ஹனுமான் தொடர்ந்து கூறினார்:
மனிதர்களுக்குள் அதிகத் துணிவானவரே! நான் கிளம்பிய சமயம், சீதாப்பிராட்டி தங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அடுத்தபடி செய்யப்பட வேண்டியது என்ன என்பது பற்றி என்னிடம் கூறினார்.
'போரில் ராவணனை அழித்து விட்டு என்னை உடனே திரும்ப அழைத்துச் செல்வதற்கு தசரத குமாரரான ராமர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
'எதிரிகளை அழிப்பவரே! நீ விரும்பினால் இங்கே எங்காவது தனியாக ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை கிளம்பிச் செல்லலாம்.
'ஓ, வீரனே! நீ அருகில் எங்காவது இருக்கும் வரை, என் பாவங்களின் காரணமாக எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய என் துயரத்திலிருந்து எனக்குச் சிறிது ஆறுதல் கிடைக்கும்.
'நீ இங்கே திரும்ப வரும் நோக்கத்துடன்தான் இங்கிருந்து கிளம்பிச் செல்கிறாய் என்றாலும், நீ இந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றதும் என் உயிரும் கிளம்பிச் சென்று விடும் என்று தோன்றுகிறது.
'ஒரு துயரத்துக்குப் பின் இன்னொரு துயரம் என்று நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உன்னைப் பார்த்ததால் இது ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. உன்னுடனான இந்தச் சந்திப்பு முடிவுக்கு வந்ததும், என் துயரம் முன்னை விடப் பன்மடங்கு அதிகரித்து விடும்.
'வானரர்களின் தலைவனே! குரங்குகளையும் கரடிகளையும் கொண்ட உன் சேனை பற்றி ஒரு விஷயம் எனக்குக் குழப்பமாக இருக்கிறது. அது பற்றி எனக்கு நீ விளக்க வேண்டும்.
'வானரர்களையும், கரடிகளையும் கொண்ட அந்தச் சேனை இந்தப் பரந்த கடலை எப்படிக் கடக்கும்? அந்த இரண்டு இளவரசர்கள் கூட எப்படி அதைக் கடப்பார்கள்?
'வான் வழியே இந்தக் கடலைக் கடக்கும் வல்லமை வாயு, கருடன், நீ ஆகிய மூவருக்கு மட்டுமே உள்ளது. ஓ, வீரனே! அனைத்திலும் நிபுணனே! இந்தக் கடினமான செயலை எப்படிச் செய்ய முடியும்? இந்தப் பிரச்னயைச் சமாளிப்பதற்கு என்ன உத்தியை நீ சிந்தித்திருக்கிறாய்?
'எதிரிகளை அழிப்பவனே! இந்தச் செயலை முழுமையாக நிறைவேற்றக் கூடியவன் நீ ஒருவன்தான். அதனால், நீ உலக அளவில் புகழ் பெறப் போகிறாய்.
'ராமர் சேனையுடன் வந்து ரவணனைப் போரில் அழித்து அந்த வெற்றிக்குப் பின், என்னை அவருடைய நகரத்துக்கு அழைத்துச் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
'ராமரை நேருக்கு நேர் பார்க்க பயந்து, தந்திரமான முறையில் இந்த அரக்கன் என்னைக் காட்டிலிருந்து கடத்திச் சென்றான். ஆனால் எதிரிகளைப் போரில் வெல்லாமல் என்னை அழைத்துச் செல்வது வீரரான ராமருக்குப் பொருத்தமாக இருக்காது.
ஒரு சேனையின் தலைமையில் வந்து இலங்கையைத் தரைமட்டமாக ஆக்கிய பிறகு அவர் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றால்தான் அது அவருடைய உயர்ந்த புகழுக்கு இசைந்ததாக இருக்கும்.
'எனவே உயர்ந்தவரான அந்தப் போர்வீரரின் வீரத்துக்குப் பொருந்தும் வகையில் நீ எல்லாவற்றையும் ஏற்பாடு செய்.'
"இந்த அர்த்தமுள்ள, அறவழியிலான, நியாயமான வார்த்தைகளைக் கேட்டதும், நான் சொல்ல வேண்டிய இன்னும் சிலவற்றை அவரிடம் கூறினேன்:
'தேவி! கரடிகள் மற்றும் குரங்குகளின் அரசரும், அந்த இனத்தவருள் மிகவும் உயர்ந்தவருமான சுக்ரீவர் வலிமை மிக்கவர். உங்கள் விஷயத்தில் அவர் ஒரு சபதம் செய்திருக்கிறார்.
'அவர் சேனையில் உள்ள வானரர்கள் மிகுந்த திறமை கொண்டவர்கள். அவர்கள் துணிவுள்ளவர்கள், வலிமை மிகுந்தவர்கள், அசைக்க முடியாத மன உறுதி கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்யத் தீர்மானித்த செயலை எப்போதும் செய்து முடிப்பவர்கள்.
'மேலும், கீழும், பக்கவாட்டிலும் அவர்கள் செல்வதை யாராலும் தடை செய்ய முடியாது. எல்லையற்ற துணிவு கொண்ட அவர்கள் எந்தப் போரிலும் தோற்கடிக்கப்படுவதில்லை.
'காற்றில் பறந்து செல்லக் கூடிய இந்த உயர்ந்த, சக்தி வாய்ந்த வானர சேனை பலமுறை இந்த உலகத்தைச் சுற்றி வந்திருக்கிறது.
'சுக்ரீவரின் தலைமையில் உள்ள வானரர்களில் எனக்குச் சமமான மற்றும் என்னை விடத் திறமை வாய்ந்த பல வானரர்களும் இருக்கிறார்கள், ஆனல் என்னை விடக் குறைவான திறமையுள்ளவர்கள் யாரும் இல்லை.
'சாதாரண நபர்கள்தான் தூதூவர்களாக அனுப்பப்படுவார்கள். உயர்ந்தவர்கள் அனுப்பப்படுவதில்லை. எனவே, என்னாலேயே இங்கே வர முடிந்ததென்றால், என்னை விட உயர்வான என் தோழர்கள் பற்றி என்ன சந்தேகம் இருக்க முடியும்?
'எனவே, தேவி! துயரத்தினால் சோர்ந்து விடாதீர்கள். துயரத்திலிருந்து விடுபடுங்கள். இந்த வானர வீரர்களால் ஒரே தாவலில் இலங்கைக்கு வர முடியும்.
'ஓ, உயர்ந்த பெண்மணியே! சூரியனையும், சந்திரனையும் ஒத்த இரண்டு வீர இளவரசர்களும் என் தோள்களின் மீது அமர்ந்து இஙுகு உங்கள் முன் வருவார்கள்.
'எல்லா எதிரிகளையும் அழிப்பவரான சிங்கம் போன்ற அந்த வீரர் லக்ஷ்மணருடன் கூட, கையில் வில்லுடன் இலங்கையின் நுழைவாயிலில் நிற்பதை நீங்கள் விரைவிலேயே காண்பீர்கள்.
'புலிகளையும், சிங்கங்களையும் போல் அச்சமூட்டும் தோற்றமும், துணிவும் கொண்ட, யானைகளைப் போல் பிரும்மாண்டமான தோற்றம் கொண்ட, நகங்களையும், பற்களையுமே ஆயுதமாகக் கொண்ட, வீரம் மிகுந்த வானரரர்களின் கூட்டத்தை நீங்கள் விரைவிலேயே பார்ப்பீர்கள்.
'மழை கொண்ட மேகங்களின் இடி முழக்கம் போன்ற வானரர்களின் உரத்த கர்ஜனைகள் இலங்கையின் மலைச் சிகரங்களில் ஒலிப்பதை நீங்கள் விரைவிலேயே கேட்பீர்கள்.
'இந்த எதிரிகளை அழித்து, தன் வனவாச காலம் முடிந்த பின், ராமபிரான் அயோத்தியில் உங்களுடன் சேர்ந்து முடிசூட்டப்படும் மகிழ்ச்சியான அனுபவத்தை விரைவிலேயே நீங்கள் பெறுவீர்கள்.;
"இத்தகைய உறுதியான. தீவிரமான வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்தப்பட்ட பிறகு, உங்கள் துயரத்தை நினைத்தே எப்போதும் துயரத்தில் ஆழ்ந்திருந்த மிதிலை நாட்டு இளவரசியான சீதாப்பிராட்டி, தன் துயரம் சற்றே குறைந்ததாக எண்ணிச் சிறிது ஆறுதல் அடைந்தார்.'
(சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)
(சுந்தர காண்டத்தை எளிய தமிழில் மொழி பெயர்க்கும் என் சிறு முயற்சி அனுமனின் அருளால் நிறைவு பெற்றது. இந்தப் பதிவைப் படித்தவர்கள், கருத்துப் பதிவிட்டு என்னை ஊக்குவித்தவர்கள், தங்கள் மனதுக்குள்ளேயே என்னை வாழ்த்தி ஊக்குவித்தவர்கள் அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.)
ஶ்ரீராமஜயம்