ஹனுமான் கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பின், நிலவு போன்ற முகம் கொண்ட சீதை கீழ்க்கண்டவாறு உயர்ந்த கருத்துக்களைக் கூறினார்:"ஓ, வானரரே! என்னைக் காப்பாற்றுவதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் ராமர் தன் மனதைச் செலுத்துவதில்லை என்பது இனிமையானதும், வரவேற்கத்தக்கதும் ஆகும் என்பதால் சந்தேகமில்லை. ஆனால் அவர் துயர நெருப்பால் நிரப்பப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எனக்கு விஷமாக இருக்கிறது.
"ஒரு மனிதன் செல்வம் பெற்றிருந்தாலும் சரி, அல்லது அழுத்தும் துன்பத்தின் பிடியில் இருந்தாலும் சரி, இந்த இரண்டு நிலையிலுமே, அவன் முன்பு செய்த கர்மம்தான் அவனை ஒரு கயிறு போல் அவனைக் கட்டி, பிடித்து இழுக்கிறது.
"ஓ, உயர்ந்த வானரரே! மனிதனால் விதியை வெல்ல முடியாது என்பது நிச்சயம். பல துரதிர்ஷ்டங்களாலும், துயரமான அனுபவங்களாலும் அழுத்தப்பட்டிருக்கும் சுமித்ரையின் புதல்வர் லக்ஷ்மணர், நான் மற்றும் ராமர் ஆகியோரின் உதாரணங்களையே பாரும்.
"கப்பல் உடைந்து போய், நீந்தியே மறுகரைக்குச் செல்ல முயல்பவரைப் போல் ராமர் இருக்கிறார். அவர் வீசப்பட்டிருக்கும் துயரக்கடலை சாதாரணமான வழியில் அவர் எப்படிக் கடப்பார்?
"அரக்கர்களை அழித்து, ராவணனைக் கொன்று, இலங்கையை வென்றபின் அவர் என்னை எப்போது சந்திக்கப் போகிறார்? ஓராண்டு முடிவதற்கு இன்னும் மீதமுள்ள சில நாட்கள்தான் என் உயிர் இருக்கப் போகிறது. எனவே விஷயங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று ராமரிடம் கூறும்.
"ஓ, வானரரே! ராவணன் எனக்குக் கொடுத்துள்ள ஓராண்டு கால அவகாசத்தில், இது பத்தாவது மாதம். இன்னும் இரண்டு மாதங்கள்தான் மீதம் இருக்கின்றன.
"அவனுடைய சகோதரர் விபீஷணர் என்னைத் திரும்பக் கொண்டு விட்டு விடும்படியும், ராமரிடம் ஒப்படைத்து விடும்படியும், அதுதான் சிறந்த வழி என்றும் இனிமையான சொற்களால் அவனுக்கு ஆலோசனை கூறினார். ஆனால் அவன் அதைச் சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
"என்னைத் திரும்பக் கொண்டு விட வேண்டும் என்ற யோசனை ராவணனுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. காலத்தின் பலியாக இருக்கும் அவனை யுத்த காலத்தில் எதிர்கொள்ள மரண தேவன் காத்துக் கொண்டிருக்கிறார்.
"ஓ, வானரரே! விபீஷணருக்கு அனலா என்று ஒரு பெண் இருக்கிறாள். அவருடைய மூத்த மகளான அவள் அவளுடைய தாயாரால் இங்கே அனுப்பப்பட்டாள். அவளே இந்த விவரங்களை என்னிடம் சொன்னாள்.
"ஓ, உயர்ந்த வானரரே! என் கணவர் என்னிடம் வருவார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் என் கணவர் தூய்மையானவர், பல உயர்ந்த பண்புகள் உள்ளவர்.
"ஓ வானரரே! ராமர் முன்முயற்சி, ஆண்மை, சக்தி, கருணை, நன்றி, துணிவு, மேன்மை ஆகியவை ஒன்றிணைந்தவர். தன் சகோதரர் லக்ஷ்மணரின் உதவி கூட இல்லாமல் பதினாலாயிரம் அரக்கர்களைத் தனியாகவே அழித்த அவர் ஒவ்வொரு எதிரியின் மனதிலும் நடுக்கத்தை ஏற்படுத்துவார்.
"அந்த உயர்ந்த மனிதரை எந்தத் துயராலும் அசைக்க முடியாது. இந்திரனின் சக்தியை இந்திராணி அறிந்திருப்பது போல், ராமரின் சக்தியைப் பற்றி நான் முழுமையாக அறிவேன்.
"அரக்கர் சேனை என்ற நீர்ப்பரப்பை வீரம் மிகுந்த ராமர் அவருடைய அம்புகள் என்னும் கதிர்களால் வற்றச் செய்து விடுவார்."
ராமரின் விதியை நினைத்து, கண்களில் நீர் நிரம்பியிருந்த சீதையைப் பார்த்த ஹனுமான் அவரிடம் ஒரு யோசனையைத் தெரிவித்தார்:
"ரகுவம்ச திலகரான ராமர் என்னிடமிருந்து தகவலைக் கேட்டறிந்த உடனேயே குரங்குகளும், கரடிகளும் கொண்ட பெரிய சேனைகளுடன் இங்கே வருவார்.
"ஆனால், உயர்ந்த பெண்மணியே! நீங்கள் உடனடியாக மீட்கப்பட விரும்பினால், நீங்கள் என் தோளின் மீது அமர்ந்து கொள்ளலாம், ராவணனால் உருவாக்கப்பட்ட இந்தத் துயரமான நிலையிலிருந்து உங்களை நான் விரைவிலேயே விடுவிப்பேன்.
"உங்களை என் தோளில் உட்கார வைத்துக் கொண்டு என்னால்கடலை எளிதாகத் தாண்ட முடியும். ராவணனையும் சேர்த்து இலங்கை முழுவதையும் தூக்கிச் செல்வதற்கான பலம் எனக்கு இருக்கிறது.
"ஓ மிதிலை நாட்டு இளவரசியே! யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களை அக்னி இந்திரனிடம் கொண்டு சேர்ப்பது போல், நான் உங்களை எடுத்துச் சென்று பராசர வனத்தில் அமர்ந்திருக்கும் ராமரிடம் கொண்டு சேர்ப்பேன்.
"விதேஹ நாட்டு இளவரசியே! எதிரிகளை அழிப்பதில் மஹாவிஷ்ணுவாகவே விளங்குபவரும், வானுலகில் அரியணையில் அமர்ந்திருக்கும் இந்திரனைப் போன்றவரும், உங்களைச் சந்திக்க மிகவும் விருப்பம் கொண்டிருப்பவரும், தன் ஆசிரமத்தில் இருந்து கொண்டே அதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பவரும், மிகுந்த சக்தி கொண்டவரும், லக்ஷ்மணரால் உதவப்படுபவருமான ராமரை தாமதமின்றி நீங்கள் சந்திக்கலாம்.
"ஓ, மங்களமான பெண்மணியே! என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள். தயங்க வேண்டாம். ரோகிணி சந்திரனோடு இணைந்தது போலும், இந்திராணி இந்திரனுடன் இணைந்தது போலவும், சுவர்ச்சலா தேவி சூரியனுடன் இணைந்தது போலவும் ராமருடன் இணையுங்கள். என் முதுகில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு நீங்கள் வானையும், கடலையும் கடக்கலாம்.
"உங்களை என் முதுகில் சுமந்து கொண்டு வேகமாகச் செல்லும்போது என்னைப் பின் தொடரும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இந்த இலங்கையில் யார் இருக்கிறார்கள்?
"விதேஹ நாட்டு இளவரசியே! நான் கடலைத் தாண்டி இந்தக் கரைக்கு வந்தது போல் உங்களை என் முதுகில் தூக்கிக் கொண்டு என்னால் சிரமமின்றி வானில் எழும்ப முடியும் என்பதை உங்களால் காண முடியும்."
ஹனுமானின் இந்த அற்புதமான வார்த்தைகளைக் கேட்ட சீதா மிகவும் மழிழ்ச்சி அடைந்து உடல் முழுவதும் புல்லரிப்பை அனுபவித்தார். அவர் இப்போது ஹனுமானிடம் வேறு விதமாகப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார்:
"ஓ ஹனுமான், வானர சேனைகளின் தளபதியே! இந்த நீண்ட தூரத்துக்கு நீ என்னைச் சுமந்து செல்ல விரும்புகிறாய். இதை உன் குரங்கு இயல்பின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன்.
"ஓ, உயர்ந்த வானரே! சிறிய உடலைக் கொண்டிருக்கும் உன்னால் என்னை ராமர் இருக்கும் இடத்துக்கு எப்படித் தூக்கிச் செல்ல முடியும்?"
வாயுபுத்திரரும், எல்லையற்ற சக்திகளின் உறைவிடமுமான ஹனுமான் சீதை தன்னைக் குறைத்து எடை போட்டதைக் கேட்டு இவ்வாறு நினைத்தார்:
'அழகிய கண்களைக் கொண்ட விதேஹ நாட்டு இளவரசி என்னுடைய இயல்பான சக்தியையும் திறமையையும் புரிந்து கொள்ளவில்லை. எனவே, என் விருப்பப்படி நான் எடுத்துக் கொள்ளக் கூடிய பல உருவங்களில் பொருத்தமான உருவத்தை நான் அவருக்குக் காட்டப் போகிறேன்.'
இவ்வாறு மனதில்முடிவு செய்த, கோபம், காமம் போன்ற ஆறு எதிரிகளை வெற்றி கொண்ட உயர்ந்த வானரரான ஹனுமான், அவருடைய பிறப்பின் மூலம் அவருக்கு சாத்தியமான வடிவங்களில் ஒன்றை விதேஹ நாட்டு இளவரசிக்குக் காட்ட முடிவு செய்தார்.
மிகவும் அறிவுள்ளவரும், உயர்ந்தவருமான அந்த வானரர் அந்த மரத்திலிருந்து சிறிது தூரம் தாவிச் சென்று, தன்னுடைய சக்தியின் நேரடியான அனுபவத்தை சீதைக்குக் கொடுப்பதற்காகத் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.
அந்த உயர்ந்த வானரர் இப்போது எரியும் தீயைப் போன்ற சக்தியுடனும், மேரு மலை அல்லது மந்தர மலை போல் பெரிதான உருவத்துடனும் சீதையின் முன்பு நின்றார்.
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சக்தி உள்ளவரும், முகம் சிவந்தவரும், வஜ்ராயுதத்தைப் போன்று தோற்றமளிக்கும் நகங்களும், பற்களும் கொண்டவரும், மலையைப் போன்ற பெரிய தோற்றம் கொண்டவருமான அந்த வானரர் சீதையிடம் இவ்வாறு கூறினார்:
"இந்த இலங்கை நகரம் முழுவதையும், அதில் உள்ள மலைகள், காடுகள், மாளிகைகள், சுவர்கள், கோபுரங்கள், அதன் எஜமானரையும் கூடச் சேர்த்துத் தூக்கிச் செல்வதற்கான பெரிய சக்தி எனக்கு இருக்கிறது.
"விதேஹ நாட்டு இளவரசியே!ஆகவே என் சக்தியைப் பற்றி எந்த ஐயமும் இன்றி நம்புங்கள். நீங்கள் விரைவிலேயே ராமர் மற்றும் லக்ஷ்மணரை எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுவியுங்கள்."
மலைக்குப் போட்டியாக அமைந்த அளவுக்கு இருந்த தோற்றத்தில் வாயு குமாரரான ஹனுமானைப் பார்த்த தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஜனக புத்திரி சீதை இவ்வாறு கூறினார்:
"ஓ உயர்ந்த வானரத் தலைவரே! உன் இயல்பான தன்மைகள் மற்றும் சக்தியையும், காற்றைப் போன்ற உன் வேகத்தையும், நெருப்பைப் போன்ற பிரகாசத்தையும் நீ வெளிக் காட்டியதை நான் இப்போது பார்த்தேன்.
"ஓ உயர்ந்த வானரரே! நினைத்துப் பார்க்க முடியாத இந்த தூரத்தைக் கடந்து இந்த இலங்கை நகரத்தை அடைவது பற்றி வேறு எவரால் கற்பனை செய்து பார்க்க முடியும்?
"என்னைச் சுமந்து கொண்டு வேகமாகச் செல்வதற்கான உன் சக்தி பற்றியும், வல்லமை பற்றியும் நான் இப்போது நன்கு புரிந்து கொண்டேன். ஆனால் நாம் ராமரின் நோக்கங்களையும், அவற்றை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் நாம் கருத்தில் கொண்டு, அதன் பிறகு ஒரு விரைவான முடிவுக்கு வர வேண்டும்.
"ஓ, உயர்ந்த வானரரே! என்னுடைய இப்போதைய நிலையில் என்னால் உன்னுடன் வர இயலாது. உன் காற்றுக்கு இணையான வேகத்தில் நான் மூர்ச்சை அடைந்து விடுவேன்.
"நீ கடலுக்கு மேலே அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கும்போது நான் பயத்தில் உன் முதுகிலிருந்து விழுந்து விட மாட்டேனா? திமிங்கிலங்கள், முதலைகள், பல வகை மீன்கள் ஆகியவை நிறைந்த கடலில் விழுந்து நான் உடனே மரணமடைந்து இந்த உயிர்களுக்கு நான் உணவாகி விடுவேன்.
"ஓ, எதிரிகளை அழிப்பவரே! இன்னொரு காரணத்தினாலும் நான் உன்னுடன் வர முடியாது. என்னைக் காப்பாற்றும் முயற்சியில் நீயே நிச்சயம் ஆபத்துக்குள்ளாவாய்.
"உன்னுடன் நான் இந்தச் சிறையிலிருந்து தப்பி விட்டேன் என்பதை அறிந்ததும் ராவணன் நம்மைத் தேட அவனுடைய சக்தி வாய்ந்த தீய அசுர சேனையை அனுப்புவான்.
"வீரரே! சூலங்கள், இரும்பு உலக்கைகள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய அந்தத் துணிவு மிக்க போர் வீரர்கள் உன்னைச் சூழ்ந்து கொள்வார்கள். என்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையின் சுமையைத் தங்கியிருக்கும் நீ அதன் காரணமாக ஆபத்துக்குள்ளாவாய்.
"அரக்கர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் அனைவரிடமும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால் நீ தனி ஆளாக, ஆயுதம் ஏதுமின்றி இருக்கிறாய் . உன்னால் எப்படி வானில் இருந்தபடி சண்டையிட்டுக் கொண்டே என்னைக் காப்பாற்ற முடியும்?
"ஓ உயர்ந்த வானரரே! எண்ணிக்கையில் மிக அதிகமாகவும், அதிக பலம் கொண்டவர்களாகவும் உள்ள இந்த அரக்கர்கள் போரில் உன்னைத் தோற்கடிக்கக் கூடும்.
"அப்படி நடக்கா விட்டாலும், நீ அவர்களுடன் சண்டையிடும்போது, நான் கீழே விழக் கூடும். அப்படி விழுந்தால், இந்தத் தீய மனம் கொண்ட அரக்கர்கள் என்னை உடனே தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
"அவர்கள் என்னை உன் கைகளிலிருந்து பிடுங்கிக் கொள்ளலாம், அல்லது என்னைக் கொன்று விடலாம். ஒரு போரில் வெற்றியோ, தோல்வியோ முன் கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதது என்பது எல்லோருடைய அனுபவமும் ஆகும்.
"அரக்கர்களால் .அவமானப்படுத்தப்பட்டு, நானே என் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.அவ்வாறு நடந்தால், ஓ, வானரரே, உன் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்து விடும்.
"நீ இந்த அரக்கர்கள் அனைவரையும் அழிக்கும் வல்லமை பெற்றவன் என்பது உண்மைதான். ஆனால், இந்த எல்லா அரக்கர்களும் உன் ஒருவனாலேயே கொல்லப்பட்டால், ராமரின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும். (அவர்களைக் கொன்ற பெருமை ராமரைச் சேராது, உன்னைத்தான் சேரும் என்பதால்.)
"அரக்கர்கள் என்னை மீண்டும் பிடித்து விட்டால், அவர்கள் என்னை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் அடைத்து வைப்பார்கள். ராமராலும், லக்ஷ்மணராலும் கூட அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் போகலாம். இவ்வாறு நிகழ்ந்தால் கூட உன் முயற்சிகள் வீணானவையாக ஆகி விடும்.
"எனவே உன்னுடன் ராமரும் இங்கே வந்தால்தான் சிறப்பாக இருக்கும்.
"ஓ, வீரரே! உயர்ந்தவரான ராமருக்கும், அவருடைய சகோதரருக்கும், உனக்கும், நான் ஒரு வாழ்க்கைப் போராட்டமாக ஆகி விட்டேன்.
"தங்கள் நோக்கத்தை அடைய வேண்டும் என்ற விரக்தியில் ராமரும் லக்ஷ்மணரும் சோகத்தீயால் எரிக்கப் படுவார்கள். பிறகு எல்லா வானரர்களும், கரடிகளும் கூடத் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும்.
"ஓ, உயர்ந்த வானரரே! கணவரின் மீது பக்தி கொண்டிருப்பதையே மிக உயர்ந்த குணமாக நினைக்கும் நான் இன்னொருவர் என் உடலைத் தொடுவதற்கு சம்மதிக்க முடியாது.
"அப்படியானால் ராவணன் என் உடலைத் தொட்டது எப்படி என்று கேட்கலாம். அது, கற்புடைய பெண்ணான நான் சுதந்திரமோ, பாதுகாப்போ இல்லாமால் இருந்த போது, நான் முறியடிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டபோது நிகழ்ந்தது. அப்போது நான் என்ன செய்திருக்க முடியும்?
"ராமர் ராவணனை அவன் உறவினர்கள் அனைவருடனும் அழித்து, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால் அது அவருக்குப் பொருத்தமான ஒரு சாதனையாக இருக்கும்.
"உயர்ந்தவரான அவருடைய போர்த்திறமை பற்றியும், எதிரிகளை அழிக்கக் கூடிய அவருடைய ஆற்றலைப் பற்றியும் நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மட்டும் இல்லை. அதை நான் செயலிலும் பார்த்திருக்கிறேன். தேவர்கள், கந்தர்வர்கள், பன்னகர்கள் அல்லது அரக்கர்களின் எவருமே ராமருக்குச் சமமாக மாட்டார்கள்.
"ராமரின் பாராக்கிரமத்தை உணர்ந்தவர்கள் யார்தான் அவருடன் மோதுவார்கள் - தன் அற்புதமான வில்லைப் பெற்றிருக்கும் ராமருடன், இந்திரனுக்கு நிகரான பலத்தையும் தைரியத்தையும் கொண்டிருக்கும் ராமருடன், லக்ஷ்மணரின் துணையைப் பெற்றிருக்கும் ராமருடன், போர்க்களத்தில் காற்றினால் வீரியம் அதிகரிக்கப்பட்ட தீயைப் போல் செயல்படும் ராமருடன்?
"ஓ, வானரர்கள் தலைவரே! போரில் ராமரை யாரால் எதிர்கொள்ள முடியும் - வெட்டவெளியில் இருக்கும் யானையைப் போன்ற ராமரை, போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவராகச் செயல் புரியும் ராமரை, லக்ஷ்மணரின் பக்கத்துணை உள்ள ராமரை, பிரளய கால சூரியனைப் போல் தன் அம்புகள் என்னும் கதிர்களை வீசிக்கொண்டு போர்க்களத்தில் அசைக்க முடியாதவராக நிற்கக் கூடிய ராமரை?
"எனவே, ஓ, உயர்ந்த வானரரே, ராமரை லக்ஷ்மணருடன், உங்கள் வானரச் சேனை புடை சூழ இந்த இடத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய். இத்தனை நாட்களாகத் திரும்பத் திரும்ப ராமரைப் பற்றி நினைத்து நினைத்துத் துக்கத்தில் மூழ்கியிருக்கும் என்னை மீட்க மனம் வை."
அனுமனின் விஸ்வரூப தரிசனம் மற்றும் சீதா தேவியின் விளக்கமும் நன்றாக சொல்லப்பட்டுள்ளது. நன்றி
ReplyDeleteதொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றி.
Delete