Saturday, December 29, 2018

27. 24ஆவது சர்க்கம் - அரக்கிகள் சீதையை மிரட்டுதல்

பிறகு கொடூரமான உருவமும், கொடிய குணமும் கொண்ட சில அரக்கிகள் சீதையின் பக்கத்தில் வந்து நின்று அவரை அச்சுறுத்தும் விதத்தில் பேசத் துவங்கினர்.

"ஓ, சீதா! மென்மையான படுக்கை விரிப்புகளும், அருமையான இருக்கைகள் போன்ற வசதிகளும் கொண்ட ராவணனின் அந்தப்புரத்தில் வந்து இருக்க நீ ஏன் விரும்பவில்லை? 

"ஒரு மானுடப் பெண் என்பதால் ராமனின் மனைவியாக நீ இருப்பதுதான் பொருத்தம் என்று நினைக்கிறாய். ஆனால் அது நடக்கப் போவதில்லை. உன் மனதை அவனிடமிருந்து விலக்கிக் கொள்.

"ராவணனைக் கணவனாக ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை அனுபவி. ராவணன் மூவுலகுக்கும் வேந்தன். அனுபவிக்கத்தக்க பொருள்களுக்கெல்லாம் எஜமானன்.

"குறைகள் ஏதும் இல்லாத மானிடப் பெண்ணான நீ ராஜ்யத்தை விட்டு விட்டு ஒடிய, நம்பிக்கைகள் சிதைந்த, துயரில் ஆழ்ந்திருக்கும் மனிதனான ராமனை இன்னும் ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"

அரக்கிகள் பேச்சைக் கேட்டு தாமரை இதழைப் போன்ற கண்களை உடைய சீதை கண்ணீருடன் கூறினார்:

"நீங்கள் எல்லோரும் சேர்ந்து கூறும் பாவம் நிறைந்த, வெறுப்புக்குரிய வார்த்தைகள் என் மனதுக்கு உகந்ததாக இல்லை. ஒரு மானுடப் பெண் ஒரு அரக்கனின் மனைவியாக இருக்க முடியாது. வேண்டுமானால், என்னைத் தின்று விடுங்கள். ஆனால் உங்கள் யோசனையை நான் கேட்கப் போவதில்லை.

"ராமர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, கஷ்டமான நிலையில் இருந்தாலும், அவருக்கு விசுவாசமாக இருக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். சுவர்ச்சா தேவி எப்போதும் சூரியனுடன் இணைந்திருப்பது போல், நான் ராமருடன் அன்பு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறேன்.

"சசிதேவி இந்திரனுடனும், ரோகிணி சந்திரனுடனும், லோபாமுத்திரை அகஸ்தியருடனும், சுகன்யா ச்யவனருடனும், சாவித்திரி சத்தியவானுடனும், ஸ்ரீமதிதேவி கபிலருடனும், மதயந்தி சுதாஸரின் மகன் கல்மஷபாதருடனும், கேசினி சாகரருடனும், அரசர் பீமரின் மகள் தமயந்தி அரசன் நளனுடனும் இருப்பது போல், இக்ஷ்வாகு குலத்தின் பெருமையாக விளங்கும் என் கணவரான ராமரை நான் எப்போதும் விடமாட்டேன்."

ராவணனால் நியமிக்கப்பட்ட அரக்கிகள் சீதையின் உறுதியான பதிலினால் கோபமடைந்து அவளை அச்சுறுத்தும் வகையில் பேசத் தொடங்கினர்.

சிம்சுபா மரத்தின் மீது அமைதியாக அமர்ந்திருந்த ஹனுமானால் அங்கிருந்து சீதையையும் அவரை மிரட்டும் அரக்கிகளையும் காண முடிந்தது.

பயந்திருந்த சீதையைப் பார்த்துக் கோபமுற்றிருந்த அரக்கிகள், வெளியே துருத்திக் கொண்டிருந்த தங்கள் காய்ந்த உதடுகளைக் கடித்தபடி பேசினார். கையில் கோடரியை வைத்துக்கொண்டு உரத்த குரலில் "இந்தப்  பெண் ராவணனைக் கணவனாகப் பெறும் அருகதையற்றவள்" என்றனர்.

அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட அழகிய முகம் கொண்ட சீதை, கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சிம்சுபா மரத்துக்கு அருகில் சென்றார்.

அரக்கிகளால் சூழப்பட்ட, அகன்ற கண்களுடைய சீதை சோகத்தால் பீடிக்கப்பட்டவராக சிம்சுபா மரத்தின் அடியில் போய் நின்றார். 

வாடிய முகத்துடனும், அழுக்கடைந்த ஆடைகளுடனும் இருந்த சீதையைச் சூழ்ந்து கொண்டு அந்த அரக்கிகள் அவரை மேலும் பயமுறுத்தத் தொடங்கினர்.

பெருத்த வயிறும், அச்சுறுத்தும் கண்களும், அருவருப்பான தோற்றமும் கொண்ட வினதா என்ற அரக்கி கோபத்துடன் சீதையிடம் பேசினாள்:

"ஓ, அழகான சீதையே! நீ இதுவரை உன் கணவரிடம் உனக்குள்ள விசுவாசத்தை வெளிக்காட்டி விட்டாய். அதிகமாக வெளிக்காட்டுவது துயரைத்தான் விளைவிக்கும்.

"மிதிலை நாட்டு இளவரசியே! ஒரு மானிடப் பெண்ணுக்கு எது கடமையோ அதை நீ இயன்ற அளவுக்குச் செய்து விட்டாய் என்பதில் எனக்குத் திருப்திதான். நீ மகிழ்ச்சியாக இரு. உன் நலனை நாடுபவளான நான் சொல்வதைக் கேள்.

"அரக்கர்களின் அரசனும், அழகிய தோற்றம் கொண்டவனும், துணிவுள்ளவனும், அழகில் இந்திரனுடன் போட்டி போடுபவனும், எல்லோரிடமும் தாராளமாக இருப்பவனும், மற்றவர்களுக்கு எது நன்மையோ அதையே பேசுபவனுமான ராவணனை நீ உன் கணவனாக ஏற்றுக் கொள்.

"ஏதும் செய்ய முடியாத அந்த ராமனைக் கைவிட்டு விட்டு ராவணனை ஏற்றுக் கொள். விதேஹ நாட்டு அழகிய இளவரசியே! இன்று முதல் தேவலோகப் பெண்களைப் போல் நீ வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து கொள். அதன் பிறகு சசிதேவி இந்திரனுடனும், சுவாஹா அக்கினியுடனும் வலம் வருவது போல், நீ இந்த உலகுக்கே அரசியாக வலம் வரலாம்.

"விதேஹ நாட்டு இளவரசியே! ஏதும் செய்ய முடியாதவனும், ஆயுள் சீக்கிரமே முடியப் போகிறவனுமான அந்த ராமனைப் பற்றி நினைப்பதால் உனக்கு என்ன நன்மை? நான் சொல்லும் இந்த வார்த்தைகளை நீ ஏற்காவிட்டால், நாங்கள் எல்லோரும் சேர்ந்து இப்போதே உன்னைத் தின்று விடுவோம்."

அடுத்தபடியாக, தொங்கும் மார்பகங்கள் கொண்ட விகடை என்ற பெண் கோபத்துடன் எழுந்து முஷ்டியை உயர்த்தி, சீதையைப் பார்த்துக் கத்தினாள். 

"ஓ, அறிவில்லாத மிதிலை நாட்டு இளவரசியே! யாராலும் கடக்க முடியாத கடலைக் கடந்து, நீ கொண்டு வரப்பட்டிருக்கிறாய். நீ ராவணனின் வலுவான அந்தப்புரத்தில் வைக்கப்பட்டிருக்கிறாய். போதுமான அளவுக்கு நீ கண்ணீர் விட்டு விட்டாய். இது உனக்கு நல்லதல்ல.

"ஒடுக்கப்பட்டிருப்பது போன்று எப்போதும் காட்சியளிக்கும் நிலையை விட்டு விட்டு, மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக் கொள். ஓ, சீதா! அரக்க அரசனுடன் மகிழ்ச்சியாக இரு.

"பயம் மிகுந்தவளே! பெண்களின் இளமை நிலையானதல்ல என்பது உனக்குத் தெரியும். ஆகவே, உன் இளமைக் காலம் முடிவதற்குள், மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்.

"அழகிய கண்களை உடையவளே! அரக்க அரசனுடன் சேர்ந்து நீ இந்தப் பூந்தோட்டங்களிலும் அழகிய காடுகளிலும் நடக்கலாம். அழகானவளே! ஏழாயிரம் அழகிய பெண்கள் உனக்குப் பணிவிடை செய்யக் காத்திருப்பார்கள்.

"மிதிலை நாட்டு இளவரசியே! நல்ல எண்ணத்துடன் நான் சொன்னதை நீ கேட்காவிட்டால், நான் உன் மார்பைப் பிளந்து உன்னைத் தின்று விடுவேன்."

பிறகு கொடூரமான கண்களை உடைய சண்டோதரி என்னும் அரக்கி தன் சூலத்தை நீட்டியபடி பேச ஆரம்பித்தாள். 

"ராவணனால் கடத்தப்பட்டு, பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகிய சீதையைப் பார்த்ததும், எனக்கு ஒரு பெரிய ஆசை எழுகிறது. இவள் கல்லீரலையும், மண்ணீரலையும், இவள் மார்பையும், இதயத்தையும், இவள் சிறுகுடலையும், தலையையும் கடித்துத் தின்று விட வேண்டும் என்பதுதான் அந்த ஆசை."

இதற்குப் பிறகு பிரகஸை என்ற அரக்கி பேச ஆரம்பித்தாள். 

"நீங்கள் எல்லோரும் ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்? இந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்து விட்டு, அவள் இறந்து விட்டாள் என்று அரசனிடம் சொல்லி விடலாம். அதன் பிறகு நிச்சயமாக அவளைத் தின்று விடும்படி அவர் நமக்கு உத்தரவிடுவார்."

பிறகு, அஜமுகி என்ற அரக்கி பேசினாள். 

"சீக்கிரமே, நாம் அவளைத் துண்டம் துண்டமாக வெட்டி அவள் மாமிசத்தை நமக்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம். நமக்குள் சண்டை வேண்டாம். சீக்கிரமே, போதுமான அளவு மதுவும், அத்துடன் சேர்த்து அருந்த பழச்சாறுகளும், தின்பண்டங்களும் கொண்டு வாருங்கள்."

சூர்ப்பனகை என்ற அரக்கி முன்னே வந்து சொன்னாள். 

"அஜமுகி சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். சீக்கிரமே போய் மனிதர்களின் கவலைகளை நீக்கும் மதுவைக் கொண்டு வாருங்கள். மனித மாமிசத்தைத் தின்று, மது அருந்திய பின் நாம் கூட்டமாக நடனம் ஆடலாம்."

அரக்கிகளால் இவ்வாறு பயமுறுத்தப்பட்ட தேவதை போன்ற சீதை நம்பிக்கை இழந்து அழ ஆரம்பித்தார்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

":  .









No comments:

Post a Comment