உட்பட நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம். உங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையால் உற்சாகம் அடைந்து வானரர்கள் மிகுந்த எழுச்சியுடன் விந்திய மலையிலிருந்து கிளம்பி சமுத்திரத்தின் வடக்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

"கடற்கரையைப் பார்த்ததும், அங்கதரும் மற்றவர்களும் உங்களைக் கண்டு பிடிக்க இந்தக் கடலைத் தாண்டிச் செல்ல வேண்டிய கடின செயலை நினைத்து மீண்டும் மனச்சோர்வு அடைந்தனர்.

"வானரர் சேனை முழுவதும் மன வருத்தத்துடனும், இயலாமை உணர்வுடனும் இருந்ததைக் கண்ட நான் இந்தப் பகுதியையும் முக்கிய நிலப்பகுதியையும் பிரிக்கும் நூறு யோஜனை அகலமுடைய இந்தக் கடலைக் கடந்து வந்தேன்.

"இந்த ஒரு இரவில் நான் அரக்கர்களால் நிறைந்த இந்த இலங்கை நகரம் முழுவதிலும் பயணம் செய்து விட்டேன். நான் ராவணனைப் பார்த்து விட்டேன். சோகத்தால் நிரம்பிய உங்களையும் பார்த்து விட்டேன்.

"குற்றமற்றவற்றவரே! நடந்தவற்றை நான் உங்களிடம் உண்மையாகக் கூறி விட்டேன். என்னை ராமபிரானின் தூதுவராக அறிந்து ஏற்றுக் கொள்வீர்களாக.

"பெண்மணியே! வாயு குமாரனும், சுக்ரீவரின் அமைச்சரும், ராமபிரானின் தூதனுமான நான் இங்கே உங்கள் காரணமாகவே வந்திருக்கிறேன்.

"காகுஸ்தகுல திலகரும், வில்வீரர்களில் சிறந்தவருமான ராமர் பத்திரமாகவும், நன்றாகவும் இருக்கிறார். ராமரைக் காப்பாற்ற உறுதி பூண்டிருப்பவரும், எல்லா மங்கள சின்னங்களும் கொண்டிருப்பவருமான லக்ஷ்மணரும் அவ்வாறே இருக்கிறார்.

"பெண்மணியே! ராமபிரானின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற விருப்பம் உள்ள நான் சுக்ரீவரின் ஆணையை ஏற்றுச் செயல்பட்டு, நானாக முயன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

"விரும்பும் எந்த வடிவத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடிய நான், நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவனாக தனியாகப் பயணம் செய்து யாருடைய உதவியும் இல்லாமல் இந்தத் தெற்குப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.

"உங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற வானரர்கள் வருத்தத்தை நான் உங்களைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதன் மூலம் போக்கப் போகிறேன்.

"தாயே! நான் கடலைக் கடந்து வந்தது வீண் போகவில்லை என்பது என் அதிர்ஷ்டம். உங்களைக் கண்டு பிடித்தேன் என்ற பெருமையை என் அதிர்ஷ்டத்தால் பெறப் போகிறேன்.

"வீரரான ராமர் விரைவிலேயே ராவணனையும், அவன் உறவினர்களையும் கூட்டாளிகளையும் அழித்து இந்த இடத்திலிருந்து உங்களை மீட்கப் போகிறார்.

"ஓ  விதேஹ நாட்டு இளவரசியே! மலைகளுக்குள் மால்யவான் என்ற மலை மிகவும் பெரிதானதும், புகழ் பெற்றதும் ஆகும். அந்த மலையிலிருந்து கேசரி என்ற வானரர் கோகர்ண மலைக்குச் சென்றார்.

"வருணனின் புனித பூமியில் தேவர்ஷிஸின் ஆணைப்படி சம்பாசாதனன் என்ற அரக்கனை அவர் கொன்றார். அந்த வானர வீரர்தான் என் தந்தை.

"மிதிலை நாட்டு இளவரசியே! அந்த வானரரின் மனைவியிடம் வாயு பகவானால் நான் பெறப்பட்டேன். என் செயல்களால் இவ்வுலகில் ஹனுமான் என்று பெயர் பெற்றேன்.

"விதேஹ நாட்டு இளவரசியே! நான் உண்மையானவன் என்று என் மீது  உங்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்வதற்காக, உங்கள் கணவரின் மேன்மைகளையும் சாதனைகளையும் பற்றி உங்களிடம் எடுத்துக் கூறினேன்.

"அந்த ரகுகுலத் திலகர் விரைவிலேயே உங்களை இந்த இடத்திலிருந்து மீட்கப் போகிறார்."

சோகத்தினால் எலும்பாக இளைத்திருந்த சீதை ராமரின் அடையாளங்களையும் குணங்களையும் பற்றி அளிக்கப்பட சான்றினால் ஹனுமானை ராமரின் உண்மையான தூதரென்று முழுமையாக நம்பினார்.

மிகுந்த மகிழ்ச்சியை அவரது வளைந்த புருவங்கள் எடுத்துக் காட்ட, அந்த மகிழ்ச்சியினால் உந்தப்பட்ட ஜனக புத்திரி கண்ணீர் வடித்தார்.

இணையற்ற அழகு கொண்ட செவ்வரி படர்ந்த நீண்ட கண்களுடன் கூடிய அவரது அழகிய முகம் ராகுவின் பிடியிலிருந்து மீண்ட சந்திரனைப் போல் பிரகாசித்தது.

அவருக்கு இப்போது ஹனுமான் யார் என்பது பற்றி எள்ளளவும் ஐயமில்லை. சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

சீதை ஹனுமானைக் கனிவுடன் பார்த்தபோது, அவர் தன் செய்தியின் மீதிப் பகுதியைக் கூறினார்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நான் எல்லா விவரங்களையும் உங்களிடம் கூறி விட்டேன். நீங்கள் இனி அதிக மனத் தெம்புடன் இருங்கள். நான் இப்போது தங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமானால் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் விருப்பம் என்ன என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

"மிதிலை நாட்டு இளவரசியே! முனிவர்களின் விருப்பப்படி கேசரி என்ற ஒரு சிறந்த வானரர் சம்பசாதனர் என்ற அரக்கனைக் கொன்றார். முனிவர்களின் ஆசியால் சம்பசாதனரை அழித்தவரின் இன்னொரு வானர உருவாக, வாயுவின் குமாரராக நான் பிறந்திருக்கிறேன். அந்த வாயு தேவரின் சக்தியை நான் பெற்றிருக்கிறேன். 

2 comments:

  1. தொடர்ந்து எழுதவும். ந‌ன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஊக்கமளிப்புக்கு நன்றி

      Delete