Tuesday, October 23, 2018

25. 22ஆவது சர்க்கம் - ராவணன் விதித்த இறுதிக்கெடு

ராவணனுக்குச் சரியான வழியைக் காட்டும் விதத்தில் அமைந்த சீதையின் பேச்சைக் கேட்டபின், அரக்கர் தலைவன் இவ்வாறு பதில் கூறினான்:

"ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் எந்த அளவுக்கு சமாதானமாகப் போக முயல்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனது மென்மையான அணுகுமுறையைத் தவறாகப் பயன்படுத்துகிறாள். எந்த அளவுக்கு அவளை அவன் புகழ்கிறானோ, அந்த அளவுக்கு அவள் அவனுடைய வேண்டுகோளை நிராகரிக்கிறாள்.

"தறி கெட்டு ஓடும் குதிரைகளை ஓரு தேரோட்டி கட்டுப்படுத்துவது போல், என் கோபத்தை உன் மீது எனக்கிருக்கும் காதல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஒரு ஆணின் உணர்வுகள் இவ்விதமாக மென்மைப் படுத்தப் படுகின்றன. ஏனெனில், ஒரு பெண் மீது ஒரு ஆணுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படும்போது, அது உடனே அவள் மீதான காதலைத் தூண்டுகிறது.

"அழகான பெண்ணே! அதனால்தான், எளிமையானவன் போல் வேஷம் போடும் ராமனிடம் உறுதியான அன்பு கொண்டு என்னை அவமதிக்கும்  உன்னை நான் சும்மா விடுகிறேன்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நீ என்னிடம் பேசிய ஒவ்வொரு கொடிய சொல்லுக்கும் உன்னை நான் கொன்றிருக்க வேண்டும்."

இந்த வார்த்தைகளைப் பேசிய பின் ராவணனின் கோபம் கிளர்ந்தெழுந்து. தொடர்ந்து பேசினான்.

"அழகான பெண்ணே! நான் உனக்கு விதித்திருந்த கெடு முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள், என் மனைவியாவதென்று முடிவெடுத்து விடு. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நீ என்னை உன் கணவனாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், என் சமையற்காரர்கள் உன்னைத் துண்டு துண்டாக வெட்டி, எனக்குக் காலை உணவு சமைத்து விடுவார்கள்"

ராவணனின் இந்தக் கொடிய சொற்களைக் கேட்டு ஜனகரின் மகள் பீதியடைந்ததைக் கண்டு அங்கிருந்த தேவர் குல, கந்தர்வ குலப் பெண்கள் மிகவும் வருத்தமடைந்தனர். சிலர் தங்கள் உதடுகளை அசைத்தும், சிலர் தங்கள் முகபாவங்களாலும், இன்னும் சிலர் தங்கள் கண்களை அசைத்தும் ராவணனின் அச்சுறுத்தலால் மிரண்டு போயிருந்த சீதைக்கு ஆறுதல் சொல்ல முயன்றனர்.

அவர்களின் இந்தச் செயல்களினால் சற்றே தேறுதல் அடைந்த சீதை அரக்கர் குலத் தலைவனான ராவணனிடம் கற்பின் மேன்மை பற்றிப் பேசத்    துவங்கினார்.

"உன் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் யாரும் இங்கு இல்லை. அதனால்தான்  நீ செல்லும் அழிவுப்பாதையிலிருந்து உன்னை யாரும் தடுக்க முயலவில்லை. இந்திரனை மணந்த சசி போல், அற வழி நடக்கும்  ராமபிரானை மணந்திருக்கும் என்னை மனைவியாக்கிக்கொள்ள வேண்டுமென்று இந்த மூவுலகிலும் உன்னைத் தவிர வேறு யார் ஆசைப்படுவார்கள்?

"கீழ்மை குணம் கொண்ட அரக்கனே! நிகரற்ற சக்திகள் கொண்ட ராமனின் மனைவியிடம்  இது போன்ற அக்கிரமமான யோசனைகளைச் சொல்லி விட்டு, இங்கிருந்து ஓடினாலும், எங்கே உனக்கு அடைக்கலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாய்?

"ராமனுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு ஒரு முயலுக்கும், பள்ளத்தில் விழுந்திருக்கும் யானைக்கும் உள்ள வேறுபாடுதான். தீயவனே! அவருக்கு முன் நீ ஒரு முயல்தான்!

"இக்ஷ்வாகு குலத் தலைவனான ராமனை இவ்வாறு  அவமானப்படுத்தி விட்டு, துவக்கத்திலிருந்தே சற்றும் வெட்கமில்லாமல் நீ மறைந்து கொண்டிருக்கிறாய். அவர் கண் முன்னால் வரும் துணிவு உனக்கு இல்லை.

"கொடியவனே! என் மீது பார்வையைச் செலுத்திய  உன்னுடைய கொடிய, அருவருப்பான, கருமஞ்சள் நிறக் கண்கள்  அவை இருக்கும் கூடுகளிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஏன் இன்னும் தரையில் விழவில்லை?

"பாவங்களைச்  செய்பவனே! அறவழியில் நடப்பவரான ராமரின் மனைவியும், பெருமை வாய்ந்த தசரதரின் மருமகளுமான  என்னிடம் இதுபோல் பேசிய உன் நாக்கு ஏன் இன்னும் அறுந்து விழவில்லை?

"பத்துத்தலை அரக்கனே! நீ எரிந்து சாம்பலாக வேண்டியவன். என் கற்பின் வலிமையால் என்னால் இதை நிகழச் செய்ய முடியும். ஆனால் அப்படிச் செய்வதற்கு ராமரிடமிருந்து நான் அனுமதி பெறவில்லை என்பதாலும், என் செயல்கள் நான் பின்பற்றும் தர்மத்தை ஒட்டியவை என்பதாலும், என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

"எல்லாவிதத்திலும் ராமருக்குச் சொந்தமான என்னைக் கடத்துவது  என்பது சாதாரணமாக நடக்க முடியாத விஷயம். உனக்கு அழிவைத் தேடித்தர வேண்டும் என்பதற்காக விதி இதை நடக்கும்படி செய்திருக்கிறது! ராமரைச் சற்று நேரம் அப்புறப்படுத்தி விட்டு அவரது மனைவியை வஞ்சகமாக அவரிடமிருந்து பிரித்ததுதான் குபேரனின் சகோதரன் என்றும், பெரும் சேனைகளைக் கொண்டவன் என்றும், வீரம் மிகுந்தவன் என்றும் பெருமைப்பட்டுக்கொள்ளும் நீ செய்த வீரச்செயல்!

காதில் ஈயத்தைப் பாய்ச்சியது போன்ற சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அரக்கர் தலைவன் தன்  சிவந்த, உருளும் விழிகளை சீதையின் மீது நிலைநிறுத்தினான்.

ஒரு கருத்த மேகம் போல் இருந்தது அவன் தோற்றம். அவனது வலிமையான கரங்களும் கழுத்தும் அவனுக்கு ஒரு சிங்கத்தின் வலிமையையும், வேகமாகப் பாய்ந்து செல்லும் இயல்பையும்  கொடுத்தன. அவன் உதடுகளும், கண்களின் ஓரங்களும் தீப்பிழம்புகள் போல் சிவந்திருந்தன.அவன் தலைக்கு மேல் இருந்த பரிவட்டம் உணர்ச்சி மிகுதியால் ஆடிக்கொண்டிருந்தது.

அவன் அலங்கார மாலைகள் அணிந்து, உடலில் வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டிருந்தான். அவன் உடைகளும், மாலைகளும் சிவப்பு நிறத்தில் இருந்தன. இடுப்பில் நீலக் கற்கள் பதித்த பட்டை அணிந்தபடி அவன் நின்ற தோற்றம், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகக் கொண்டு கடலைக் கடைந்த மந்தார மலையைப் போல் இருந்தது. அவனுடைய இரு கரங்களும், அந்த மலையின் சிகரங்கள் போல் தோற்றமளித்தன.

சூரிய ஒளி போல் மின்னிய அவன் இரு தோடுகள் இருபுறமும் மலர்கள் பூத்துக் குலுங்கும் அசோக  மரங்களைக் கொண்ட மலை போன்ற தோற்றத்தை அவனுக்கு அளித்தன. விரும்பிய வரங்களை அளிக்கும் கற்பக மரம் போலவும், வசந்த காலம் உருவெடுத்து வந்தது போலவும் அவன் காட்சியளித்தான்.

அவன் தோற்றம் மயானபூமியில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் போலவும் இருந்தது. அவன் செய்து கொண்டிருந்த அலங்காரங்களையும் மீறி, கோரமான தோற்றத்துடன் காணப்பட்ட ராவணன், கோபத்தினால் சிவந்த கண்களுடனும், பாம்பு போல் சீறிக்கொண்டும் சீதையிடம் சொன்னான்:

"வெறுக்கத்தக்க பெண்ணே! நீ இன்னும் அந்த ஒழுக்கமற்ற பிச்சைக்காரனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய். இரவின் முடிவில் வரும் சந்தியாகாலத்தை சூரியன் அழிப்பது போல், உன்னை நான் இப்போதே அழிக்கப் போகிறேன்."

சீதையிடம் இவ்வாறு கோபமாகப் பேசியபின் ராவணன் சீதையைக் காவல் காக்கும் பெண்களிடம் திரும்பினான்.அவர்களில் சிலர் ஒரு கண் மட்டுமே உள்ளவர்கள், சிலர் ஒரு காது மட்டுமே உள்ளவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள், சிலர் மாட்டுக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள்,

சிலர் யானைக்காது போன்ற காதுகளைக் கொண்டவர்கள், சிலர் தொங்கும் காதுகளைக் கொண்டவர்கள், சிலர் காதே இல்லாதவர்கள்.

சிலர் யானை போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் குதிரைக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் மாட்டுக்கால் போன்ற கால்களைக் கொண்டவர்கள், சிலர் பின்னல் போன்று முறுக்கிக்கொண்ட கால்களைக் கொண்டவர்கள், சிலர் ஒரு கால் மட்டுமே உள்ளவர்கள், சிலர் பெரிய கால்களும், கழுத்தும் கொண்டவர்கள், சிலர் காலே இல்லாதவர்கள்.

சிலரது கண்கள் ஒரு பக்கத்தில் அமைந்திருந்தன. சிலர் துருத்திய மார்பகங்களும், சிலர் துருத்திய வயிறும் கொண்டவர்கள். சிலர் பெரிய கண்களும், பெரிய வாயும் கொண்டவர்கள். சிலர் பெரிய நாக்கு உள்ளவர்கள். சிலர் மூக்கு, நாக்கு இரண்டும் இல்லாதவர்கள்.

சிலர் சிங்க முகத்துடனும், சிலர் மாட்டு முகத்துடனும், சிலர் பன்றி முகத்துடனும் இருந்தனர். எல்லாவித குரூரத் தோற்றம் கொண்டவர்களும் அங்கே இருந்தனர்.

அவர்களைப் பார்த்து ராவணன் சொன்னான்:

"அரக்கிகளே! ஜனகரின் மகளான இந்த சீதை என் விருப்பத்துக்கு இணங்கும் விதத்தில் நீங்கள் செயல்பட வேண்டும். இதற்காக நீங்கள் நைச்சியமாகவோ, கொடுமையாகவோ எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். அவளுக்கு நீங்கள் பரிசுகள் அளித்தோ அல்லது வேறு முறைகளைப் பயன்படுத்தியோ செயல்படலாம்.

அரக்கிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டபின், காமத்தினாலும்,  கோபத்தினாலும் தன்னையே மறந்து விட்ட ராவணன் சீதையைப் பலமுறை திரும்பிப் பார்த்துத் தன் கடுமையான முகபாவத்தின் மூலம் அவளை பயமுறுத்தினான்.

அப்போது தான்யமாலினி என்ற அரக்கி வேகமாக ஒடி வந்து, பத்து தலைகள் கொண்ட அந்த ராவணனைக் கட்டித் தழுவிக் கொண்டு, அவனிடம் சொன்னாள்.

"ஓ! அரக்கர் குல அரசனே! இந்த மந்தமான, வெறுக்கத்தக்க பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? நீ என்னுடன் இன்பமாக வாழ்க்கையைக் கழிக்கலாம்! அரசே!  உன் தோள்வலியால் நீ அடைந்திருக்கும் உயர்ந்த, நல்ல விஷயங்களை இந்தப் பெண் அனுபவிக்க வேண்டும் என்பது பிரம்மாவின் விருப்பம் இல்லை போலும்!


"தன்னை விரும்பாத பெண்ணைப் பின்தொடர்ந்து போகிறவனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழந்து விடும். உன்னிடம் ஆசை உள்ள பெண்ணால்தான் உன் காதலை ஏற்று, அன்பு செய்து உனக்கு முழுத் திருப்தி அளிக்க முடியும்."

இவ்வாறு சொல்லி, அந்த அரக்கியால் இழுத்துச் செல்லப்பட்ட மேகம் போன்ற கருத்த நிறமுடைய, சக்தி வாய்ந்த அந்த அரக்கர் தலைவன் சிரித்துக்கொண்டே சீதையை விட்டு அகன்றேன்.

சூரியன் போன்ற ஒளி பொருந்திய,அந்தப் பத்து தலைகள் கொண்ட அரசன் பூமி அதிரும் வண்ணம் நடந்து தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

ராவணனைச் சூழ்ந்தபடி தேவர், கந்தர்வர், நாகர் குலப் பெண்கள்  அவனுடன் அரண்மனைக்குள் நுழைந்தனர்.

காமம் நிறைந்த ராவணன் சீதை பயந்திருந்தாலும், தர்மத்தின் வழியிலிருந்து விலகி அவனுக்குக் கட்டுப்பட மறுத்து விட்டாள் என்பதை உணர்ந்தவனாகத் தன் அரண்மனைக்குள் நுழைந்தான். !


No comments:

Post a Comment