Monday, June 1, 2020

39. 36 ஆவது சர்க்கம் - அடையாள மோதிரத்தை அளித்தல்

வாயுகுமாரரும் மிகுந்த சக்தியும் திறமையும் கொண்டவருமான ஹனுமான் சீதையின் மனதில் இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக மிகுந்த பணிவுடன் மேலும் சில வார்த்தைகளைக் கூறினார்:

"தாயே! புனிதவதியே! நான் உண்மையிலேயே ராமபிரானின் தூதன்தான். உங்கள் மனதில் இருக்கக் கூடிய இன்னும் சில ஐயங்களைப் போக்குவதற்காக ராமர் என்னிடம் கொடுத்தனுப்பிய அவர் பெயர் பொறித்த அடையாள மோதிரத்தைக் காட்டுகிறேன்.

"உங்கள் நிலை சீக்கிரமே மேன்மையடையும். உங்கள் துன்பம் நிறைந்த நாட்கள் முடிவுக்கு வரப் போகின்றன."

இவ்வாறு கூறி விட்டு அந்த உயர்ந்த வானரர் அந்த மோதிரத்தை சீதையிடம் அளித்தார். ஜனகரின் மகள் அந்த மோதிரத்தை கவனமாகப் பார்த்து விட்டு, தன் கணவரையே பார்த்து விட்டது போல் மகிழ்ச்சி அடைந்தார்.

தன கணவரைப் பற்றிய நம்பகமான நல்ல செய்தி கிடைத்ததில் அந்த நல்ல பெண்மணி சற்றே வெட்கத்துடன் கூடிய மகிழ்ச்சி அடைந்தார். அந்த வானரத் தலைவரைத் தனக்கு நன்மை செய்பவராக ஏற்றுக்கொண்ட சீதை அவரைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

சீதை சொன்னார்:
 "ஓ, சிறந்த வானரரே! உண்மையிலேயே நீங்கள் மிகவும் வீரமுள்ளவர், திறமை வாய்ந்தவர், அறிவுள்ளவர். அதனால்தான் யாருடைய உதவியும் இல்லாமல் அரக்கர்களின் இந்தக் கோட்டைக்குள் உங்களால் நுழைய முடிந்திருக்கிறது.

"அபாயமான சுறாக்களும், மீன்களும் நிறைந்த நூறு யோஜனை அகலமுடைய இந்த சமுத்திரத்தைத் தாண்டியதன் மூலம் நீங்கள் இந்த சமுத்திரத்தை ஒரு கன்றின் குளம்படி அளவே உள்ள சிறு பள்ளமாக மாற்றி விட்டீர்கள்.

" ஓ, உயர்ந்த வானரரே! உங்களை ஒரு சாதாரணக் குரங்காக நான் நினைக்கவில்லை. ஏனெனில் உங்களுக்கு ராவணனிடம் பயம் இல்லை, உங்கள் மனதில் சிறிதும் கலக்கம் இல்லை.

"குரங்குகளின் தலைவரே! நீங்கள் ராமரால் அனுப்பபட்ட தூதுவர் என்பதாலும், அனைவரின்  மனங்களையும், குணங்களையும் அறிந்தவர் என்பதாலும், நீங்கள் நான் பேசுவதற்கு ஏற்ற மனிதர்.

"வெல்ல முடியாத சக்தி படைத்த ராமர், ஒருவரின் தகுதியையும் துணிவையும் சோதிக்காமல் அவரை தூதராக அனுப்ப மாட்டார், அதுவும் என்னிடம்.

"நேர்மையானவரும், உண்மையை நேசிப்பவருமான ராமர் நலமாக இருக்கிறார் என்பது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். சுமித்ரையின் புதல்வரும் அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரிப்பவருமான சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் நலமாக இருக்கிறார் என்பதை அறிந்தும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ராமர் நலமாக இருக்கிறார் என்பது நம்பிக்கை அளிக்கிறது. கோபத்தினால்  கடல் சூழ்ந்த இந்த உலகைப் பிரளய கால நெருப்பு போல் அவர் எரித்து விடுவாரோ என்று நான் அஞ்சினேன்.

"ராமர் லக்ஷ்மணர் இருவருமே தேவர்களைக் கூட தண்டிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்கள். ஆயினும் என் துயரங்களுக்கு முடிவே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

"உயர்ந்தவரான ராமர் மனச் சோர்வு அடையாமல் நிதானமான மனநிலையில் இருக்கிறார் என்றும், தன் விதியை நொந்து கொண்டிருக்காமல் செய்ய வேண்டியவை பற்றித் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் நான் நம்புகிறேன்.

"இளவரசர் ராமர் நடந்தவற்றால் குழம்பி விடாமல் தைரியத்துடனும்,  சமநிலை கொண்ட மனத்துடனும் இருக்கிறார் என்று நம்புகிறேன். இந்தச் சூழ்நிலையில் அவர் ஆண்மை மிகுந்த செயல்களைச் செய்து கொண்டிருக்கறார் என்று நம்புகிறேன்.

"எதிரிகளை வீழ்த்துபவரான அவர் தன் நண்பர்களுக்குப் பரிசுகள் அளிப்பது, அவர்களுடன் இணக்கமாக இருப்பது, எதிரிகளை வெல்ல சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளைப் பயன்படுத்துவது என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறார் என்று நம்புகிறேன்.

"விசுவாசமுள்ள நண்பர் என்று எங்கும் புகழ் பெற்றிருக்கும் ராமரை அவர் நண்பர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அத்தகைய  நண்பர்களையும், துணைவர்களையும் அவர் இனிமையாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் அவர்களால் முறையாக கௌரவிக்கப்படுகிறார் என்றும் நம்புகிறேன்.

"சக்கரவர்த்தித் திருமகனான அவர் இன்னும் தேவர்களின் அருளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும், நம் முயற்சிகளால் அடையப்பட்டவை கூட கடவுளின் அருளினால் கிடைத்தவை என்பதைக் கருத்தில் கொள்கிறார் என்றும் நம்புகிறேன்.

"என்னிடமிருந்து அவர் நீண்ட தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், என் மீது அவருக்கு இருக்கும் அன்பு குறையவில்லை என்று நம்புகிறேன்.

"ஓ, வானரரே! என்னை இந்தத் துன்பமான சூழலிலிருந்து விடுவிக்கச் செய்ய வேண்டிய செயல்கள் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

"மகிழ்ச்சிக்கு மட்டுமே தகுதி உடையவரான, துன்பம் அடையக் கூடாதவரான ராமர் மிகவும் துயரமான இந்த அனுபவங்களால் மனச்சோர்வு அடைய மாட்டார் என்று நம்புகிறேன்.

''கௌசல்யா மற்றும் சுமித்ரா ஆகியோர் நலமாக இருப்பது பற்றிய செய்தி அவருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

"எனக்கு ஏற்பட்டுள்ள துயரம் பற்றிய செய்தி ரகு குல திலகரான ராமரிடம் கோபத்தை ஏற்படுத்தி இருக்குமென்று நினைக்கிறேன். அதன் விளைவாக என் துயரிலிருந்து என்னை மீட்பதற்கான வழிகளில் அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.

"தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் பரதர் என்னை மீட்பதற்கான பணியில் ஈடுபட அவருடைய அமைச்சர்கள் தலைமையில் பெரிய படைகளை அனுப்புவார் என்று நம்புகிறேன்.

"வானரத் தலைவர் சுக்ரீவருடன் தங்கள் பற்கள் மற்றும் நகங்களையே ஆயுதமாகக் கொண்டுள்ள குரங்குகளின் சேனை புடை சூழ ராமர் என் பொருட்டு இங்கு வருவார் என்று நம்புகிறேன்.

"வில் வித்தையில் மிகுந்த அனுபவம் உள்ள சுமித்ரையின் வீரப் புதல்வர் தன் அம்பு மழையால் அரக்கர்களை ஓடச் செய்வார் என்று  நான் நம்புகிறேன்.

"கோபம் கொண்ட ராமரின் சக்தி வாய்ந்த, அச்சமூட்டும் அம்புகளால் ராவணனும் அவன் கூட்டாளிகளும் விரைவிலேயே கொல்லப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

"தங்க நிறம் கொண்ட அவருடைய தாமரை போன்ற முகம் என் பிரிவின் காரணமாக நீர் வற்றிய குளங்களில் உள்ள தாமரைகளைப் போல் இப்போது வாடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

"தர்மத்தில் அவருக்கிருந்த உறுதியின் காரணமாக நாட்டைத் துறந்து விட்டு வந்து, எந்த ஒரு பயமும், வருத்தமும், மனச் சோர்வும்  இல்லாமல் என்னைக் காட்டுக்கு நடத்தியே அழைத்துச் சென்ற அவர் எந்தச் சூழ்நிலையாலும் பாதிக்கப்படாமல் தன் தைரியத்தைக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

"ஓ, தூதுவரே! எனக்கு அவர் மீது இருக்கும் அன்பு காரணமாக, உயர்ந்தவரான என் தந்தையையோ, தாயையோ அல்லது வேறு எவரையுமோ அவருக்குச் சமமாக நான் கருதவில்லை. எனவே அவரைப் பற்றிய செய்தி எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்வரைதான் நான் உயிர் வாழ விரும்புகிறேன்."

மிகவும் அறிவுடையவளான அந்தப் பெண்மணி இவ்வாறு இனிமையான,  பொருள் நிறைந்த வார்த்தைகளை அனுமனிடம் பேசிய பிறகு, ராமரின் பக்தரான அந்த தூதுவர் மேலும் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக  மௌனமாக இருந்தார்.

சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு வீரம் மிகுந்த ஹனுமான் தன்  கைகளைக் கூப்பித் தலைக்கு மேல் உயர்த்தி அவரை வணங்கிய பிறகு கீழ்க்கண்டவாறு கூறினார்:

"நீங்கள் இந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற உண்மை தாமரைக் கண்கள் கொண்ட ராமருக்குத் தெரியாது. அதனால்தான் இந்திரன் வந்து சசிதேவியை அழைத்துப் போவது போல் அவர் வந்து உங்களை அழைத்துச் செல்லவில்லை.

"நான் ராமருக்குத் தகவலைத் தெரிவித்த உடனேயே, அவர் குரங்குகளும், கரடிகளும் கொண்ட பெரிய சேனையுடன் இங்கே வருவார்.

"கடலில் உள்ள நீரின் மட்டத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோமுடியாது என்றாலும், அவர் அதைத் தன் அம்புகளால் செயலற்றுப் போகச் செய்து  விட்டு, கடலைக் கடந்து இலங்கைக்கு வந்து, இந்த இடத்தை அரக்கர்கள் இல்லாத இடமாகச் செய்யப் போகிறார்.

"தன் வழியில் நிற்பவர் யாராக இருந்தாலும், அது மரண தேவதையாக இருந்தாலும், அசுரர்கள் அல்லது தேவர்களாக இருந்தாலும், அவர்களை ராமர் அழிப்பது உறுதி.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டதால், ராமர் சிங்கத்தால் அச்சுறுத்தப்பட்ட யானையைப் போல் மனதில் பெரும் துயருடனும், வேதனையுடனும் இருக்கிறார்.

"மலய, விந்திய, மேரு, மந்தர மற்றும் துர்தர மலைகள் மீதும், எல்லாப் பழங்கள் மற்றும் வேர்கள் மீதும் சத்தியம் செய்து சொல்கிறேன். உதயசந்திரன் போன்ற முகத்துடனும், அழகிய கண்களுடனும், கவர்ந்திழுக்கும் சிவந்த உதடுகளுடனும், அற்புதமான காது வளையங்களுடனும் கூடிய ராமரை நீங்கள் விரைவிலேயே பார்க்கப் போகிறீர்கள்.

" விதேஹ நாட்டு இளவரசியே! ஐராவதம் என்ற தன் யானையின் மீது அமர்ந்தபடி இந்திரன் வானுலகத்தில் காணப்படுவது போல், ப்ரஸ்ரவண மலையின் மீது ராமர் அமர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.

"ராமர் மாமிசம் புசிப்பதில்லை, தேன் கூட அருந்துவதில்லை. வானப்ரஸ்தத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட சில கிழங்குகள் மற்றும் காய்கறிகளை மட்டும் தினமும் ஐந்தாம் ஜாமத்தில் அவர் தன்  உணவாக அருந்துகிறார்.

"முழுவதும் உங்கள் நினைவிலேயே ஆழ்ந்திருப்பதால், தன் மீது மொய்க்கும் ஈக்கள், கொசுக்கள், தன் மீது ஊறும் புழு பூச்சிகளைக் கூட அவர் விரட்டுவதில்லை..

"உங்கள் மீது இருக்கும் ஆழமான அன்பால், அவர் எப்போதும் ஆழ்ந்த சோகமும், சிந்தனையும் நிறைந்த மனநிலையில் இருக்கிறார். அதனால் வேறு எதையும் உணராமல் இருக்கிறார்.

"மனிதர்களில் மிகவும் உயர்ந்தவரான ராமர் எப்போதும் உறக்கமின்றி இருக்கிறார். சிறிது உறக்கம் வந்தாலும், 'ஓ, சீதா என்று இனிமையாகக் கூவிக்கொண்டே அவர் விரைவிலேயே உறக்கம் கலைந்து விடுகிறார்.

"பூக்களையோ, பழங்களையோ பெண்களுக்குப் பிடித்த வேறு எந்தப் பொருளையோ அவர் பார்க்க நேர்ந்தால், உங்களைப் பற்றி, 'ஓ, அன்புக்குரியவளே!' என்று மிகுந்த துயரத்துடன் கூவுகிறார்.

"ஓ, உயர்ந்த பெண்மணியே! தர்மத்தின் பாதையில் முதலில் நிற்பவரான அந்தச் சிறந்த இளவரசர் ராமர் உங்களை மீட்பதற்கான வழிகளையும், முறைகளையும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். உங்களிடமிருந்து பிரிந்த சோகத்தால் எப்போதும் உங்கள் பெயரை அழைத்துக் கொண்டிருக்கிறார்."

ராமரைப் பற்றிய புகழுரையைக் கேட்டதும், தன் துயருக்குச் சிறிது ஆறுதல் கிடைத்ததாக சீதை கருதினார். அதே சமயம் ராமரின் துயரம் பற்றி அவர் அறிந்தது அவரிடத்திலும் இணையான சோக அனுபவத்தை ஏற்படுத்தியது.

இலையுதிர் கால இரவில் சந்திரன் சிறிது நேரம் வானத்தில் தோன்றுவதும், சிறிது நேரம் மேகத்துக்குள் மறையவும் செய்வது போல், அவர் முகத்தில் மகிழ்ச்சி, சோகம் இரண்டும் மாறி மாறித் தோன்றின. 

2 comments:

  1. ந‌ன்றாக எழுதி உள்ளீர்கள். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. அடுத்த பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறேன். சில தினங்களில் வெளியாகும். மீண்டும் என் நன்றி.

    ReplyDelete