Thursday, September 24, 2015

13. பத்தாவது சர்க்கம் - மண்டோதரியைக் காணுதல்

படிகத்தால் செய்யப்பட்டு, தங்கத்தாலும் தந்தத்தாலும் இழைக்கப்பட்டு, வைரம் மற்றும் பல கற்கள் பதிக்கப்பட்டிருந்த ஒரு கட்டிலை ஹனுமான் பார்த்தார். அதன் மீது போடப்பட்டிருந்த மெத்தைகள், விரிப்புகள், தலையணைகள் ஆகியவற்றிலும் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் அது சொர்க்கலோகத்துக்காக உருவாக்கப்பட்ட கட்டிலைப் போலவே தோன்றியது.

தங்க வேலைப்பாடுகள் மிகுந்து சூரியன் போல் ஜொலித்த நாற்காலி ஒன்றும் அங்கே இருந்தது. ஓய்வெடுக்கத் தேவையான எல்லா வசதிகளும் அதில் அமைக்கப் பட்டிருந்தன. அதன் அருகில் மலர் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்திரன் போல் தோற்றமளித்த ஒரு வெள்ளை நிறக் குடை இருந்தது.

கட்டிலைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் சாமரம் வீசத் தயாராகப் பணிப் பெண்கள் நின்று கொண்டிருந்தனர். பலவகை ஊதுவத்திகளின் மணம் எங்கும் பரவியிருந்தது. கட்டிலின் மீது விலையுயர்ந்த கம்பளங்களும், தோலினால் செய்யப்பட்ட விரிப்புகளும்  விரிக்கப்பட்டிருந்தன. கட்டிலைச் சுற்றிலும் உயர் ரக மலர்களால் செய்யப்பட்ட மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

கட்டிலின் மீது ஆடம்பரமான படுக்கையில் படுத்து ஆழமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்த ராவணனை ஹனுமான் பார்த்தார். அவன் உடல் கார்மேகம் போல் கருத்திருந்தது. அவன் கண்கள் சிவந்திருந்தன. அவன் கைகள் நீளமாக இருந்தன. அவன் அணிந்திருந்த உடையின் ஓரங்கள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தன.

அவன் உடல் முழுவதும் நறுமணம் வீசிய சிவந்த சந்தனக் கலவை தடவப்பட்டிருந்தது. அவன் உடலில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் மேகத்தின் ஊடே ஒளி விடும் மின்னல் கீற்றுக்களைப் போல் ஜொலித்தன. அழகிய தோற்றம் கொண்டிருந்த அவன், தான் விரும்பும் வடிவத்தை எடுத்துக்கொள்ளும் சக்தி படைத்தவன். மரங்களாலும் காடுகளாலும் மூடப்பட்டிருக்கும் மந்தர மலையைப் போல் இருந்தது அவன் தோற்றம்.

அரக்கர்களுக்கு ஊக்கமளிப்பவனாகவும், அரக்கர் குலப் பெண்களால் விரும்பபட்டவனாகவும் இருந்த அந்த ராவணன் இரவில் நடந்த காதல் விளையாட்டுகளால் களைத்துப் போயிருந்தான். போதையூட்டும் பானங்களை அருந்தியிருந்தாலும் அவன் போதையில் இருந்தவனாகத் தோன்றவில்லை.

நாகப்பாம்பு சீறுவதுபோல் மூச்சு விட்டுக் கொண்டிருந்த  ராவணனை நெருங்கிய ஹனுமான், முதலில் பயந்து போனது போல் பின் வாங்கினார். அதன் பிறகு சில படிகள் ஏறி ஒரு மேடை மீது நின்று ராவணனை கவனித்தார். ராவணனின் படுக்கை ஒரு பரந்த ஏரியைப் போலவும், அதன் மீது படுத்திருந்த ராவணன் அந்த ஏரியில் படுத்திருந்தஒரு யானையைப் போலவும் தோற்றமளித்தனர்.

அவனது பலம் பொருந்திய கைகளைப் பார்த்தார் ஹனுமான். அவன் தனது  புஜங்களில் தங்க வளையங்கள் அணிந்திருந்தான். இந்திரனின் கொடிக்கம்பம் போல் தோற்றமளித்த அவன்  பரந்த தோள்களில் ஐராவதத்தின் தந்தம், இந்திரனின் வஜ்ராயுதம், திருமாலின் சக்கரம் ஆகியவை ஏற்படுத்திய வடுக்கள் மிகுந்திருந்தன.

அவன் தோள்கள் வலுவாகவும், அளவாகவும், அழகாகவும் தோற்றமளித்தன. அவன் கைகள் அழகான விரல்களையும், அதிர்ஷ்ட ரேகைகளையும் கொண்டிருந்தன. அவன் கைகளின் முழுத் தோற்றம் இரும்புத் தடியைப் போலவும், யானையின் தந்தத்தைப் போலவும் இருந்தது. இரண்டு ஐந்து தலை நாகங்கள் படுக்கையில் படுத்திருப்பது போல் அவை தோற்றமளித்தன.
அவன் கைகளில் முயல் ரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் நறுமணம் வீசும் உயர் ரக சந்தனக் கலவை பூசப்பட்டிருந்தது. பலம் கொண்ட கைகளைக் கொண்ட பெண்களால் அவன் கைகள் பதமாக அழுத்தப்பட்டிருந்தன. (மசாஜ் செய்யப்பட்டிருந்தன). அந்தக் கைகள் (தங்கள் செயல்களால்) பல யக்ஷர்கள், பன்னகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் மற்றும் தானவர்களைக் கண்ணீர் விட்டு அழச் செய்திருக்கின்றன. மலை போல் தோற்றம் கொண்ட ராவணனின் கைகள் மந்தர மலையின் இரு சிகரங்களைப் போல் விளங்கின

ராவணனின் மூச்சுக் காற்றின் மணம் மா, புன்னாகம் மற்றும் வகுள மலர்களின் நறுமணத்துடன் அவன் உட்கொண்ட உணவுவகைகள், மதுபானங்கள் ஆகியவற்றின் மணமும் சேர்ந்த கலவையாக இருந்தது. அவனுடைய பரந்த முகத்திலிருந்து வெளிப்பட்ட மூச்சுக்காற்று அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது.

முத்துக்களாலும், வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மகுடம் அவன் தலையில் இருந்தது. அவன் காதணிகளின் ஜொலிப்பால் அவன் முகம் பிரகாசமாகக் காணப்பட்டது. முத்து மாலைகளாலும், சிவந்த சந்தனக் கலைவையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவன் மார்பு பரந்தும் உறுதியாகவும் காணப்பட்டது. அவன் மார்பின் மீது போடப்பட்டிருந்த உயர்ந்த ரக வெள்ளைப் பட்டாடை கலைந்திருந்தது. மஞ்சள் நிறப் பட்டாடையை அவன் அணிந்திருந்தான்.

அவன் கண்கள் சிவந்திருந்தன. கருப்பு உளுந்து குவிக்கப்பட்டது போல் இருந்தது அவனுடைய தோற்றம். அவன் மூச்சு நாகத்தின் சீற்றம் போல் இருந்தது. கங்கைக்குள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த யானையைப் போல் அவன் தோற்றமளித்தான்.

நான்கு தங்க விளக்குகள் அவன் தோற்றத்தை எடுத்துக் காட்டின. மின்னல் கீற்றுகளால் ஒளியூட்டப்பட்ட மேகம் போல் அவன் காட்சி அளித்தான். அவனது மனைவிமார்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவன் அவன்.

மேலே விவரிக்கப்பட்டவாறு தோற்றமளித்த அந்த ராட்சத அரசனையும் அவன் கால்மாட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவன் மனைவிகளையும் ஹனுமான் பார்த்தார்.

ஒளி வீசிய காதணிகளையும், வாடாத மலர்களையும் அணிந்திருந்த
பெண்களை ஹனுமான் பார்த்தார். நாட்டியத்தில் தேர்ந்த சில பெண்களும், தாள இசைக்கருவிகளை வாசிக்கும் திறன் பெற்ற சில பெண்களும் அங்கே அமர்ந்திருந்தனர்.

அரிய ஆபரணங்களை அணிந்திருந்த சில பெண்கள் ராவணனின் தோள் மீதும், மடி மீதும் சாய்ந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் தங்கத்தால் செய்யப்பட்ட கங்கணங்களையும், காதுகளில் வைரம், வைடூர்யம் ஆகியவற்றால் செய்யப்பட்ட காதணிகளையும் கண்டார் ஹனுமான்.

விண்மீன்களால் வானம் ஒளியூட்டப்படுவது போல், அந்தப் பெண்கள் அணிந்திருந்த அழகிய காதணிகளாலும், நிலவை ஒத்த அவர்கள் முகங்களாலும் அந்த அறையே ஒளி பெற்று விளங்கியது. ராவணனின் அந்தப்புரப் பெண்கள் அனைவருமே காம விளையாட்டுக்களால் களைப்படைந்து அங்கும் இங்குமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.

நாட்டியம் அறிந்த ஒரு பெண் நாட்டிய முத்திரை பதிப்பது போன்ற தோற்றத்தில் தன் உடலை வைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். வீணையைத் தன் மார்பில் சாய்த்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் ஓடத்தில் சிக்கிக் கொண்ட தாமரைக் கொடியை ஒத்திருந்தது.

இன்னொரு பெண் தனது தாள வாத்தியக் கருவியைக் குழந்தையை அணைப்பது போல் அணைத்தபடிபடுத்திருந்தாள். இன்னொரு கரு விழி மங்கை நீண்ட நாட்கள் கழித்துத் திரும்பிய கணவனை அணைத்துக் கொள்வது போல் ஒரு முரசைத் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தாமரை விழியாள் தனிமையில் காதலனுடன் இருப்பது போல் தன் வீணையை அணைத்தபடி படுத்திருந்தாள்.

தூக்கத்தில் தன் கணவனை அணைத்தபடி படுத்திருப்பதுபோல் மிருதங்கத்தை இறுகத் தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள் பொன் நிறமும், மென்மையான சருமமும், கட்டுடலும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு பெண். மத்தளத்தைப் பக்கவாட்டில் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் ஒரு அழகி. கணவனை ஒரு புறமும் குழந்தையை இன்னொரு புறமும் அணைத்தபடி உறங்குவதுபோல், திண்டிமம்  என்ற இரட்டைத் தாள வாத்தியக் கருவியை இருபுறமும் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி.

தாமரை விழி நங்கை ஒருத்தி ஒரு பெரிய முரசை இறுக அணைத்தபடி மிகுந்த களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தாள். கடம் என்ற தாள வாத்தியக் கருவியைத் தன் மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் தோற்றம் வசந்த காலத்தில் பலவித மலர்களால் கோர்க்கப்பட்டு நீர் தெளிக்கப்பட்ட மாலையைப் போல் இருந்தது. இன்னொரு பெண் தங்கக்குடம் போன்ற தன் மார்பகங்களைத் தன உள்ளங்கைகளால் மூடி மறைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். போதையில் இருந்த அழகிய கண்களையுடைய இன்னொருத்தி தன் பக்கத்தில் படுத்திருந்த பெண்ணை அணைத்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்கள் பலரும் காம வயப்பட்ட நிலையில் தங்கள் காதலர்களை அணைத்துக் கொள்வது போல் இசைக்கருவிகளை மார்போடு அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

இவர்களிடமிருந்தெல்லாம் விலகி அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்றில் படுத்திருந்த ஒரு அழகிய பெண்ணை ஹனுமான் பார்த்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள், ரத்தினங்கள் ஆகியவற்றால் செய்யப்பட அணிகலன்களை அவள் அணிந்திருந்தாள். அவள் அழகு அந்த அரண்மனைக்கே அழகு சேர்ப்பதாக இருந்தது. எல்லோருக்கும் பிரியமானவளான அந்தத் தங்க நிற மங்கை வேறு யாரும் இல்லை, அந்த அரண்மனை அந்தப்புரத்தின் ராணியான மண்டோதரிதான்.

அவள் அழகு, இளமை, மேன்மையான தோற்றம் ஆகியவற்றை வைத்து முதலில் அவளை சீதை என்று எண்ணி வாயுபுத்திரர் பெருமகிழ்ச்சி அடைந்தார். குரங்குகளின் இயல்பைப் பின்பற்றி, தன் வாலை முத்தமிட்டும், கைகளைத் தட்டியும், நடனமாடியும், ஒவ்வொரு தூணாக ஏறிக் குதித்தும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ஹனுமான்.

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:


No comments:

Post a Comment