Monday, November 20, 2017

22. பத்தொன்பதாவது சர்க்கம் - சீதையின் தவக்கோலம்

இளமையும் அழகும் பொருந்திய ராவணன் உடல் முழுவதும்  ஆபரணங்களை  அணிந்து நடந்து வருவதைத் தொலைவிலிருந்து பார்த்த சீதை, பெருங்காற்றில் ஆடும் வாழைமரத்தைப் போல் நடுங்கினார்.

வயிற்றையும் மார்பையும் தன்  கைகளாலும், கால்களாலும் மறைத்தபடி குத்திட்டு அமர்ந்திருந்த சீதையைப் பத்து தலைகள் கொண்ட அழகிய ராவணன் பார்த்தான்.

அரக்கிகளால் சூழப்பட்டிருந்த சீதை துயரத்தால் சோர்ந்து போய், கண்ணீருடன் தரையில் அமர்ந்திருந்தார். அவரது தோற்றம் மோதி உடைந்த கப்பலையும், கீழே சாய்ந்து விட்ட மரத்தையும் ஒத்திருந்தது..கடுமையான விரதங்களை மேற்கொண்டிருந்த அவர் பல்வகை ஆபரணங்களை அணியத் தகுந்தவராயினும், உடலில் எந்த ஒரு ஆபரணமும் இல்லாமல் இருந்தார். அவர் மீது படிந்திருந்த தூசி மட்டும்தான் அவருக்கு ஒரே ஆபரணமாகத் தோற்றமளித்தது.

அந்த நிலையில், சேறு படிந்த தாமரைத்தண்டு ஒரே நேரத்தில்  (தன இயல்பினால்) அழகாகவும்,  (சேறு படித்ததால்) அழுக்காகவும்  தோன்றுவது போல் அவர் காணப்பட்டார்.

சீதை, தன் மனதளவில், திடசித்தம் என்ற குதிரை பூட்டப்பட்ட தேரில் ஏறி, எல்லாம் அறிந்தவரும், சக்தி வாய்ந்தவருமான ராமனை நோக்கிப்  பயணம் செய்து  கொண்டிருப்பது  போல் தோற்றமளித்தார்.

உடல் தொய்வடைந்து, அழுது கொண்டிருந்த சீதை துயரில் மூழ்கி இருப்பது மட்டுமே தன் பணி  என்பது போல் இருந்தார். ராமரின் நினைவிலேயே எப்போதும் இருந்த அந்த உயர்ந்த பெண்மணி தன் துயரின் எல்லையை இன்னும் கண்டறியவில்லை.

பாம்புகளின் அரசனான நாகராஜன்  மந்திரத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு அழுத்தப்பட்டது போலவும்,  ரோகிணி நட்சத்திரம் வால் நட்சத்திரத்தால் தாக்கப்பட்டது போலவும் இருந்தார் அவர்.

ஒரு சிறந்த  குடும்பத்தில் பிறந்து, இன்னொரு சிறந்த குடும்பத்தில் திருமணம் மூலம் இணைந்த சீதை  இப்போது ஒரு எளிய, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் போல் காணப்பட்டார்.

அவதூறுகளால்  களங்கப்படுத்தப்பட்ட புகழ் போலவும், சிதைக்கப்பட்ட நம்பிக்கை போலவும், தேய்ந்து போன அறிவு போலவும், இடிக்கப்பட்ட வீடு போலவும், மீறப்பட்ட ஆணை போலவும், தீக்கிரையான ஊர் போலவும், சரியான நேரத்தில் செய்யப்படாத வழிபாடு போலவும், வெள்ளம் பாய்ந்த தாமரைக் குளம் போலவும், படைத்தலைவன் இல்லாத சேனை போலவும், மங்கி விட்ட விளக்கு போலவும், வற்றிப்போன நதி போலவும்,  களங்கப்படுத்தப்பட்ட புனிதமான இடம் போலவும்,  அணையும் தருவாயில் இருந்த ஒளி போலவும்,  சந்திர கிரகணம் ஏற்பட்ட இரவு போலவும், யானையின் தும்பிக்கையினால் அடிவரை கலக்கப்பட்டு தன் மலர்களை இழந்து, அங்கிருந்த பறவைகளும் விரட்டப்பட்ட ஒரு ஏரி போலவும் இருந்தார் சீதை.

தன் கணவனைப் பிரிந்த சோகத்தால் பீடிக்கப்பட்ட அவர் வற்றிப்போன நதி போல் தோற்றமளித்தார். நீராடாமல் இருந்ததால், அவர் தேய்பிறை போல் மங்கலான தோற்றத்துடன் இருந்தார். உயர்குலப் பிறப்பும் அழகிய தோற்றமும் கொண்டவரான அவர்  அரண்மனையில் வாசிக்க வேண்டியவர்.

மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு சூரியனை நோக்கிச் சாய்ந்திருந்த தாமரைத் தண்டு போல் இருந்தார் அவர். பெண் யானை ஒன்று சிறை பிடிக்கப்பட்டு, அதன் ஜோடியிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டது போன்று இருந்தது அவர் நிலை.

அலங்காரம் ஏதுமின்றி ஒற்றை ஜாடையாக அவர் முதுகுப்புறம்  தொங்கிய அவர் தலைமுடி அழகாகவே இருந்தது. அது அவரை மழைக்  காலத்தின் இறுதியில் பசுமையான இலைகள் கொண்ட மரங்கள் நிறைந்த காட்டைப் போல் தோன்றத் செய்தது.

உண்ணா நோன்பினாலும், துயரினாலும் அவர் உடல் எலும்புக்கூடாக ஆகியிருந்தது. பயம், பசி, துக்கம் இவற்றால் அழுத்தப்பட்டு, எப்போதும் தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்துடனே இருந்த  இருந்த அவர் ராவணனின் அழிவுக்காக  எப்போதுமே ராமபிரானையும், தன்னுடைய இஷ்டதெய்வத்தையும்  பிரார்த்திக்கொண்டே இருப்பதாகத் தோன்றியது.

அழகிய புருவங்களும், நீண்டு விரிந்த கண்களும் கொண்டிருந்த அவர் எப்போதும் அழுதுகொண்டும், பயத்தினால் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும், ராமபிரானை மட்டுமே சார்ந்தும் இருந்தார்.

இந்த நிலையில் இருந்த,  குறை ஏதும் சொல்ல முடியாத மிதிலை நாட்டு இளவரசியைத் தன மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் ராவணன். அந்த ஆசை இறுதியில் அவனுக்கு அழிவைத்தான்  தேடித் தந்தது.No comments:

Post a Comment