Saturday, September 30, 2017

19. பதினாறாவது சர்க்கம் - சீதையின் நிலை கண்டு ஹனுமான் வருத்தம்

புகழுக்குரியவரான சீதையையும், குணசீலரான ராமரையும் மனதில் வணங்கிய பின், மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் அந்த வானரத் தலைவர். 

சீதையின் நிலையை நினைத்து, அவர் கண்ணீர் சிந்தினார்.

"பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட, லக்ஷ்மணரால் சேவை செய்யப்பட்ட சீதையே இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்றால், காலத்தின் கட்டளையை யாராலும் வெல்ல முடியாது என்பதுதான் பொருள். 

"ராமரும் லக்ஷ்மணரும் தங்கள் ஆழ்மனதில் தன்னைப் பற்றிய சிந்தனையைத்தான் கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்திருப்பதால்தான், மழைக்காலத்தில் பெருகும் நீரினாலும் கரை உடையாத கங்கையைப் போல் இவரும் உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்படாமல் இருக்கிறார்.

"குணம், வயது, நடத்தை, குடும்பப் பெருமை, மங்களமான உடல் சின்னங்கள் ஆகியவற்றில் ராமருக்கு இணையானவராக விளங்கும் சீதை ராமருக்கு மனைவியாக இருக்கும் தகுதி படைத்தவர்தான், ராமர் எப்படி இவருக்குக்  கணவராக இருக்கும் தகுதி படைத்தவரோ அதுபோல்."

"தங்க நிறம் கொண்ட, உலகில் எதனுடனும் ஒப்பிட முடியாத அழகு படைத்த, லக்ஷ்மிக்கு நிகரான அந்த சீதையைப் பார்த்த ஹனுமான், மீண்டும் ராமரைப் பற்றி நினைத்து, தனக்குள் பேசிக் கொள்ளத் துவங்கினார்.

"இந்த அழகிய பெண்மணியின் பொருட்டுத்தான் வலிமை படைத்த வாலி வதம் செய்யப்பட்டான். ராவணனுக்கு நிகரான வலிமை படைத்த கபந்தனும் கொல்லப்பட்டான். அதே போல், பயங்கரமானவனும், சக்தி வாய்ந்தவனுமான விராதனும், காட்டில் நடந்த யுத்தத்தில், சம்பரன் இந்திரனால் கொல்லப்பட்டது போல், கொல்லப்பட்டான்.

"ஜனஸ்தானம் என்ற இடத்தில் கொடூர குணம் கொண்ட, பயங்கரமான பதினான்காயிரம் அரக்கர்கள், ராமபிரானின் தீப்பிழம்புகள் போன்ற அம்புகளினால் கொல்லப்பட்டனர். நிகரற்ற வலிமை கொண்ட கரன், திரிசிரர்கள், தூஷணன் ஆகியோரும், எல்லாம் அறிந்த ராமரால் கொல்லப்பட்டனர்.

"இவரால்தான் வாலியினால் பாதுகாக்கப்பட்ட வளம் மிகுந்த நாடு சுக்ரீவனின் கைக்கு வந்தது. இவரால்தான் எல்லா நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் அதிபதியான இந்தப் பெருங்கடல் என்னால் கடக்கப்பட்டது, இந்த நகரமும் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.

"இவர் பொருட்டு ராமபிரான் கடலால் சூழப்பட்ட இந்த உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டியிருந்தாலும், அது உகந்ததுதான். சீதாப்பிராட்டியையும், மூவுலகங்களையும் ஒப்பிட்டால், சீதாப்பிராட்டியின் மதிப்புதான் மிக அதிகமாக இருக்கும்.

"இந்த சீதை தன் கணவர் மீது கொண்ட அன்பில் உறுதியாக இருக்கிறார். தர்மம் தவறாத மிதிலை நாட்டு அரசர் நிலத்தை உழுத பள்ளத்திலிருந்து தோன்றிய இவர், தாமரைப்பூ மகரந்தப் பொடிகளால் மூடப்பட்டிருப்பது போல், மண் துகள்களால் மூடப்பட்டிருந்தார்.

"யுத்தத்தில் எப்போதுமே பின்வாங்காத, ஒழுக்கத்துக்கும், வீரத்துக்கும் பெயர் பெற்ற தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மருமகள் இவர். சத்திய சீலரும், அப்பழுக்கற்ற குணம் கொண்ட தர்மிஷ்டருமான ராமபிரானின் மனைவி இவர். இப்படிப்பட்ட புனிதவதி இப்போது இந்த அரக்கிகளிடம் சிறைப்பட்டிருக்கிறார்.

"தன் கணவர் மீது கொண்ட அன்பினாலும், தனது கடமை உணர்ச்சியினாலும்  உந்தப்பட்டு, தனது கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எல்லா சுகங்களையும் உதறித் தள்ளி விட்டு இவர் கானகத்துக்குச் சென்றார்.

"காட்டில் இருந்த மரங்களின் கிழங்குகளையும், பழங்களையும் உண்டு உயிர் வாழ்ந்த இவர், எப்போதும் தனது கணவருக்குப் பணிவிடை செய்து கொண்டு அரண்மனையில் வாழ்ந்தபோது இருந்த அதே திருப்தியுடன் காட்டில் வாழ்ந்து வந்தார்,

"இத்தகைய நற்பண்புகள் நிறைந்தவரும், பொன் போன்று மின்னும் உடல் படைத்தவரும், புன்னகை மாறாத வதனத்துடன் இருந்தவரும், துயரம் என்றால் என்னவென்று அறியாதவருமான இவர் இப்போது கடுமையான சூழ்நிலையில் இருக்கிறார்.

"தாகத்துடன் இருப்பவன் தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிப் போவது போல், ராவணன் எப்போதும் இவரைத் தாக்குவதற்குத் தயார் நிலையிலேயே இருக்கிறான்.

"இன்னும் தன் கற்பு நெறியிலிருந்து மாறாமல் இருக்கும் இவர் ராமபிரானுடன் சேர்ந்திருக்க வேண்டியவர்தான். ராமருக்கு இவர் திரும்பக் கிடைத்தால், நாட்டை இழந்த அரசன் ஒருவன் தன் நாடு திரும்பக் கிடைத்ததும் அடைவது போன்ற மகிழ்ச்சியை அவர் அடைவது நிச்சயம்.

"எல்லா சுகங்களையும் விட்டு விட்டு, உறவினர்களை விட்டுப் பிரிந்து, தான் மீண்டும் எப்போது ராமருடன் இணையப் போகிறோம் என்ற சிந்தனையிலேயே தன் உடலை வைத்துக் கொண்டிருக்கிறார் இவர்.

"இவர் இந்த அரக்கிகளைப் பார்க்கவில்லை. பூக்களும், பழங்களும் நிறைந்த மரங்கள் மீதும் இவர் பார்வை இல்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி இவர் ராமரையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

"ஒரு பெண்ணுக்கு மிகவும் அவசியமானதும், மிகவும் மதிப்பு வாய்ந்ததுமான  ஆபரணம் அவருடைய கணவன்தான். பல்வகை ஆபரணங்களை அணிந்து ஜொலிக்க வேண்டிய இவர், அவசியமான ஆபரணம் இல்லாததால் ஒளியிழந்து காணப்படுகிறார்.

"சீதையை விட்டுப் பிரிந்த பிறகும், ராமர் தன் உடலை வைத்துக் கொண்டிருக்கிறார். துயரத்தினால் அவர் உடல் இன்னும் இளைக்கவில்லை. இதன் மூலம் யாராலுமே செய்ய முடியாத ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் அவர். 

கரிய கூந்தலும், தாமரைக் கண்களும் கொண்ட, மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையுமே பெறக் கூடாத இந்த அழகிய பெண்மணியின் துன்பத்தைப் பார்த்து என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது.

பொறுமைக்குப் பெயர் பெற்ற, தாமரைக் கண்கள் கொண்ட, ராம லக்ஷ்மணர்களால் பாதுகாக்கப்பட்ட இந்தப் பெண்மணி, இப்போது கொடூரமான தோற்றம் கொண்ட அரக்கிகளின் காவலில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்.

"தொடர்ந்து தன் மீது விழும் பனித்துளியால் காய்ந்தும், நிறம் மங்கியும் போகும் தாமரை மலரைப் போல், இவரும், தொடர்ந்து வரும் துயரினால் பீடிக்கப்பட்டிருக்கிறார். தனது ஆண் ஜோடியைப் பிரிந்த பெண் சாதகப் பறவை துயரடைவது போல், ஜனகரின் மகளும் பெரும் துயரில் ஆழ்ந்திருக்கிறார்.

"ஹேமந்த ருதுவின் (முன்பனிக் காலம்) இறுதியில், நிலவொளியில்,  மலர்களின் எடையால் தலை சாய்ந்திருக்கும் அசோக மரங்கள் அவர் மனதில் பெரும் துயரைத்தான் ஏற்படுத்த முடியும்."

சக்தி வாய்ந்தவரும், வேகம் மிகுந்தவருமான அந்த வானரத் தலைவர் இதுபோல் தனக்குள் சிந்தனை செய்த பின், தான் பார்த்த பெண்மணி சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, அந்த சிம்ஸுபா மரத்தின் மீதே மறைந்து அமர்ந்திருந்தார். 

இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:





No comments:

Post a Comment