Saturday, October 28, 2017

21. பதினெட்டாவது சர்க்கம் - ராவணன் வருகை

ஹனுமான் மரத்தின் மீது அமர்ந்தபடியே அந்த அசோகவனத்தை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது, இரவு முடிந்து விடிவெள்ளி எழுந்தது.

அந்த அதிகாலைப் பொழுதில், வேதங்களையும் அவற்றின் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்களும், யாகங்கள் செய்வதில் வல்லுனர்களுமான அந்தணர்களால் (அரக்கர்களுக்குள் அந்தணர்களும் இருந்தனர்) ஓதப்பட்ட வேத மந்திரங்கள் ஹனுமானின் காதில் விழுந்தன.

அப்போது சக்தி படைத்த, பத்து தலைகள் கொண்ட ராவணன் அதிகாலை ராகங்களில் பாடப்பட்ட துதிகளினால் துயில் எழுப்பப்பட்டான். 

சரியான நேரத்தில் கண் விழித்த ராவணனின் உடலில் இருந்த ஆடைகளும், பூமாலைகளும் கலைந்திருந்தன. 

எழுந்து உட்கார்ந்ததுமே அவன் மனம் சீதையின் பால் சென்றது. சீதையின் மீது அதீதமான காதல் கொண்டிருந்த அவனால் தன்  மனத்தை அடக்க முடியவில்லை,

அரசனுக்கு உரிய எல்லா ஆபரணங்களையும் அணிந்து ஜொலிப்புடன் அரண்மனையிலிருந்து கிளம்பிய ராவணன், தங்கத்தாலும்  முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தெருக்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.

பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்களைக் கொண்டதும், உல்லாசமாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்த பறவைகள் நிறைந்ததும், தாமரை மலர்கள் நிறைந்த குளங்களைக் கொண்டதும், கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்த மான்கள் நிறைந்ததும், பூக்களும், பழங்களும் படர்ந்திருந்த தரையைக் கொண்டதும், பல்வகை மிருகங்களின் சிற்பங்களைக் கொண்டதுமான அசோக வனத்துக்கு அவன் சென்றான். 

இந்திரனைப் பின் தொடர்ந்து தேவலோக, கந்தர்வ லோகக் கன்னிகள் செல்வது போல், ராவணனைப் பின்தொடர்ந்து ஒரு பெண்கள் கூட்டம் போய்க் கொண்டிருந்தது.

சில பெண்கள் தங்கள் கைகளில் சவரிகளையும், சிலர் அலங்காரமான மயிலிறகு விசிறிகளையும், சிலர் தங்க விளக்குகளையும் ஏந்தியபடி வந்தனர். சிலர் நீர் நிறைந்த தங்கப்பானைகளைச் சுமந்தபடி அவனுக்கு முன்னால் நடந்து சென்றனர்.

வேறு சிலர் கம்பளங்களை ஏந்தியபடியும், இன்னும் சிலர் கத்திகளைப்  பின்புறம் சாய்த்தபடி ஏந்திக் கொண்டும் அவனுக்கு முன்னே நடந்து சென்றனர். 

ஒரு புத்திசாலியான பெண் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர்ப் பாத்திரத்தைத் தன் கையில் சுமந்தபடி தனியாக நடந்து வந்தாள்.

தங்கப் பிடி கொண்ட, அன்னம் போன்று வெண்மை நிறத்தில் இருந்த, சந்திரன் போல் மின்னிய ஒரு சம்பிராதயக் குடையைப் பிடித்தபடி இன்னொரு பெண் பின்னால் நடந்து வந்தாள். 

தூக்கத்தினாலும், போதையினாலும் சிவந்த கண்களுடன், ராவணனின் மனைவிகள், மேகத்தைத் தொடர்ந்து செல்லும் மின்னல் கீற்றுகளைப் போல் அவனைப் பின்தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் கழுத்துக்களிலும், கைகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள் தவறான முறையில் அணியப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் மேனிகளில் பூசியிருந்த பூச்சு நிறம் மங்கியிருந்தது. அவர்கள் பின்னல்கள் தளர்ந்து போயிருந்தன. அவர்கள் முகத்தில் வியர்வை முத்துக்கள் காணப்பட்டன.

அவர்களுடைய கலைந்த கூந்தல்களை புதிய மலர்கள் அலங்கரித்தன. போதையாலும், தூக்கத்தாலும் அவர்கள் தள்ளாடியபடி நடந்தனர். 

ராவணன் மீது கொண்ட மரியாதையாலும், அன்பாலும் அவனைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த அவனுடைய அழகிய மனைவிகளின் தோற்றம் இப்படித்தான் இருந்தது.

அந்தப் பெண்களின் கணவனாக இருந்தபோதிலும், சீதையின் மீது கொண்ட மோகத்தினால் அவரைத் தேடித் சென்று கொண்டிருந்தான் சக்தி வாய்ந்த ராவணன். அவன் நடை அவன் பெருமையையும், மிடுக்கையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

நடந்து சென்ற பெண்களின் ஒட்டியாணங்களிலும் கொலுசுகளிலும் கோர்க்கப்பட்டிருந்த மணிகளின் கிண்கிண் ஒலிகள் ஹனுமானின் காதுகளில் விழுந்தன.

ராவணன் சீதை இருக்கும் இடத்துக்கு அருகில் வந்தபோது நறுமணம் கமழும் எண்ணெய்களினால் ஏற்றப்பட்ட விளக்குகளின் ஒளி அவன் மீது விழுந்தது.

அசாத்தியமான பலம் கொண்டவனும், வியக்கத் தக்க செயல்களைச் செய்யும் திறன் படைத்தவனுமான ராவணனின் தோற்றம் காமம், பெருமிதம், தீய எண்ணங்கள் ஆகியவை சேர்ந்த கலவையாக இருந்தது. நீண்டும் வளைந்தும் இருந்த அவன் கண்கள் சிவந்திருந்தன.

மன்மதனைப் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்த ராவணன் புதிதாகச் சலவை செய்யப்பட்ட, பால் போன்று வெண்மையாயிருந்த அங்கவஸ்திரத்தைத் தன் மீது போட்டுக் கொண்டிருந்தான். 

தோள் மீது பாதி தொங்கிக் கொண்டிருந்த அந்த அங்கவஸ்திரத்தை அவன் தன் கையினால் அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

அடர்த்தியான இலைகளும், மலர்களும் நிறைந்த மரத்தின் பின் மறைந்து நின்று கொண்டு ஹனுமான் ராவணனை அருகிலிருந்து கவனமாகப் பார்த்தார்.

அங்கிருந்தபடியே அவர், இளமையும் அழகும் நிறைந்த ராவணனின் மனைவிமார்களைப் பார்த்தார். 

அந்த அழகான பெண்கள் பின்தொடர, ராவணன் அந்த அரண்மனையின் உள்ளிருந்த தோட்டத்துக்குள் நுழைந்தான்.

கூர்மையான காதுகளுடனும், அபூர்வமான பல்வகை ஆபரணங்களை அணிந்தும், அமைதியில்லாத தோற்றத்துடனும் இருந்த விஸ்ரவஸின் புதல்வனான அந்த சக்தி வாய்ந்த அரக்கர் தலைவன், அந்தப் பெண்களுடன் சூழ்ந்திருந்த நிலையில், நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போல் காட்சியளித்தான். 

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட ஒளி எல்லாப் பக்கங்களிலும் வீசிக் கொண்டிருந்ததை ஹனுமான் பார்த்தார்.

"நகரின் மையத்திலிருந்த அரண்மனையில், சற்று முன்பு, அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானே அவன்தான் இவன்!" என்று உறுதி செய்து கொண்ட மகிழ்ச்சியால் துள்ளினார் ஹனுமான்.

சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், ஹனுமானுக்கு ராவணனின் வலிமையையும், கம்பீரத்தையும் கண்டு சற்று பிரமிப்பு ஏற்பட்டது. அவன் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று தன்னை மரத்தின் பின்னால் இன்னும் நன்றாக மறைத்துக் கொண்டார் அவர்.

கொடியிடையும் பரந்த மார்பும் கொண்ட சீதையைப் பார்க்கும் ஆவலில், ராவணன் அவர் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினான்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:

No comments:

Post a Comment