Monday, October 29, 2018

26. 23ஆவது சர்க்கம் - அரக்கிகள் சீதையை வற்புறுத்துதல்

அரக்கிகளுக்கு இவ்விதமாக உத்தரவு பிறப்பித்து விட்டு, எதிரிகளை நடுங்கச் செய்பவனான ராவணன் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனின் தலை மறைந்ததும், கோர உருவம் கொண்ட அரக்கிகள் மொத்தமாக சீதையைச் சூழ்ந்து கொண்டனர். கோபத்தில் தங்களையே மறந்தவர்களாக, அவர்கள் சீதையை பயமுறுத்துவது போல் பார்த்து, அவளை மிரட்டும் விதமாகப் பேசாத துவங்கினர்.

"ஓ, சீதையே! புலஸ்தியர் வம்சத்தைச் சேர்ந்தவனான பத்து தலை ராவணனின் மனைவி ஆவது எத்தகைய கௌரவம் என்பதை நீ உணரவில்லையா?"

கோபத்தினால் கண்கள் சிவந்த ஏகஜடா  என்ற அரக்கி அழகிய சீதையைப் பார்த்து இவ்வாறு கூறினாள்:

"புகழ் பெற்ற புலஸ்தியர், பிரம்மாவின் மனதிலிருந்து உதித்தவர். ஆறு பிரஜாபதிகளில் நான்காமவர் அவர்.

"கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்தவரான விஸ்ரவஸ் புலஸ்தியரின் மனதிலிருந்து உதித்தவர். சக்தியில் அவர் பிரம்மாவுக்கு நிகரானவர்.
எதிரிகளைக் கலங்க வைக்கும் ராவணன் அந்த விஸ்ரவஸின் புதல்வன்.
அரக்கர் குல அரசனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்.

"அழகானவளே! நீ என் பேச்சைக் கேட்கப் போகிறாயா, இல்லையா?"

அதற்குப் பிறகு, ஹரிஜடா என்ற அரக்கி, பூனை போன்ற தன் கண்களைக் கோபமாக உருட்டியபடி இவ்வாறு கூறினாள்:

முப்பத்து முக்கோடி தேவர்களையும், அவர்களுடைய அரசனையும் வென்ற அரக்கர் தலைவனின் மனைவியாக இருக்க உன்னைத் தயார்ப்படுத்திக்கொள்."

ப்ரகஷா என்ற அரக்கி  கோபத்துடன் படபடவென்று பேசினாள்: "வீரத்துக்கும், பலத்துக்கும் பெயர் பெற்றவனும், போரில் புறமுதுகு காட்டாதவனுமான  மாவீரனின் மனைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?

"வல்லமை படைத்த ராவணன் தன்னிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் மனைவியை விட அதிகமாக உன்னை கௌரவித்து உனக்கு எல்லா நன்மைகளும் செய்வான். உன்னிடம் வருவதற்காக, ஆயிரக்கணக்கான பெண்களால் நிரம்பியிருக்கும் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட தன் அந்தப்புரத்தை விட்டு விட்டு, நீ இருக்கும் இடத்துக்கு வருவான்.

விகடை என்ற அரக்கி கூறினாள்: "உன்னை விரும்பி வந்தவன் போரில் நாகர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், தேவர்கள் ஆகியோரை வென்றவன். கீழ்மையானவளே! அரக்கர்களின் அரசனும், எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான ராவணனின் மனைவியாக ஆக விரும்புகிறாயா என்று இப்போதாவது சொல்."

பிறகு, துர்முகி என்ற அரக்கி பேசினாள்:"அழகிய கண்களை உடையவளே! எவனைக் கண்டு சூரியன் கூட பயந்து போய்த் தன் வெப்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறதோ, காற்று கூடத் தன் வேகத்தைக் குறைத்துக்க் கொள்கிறதோ, அவனுடைய விருப்பத்துக்கு நீ இணங்குவாயா, மாட்டாயா?"

"எவனுக்கு பயந்து  மரங்கள் பூக்களை உதிர்க்குமோ, மலைகளும் மேகங்களும் நீரைப் பொழியுமோ அந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னனான அரக்கர் அரசனின் மனைவியாக ஆக ஒப்புக்கொள்வதாக உன் உறுதியான பதிலைச் சொல்.

"அழகாகச் சிரிக்கும் ஆரணங்கே! உண்மை நிலையை உணர்ந்து, நாங்கள் சொன்ன யோசனையை  ஏற்றுக்கொள். இல்லாவிடில், உன் ஆயுள் குறைக்கப்படும்."
No comments:

Post a Comment