Tuesday, February 27, 2018

23. இருபதாவது சர்க்கம் - தன்னை ஏற்றுக் கொள்ளும்படி ராவணன் வற்புறுத்தல்

துயரினாலும், பயத்தினாலும் அழுத்தப்பட்டிருந்த, தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த கற்புக்கரசி சீதையிடம் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தும் வகையில் ராவணன் பேசத் தொடங்கினான்:

"அழகிய பெண்ணே! என்னைப் பார்த்ததுமே பயந்து போய், என் பார்வையில் படக் கூடாது என்பதற்காக உன் மார்பையும் வயிற்றையும் நீ மூடிக் கொள்வதை கவனித்தேன்.

"அழகிய கண்கள் படைத்தவளே! எல்லா அவயவங்களிலும் அழகு நிரம்பப் பெற்றவளே! உலகம் முழுவதையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! நான் உன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறேன். என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்.

"சீதா! வெவ்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்த மனிதர்களோ, ராட்சஸர்களோ வேறு எவருமோ இங்கில்லை. நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! மற்றவர்களுக்குச் சொந்தமான பெண்களைக் கடத்துவதும் அவர்களைக் களங்கப்படுத்துவதும் அரக்கர்கள் வழக்கமாகச் செய்யக் கூடியதுதான். இது எங்கள் பழக்கம்தான் என்றாலும், மன்மதன் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தாலும், நீ என்னை ஏற்றுக் கொண்டாலொழிய நான் உன்னைத் தொடக் கூட மாட்டேன்.

"பெண்ணே! அதனால் நீ பயப்பட வேண்டியதில்லை. அழகானவளே! என்னை நம்பு. என் மீது உண்மையான அன்பு கொள். வருத்தப்பட்டுக் கொண்டே காலத்தை வீணாக்காதே.

"சிடுக்கான தலைமுடியுடன், அழுக்கான ஆடை அணிந்து, தரையில் படுத்துக் கொண்டு, பட்டினி கிடந்து உன்னை வருத்திக் கொள்வது உனக்கு அழகல்ல.

"மிதிலை நாட்டு இளவரசியே! என்னை ஏற்றுக் கொள். பல்வேறு மாலைகளை அணிந்து கொள். வாசனைப் பொருட்களைப் பயன்படுத்து. உயர்தரமான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து கொள், சிறந்த பானங்களை அருந்து. அருமையான படுக்கைகளையும், இருக்கைகளையும் அனுபவி. பாடல்கள், நாட்டியம், இசைக்கருவிகள் ஆகியவற்றை ரசித்து அனுபவி.

"நிலவு போன்ற முகமும், அழகிய அங்கங்களும் கொண்டவளே! உன் உடலின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் என் கண்கள் அங்கேயே நிலைத்து விடுகின்றன. உன் சோக சிந்தனையை விட்டு விட்டு என் மனைவி ஆகி விடு. என்னுடைய அந்தப்புரத்தில் உள்ள உயர்ந்த பெண்கள் அனைவருக்கும் நீ அரசி ஆகி விடுவாய்.

"பயந்த சுபாவம் கொண்டவளே! எல்லா உலகங்களிலிருந்தும் நான் கொண்டு வந்திருக்கும் எல்லா விலையுயர்ந்த பொருட்களும் உனக்குத்தான். என் சாம்ராஜ்யமும் நானும் கூட உனக்குச் சொந்தமாகி விடுவோம்.

"உலகம் முழுவதையும் ஈர்க்கும் அழகு படைத்தவளே! நான் எல்லா உலகங்களையும் வென்று அவற்றை உன் தந்தை ஜனகருக்கு அர்ப்பணிப்பேன். என் அருகில் நிற்கும் அளவுக்கு பலம் படைத்த ஒருவர் கூட இந்த உலகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

"போர்க்களத்தில் யாராலும் எதிர்த்து நிற்க முடியாத தன்னிகரற்ற என் பராக்கிரமத்தை நினைத்துப் பார். தேவர்களும் அசுரர்களும் தங்கள் படைகளுடன் என்னைப் போரில் எதிர்கொள்ள முடியாமல், பலமுறை என்னிடம் தோற்று, தங்கள் கொடிகள் சாய்க்கப்பட்டு, போர்க்களத்திலிருந்து ஓடிப் போயிருக்கிறார்கள்.

"இப்போதே என்னை ஏற்றுக் கொள். மிகச் சிறந்த ஆபரணங்களும், வேறு பல பரிசுகளும் உனக்குக் கிடைக்கும். உன் உடலில் தவழும் ஆபரணங்களால் உன் இயற்கையான அழகு பன்மடங்கு அதிகரிப்பதை என் கண்கள் அவை திருப்தி அடையும் வரை கண்டு மகிழட்டும்.

"அழகு முகத்தவளே! சாதுவானவளே! நன்றாக அலங்கரித்துக் கொள். நல்ல உணவையும், பானங்களையும் அருந்து. உனக்குப் பிடித்தவர்களுக்கு நிலங்களையும், பொருட்களையும் வாரி வழங்கு.

"என் நல்ல நோக்கத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியாக இரு. உனக்கு என்ன வேண்டும் என்று ஆணையிடு. உன் உறவினர்கள் உன் மூலம் மகிழ்ச்சியடைந்து, என் மாட்சிமையைப் புரிந்து கொள்ளட்டும்.

"ஒளி பொருந்தியவளே! என் பெருமையையும், செல்வத்தையும், புகழையும் பார். அழகு மிகுந்தவளே! மரவுரி உடுத்திக் கொண்டிருக்கும் ராமனை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?

"ராமனின் வெற்றிகள், செல்வங்கள் ஆகியவை பழங்கதையாகி விட்டன. அவன் காட்டில் திரிந்து கொண்டு விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது.

"விதேஹ நாட்டு இளவரசியே! மழைக்காலத்தில் ஆகாயம் மேகங்களால் மூடப்பட்டு அவற்றுக்குக் கீழே கொக்குகள் பறந்து கொண்டிருக்கும்போது ஆகாயம் கண்ணுக்குப் புலப்படாது. அதுபோல் ராமனால் இனி உன்னைக் காணவே முடியாது. இந்திரன் கையில் மாட்டிக் கொண்ட தன் மனைவியை ஹிரண்யகசிபுவால் எப்படித் திரும்பப் பெற முடியவில்லையோ, அது போல் ராமனாலும் உன்னை என்னிடமிருந்து மீட்க முடியாது.

"பயந்த சுபாவம் கொண்டவளே! மனதைக் கவரும் புன்னகையும், அழகிய கண்களும் பற்களும் உடையவளே! எவரையும் கவர்ந்திழுக்கும் அழகு படைத்தவளே! கருடன் பாம்பைக் கொத்திக் கொண்டு போவது போல் நீ என் மனதைக் கொத்திக் கொண்டு போய் விட்டாய்.

"நீ அழுக்கான ஆடை அணிந்திருந்தாலும், அலங்காரம் ஏதும் இல்லாமல் இருந்தாலும், குச்சி போல் மெலிந்திருந்தாலும், உன்னைப் பார்த்த பிறகு, எனக்கு என் மற்ற எல்லா மனைவிகளிடமும் இருந்த ஆசை போய் விட்டது.

"என் அந்தப்புரத்தில் எல்லா விதத்திலும் மேன்மையான பல பெண்கள் இருக்கிறார்கள். ஜனகரின் மகளே! அவர்கள் மத்தியில் நீ ஒரு ராணியாக இருக்கலாம்.

"அழகிய கூந்தலை உடையவளே! என் மனைவிகள் மூவுலகிலும் சிறந்த அழகிகள் என்று புகழ் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும், மகாலஷ்மிக்கு அப்சரஸ்கள் சேவை செய்வது போல், உனக்குச் சேவை செய்வார்கள்.

"அழகிய புருவமும், அழகிய உருவமும் கொண்டவளே! என்னை ஏற்றுக் கொண்டு, குபேரனிடம் இருக்கும் எல்லாச் செல்வங்களையும், நகைகளையும், நிலங்களையும் ஏற்றுக் கொள்.

"பெண்ணே! அதிகாரத்திலோ, புகழிலோ, செல்வத்திலோ ராமன் எனக்கு இணையாக மாட்டான். விரதங்களை அனுஷ்டிப்பதிலோ, பலத்திலோ, வீரத்திலோ கூட அவன் எனக்கு இணையாக மாட்டான்.

"உயர்குலப் பெண்ணே! உனக்கு வேண்டிய அளவுக்கு நிலங்களையும், நகைகளையும் நான் கொடுக்கிறேன். நீ விரும்பியது எதையும் அனுபவிக்கலாம். என்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக இருக்கலாம். உன்னுடைய உறவினர்கள் கூட அவர்கள் விரும்பும் எதையும் அனுபவிக்கலாம்.

"பயந்த சுபாவம் உடையவளே! உடல் முழுவதும் பவளங்கள் பதித்த தங்க நகைகளை அணிந்து, கடற்கரையில் உள்ள மரங்கள் அடர்ந்த சோலையில், வண்டுகளின் ரீங்காரத்துடன் கூடிய பூத்துக் குலுங்கும் மரங்களின் அருகில் இருந்தபடி என்னுடன் சேர்ந்து நீ வாழ்க்கையை அனுபவிக்கலாம்."

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment